Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/17. நல்லவை தீவிர சிறப்பால் பிரம்மத்தில் முடியும்.

  • எது நல்லது, எது கெட்டது எனப் பாகுபாடில்லாதவர் உண்டு.
    நமக்கே பல சமயம் அது தெரியாது.
  • அடம் செய்யும் குழந்தையை அடிப்பதா, அநியாயமாக நடக்கும் தம்பியை வெறுப்பதா, பொறுப்பற்ற கணவனை கடிந்து கொள்வதா, சமையல் செய்ய மறுக்கும் மனைவியை கெட்டவள் எனக் கூறுவதா எனத் தெரியாது.
  • குழந்தை உருப்பட கண்டிப்பது அவசியம். கண்டிப்புப் பலன் தராவிட்டால் அடுத்தாற்போல் என்ன செய்வது, பலருக்குத் தெளிவு ஏற்படுவதில்லை.
  • கெட்டது எனத் தெரிந்தாலும் செய்ய மனம் ஆர்வமாக இருப்பது வழக்கம்.
  • எது நல்லது? எது தீவிர சிறப்பு? எப்படி அதை அடைவது என்பதெல்லாம் எவருக்கும் ஐயம் ஏற்படுவதில்லை.
  • அடம் பிடித்தால் குழந்தை உதை வாங்கும், தம்பி அநியாயம் செய்தால் அண்ணன் தண்டனை தருவார், பொறுப்பற்ற கணவனை மனைவி வீட்டிற்குள் விட மாட்டாள், சமையல் செய்ய மறுக்கும் மனைவியை விரட்டி விடுவார்கள்.
  • அது பிரச்சனையற்ற உலகம். பிரச்சனை நல்லவருக்கே.
    நியாயமான கண்டிப்பு, தண்டனையை அளிக்க மறுப்பவருக்கே பிரச்சனை.
  • பொறுப்பு நல்லது, சம்பாதிப்பது நல்லது, பண்பாய்ப் பழகுவது நல்லது, உதவி செய்வது நல்லது, நல்லவர் எனப் பெயர் வாங்குவது நல்லது.
    இதுபோன்ற நல்லது தீவிரமாவது என்றால் என்ன? தீவிரம் பிரம்மமாகுமா?
    நெடுங்காலம் தவமிருந்து பெறும் பிரம்மம், நல்லது செய்தால் தீவிரத்தால் பெற முடியுமா?
  • பரம்பரையான அரச குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்து நாட்டை ஆளும் பரம்பரை, மக்களாட்சி வந்து மாறியபொழுது எவரும் ஓட்டுப் பெற்று நாட்டை ஆளலாம் என மாறியது.
    பல ஆண்டு தவம் பலிக்கும் பலனை அன்னையை ஏற்பதால் பெறலாம் என்பது உண்மை.
  • 30 வால்யூம் என்சைக்ளோப்பீடியா — கலைக்களஞ்சியம் 30,000 ரூபாய்க்கு வாங்கினோம்.
    கம்ப்யூட்டரில் கலைக்களஞ்சியம் கணநேரத்தில் அப்பலனைத் தருகிறது.
  • உலகில் இம்மாறுதல்கள் என்றும் உண்டு. இன்று அதிகம். நாம் இப்பலனைப் பெற்றாலும், கவனிப்பதில்லை. கவனித்து புரிந்து ஆன்மீகப் பலனையடைய முனைவதில்லை.
  • சிறு குடும்பம், மூன்று பெண்கள், தகப்பனார் ஆன்மீக உண்மையை நாடினார்.
    பெரிய நகைக்கடை மாப்பிள்ளை ஒரு பெண்ணை மணந்து கொண்டார்.
    அடுத்தவர் அயல் நாட்டிலிருப்பவர், விரும்பி அடுத்த பெண்ணை மணந்தார். மூன்றாம் பெண்ணுக்கும் அப்படியே முடிந்தது.
    வாழ்வு தர முடியாத பலனை மனம் உண்மையாக ஆன்மீகத்தை நாடியதால் ஒரு முறை பல முறையாகி பெரும்பலன் கிடைத்தது -
    ஒரே மகன் இடறி விழுந்து எழுந்து பெரிய வருமானம் பெறுகிறான்.
  • இவை வாழ்க்கைப் பலன்கள். பிரம்மம் யோகப் பலன்.
    வாழ்வின் சட்டம் யோகத்திற்குப் பலிக்குமா?
    பூரண யோகத்தில் யோகமே வாழ்வு, வாழ்வே யோகம். மேலும் ஒன்று; நல்லது நமக்கு ஒத்து வராது. ஒத்து வந்தால் உயராது. உயர்ந்தால் உச்சகட்டம் போகாது.
    கழுகு உயரே பறப்பதற்கு அளவுண்டு. தொடர்ந்து உயர முடியாது.
    நல்லது சிறப்படைய கடைசி கட்டத்திற்கு முன் கட்டம் வரை வரலாம். கடைசி கட்டம் போக முடியாது.
  • பணம் படைத்த குடும்பத்தில் ஒரே பையன். துஷ்டமாகப் பேசுவான். படிப்பு வராது. பரீட்சை எழுதினால் பெயிலாவது வழக்கம். பலமுறையும் பெயிலாவான். தகப்பனார் செல்வாக்கால் SSLC, Intermediate பாஸ் செய்தான். Honours சேர்ந்தான். முதலாண்டு ஆங்கிலப் பரிட்சை எழுதி பாஸ் செய்தான்.
    “என் வாழ்நாளில் முதல் முறையாகப் பாஸ் செய் பரீட்சையிது” என்றான். வக்கீலானான். ஹைகோர்ட்டில் வேலை. கேஸ் வரவில்லை
    “முதல் மார்க்கு வாங்குவது என்பது எல்லார்க்குமில்லை இப்பொழுது நான் ஏழாம் வகுப்புப் பரீட்சை எழுதினாலும் முதல் மார்க்கு கெட்டிக்காரப் பையனுக்கே போகும். எனக்கு வராது” என்றான்.
    இந்த ஞானம் விவேகத்தின் உச்சக்கட்டம்.
    கடைசி கட்டம்வரை முயற்சியால் போகலாம்.
    முதல்வனாக வர சொந்த புத்திசாலித்தனம் வேண்டும்
    நல்லது செய்யலாம். அதிகமாகவும் செய்யலாம்
    நல்லதை சிறப்பாகச் செய்ய முயன்றால் செய்யும் வேலை கெட்டு விடும்
    நல்லது சிறப்பாக நடக்க அனைத்து அம்சங்களும் நல்லதாக, சிறப்பாக இருக்க வேண்டும். அது நம் கையில் இல்லை அதையும் கடந்து நம் மனத்தில் – உள்ளே, அக வாழ்வில் அனைத்து அம்சமும் சிறப்பாக நல்லதாக இருக்க வேண்டும் தவ முயற்சி இது.
  • செயலும் தவம், வாழ்வும் தவம், எவரும் தெய்வம், பெரியவர் தெய்வம், சிறியவர் தெய்வம், நல்லவர் தெய்வம், கெட்டவரும் தெய்வம். நல்லதைச் சிறப்பாக்க முயன்றால்,
    • தர்மபுத்திரரை சூது அழைக்கும்.
    • ஐந்து பேரை மணந்து கற்பின் சிகரத்திலிருந்தால், சபையில் துச்சாதனன் துகிலுரிப்பான்.
    • ரிஷி பத்தினியாக வாழ்ந்தால் திருமூர்த்திகட்குக் கெட்ட எண்ணம் தோன்றி, மனைவிமார் பொறாமைக்குக் கருவியாகி, நாரதர் கலக மனப்பான்மைக்குப் பலியாகி தர்மம் சங்கடமாகி, தர்ம சங்கடம் உறுமும்.
      கற்பு அதையும் கடக்கும்
      அனுசுயா வென்றாள்.
      பார்வதி லக்ஷ்மி பொறாமை, நாரதர் கலகம் தோற்றது.
    • நல்லது இவ்வுலகிலோ, அடுத்த லோகத்திலோ சிறப்படைய பூலோகம் சுவர்க்கமாக வேண்டும்.

********

ஜீவிய மணி

நிறையும் தன்மையில்லாத மனத்திற்கு நிறைவை அளிப்பவர் அன்னை. இந்நிறைவை எட்டுவதற்கு முன்னர், பல மனித நிலைகளை நாம் காண்கிறோம்: ‘என் குடும்பம் தவறு எனினும் என்னால் விட்டுக் கொடுக்க முடியாது’ எனும் மனோபாவம். சாதாரண வாழ்க்கையில் குடும்பத்தின் பெருமையைக் காப்பதைக் கடமை எனல் சரி. ஆனால் அன்னையின் வாழ்க்கையை ஏற்றபின், அன்னையின் சத்தியமே முதன்மையானது. குறையுள்ள குடும்பத்தின்மீது வைத்துள்ள பாசம் அக்குடும்பம் தரும் கொடுமையை விரும்பிப் பிடித்துக் கொள்வதாகும். ஆனால் இத்தகு குடும்பத்தை விலக்கி, அன்னையை ஏற்றால் உண்மையான பெருமை கிடைக்கும். குறையுள்ள குடும்பம் என்பது மட்டும் அன்றி, பெருமையுள்ள குடும்பம் எனினும், குடும்பப் பெருமையைவிட அன்னையே உயர்ந்தவர் என மனம் ஏற்க வேண்டும். அப்பொழுது, குடும்பத்தின் மூலம் அன்னை தருவதைவிட, நேராக அன்னை வழங்கும் அருள் மேலும் உயர்வாக இருக்கும். அடுத்து, அன்னை பொய்யின் வழியாகச் செயல்பட முடியாது. சத்தியத்தின் மூலம் மட்டுமே செயல்பட முடியும் என்பதை உணர வேண்டும். அன்னையிடம் வந்த நல்ல எண்ணமுள்ளவர்க்குத் தீமை ஒரு பொழுதும் நிகழவே நிகழாது. தன் குறையை அறிந்து, பிறர் நன்மையை விழையும் நல்ல உள்ளம் உடையவர்க்கு, அவர் நினைத்த நல்லன எல்லாம் நடக்கும். முடிவில்லாத நல்ல மனத்திற்கு முடிவில்லாத நல்லது நடப்பதே முடிவு ஆகும்.

*********



book | by Dr. Radut