Skip to Content

11. அன்னை இலக்கியம் - சலூனுக்குப் போன சந்துருவின் கதை

அன்னை இலக்கியம்

சலூனுக்குப் போன சந்துருவின் கதை

சமர்ப்பணன்

சின்ன வயதில் இராணுவத்திற்கு ஆள் எடுக்கிறார்கள் என்ற விளம்பரத்தைப் பார்த்ததும், இராணுவ அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று.

அப்போது ஆறடி உயரம் இருந்தாலும், எலும்பும், தோலுமாக, ஒட்டடை குச்சி சோடா பாட்டில் கண்ணாடி போட்டுக் கொண்டது போல இருப்பேன். என்ன தைரியத்தில் இராணுவ அலுவலகத்திற்குப் போனேன் என்று இன்று வரை புரியவில்லை.

எல்லோருக்கும் மார்பளவு எடுத்துக் கொண்டிருக்கும் போது, நான் என் விண்ணப்பப் படிவத்தை நீட்டினேன். என்னைக் கூர்ந்து பார்த்த இராணுவ அதிகாரி நான் தந்த படிவத்தை என் கையிலேயே திருப்பி கொடுத்து விட்டு, "உன்னை எடுக்க மாட்டார்கள்" என்று நல்வாக்கு தந்தார்.

"ஏன் சார்? நான் இந்தியாவிற்குச் சேவை செய்ய ஆசைப் படுகிறேன் சார்'' என்று பணிவோடு கெஞ்சிப் பார்த்தேன்.

"கண்ணாடி போட்டிருக்கிறாயே'' என்றார் அதிகாரி.

"நீங்கள் கூட போட்டிருக்கிறீர்களே சார்'' என்று அறிவில்லாமல் கேட்டேன். அந்த அதிகாரி என்னை அறையாமல் பதில் சொன்னது என் அதிர்ஷ்டமே.

அதிகாரி சிரித்தார். "நான் வேலைக்குச் சேர்ந்த பின்புதான் கண்ணாடி போட்டேன்'' என்று கூறிவிட்டு அடுத்த படிவத்தை எடுத்துக் கொண்டு விட்டார்.

அந்த நாள் முதல் எப்போது முடிவெட்டச் சென்றாலும், இராணுவ அதிகாரி மாதிரி நன்றாக ஒட்ட முடிவெட்டிக் கொள்வேன். அதில் ஒரு அற்ப திருப்தி.

இன்று கண்ணாடியில் என் அழகைப் பார்த்தபோது முடியைக் குறைக்க வேண்டும் என்று மனதில் பட்டது. முடி வெட்ட சலூனுக்குக் கிளம்பியதும், என் மனைவி என்னை உக்கிரமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, "வெட்ட என்ன இருக்கிறது என்று இப்போது ஐம்பது ரூபாய் செலவு பண்ண கிளம்பி விட்டீர்கள்?'' என்று கேட்டாள். அதைச் சட்டை செய்யாமல், உற்சாகமாக கிளம்பி விட்டேன். அவள் ஏதோ சொன்னாள். நான் அதை கவனிக்காமல் நடந்தேன்.

மனைவியிடம் கொஞ்சம் முன்னே, பின்னே நடந்து கொண்டாலும் நான் ஓர் ஆன்மீகவாதி என்பதையும், ஆன்மீக தத்துவங்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்த முயற்சி செய்பவன் என்பதையும் எனக்கு நானே சொல்லிக் கொள்வதுவும், செய்வது கூடி வந்தால் எல்லோரிடமும் விளக்கமாகச் சொல்வதுவும், கூடி வராவிட்டால் மௌனவிரதனாகி விடுவதுவும் என் வளமுறை.

எந்தக் காரியத்திற்குக் கிளம்புமுன்னும் ஒரு சில வினாடிகள் நிதானித்து, என் நெஞ்சில் ஓர் ஒளிப்பிழம்பை கற்பனை செய்து, அதனிடம் போகும் காரியத்தைப் பற்றி சொல்வி டுவேன். மனம் இலேசானது போலிருக்கும். அதன் பின்தான் கிளம்புவேன். எந்தக் காரியமாகப் போகிறேனோ, அந்தக் காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

சொந்த அனுபவமே ஆன்மீக ஞானம் என்பதால் இன்றும் அப்படியே செய்துவிட்டு, என் வீட்டிற்கு அடுத்த வீதியில் இருந்த சலூனுக்குப் போனேன்.

சலூனில் ஒரே கூட்டம்.

எப்படியும் ஒன்றரை மணி நேரம் அங்கே காத்திருக்க வேண்டியதிருக்கும் என்று தோன்றியது. பொதுவாக ஒளி நல்லபடியாகத் தான் எல்லாவற்றையும் நடத்திக் கொடுக்கும்.

இன்று என்ன வந்தது அதற்கு? நான்தான் அதற்குப் புரியும்படி சரியாக சொல்லவில்லையா? உட்கார ஒரு இடம் கூட கிடைக்கவில்லையே!

மூலையில் இருந்த ஒரு நாற்காலியின் மேல் சில செய்திப் பத்திரிக்கைகளும், அதன் மேல் வார இதழ்களும் இருந்தன. அவற்றை எடுத்து ஓர் ஓரமாக வைத்து விட்டு நாற்கா-யில் உட்கார்ந்தேன். அது இலேசாக ஆடியது.

எல்லா சலூன்களிலும் இருப்பது போல அங்கு மேலாக இருந்த வாரப் பத்திரிக்கையில் ஓர் இளம் பெண்ணின் கவர்ச்சிப் படமும் அதற்கு விளக்கமும் தருவது போல மகா கவர்ச்சியான தலைப்பும் இருந்தன. அதை எடுத்துப் படிக்க ஆசையாக இருந்தாலும் அங்கே எல்லோர் முன்னாலும் அதை வாசிக்க வெட்கமாக இருந்தது.

சலூனைச் சுற்றி கண்களை சுழல விட்டேன்.

முடி வெட்டுபவர் ஐம்பது வயதாளி ஒருவரின் நரைமுடிக்குக் கறுப்புச் சாயம் போட்டு அவரை இருபது வயதாளியாக மாற்றிக் கொண்டிருந்தார்.

எனக்குப் பக்கத்திலிருந்தவர் சின்ன தாடியும் விசேஷமான முடியலங்காரமும் வைத்திருந்தார். இவர் காரியம் முடிய எப்படியும் முக்கால் மணி நேரமாகும். அவருக்குப் பக்கத்திலிருந்த பையனுக்கு ஓர் அரை மணி நேரம். எதிர்புறம் இருந்த பெரியவருக்கு எழுபதுக்கு மேல் வயதிருக்கும். அவருக்கு ஒரு பதினைந்து நிமிடம் போதும். ஆக மொத்தம் ஒன்றரை மணி நேரம். என் கணக்கு சரிதான். அதற்கு அப்புறம்தான் என் முறை வரும்.

எனக்குப் பின்னாலேயே இரண்டு பேர் வந்துவிட்டனர். ஏற்கனவே உட்கார்ந்து கொண்டிருந்தவர்களை நகரச் சொல்லிவிட்டு அவர்களும் நெருக்கி உட்கார்ந்து கொண்டனர்.

எல்லோரும் ஒற்றுமையாக, கவனமாகத் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த சினிமாப் பாடலை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

என் கவனம் எனக்கு ஏன் இந்தக் காரியம் நடக்கவில்லை என்பதில்தான் இருந்தது. என் காரியம் எதில் தடை வந்தாலும் அதற்கு நான்தான் காரணம் என்றால், என்னிடம் உள்ள தடை என்ன?

நேற்று என்னுடன் வேலை பார்க்கும் கமலினி, எங்கள் மேலதிகாரியிடம், "அடுத்தவர் கோணத்தில் விஷயத்தைப் பார்ப்பது என்றால் என்ன?'' என்று கேட்டதுவும் அதற்கு அவர் வரிந்து கட்டிக் கொண்டு நீண்ட விளக்கம் தந்ததுவும் நினைவிற்கு வந்தன.

எது தானாக நினைவிற்கு வருகிறதோ அதுவே குருடனுக்குக் கிடைத்த பற்றுக்கோல். தானாகக் கிடைப்பதை வைத்து முன்னேற முயற்சி செய்வது என் வழக்கம் என்பதால் கமலினியின் கேள்வியை முதல் படியாக வைத்தேன்.

என் கோணத்தில் என் பிரச்சனை புரிந்தது. கூட்டத்தில் நீண்ட நேரம் காத்திருக்க எனக்குப் பிடிக்கவில்லை. நான் பிரார்த்தனை செய்தும் இந்த ஒளி என்னை கைவிட்டுவிட்டது போலத் தோன்றியது.

அடுத்தவர் கோணத்தில் என் விஷயத்தைப் பார்த்தால் நல்லது நடக்கக் கூடும். இப்போது யார் கோணத்தில் என் பிரச்சனையைப் பார்ப்பது?

முடி வெட்டுபவர் முதல் குட்டிப் பையன் வரை எவர் கோணத்தில் வேண்டுமானாலும் பார்க்கலாம். அங்கிருக்கும் எவர் கோணத்தின் மூலமும் என் பிரச்சனையைத் தீர்க்கலாம் என்றாலும் என்னோடு நேரடியாக சம்பந்தப்படப் போகிறவர் முடி வெட்டுபவர்தான். எனவே அவர் கோணத்தில் விஷயத்தைப் பார்ப்பது நல்லது என்று தோன்றியது. நான் விரும்பியது என்ன? நான் வரும் போது கடை காலியாக இருக்க வேண்டும். உடனே எனக்கு நல்வரவு கிடைத்து, நன்றாக முடி வெட்டிக் கொண்டு, நேரம் வீணாகாமல் வீட்டிற்குத் திரும்ப வேண்டும்.

அதற்கு என்ன அர்த்தம்?

கடையில் வாடிக்கைக்காரர் எவரும் நானிருக்கும் வரை வரக் கூடாது!

யாரும் வரவில்லை என்றால் முடி வெட்டுபவருக்கு வருமானம் குறையுமே! ஆன்மீகவாதி எங்குச் சென்றாலும் அங்கெல்லாம் சந்தோஷமும், வளமும் வளர வேண்டும். என் அணுகுமுறை இப்படி இருந்தால் சலூன்காரர் எப்படி உருப்படுவார்? என் நோக்கு சரியாக இல்லையே!

நான் சலூன் முதலாளியாக இருந்தால் என்ன நினைப்பேன்? கடையில் எப்போதும் வாடிக்கையாளர்கள் இருக்க வேண்டும். தொடர்ந்து கத்திரிக்கோலின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பணப் பெட்டியில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும். சலூன் நடத்துபவருக்கு அது தானே வேண்டும்?

எப்படியும் நான் ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வேண்டும். தொலைக்காட்சியைப் பார்த்து நேரத்தை வீணடிப்பதற்கு பதில் உருப்படியாக சலூன்காரர் கோணத்தில் விஷயத்தைப் பார்க்க முடிவு செய்தேன்.

எதிரிலிருந்த கடிகாரம் மணி 10.50 என்றது.

கற்பனைப் பறவையில் ஏறி உட்காரவும் அது சட்டென்று வானத்தில் ஏறி பறக்க ஆரம்பித்தது. நான் சலூன்காரராக மாறினேன். சலூன் என் சொந்த சலூனாக மாறியது. கடைக்குள் ஒரே கூட்டம். கடைக்கு வெளியே நாற்காலிகள் போட்டால் அவையும் நிரம்பிவிட்டன. பெண்களுக்கு என்று தனியாக பிரிவு ஆரம்பித்ததில் ஒரு வெட்டுக்கு சுளையாக நூறு ரூபாய் வாங்கி விட்டேன்! அப்புறம் சொந்த கட்டிடம் வாங்கி விட வேண்டியது தான்.

ஒரே சந்தோஷமாக இருந்தது.

"சார், சார்'' என்று சலூன்காரர் என்னைத் தட்டி எழுப்பினார்.

கண்ணைத் திறந்ததும் முதலில் கடிகாரம்தான் கண்ணில் பட்டது. மணி. 10.51. ஒரு நிமிடத்திற்குள் எத்தனை கற்பனை செய்து விட்டேன்!

"வெட்டலாமா சார்?'' என்று சலூன்காரர் கேட்டார்.

எனக்கு முன்பு வெட்டிக் கொள்ள வேண்டியவர்களைக் காணோம்.

"தாடிக்காரர் என்ன ஆனார்?'' என்று கேட்டேன்.

"ஏதோ அவசரமாக போன் பேச வேண்டும் என்று வெளியே போயிருக்கிறார். குட்டிப் பையன் ஐஸ்கிரீம் சாப்பிட போயிருக்கிறான். பெரியவர்தான் கூட்டிக் கொண்டு போயிருக்கிறார். இப்போது உங்கள் முறைதான்'' என்றார் சலூன்காரர்.

"அவருக்கு இன்னும் கறுப்பாக ஆக வேண்டுமாம். அதற்கு அரை மணி நேரம் சாயம் ஊற வேண்டுமே!'' என்றார் சலூன்காரர்.

எனக்கு முடி வெட்ட ஆரம்பித்தார். சற்று நேரத்தில் வெளியே போனவர்கள் உள்ளே வந்தனர்.

"சார், நீங்கள் இல்லை என்பதால் இவருக்கு முடி வெட்ட ஆரம்பித்து விட்டேன்'' என்றார் சலூன்காரர்.

"அது சரிதான். நான் போன் மணிக்கணக்காகப் பேசுவேன். அதற்காக அவர் காத்திருக்க முடியுமா?'' என்றார் தாடிக்காரர்.

"அதுதானே!'' என்று ஆமோதித்தார் பெரியவர்.

முடி வெட்டிக் கொண்டே இருந்த சலூன்காரர், "சார், உங்கள் முடிக்கு மலையாள தேங்காய் எண்ணெய் போடுங்கள். வேறு எண்ணெயோ, ஜெல்லோ போடாதீர்கள். அப்போதுதான் இப்போது போலவே இளமையாக இருப்பீர்கள்'' என்று திடீரென தானாகவே கூறினார். அவர் ஒரு பேச்சுக்காக அப்படி பொய் சொல்லி இருக்கலாம். ஆனால் அதை உண்மை என்றே வைத்துக் கொண்டு ஆனந்தமயமாகி விட்டேன்.

வீட்டிற்குத் திரும்பும் போது ஒரே சந்தோஷமாக இருந்தது. எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும், எல்லோரையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று தோன்றியது.

வீட்டிற்குள் நுழைந்தவனை "நல்ல சிரைத்த கோழி மாதிரி இருக்கிறீர்கள்! நான் சொன்ன பால், வாழைப்பழம், தக்காளி எதையும் வாங்கி வந்திருக்க மாட்டீர்களே!'' என்று பிரியத்துடன் என் மனைவி வரவேற்றாள். அப்போதுதான் நான் கிளம்பும் போது அவள் இவற்றை வாங்கி வரச் சொன்னது நினைவிற்கு வந்தது.

முற்றும்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நாம் எதற்குச் சமர்ப்பணம் செய்கிறோமோ
அதாக மாறுவோம் எனில் எறும்பு யானைக்குச்
சமர்ப்பணம் செய்தால், யானை பலம் வரும்.
எறும்பையும், யானையையும் உற்பத்தி செய்தது
ஒரே பிரம்மம். எறும்பு அப்பிரம்மத்தை
சமர்ப்பணத்தால் அடைந்தது எனப் பொருள்.
 

*******



book | by Dr. Radut