Skip to Content

பாதை புலப்பட்டது

"அன்னை இலக்கியம்''

பாதை புலப்பட்டது

TS. இராமானுஜன்

தன் இரண்டரை வயது மகள் தீபாவைத் தூங்கவைத்துவிட்டு, மணியைப் பார்த்தாள் விமலா. மணி இரவு ஒன்பதரை. அவள் கணவன் சுரேந்தர் இன்னும் வீடு திரும்பவில்லை. எண்ணங்களைப் பின்னோக்கி ஓடவிட்ட விமலா, நான்கு வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து ஒரு பெருமூச்சு விட்டாள்.

அவர்களுக்குத் திருமணம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. கல்யாணமான புதிதில் கடிகாரம் தவறினாலும், சுரேந்தர் ஆறு மணிக்கு வீடு திரும்பிவிடுவான். வந்த பிறகு, "விமல் இன்னிக்கு எங்கே போகலாம்? உன் புரோகிராம் என்ன'' என்று கேட்பான். அரை மணியில் இருவரும் வெளியில் கிளம்பினார்களானால், ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு கலகலப்பாக வீடு திரும்ப இரவு ஒன்பதுக்கு மேல் ஆகிவிடும். ஏன் தீபா பிறந்து இரண்டு வயது நிறைவதற்குக் கொஞ்சநாள் முன்னால் கூட அவர்களுடைய மேற்கூறிய நடைமுறையில் மாறுதலே இருந்தது கிடையாது. சமீப காலமாக, ஆறு மாதங்களாக சுரேந்தருக்குப் புதியதாக ஏற்பட்டிருக்கும் குடிப்பழக்கம் அவர்களுடைய வாழ்க்கையில் பல அனர்த்தங்களை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது.

ஆறு மாதங்களுக்கு முன்னால் விமலா தன் தாயார் விசாலாட்சியை ஆஸ்பத்திரியில் ஆபரேஷனுக்காகச் சேர்ந்திருந்த போது, தன் வீட்டைவிட்டுப் போனாள்.அப்போது ஆரம்பித்தது இந்த அனர்த்தத்திற்கு அடிப்படை. விமலா எவ்வளவு நன்மைகளைச் செய்திருக்கிறாள்? தன் தாயாருக்குச் செய்யப்போகும் ஆபரேஷன் மிகவும் ஆபத்தானது என்றும், செய்யாமல் விட்டால் உயிருக்கே கூட ஆபத்தாக ஆகும் என்று எல்லோரும் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தபொழுது, விமலா பாண்டிச்சேரியில் உள்ள அன்னைக்குப் பிரார்த்தனை செய்துகொண்டாள் - "அன்னையே! என் தாயாரின் உடலைக் குணப்படுத்துவது உங்கள் அருள் ஒன்றால் தான் சாத்தியம். எனக்கு என் தாயை மீட்டுத் தாருங்கள்'' என்று மனமுருகி வேண்டிக்கொண்டாள், இரவு அறையில் தன் தாயின் தலைமாட்டில் அமர்ந்து பகவான் ஸ்ரீ அரவிந்தர் எழுதிய "சாவித்ரி'' காவியத்தை மனமுருகிப் படித்தாள். அன்றிரவு உறக்கத்தில் விமலா கண்ட கனவை இப்பொழுது நினைத்தாலும் அவளுக்குக் கண்ணீர் பெருகும். நள்ளிரவில் இரு கரிய உருவங்கள் தன் தாயைப் பற்றி இழுத்துக் கொண்டுபோவது போலவும், ஒரு வெண்மையான ஒளி தன் தாயை மீட்டுக்கொண்டு வருவது போலவும், திரும்பத் திரும்ப இந்தப் போராட்டம் பதினைந்து நிமிடங்களாக நடந்திருக்கின்றது. இறுதியில் கருஉருவங்கள் காணாமல் போய்விட்டன. அடுத்த நாள் காலை விசாலாட்சி - "விமலா! நீ வணங்கும் அன்னையை நான் கனவில் கண்டேன். என் தலை மீது கைவைத்து ஆசி வழங்கிவிட்டுச் சென்றார்கள். பார்! இப்பொழுது எவ்வளவு தெம்பாக இருக்கிறேன்", என்ற போது அவர்கள் கண்களில் என்ன ஒளி! விமாலாவிற்குத் தான் கண்ட கனவில் அன்னை எமதூதர்களை வெற்றி கொண்டதை அறிந்து நன்றியால் உள்ளம் பூரித்தாள். அன்றிலிருந்து விசாலாட்சி அன்னை பக்தை ஆனாள்.

தீபா பிறந்ததிலிருந்து இரண்டரை வருடங்களாகப் பல சமயங்களில் தனக்குத் துணை புரிந்த அன்னை தன் வாழ்வில் சமீபத்தில் ஆறு மாதங்களாக ஏன் பலிக்கமாட்டேன் என்கிறார் என்று புரியவில்லை விமலாவிற்கு. என்னென்னவோ செய்து பார்த்தாள் - சுத்தத்தை உச்சகட்டமாக்கியாயிற்று. பேச்சைப் பாதியாகக் குறைத்தாயிற்று. விஷயம் அசைந்து கொடுக்கவில்லை.

இவ்வளவு நேரம் பின்னோக்கிப் போயிருந்த விமலாவின் நினைவுகள் மணியைப் பார்த்தன. பத்தரை மணி ஆகி இருந்தது.  இன்னும் சுரேந்தர் வீடு திரும்பவில்லை. எவ்வளவு நேரம் தனியாக அமர்ந்திருப்பாள்? அன்று நண்பகல் பார்த்த சினிமாவை அசைபோட்டது மனம். எண்ணங்களைத் தடை செய்தன வாயிற்கதவைத் தட்டும் சப்தம். திறந்துபார்த்தால், சுரேந்தரிடம் நெருங்கமுடியாத அளவு நாற்றம். ஏதும் கேட்காமல் கதவைத் தாளிட்டாள். இருவரும் சாப்பிடவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் உறங்கிப் போனார்கள். விமலா வழக்கம்போல "அன்னையே! என் வாழ்வு என்றுதான் விடியப் போகிறது'' என்று அரற்றிக் கொண்டே உறங்கிப் போனாள்.

மறுநாள் காலை தினசரி நடக்கும் சண்டை, முந்தைய நாள் நடந்த நடத்தையை விமரிசனம் செய்து! இறுதியாகச் சுரேந்தர் - "இதோ பார்! நான் சம்பாதிக்கிறேன்! வியாபாரத்தில் சென்ற வருடத்தைவிட இலாபம் அதிகமாகத் தேடி வந்து கொண்டிருக்கிறது! உனக்கு வேறென்ன வேண்டும்? இஷ்டம் இருந்தால் இரு இல்லாவிட்டால் வீட்டைவிட்டு வெளியே போ'' என்று உறுமினான். மீதி நாட்களில், "நான் என்ன தப்பு செய்தேன்? தவறு செய்தவர்கள் தான் தண்டனை அனுபவிக்க வேண்டும். நீங்கள் தான் குடித்துவிட்டு வந்து என் நிம்மதியைத் குலைக்கிறீர்கள். ஆகையால் நீங்கள் தான் வெளியில் போகவேண்டும்" என்று சண்டை போட்டிருப்பாள். ஆனால் இன்று என்ன தோன்றியது என்று தெரியவில்லை. பதிலேதும் பேசாமல் தீபா தூங்கிக் கொண்டிருக்கிறாளே என்று கூடப் பார்க்காமல் அவளை இடுப்பில் எடுத்துக்கொண்டு தன் அம்மா வீட்டிற்குக் கிளம்பிவிட்டாள் விமலா. அடிபட்டுப் போனான் சுரேந்தர். ஆனால் அவன் விலங்கு மனம் அவள் ஆக்ரோஷத்தை அதிகப்படுத்தவே, "ஓஹோ, பதி சொல் மீறாத பத்தினியா! எப்பொழுது வீட்டைவிட்டுப் போவது என்று முடிவு செய்து விட்டாயோ, இனிமேல் என்றுமே இங்கே உனக்கு வேலையில்லை'' என்று கர்ஜனை செய்தான்.

தாய் வீட்டிற்கு வந்து விளையாட்டுப்போல பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. தான் இந்த நிலைமைக்கு ஆளாகிப் போனோமே என்று கொஞ்சம் கூட வருத்தமே இல்லை. விமலா, தன் சிறுவயது தோழிகளுடன் அடிக்கடி சினிமா போவது; சினிமாக்களைப்பற்றி அரட்டை அடிப்பது என்று ஆனந்தமாகப் பொழுது போய்க் கொண்டிருந்தது விமலாவிற்கு. அவள் தாய் விசாலாட்சிதான் நாள்தோறும் மணிக்கணக்கில் அன்னையிடம் அமர்ந்து - "அன்னையே! விமலா உங்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்த நல்லெண்ணம் படைத்தவள் அல்லவா? அவள் கணவனுடைய கெட்ட குணத்தை மாற்ற உங்களுக்குக் கணநேரம் போதுமே. இன்னும் ஏன் காலதாமதம் செய்கிறீர்கள்? இப்போது விமலா வீட்டில் இல்லையே என்று இன்னும் அதிகமாகக் குடிக்கிறாராமே என் மாப்பிள்ளை'' என்று புலம்பித் தீர்த்து விடுவாள்.

அன்று காலையிலிருந்தே தீபாவிற்கு இலேசாகத் தலைவலி. கூடவே வாந்தியும், ஜுரமும் வேறு. டாக்டரிடம் கேட்டதில் மதியம் 3 மணிக்குமேல் குழந்தையைக் கொண்டு வரச்சொன்னார். "சரி, அம்மா! நீ தீபாவைக் கூட்டிக் கொண்டு போய்விட்டு வந்துவிடு. நான் பக்கத்துத் தியேட்டரில் புதுப்படம் வந்திருக்கிறது - நானும் என் ஃப்ரெண்ட்ஸுமாகப் போகப்போகிறோம். ஆங்!வயிற்றுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று மறக்காமல் கேட்டுக்கொண்டு வா'' என்று சொல்லிவிட்டுத் தன் தோழியருடன் அளவளாவச் சென்றுவிட்டாள்.

தன் மகளும் தன்னைப்போல வேதனைப்பட்டுக் கொண்டிருக்காமல், மனத்தைத் தேற்றிக் கொண்டுவிட்டாளே என்று பெருமூச்சுவிட்டுக் கொண்டு தன் வேலைகளைத் தொடர்ந்தாள் விசாலாட்சி. பிற்பகல் 3 மணியளவில் தீபாவை அழைத்துக் கொண்டு டாக்டரிடம் போனாள் விசாலாட்சி. டாக்டர், விசாலாட்சி குடும்பத்திற்கு நன்கு அறிமுகமானவர். "யாரது உங்கள் பேத்தியா, குழந்தையின் அம்மா வரவில்லையா?'' என்று கேட்டார் டாக்டர். "விமலா, அவளுடைய ஃப்ரெண்ட்ஸுகளுடன் சினிமா போயிருக்கிறாள்'', என்ற விசாலாட்சியை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டே "ம், இந்தக் காலத்துப் பெண்கள் மனப்போக்கே  புரியவில்லை. தன் குழந்தையின் உடல்நிலையைக் கூட கவனிக்கும் அளவு மனநிலை இருப்பதில்லை'' என்றார் டாக்டர்.

"ஏன் டாக்டர்! நான்தான் இருக்கிறேனே! இங்கு வந்து பதினைந்து நாட்களாக நான்தானே இவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விமலாவின் பெண்மீது என இரட்டிப்புப் பாசம் இருக்காதா என்ன?'' என்றாள் விசாலாட்சி. வீடு திரும்பும்போது விசாலாட்சி தீபாவை எடுத்துக்கொண்டு மனதில் விமலாவைப் பற்றி அசைபோட்டுக் கொண்டே வந்தாள். சிந்தனைகள் வேறு கோணத்தில் எழுந்தன விசாலாட்சிக்கு. "அன்னையிடம் வந்தபிறகு மனக்கஷ்டங்கள் வரவே இடம் கிடையாது. அப்படி ஏதாவது இருந்தால் ஏதோ காரணம் இருக்கவேண்டும். விமலாவின் தற்போதைய நிலைமைக்கு அவள் எந்த விதத்தில் பொறுப்பாவாள்?'' என்று கேட்டுக் கொண்டே வந்த விசாலாட்சி, தன்னை யாரோ தடுத்து நிறுத்தியது போல ஒருநிமிடம் நின்றுவிட்டாள். அவள் முகம் தெளிவாகி, மனதில் ஓர் உறுதியோடு மேலே நடந்தாள். தன் மனம் தெளிவடைந்த உடனே குழந்தையின் ஜுரம் விட்டுப்போய், பாட்டி எவ்வளவு இதமா இருக்கு இந்த காத்து என்று பேசினாள் தீபா. அதுவரை கண்திறக்காமல் ஜுரத்தில் இருந்த குழந்தையின் நிலையைத் தன் மனநிலையோடு ஒப்பிட்டுப் பார்த்தாள் விசாலாட்சி. உடல் புல்லரித்துப் போய் "அன்னையின் அற்புதமே அற்புதம்'' என்று நாத்தழுதழுத்துப் போனாள்.

குழந்தையை இறக்கிக் கீழே விட்டவுடன் கலகலப்பாக விளையாட ஆரம்பித்துவிட்டாள். சூடாகக் காபி கலந்து எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வரவும், வாசலில் கார்க் கதவைத் திறந்து கொண்டு விமலா இறங்கவும் சரியாக இருந்தது. "அம்மா, படம் ரொம்ப அறுவையாக இருந்தது. பாடல்களும் சுமார்தான். ஆனால் அந்தத் தியேட்டர் சூழ்நிலை எவ்வளவு ஆனந்தமாக இருந்தது தெரியுமா'' என்று மாடிக்குப் போனாள் விமலா. அர்த்த புஷ்டியோடு ஹாலில் மாட்டியிருந்த அன்னையின் படத்தை விசாலாட்சி பார்த்தாள்.   

"விமலா, முகம் கழுவிக்கொண்டு, வேறு ட்ரெஸ் போட்டுக்கொண்டு கீழே வாயேன்! அன்னையிடம் அரைமணி நேரம் சேர்ந்தாற்போல் நாம் இருவரும் இருப்போம். நாளைக்கு உன் அப்பா டில்லியிலிருந்து  திரும்பி வரப்போகிறார். அவர் வந்து பார்த்தால் அன்னை நிகழ்த்தும் அற்புதத்தை அவரால் நம்பவே முடியாது பாரேன்'' என்று குரல் கொடுத்தாள் விசாலாட்சி.

"இதோ வரேம்மா! நானும் அன்னையைப் பற்றி பத்து நாளாகவே நினைக்கவேயில்லை. என்னவோ, என் மனத்தைப் படித்துப் பார்த்தவள் போல நீயும் கூப்பிடுகிறாய்'' என்று கீழே வந்த விமலா, தீபாவை முதன்முதலாகப் பார்ப்பது போல, "என்னம்மா சொன்னார் டாக்டர், தீபாவுக்கு என்னவாம்? பரவாயில்லை, நல்ல டாக்டர்தான் ஒரே டோஸ் மருந்தில் கலகலப்பாக ஆகிவிட்டாளே'' என்று தீபாவைக் கட்டிக்கொண்டே கேட்ட விமலாவைப் பார்த்து, "அடி பைத்தியக்காரி, டோஸ் கொடுத்தது டாக்டர் இல்லை, நம் கண்கண்ட தெய்வம் அன்னை தான்'', என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் விசாலாட்சி.

ஆறரை மணிக்கு அன்னையின் முன் நமஸ்காரம் செய்துவிட்டு பூஜை அறையினின்று வெளியே வந்தனர் இருவரும்.

"விமலா! நான் சொல்லுவதை நல்ல மனநிலையோடு கேட்டுக் கொள். உன்னுடைய இந்த நிலை நீயே வரவழைத்துக் கொண்ட ஒன்றுதான். சமீபகாலமாக உன் போக்கை உற்று கவனித்தாயானால் உனக்கே புரியும். சினிமா, சினிமா என்று எப்பொழுது பார்த்தாலும் இந்தச் சினிமா மோகம் பிடித்து அலைகிறாயே. இந்தச் சினிமாவின் மீது உனக்குள்ள போதைதான் மாப்பிள்ளையிடமிருந்து வெளிப்படுகிறது. அது தெரியாமல் வீட்டைச் சுத்தம் செய்தேன், பேச்சைக் குறைத்தேன், என்று விரக்தியோடு பேசுகிறாய். அன்னையின் கோட்பாடுகளான சுத்தமும், பேச்சுக் குறைப்பும் பலன் தாராமல் போகவில்லை. உன் வீட்டுக்காரருடைய வியாபாரம் அமோகமாகப் பெருகுவதற்கு உன் சுத்தமும், silence-உம் உறுதுணையாக இருந்தன. ஆனால் உன் மனநிலையிலுள்ள சினிமா மோகம் தான் விஷயத்திற்குத் தடை.

''நானே இத்தனைநாள் வரை இது தெரியாத ஜடமாகத்தான் இருந்தேன். டாக்டர் வீட்டிலிருந்து திரும்பி வரும் வழியில்தான் அன்னை இதனை எனக்கு உணர்த்தினார். நான் தவற்றை உணர்ந்த வினாடி, தீபாவின் ஜுரம் இறங்கிவிட்டது. சினிமாவே போகவேண்டாம் என்று சொல்லவில்லை. இன்று பாரேன் தீபாவின் ஜுரம் கூட உனக்குப் பெரியதாகத் தெரியவில்லை'', என்று அன்னையை முன் வைத்துப் பேசி முடித்தாள் விசாலாட்சி.

கேட்டுக் கொண்டே வந்த விமலாவின் கண்களிலிருந்து அருவி புறப்பட்டு அவள் அழுக்குகளைக் கரைத்துக் கொண்டிருந்தன. மீண்டும் பூஜையறைக்குப் போய் அன்னையின் முன் அமர்ந்து, "என் புத்திகெட்டதனத்தை மன்னித்துவிடுங்கள்! எங்கள் கற்பகநிதியான உங்களை வைத்துக்கொண்டே, நானே என் பிரச்சினைகளுக்குக் காரணமாக இருந்து உங்களுக்குத் துரோகம் செய்து கொண்டிருந்தேன். இன்றுமுதல் மாயை அகன்றது. நான் மனம் திருந்த முடிவு செய்து கொள்கிறேன். என்றும்போல என் கூடத் துணை வாருங்கள்'' என்று கதறிவிட்டு முகத்தைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தவளுக்கு ஆச்சரியம்.

ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த தீபாவைக் கொஞ்சிக் கொண்டிருந்தான் சுரேந்தர். "என்னை மன்னித்துவிடு விமலா! உனக்கு நான் செய்த கொடுமைகள் ஏராளம். நான் புதிய மனிதனாக மாறிவிட்டேன். இந்தக்கணம் முதல் நம் புதுவாழ்வைத் தொடங்குவோம் வா! நம் வீட்டிற்குப் போகலாம்'' என்றான்.

இத்தனை நாள் தவம், கணப்பொழுதில் பலித்ததைக் கண்ட விசாலாட்சி நன்றி சொல்லிக் கொண்டே இருந்தாள்.

********

Comments

பாதை புலப்பட்டது  Para 4  

பாதை புலப்பட்டது
 
 
Para 4   -   Line  4   -   கிளம்பினார்க ளானால்     -    கிளம்பினார்களானால
Para 5   -   Line  3   -   செய்திருக்கிறாள்?தன்       -    செய்திருக்கிறாள்? தன்
Para 6   -   Line 10  -    விமலா!நீ                           -    விமலா! நீ
Para 6   -   Line 11  -    பார்!இப்பொழுது                -    பார்! இப்பொழுது
Para 6   -   Line 12  -    ஒளி!  விமாலாவிற்குத்   -    ஒளி!  விமாலாவிற்குத்
Para 14 -   Line  2   -    பெருமூச் சுவிட்டுக்         -    பெருமூச்சுவிட்டுக்
Para 24 -   Line  7   -    வெüயே                             -     வெளியே



book | by Dr. Radut