Skip to Content

10. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

இரண்டாம் பாகம்:

1. கேளாமலேயே கொடுக்கும் தெய்வத்தாய்

"கேட்டதெல்லாம் கொடுப்பாய்” என்று நம் இஷ்ட தெய்வத்தைக் கவி பாடி இறைஞ்சுவார்கள், கவிஞர்கள். "பக்தன் தெய்வத்திடம் முறையிடாமலேயே வரம் பெற்றான்' என்பது நாம் கேட்டதொன்றில்லை. ஆனால், கேளாமலே கொடுக்கும் தெய்வத்தாய் ஒருவர் உண்டு. அந்தத் தெய்வம் நம்மிடையே, ஏறக்குறைய நூறாண்டு காலம் மானுடம் தாங்கி வாழ்ந்ததும் உண்டு. அந்தத் தெய்வத்தாய் நம் அன்னையே என்பது இக்கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து படிக்கும் அன்பர்களுக்கெல்லாம் நன்கு புரிந்திருக்கும்.

"கேட்டே பெற வேண்டும்” என்பதுதான் உலக நியதி. துறவிகளை விட்டுவிட்டு இல்லறவாசிகளை மட்டும் எடுத்துக்கொள்வோம். அப்படிக் கேட்டுப் பெறுவதற்குப் பூஜை, ஜெபம், விரதம், தோத்திரம் போன்ற நெறிமுறைகள் தேவை. இந்தத் தேவைக்கு அப்பால் நின்று அன்னை கேளாமலே கொடுப்பார் என்றால், அதன் உட்கருத்து என்ன?

பண்டுதொட்டு வேதரிஷிகளும், புத்தர், இராமன், கிருஷ்ணன், இராமகிருஷ்ண பரமஹம்சர், இராமலிங்க அடிகள், ரமண மகரிஷி போன்ற ஆயிரக்கணக்கான மகான்கள் தவம் செய்திருக்கின்றார்கள்.

அத்தகைய புண்ணிய சீலர்கள் அவதரித்த நாளிலிருந்து அவர்கள் உறையும் இடம் சீராகவும், செழிப்பாகவும் விளங்கும். அம்மகான்களை மனத்தில் கொண்டே, "நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என்று சொல்லப்படுகிறது. அவர்கள் தம் ஆன்மா மோட்சம் அடையத் தவம் செய்தார்கள். "அது ஒரு மகத்தான காரியம்' என்பதாலும், "புனிதப் பெருநிகழ்ச்சி' என்பதாலும், அவர்களின் திருப்பாதங்கள் தீண்டிய இடங்கள் எல்லாம் சீரும் சிறப்பும் நிறைந்து பெருகின.

ஸ்ரீ அரவிந்தர் தம் யோக சித்தியின் மூலம் தாம் இறைவனை அடைந்து, தமக்குக் கிடைத்த மோட்சம் உலகில் உள்ள அனைவருக்கும் கிடைப்பதற்கான இறையருளைக் கூட்டுவிக்க வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்டார். அதற்கேற்ப, அவர் தம் யோக இலட்சியத்தையும், வழிமுறைகளையும் பற்றிக் கொண்டார். மேலும் அவர், மரணம், பிணி, வறுமை, பொய்மையில் உள்ள மனிதனை, அவனுடைய முயற்சி ஏதுமின்றி, தம் யோக சக்தியால் விடுவிக்க வேண்டும் என முயன்று முதற்கட்டத்தில் வெற்றியும் பெற்றார். ஆண்டவனை நாடி விரதம் இருந்து பலனை நாடும் மனிதனை நோக்கி, ஆண்டவனே தன் இருக்கையிலிருந்து புறப்பட்டு வந்து, அவன் கேட்கும் வரத்தையும் கேட்கத் தெரியாமல் இருக்கும் பூரண ஆத்ம விளக்கத்தையும் கொடுப்பதற்குத் தம்மை ஒரு கருவியாக மாற்றிக்கொண்டார் ஸ்ரீ அரவிந்தர். இறைவனிடமிருந்து யோக சித்தியைப் பெறுவது ஸ்ரீ அரவிந்தரின் செயல். அவர் பெற்றதை உலகத்திற்கு வழங்குவது அன்னையின் அவதார நோக்கம்.

ஸ்ரீ அரவிந்தருடைய யோகத்தின் வெற்றி முதல் 3 கட்டங்களைத் தாண்டிவிட்டது. முழுதும் வெற்றி அடைந்தால் உலகத்தில் மரணமும், பிணியும், வறுமையும், பொய்மையும் மனித முயற்சியின்றியே முழுதுமாக விலகி இருக்கும். என்றாலும் இறைவனின் பேரருள் மனிதனை நோக்கிச் செலுத்தும் யோகமாக ஸ்ரீ அரவிந்தரின் பூரணயோகம் அமைந்திருப்பதால், பக்தர்கள் கேட்காமலேயே அன்னையால் கொடுக்க முடிகிறது.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் "பரம்பொருளின் அவதாரம்”என்பதை உலகறியும். பரம்பொருளின் வெளிப்பாடான அவர், "அன்னை பராசக்தியின் அவதாரம்; கடவுளர்க்கெல்லாம் தாய்'' என்று கூறியிருக்கின்றார். சிவபெருமான் தம்மைச் சந்தித்து நடத்திய உரையாடலைப் பற்றி அன்னையே அருளொழுக வர்ணித்திருக்கின்றார். தாம் மாடியில் உலவிக்கொண்டிருக்கும் பொழுது தம்முடன் சேர்ந்து கிருஷ்ண பரமாத்மா உலவியதையும், உரையாடியதையும் அன்னை பிறிதோர் இடத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறார். துர்க்கை, இலட்சுமி, ரிஷிகள் ஆகியோர் அன்னை நடத்தும் தியானத்துக்குத் தவறாமல் வருவதுண்டு என்பதையும் அன்னையே கூறியிருக்கிறார். ஒரு முறை கடல் தேவதையை அழைத்து உரையாடியிருக்கின்றார் அன்னை.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தாந்திரீக யோகி ஒருவர், இராமேஸ்வரத்தில் தங்கி தேவி உபாசனை செய்து வந்தார். அவரின் தியானம் சிறப்பானது. உலகிற்குத் தந்திர யோகத்தை வழங்கிய மூலவரான முதல் குருவே அந்த யோகியின் தியானத்தில் தினமும் தோன்றுவதுண்டு. அத்தகைய அருளாற்றல் படைத்த அவருக்கு, அன்றாட வாழ்க்கையைத் தள்ளுவது மிகவும் சிக்கலாக இருந்தது. அவரைப் பற்றி அக்கறை கொண்ட சிலர், அன்னையிடம் "அவருக்கு உதவி செய்ய வேண்டும்' என்று விண்ணப்பித்துக்கொண்டார்கள். அன்னையும் அவர் விஷயத்தில் அக்கறை செலுத்தினார். ஒரு தடவை அவர் அன்னையைத் தரிசிப்பதற்கு வந்திருந்தார். அப்பொழுது அவர் அன்னையை நோக்கிய முதல் நோக்கிலேயே, "நான் வணங்கும் லலிதாம்பிகை இங்கே அன்றோ இருக்கிறார்கள்!'' என்று பரவசப்பெருக்குடன் தழுதழுத்தார்.

"ஸ்ரீ அரவிந்தருடைய யோகம் உலகை உய்விக்க ஏற்பட்டது' என்பதை நாம் முன்னரே தெரிந்துகொண்டிருக்கின்றோம். அதை மீண்டும் நினைவு கூர்வோம். ஸ்ரீ அரவிந்தரின் யோகம் சத்தியத்தை நிலைநாட்டத் தோன்றியது. உள்ளும், புறமுமான வாழ்க்கையை மெய்யின் அடிப்படையில் அமைக்க முயல்வது. அவருடைய இலட்சியம் உயர்ந்தது. முனிபுங்கவர்களும், ரிஷிசிரேஷ்டர்களும், யோக முதிர்ச்சி அடைந்தவர்களும், அந்த இலட்சியப் பாதையில் சுலபமாகச் செல்ல முடியும். "அப்படியானால் சாதாரண மனிதர்களுக்கு அந்த இலட்சியம் என்ன சொல்கிறது?' என்ற கேள்வி நம் முன் எழுகின்றது. அது நியாயமே.

வாழ்க்கையின் அடிப்படையில் பொய் பேரளவுக்கு அஸ்திவாரமாக அமைந்துள்ளது. "கிரஹஸ்தன் பொய்யை முழுதுமாக விலக்கிச் சிறப்பாக வாழ முடியும்' என்று நம்புகின்றவர்கள் உண்டா? தெரியவில்லை. "சந்நியாசியும், தவசியும் வேண்டுமானால் பொய்யை விலக்கிவிட முடியும். எளிய குடும்பஸ்தனால் அதை விலக்கி வாழ முடியாது' என்பது நம்மிடையே நிலவும் பொதுவான கருத்து.

"முடியும்; வாழ்க்கையில் பொய்யை விலக்கி வாழ முடியும்' என்ற ஒரு புதிய இலட்சியத்தை, ஒரு புதிய நம்பிக்கையை நமக்கு அளிக்கின்றார் அன்னை. மனிதனின் இயலாமையைத் தம் திருநோக்கால் நன்கறிந்த அன்னை, மேலும் சொல்கின்றார்: "எவ்வளவுக்கு எவ்வளவு மனிதர்களாகிய நாம் மெய்யைக் கடைப்பிடிக்கின்றோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு வாழ்க்கை சிறப்பாகவும், வளமாகவும், அமைதி நிறைந்ததாகவும் இருக்கும்''. இதில் அளவு இருக்கிறது. அந்த அளவைத் தொடும்பொழுது கிடைக்கின்ற நன்மைகளும் அளக்கப்படுகின்றன. படி ஏறத் தொடங்கிவிட்டால் மேற்படி; மேற்படி சென்று விட்டால் மெய்ம்மையின் தரிசனம்.

தயிரைக் கடைந்தால் வெண்ணெய்; அது போல் பொய்யைக் கடைந்தால் மெய். பொய்யின் இருள் மெய்யை மறைக்கும். மெய்யை இருந்தவாறு இருந்து காட்டி, அதன் மூலம் தன்னைத் தனக்குக் காட்டி, வெளிச்சமாகவும், வெளிப்படையாகவும் இருந்து உதவுவது அன்னையின் அருள். அது தன்னைச் சரண் அடைந்தவர்களுக்கு அளவற்ற வலிமையை அளித்து, பொய்ம்மை, வறுமை, பிணி, பிரச்சனை முதலிய தொல்லைகளை நீக்கி, மெய்யையும், அதன் வடிவங்களான செல்வத்தையும், நிம்மதியையும், ஆரோக்கியத்தையும், மேலும் பல சிறப்புகளையும் பெருக்கித் தர வல்லது. அவ்வாறு அன்னையின் அருளால் நலம் பல பெற்ற அன்பர்களில் சிலர் என் நினைவுக்கு வருகின்றார்கள்.

1962இல் எஸ்.எஸ்.எல்.ஸி.யில் நான்காவது தடவையாகவும் தவறிய மாணவன் ஒருவன், (அப்பொழுது நான்கு தடவை மட்டுமே பரீட்சை எழுதலாம் என்பது சட்டம்) "இனி என்ன செய்வது?' என்று குழம்பிய நிலையில், அன்னையின் தரிசனத்திற்காக ஆசிரமத்திற்கு வந்த ஒரு குடும்பத்துடன் சேர்ந்து வந்தான். அவனுக்கு "என்ன பிரார்த்தனை செய்வது?' என்று தெரியவில்லை. பிரார்த்தனைக்காகவும் அவன் வரவில்லை. ஆனாலும் அன்னை அவனுக்கு அருள் செய்தார். நான்கு முறை என்றிருந்த சட்டத்தை மாற்றி, ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம் என்ற ஒரு புதுச் சட்டத்தைக் கொண்டுவருமாறு செய்தார். அதாவது, அவன் கேளாமலே அவனுக்கு அனுக்கிரகம் செய்தார் அன்னை.

கேட்காமலேயே கொடுப்பதுடன், அன்னையிடம் மற்றோர் அம்சமும் உண்டு. அவர் கேட்பதைவிட அதிகமாகவும் கொடுப்பார். "டெபுடி தாசில்தார் தேர்வுப் பட்டியலில் என் பெயர் இடம் பெறவில்லை. அப்பட்டியலில் என் பெயர் இடம் பெற்றால் பதவி உயர்வுக்கு வாய்ப்புண்டு. அந்த வாய்ப்பை அருள வேண்டும்' என்று அன்னையிடம் பிரார்த்தித்துக்கொண்ட ஒருவருக்கு, அன்னை கொடுத்த செய்தி, "உன்னை டெபுடி தாசில்தாராகச் செலக்ஷன் செய்து விட்டார்கள்' என்பதாகும். அன்பர் கேட்டது, "செலக்ஷன் பட்டியலில் தன் பெயர் இடம் பெற வேண்டும்' என்பது. ஆனால், அன்னை கொடுத்ததோ பதவி உயர்வு. இது கேட்பதைவிட அதிகமாகக் கொடுக்கும் அன்னையின் திருவருளுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

இதைப் போன்றதொரு நிகழ்ச்சி, மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்விலும் நடைபெற்றிருக்கின்றது. 1971ஆம் ஆண்டு, பொதுத் தேர்தல் நடைபெற இருந்த சமயம்; அரசியல் சூழ்நிலை சாதகமாக இல்லாத நேரம். இந்திரா காந்திக்கு, "தம்முடைய கட்சி, ஆட்சியை அமைக்கக்கூடிய அளவில் மெஜாரிட்டி பலம் பெறுமா?' என்ற ஐயப்பாடு. அந்த நிலையில் அவர் பாண்டிச்சேரிக்குப் புறப்பட்டு வந்தார். அன்னையைத் தரிசித்தார். தனக்கு 250 எம்.பி. சீட்டுகள் கிடைக்குமாறு அனுக்கிரகம் செய்ய வேண்டும் என்று வேண்டினார். அன்னை பலமாகத் தலையை ஆட்டி, தம் கருணை நோக்கை அவர் மீது பதித்து, ஆயிரம் பூக்கள் ஒன்றாய் மலர்ந்தது போல வாய் நிறையச் சிரித்து, அவரை ஆசீர்வதித்தார்.

தேர்தல் நடந்து முடிந்தது. இந்திரா காந்திக்கு வியக்கத்தக்க அளவுக்கு மெஜாரிட்டி பலம் கிடைத்தது. அதாவது அவருக்குக் கிடைத்த சீட்டுகள் 350. அவர் அன்னையிடம் கேட்டது 250; அன்னை கொடுத்தது 350!

ஓர் அன்பருக்கு 12 ஆண்டுகளாகத் திருமணம் தடைப்பட்டுவந்தது. வாழ்க்கையில் முழுவதுமாக நம்பிக்கை இழந்துபோன நிலையில், அவர் அன்னையைப் பற்றி அறிந்து, அன்னையிடம் பிரார்த்தனை செய்துகொண்டார். இரண்டே மாதங்களில் அவருக்கு விமரிசையாகத் திருமணம் நடந்து முடிந்தது.

பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட ஓர் ஆசிரியரின் மனைவி, "ஏன்தான் தினமும் ஒரு பொழுது விடிகிறதோ?' என்று கண்ணீர் உகுப்பார். அந்த அளவுக்குக் கடன் சுமை; மனச் சுமை. அந்நிலையில் அவர் அன்னையைச் சரண் அடைந்து, "மங்கும் வாழ்க்கை பொங்கும் வாழ்க்கையாக ஏற்றம் பெற வேண்டும்' என்று பிரார்த்தித்தார். ஒன்றரை ஆண்டுகட்குப் பின்னால் அவரிடமிருந்து வந்த ஒரு கடிதம், "எங்கள் வறுமை நிலை மாறிவிட்டது. இப்பொழுது எங்களுக்குப் பணப் பிரச்சனையே இல்லை. வீடு கட்டுவதற்கு ஒரு மனையை விலைக்கு வாங்கியிருக்கிறோம்' என்று அவருடைய வளத்தைப் பற்றிப் பேசியது.

உலகத்தைச் சுற்றி வலம் வந்த ஓர் அமெரிக்கர், மெக்சிகோ நாட்டில் பயணம் செய்தார். அப்பொழுது அவர் நெடுஞ்சாலையில் பல இடங்களில் தங்கி, ஓய்வெடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தபொழுது, பாஸ்போர்ட்டும், பணமும் இருந்த தன் பையை எங்கேயோ தொலைத்துவிட்டார். அயல்நாட்டில் பயணம் செய்யும்பொழுது, நமக்கு மூச்சு எவ்வளவு அவசியமோ, பாஸ்போர்ட்டும் அவ்வளவு அவசியம். பணமும் அதைப் போலவே அவசியமானது.

அவசியமான இரண்டையும் பறிகொடுத்த அந்த அமெரிக்கர், தங்கிய இடங்களுக்கெல்லாம் சென்று அவற்றைத் தேடினார்; கிடைக்கவில்லை. மனித முயற்சிகள் முற்றிலும் தோற்றுப்போன நிலையில்தான் பலருக்கும் தெய்வங்களின் ஞாபகம் வருகின்றது. அன்னையின் பக்தரான அவருக்கு, அப்பொழுதுதான் அன்னையின் ஞாபகம் வந்தது. "அன்னையே! இந்த நிலையில் உங்களைத் தவிர வேறு யார் என்னைக் காப்பாற்ற முடியும்? காப்பாற்றுங்கள்' என்று உருக்கமாக வேண்டிக்கொண்டார். அடுத்த நிமிடமே, தொலைந்துபோன அவருடைய பை, கண் முன்னால் காட்சி அளித்தது.

"போனால் வங்கி வேலைக்குப் போவது, இல்லை என்றால் எதுவுமே வேண்டாம்' என்ற பிடிவாதத்துடன், மூன்று வங்கிகளுக்குக் கிளார்க் வேலைக்கு விண்ணப்பம் செய்துகொண்ட ஒரு எம்.ஏ. பட்டதாரி, அடுத்தடுத்துச் சந்தித்தது ஏமாற்றத்தைத்தான். அவர், "அன்னையே! வேண்டியவர்களுக்கெல்லாம் வேண்டியவாறு அளிக்கும் தெய்வத்தாயே! நீங்கள்தாம் எனக்கு ஒரு வங்கி வேலையைத் தேடி அருள வேண்டும்' என்று அன்னையிடம் பிரார்த்தனை செய்து கொண்டார். அவர் வேண்டியது வங்கியில் கிளார்க் வேலையை. அன்னை அவருக்கு அருளியது வங்கியில் ஏஜெண்ட் பதவியை! "அடிவாரத்திற்குப் போனாலே போதும்' என்று யாசித்த தம் அன்பரை, மலையுச்சிக்கே ஏற்றி விட்டுவிட்டார் அன்னை.

மாமனார் வைத்துக் கொடுத்த ஆறு தொழில்களையும் ஒன்றன் பின் ஒன்றாய்த் திவாலாக்கிவிட்ட பரிதாபத்திற்குரிய ஒருவர், தம் 46ஆவது வயதில் தோல்விகளோடும், 4 பிள்ளைகளோடும் அன்னையை நாடி வந்து, நாகலிங்கப் பூவைச் சமர்ப்பித்து வணங்கி வரலானார். நாகலிங்கப் பூவை Prosperity என்பார் அன்னை. இந்தப் பூவிற்குப் பொருள் பற்றாக்குறையை நீக்கிச் செல்வத்தைக் கொடுக்கக்கூடிய ஓர் ஆற்றல் உண்டு. அந்த அன்பர் தொடர்ந்து அன்னைக்கு நாகலிங்கப் பூவைப் படைத்துவந்த ஓர் ஆண்டுக்குள் அவருடைய வறுமையும், கவலைகளும் நீங்கின. மறுஆண்டு அவருக்கென ஒரு தொழில் ஏற்பட்டு மரியாதையும், வருமானமும் பெருகின. மூன்றாம் ஆண்டு செல்வாக்கும், மகிழ்ச்சியும் கூட வந்ததோடு, ஆண்டு ஒன்றுக்கு இலட்ச ரூபாய் இலாபம் கிடைக்கக்கூடிய தொழிலும் அவருக்கு அமைந்தது.

"விதி வலிது. இதிலிருந்து மனிதர்கள் மட்டுமன்றி, தெய்வங்களும் மீள முடியாது' என்பதற்கான எல்லா நிரூபணங்களும் நம்முடைய புராண, இதிகாசங்களில் நிறைந்து கிடக்கின்றன. இவற்றுக்கு மாறான, முற்றிலும் புதியதான ஒரு நிரூபணத்தை அன்னை காட்டி அருளியிருக்கின்றார். "சத்திய ஒளியை ஏற்றுக்கொள்பவர்கள் விதியை வெல்லலாம்; கர்மப்பலன்களிலிருந்தும் தப்பலாம்'' என்ற அன்னையின் கூற்றுக்கு அவரே நிரூபணமாகவும் விளங்குகிறார். ஜாதகப்படி ஆயுள் முடிந்த பலர், அன்னையிடம் வேண்டி, அந்தக் கட்டத்தைக் கடந்து மேலும் பல ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்திருக்கின்றார்கள். ஆபத்தான வழக்கு ஒன்றில் சிக்கிய நிரபராதியான உயர் அதிகாரி ஒருவர், தம் தலையெழுத்தைத் தெரிந்துகொள்வதற்காக ஒரு பெரிய ஜோதிடரை நாட, அவர் அதிகாரியின் ஜாதகத்தைப் புடம்போட்டுப் பார்த்துவிட்டு, "இது கர்மப்பலன். நீங்கள் போன ஜன்மத்தில் செய்த ஒரு மோசடிக்கு இப்பொழுது பொய் வழக்காகப் பலன் கிடைத்திருக்கிறது. இதிலிருந்து நீங்கள் தப்பவே முடியாது'' என்று ஒரேயடியாய் அடித்துச் சொல்ல, அதைக் கேட்டுக் கதிகலங்கிப்போன அதிகாரி, கடைசிப் புகலிடமான அன்னையிடம் ஓடி, அழுது புலம்பிப் பாரத்தை அவர் மீது போட, பாரத்தை ஏற்றுக்கொண்ட அன்னை, அவர்மீது சாட்டப்பட்டிருந்த எல்லாக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை மீட்டு, "கர்மப்பலன்" என்பதை "காற்றில் கரைந்த கற்பூரமாக்கினார்'.

"நுரையீரல் முழுவதும் கான்சர் பரவியுள்ளது. இது போன்ற கேஸ்களில் நூற்றுக்கு ஒன்றுகூடப் பிழைத்ததில்லை'' என்று தம் மனைவியைப் பற்றி வேதனையோடு விவரித்த ஒரு கல்கத்தா சர்ஜன், ஒரு மாதத்திற்குப் பின்பு, "என் மனைவி பூரண குணம் பெற்றுவிட்டாள். இது மருத்துவ உலகத்தையே திகைக்க வைக்கக்கூடிய அற்புதம்' என்று அன்னைக்குச் செய்தி அனுப்பியதுடன், அதற்கான காரணத்தையும் விளக்கியிருந்தார். அவருடைய மனைவி அன்னையின் பக்தையாம். "என்னை மருத்துவம் காப்பாற்றாது. அன்னை ஒருவராலேயே என்னைக் காப்பாற்ற முடியும்' என்று கூறியதோடு, அவர் நாள் முழுதும் அன்னையைத் தியானித்துக்கொண்டிருந்தாராம். அதன் விளைவாக மருத்துவத் தீர்ப்பு தோற்றது; எப்பொழுதுமே வெல்லும் அன்னையின் அருள் தீர்ப்பு, மீண்டும் ஒரு முறை வென்றது.

"அன்னையை வணங்க ஏதேனும் குறிப்பிட்ட வழிமுறைகள் உண்டா?' என்ற கேள்வி எழுவது இயற்கை.

அன்னைக்கு இருப்பது தெய்வாம்சம் இல்லை; அன்னையே தெய்வம்; தெய்வத்தின் திருஅவதாரம். அவரை நினைத்தமாத்திரத்தில் நெஞ்சில் தெய்வீக அமைதியும், விவரிக்க இயலாத ஆனந்தமும் ஏற்படுவது வழக்கம். பன்னெடுங் காலம் தவம் இருந்து பெற வேண்டிய பெறற்கரிய மௌனத்தை, அன்னையின் சமாதி முன் பக்தியுடன் வந்து பணியும் எவர்க்கும் அன்னை வரப்பிரசாதமாக வழங்குகின்றார். விரைவான செயலும், வேகமான சிந்தனையும் கொண்டு, எப்பொழுதும் அலைகடல் துரும்பாக மனத்தை ஆக்கிக்கொண்டுவிட்ட நாடறிந்த ஓர் எழுத்தாளர், அன்னை சமாதியின் முன் அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தபொழுது, முதலில் விரைவும், வேகமும் அவரை விட்டு நீங்கின. பிறகு அவர் மனத்தில் எப்பொழுதும் ஓயாமல் கத்திக்கொண்டிருந்த அலைகள் அடங்கின. அங்கே ஆழ்ந்த அமைதி நிலவியது. "இதைப் போன்றதோர் அமைதியை இதற்கு முன்னால் நான் பெற்றதே இல்லை. "நான்' என்பதை விட முடியாமல், எழுத்தில் "நான்', வாழ்க்கையில் "நான்' என்று பல "நான்'களைச் சுவாசத்தைப்போல இதுவரை எனக்குள் வைத்து, வரவு-செலவு செய்துகொண்டிருந்த நான், அன்னையின் சமாதியின் முன்னால் அமர்ந்தவுடன், இந்த "நானை'த்தான் முதலில் நீக்கினார் அன்னை. பிறகு "நான்' இருந்த இடத்தில் "அவர்' இருந்து என்னை எழுதினார். ஆழ்ந்த அமைதியில் நான் திளைக்கத் திளைக்க, அன்னை என்னை எழுதிக்கொண்டே இருந்தார்'' என்று என்னிடம் பக்திப்பரவசத்தோடு விவரித்தார் அந்த எழுத்தாளர். அவர் டாக்டர் வாசவன். இது அன்னை அவருக்கு அளித்த வரம்.

யோகத்தை நாடுபவர்க்கு யோகத்தையும், வாழ விரும்புவோர்க்கு வாழ்க்கைச் சிறப்பையும் அளிப்பவர் அன்னை.

அன்னையை வழிபட தனிப்பட்ட வழிமுறை ஒன்றும் இல்லை. பக்தியுடன் அன்னையை நினைப்பதும், நினைத்துக்கொண்டே செயல்படுவதும் மட்டுமே வழிபாட்டு முறைகளாகும். பக்தனுடைய நினைவுக்குப் பலனாக, அவனுடைய செயலில் அன்னை தம்மை வெளிப்படுத்துவதைக் கண்கூடாகக் காணலாம். முதலாகவும், முடிவாகவும் அன்னைக்கு நினைவே வழிபாடு. அன்னையை ஏற்றுக்கொள்ள விழைபவர்கள், அதற்கு முன்னால் மனத்தூய்மையையும், நல்லெண்ணத்தையும், அமைதியான நடைமுறைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆரவாரமற்ற அமைதியான பேச்சு, சிறந்த செயல்முறை, தூய்மையான சுற்றுப்புறம், இடையறாத தெய்வச் சிந்தனை ஆகியவை அன்னைக்கு உகந்தவை. அவையே அன்னைக்கு அர்ச்சனையும், நிவேதனமும் ஆகும்.

******

ஜீவிய மணி
 
ஈஸ்வரன் பூர்த்தியாவது சக்தியில்.
சுயநலத்திற்கு யோகத்தில் சுத்தமாக இடம் இல்லை.
தாராளம் தன் பெருமைக்கு.
பஞ்சத்திற்கு நாட்டில் இனி பஞ்சம் வந்துவிட்டது.
 

******



book | by Dr. Radut