Skip to Content

12. அன்னை வழியில் சாதிப்பது

அன்னை வழியில் சாதிப்பது

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

N. அசோகன்

நாம் விரும்புகின்ற ஒரு குறிப்பிட்ட பலனை அன்னையிடம் கேட்பது சுலபம். அதாவது, இந்த வேலை வேண்டும், இந்த வருமானம் வேண்டும், மற்றும் இப்படிப்பட்ட திருமண சம்பந்தம் வேண்டும் என்று வரையறுத்து அன்னையிடம் கேட்பது சுலபம். ஆனால் பிரச்சனையை அன்னையிடம் சமர்ப்பணம் செய்து விட்டு அவர் வழங்கும் முடிவை ஏற்றுக் கொள்வதாகத் தீர்மானம் செய்து அது கிடைக்கும் வரையிலும் அமைதியாக பதட்டமோ டென்ஷனோ இல்லாமல் நம்பிக்கையோடு காத்திருப்பது மிகவும் கடினம். நம்பிக்கை மிக ஆழ்ந்த நிலையிலும் அதே சமயத்தில் முழுமையான சரணாகதியும் கொண்டவர்களால்தான் இப்படி இருக்கவே முடியும். ஆரம்ப நிலை அன்பர்களுக்கு இப்படிப்பட்ட நம்பிக்கையோ சரணாகதியோ இருப்பதில்லை. அன்னையின் இஷ்டத்திற்கு விட்டால் எங்கே அன்னை இவர்களுடைய விருப்பத்தைப் புரிந்து கொள்ளாமல் இவர்களுடைய ஆன்மாவுக்கு எது நல்லதோ அதை அன்னை கொடுத்து விடுவார் என்று அவர்கள் பயப்படுவார்கள். ஆரம்ப நிலை அன்பர்கள் பொதுவாக அகந்தை மையமானதும், ஆசை மயமானதுமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதால் இவருடைய அகந்தையையும் ஆசையையும் ஒதுக்கி வைத்து விட்டு இவர்களுடைய ஆன்மாவுக்கு எது நல்லதோ அதைச் செய்யும் சுதந்திரத்தை அன்னைக்குத் தர விரும்புவதில்லை.

உதாரணமாகக் கல்லூரியில் ஒரு degreeயை எடுத்துக் கொண்டு படிப்பை முடித்துக் கொண்டு வெளியில் வருபவர்களுக்கு என்ன வேலை வேண்டும், என்ன வருமானம் வேண்டும் என்பது பற்றி மனதில் சில ideaக்களை வைத்திருப்பார்கள். B.Com. அல்லது M.Com. படித்திருக்கின்ற பட்டதாரியாக இருந்தால் இந்தப் பட்டப்படிப்பை வைத்துக் கொண்டு ஒரு பேங்க் வேலை தேடிக் கொள்ளலாம் மற்றும் அதன் மூலம் முப்பது ஆயிரம் அல்லது நாற்பதாயிரம் வருமானத்தையும் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆகவே இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு உள்ள அன்பர் அன்னையிடம் bank examஇல் தான் பாஸ் ஆக வேண்டும், interviewஇல் தான் தேற வேண்டும் மற்றும் தான் விரும்புகின்ற bank clerk அல்லது officer உத்தியோகம் கிடைக்க வேண்டும் மற்றும் தான் விரும்பிய முப்பது ஆயிரம் அல்லது நாற்பதாயிரம் வருமானத்தைப் பார்க்க வேண்டும் என்றுதான் அன்னையிடம் அவருக்குப் பிரார்த்தனை செய்யத் தோன்றும். இப்பொழுது இதே நபர் ஆரம்ப நிலை அன்பராக இல்லாமல் ஒரு சாதகர்க்குரிய பக்குவமான சமர்ப்பணம் செய்யும் மனநிலை கொண்டவராக இருந்தால், இப்படிக் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வந்தவுடன் குறிப்பாக பாங்க் வேலை தான் வேண்டும் என்று அன்னை முன் பிரார்த்தனை வைக்க மாட்டார். அவர் என்ன செய்வார் என்றால் தான் படித்து முடித்து விட்டதாகவும், தனக்கு ஒரு நல்ல வேலையும் வருமானமும் தேவைப்படுகிறது என்று மட்டும் அன்னையிடம் தெரிவிப்பார். மேலும் தனக்கு எந்த வேலை பொருத்தமானது, என்ன வருமானத்திற்குத் தனக்குத் தகுதி இருக்கிறது என்று அன்னை நினைக்கிறாரோ அந்த வேலை மற்றும் வருமானத்தையும் அன்னை கொடுத்தால் தான் ஏற்றுக் கொள்வதாகவும் சொல்வார். அதாவது தன் இஷ்டத்தை வலியுறுத்தாமல் அன்னை என்ன வேலையையும் வருமானத்தையும் கொடுக்கின்றாரோ அது தனக்கு நல்லது என்று எடுத்துக் கொள்வார். இப்படி அன்னையின் இஷ்டத்திற்கு அவர் முடிவை விடும்பொழுது அன்னை அவருக்கு அவர் விரும்பிய பாங்க் வேலையும் கொடுக்கலாம் அல்லது government வேலையோ அல்லது தனியார் companyஇல் ஒரு வேலையோ கூட கொடுக்கலாம் அல்லது இதை எதையுமே செய்யாமல் இந்த அன்பர் சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டியதில்லை என்றும் அதற்குப் பதிலாக சொந்தமாக ஒரு தொழில் செய்து முப்பது, நாற்பது ஆயிரம் என்ற வருமானத்திற்குப் பதிலாக மாதத்திற்குப் பல லட்ச ரூபாய் வருமானத்தைப் பார்க்கக்கூடிய தொழில் அதிபராக தலை எடுப்பதற்கும் அன்னை வாய்ப்புத் தரலாம்.

ஓர் அன்பர் தனக்கு ஒரு குறிப்பிட்ட வேலை வேண்டும் என்று சொல்வதால் அவருடைய வாழ்நாளில் அதுதான் அவருடைய உச்சகட்ட career accomplishmentஆக இருக்கும் என்று அன்னை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மாறாக அன்பருக்கே தெரியாமல் அவருக்குள் ஒரு சுய தொழில் செய்யும் ஆற்றல் மறைந்திருக்கிறது என்று அன்னைக்குத் தெரியலாம். ஏன் பாங்க் வேலை தேர்ந்தெடுக்கிறார் என்று அந்த அன்பரிடம் கேட்டால் தன் தகப்பனார் வங்கி ஊழியராக இருப்பதால் தானும் அதே lineஇல் automaticஆக செயல்பட முடிவு செய்ததாகச் சொல்லலாம். ஏன் சுய தொழிலுக்கு முயற்சி செய்யாமல் சம்பளத்திற்கு வேலை செய்யப் போகிறீர்கள் என்று கேட்டால் தன்னுடைய உறவினர் வட்டாரத்தில் எல்லோருமே employmentஇல் தான் இருப்பதாகவும் யாருமே சொந்தமாக தொழில் செய்து கொண்டு இல்லை என்றும் அதனால் தானும் மற்ற எல்லா உறவினர்களையும் போல employmentடே தனக்கு நல்லதென்று முடிவு செய்துவிட்டதாகச் சொல்வார். இப்படித் தனக்கே தெரியாமல் சுய தொழில் செய்யக் கூடிய ஓர் ஆற்றல் ஓர் அன்பரிடம் மறைந்திருக்கும்பொழுது இப்படிப்பட்ட அன்பர் சமர்ப்பணம் என்ற அணுகுமுறையை மேற்கொண்டாலேயொழிய அன்னையால் எப்படி இவருக்குள் ஒளிந்திருக்கும் அந்த ஆற்றலை வெளிக் கொண்டு வர முடியும்? ஆகவே இவையெல்லாம் வைத்துப் பார்க்கும்பொழுது நமக்கு எது வேண்டும், மற்றும் எது நல்லது என்று அன்னையிடம் வலியுறுத்துவதை விட நமக்கு எது நல்லது என்று அன்னைக்குத் தெரிகின்றதோ அதன்படி அவர் நமக்குச் செய்யட்டும் என்று அன்னையின் திருவுள்ளத்தோடு நாம் ஒத்துழைத்து அதற்கு நாம் வழி விட்டோம் என்றால் இன்று நமக்குக் கிடைக்கும் அருளை விட பல மடங்கு அதிகமாகவே நமக்கு அருள் கிடைக்கும். துரதிர்ஷ்டவசமாக இந்த உண்மை நம்மில் பல பேருக்குத் தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் இல்லை. அதனால் மற்ற மனிதர்களோடு உறவாடும் பொழுது நம்முடைய இஷ்டத்தை நாம் வலியுறுத்துவது போல அன்னையோடு உறவாடும்பொழுதும் நம் இஷ்டத்தையே வலியுறுத்தி நம் சிற்றறிவுக்கு ஏற்றவாறு நம்முடைய சாதனையைச் சுருக்கிக் கொள்கிறோம்.

3. இப்படிச் சரணாகதி மற்றும் சமர்ப்பணம் என்ற அணுகுமுறை நமக்கு எப்படிப்பட்ட நல்ல பலனைக் கொடுக்கிறதோ அதே மாதிரியே ஒரு நல்ல பலனைக் கொடுக்கக்கூடிய ஒரு மூன்றாவது அணுகுமுறையும் உண்டு. ஆங்கிலத்தில் இந்த அணுகுமுறையை Reversal of Attitudes என்று அப்பா அவர்கள் சொல்வார்கள். தமிழில் சொன்னால் அருளின் செயல்பாட்டிற்கு ஏற்றாற்போல் தன்னைத் திருத்திக் கொள்ளுதல் மற்றும் மாற்றிக் கொள்ளுதல் என்று வரும்.

பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு இந்த Reversal of Attitudes என்ற அணுகுமுறை மிகவும் ஏற்ற ஒரு சக்திவாய்ந்த அணுகுமுறையாகும். ஏனென்றால் நமக்கு வருகின்ற பெரும்பாலான பிரச்சனைகள் ஏன் வருகின்றன என்று அலசி ஆராய்ந்து பார்த்தால் நம்முடைய தவறான மனோபாவங்கள் மற்றும் அவற்றின் வெளிப்பாடாக அமைகின்ற நம்முடைய செயல்பாடுகளால்தான் பிரச்சனைகளே வருகின்றன என்று நமக்குத் தெரியவரும். உதாரணமாகத் தன்னுடைய சக்திக்கு மீறி கடன் வாங்கி செலவு செய்து விட்டு, தாங்க முடியாத கடன் சுமையால் அவதிப்படுகின்ற ஓர் அன்பரை எடுத்துக் கொள்வோம். அவருக்கு ஏன் இந்தப் பிரச்சனை வந்திருக்கின்றது என்று ஆராய்ந்து பார்த்தால் financial discipline இல்லாமல் வரவுக்கு மேல் செலவு செய்கின்ற தவறான மனோபாவமும் பழக்கமும் இருப்பதால்தான் அவருக்கு இந்தப் பிரச்சனை வந்திருக்கின்றது என்று தெரிய வரும். ஒன்று வருகின்ற வருமானத்திற்குள் செலவை சுருக்கிக் கொள்ள தெரிய வேண்டும், அல்லது செய்ய விரும்புகின்ற செலவுக்கு ஏற்ற அளவிற்கு வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் சாமர்த்தியமாவது வேண்டும். இப்படிக் கட்டுப்பாடும் இல்லாமல் சாமர்த்தியமும் இல்லாமல் இருக்கின்றவர் இரண்டையும் செய்யாமல் மூன்றாவது வழியில் தெரிந்தவர்களிடம் இஷ்டத்திற்குக் கடன் வாங்கி செலவு செய்து விட்டு கடனாளியாக மாறுகிறார். கடன் கொடுத்தவர் நெருக்கும்பொழுது கடனை அடைக்க வழி தெரியாமல் அன்னை மூலம் நிவாரணம் கிடைக்கும் என்று அன்னையிடம் ஓடி வருகிறார். இந்த கட்டத்திலாவது தன்னுடைய கடன் பிரச்சனைக்கு மூல காரணம், தன்னுடைய சக்திக்கு மீறி செலவு செய்தாவது செலவை சமாளிக்க வேண்டும் என்ற தவறான மனோபாவம் தான் என்று உணர வேண்டும். அதை உணரும்பட்சத்தில் அவருடைய கடன் பிரச்சனையைத் தீர்க்க அன்னை எடுக்கின்ற முயற்சிக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் இந்தத் தவறான மனோபாவத்தையும் பழக்கத்தையும் விட்டுவிடுவதாகவும் மேலும் அன்னையின் அருளால் கடன் பாரம் முழுவதும் தீர்ந்து இவருடைய தேவைக்கேற்ற வருமானத்தைப் பார்க்கும் வரையிலும் யாரிடமும் ஐம்பது அல்லது நூறு ரூபாய் கூட இவர் கடன் வாங்குவது இல்லை என்று தீர்மானம் எடுக்க வேண்டும். இப்படித் தன்னுடைய குறைப்பாட்டை உணர்ந்து அந்த இடத்தில் தன்னைத் திருத்திக் கொள்ள முன்வருவதைத் தான் அப்பா அவர்கள் Reversal of Attitudes என்கிறார். ஆகவே இப்படிப்பட்ட கடன் பிரச்சனையில் மாட்டிக் கொண்ட அன்பர் அன்னையிடம் தான் கொடுத்த வாக்குறுதியில் உறுதியாக நின்றார் என்றால் இந்த ஒத்துழைப்பை வைத்துக் கொண்டு அருளால் அவரை இந்தக் கடன் பிரச்சனையிலிருந்து விரைவில் மீட்க முடியும்.

இதே ரீதியில் நிறைய அன்பர்கள் வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்யும்பொழுது அதற்கேற்ற புதிய வாய்ப்புக்களை உருவாக்கித் தரும்படி அன்னையிடம் கேட்டுக் கொள்கிறார்கள். அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று அன்னையும் அப்படி அவர்கள் வாழ்க்கையில் இதுவரை பார்த்திராத புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறார்கள். அது வெளிநாடு சென்று வேலை செய்யக்கூடிய வாய்ப்பாக இருக்கலாம், அல்லது தமிழ்நாட்டில் உள்ள ஒரு அன்பருக்கு டெல்லி மற்றும் மும்பைக்குச் சென்று வேலை செய்யக்கூடிய வாய்ப்பாக இருக்கலாம் அல்லது சம்பளத்திற்கு வேலை செய்பவருக்குச் சுய தொழில் செய்யக்கூடிய ஒரு வாய்ப்பாகவும் வரலாம். இவை போக திருமண சம்பந்தம் தேடிக் கொண்டிருப்பவருக்கு அவருடைய தகுதிக்கு மீறிய திருமண சம்பந்தமாகவும் அமையலாம். இம்மாதிரி வாய்ப்புகள் அன்பர்களின் வாழ்க்கையில் பலிக்க வேண்டுமென்றால் வருகின்ற வாய்ப்புக்கேற்றபடி அன்பர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

நல்ல வருமானத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு உயர்ந்த வேலை மும்பை, டெல்லி போன்ற இடத்தில் கிடைத்தால் கூட தமிழ்நாட்டில் வசிக்கின்ற சில அன்பர்களால் இத்தகைய வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. வயதான பெற்றோரைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் அவர்களை விட்டு வர இயலாது என்று சொல்வார்கள் அல்லது தனக்கு ஹிந்தி தெரியாது அதனால் டெல்லியில் போய் வசிப்பது கஷ்டம் என்று சொல்வார்கள். இது போக ஒரு சிலர் சாம்பார் சாதம், ரசம் சாதம், மற்றும் தயிர் சாதம் தான் சாப்பிட்டு பழக்கம். இப்பொழுது திடீரென்று இதற்கு பதிலாக ரொட்டி, சப்பாத்தி, க்ஹப் சாப்பிடச் சொன்னால் முடியாது என்று இப்படிச் சொல்லி சாப்பாட்டுப் பழக்க வழக்கங்களை மாற்ற முடியாது என்று காரணம் காட்டுவார்கள். சுய தொழில் செய்ய விரும்புகின்றவர்கள் சம்பளத்திற்கு வேலை செய்வதை விட மேலும் கடினமாக உழைக்க முன் வர வேண்டும். மேலும் financial risk எடுத்து முதலீடு செய்ய முன் வரவேண்டும். கடன் வாங்க வேண்டி இருந்தால் அதையும் தைரியமாக வாங்க வேண்டும். இப்படி மேலும் கடினமாக உழைக்க முன்வராவிட்டாலும், கடன் வாங்கினால் வெற்றிகரமாக திருப்பித் தர முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல் போனாலும், அன்னை அவர்களுக்கு வழங்குகின்ற சுய தொழில் வாய்ப்பால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. இம்மாதிரியே அன்னை வெளியூரில் நல்ல வேலை வாங்கிக் கொடுத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றவர்களுக்கு வயதான பெற்றோர்களை கவனித்துக் கொள்ள வேறு ஏற்பாடுகள் செய்து கொள்ளத் தெரிய வேண்டும். ஹிந்தி தெரியாவிட்டால் Englishஐ வைத்துச் சமாளித்துக் கொள்ள முடியும் என்று முடிவு செய்ய வேண்டும் அல்லது ஹிந்தி கற்றுக் கொள்ளும் முயற்சிகளை எடுக்க வேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள முடியாது என்று பிடிவாதம் செய்யாமல் தேவைப்பட்டால் ரொட்டி, சப்பாத்தி, dal சாப்பிடுகிறேன் என்று முன் வர வேண்டும். தங்கள் தகுதிக்கு மீறி பெரிய இடத்தில் திருமண சம்பந்தம் வந்தால் அதைக் கண்டு மிரண்டு போகாமல் அவர்களோடு நல்லபடியாக பழகும் அளவிற்குத் தங்களுடைய mannersஐ பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்படியெல்லாம் வருகின்ற பெரிய வாய்ப்புக்களுக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்ள முன் வருபவர்களுக்குத் தான் அன்னையின் அருள் முழுமையாகப் பலிக்கும். மாறாக எவ்வளவு பெரிய வாய்ப்பு வந்தாலும் தான் இருக்கின்றபடிதான் இருப்பேன், வளைந்து கொடுக்க மாட்டேன் என்று சொல்பவர்கள் அன்னை பக்தர்களாக இருந்தாலும் அவர்களுக்குக் கிடைக்கின்ற அருளுக்கு உரிய பலனைப் பெறுவது என்பது மிகவும் கடினமாகி விடும்.

4. நான்காவது அணுகுமுறையைப் பற்றி இப்பொழுது பார்ப்போம். Valueக்களை ஏற்றுக் கொண்டு அவற்றை நடைமுறையில் கடைப்பிடிப்பவர்கள் அன்னை அன்பர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் சிறப்பாக சாதிக்கலாம். அப்பா அவர்கள் valueக்களை Spiritual Skills அதாவது ஆன்மீக திறமைகள் என்று கூறிப்பிட்டுள்ளார். அன்னையின் அருளும், valueக்களும் ஒன்றாக இணையும் பொழுது அருளால் கிடைக்கின்ற பலன்கள் பல மடங்கு பெரிதாகின்றன.

Valueக்கள் பல நிலைகளில் இருக்கின்றன. சுத்தம், ஒழுங்கு, காலம் தவறாமை, செயல் நேர்த்தி, சரியாகக் கணக்கு எழுதுதல், தணிவான பேச்சு போன்ற இவையெல்லாம் physical levelலில் உள்ள valueக்கள். Psychological valueக்கள் என்று பல இருக்கின்றன. நல்லெண்ணம், சுமுகம், பணிவு போன்ற valueக்களை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். அறிவு சம்பந்தப்பட்ட mental valueக்களும் உள்ளன. Power of organization மற்றும் அடுத்தவர் கண்ணோட்டத்தை ஏற்றுக் கொள்ளுதல் போன்றவற்றை mental valueக்கு உதாரணமாகக் காட்டலாம். இவை போக, ஒழுக்கநெறி சம்பந்தப்பட்ட valueக்கள் இருக்கின்றன. அதாவது, நேர்மை, உண்மை, நியாய மனப்பான்மை போன்றவை இவற்றின் கீழ் வரும். இவை எல்லாவற்றையும் விட ஆன்மீக valueக்கள் தான் மிகவும் சிறந்தவை ஆகும். இறை நம்பிக்கை, சரணாகதி, சமர்ப்பணம், இறை ஆர்வம், மௌன சக்தி, சமநிலை போன்றவைகள் ஆன்மீக valueக்கள் ஆகும். இப்படிப்பட்ட valueக்களை கடைப்பிடிக்கும் பொழுது அன்பர்களுடைய சாதனைக்கு வரம்போ முடிவோ இல்லை என்ற அளவிற்குச் சாதனையின் தரம் உயரத் தொடங்கி விடும்.

மேற்சொன்ன ஆன்மீக valueக்களுடைய சக்தி பெரிது என்றாலும் இந்த valueக்களை வளர்த்துக் கொள்வதோ மற்றும் நடைமுறையில் கடைப்பிடிப்பதோ மிகவும் சிரமமான காரியமாகும். ஏனென்றால் இவ்valueக்களை ஏற்றுக் கொள்பவர்கள் தம்முடைய மனோபாவங்களையும் செயல்படும் பாணியையும் பெருமளவு மாற்றியாக வேண்டும். அந்த அளவு மாற முன்வருபவர்கள் குறைவு. பொதுவாகவே நமக்கு நம்முடைய திறமை, நம்முடைய பண பலம், பதவி பலம், நம்முடைய சமூக அந்தஸ்து, நம்முடைய social contacts என்று இவற்றின் மேல் தான் நம்பிக்கை இருக்கிறது. நமக்குப் பிரச்சனை என்று எழுந்தாலோ அல்லது தேவை என்று ஒன்று எழுந்தாலோ இவற்றைக் கொண்டு சமாளித்துக் கொள்ளலாம் என்று முயற்சி செய்கிறோம். உடம்புக்கு வந்தால் பார்த்துக் கொள்ள டாக்டர் இருக்கிறார், தகராறு வந்தால் கோர்ட்டில் தீர்த்துக் கொள்ள வக்கீல் இருக்கிறார், கடன் தேவைப்பட்டால் கொடுப்பதற்கு வங்கிகளும் பான் புரோக்கர் கடைகளும் இருக்கின்றன என்று தான் நமக்கு நினைக்கத் தோன்றுகிறது. அதாவது நம்முடைய அறிவு தன்னுடைய சொந்த சாமர்த்தியத்தையும் மற்றும் பண பலம், பதவி பலம் மற்றும் சமூக அந்தஸ்து என்று இவற்றைத்தான் நம்புகிறது. இப்பொழுது அன்னை மேல் முழு நம்பிக்கை வளர்த்துக் கொள்ளப் பிரியப்படுபவர் இப்படிப் பணம், பதவி, சொந்த சாமர்த்தியம் என்று இவற்றின் மேல் வைத்துள்ள நம்பிக்கையை விட்டுவிட முன் வரவேண்டும். ஆனால் இவற்றின் மேல் உள்ள நம்பிக்கையை விடுவது என்பது அவ்வளவு சுலபமும் இல்லை. தன்னுடைய மாத வருமானத்தை இலட்ச ரூபாய் அளவிற்கு உயர்த்திக் கொள்ள தேவையான வாய்ப்புகளோ, சாமர்த்தியமோ ஒருவருக்கு இல்லை என்று அவருடைய அறிவு அவரிடம் சொன்னால் அவர் அதைத்தான் நம்புகிறாரே ஒழிய அவருடைய வாழ்க்கை சூழ்நிலையை மீறி அவருடைய சாமர்த்திய குறைபாட்டையும் மீறி அன்னையின் அருளால் அவருடைய மாத வருமானத்தை இலட்ச ரூபாய் அளவிற்கு உயர்த்த முடியும் என்று ஒரு சாதாரண அன்பரால் அவ்வளவு சுலபமாக நம்ப முடிவதில்லை. தனக்கு வந்துள்ள வியாதியைக் குணப்படுத்த முடியாது என்று டாக்டர் சொல்லிவிட்டாலோ அல்லது போதிய ஆதாரம் இல்லாததால் உங்களுடைய கேஸ் கோர்ட்டில் ஜெயிக்காது என்று வக்கீல் சொல்லிவிட்டாலோ இவர்களுடைய கருத்துகளை முடிவாக ஏற்றுக் கொண்டு மனிதன் நம்பிக்கை இழந்து விடுகிறான்.

இப்படி நாம் செயல்படுவது என்பது நாம் நம்முடைய physical mindஐ நம்பிச் செயல்படுகிறோம் என்பதைக் காட்டுகிறது. இப்படிச் செயல்படுகிறவர்களால் அன்னை வழியில் பெரிதாகச் சாதிக்க முடியாது. ஆனால் நம்முடைய physical mindக்க்கு நேர் எதிரான அணுகுமுறையை அன்னை மேல் நாம் வைக்கின்ற நம்பிக்கை மேற்கொள்கிறது. அறிவை விட நம்முடைய ஆன்மாவின் ஆற்றல் பெரியது என்பதால் நம்முடைய அறிவாலும், நம்முடைய திறமையாலும் சாதிக்க முடியாததை நம்முடைய ஆன்மா சாதிக்கும் என்று நம் நம்பிக்கை சொல்கிறது. ஆகவே நம்பிக்கையால் செயல்படுகின்றவர் ஆன்மாவின் ஆற்றலையும், அருளின் ஆற்றலையும்தான் முடிவாக எடுத்துக் கொள்கிறார். அப்பட்சத்தில் பண பலம், பதவி பலம், சமூக அந்தஸ்து, social contacts, அறிவு பலம் மற்றும் மருந்து, மாத்திரை, டாக்டர், வக்கீல், சட்டம் என்று எல்லாமே இரண்டாம்பட்சமாகி அருள் நமக்கு வழங்க விரும்பும் பலன்களைக் கொண்டுவரக்கூடிய கருவிகளாக மாறுமே ஒழிய இவையே பிரதானமாக இருப்பதில்லை. ஆகவே இதைப் புரிந்து கொண்டு தம்முடைய physical mind ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டிருக்கும் அன்பர்கள் அதிலிருந்து விடுபட்டு அன்னையின் அருளின் ஆற்றலின் மேல் அபார நம்பிக்கை வளர்த்துக் கொண்டார் என்றால் இந்நாள் வரை அவரால் சாதிக்க முடியாத காரியங்களைச் சாதிப்பார்கள். இந்நாள் வரை தீராமல் அவர்களை வருத்திக் கொண்டிருக்கும் பிரச்சனைகளும் உடனே தீர்வதையும் அவர்கள் பார்க்கலாம்.

நம்பிக்கையைப் பற்றி நாம் பேசும்பொழுது அதோடு நெருங்கிய தொடர்புடைய மற்றொரு ஆன்மீக valueஆன சமர்ப்பணம் மற்றும் சரணாகதியை நாம் கருதியே ஆக வேண்டும். எவர் ஒருவரால் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள முடியுமோ அவரால் சமர்ப்பணத்தையும் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நாம் சொல்லலாம். அன்றாட வாழ்க்கையிலும் கூட நாம் அடுத்தவரைப் பூரணமாக நம்பி அவருக்கு surrenderஆகி நம் விஷயங்களை அவரிடம் ஒப்படைத்து நம் காரியங்களை நம்மை விட அவர் சிறப்பாக நிறைவேற்றுவார் என்று நம்பி செயல்படுகின்ற இடங்கள் நிறைய இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட டாக்டர் தன்னைக் குணப்படுத்துவார் என்று ஒரு நோயாளிக்கு நம்பிக்கை வரும்போது அவர் அந்த டாக்டருக்கு surrender ஆகி விடுகிறார். Treatment விஷயத்தில் டாக்டருக்கு முழுவதும் கட்டுப்பட்டு அவர் வழங்கும் treatment தமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ அவர் சொன்னதை எல்லாம் செய்தால் தனக்கு நல்லது என்று நம்பி அப்படியே செய்கிறார். ஓர் இளம் பெண் குறிப்பிட்ட ஆண்மகனைக் கணவராகத் தேர்ந்தெடுத்தால் அவர் இவளை நன்றாகப் பார்த்துக் கொள்வார் என்று மனதில் பட்டால் அவரைப் பூரணமாக நம்பி தன் வாழ்க்கையை அவர் கையில் ஒப்படைத்து அவருடைய அதிகாரத்திற்குத் தான் surrender ஆகி விடுவதை நாம் பார்க்கிறோம். அந்த நம்பிக்கை மற்றும் சரணாகதியின் வெளிப்பாடாக கணவனாக மாறிய ஆண்மகன் என்ன செய்யச் சொன்னாலும் அதைத் தனக்கு நல்லது என்று நம்பி அப்பெண் செய்வதையும் பார்க்கிறோம். இப்படி மக்கள் டாக்டர்களையும் வழக்கறிஞர்களையும் மற்றும் திருமணம் செய்து கொள்ளும் ஆண்களையும் முழுவதுமாக நம்பி அவர்களுக்கு surrender ஆகி அவர்களிடம் தம் பிரச்சனைகளையும் தன் வாழ்க்கையையும் ஒப்படைக்கும் பொழுது அன்பர்கள் ஏன் அன்னையை முழுவதும் நம்பி அவருக்கு surrender ஆகி அவர் கையில் தம் வாழ்க்கையை ஒப்படைக்கக் கூடாது என்ற கேள்வி எழுகிறது. இப்படி அன்னையிடம் surrender ஆகிய அன்பர்கள் தம்முடைய பிரச்சனைகள் உடனே கதிரவனின் ஒளி பட்டவுடன் காலைப் பனி கரைவதைப் போல உடனே மறைவதைப் பார்க்கிறோம்.

தொடரும்.....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
கையிலுள்ளவை கட்டுப்பட்டால் கையில் இல்லாதவை கட்டுப்படும்.
 

*******



book | by Dr. Radut