Skip to Content

10. அன்னை இலக்கியம் - தாஜுதீன்

அன்னை இலக்கியம்

தாஜுதீன்

இல. சுந்தரி

அஜெண்டா

மதம் என எனக்கு ஒன்றில்லை
மதம் என ஆரம்பித்தால்
வழி அடைபடும்.

தமக்கு அன்னையளித்த தோட்ட வேலைகளைச் செம்மையாகச் செய்து முடித்து, மனதில் அன்னையை நினைத்து அர்ப்பணித்து ஆஸ்ரமத் திண்ணையில் வந்து அமர்ந்தார் சசிகாந்தன் என்ற ஆஸ்ரம சாதகர். இவருடன் அரவிந்தாஸ்ரமம் வந்து சமையலறையில் பணியேற்ற சர்மா, நெற்றியில் சந்தன, குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டு சுலோகம் ஒன்றை ஜபித்துக் கொண்டிருந்தார்.

திண்ணையில் வந்தமர்ந்த சசிகாந்தனைப் பார்த்து, “என்ன சசி! தியானம், ஜபம் ஏதும் கிடையாதா?” என்றார்.

“எனக்கு அன்னையிட்ட பணிதான் தியானம், ஜபம் எல்லாம்” என்றார் சசி.

“அது என்னவோ சசி, என்னதான் பணிகளைச் செய்தாலும் மந்திரம் ஜபிப்பதில் உள்ள சுகமே தனிதான். சுலோகம் சொல்லவில்லை என்றால் மனம் குறையாகவே உணர்கிறது” என்கிறார் சர்மா.

“எல்லாவற்றிற்கும் மனம்தான் காரணம். அன்னையே பராசக்தி. அவர் இட்ட பணிகளைச் செய்வதுதான் நாம் அவர்க்குச் செய்யும் பக்தி, நன்றி யாவும். இதற்குமேல் நாம் செய்ய என்ன இருக்கிறது” என்றார் சசி.

“அன்னைதாம் அவரவர் சுபாவத்தை வலிந்து மாற்ற முயல வேண்டாம் என்று கூறியுள்ளாரே. பிறகு எதற்கு நீ இதைப் பெரிதுபடுத்துகிறாய்?” என்கிறார் சர்மா.

“அப்படியே பார்த்தாலும் நீர் போற்றும் கீதை என்ன சொல்கிறது. சகல தர்மங்களையும் விட்டுவிட்டுத் தன்னைச் சரணடைந்தவர் பொறுப்பைத் தாமே ஏற்பதாகக் கண்ணன் கூறுவதாகத்தானே கீதை சொல்கிறது.”

“பராசக்தியாக நீர் போற்றும் உமாதேவி என்ன செய்தார்? உலகை முதலில் சுற்றி வருபவர்க்கு மாங்கனி என்று அறிவித்தபின் தம்மையும், சிவனையும் சுற்றி வந்த கணபதிக்குக் கனியை கொடுத்துவிட்டாரே, அது ஏன்? அவர்களே அகிலம் என்பதுதானே அதன் பொருள். நாம் தேடும் இறைவன் நமக்குக் கிடைத்தபின் அவர் இட்டதைச் செய்வதைவிட வேறு தேவை என்ன இருக்கப் போகிறது?” என்கிறார் சசி.

“நீ என்ன சொல்கிறாய்? எனக்குக் குழப்பமாகவுள்ளது” என்கிறார் சர்மா.

“நீ பகவானை ஏற்றிருப்பது உண்மைதானே?”

“அதிலென்ன ஐயம் உனக்கு?”

“அவர் கூறிய சத்தியத்தை (அன்னையை) நீ பூரணமாக ஏற்கவில்லை என்பதால் நீ அவரையும் பூரணமாக ஏற்கவில்லை என்றுதானே பொருள்” என்கிறார் சசி.

சர்மா குழப்பமடைகிறார்.

“சரி சர்மா! நான் உனக்கு ஒரு யோசனை சொல்கிறேன் கேள். அன்னை குழந்தைகளுக்காக நடத்தும் வகுப்பை ஓரத்தில் நின்றாவது வேடிக்கை பார்” என்கிறார் சசி.

அரை மனத்துடன் ஒப்புக் கொள்கிறார் சர்மா. எத்தனையோ சாதகர்கள், குழந்தைகளின் வினாக்களுக்கு அன்னை அளிக்கும் விடைகளை அறிந்து கொள்ள ஆர்வத்துடன் அவ்வகுப்பில் கலந்து கொண்டிருந்தனர். சர்மாவிற்குக் கலந்து கொள்ள விருப்பமில்லை. ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.

அன்னையின் குழந்தைகளுக்கான வகுப்பு நடைபெறுகிறது. சில பெரியவர்களும் வகுப்பில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

சர்மா என்பவர் (சமையலறையில் பணிபுரியும் சாதகர்) மட்டும் ஓர் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார்.

“இனிய அன்னையே! விவேகானந்தர் போன்ற ஞானம் பெற்றவர்களை விட்டுவிட்டு எங்களைப் போன்ற ஒன்றுமறியாதவர்களை ஏன் தேர்ந்தெடுத்துள்ளீர்” என்று ஒரு குழந்தை கேட்கிறது.

“ஓ! அதுவா! ஓரளவு சித்தி பெற்றவர்கள் அதற்குமேல் செல்ல ஒன்றுமில்லை என்று நின்று விடுவார்கள். அவர்களைச் செயல்படுத்துவது இயலாது” என்கிறார் அன்னை.

சுரீரென ஏதோ மனதில் தைக்கிறது சர்மாவிற்கு.

அப்போது பரூக் என்பவர் தம் மகனையும் வகுப்பில் சேர்த்துக் கொள்ளுமாறு அனுமதி கேட்டு வருகிறார். அன்னை புன்முறுவலுடன் தலையசைத்து அனுமதி தருகிறார்.

கள்ளமில்லாத புன்னகை தவழ இளம் சிறுவன் அன்னைமுன் வருகிறான்.

அன்னையும் முகம்மலர்ந்து, “வா குழந்தாய். உன் பெயரென்ன” என்று அன்புடன் வினவுகிறார்.

சிறுவனும் அதே மலர்ச்சியுடன், “என் பெயர் தாஜுதீன் அன்னையே” என்கிறான்.

“நல்லது குழந்தாய். நீ ஏன் குல்லாய் அணியவில்லை?” என்கிறார் அன்னை.

“உங்களிடம் வர அது தேவையில்லை என என் பாவா சொன்னார். அதனால்தான் அணியவில்லை” என்றான் சிறுவன்.

“ஏன் அப்படிச் சொன்னார்?” இது அன்னை. “தெரியவில்லை அன்னையே” இது சிறுவன்.

“சரி சரி! உட்கார்” என்று அவனை வகுப்பில் உட்கார வைத்துக் கொண்டார்.

“அன்னையே! நீங்கள் வகுப்பில் என்ன சொல்லித் தருகிறீர் என்று மற்றவர் கேட்டால் என்ன சொல்வது” என்று மற்றொரு சிறுவன் கேட்கிறான்.

“ஓ! அப்படியா? அன்னை சொல்வதைச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை என்று சொல்லிவிடு” என்கிறார் அன்னை.

மீண்டும் இன்னொரு புதியவர் ஒரு சிறுவனை அழைத்து வந்து, அவனையும் அவ்வகுப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அனுமதி கேட்கிறார்.

அன்னை தலையசைத்து அனுமதியளிக்க ஓரிளம் சிறுவன் அன்னைமுன் வருகிறான்.

“வா குழந்தாய் வா. உன் பெயரென்ன என்று கனிவுடன் கேட்க என் பெயர் ஈஸ்டர் அன்னையே” என்கிறான் சிறுவன்.

“ஓ! நீ கிருஸ்துவ அன்பனா? நல்லது உன் கழுத்தில் அணியும் சிலுவையைக் காணவில்லையே. தொலைத்து விட்டாயா?” என்கிறார் அன்னை.

“தொலைக்கவில்லை அன்னையே. உம்மிடம் வர அது தேவையில்லை என்று என் தாத்தா சொன்னார். அதனால்தான் அணியவில்லை” என்கிறான் சிறுவன்.

“கண்ணா! சிவா! நீங்களும்கூட உங்கள் மதத்தின் சின்னமான திருமண்ணும், திருநீறும் அணியவில்லை, ஏன்” என்கிறார் அன்னை.

“எங்கள் பெற்றோர் உம்மிடம் வர அவை தேவைப்படாது என்று கூறியதால் நாங்கள் அவற்றை அணியவில்லை” என்றனர் சிறுவர்.

“அப்படியா? ஆனால் அதன் காரணம் என்ன என்று யாருக்கேனும் தெரியுமா?” என்கிறார் அன்னை.

ஒருவரும் பதில் சொல்லவில்லை. சர்மா உள்ளே பொருமுகிறார். “உங்களுக்கு மதமெல்லாம் பிடிக்காது என்றுதான்“ என்று அவர் தமக்குள் சொல்லிக் கொள்கிறார்.

உடனே அன்னை, சர்மாவைக் குறும்பாய் பார்க்கிறார்.

“நான் என் மனதிற்குள்தானே பேசிக் கொண்டேன். அதுவும் இவர்க்குத் தெரிந்து விட்டதா” என்று நினைக்கிறார் சர்மா. “யாருக்கேனும் தெரியுமா? பவித்ரா என்ன காரணம் என்று சொல்லமுடியுமா?” என்று பவித்ராவை நோக்கி அன்னை கேட்கிறார். பவித்ரா தயங்குகிறார். “ தயங்காமல் சொல்” என்று அன்னை உற்சாகப்படுத்துகிறார்.

“புறச்சின்னங்கள் மதத்தை அடையாளங்காட்டும் அடையாள சின்னங்கள். தாங்கள் ஆன்மாவிற்குரியவர். மதம் குறுகிய வாய்க்கால் போன்றது. ஆன்மீகம் அகண்ட சமுத்திரம். சமுத்திரத்தில் மூழ்கிட இந்த அடையாளங்கள் தேவையில்லை- அல்லவா? பள்ளியில் படிக்கும் போது ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு அடையாள அட்டை உண்டு. அதை மாணவர்கள் கழுத்தில் அணிய வேண்டும். பள்ளிக் கல்வி முடித்தபின் அடையாள அட்டை தேவையில்லையே. அது போலவே இங்கு மதம் கடந்த தங்களைச் சேர அந்தச் சின்னங்கள் தேவையில்லை என்று கருதுகிறேன்” என்றார் பவித்ரா.

அதைச் சிரத்தையாய்க் கவனித்த அனைவரும், “ஆம் அன்னையே! அவர் கூறுவது சரி என்றுதான் தோன்றுகிறது” என்றனர்.

ஏனோ சர்மாவிற்கு இதில் உடன்பாடில்லை. சந்தனம் குழைத்துப் பூசி, வாய் நிறைய சுலோகம் ஜபிப்பதில் உள்ள திருப்தி இவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது என்று அவர் மனம் பேசுகிறது.

“பவித்ரா! இறைவனை துதிப்பதைத் தவறு என்றா சொல்கிறாய்?” என்று குறும்பாய்க் கேட்கிறார் அன்னை.

“அப்படியில்லை அன்னையே, இறைவனைத் தேடி துதிபாடி நிற்கிறோம். இறைவனின் சாந்நித்யம் கண்டபின் பிரமித்து நிற்போம். மேலும் இறைவன் நம் போற்றுதலாலோ தூற்றுதலாலோ எவ்வித பெருமையும் அடைவதில்லை.

பிராணலோக ஜீவர்களே தம்மைத் துதிப்பதில் பெருமை கொள்ளும் என்று நீரே கூறியுள்ளீரே” என்கிறார் பவித்ரா.

“அப்படியென்றால் இங்கு தெளிவு வேண்டியவர்களுக்கு (சர்மாவை நோக்கி விட்டு) என்ன சொல்ல நினைக்கிறாய்?” என்கிறார் அன்னை.

“நம் பிரபு சாவித்ரி காவியம் மூலமாக இங்கு பராசக்தியே மனிதச் சட்டை அணிந்து புவியில் வெளிப்பட்டதாய்க் கூறியபின், எளிய, தாய் வடிவில் நீங்களே வந்தபின் நாங்கள் துதித்துத் தேட என்ன இருக்கிறது? தங்கள் அருளைப் புறக்கணிக்காமல் பெறுவது ஒன்றே நாங்கள் செய்ய வேண்டியது” என்கிறார் பவித்ரா.

சர்மாவுக்கு ஏதோ சிறிது தெளிவு வருவது போல் தோன்றுகிறது. எனினும் முழுமை இல்லை.

அன்னையின் வகுப்பிற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தோன்றியது.

மறுநாள் சர்மா தாமே அன்னையின் குழந்தைகளுக்கான வகுப்பிற்கு வந்து ஓரமாய் நின்று கொண்டார்.

அன்னை அவரைப் பார்த்து இலேசாகப் புன்னகை செய்தார். பதிலுக்கு என்ன செய்வதெனப் புரியாது தயங்கி நின்றார்.

“தாஜுதீன்! உன் தந்தை கடைத்தெருவில் பிரியாணி ஹோட்டல் வைத்திருக்கிறார் அல்லவா?” என்கிறார் அன்னை.

“ஆம் அன்னையே!” என்று உற்சாகமாய்க் கூறுகிறான் சிறுவன்.

“அதில் பணி செய்ய நிறைய ஆட்கள் உள்ளனரா? அவர்கள்தாம் உணவு தயாரிப்பார்களா?”

“இல்லை அன்னையே. இப்போதுதான் பணியாட்கள் அதிகம். முதலில் கடை தொடங்கிய போது அப்பாவே எல்லா வேலையும் செய்வார்.”

“என்னவெல்லாம் சமைப்பார்?”

விதவிதமான அசைவ உணவு வகைகளின் பெயர்களைச் சிறுவன் கூற சர்மா முகம் சுளிக்கிறார்.

“ஓ! இவையெல்லாம் தயாரிக்க உனக்கும் தெரியுமா?”

“தெரியும் அன்னையே! ஆட்கள் வராத நாட்களில் நானும் என் அப்பாவுமே எல்லாம் தயாரிப்போம்” என்று ஏக உற்சாகத்துடன் சிறுவன் கூற, சர்மாவுக்கு எரிச்சல் வருகிறது. ஆன்மீகத்தில் கோழிபிரியாணிக்கு என்ன வேலை. அன்னை அநாவசியமாய் இதைப்பற்றியெல்லாம் பேசுவதாக நினைக்கிறார்.

(நம்மை உள்ளே நாமறிய வேண்டும். நல்லதற்குப் பெருமைப்படுவதும், கெட்டதற்கு வெட்கப்படுவதும் எரிச்சல் (reaction) படுவதாகும். அன்னை தருவது உலகம். - ஸ்ரீ கர்மயோகி, மலர்ந்த ஜீவியம், ஆகஸ்ட் 2010, அன்பு அமிர்தமாகி...)

“தாஜுதீன்! நீ சர்மாவுக்குச் சமையலில் உதவி செய்கிறாயா?” என்கிறார் அன்னை. சிறுவனும் மிகுந்த உற்சாகத்துடன் அன்னை தம் திறமையைப் பாராட்டுவதாக உணர்ந்து, ‘செய்கிறேன் அன்னையே’ என்கிறான்.

ஏற்கனவே சர்மா பிரியாணி ஹோட்டல் பற்றி வெறுப்படைந்த நிலையில், தாஜுதீன் தமக்குச் சமையலில் உதவுவது மேலும் வேதனை அளித்தது. வேண்டாம் என்று சொல்லவும் முடியாது மனம் தவித்தார் சர்மா.

மறுநாள் சிறுவன் தாஜுதீன் சமையலில் உதவி செய்ய ஆர்வமாக வந்துவிட்டான். சர்மா சுத்த சைவம். சிறுவன் கோழியை, ஆட்டை அறுத்த கையால் உதவுவது நினைக்கவே அருவருப்பாய் இருந்தது. எனவே, மனதில் அவனை மறுத்து ஒரு வேலையும் தராமல் அவனைப் புறக்கணித்தார். சிறுவனோ எவ்வித சலிப்பும் இன்றி பொறுமையாய்க் காத்திருந்தான். தான் அவனைப் புறக்கணித்தால் அவனே போய் விடுவான் என்று நினைத்தார் சர்மா.

ஒரு நாள், எதிர்பாராத நேரத்தில் அன்னை வந்தார். இவர் வருவது தெரிந்ததும் சர்மா சற்று உரத்த குரலில், “தாஜுதீன்

இந்தா, இதை அங்கே வை” என்று தேவையற்ற ஒரு வேலையைக் கூறினார். சிறுவனோ சற்றும் சளைக்காமல் பிரியமாக அவர் கூறியதைச் செய்தான். அன்னை அங்கு வந்து ‘என்ன தாஜுதீன் சர்மா சொல்வது போல் செய்கிறாயா?’ என்கிறார் குறும்பாக.

சிறுவன் மிகுந்த பணிவுடன்,‘ஆமாம் மதர்’ என்கிறான்.

அன்னை சிரித்துக் கொள்கிறார்.

அன்னை சென்றபிறகு, சர்மா சிறுவனை அழைத்து, “ஏனப்பா நான்தான் உன்னை உதவிக்குச் சேர்த்துக் கொள்ளவேயில்லையே, நீ ஏன் அன்னையிடம் அதைச் சொல்லவில்லை?” என்கிறார்.

“என் பாவா என்னை இங்குக் கொண்டு விடும் போதே, அன்னை என்ன சொல்கிறாரோ அதைத் தவறாது செய்ய வேண்டும், யாரோடும் சண்டையிடக் கூடாது, கோள் சொல்லவும் கூடாது. அது அன்னைக்குப் பிடிக்காது. ஒற்றுமைதான் அன்னைக்குப் பிடிக்கும் என்று சொல்லியிருக்கிறார்’ என்றான் சிறுவன்.

“அன்னைக்கு எது பிடித்தால் நமக்கென்ன? நமக்குப் பிடிக்க வேண்டாமா?” என்கிறார் சர்மா.

“அன்னையைப் பிடித்ததால்தான் இங்கு வந்தேன். அவர்க்கு எது பிடிக்குமோ அதுதான் எனக்கு மகிழ்ச்சி தருகிறது. உங்களுக்கு என்னைப் பிடிக்காது என்று எனக்குத் தெரியும் மாமா. ஆனால் அதைநான் அன்னையிடம் சொல்ல மாட்டேன்” என்றான் சிறுவன்.

“சூஆ” என்று கத்தியவண்ணம் தலையைப்பிடித்துக் கொண்டார் சர்மா.

‘என்னாயிற்று மாமா’ என்று சிறுவன் பதறினான்.

சற்றுமுன்வரை தான் வெறுத்த குழந்தை தன்மீது அன்பு கொண்டு பதறியது சர்மாவின் நெஞ்சை உலுக்கியது.

“தலையில் ஏதோ பாரமான பொருள் விழுந்தது போல் உணர்ந்தேன்” என்றார் சர்மா.

‘உங்களுக்கு ஒன்றுமில்லையே மாமா’ என்று கவலையுடன் கேட்டான் சிறுவன்.

“ஒன்றுமில்லை கண்ணா. இனி எனக்கு ஒன்றும் ஆகாது. நீ என் மனக்கண்ணைத் திறக்க அன்னை அனுப்பிய தெய்வம். எனக்கு ஏதோ புரிவது போல் மகிழ்ச்சியாய் இருக்கிறது. என் மனத்தில் மண்டிக் கிடந்த அழுக்கை உன் அன்பால், பொறுமையால் அழித்து விட்டாய். உன் மனம் சுத்தம். நாளை முதல் நீதான் எனக்குச் சமையலில் உதவ வேண்டும். இந்தக் கைகளால் நீ பொருட்களை எடுத்துத் தரவேண்டும்” என்று, எந்தக் கைகளை ஆட்டுக் குருதியும், கோழிக் குருதியும் என்று ஒதுக்கினாரோ அதே கைகளை மிகுந்த அன்புடன் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டு, சிறுவனை அணைத்துக் கொள்கிறார்.

மறுநாள் சர்மா தாஜுதீனின் வரவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறார். சிறுவன் வந்திலன். அவனைத் தேடி சர்மா அங்கும் இங்கும் போகிறார்.

“அன்னை அங்கு வந்து யாரைத் தேடுகிறாய்?” என்கிறார்.

மிகுந்த குற்றவுணர்வுடன் “தாஜுதீனைத் தேடுகிறேன்” என்கிறார் சர்மா.

“இனி அவனுக்கு அவசியமில்லை” என்று சிரிக்கிறார் அன்னை.

சர்வாங்கமும் ஒடுங்கி அவர் திருப்பாதங்களில் விழுகிறார் சர்மா.

திருவுருமாறிய சர்மாவை அன்னை அன்புடன் எழச் செய்து ஆசீர்வதித்தார்.

*******



book | by Dr. Radut