Skip to Content

10. அன்னை இலக்கியம் - நல்லதோர் வீணை செய்து

அன்னை இலக்கியம்

நல்லதோர் வீணை செய்து

(சென்ற இதழின் தொடர்ச்சி)

இல. சுந்தரி

‘சரிம்மா அழைத்து வருகிறேன்’ என்று விடைபெற்று வீட்டிற்கு வந்தாள்.

நீண்ட நேரம் கழித்தே ஆர்த்தி விழித்தாள். பக்கத்தில் படுத்திருந்த பாரதியின் நினைவு வந்தது.

சுபா எல்லா வேலைகளுக்கிடையேயும் ஆர்த்தியின்மீதே கண்ணாயிருந்ததால் அவள் விழித்ததும் அருகில் வந்து ‘குட்மார்னிங் பேபி’ என்றாள் சிரித்துக்கொண்டே. சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் பனிரெண்டு மணிக்கு சங்கீத ஒலி இசைத்தது.

‘பகல் பனிரெண்டு மணிக்கு என்ன குட்மார்னிங் பெரியம்மா?’ என்றவள் பாரதியைப் பற்றிக் கூற நினைத்தவுடன் சுபாவே குறிப்பறிந்து கூறினாள். பாரதி காலை ஆறு மணிக்கே விழித்துக்கொண்டு வீட்டிற்குப் போகப் பிரியப்பட்டாள். ‘நானே அவளை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்தேன்’ என்றாள்.

‘தாங்ஸ் பெரியம்மா டிரைவருடன் அனுப்பாமல் நீங்களே போனீர்களே ரொம்ப தாங்ஸ்’ என்றாள்.

‘என்ன ஆர்த்தியிது? நம் அழைப்பிற்கு மரியாதைக் கொடுத்து அனுப்பிய பெண்ணை நான் மரியாதையாக நடத்தாமல் இருப்பேனா? உன் தோழியும் எனக்கு உன்போலதான்’ என்று சுபா கூறியது ஆர்த்திக்கு நிறைவளித்தது.

‘நீண்ட நேரம் கண் விழித்தது அசதியாக இருக்கிறதா ஆர்த்தி?’ என்று கேட்டாள் சுபா.

‘இல்லை பெரியம்மா. பாரதி மிகவும் கெட்டிக்காரி.

ஆசிரியரை விடவும் அழகாகச் சொல்லித் தருவாள். அவளுடன் படித்தது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது’ என்று கூறிய வண்ணம் பல் விளக்கப் போனாள் ஆர்த்தி.

அப்போதுதான், இரண்டுநாட்கள் படப்பிடிப்பு முடித்து வந்த சுமதி, அடுத்த பகுதியில் ஆர்த்தியின் குரல் கேட்பதைக் கவனித்தாள். இந்நேரத்தில் அவள் குரல் கேட்கிறதே. ஏன் பள்ளிக்குப் போகவில்லை. அவளுக்கு ஏதேனும் உடம்பு சரியில்லையோ எனக் கலங்கி, அந்தப் பகுதிக்குப் போனால் ஆர்த்தி என்ன செய்வாளோ என்று பயந்து கதவோரம் மெல்லச் சென்றாள். சுபா, சுமதியைக் கவனித்து விட்டதால் விரைவாக கதவுப்பக்கம் வந்து, ‘என்ன சுமதி!, எப்போது வந்தாய்? ஷூட்டிங் நல்லபடியாக முடிந்ததா?’ என்று மெல்லிய குரலில் விசாரித்தாள்.

‘அதெல்லாம் நல்லபடியாய் நடந்தது. ஆர்த்திக்கு உடம்புக்கு என்ன? அவள் ஏன் ஸ்கூல் போகவில்லை’ என்றாள் பதற்றமாக.

‘சுமதி! அவளுக்கு இன்று முதல் ஸ்டடி லீவ். நேற்றிரவு கண் விழித்துப் படித்தாள். தாமதமாய் எழுந்தாள். வேறொன்றுமில்லை. நன்றாகத்தான் இருக்கிறாள். அவள் பல்விளக்கப் போயிருக்கிறாள். வந்து விடுவாள். நீ போய் ரெஸ்ட் எடு, பிறகு பார்ப்போம்’ என்றாள்.

ஒரே வீட்டில் இரண்டு பிரிவு. இரண்டு குடும்பம்.

ஒருவேளை சுபாவிடம் விட்டுத் தனியாக வளர்க்க ஏற்பாடு செய்யாதிருந்தால் அவள் பாசம் தனக்குக் கிடைத்திருக்குமோ என்று ஒரு கணம் நினைத்தாள். ஆர்த்திக்கு ஒரளவு நினைவு தெரிந்தவுடனேயே தன் தொழிலையும், அது தொடர்பாய்த் தன்னைக் காண வரும் பிரமுகர்களையும் பார்த்தவுடன் அவள் தன்னை விட்டு விலகியது நினைவு வந்தது. சுபா மட்டும் இல்லையென்றால் அவள் வீட்டை விட்டே போயிருப்பாள். ஆதரவற்ற அநாதை என்று சொல்லிக் கொண்டு பாதுகாப்பற்ற நிலையில், அதுவும் வயதுக்கு வந்த நிலையில் பெண் குழந்தை என்ன பாடுபட்டிருப்பாள்? தன் கடந்த காலம் நினைவுக்கு வந்தவுடன் அவளைப் பற்றிய கொடிய கற்பனை எழுந்தது. இரண்டு நாட்களாக படப்பிடிப்பு அசதிவேறு, கண நேரத்தில் மயங்கி விழுந்தாள்.

ஆர்த்திக்குச் சூடாக ஏதேனும் பருகக் கொடுக்க வேண்டும் என சமையலறைப் பக்கம் சுபா சென்றிருந்தாள். தற்செயலாக அந்தப் பக்கக் கதவு திறந்திருப்பதைக் கண்டு அதைச் சார்த்துவதற்காகக் கதவுப்பக்கம் வந்த ஆர்த்தியின் பார்வை அம்மா மயங்கி விழுவதைப் பார்க்க நேர்ந்தது. ஓடிச்சென்று தன்னை மறந்து கிடந்த அம்மாவின் தலையைத் தன் மடிமீது வைத்துக் கொண்டு, தங்கள் பகுதிக்குச் செல்லும் வாயிலை நோக்கி பெரியம்மா வருகிறாளா என்று பார்த்தாள் ஆர்த்தி. காபியுடன் ஆர்த்தியைத் தேடி வந்த சுபா அந்தப் பகுதிக்குச் செல்லும் கதவு திறந்திருப்பதைக் கண்டு மூட வந்தவள் ஆர்த்தியின் சின்ன மடியில் சுமதி தலை வைத்துப் படுத்திருப்பது நம்ப முடியாததாயிருந்தது. இவள் எப்படி அங்கு போனாள். போக மாட்டாளே என்று எண்ணிய வண்ணம் ஆர்த்தியிருந்த இடத்திற்குப் பதற்றத்துடன் வரவே, ஆர்த்தி மெல்லிய குரலில் அவளை அருகே வரவழைத்து, ‘பெரியம்மா கொஞ்சம் தண்ணீர்க் கொண்டு வா. அந்தக் காபியை இப்படிவை’ என்றாள். துக்கத்திலும் மகிழ்ச்சி. இதைச் சுமதி உணர்வாளா? அவள் உணர்ந்தால் இவள் நீடிப்பாளா? என்ன விந்தையிது என்று எண்ணமிட்டபடி சுபா தண்ணீர் ஜாடியுடன் வந்தாள். அவளை அமரச்செய்து, அவள் மடியில் அம்மாவின் தலையை மெல்ல மாற்றினாள். தன் மெல்லிய விரல்களால் தண்ணீரை ஏந்தி அம்மாவின் முகத்தில் தெளித்தாள். அம்மா தெளிவடையத் தொடங்கும் போது, ‘பெரியம்மா! காபியை அவர்களுக்குக் கொடுத்துவிடு. நான் போய் வேறு தயாரித்துக் குடித்துக் கொள்வேன்’ என்று கூறி தாமதமின்றிச் சென்றுவிட்டாள்.

சுபா பிரமிப்பால் ஒரு கணம் செய்வதறியாது திகைத்தாலும் சரிப்படுத்திக் கொண்டாள். சுமதியை லேசாய்த் தடவிக் கொடுத்து வாயைத் திறக்கச் சொல்லி காபியைக் குடிக்க வைத்தாள். தெளிந்தவுடன் சுமதி ‘தனக்கு என்னவாயிற்று’ என்றாள். ‘ஒன்றும் ஆகவில்லை உன் அறைக்குப் போகலாம் வா’ என்று கைத்தாங்கலாய் அழைத்துப் போய், படுக்கையில் படுக்க வைத்து, பக்கத்தில் அமர்ந்த சுபா, சுமதி உனக்கு என்ன நேர்ந்தது என்று எனக்குத் தெரியாது, நான் ஆர்த்திக்குக் காபி எடுத்து வந்து அங்கு அவளைக் காணாமல் தேடியபோது அவளே என்னை அழைக்கும் குரல் கேட்டது. வந்து பார்த்தால் இங்கு (இந்தப்பகுதி வீட்டில்) உன் தலையைத் தன் மடிமீது வைத்திருந்தாள்.

இவ்வாறு சுபா சொல்லும் போதே சுமதியின் கண்கள் ஆனந்தக்கண்ணீர் வடித்தது.

‘என்னை அழைத்துத் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி உன் முகத்தில் தெளித்து உன் மயக்கம் தெளிவித்ததும் அவள்தான். அவளுக்குக் கொண்டு வந்த காபியை உனக்குத் தரச்சொல்லி உன்னை என் மடியில் படுக்கவைத்து விட்டுச் சென்றாள்’ என்று கூறினாள் சுபா.

‘அப்படியா? நிஜமாகவா? நான் பாக்கியசாலிதான்’ என்று சுமதி கூறி முடிக்கும் போதே ஆர்த்தியின் குரல் அந்தப்பகுதி வாயிலிலிருந்து கேட்டது. ‘பெரியம்மா! சீக்கிரம் வா. நான் குளிக்க வேண்டும்’ என்றழைக்கிறாள் ஆர்த்தி. சுபா அங்கு இருக்கக் கூடாது என்று பொருள் அந்த அழைப்பிற்கு.

‘சுபா! நீ போய் விடு. நீயாவது குழந்தைக்கு இருக்கிறாயே.

அதற்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்வேன்’ என்று கண் கலங்கி விடை கொடுத்தாள் சுமதி.

இந்தச் சூழ்நிலைகள் காரணமாய் வேலைக்காரர்கள் வீட்டோடு வைத்துக் கொள்ளப்படவில்லை. வெளி அவுட் ஹவுஸில் எப்போதும் இருந்துகொண்டிருக்க வேண்டும். போன் போட்டால் உடனே வரவேண்டும். காலையில் வீடு சுத்தம் செய்து விட்டுப் போய் விடவேண்டும். சமையல் மெனு எப்போது கொடுக்கிறாளோ அப்போது தயாரிக்க வேண்டும். ஆர்த்தியைப் பொறுத்தவரை சுபாவே எல்லாம் பார்த்துக் கொள்வாள். தேவைப்பட்டால் ஒன்றிரண்டு சிறுமிகள் இருக்கிறார்கள். அவர்களை அழைத்துக் கொள்வாள். வீட்டிற்கு வெளியே, தோட்டத்தில் எப்போதும் ஆட்கள் உண்டு. வீட்டிற்குள்ளே அனுமதியின்றி, அழைத்தாலன்றி யாரும் வரமுடியாது. எனவே, சுபா அவுட் ஹவுஸுக்குப் போன் செய்து சுமதிக்குத் தேவையான வேலைக்காரப் பெண்ணை வரச் சொல்லி விட்டுப் போய்விட்டாள்.

‘அம்மா எப்படியிருக்கிறாள்?’ என்று ஆர்த்தி கேட்பாள் என்று எதிர்பார்த்தாள் சுபா. ஆனால் அப்படி ஒரு சம்பவமே நினைவில்லை போல் நடந்து கொண்டாள் ஆர்த்தி.

அன்றிரவு ஏழுமணி சுமாருக்கு ஆர்த்தியைப் பாரதியின் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்தாள் சுபா.

பாரதி வாயிலிலேயே நின்று ஆர்த்தியை உள்ளே அழைத்துப் போனாள்.

உள்ளே போகும்முன், ‘ஆர்த்தி! நான் எப்போது உன்னை அழைத்துப் போக வரவேண்டும்?’ என்று சுபா கேட்டதற்கு, நான் போன் செய்கிறேன் ஆன்ட்டி என்று பாரதி முந்திக் கொண்டாள்.

வீட்டிற்கு வந்த சுபாவிற்கு, வீடு வெறிச்சென்றிருந்தது. இந்தப் பதினைந்து ஆண்டுகளில் பள்ளிக்கூடம் செல்லும் நேரம் தவிர ஆர்த்தியை அவள் பிரிந்திருந்ததில்லை.

பள்ளிக்கூட ‘டூர்’-களுக்குத்தான் அவள் சென்றிருக்கிறாள்.

இந்தச் சிறு பிரிவு தனக்கு இத்தனை வேதனை தருகிறதே, சுமதிக்குப் பெண்ணின் மறுப்பு எத்தனை வேதனை தரக்கூடும் என்று எண்ணி இரக்கப்பட்டாள்.

சுமதியின் உடல்நிலை குறித்து அறிய அவள் அறைக்கு வந்தாள் சுபா.

‘வா சுபா. உன்னைப் பார்த்தால் ஆர்த்தியைப் பார்ப்பது போலிருக்கிறது’ என்றாள் மகிழ்ச்சியுடன்.

மெதுவாக அவள் பக்கத்தில் வந்தமர்ந்து, அவள் நலம் விசாரித்தாள்.

‘நான் நலமாகி விட்டேன் சுபா. நீ இப்பொழுது இங்கு எப்படி வந்தாய்? ஆர்த்தி என்ன செய்கிறாள்?’ என்றாள் சுமதி. ஒருவேளை தன்மீது உள்ளூர அன்பு கொண்டு தன்னைப் பார்த்துவர சுபாவை அனுப்பியிருப்பாளோ என்ற எதிர்பார்ப்பு அவளுக்கு.

‘அவள் வீட்டில் இல்லை. தன் தோழியுடன் சேர்ந்து எக்ஸாமுக்குப் படிக்க அவள் வீட்டிற்குப் போயிருக்கிறாள். நான் தான் அவளை அங்குக் கொண்டுவிட்டு வந்தேன். நேற்று அந்தப் பெண் பாரதியை, ஆர்த்திக்காக இங்கு வரவழைத்தேன்.

இன்று இவள் அங்கு போயிருக்கிறாள்.’

‘அங்கெல்லாம் போனால் அவள் எப்படி உணர்வாளோ?’ என்று தயங்கினாற்போலக் கூறினாள் சுமதி.

‘ஒன்றும் ஆகாது. அவள் தோழி நல்லபெண். படிப்பில் முதல்தரம். ஆர்த்தி அழகாகத்தான் தன் தோழியைத் தேர்வு செய்திருக்கிறாள். அங்கு போனால் இவள் கலகலப்பாய், மகிழ்ச்சியாய் இருக்கிறாள்’ என்றாள் சுபா.

‘ஏன் சுபா எனக்கு மட்டும் இப்படி நேர்கிறது? மாலாவைத் தெரியுமல்லவா உனக்கு? என்னைப் போலவே பிரபலமானவள் தான் அவளும். அவளுக்கும் என்னைப் போல் ஒரு மகள் இருக்கிறாள். அந்த மகள் எப்படி நடக்கிறாள் தெரியுமா? மாலா தன் மகளை ஷýட்டிங் ஸ்பாட்டுக்கோ, தொழில்துறை தொடர்பான விசேஷங்களுக்கோ அழைத்து வருவதில்லை. ஆனால் பொது விழாக்களுக்கு, உறவினர் விசேஷங்களுக்கு அழைத்து வருகிறாள். அவள் மகள் அவளை எப்படி நேசிக்கிறாள் தெரியுமா? அவள் வீட்டிற்கு ஒரு முறை சென்றிருந்தேன். தனக்காகத் தன் தாய் உழைப்பதாக உணர்ந்து பேசுகிறாள். வீட்டிலிருக்கும் போது அவளை அவள்மகள் தானே தாயாகிக் கவனித்துக் கொள்கிறாள்’ என்று ஏக்கத்துடன் சுமதி கூறினாள்.

‘நான் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையாக பதில் சொல்வாயா சுமதி?’ என்றாள் சுபா.

‘என்ன சுபா இப்படிக் கேட்கிறாய்? நான் இதுவரை உன்னிடம் பொய்யாகவா பேசி வந்திருக்கிறேன்?’ என்று எதிர்க்கேள்வி தொடுக்கிறாள் சுமதி.

‘அதற்கில்லை சுமதி. நம்முள்ளத்தில் ஒரு எண்ணம் ஆழமாக இருக்கும். நாம் மேலெழுந்த வாரியாய் ஒன்றைச் செய்து கொண்டிருப்போம். அதை நன்றாக ஆழ்ந்துணர்ந்து கண்டுபிடிக்க வேண்டும். நீ உன் நடிப்புத் தொழிலைப் பெரிதும் விரும்புகிறாயா?’ என்றாள் சுபா.

‘ஆமாம் சுபா. அதிலென்ன சந்தேகம்? இல்லையென்றால் இப்படி இரவு பகல் பாராமல் படப்பிடிப்பில் கலந்து கொள்வேனா?’ என்றாள் சுமதி.

‘அப்படியானால் உன்மீது உனக்குப் பெருமித உணர்வு தானா?’ என்றாள் சுபா.

‘என்ன சொல்கிறாய் சுபா? என்மீது எனக்குப் பெருமிதமா? இல்லை பெருமிதம் ஏதுமில்லை.’

(இதைச் சொல்வதற்குள் ஒரு கணம் தடுமாறிப் போனாள் சுமதி) ‘என் தொழிலை நான் உயர்வாக மதிக்கிறேன். ஆர்வத்துடன்தான் செய்கிறேன் என்பது என்னவோ உண்மை தான். ஆனால் என்மீது எனக்கு எவ்வித பெருமிதமும் இல்லை சுபா. சிலநேரம் வாழ்வில் தொழில் ரீதியாய்ச் சந்திக்கும் அவலங்கள் என்னை உள்ளே கருகிப் போகச் செய்கின்றன. எனக்கு வெறுப்பு வருகிறது. என்னையே நான் வெறுத்துக் கொள்கிறேன். என் ஒரே மகிழ்ச்சியாய் ஆர்த்தியைத்தான் நினைத்தேன். அந்தச் சந்தோஷமும் எனக்குக் கிடைக்கப் போவ- தில்லை. உண்மையில் இந்த வாழ்வில் பெருமையைவிட அந்தரங்கமாக வெறுப்புகளையே சந்தித்தேன். அந்த அவலங்கள் என் குழந்தைக்கு வரக்கூடாது என்றுதான் அவளைக் கருவில் கலைத்திட எண்ணினேன். வசந்தி என் வாழ்வில் வசந்தமாய் வந்து இனிமை சேர்த்தாள். ஆனால் ஆர்த்திக்கு ஏனோ என்னைப் பிடிக்கவில்லை’ என்றாள் சுமதி.

‘உண்மையைச் சொல்லவா சுமதி. நீ மேலுக்குத்தான் திரைப்பட நடிகை. உண்மையில் அந்தத் துறையின் அவலங்களைச் சந்தித்து அதன்மேல் உனக்கு வெறுப்பே அதிகமாயுள்ளது. நீ அந்நியக் காற்று மேலே பட்டாலும் சுருங்கிப் போகும் சுபாவம் படைத்திருக்கிறாய். உன் உள்ளாழத்தில் நீ எதிலும் தூய்மையையே நேசித்திருக்கிறாய். அதுதான் உன் மகளாய் உருவெடுத்துள்ளது. உன் தோற்றத்தில் உன் புற வாழ்வில் உனக்குப் பிடித்தமில்லை. உன் மகளுக்கும் அதில் பிடித்தமில்லை. உன் உள்ளாழத்தில் உள்ளதை அவள் தன் ஆழ்மனத்தில் உணரும்போது உன் மீதுள்ள வெறுப்பு அன்பாய் உருமாறும். உருமாறிய அன்பின் வலிமையை அப்போது நீ அனுபவிக்கத்தான் போகிறாய்.’

இவள் என்ன சொல்கிறாள்? சிறிதுநேரம் குழப்பமாயிருந்தது.

‘சரி சுமதி. இன்று உனக்கு உடம்பும், மனமும் சரியில்லை. அமைதியாகத் தூங்கி எழுந்தால் எல்லாம் சரியாகிவிடும்’ என்றெழுந்தாள் சுபா.

‘எங்கே போகிறாய் சுபா? ஆர்த்திதான் அங்கில்லையே. இன்றிரவு நீ என்னுடன் இரு. ஆர்த்தியைப் பற்றி ஏதேனும் சொல். கேட்டால் அவளைப் பார்ப்பது போல் மகிழ்ச்சியாய் இருக்கிறது’ என்றாள் சுமதி.

‘ஆர்த்தி என்றதும் நினைவுக்கு வருகிறது. அப்பொழுதே கொண்டு விட்டேன். போன் செய்து விசாரித்துவிட்டு வருகிறேன் என்று தங்கள் பகுதிக்குப் போக எழுந்தபோது, இரு, இரு. இங்கேயே பேசலாம்’ என்று செல்போனை எடுத்து வைத்துக் கொண்டு, பாரதி வீட்டு போன் நம்பர் கேட்டாள். அவள் சொல்லச்சொல்ல எண்களை போனில் பதித்துக்கொண்டு ரிங் போவது தெரிந்ததும் செல்லை அவளிடம் கொடுத்தாள்.

‘ஹலோ!’ என்று சுபா அழைத்ததும், பாரதியின் அப்பா மறுமுனையில் குரல் கொடுத்தார்.

‘சார். நான் ஆர்த்தியின் பெரியம்மா பேசுகிறேன். குழந்தை படிக்கிறாளா?’ என்றவுடன் போனை ஆர்த்தியிடமே கொடுத்திருப்பார் போலும், ‘ஹலோ! பெரியம்மா. நீ இன்னும் தூங்கவில்லையா?’ என்றாள் ஆர்த்தி.

‘எப்படியடா எனக்குத் தூக்கம் வரும்? உன்னைப் பிரிந்து என்றாவது உறங்கியிருக்கிறேனா? அது போகட்டும் படிக்கிறாயா? அதற்காக விடியவிடிய படிக்க வேண்டாம். எப்போது போன் செய்தாலும் உடனே வந்து அழைத்துப் போகிறேன்’ என்றாள் சுபா.

‘போ பெரியம்மா. உற்சாகமாய்ப் படிக்கும் போது தடுக்காதே. எக்ஸாமெல்லாம் முடியட்டும். நன்றாகத் தூங்கிக் கொள்ளலாம். சரி சரி என்னை நினைத்துக்கொண்டு நீ விழித்திருக்காதே. நான் பத்திரமாய் வருவேன். கவலைப்படாதே பெரியம்மா. குட் நைட்’ என்று வைத்துவிட்டாள்.

‘என்னைக் கவலைப்படாதே என்று சொல்லும் அளவுக்குப் பெரிய மனுஷி ஆகிவிட்டாள்’ என்று சொல்லிக்கொண்டே செல்போனை சுமதியிடம் கொடுத்தாள்.

அவள் பேசப் பேச அவளை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்த சுமதி, செல்லைக் கையில் பெற்றதும் என்ன பேசினாள்? எப்படியிருக்கிறாள் என்றெல்லாம் ஆர்வத்துடன் கேட்டுவிட்டு, ‘சுபா! நேரமாகிவிட்டது, ஆர்த்தி சொன்னது போல் கவலைப்படாமல் தூங்கு போ’ என்று அவளை அவள் பகுதிக்கு அனுப்பிவிட்டாள்.

அவள் சென்றபிறகு ஆர்த்தியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள். பாரதியின் வீட்டு போன் நெம்பரை நினைவுபடுத்திச் செல்லில் இருத்திக் கொண்டாள். ஆர்த்திக்குப் பதினைந்து வயதாகிவிட்டது என்றாலும் அவள் குழந்தைதான். அவள் குரல் கேட்க எத்தனை இனிமையாயிருக்கிறது? எத்தனை அக்கறையுடன் சுபாவைக் கவலைப்படாதே தூங்கு என்று சொல்கிறாள். இதை மட்டும் அவள் எனக்குச் சொல்லியிருந்தால் என் துயரமெல்லாம் கரைந்து, நான் வானில் அல்லவோ பறப்பேன் என்று எண்ணியபோது, பாரதிவீட்டு போனில் ஆர்த்தியை அழைத்து அவள் குரலைக் கேட்டால் என்ன விளைவு நேருமோ என்று அச்சம் எழுந்தது. பேச வேண்டும் என்ற ஆர்வம் அச்சத்தை எதிர்த்தது.

செல்லில் பாரதி வீட்டுப் போனில் தொடர்பு கொள்ள, எதிர்ப்பக்கத்தில் ஒரு பெண்மணியின் குரல் கேட்டது. நல்ல வேளை ஆர்த்தி எடுக்கவில்லை எடுத்திருந்தால் அவள் அருமையான சூழல் என்னால் கெட்டுவிட்டது என்ற ஆத்திரம் வரும். மாற்றார் வீட்டில் தன் ஆத்திரத்தைக் காட்டவும் இயலாது தவிப்பாள் பாவம் என்று எண்ணியது மனம். ஆனாலும் ஆர்த்தியின் குரலைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் மட்டும் தணியவில்லை.

எனவே, யார் என்று போனில் கேட்டவர்க்குச் சமயோசிதமாய் ‘ஆர்த்தியின் வீட்டிலிருந்து’ என்று மட்டும் கூறினாள்.

உடனே மறுபக்கத்தில், ‘ஓ ஆர்த்தியின் பெரியம்மாவா?

இதோ ஆர்த்தியைக் கூப்பிடுகிறேன்’ என்ற பதில் வந்தவுடன் சுமதிக்குப் படபடப்பாயிருந்தது. குரலைக் கேட்க ஆவல்.

குழந்தையின் பிரதிபலிப்பு எப்படியிருக்குமோ என்று அச்சம். ஆவலுக்கும், அச்சத்திற்குமிடையே அலைபாய்ந்து கொண்டிருக்கும்போதே,

‘என்ன பெரியம்மா இன்னும் தூக்கம் வரவில்லையா? என் எக்ஸாம் முடியும்வரை இந்தப் பாசத்தையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்துவிட வேண்டும். அப்பொழுதுதான் உன் பெண் பெரிய பெயர் வாங்க முடியும். நானில்லாமல் சாப்பிட்டாயா இல்லையா? பாலாவது குடி’ என்று கூறிக் கொண்டேயிருக்கிறாள்.

செந்தமிழ் நாடு என்னும்போது பாரதியார்க்குத் தேன் வந்து காதில் பாயுமாமே. அப்படித்தானிருந்தது சுமதிக்கு. தன் மகளின் குரல். பரிவான உரிமையான பேச்சுகள். இப்படியெல்லாம் கூட தன் மகள் தன்னிடம் பேசுவாளா? இது கனவா? கற்பனையா? இல்லை நிஜமே தானா? மெய்ம்மறந்தாள் சுமதி.

‘என்ன பெரியம்மா? சொல்வதெல்லாம் புரிந்ததா? போனைக் கையில் வைத்துக்கொண்டே தூங்கி விட்டாயா?’ என்றாள். சிரித்துக்கொண்டே கூறியிருக்கவேண்டும் என்று யூகித்தாள்.

‘உம், உம்’ என்று பேசாமல் உம் கொட்டினாள். பேசினால் ஆர்த்தி தன்னை அடையாளம் கண்டு கொள்வாள் என்று அச்சம்.

‘பெரியம்மா! கவலைப்படாமல் தூங்கு. காலையில் ஐந்து மணிக்குக் கார் கொண்டுவா. வைத்துவிடட்டுமா?’ என்றாள்.

‘உம், உம்’ என்றே பதிலளித்தாள் சுமதி. குழந்தை போனை வைத்துவிட்டாள். இனி எப்போது இது கிடைக்குமோ? நாளையே தெரிந்துவிட்டால் குழந்தையின் அமைதியான போக்கில் சலனம் வந்துவிடுமே என்ற கவலை. கடவுளை வேண்டிக்கொண்டு, மீண்டும், மீண்டும் ஆர்த்தியின் இனிய குரலை, உரிமையான பேச்சை அசை போட்ட வண்ணம் ஆனந்தமாய் உறங்கினாள். எத்தனை இனிய அனுபவம் இது. புகழும், பாராட்டும் தரமுடியாத இனிமையல்லவா இது.

சுபா இரவெல்லாம் ஆர்த்தியைப் பற்றி எண்ணிய வண்ணம் உறங்காது பின்னிரவில்தான் உறங்கினாள். காலையில் ஐந்து மணியெல்லாம் கடந்துவிட்டது. ஆர்த்தியை பாரதியின் அம்மாவே கொண்டுவிட்டாள். ‘உள்ளே வந்து காபி குடித்து விட்டுப் போகலாம்’ என்று பாரதியின் அம்மாவை ஆர்த்தி உபசரித்தாள். நேரமாகிவிட்டது. ‘இப்போது வேண்டாம். பிறகு ஒருநாள் சாவதானமாய் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் பாரதியின் தாய்.

உள்ளே ஓடி வந்த ஆர்த்தி, சுபா உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, பேசாமல் அவள் பக்கத்தில் படுத்துக்கொண்டாள். திடீரென உணர்வு வந்தது போல் ஆர்த்தியின் கை தன்மேல் பட்டதும் விழிப்பு வந்துவிட்டது. ‘அடடா! தூங்கி விட்டேனே. நான் போய் அழைத்து வராமல் இவள் எப்படி வந்திருப்பாள்? மணி என்னவாயிருக்கும்’ என்று பதற்றமானாள்.

‘ஆர்த்தி எப்படி வந்தாய்? எப்போது வந்தாய்? ராத்திரி பூராவும் தூக்கமில்லையடா. என்னையறியாமல் தூங்கியிருக்கிறேன். பெரியம்மாவை மன்னித்து விடடா. இதற்குத்தான் நம் வீட்டிலேயே படி என்றேன் என்று மன்னிப்பு வேண்டும்’ தோரணையில் பேசினாள்.

ஆர்த்திக்கு வந்தபோதிருந்த கோபம் தணிந்துவிட்டது. ‘சரி பெரியம்மா நேற்றிரவு இரண்டு முறை போன் செய்தாயே, நான்தான் காலையில் ஐந்து மணிக்கு காரை எடுத்துக்கொண்டு வா. கவலைப்படாமல் தூங்கு என்றேனே’ என்றாள்.

‘இரண்டு முறை போன் செய்தேனா? இவள் என்ன சொல்கிறாள் என்று தனக்குள் நினைத்தாள் சுபா. ஒருவேளை மகளுடன் பேச ஆசைப்பட்டு சுமதி போன் செய்திருப்பாளோ?

அப்படியிருந்தால் குரலைக் கேட்டதும் போனை வைத்திருப்பாளே’ என்று யோசித்துக் கொண்டே இருக்கும் போது, ‘அது என்ன பெரியம்மா உம், உம் என்று ஒரு மொழி. போனில் இரவு பேசினீர்களே அதைச் சொல்கிறேன். பேச்சு மறந்து விட்டதா?’ என்றாள் சிரித்துக்கொண்டே.

சுபாவிற்கு இப்போது புரிந்துவிட்டது. தான் ஆர்த்தியுடன் போனில் பேசியதை எத்தனை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். முதலில், இரவு அங்கேயே தங்கும்படிக் கூறியவள், பிறகு திடீரென நீ போய் தூங்கு என்று இங்கு அனுப்பி வைத்தாளே. செல்போனில் ஆர்த்தியுடன் பேசவிட்டு, நெம்பரைக் குறித்து வைத்து தன்னை அனுப்பியபின் பெண்ணுடன் பேச ஆசைப்பட்டிருக்கிறாள். குரலை மறைக்க பேசாது உம், உம், என்று சொல்லி அவள் பேசுவதைக் கேட்டு ரசித்திருக்கிறாள் என்று யூகித்துவிட்டாள்.

‘ஒன்றுமில்லை ஆர்த்தி, தூக்கக்கலக்கத்தில் உம், கொட்டி விட்டேன்’ என்றாள் சுபா.

‘இரவெல்லாம் தூக்கமில்லை என்றாய். இப்போது தூக்கக் கலக்கம் என்கிறாய். என்னைப் பிரிந்தாலே ஏதேனும் ஆகிவிடும் உனக்கு. இன்னும் நான் மேல் படிப்பெல்லாம் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நீ இதற்கே இப்படியிருக்கிறாய்’ என்று அவளை கேலி செய்தபடி ‘சரிசரி எனக்குத் தூக்கம் வருகிறது என்னை எழுப்பாதே’ என்று 5.30 மணிக்குமேல் தூங்கப்போனாள்.

அவள் அழகிய குழந்தைத்தனம் மாறாத முகம், இனிய பேச்சு, அன்பு, அவளிடம் காட்டும் உரிமையாவற்றையும் எண்ணி நெகிழ்ந்து போனாள் சுபா.

அடுத்த பகுதி கதவுப்பக்கம் சுமதி தயங்கிய வண்ணம் நின்றிருந்தாள். ஆர்த்தி உறங்கிவிட்டதை அறிந்து மெல்ல வெளியே வந்த சுபா, கதவருகில் சுமதி நிற்பதைப் பார்த்து விட்டு, ‘உள்ளே வா சுமதி! அவள் தூங்கிவிட்டாள். இரவு கண்விழித்த அசதி’ என்று கூறினாள்.

மிகுந்த கவனத்துடன் சிறிதும் சப்தமிடாது வந்த சுமதி, உறங்கும் மகளை எட்ட இருந்து பார்த்தாள். தன் மூச்சுக்காற்றுப் பட்டால் அவள் விழித்துக் கொள்வாளோ என்ற பயம்.

சுபாவிற்கு மிகவும் வேதனையாக இருந்தது. இருவரும் சற்று வெளியே வந்து பேசிக்கொண்டனர். ‘கவலைப்படாதே சுமதி. எல்லாம் நல்லதற்குத்தான். அவள் பள்ளித்தேர்வுகள் முடிந்து விடுமுறை விடட்டும். எங்கேனும் வெளியூர் அழைத்துக் கொண்டு போய் அவள் உன்னைப் புரிந்து கொள்ளும்படி ஏதேனும் செய்யமுடியுமா என்று பார்க்கிறேன்’ என்றாள் சுபா.

பாரதி வீட்டிலும், இங்குமாக இருவரும் அட்டவணை போட்டுப் படித்தனர். தேர்வும் வந்துவிட்டது. அவள் தேர்வு விபரங்களைக் கேட்டறிந்து சுமதி அந்த நாட்களில் வெளி வேலைகளை ரத்து செய்துவிட்டு ஆர்த்திக்காக கடவுளைப் பிரார்த்திப்பதில் தீவிரமாய் இருந்தாள். ஒவ்வொரு நாளும் ஆர்த்தி தேர்வுக்குப் புறப்படும்போது மறைந்திருந்து மனம் கனிந்து மானசீகமாய் வாழ்த்தியனுப்பினாள். சுபா வழக்கம் போல், அவள் தேவைகளைக் கவனித்து உரிய நேரத்தில் தானே தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்று அவள் தேர்வு நன்கு எழுதப் பிரார்த்தித்துக் காத்துக் கொண்டிருந்து முடிந்த- வுடன் அழைத்து வருவாள். அன்றன்றைய தேர்வு எப்படி இருந்தது என்று கேட்டு சந்தோஷப்படுவாள். ஒரே ஒரு தேர்வு வரலாறு பற்றியது, அதில் தனக்கு நல்ல மதிப்பெண் கிடைக்காது என்று ÷சார்ந்து போனாள் ஆர்த்தி. அதை ஈடு செய்யும் அளவிற்குக் கணிதம், அறிவியல், ஆங்கிலம் மூன்றிலும் மிகச்சிறந்த மதிப்பெண் எடுக்கப்போகிறாய் பார் என்று அவளைத் தேற்றிக் கொண்டிருந்தாள் சுபா. மகள் தேர்வு நன்றாகச் செய்திருக்கிறாளா என்று அறிய சுமதிக்கு மிகுந்த ஆவல். ஆனால் இந்த நாட்களில் சுபாவைத் தனியே சந்திக்க வாய்ப்பே இல்லாதிருந்தது.

தேர்வுகள் எல்லாம் முடிந்துவிட்டது என்பதால், அடுத்த பகுதியின் வாயிற்கதவில் நின்று ‘மெஷ்டோரை’ திறவாமல் ‘சுபா’ என்றழைத்தாள்.

‘என்ன சுமதி!’ என்று கதவின் பக்கம் வந்தாள் சுபா.

‘ஆர்த்திக்குத்தான் தேர்வெல்லாம் முடிந்து விட்டதே. நாமெல்லோரும் எங்கேனும் உல்லாசப் பயணம் போய் வருவோமா?’ என்றாள்.

சுபாவிற்குச் சங்கடமான நிலை உருவானது. ஆர்த்தியின் முகம் இறுக்கமாயிற்று. உடனே சுபா சமயோசிதமாய், ஆர்த்தி லீவில் ஏதேனும், ‘கோர்ஸ்’ போகப்போகிறாளா என்று கேட்டுத் தெரிந்து கொண்டு சொல்கிறேன் சுமதி என்றாள்.

அவள் முடிக்கு முன்னே ஆர்த்தி சற்றுக் கடுமையாக ‘பெரியம்மா! நான் யாரோடும், எங்கும் உல்லாசப் பயணம் செல்லப் பிரியப்படவில்லை என்று உங்கள் தங்கைக்குச் சொல்லிவிடுங்கள். இந்த லீவில் நான் யாரேனும் ஒரு மகானைத் தரிசிக்கப் போகிறேன். என்னுடன் யாரும் வரவேண்டாம்’ என்று கூறிவிட்டு திரும்பிக் கொண்டாள்.

சுமதிக்கு ஏன் கேட்டோம் என்றாயிற்று. ‘சுபா! நான் ஷýட்டிங் கிளம்புகிறேன். லீவிற்கு நீங்கள் எங்குச் சென்றாலும் எனக்குத் தடையில்லை’ என்று தான் விலகிக் கொண்டதைத் தெரிவித்துவிட்டு உள்ளே போய்விட்டாள்.

சுபா ஆர்த்தியின் அருகில் வந்து, ‘ஆர்த்தி! நீ எவ்வளவு நல்ல பெண். இந்தப் பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்று எனக்குத் தெரியாதா. ஏன் அப்படி அவசரமாய்ப் பேசினாய்?’ என்று நயமாய்க் கூறினாள்.

மன்னிப்பு வேண்டுவது போல் அவள் கையைப் பிடித்துக்கொண்டு அவளைப் பார்த்தாள். சுபா அன்புடன் அவளை அணைத்துக் கொண்டாள்.

ஆர்த்தி நன்றாக உறங்கிய பிறகு, மெதுவாக எழுந்துபோய் சுமதியைப் பார்த்தாள் சுபா.

‘என்ன சுபா? ஆர்த்திக்கு என்மீது கோபம் ஆறவில்லையா?’ என்று வருத்தத்துடன்.

‘சீச்சி. அவளுக்கு உன் மீது கோபம் இல்லை. சிறு பெண் என்ன வருத்தம் என்பதைச் சொல்லத் தெரியாமல் தவிக்கிறாள். புரிந்து கொள்ளும் பக்குவம் வந்தால் மாறிவிடுவாள். அது போகட்டும். நீ ஆர்த்தியைக் கருவுற்றபோது ஒரு பெண்ணின் பாதுகாப்பில் இருந்ததாய்ச் சொல்வாயே அவள் முகவரியைக் கொடு. நான் ஆர்த்தியுடன் சென்று சில நாட்கள் அங்கிருந்து விட்டு வருகிறேன். ஆர்த்திக்கு அவள் யார், நான் ஏன் அங்கு போகிறேன் என்பதெல்லாம் சொல்லப் போவதில்லை’ என்றாள்.

‘தஞ்சைக்குப் பக்கத்தில் பச்சிலைக்காடு என்று ஒரு சிற்றூர். அங்கு மேலத்தெருவில் அவள் இருப்பு. மேலத்தெரு என்பது ஒரு அடையாளம்தான். இருபது அல்லது இருபத்தைந்து வீடுகள் கொண்ட ஒரு பகுதி அவள் இருக்குமிடம். அந்தக் காலத்துப் புராணங்களில் வரும் முனிவர்கள் வாழும் காட்டுப் பகுதியில் உள்ள பர்ணகசாலை என்றுதான் சொல்ல வேண்டும். வீடு குடிசையாய் இராமல் நவீன வசதிகளுடன் இருக்கும். ஆனால் இந்தச் சென்னை மாநகர் போல ஒரே மின் விளக்கு- களால் நிறைந்த கட்டிடங்கள் ஏதும் அக்கம் பக்கம் இரா. எது வேண்டுமானாலும் தஞ்சைக்குத்தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டையும் சூழ்ந்து காம்பவுண்ட் சுவருக்குப் பதில் குரோட்டன்ஸ் வேலியமைத்தாற் போலிருக்கும். பகுதியின் நுழைவாயிலில் கம்பிகளால் வேலைப்பாடு செய்த இரும்புக் கதவிருக்கும். சுவரேயில்லாமல் இரும்புத் தூண்களை நட்டு அந்தக் கதவு இணைக்கப்பட்டிருக்கும். இந்தச் செடிகள் சுவர் தரும் பாதுகாப்பைத் தருமா? சுவரேயில்லாமல் கதவு மட்டும் எதற்கு என்று ஒருமுறை கேட்டேன். இது வழி என்பதற்கு அடையாளம் கதவு. இலட்சுமணன் கிழித்த கோட்டைவிட வலுவானது இந்தச் செடிகளால் அமைந்த வேலி. இவை யாவுமே அடையாளம்தான். மனிதனுக்கு நோக்கம் மறவாதிருக்கத்தான் இந்தச் சுவர், கதவு என்ற அடையாளங்கள்.

எல்லையைத் தாண்டக்கூடாது என்ற சுயக்கட்டுப்பாடு வரும் போது அடையாளங்கள் கூடத் தேவையில்லை என்பாள். அந்தக் காட்டுப் பகுதியில் ஆர்த்திக்கு இருப்புக் கொள்ளுமோ, என்னவோ?’ என்றாள் சுமதி.

‘இல்லை சுமதி. அவளை உன்னைவிட நான் நன்றாக அறிவேன். இந்த நகரத்தின் ஆடம்பரங்களையும், சந்தடிகளையும் அவள் விரும்புவதில்லை. அவள் அமைதியைத், தூய்மையை சுயக்கட்டுப்பாட்டைப் பெரிதும் விரும்புகின்றவள். இயற்கைச் சூழல் அவளுக்கு மிகவும் பிடிக்கும். அவர்களுக்குத் தெரிவித்து வரலாமா என்று கேட்டுச் சொல்’ என்றாள் சுபா.

‘ஆர்த்தியிடம் என்ன சொல்லி அழைத்துப் போவாய்?’ என்றாள் சுமதி.

‘என் சிநேகிதி ஒருத்தி மகான் நிலையில் இருப்பவள். அவளுடன் சில தினங்கள் இருந்து விட்டு வருவோம்’ என்று சொல்வேன் என்றாள்.

‘நல்லது, அப்படியே செய். காலையில் நான் வசந்தியிடம் தொடர்பு கொண்டு தெரிவித்து விடுகிறேன்’ என்றாள் சுமதி. ‘ஆர்த்தி! என் சிநேகிதி ஒருத்தி சிறுவயது முதல் உயர்வான உணர்வுகளோடு இலட்சியமாக வாழ்பவள் அவளைப் பார்த்து வருவோமா?’ என்று மெல்ல ஆர்த்தியின் உள்ள நிலையை அறியும்வண்ணம் பேச்சுக் கொடுத்தாள் சுபா.

‘சில நாட்கள் எங்காவது போக வேண்டும் என்றுதான் தோன்றுகிறது பெரியம்மா. நிச்சயம் உன் சிநேகிதியைப் பார்த்து வருவோம். அவர்களுக்கு என் வயதில் பிள்ளைகள் இருப்பார்- களா?’ என்றாள் ஆர்வத்துடன்.

‘அவள் திருமணமே செய்து கொள்ளவில்லை’ என்றாள் சுபா.

‘ஏன்? ஏதேனும் வாழ்க்கையில் விரக்தியடைந்தவரா’ என்றாள் ஆர்த்தி.

‘அதெல்லாம் ஒன்றுமில்லை, விரக்தி என்பதே தெரியாது அவளுக்கு. குறுகிய எல்லைகளைத் தகர்த்தெறிந்து, பெரியதொரு தெய்வீக சக்தியால் வாழ வேண்டும் என்பாள். எனக்கு அதெல்லாம் புரியாது. சாதாரணமானவர்களைப் போலில்லாமல் வித்தியாசமானவள் என்பதுதான் தெரியும்’ என்றாள் சுபா.

‘பெரியம்மா! நீ சொல்வதைக் கேட்டால் எனக்கு அவரை இப்போதேப் பார்க்க ஆவலாயிருக்கிறது. புறப்படு, போவோம்’ என்றாள் ஆர்த்தி.

‘போவோம், போவோம். புறப்படுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு நாளைப் புறப்படுவோம்’ என்றாள் சுபா.

ஆர்த்தி திடீரெனக் கலகலப்பானாள். ஊருக்குப் புறப்பட ஏற்பாடுகள் செய்தாள். புதியவர், பெரியம்மாவின் சிநேகிதி வித்தியாசமானவர் எப்படியிருப்பார் என்று ஓயாத கற்பனை. பெரியம்மா நடுத்தர வயதுடையவர். அவர் சிநேகிதியும் அப்படித்தானிருக்க வேண்டும். திருமணமே செய்து கொள்ளவில்லை. ஆனால் விரக்தி மனப்பான்மையுமில்லை, யாரவர்? எப்படியிருப்பார். போகும் போதும், வரும் போதும் பெரியம்மாவிடம் அவரைப்பற்றி ஏதேனும் கேட்ட வண்ண- மிருந்தாள்.

‘இளம் வயது சிநேகிதம். நீ பிறந்த பிறகு அவளைப்பற்றி நினைக்கவேயில்லை. எத்தனையோ ஆண்டுகளாகிவிட்டன. நேரில் போனால்தான் தெரியும். ஆனால் சராசரிப் பெண்கள் போன்று இருக்கமாட்டாள் என்பது மட்டும் தெரியும்’ என்று ஒருவாறு சமாளித்தாள்.

தொடரும். . .

********

ஜீவிய மணி
கற்றதை மறப்பது சாதனை. கல்லாததை மறப்பது
ஆன்மீக சாதனை.



book | by Dr. Radut