Skip to Content

02. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

கர்மயோகி

27. சப்த ஜீவன்

(Tamil Summary)

எழுவகை வாழ்வுக்கான விதிமுறைகளை நாம் ஆராய்ந்தோம். பண்டைய முனிவர்கள் எல்லா பிரபஞ்ச வாழ்வுக்கும் அடிப்படையாக வரையறுத்திருந்த எழு பெரும் வகைகளான வாழ்க்கையை கூர்ந்தாய்வு செய்தோம். அவற்றின் சிருஷ்டி மற்றும் பரிணாமத்திற்குரிய நிலைகளை நாம் இப்போது கண்டறிந்தோம். அதன் மூலம் எந்த ஞானத்தை அடைய நாம் இதுவரை தீவிர முயற்சி செய்தோமோ அந்த ஞானத்தின் அடிப்படையை அடைந்தோம். பிரபஞ்சத்தில் நாம் காணும் எல்லா உண்மைகளுக்குமான ஆரம்ப நிலை, வரம்பு, மற்றும் அதன் முதலும் முடிவுமான அனைத்து உண்மைகளும் மூவகைத் தத்துவமான சச்சிதானந்தம் என்று முடிவு செய்தோம். இத்தத்துவம் கடந்ததும் அனந்தமுமான ஜீவன், ஜீவியம் மற்றும் ஆனந்தம் ஆகும். இது தெய்வீக ஜீவனின் சுபாவம் ஆகும். ஜீவியத்திற்கு இரு நிலைகள் உண்டு. ஒன்று அறிவொளி- யூட்டும், தன்னையறியும் நிலையும் திறனும். அடுத்தது சுய சக்தி படைத்த நிலையும் திறனும் ஆகும். இவையிரண்டின் மூலம் ஜீவன் அசைவற்ற சமநிலையிலும் அல்லது இயக்க நிலையிலும் தன்னை தனக்கு உடைமையாக்கிக் கொள்கிறது. தன் படைக்கும் செயலில், சர்வ வல்லமை கொண்ட தன் ஜீவியத்தால் தன்னுள் அனைத்தையும் அறிகிறது. மற்றும் தன் எல்லாம் அறிந்த சுய வலிமையால் பிரபஞ்சத்தையும் அதன் ஆற்றலையும் உருவாக்கி, ஏற்று நடத்துகிறது. பரம்பொருளின் ஆக்கபூர்வமான இச்செயல்பாட்டின் கருவான இடம் சத்திய ஜீவியம் எனும் நான்காம் விதியில் உள்ளது. இந்த இடைப்பட்ட தத்துவம் முழு எண்ணம் என்று அழைக்கப்படும். அதில் தெய்வீக ஞானம் அதன் வாழ்வோடும், சுய உணர்வோடும் மற்றும் திடமான உறுதியோடும் இணைந்துள்ளது. இவ்வுறுதி அதன் ஞானத்துடன் பூரணமாக ஒன்றியுள்ளது. தெய்வீக ஞானம், பொருட்களின் சலனம், ரூபம் மற்றும் அதன் சட்டத்தை குறைவற வளர்க்கிறது. இந்த பொருட்களின் சட்டம் அவைகளின் சத்தியத்திற்குச் சரியாக ஏற்ற நிலையில் உள்ளது. அவைகள் அதன் வெளிப்பாட்டின் தனிச்சிறப்புடன் சுமுகமாக உள்ளன.

சிருஷ்டி ஒரு தத்துவத்தைச் சார்ந்து உள்ளது. இது ஒருங்கிணைந்த தத்துவமான ஒருமை மற்றும் பன்மைக்கிடையே இயங்குகிறது. அது எண்ணம், சக்தி, உருவம் சிறப்பான பலவகைகளாகப் பிரிந்ததாகும். இவை மூலமான ஒருமைப்பாட்டின் வெளிப்பாடாகும். சிருஷ்டி என்பது ஒரு சாசுவதமான ஐக்கியம். எண்ணிறந்த உலகங்களுக்கு இவ்வைக்கியம் அடிப்படை. அவைகளின் லீலையை அது சாத்தியமாக்குகிறது. சத்திய ஜீவியம் இரட்டைத் திறனுடன் தொடர்கிறது. இத்திறன் காலத்தைக் கடந்ததும் காலத்திற்குட்பட்டதுமான ஞானமாகும். அது அவசியமான ஒருமைப்பாட்டில் தொடங்கி அதிலிருந்து வேறுபாட்டிற்குச் செல்கிறது. அது தனக்குள் அனைத்தையும் தானாக - ஒன்றாக அறிகிறது. அது தனக்குள் அனைத்தையும், அதன் உறுதிக்கும் ஞானத்திற்குமுண்டான பொருட்களாகப் பிரித்தும் உணர்கிறது. அதன் ஆரம்ப, தன்னையறியும் நிலையில் யாவும் ஒன்றான ஜீவனாக உளது. அவை ஒரு ஜீவியம், ஒரு உறுதி மற்றும் ஒரு சுய ஆனந்தம். பொருட்களின் முழுச் சலனம் அந்த ஒன்றின் சலனம். சத்திய ஜீவியம் ஒருமையிலிருந்து பலவாக மாறும் செயலைத் தொடர்கிறது. பிறகு அது பன்மையிலிருந்து ஒருமைக்குச் செல்கிறது. இவ்விரு செயல்களுக்கிடையே அது ஒரு சீரான தொடர்பை ஏற்படுத்துகிறது. இச்செயல் இவைகளுக்கிடையே பிரிவினைக்கான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அது உண்மையில் பிரிவினை இல்லை. அது சூட்சுமமான, விலகாத பிரிவினை. அது பிரிக்க முடியாத ஒன்றதனுள் உண்டான வரையறையும் தீர்மானமும் ஆகும். சத்திய ஜீவியம் என்பது தெய்வீக மறையியல் ஞானமாகும். அது உலகைச் சிருஷ்டிக்கிறது, ஆள்கிறது மற்றும் ஆதரவளிக்கிறது. இது ஒரு மறைபொருளான பேரறிவாகும். இந்த ஞானம் நம் அறிவுக்கும் அறியாமைக்கும் ஆதாரமாக உள்ளது.

மனம், வாழ்வு, ஜடம் என்பவை இவ்வுயர்ந்த தத்துவங்களின் மூன்று அம்சங்கள். பிரபஞ்சத்தைப் பொறுத்தவரையில் இவை அறியாமை எனும் விதிக்குட்பட்டு செயல்படுகின்றன. மேலும் இவை தம் மேலோட்டமான நிலையிலும், வெளித்தோற்றத்திலும், பிரிவினை மற்றும் பன்மை எனும் லீலையை மேற்கொள்ளும் ஏகனை மறந்த நிலையில் உள்ளன. மனம், வாழ்வு மற்றும் ஜடம் தன்னை மறந்த இந்நிலைக்கு உட்பட்டுள்ளன. உண்மையில் இம்மூன்றும், நான்கு பகுதிகள் கொண்ட தெய்வீக சக்திக்குக் கீழ்ப்பணியும் சக்திகளாகும். மனம், பிரிவினையை முடிவு செய்யும் சத்திய ஜீவியத்தின் தாழ்ந்த சக்தியாகும். அது பிரிவினைக்கான இடத்தில் நிலைத்துள்ளது. அது பின்னுள்ள ஒற்றுமையை மறந்துள்ளது. அது சத்திய ஜீவியத்திலிருந்து இழந்த ஒளிவிளக்கத்தை மீண்டும் பெற்றால் ஒற்றுமைக்குத் திரும்ப முடியும். வாழ்வு என்பது சச்சிதானந்தத்தின் ஆற்றலுக்கு அடிபணியும் சக்தியாகும். அது தோற்றத்தை உருவாக்கும் சக்தியாகும். அது தன்னையுணர்ந்த சக்தியின் லீலையை செயல்படுத்துகிறது. அது மனத்தின் பிரிவினைக்குண்டான இடத்திலிருந்து அதைச் செய்கிறது. ஜடம் என்பது ஜீவனின் - சச்சிதானந்தத்தின் - பொருளின் ரூபம். தன்னை தன் ஜீவியம் மற்றும் சக்தியின் செயலுக்கு உட்படுத்தும்பொழுது, சச்சிதானந்தம் இந்த ரூபத்தைப் பெறுகிறது.

மேலும், நான்காம் விதி ஒன்றுளது. அது மனம், வாழ்வு, உடலின் சிக்கலான இடத்தில் வெளிப்படுகிறது. அச்சிக்கலான முடிச்சை நாம் ஆத்மா என்கிறோம். ஆனால் அது இரட்டைத் தோற்றத்தைக் கொண்டது. மேலேயிருப்பது அகந்தை. அது பொருட்களின் உடைமை மற்றும் ஆனந்தத்திற்காகப் போராடுகிறது. அதன் பின் ஒளிந்திருப்பது உண்மையான சைத்தியத்திற்குரிய ஜீவன். ஆன்மீக அனுபவங்களுக்கு இதுவே உண்மையான உறைவிடம். இது மனிதனுக்குரிய நான்காம் தத்துவத்திற்கான வெளிப்பாடு. இது அனந்தமான ஆனந்தத்திற்கான திட்டம் மற்றும் செயல் ஆகும். ஆனால் இச்செயல் நம் ஜீவியத்தை அடிப்படையாகக் கொண்டது. இது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டுள்ளது. அவை உலகில் ஆத்மாவின் பரிணாமம் ஏற்படுத்தும் நிபந்தனைகள் ஆகும். இறைவன் இயற்கையாகவே அனந்தமான ஜீவியத்தைக் கொண்டவன். அந்த ஜீவியத்தின் சுய சக்தியால் அதன் வாழ்வு உள்ளது. அந்த அனந்த ஜீவியத்தின் தன்மை தூய்மையானது மற்றும் அனந்தமான பேரின்பமானது. தன்னைத்தானே பெற்றதும், அறிந்ததுமான அதன் நிலை சுய ஆனந்தத்தின் சாரமாகும். பிரபஞ்சமும் அந்த சுய ஆனந்தத்தின் லீலையாகும். அந்த லீலையின் ஆனந்தத்தை அகிலம் முழுவதுமாகப் பெற்றுள்ளது. ஆனால் ஜீவாத்மாவில் அது மறைந்துள்ளது. அறியாமை, பிரிவினை என்ற செயல்பாடுகளினால் அது மறைந்துள்ளது. ஆனந்தம், அடி மனக் குகையிலும், மேலுள்ள பரமாத்மாவிலும் மறைக்கப்பட்டுள்ளது. அது மேல்மனத்தில் இல்லை. அதற்கு நாம் விழைய வேண்டியுள்ளது மற்றும் அதைக் கண்டுபிடித்து அடைய வேண்டியுள்ளது. அதை நம் தனிப்பட்ட ஜீவியத்தை உயர்த்துவதன் மூலம் அடையலாம். இவ்வளர்ச்சி பிரபஞ்சம், கடந்தது இவைகளை அடைவதற்கான பாதை ஆகும்.

நாம் ஏழு தத்துவங்களை எட்டாக பாவிக்கலாம். தெய்வீக வாழ்வின் வக்கரிப்பான நிலை மனித வாழ்வு என்று பார்த்தோம். சிருஷ்டி, பரிணாமம் இவைகளின் தலைகீழான நிலையே இவ்வக்கரிப்பு.

சத் — ஜடம்
சித் — வாழ்வு
ஆனந்தம் — சைத்தியம்
சத்திய ஜீவியம் — மனம்

சத் தன் நிலையிலிருந்து சித் மற்றும் ஆனந்தம் எனும் லீலை வழியாக கீழிறங்குகிறது. ஆக்கபூர்வமான இடைப்பொருளான சத்திய ஜீவியம் வழி பிரபஞ்ச ஜீவனுக்குள் அது இறங்குகிறது. நாம் ஜடத்திலிருந்து வளர்ச்சி பெறும் வாழ்வு, ஆத்மா, மனம் மற்றும் ஒளி பொருந்திய இடைப்பொருளான சத்திய ஜீவியம் வழி சத்தை நோக்கி உயருகிறோம். இரண்டு அரைக்கோளங்களும் ஓர் முடிச்சில் சந்திக்கின்றன. இதுவே மனமும் சத்திய ஜீவியமும் சேரும் இடம். இவைகளுக்கிடையே ஒரு திரை உள்ளது. உலகில் தெய்வீக வாழ்வை மேற்கொள்ள அத்திரை கிழிய வேண்டியது அவசியம். அத்திரை கிழிவதால் மேலுள்ள உயர்ந்த ஒளி கீழிறங்குவது நடைபெறுகிறது. அது மேலிருந்து தாழ்ந்த ஜீவனின் சுபாவத்திற்குள் இறங்குகிறது. தாழ்ந்த ஜீவன் வலிமையுடன் உயர்ந்து, உயர்நிலை ஜீவனின் தன்மையைப் பெறுகிறது. இதன் வழியாக மனம் தன் தெய்வீக ஒளியை காலத்தைக் கடந்த சத்திய ஜீவியத்தில் திரும்பப் பெற முடியும். ஆத்மா, அனைத்தும் பேரின்பமான ஆனந்தத்தில் தன்னை பிரம்மமாக அறிய முடியும். வாழ்வு தன் தெய்வத் திறனைத் திரும்பப் பெற முடியும். இத்திறன் சர்வ வல்லமையுள்ள சித் சக்தியின் லீலையுள் உள்ளது. சத்தின் ரூபமான ஜடம் அதன் உரிமையான தெய்வத்துவத்தை அடைய முடியும். மனிதன் தற்போது பரிணாமத்தின் கிரீடமாகவும் அதன் தலைவனாகவும் உள்ளான். பரிணாமத்தின் இலட்சியம் ஒரு இலக்கில்லாத சுழல் அல்ல. அது சுழலிலிருந்து தனித்த ஜீவாத்மா விடுதலை பெறுவதல்ல. இப்படைப்பு ஒரு அனந்தமான ஆற்றலைக் கொண்டது. ஆன்மாவிற்கும் ஜடத்திற்குமிடையே இங்கு அவன் மட்டுமே நிற்கிறான். அவற்றிற்கிடையே மத்தியஸ்தம் செய்ய அவனுக்கு மட்டுமே திறனுண்டு. அது வாழ்வின் மயக்கத்திலிருந்து பெறும் முடிவான விழிப்பல்ல. பிரபஞ்ச முயற்சியால் எழும் வெறுப்பு மற்றும் ஏமாற்றத்திலிருந்து விடுபடும் விழிப்பல்ல. அது வாழ்வை விலக்குவதல்ல. அவனுடைய வாழ்வு அர்த்தமுடையது. அதன் அர்த்தம் ஒளி பொருந்தியதும் சக்தி வாய்ந்ததுமான உருமாற்றமாகும். அது படைப்பிலிருந்து இறைவன் வெளிவருவதாகும். இது ஒரு உன்னதமான உயர்த்தப்பட்ட குறிக்கோளாக இருக்க வேண்டும். இதுவே அந்த ஒப்புயர்வற்றதன் தனிச்சிறப்பு ஆகும்.

உருமாற்றம் அவசியமாக நிகழக்கூடிய வாய்ப்பாக உள்ள நிலையிலிருந்து சக்தி வாய்ந்த உள்ளாற்றலாக மாற்றப்பட வேண்டும். அம்மாற்றத்திற்கான மனோதத்துவ மற்றும் நடைமுறை வரையறைகள் அதற்கு உண்டு. முதலில் நாம் சச்சிதானந்தத்தின் இறங்குதலுக்கான அத்தியாவசியமான தத்துவங்களைக் கருத வேண்டும். பிரபஞ்ச வாழ்வில் அதன் இறங்குதலை ஏற்கனவே பார்த்தோம். இப்போது நாம் இங்கு அதன் ஒழுங்குமுறைக்கான பெரிய நிலையைக் கருத வேண்டும். சித் சக்திக்கான திறன் மற்றும் செயலின் தன்மையை நாம் கருத வேண்டும். இந்த சக்தி நாம் இப்போது உள்ள சூழ்நிலையை ஆட்சி செய்கிறது. நாம் ஏற்கனவே ஆய்வு செய்த ஏழு அல்லது எட்டு தத்துவங்கள் எல்லா பிரபஞ்ச படைப்பிற்கும் அத்தியாவசியமாகிறது. அவைகள் நம்முள் வெளிப்பட்டும், இன்னும் வெளிப்படாமலும் உள்ளன. நாம் இன்னும் பரிணாமத்திற்கான வயது வந்தவர்களாக மாறவே இல்லை. ஒரு வயதுக் குழந்தையாகவே உள்ளோம். உயர்ந்த திரித்துவம் எல்லா வாழ்வுக்கும் ஆதாரமாகவும், அடிப்படையாகவும் உள்ளது. வாழ்வின் லீலைக்கு அது அடிப்படையாக உள்ளது. எல்லா பிரபஞ்சமும் அதன் சத்தியத்தின் வெளிப்பாடு மற்றும் செயலாகும். எந்த பிரபஞ்சமும் ஒரு ஜீவனின் வெளித் தோற்றமாக மட்டும் இருக்க முடியாது. வெறுமையான சூன்யத்திலிருந்து அது திடீரென்று தோன்றியிருக்க முடியாது. உயிரற்ற ஒரு வெறுமைக்கு எதிராக அது நின்றுகொண்டிருக்க முடியாது. அது எல்லா தோற்றத்திற்கும் பின்னால் உள்ள அனந்தமான வாழ்வுக்குள் வதியும் ஜீவனின் உருவமாக இருக்க வேண்டும். அல்லது அதுவே பரம்பொருளாக இருக்க வேண்டும். அப்போது நாம் அது ஒரே சமயத்தில் இரண்டுமாகவும் உள்ள உண்மையைப் பார்க்கலாம். பிரபஞ்ச ஜீவனோடு நாம் நம்மை ஒருங்கிணைத்துக் கொண்டால் நம்மால் அதைக் காண முடியும். அது பரம்பொருள் தன்னைத் தோற்றமாக வெளிப்படுத்துவது ஆகும். அது தன்னை எல்லையற்ற தொடரின் லயமாக, தோற்றமாக வெளிப்படுத்துகிறது. அது தன் கருத்தால் தன்னை விரிவுபடுத்துவதன் மூலம் அதைச் செய்கிறது. இந்த விரிவு காலமும் இடமுமாகிறது. பிரபஞ்சத்தின் எந்தச் செயலும் சத் சக்தியின் லீலையின்றி செயல்பட முடியாது. அது இத்தோற்றங்களையும் சலனங்களையும் உருவாக்கி ஒழுங்குபடுத்துகிறது. அச்சக்தி அனந்த ஜீவியத்தின் செயல் ஆகும். ஏனெனில் அது இயற்கையில் பிரபஞ்சத்தின் உறுதியாகும். அது எல்லா தொடர்புகளையும் நிர்ணயிக்கிறது. அது தனக்கேயுரிய விழிப்புணர்வுக்கான முறையில் அவைகளைக் கைப்பற்றுகிறது. அதன் பின்னால் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு ஜீவியம் இல்லாமல் அது செயல்பட முடியாது. இந்த ஜீவியம் பிரபஞ்ச விழிப்புணர்வுக்கான முறையின் பின் உள்ளது. ஜீவனின் தொடர்புகளை அது எழுப்புகிறது, நிலைக்க வைக்கிறது, பொருத்துகிறது. ஜீவனின் தொடர்புகள் உருவாக்கம் வளர்வதாகும். அல்லது அவை தானே அவ்வடிவங்களாக உருவெடுப்பது ஆகும். அதை நாம் பிரபஞ்சம் என்கிறோம்.

ஜீவியம் என்பது எல்லாம் அறிந்ததும் மற்றும் எல்லா வலிமையும் உள்ளதும் ஆகும். அது முழுவதுமாக ஒளி பொருந்திய நிலையில் தன்னைத்தான் பெற்றுள்ளது. இப்படிப் பெற்றுள்ள நிலை பேரின்பத்தை அதன் இயல்பான தன்மையாகக் கொண்டுள்ளது. அது வேறெதாகவும் இருக்க முடியாது. ஒரு பரந்த அகிலத்தின் சுய ஆனந்தம் பிரபஞ்ச வாழ்வுக்குக் காரணமாக இருக்க வேண்டும். இவ்வானந்தம் பிரபஞ்ச வாழ்வின் சாரமும், பொருளும் ஆகும். பண்டைய முனிவர்கள் அனைத்தையும் சூழ்ந்துள்ள இப்பேரின்பத்தைப் பற்றி கூறியுள்ளனர். அதை நம் தூய வான் வெளியாக அறிவித்தனர். அது இல்லையென்றால், யாராலும் சுவாசிக்க முடியாது, யாராலும் வாழ முடியாது. இந்த சுய ஆனந்தம் ஆழ்மனமாகலாம். அது வெளிப்பார்வைக்கு மேல்மனத்தில் மறைந்துள்ளதாகத் தெரியலாம். நம் அடித்தளத்தில் அவை இருக்க வேண்டும். அனைத்து வாழ்வும் அந்தத் தேடுதலை நாடுவதாகவும் அதை அடைவதாகவும் இருக்க வேண்டும். பிரபஞ்சத்தில் படைக்கப்பட்டவை பல வழிகளில் தன்னைத் தேடிக் கண்டறியலாம். உறுதியிலும், திறனிலும் அல்லது ஒளியிலும், ஞானத்திலும் தன்னைக் கண்டறியலாம். அவன் ஜீவனிலும், பரந்த நிலையிலும் அல்லது அன்பிலும் சந்தோஷத்திலும் இருக்கலாம். அவன் தன்னை எப்படிக் கண்டுகொண்டாலும், அந்நிலையில் அவன் விழிப்புணர வேண்டும். மறைபொருளாக உள்ள பரவசத்தின் ஏதோ ஒன்றை அவன் விழிப்பால் அறிகிறான். ஜீவனின் சந்தோஷம் மற்றும் ஞானத்தின் ஆனந்த உணர்வை விழிப்பால் அறியலாம். அல்லது உறுதியும் திறனும் அவனை அடைதலால் எழும் பேருவகையை அறியும் விழிப்புணர்வு பெறலாம். அல்லது அன்பாலும், சந்தோஷத்தாலும் ஐக்கியமாகும் பரவச நிலையை அவன் விழிப்பால் அறியலாம். இவை பரந்து விரியும் வாழ்வின் உயர்ந்த நிலைகளாகும். அவை அதன் மறைந்துள்ள அடிப்படையின் சாரமாகும். இந்த பரந்து விரியும் வாழ்வு இன்னும் நாமறியாத பல உயர்வுகளைக் கொண்டது. எங்கெல்லாம் பிரபஞ்ச வாழ்வு வெளிப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த மூன்றும் அதன் பின் இருக்க வேண்டும். அவை அதனுள் உள்ளன.

சச்சிதானந்தத்திற்கு தான் ஜீவனாக பார்வைக்கு வெளிப்படும் அவசியம் இல்லை. அல்லது, அப்படி வெளிப்பட்டால், அது பிரபஞ்ச ஜீவனாகாது. சாதாரணமான வெறும் ஒரு எண்ணிக்கைகளின் அனந்தமாகும். அவை ஒரு நிலையான ஒழுங்கையோ தொடர்பையோ பெறாது. ஒழுங்கும் தொடர்பும் நான்காம் நிலையான சத்திய ஜீவியம் அவைகளுக்கு உள்ளிருந்து வளர்ச்சியுற்று வெளி வருவதால் ஏற்படும். சத்திய ஜீவியம் ஒரு தெய்வீக மறையியல் ஞானமாகும். ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் ஞானம், உறுதிக்கான திறன் இருக்க வேண்டும். இத்திறன் தன் அனந்தமான ஆற்றல் வளத்தின் மூலம் தொடர்புகளின் நிர்ணயத்தை முடிவு செய்கிறது. அது விதையிலிருந்து அதன் வளர்ச்சிக்கான பரிணாமத்தை உருவாக்குகிறது. வலிமைமிக்க சீரான பிரபஞ்ச சட்டத்தை அமல் செய்கிறது. உலகங்களை மரணமிலா நிலை எய்திய ஞானி போலவும், அதை ஆளும் அரசன் போலவும் அது பார்வையிடுகிறது மற்றும் ஆள்கிறது. இத்திறன் சச்சிதானந்தம் தானே செயல்படுவதன்றி வேறில்லை. படைப்பில் உள்ளவை அனைத்தும் அதன் சுய இருப்பிலிருந்து எழுந்தவையே. அதனுள் இல்லாதது எதுவும் இங்கில்லை. எல்லா பிரபஞ்ச சட்டமும் வெளியிலிருந்து சிருஷ்டிக்குள் திணிக்கப்பட்டவை அல்ல. உள்ளிருந்து எழுந்தவையே. எல்லா வளர்ச்சியும் அதன் சுய வளர்ச்சியே. எல்லா விதையும் அதன் முடிவும் சத்தியத்தின் கருவே ஆகும். அனைத்தும் அக்கருவின் பரிணாமமே ஆகும். அப்பரிணாமம் அதன் உள்ளாற்றலால் நிர்ணயிக்கப்படுகிறது. அந்தக் காரணத்தால், எந்தச் சட்டமும் முழுமையானதல்ல. பரம்பொருள் மட்டுமே முழுமையானது. அனைத்தும் தனக்குள்ளே முடிவிலா உள்ளாற்றலைக் கொண்டுள்ளன. அவை நிர்ணயிக்கப்பட்ட உருவம் மற்றும் வழியைக் கடந்த நிலையிலுள்ளன. சுய கட்டுப்பாட்டுக்கான எண்ணத்தால் அவை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவ்வெண்ணம் அதற்குள்ளே உள்ள அனந்தமான சுதந்திரத்திலிருந்து வெளிப்படுகிறது. வரம்பில்லாத பரம்பொருள் சுய கட்டுப்பாட்டிற்கான திறனை தனக்குள் இயல்பாகவே பெற்றுள்ளது. அனந்தம் பலவான அணுவாகத் தன்னைக் கருத முடியும். இல்லையென்றால் அது அனந்தமாக இருக்க முடியாது. பரம்பொருள் தன் சுய நிர்ணயத்தை மேற்கொள்ளும் வரம்பில்லாத ஆற்றல் கொண்டது. அது ஞானம், திறன், உறுதி மற்றும் வெளிப்பாட்டில் உள்ளது. இல்லையென்றால் அது முழுமையான பரம்பொருளாக இருக்க முடியாது. இந்த சத்திய ஜீவியம், சத்தியம் அல்லது முழு எண்ணம் எனப்படும். அது எல்லா பிரபஞ்ச சக்தியிலும், வாழ்விலும் இயல்பாக உள்ளது. தொடர்பையும், ஒழுங்குமுறையையும் நிர்ணயம் செய்வதும் அவற்றைத் தாங்கிப் பிடிப்பதும் அவசியமாகிறது. அதன் வெளிப்பாட்டிற்கான சிறந்த முறையை நிலைநிறுத்துகிறது. வேத ரிஷிகள் தங்கள் மொழியில் சச்சிதானந்தத்தை விவரித்தார்கள். ஜீவன், ஜீவியம், ஆனந்தம் என்ற மூன்று உயர்ந்த, பெயரற்றதன் மறைபெயர்கள் அவை. அது போல், சத்திய ஜீவியம் என்பது நான்காவது பெயர். அது தன் இறங்கும் நிலையில் நான்காவதாக உள்ளது. நம் உயரும் நிலையில் அது நான்காவதாக உள்ளது.

மனம், வாழ்வு, ஜடம் என்பவை தாழ்நிலையிலுள்ள முக்கூறுகளாகும். எல்லா பிரபஞ்ச ஜீவனுக்கும் அவைகள் இன்றியமையாதவையாகும். இவை புவியில் நமக்குத் தெரிந்த ரூபங்களாக அல்லது நிலைகளாக இருக்க வேண்டும் எனும் அவசியமில்லை. ஆனால் எவ்வளவு ஒளி பொருந்திய, அல்லது சக்தி வாய்ந்த அல்லது சூட்சுமமானதாக இருந்தாலும், அவைகளின் ஏதோ ஒருவிதமான செயல்பாட்டிற்கு இவை இன்றியமையாதவையாகும். மனம் அளவிடுவதும், வரையறை செய்வதுமான திறனுடைய சத்திய ஜீவியத்தின் ஒரு கருவியாகும். அது குறிப்பிட்ட ஒரு மையத்தை ஏற்படுத்தி அதன் வழியாகப் பார்க்கிறது. பிரபஞ்சத்தின் சலனத்தையும், மற்றதுடன் அதன் செயல்பாட்டையும் பார்வையிடுகிறது. ஒரு குறிப்பிட்ட உலகத்தில் அல்லது நிலையில் மனம் வரையறைக்குட்பட அவசியமில்லை. மனம் ஒரு கீழ்நிலையிலான திறன். ஆனால், அதை உபயோகப்படுத்துபவர் மற்ற காட்சிக்கோணங்களிலிருந்து விஷயங்களைப் பார்க்க முடியும். அல்லது எல்லாவற்றுக்குமான உண்மையான மையத்திலிருந்து அவரால் பார்க்க முடியும். பரந்த பிரபஞ்சத்தில் தான் முழுவதுமாக வியாபித்த நிலையிலிருந்து பார்க்க முடியும். ஆனாலும் அவர் தன்னை தன் சொந்த இயல்பான காட்சிக்கோணத்தில் நிலைநிறுத்த வேண்டும். இது தெய்வீக நிலைக்குரிய செயல்பாட்டின் சில குறிக்கோள்களுக்கு அவசியம். ஒருவேளை பிரபஞ்சத்தில் மட்டும் சுயமாக பரவி வியாபித்திருக்கும் நிலையானால், அல்லது செயல் வரையறை இல்லாத அனந்தமான மையங்கள் மட்டும் ஏற்பட்டிருந்தால், அப்போது பிரபஞ்சம் என்ற ஒன்றிருக்காது. அது ஜீவன் அனந்த நிலைகளில் தனக்குள்ளே ஆழ்ந்து ஈடுபட்டிருப்பதாகும். ஒரு சிருஷ்டிகர்த்தா அல்லது கவிஞன் சுதந்திரமாக தன் உள்ளார்ந்த சிந்தனையில் ஈடுபடுவதுபோன்ற நிலை அது. படைப்பை செயலாக்கும்முன் அது தனக்குள் ஆழ்ந்த சிந்தனையில் லயிக்கலாம். இந்த நிலை அனந்தமான சிருஷ்டியில் எங்காவது இருக்கலாம். ஆனால் நாம் பிரபஞ்சம் என்று அறிவது அது இல்லை. முறை என்று ஒன்று இருந்தால் அது வரையறையற்ற, கட்டுப்படுத்தாத ஒழுங்கு முறையாக இருக்க வேண்டும். அம்முறை சத்திய ஜீவியத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். சத்திய ஜீவியம் நிலையான வளர்ச்சியைச் செயல்படுத்தும் கடமையைக் கொண்டது. அதைத் தொடர்ந்து, அளவீடு செய்வதும், மற்றவைகளுடன் தொடர்புக்கான செயலிலும் அது ஈடுபடுகிறது. அளவிடும் செயலுக்கு மனம் அவசியமாகிறது. மனம் சத்திய ஜீவியத்தின் கீழ் நிலை செயல்-ப õட்டிற்குரியதாகும். சத்திய ஜீவியத்தின் கீழ் செயலாற்றும் அளவிற்கு மனம் தன்னையறிந்தால் போதும். அது அகந்தையின் அடிப்படையில் தொடர்புகளை ஏற்படுத்தும் அவசியமில்லை. இது புவியுலகத்தின் இயற்கை சக்தியில் அதிகமாக செயல்படுவதைக் காணலாம்.

மனம் என்று ஒன்று இருந்தால், வாழ்வும் தோற்றமும் அதைத் தொடர்ந்து வரும். சக்தி மற்றும் செயலை நிர்ணயம் செய்வது வாழ்வாகும். அது தொடர்புகளை நிர்ணயிப்பதும், சக்திப் பரிமாற்றமும் ஆகும். செயல் பரிமாற்றம் ஜீவியத்தின் பல நிலையான மையங்களிலிருந்து எழுகிறது. அவை காலம் மற்றும் இடத்தில் நிலைப்படும் அவசியமில்லை. அவை ஜீவன்களின் உறுதியான உடனிருத்தல் அல்லது பிரம்மத்தின் ஆத்ம ரூபங்களில் நிலைப்பட்டுள்ளன. அவை பிரபஞ்ச ஒற்றுமைக்கு ஆதரவு தருகின்றன. அவ்வாழ்வு நாமறிந்த வாழ்விலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கலாம். அடிப்படையில் அதே தத்துவம் செயல்படுவதாகும். நாம் இங்கு பார்க்கும் அத்தத்துவம் உயிரின் வீரியமாக கருதப்படுகிறது. பண்டைய இந்தியச் சிந்தனையாளர்கள் அதை வாயு அல்லது பிராணன் என்றழைத்தனர். அது வாழ்விற்கான மூலப்பொருள், பிரபஞ்சத்தில் உறையும் திடமான உறுதி மற்றும் சக்தி ஆகும். அது நிர்ணயம் செய்யப்பட்ட தோற்றமாக உருவாகிறது. அது செயலாக மற்றும் ஜீவனின் தன்னை- யுணர்ந்த உள்ளுறைத் திறனாக உருவாகிறது. பொருள் என்பதும் நாம் உணரும் ஜட உடலைவிட வேறுபட்டிருக்கலாம். அது அதிகமான சூட்சுமம் வாய்ந்ததும், குறைந்த இறுக்கமான கட்டுப்படுத்துதலும் உடையது. அதன் சுய பிரிவினைக்கான சட்டம் மற்றும் தாங்கும் ஆற்றல் குறைந்த கட்டுப்படுத்துதலை உடையது. உடல் அல்லது உருவம் ஒரு கருவியாக இருக்க வேண்டும். அது ஒரு சிறையல்ல. இருந்தாலும் சில நிர்ணயம், ரூபம் மற்றும் பொருள் அவசியம். இது பிரபஞ்ச செயல் பரிமாற்றத்திற்கு அவசியம். அது மனதிற்கான ஒரு உடலாக இருக்கலாம். அல்லது அதிகமாக ஒளிமயமானதும் சூட்சுமமானதுமாக இருக்கலாம். அதிக வலிமை பொருந்திய, மனதைவிட சுதந்திரமாக செயல்படக் கூடியதாக இருக்கலாம்.

பிரபஞ்சம் என்றொன்றிருந்தால் அதில் ஒரு தத்துவம் மட்டுமே வெளிப்படையாகத் தெரியும். அது பொருட்களின் தனித்த ஒரு தத்துவமாகத் தெரியும். மற்றவை அதன் தோற்றமாகவும் முடிவாகவும் காணப்படும். பிரபஞ்ச வாழ்விற்கு அவை இன்றியமையாதவையாக இல்லாதது போல் தோன்றலாம். ஜீவனின் அப்படிப்பட்ட தோற்றம் ஒரு மாயையான முகமூடி. அதன் உண்மை தோற்றத்தின் பின் உள்ளது. எங்கு பிரபஞ்சத்தில் ஒரு தத்துவம் வெளிப்படுகிறதோ, அங்கு மற்றவையும் இருக்க வேண்டும். அவை அங்கு உயிர்ப்பற்று சாட்சியாக மட்டும் இல்லை. அது மறைமுகமான வேலையில் ஈடுபட்டுள்ளது. உலகம் என்று ஒன்று இருந்தால் அது ஏழு தத்துவங்களையும் உட்கொண்டிருக்கும். அது உயர்ந்த அல்லது தாழ்ந்த நிலைக்கான செயல்பாடாக இருக்கலாம். மற்ற உலகத்தில் அவை ஒரே தத்துவத்தில் புதைந்து இருக்கலாம். அது அவ்வுலகத்தின் முதலான அல்லது அடிப்படையான பரிணாமத்திற்குரிய தத்துவமாகிறது. ஆனால், உள்ளே புதைந்திருப்பது பரிணாமத்தால் வெளிப்பட்டாக வேண்டும். ஒரு சக்திக்குள் அனைத்தும் புதைந்து அதனின்று ஒரு உலகம் வெளி வரலாம். ஜீவனின் எழு மடங்கு சக்தி பரிணாமத்தால் வெளி வருவது எந்த உலகிற்கும் முடிவாக இருக்க வேண்டும். அதன் முடிவு அந்த எழுமடங்கு சக்திக்கான மந்திரத்தை அறிவதாகும். ஆகவே பிரபஞ்ச உடல் பரிணாமத்தால், மறைந்துள்ள வாழ்வை வெளிப்படுத்த வேண்டும். மறைந்துள்ள மனத்தை பரிணாமத்தால் வெளிக்கொணர வேண்டும். மறைந்துள்ள சத்திய ஜீவியத்தை பரிணாமத்தால் அது வெளிப்படுத்த வேண்டும். சிறப்பான, மூவகைத் தத்துவங்கள் ஒருங்கிணைந்த சச்சிதானந்தத்தை, ஒளிந்துள்ள ஆத்மாவிலிருந்து வெளிப்படச் செய்ய வேண்டும். இவ்வெளிப்பாடு நாம் வாழும் இவ்வுலகில் நடக்குமா என்பது கேள்வி. மனிதப் படைப்பில் இது நடக்குமா? இது இந்த ஜட உலகில் அல்லது வேறெங்காவது சாத்தியமா? தற்போதைய பரிணாமச் சக்கரத்தில் இது நடைபெறுமா? வேறு எந்த பெரிய காலச் சக்கரத்தின் சுழலிலாவது இது ஏற்படுமா? காலம் ஆன்மா வெளிப்படும் கருவியாகும். பண்டைய முனிவர்கள் மனிதவர்க்கத்தின் இந்த சாத்தியக்கூற்றை நம்பினர். அதை அவர்கள் மனிதனுக்கு இறைவனால் அளிக்கப்பட்ட முடிவாகக் கருதினர். நவீன அறிஞர்கள் இதை ஒரு எண்ணமாகக்கூட அறியவில்லை. அப்படியே அறிந்தாலும், அதை மறுத்தனர், சந்தேகித்தனர். சத்திய ஜீவனை அவர்கள் திருஷ்டியாகக் காணலாம். ஆனால், அது மனதுக்கோ அல்லது பிராணனுக்கோ உரிய ஓர் வடிவமாக இருக்கும். அதைத் தாண்டிய நிலையில் எந்த வெளிப்பாட்டையும் அவர்களால் ஏற்க முடியாது. அதைக் கடந்த எந்த தத்துவத்தையும் அவர்களால் எண்ண முடியாது. இதுவரை இவையே நம் எல்லையாகவும், பரிணாமத்திற்கான சுழற்சி- யாகவும் இருந்தன. படிப்படியாக வளர்ச்சி பெறும் இவ்வுலகில், இந்த மனித ஜீவனுக்குள் தெய்வக்கனலின் பொறி உண்டு. உண்மையான ஞானத்தைப் பெறுவது அவனுடைய உயர்ந்த ஆர்வமாக இருக்கலாம். ஞானம் ஆர்வத்தை மறுப்பதல்ல. அது ஆர்வம் தன்னை வரையிட்டுக் கொள்வதும் அல்ல. அது ஆர்வம் தன்னை கட்டுப்படுத்துவதும் அல்ல. இவைகள் சாத்தியமானதைக் குறுக்குவதாகும். இவை நம் பயிற்சிக்காக இடையில் ஏற்பட்டவையாகும். ஆன்மீக விஷயங்களுக்கான ஒரு ஒழுங்கு முறை உள்ளது. அதில், எவ்வளவு உயர்வாக நாம் நம் எண்ணத்தை செலுத்துகிறோமோ அவ்வளவு உயர்வான சத்தியம் புலப்படும். அந்த சத்தியம் நம்முள் இறங்க விழைகிறது. அது ஏற்கனவே நம்முள் புதைந்து உள்ளது. திரையின்பின் மறைந்துள்ள அது வெளிவர குரலெழுப்புகிறது. அத்திரை அதை சிருஷ்டிக்குள் ஒளித்து வைக்கிறது.

**********

ஜீவிய மணி

எது நல்லது, எது கெட்டது என நாம் நமக்கெனச் சில விதிகளை வைத்திருக்கிறோம். நாம் அன்பர். ஒருவர் நம்மை எதிர்த்தால், அவர் தவறான மனிதரானால், நாம் செய்வது சரியானால், அவர் நஷ்டம் அடைவது உண்டு. அழிவதும் உண்டு. அது நமக்குத் திருப்தி அளிக்கிறது. நாம் சரியானவர், அடுத்தவர் தவறானவர், தவறானவர் தண்டிக்கப்பட்டார் என நாம் நினைக்கிறோம். இது நம் சட்டம். அன்னை சட்டம் அன்று. எவரும் அழிவதற்கு அன்னை உடன்பட மாட்டார். ஒருவர் தான் அழியும்படி நடந்து அழிவது வேறு. அன்னை அதைத் தடை செய்வதில்லை. நமக்கு அன்னை சட்டம் புரியாவிட்டால், நம் சட்டத்தை நம்பி, அன்னை அவரைத் தண்டிப்பார் என நினைக்கிறோம். இந்த எண்ணம் சரியில்லை. இந்நினைவு எப்படியாவது அடுத்தவரை நம் பிடியுள் கொண்டுவர முயலும் எண்ணம்.

**********



book | by Dr. Radut