Skip to Content

இன்பமயமான சாதனை

"அன்பர் உரை''

இன்பமயமான சாதனை

Enjoyment is Accomplishment

(சென்னை-பெரம்பூர் ரிஷி இல்லத்தியான மையத்தில் 26.9.99 அன்று திருமதி உஷா ராமதாஸ் நிகழ்த்திய உரை)

நெற்றி வேர்வை நிலத்தில் விழும்படி உழைத்து மனிதன் முன்னுக்கு வருகிறான். அகந்தையுள்ளவரை, சாதிக்க மனிதன் முயலவேண்டும், உழைத்து முன்னேற வேண்டும், பாடுபட வேண்டும். அகந்தை அழிந்த பின் சாதிக்க மனிதன் ஆனந்தப்பட வேண்டும். ஆனந்தம் உயர்ந்தால் சாதனை உயரும் என்பது அன்னையின் யோகம்.

பகவான் ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் செய்த யோகத்தில் அவர்கள் உடல் அனலால் வெந்தது. இரவு பகலாக தழலுள் இருந்தனர். சாதனை ஆனந்தமயமானது எனில் ஏன் அவர்கள் யோகம் வேதனையை அளித்தது? தங்கள் அகந்தையை அழித்த பின் யோகி உலகத்தின் அகந்தையை ஏற்கிறான். அதனால் அவர்கள் வேதனையை அனுபவித்தனர்.

வேத காலத்திலிருந்து இந்தியர் அறிந்த ஆன்மீகத் தத்துவம் இது என்றாலும், நடைமுறையில் உதாரணமாகக் காட்ட உலகில் நிகழ்ச்சிகளில்லை என்பதால், சிறு குழந்தையின் அனுபவத்தையும் அன்பர்கள் மனம் மலர்ந்த நேரம் பெறும் அனுபவத்தையும் தவிர வேறு எதையும் நாம் கூற இயலாது. எல்லா அன்பர்களும் அன்னையை அறிந்த ஆரம்பத்தில் பெற்ற அனுபவம் இது. ஆனால் அவர்கள் கூறும் வகை வேறு. 

"நான் 7 வருஷத்திற்குமுன் ஆசிரமம் வந்தேன். எனக்கு எதுவுமே தெரியாது. வந்தவுடன் நான் பெற்ற மனநிம்மதி, சுகம் "இனி அன்னையில்லாமலிருக்க முடியாது'' எனத் தோன்றியது. எனக்கு பிரச்சினை என எதுவுமில்லை. பிரார்த்தனை செய்யத் தோன்றவில்லை. சமாதிக்கு வந்தால் ஆனந்தம் பொங்கிவிடும். அது என் முகத்தில் தெரியும். இப்பொழுது யோசனை செய்து பார்த்தால் எனக்கு நடந்த நல்லதெல்லாம் அப்பொழுதுதான் நடந்திருக்கிறது. நான் பிரார்த்தனை செய்ததாக நினைவில்லை. நான் வீடு கட்ட நினைக்கவில்லை. பலரும் கட்டலாம் என்றனர். இன்று கூட எப்படி வீடு கட்டினேன் என நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. நானே முயன்று கட்ட வேண்டுமானால், நினைத்தும் பார்க்க முடியவில்லை. என்னால் இவ்வளவு பெரிய வீடுகட்டியிருக்க முடியுமா எனப் பிரமிப்பாக இருக்கிறது. அதுவே சிறியது. மற்றனவெல்லாம் அதைவிடப் பெரியவை. நான் அவற்றை நினைத்தும் பார்க்கவில்லை. தாமே நடந்தன. தாமே கூடி வந்தன''.

சாதனையின் அளவு பெரியதாகும் பொழுது முயற்சி குறைந்து முயற்சியே இல்லாமல் நடக்கின்றன என்பதை இது போன்ற அனுபவங்கள் காட்டுகின்றன. இதுவே யோகதத்துவம். முயற்சியில்லை என்பதுடன் காரியங்கள் முடியும் பொழுது பொறுப்பும் நம்மதில்லை எனத் தெரியும். காரியம் முடிந்தபின் சந்தோஷம் வருவது இயற்கை. ஆனால் அன்னையால் காரியங்கள் நடக்கும்பொழுது ஆனந்தம் முதலிலேயே வந்துவிடும். அவை நடைபெறும் பொழுது ஆனந்தமாக இருக்கும். நடந்தபின்னும் ஆனந்தமயமாக இருக்கும்.

"உலகம் ஆனந்தத்தால் சிருஷ்டிக்கப்படுகிறது. செயல்கள் ஆனந்தத்தால் இயங்குகின்றன. முடிவாக அவை ஆனந்தத்தை நாடுகின்றன'' என உபநிஷதம் கூறுகிறது. உபநிஷதம் கூறும் ஆனந்தம் பேரின்பம், சிற்றின்பமில்லை. உபநிஷதம் கூறும் ஆனந்தம் Bliss சச்சிதானந்தத்தின் பேரானந்தம். ஸ்ரீ அரவிந்தம் கூறும் ஆனந்தம் அதைவிடப் பெரியது. பேரின்பத்தைவிடப் பெரிய ஆனந்தமான சிருஷ்டியின் ஆனந்தம் (delight). மேலுலகிலுள்ள பேரின்பத்தை நம் வாழ்வில் வெளிப்படுத்த சச்சிதானந்தம் முயன்று வெற்றி பெறுவது, இதுவரை உலகில் எவரும் அறியாத ஆனந்தம். இன்று விமானத்தில் சாதாரண மனிதர்கள் போகிறார்கள். அன்று அரசனோ, சக்ரவர்த்தியோ அறியாத சௌகரியம் அது.

  • சத்திய ஜீவியம் உலகில் வந்தபின் அன்பர்கள் அனுபவிக்கும் ஆனந்தம் இது.
  • தங்களை மறந்திருந்த நேரத்தில் (அகந்தையை முன்னுக்கு வைக்காத பொழுது) அன்னை அருள் செயல்பட்டு நம் வாழ்வில் நடத்திய அற்புதங்கள் அநேகம். பிறகு நாம் அன்னையை அறிந்தபிறகு, அது போன்ற நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கிறோம். எதிர்பார்ப்பதன் மூலம் "நாம்'' வந்துவிடுகிறோம். "நாம்'' வந்தபின் அன்னை செயல்படுவதில்லை. அத்துடன் அருள் நின்று விடுகிறது. மேலும் அருளை மனம் நாடினால், "நாம்'' அகல வேண்டும்.

நாம் மேல் மனத்தில் மனத்தால் காலத்தில் அகந்தை மூலம் சிறியதாக (finite) வாழ்கிறோம். அருள் இவை மூலம் வெளிப்படாது. இவை 5உம் அருளுக்குத் தடை. ஆழ்மனத்தில் மனம் விசாலமடைகிறது. காலத்தைக் கடக்கிறோம். அகந்தை நகர்ந்து சைத்திய புருஷன் வருகிறான். சிறியது (finite) பெரியதாகிறது (infinite). பாலிடெக்னிக்கில் சேரப் போனவனுக்கு இன்ஜினீயரிங் காலேஜில் இடம் கிடைக்கிறது. பாங்க் கிளார்க் உத்தியோகம் கிடைக்காதவனுக்கு பேங்க் ஏஜண்ட் வேலை கிடைக்கிறது. டீலர்ஷிப் கிடைக்கவில்லை என்றவர் கம்பனி டைரக்டரானார்.

நாம் எப்படியிருக்க வேண்டும் என்று கேள்வி எழுகிறது? ஒரு குழந்தை அன்னையிடமே இந்தக் கேள்வியைக் கேட்டது. "குழந்தைகளாகிய நாங்கள் அன்னையிடம் என்ன கேட்கலாம்?'' என்று கேட்டது அக்குழந்தை. எதையும் கேட்கலாம் என்றார் அன்னை. குழந்தைகள் கேட்பவை அனைத்தையும் அன்னை உடனே தருகிறார். அவர்கட்கு அகந்தையில்லை என்பதால் அன்னையைக் கேட்டு வாய் மூடு முன் அது பலிப்பதைக் காண்கிறோம்.

நம் பிரார்த்தனைகள் அனைத்தும் நம் தேவைகள், நம் ஆசை பூர்த்தியாகப் பிரார்த்திக்கின்றோம். தேவைகளும், ஆசைகளுமே நம் வாழ்வை நிரப்பியுள்ளன. அவை பூர்த்தியாகாத பொழுது நமக்கு அன்னை நினைவு வருவதில்லை. அவ்வளவும் சுயநலமான பிரார்த்தனைகள். அத்தனையும் பலிக்கின்றன. நாம் எந்த நிலையிலிருந்தாலும், அன்னை அந்த நிலையை ஏற்கிறார். நம் பிரார்த்தனையைப் பூர்த்தி செய்கிறார்.

சுயநலத்தைவிட்டு பிறநலம் நாடுவது, அகந்தையை விட்டு ஆன்மாவை நாடுவது, சிறியதைக் கடந்து பெரியதை நாடுவது நம் இலட்சியமானால், அன்னை நம் இலட்சியத்தைப் பூர்த்தி செய்கிறார். மேலே போகப் போக முயற்சி குறைவு. சாதனை அதிகம். பாடு இல்லை. பாடே ஆனந்தமாகிறது.

அன்பர்களுக்கு இந்த அனுபவம் அவர்கள் அறியாமல் முதலில் உண்டு. இன்று அதுவே நிலைத்திருக்க வேண்டுமானால் மேற்சொன்ன 5 கட்டங்களை நாம் தாண்டவேண்டும். காலம், மனம், மேல் மனம், அகந்தை, சிறியது ஆகிய 5.

  1. காலத்தை நாம் அறிவோம். கடந்ததை ஆழ்ந்து நினைக்கிறோம். எதிர்காலத்திற்கு யோசனை பிறக்கிறது. கடந்தது, நிகழ்காலம், எதிர்காலம் என்ற நிலைகள் காலத்திற்குட்பட்டவை. கடந்ததை மறந்து, எதிர்காலத்தை நினைக்காமல் இன்றுள்ள நிலைமையில் தம்மை மறந்து நாம் செயல்படும் நேரம் நாம் காலத்தைக் கடக்கிறோம். (Past and future disappear giving way to the ever present). நம் சொந்த பாணியில் சொல்வதானால், "நான் எதையுமே நினைக்கவில்லை. எல்லாம் தாமே நடந்தன'' என்ற நிலை அது.
  2. மேல் மனம் ஆயிரம் எண்ணங்கள் மனத்தில் ஓடியபடியிருக்கும். அவற்றுள் ஒன்றையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. இது மேல் மனம். எண்ணங்கள் அடங்கிய நிலையில் நாம் மேல் மனத்திலிருந்து, ஆழ்மனத்தை அடைகிறோம். மனம் மௌனமாகிறது. 
  3. அகந்தை என்ன என்பதை நாம் அறிவோம். அதனின்று அறவே விலக வேண்டும். சுயநலம், கர்வம், அவசரம், எரிச்சல், போட்டி, பொறாமை, மந்தம், சந்தேகம், பொய் ஆகியவை அகந்தைக்குரியவை. பரநலம், அடக்கம், அமைதி, பெருந்தன்மை, சுறுசுறுப்பு, நம்பிக்கை, சத்தியம் ஆகியவை அகந்தையினின்று நம்மை விலக்க உதவும்.
  4. மனம் மேல் மனத்தைக் கடப்பது எளிதன்று. மனத்தைக் கடந்தவர் இதுவரை எவருமில்லை. மனிதன் என்பவன் மனத்தாலானவன். மனிதநிலை மாறி உயர்ந்தால் மனத்தைக் கடக்கலாம். முடிந்த அளவு மனத்தை விட்டு அகலாமல் மனத்தைக் கடப்பது யோகம் பலிப்பதாகும்.
  5. பயம், சந்தேகம், தயக்கம் போன்ற குணங்கள் finite சிறியவற்றிற்குரியவை. தைரியம், நம்பிக்கை, தயக்கமின்றி செயல்படுதல், பெருந்தன்மை, தாராள மனப்பான்மை infinite பெரியவற்றிற்குரியவை.

தினமும் 1500ரூ சம்பாதிப்பவர் அன்னையை அறிந்தார். சுமார் 15 நாளில் நடந்ததை அவரால் நம்பமுடியவில்லை. ஏற்கவும் முடியவில்லை. பயம் வந்தது. தினமும் 30,000ரூபாய் 75 நாட்களுக்கு வரும் நிலை ஏற்பட்டது. அவர் "அன்னை'' என்று கேட்டறிந்தார். விவரம் எதுவும் இருந்தால் இனி தெரிந்து கொள்ளவேண்டும். ஒருமுறை ஆசிரமம் வந்தார். எதுவுமே அறியாத நிலையில் சிறப்பான உழைப்பாளி என்பதால் அவர் வாழ்வில் நடந்த அற்புதம் இது.  

நாம் அன்னையை அறிந்தபின் "நாம்'' என்பதில்லாத மனநிலை பெற்றால் வாழ்நாள் முழுவதும் அதே போன்ற புற நிகழ்ச்சிகள் நடந்தபடியிருக்கும். அதையே நான் அதிர்ஷ்டம் எனக் குறிப்பிடுகிறேன். புறத்தே தெரிவது கடுகளவு. அகத்தில் எழுவது அருள். அருள் கண்ணுக்குத் தெரிவதில்லை. பொருள் தெரியும். அதனால் பொருளைக் கூறவேண்டியிருக்கிறது.

மனித வாழ்வில் உள்ள ஒரே இன்பம் மனைவி தரும் இன்பம் என்கிறார் அன்னை. மனிதன் உற்பத்தி செய்யும் ஆயிரம் பொருள்களில் தலை சிறந்தது குழந்தை. இது மனிதனுடைய சிருஷ்டி.  இந்த சிருஷ்டி சிற்றின்பத்தால் எழுவது. இதுவரை மனிதன் அறிந்த பெரிய இன்பம் அதுவேயாகும். His highest accomplishment is by the greatest enjoyment. இது மனித வாழ்வுக்குரிய சிறிய நிலை. இதை உயர்த்தி பேரின்பம் பெறுதல் அன்னை வாழ்வாகும். உடலாலும், உணர்வாலும், மனத்தாலும், ஆன்மாவாலும், சைத்தியபுருஷனாலும் சிற்றின்பம் பேரின்பமாகும் பொழுது சாதனை இன்பமயமாகிது.

சாதனை என்பது இன்பமாகும். Accomplishment is enjoyment. இன்பம் என்பது சாதனையாகும். Enjoyment is accomplishment. அகந்தை அழிந்து, காலத்தைக் கடந்து, மனத்தைக் கடந்து, ஆழ்மனம் சென்று சிறியது பெரியதாகும் நிலையில் சாதனை இன்பமயமாகிறது.

அன்னையை வணங்க ஆரம்பித்த பிறகு பிரார்த்தனை செய்யாமல் நம் பிரச்சினைகள் தாமே தீருவதை நாம் காண்கிறோம். இம்மனநிலை இன்பமயமாகச் சாதிக்கும் மனநிலையாகும். ஆசையை அன்னை பூர்த்தி செய்தாலும், ஆசை சிறியது, அன்பு பெரியது என நாம் அறிவோம். ஆசையை விட்டகன்று அன்பைச் செலுத்தினால் பிரார்த்தனையின்றி பிரச்சினை தீரும் சூழ்நிலை எழும்.  

நம் பிரச்சினைகள் தீர அன்னையை நாடுகிறோம். அவை தீர்ந்தபின் நம் தேவைகள், ஆசைகள் பூர்த்திபெற விரும்புகிறோம். அடுத்தாற்போல் நம் அபிப்பிராயங்கள் நிறைவேற அன்னையை நாடுகிறோம். அந்தக் கட்டத்தில் காரியம் கூடிவருதல் குறைவதைக் காணலாம். இது நாம் நம்மை வலியுறுத்துவதாகும். அன்னை விரும்பும்படி நாம் நடப்பது முறை. நாம் விரும்பும்படி அன்னை நடக்க எதிர்பார்க்கும் நிலையில் பிரார்த்தனை பலிப்பதில்லை. பிரார்த்தனை பலிக்காததற்குப் பல காரணங்களிருக்கலாம். இது ஒரு முக்கியமான காரணம். இது இருந்தால் நாம் உடனே நேர் எதிராக மாற வேண்டியது அவசியம்.

பலரும் சந்திக்கும் மனநிலை இது. பொதுவாக இக்கட்டத்தில் பிடிவாதம் எழும். பிடிவாதம் வளர ஆரம்பிக்கும். எதுவுமே நடக்காது. அந்நிலை ஏற்பட்டால், நாம் மாற வேண்டும் எனப் பொருள். எப்பொழுதும் குழந்தைகள் சந்தோஷமாக இருக்கக் காரணம் அவருடலில் சக்தி பொங்கி வழிகின்ற காரணத்தால், குழந்தைகள் நடப்பதில்லை. துள்ளி ஓடுகின்றன.

சக்தி பொங்கி வழிந்தால், சந்தோஷம் பொங்கி வழியும். சந்தோஷமிருந்தால், சாதனை பெருகும்.

நமக்கு எப்படி சக்தி பொங்கி எழும்? செய்யும் காரியத்தில் திறமை பெற்றால் (skill) எழும். ஆர்வமிருந்தாலும் சக்தி பொங்கும். அப்படி நாம் சந்தோஷமாக இருக்கும்பொழுது யாராவது ஒரு தவறான சொல்லைச் சொன்னால், மனம் சுருங்கி வாடி விடுகிறது. இதைத் தடுக்க என்ன வழி?

நம் குழந்தைகள், நமக்குப் பெரியவர்கள், குரு, வீட்டு மனிதர்கள், நமக்கு வேண்டியவர்களிடம் குறைகள் பல உண்டு. ஆனால் அவற்றைக் கருதவே கருதாமல், அவர்களைச் சந்தோஷப்படுத்த முயல்கிறோம். அவர்களால் நாம் சந்தோஷப்படுகிறோம். அவர்கள் வாயால் தவறான சொல் ஒன்று வந்தால், நாம் எப்படியாவது அதை மறைத்து, மீறி, சந்தோஷப்பட முயன்று வெற்றி பெறுகிறோம். அனைவரிடமும் இக்கொள்கையைப் பின்பற்றுபவர்க்கு, பழகும்பொழுது சந்தோஷம் அபரிமிதமாக இருக்கும்.

நாம் செய்யும் பல வேலைகளைச் சரியாகப் புரியாமல் எப்படியோ செய்து முடித்துவிடுகிறோம். அவற்றைப் புரிந்துகொண்டால் வேலையில் ஆர்வம் எழும். மணி 7 ஆனாலும் ஆபீசை விட்டுப் போக மனம் வாராது.

சாதனைக்குரிய காரணங்கள் பல. அவற்றுள் சிறந்தது சந்தோஷம்.

  • அதிகமாகச் சாதித்தவர் வாழ்வைக் கவனித்தால், அவருள் பலர் சந்தோஷமான இயல்புள்ளவராக இருப்பார்கள்.
  • பிறரை மகிழ்விப்பதே நோக்கம் என்று கொண்டால், காரியங்கள் எளிதில் முடிவதைக் காணலாம். காரியங்களை எளிதில் முடிப்பவர்கள் பலருக்குப் பிறரை மகிழ்விக்கும் குணம் உண்டு.
  • தலைவிதியே என்று செய்யும் வேலையைக் கடமையாகச் செய்தாலும், கடமையாகச் செய்வதை ஆர்வமாகச் செய்தாலும், ஆர்வமாகச் செய்வதை சமர்ப்பணமாகச் செய்தாலும், சாதனை உயர்வதையும், சந்தோஷம் அதிகரிப்பதையும் காணலாம்.
  • கெட்டவர்களின் கெட்ட குணத்தை விலக்கி, அவரிடம் பிரியமாக இருப்பதும், நல்லவரிடம் அவர் நல்ல குணத்தை விலக்கி, அவரிடம் பிரியமாக இருப்பதும், மனிதனை, மனிதனாகக் கருதாமல் ஆன்மாவாகக் கருதுவதாகும். இதை நெருங்கிய உறவில் கடைப்பிடித்தால், ஆசை அன்பாகவும், அன்பு செலுத்துவது ஆன்மாவையும், ஆண்டவனையும் நெருங்குவதாகும்.
  • அன்பு கெட்டதைவிட, நல்லதையும் விட உயர்ந்தது. சாதிக்கவல்லது.
  • அருளாகப் பெறுவதைப் பிறருக்கு அளித்தால் அது அன்பாகிறது. 
  • அன்பைச் செலுத்தினால் அருள் அதிகமாக நம்மை நாடும்.
  • அன்பைச் செலுத்துவதும், அருளைப் பெறுவதும், ஆர்வமாகச் செயல்படுவதும், திறமையைப் பெற முயல்வதும், செய்யும் காரியங்களைப் புரிந்து கொள்வதும், பிறரை மகிழ்விப்பதும், இன்பமயமான சாதனைக்கு வழி கோலுவதாகும்.

உலகத்தைச் சிருஷ்டித்தவன் ஆண்டவன். ஆனந்தத்திற்காக உலகைச் சிருஷ்டித்து, க்ஷணம் தவறாது ஆனந்தத்தை அனுபவிப்பவன் இறைவன்.

சத்து, சித்து, ஆனந்தம் என்பவை சச்சிதானந்தம். சத் உடலாகவும், சித் வாழ்வாகவும், ஆனந்தம் ஆன்மா (சைத்திய புருஷன்)வாகவும், சத்தியஜீவியம் மனமாகவும் சிருஷ்டியில் மாறுகின்றன. நம் வாழ்வில் ஆனந்தத்தை அறியக் கூடியது ஆன்மா. ஆன்மா ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டுள்ளது. ஆணவம் கரைந்தால் ஆன்மா அதிலிருந்து விடுபடுகிறது. அதன்பின் ஆன்மா மீது மனம் எனும் திரை உள்ளது. மனம் மௌனமானால் மேல் மனம் விலகும். மனம் சிந்திப்பதை மறுத்தால் சிந்தனையிலிருந்து ஆன்மா விடுபடும். சிந்திக்கும் திறனையே மனமிழந்தால் ஆன்மா மனத்திலிருந்து விடுபடும். Mental psychic மனத்திலுள்ள சைத்திய புருஷன் வெளிவருவான். அவன் ஆனந்தத்தைப் பெறுவான். ஞானிகள் பெற்ற இன்பத்தைவிட இது ஒரு படி அதிகமானது.

மனத்திரை விலகிய பின் ஆன்மா மீது உணர்வு (vital) படிந்திருக்கும். உணர்வைக் கட்டுப்படுத்துவது விரதம். விரதம் ஆனந்தம் தாராது. உணர்வைத் திருவுருமாற்றினால் உணர்வு ஆன்மா மீதிருந்து விலகும். vital psychic உணர்வின் ஆன்மா ஆனந்தத்தைப் பெறும். மீராவும், ஆழ்வார்களும் பெற்ற ஆனந்தத்தைவிட ஒரு படி அதிகமான நிலையிது. இந்நிலையில் விஷம் சாப்பிட்டாலும் விஷம் முறியும், உயிர் போகாது.  

உணர்வும் விலகியபின் ஆன்மா மீது உடலின் திரை மூடியிருக்கும். இதுவரை யோகத்தால் உடலை வெல்ல முயன்றவரில்லை. ஸ்ரீ அரவிந்தர் (yoga of body) உடலின் யோகத்தை செய்தார். அதிலும் வெற்றி பெற்றார். அப்பொழுது physical psychic உடலின் ஆன்மா வெளிவந்து ஆனந்தத்தை நேரடியாகப் பெறும். இதற்கடுத்த கட்டம் உண்டு. உடலில் (consciousness, substance) ஜீவியம், உடல் என இரு பகுதிகள் உள்ளன. ஸ்ரீ அரவிந்தர் ஜீவியத்தை வென்றார். அன்னை அதற்கடுத்த நிலையான உடலில் சென்று யோகத்தைத் தொடர்ந்தார். ஒரு நாளில் 2, 3, நிமிஷம் வெற்றி கிட்டும். அந்நேரம் அன்னை ஆண்டவனாக மாறினார், அது போல் 15 நிமிஷமும் இருந்தார். ஒரு சமயம் 1 நாள் முழுவதும் அந்நிலையிலிருந்தார். அதுவே சிருஷ்டியின் கடைசி நிலை. உடலின் ஆன்மா நேரடியாக ஆனந்தத்தைப் பெறுவதாகும். அதைக் கண்ட அன்னை,

"ஒகோ! இறைவன் இப்படித்தான் ஆனந்தத்தை அனுபவிக்கிறான் போலும்'' என்று கூறினார்.

அந்நிலையில் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வரும்பொழுது தோல்வி உடலை அரிப்பதால் அன்னையின் உடல் சிருஷ்டியின் அக்னியால் வெந்தது. "இந்த யோகத்தைச் செய்யும்படி நான் எவரையும் அழைக்க மாட்டேன்'' என்றார்.

இக்கட்டுரையில் நான் கூறும் ஆனந்தம் மனம் பெறும் ஆனந்தமன்று. அது யோகத்திற்குரியது. அதற்கு முந்தைய நிலையில் நல்ல மனிதன், தூயமனத்துடன் பொறுப்பும், கடமையும் நிறைந்து செய்யும் செயல்கள் 100% பூர்த்தியாவதால் பெறும் இன்பம்.

அன்னையை ஆழ்ந்து நினைத்தால் அவ்வின்பம் எழும். அது தானே சாதிக்கும்.

********

Comments

இன்பமயமான சாதனை Para 6    

இன்பமயமான சாதனை
 
Para 6     -   Line  3  -  அளித்தது?தங்கள்               -    அளித்தது? தங்கள்
Para 6     -   Line  3  -  பின்யோகி                            -   பின் யோகி  
Para 10   -   Line  3   -  Blissசச்சிதானந்தத்தின்       -   Bliss சச்சிதானந்தத்தின்
Para 17   -   Line  4   -  நிலையிலி  ருந்தாலும்      -    நிலையிலிருந்தாலும்
Para 23   -   Line  1   -  எüதன்று                               -     எளிதன்று
Para 26   -   Line  1   -  என்பதில்லாதமனநிலை    -    என்பதில்லாத மனநிலை 
Para 33   -   Line  1   -  எழும்?செய்யும்                   -    எழும்? செய்யும்
Para 33   -   Line  1  -  அப்படிநாம்                           -    அப்படி நாம்
Para 34   -   Line  1   -  வேண்டியவர்கüடம்            -    வேண்டியவர்களிடம்
Para 34   -   Line  2   -  சந்தோஷப் படுத்த             -   சந்தோஷப்படுத்த
Para 34   -   Line  3   -  அவர்கள்வாயால்               -    அவர்கள் வாயால் 
Para 49   -   Line  6   -  நாüல்                                   -    நாளில்

 

motnir



book | by Dr. Radut