Skip to Content

06.எங்கள் குடும்பம் II

எங்கள் குடும்பம் II

                                                              (சென்ற இதழின் தொடர்ச்சி.....)

எழ வேண்டியது கேள்வியில்லை, சமர்ப்பணம் என மனம் சமாதானமாயிற்று. மனம் சமாதானமானாலும் அதற்குரிய அமைதி எழவில்லை:

. சமர்ப்பணம் ஒரு சமுத்திரம், அதைப்பற்றி எழுத, பேச அளவில்லை.

. மனத்தின் 9 நிலைகளில் - உடல், உயிர், மனத்தின், ஜட, சூட்சும, காரண தேகங்களில் - செயல் எண்ணமாகவும், உணர்ச்சியாகவும், உடல் உணர்ச்சியாகவும் எழுவதை எழும் நேரம் சமர்ப்பணம் செய்தால் பலன் உண்டு.

. முதல் நிலைக்குப் படிப்படியாகவும், முடிவான நிலைக்கு அதே நேரமும் முழுப்பலன் வரும்.

. எந்த நிலையில் சமர்ப்பணம் செய்கிறோமோ அந்த நிலைக்குரிய அமைதியிருந்தால் சமர்ப்பணம் பூர்த்தியாகும்.

. கேள்வி எழுந்தால் சமர்ப்பணமில்லை.ஆசை எழுந்தால், அவசரம் வரும், சமர்ப்பணம் மறந்து போய் விட்டது எனப் பிறகு நினைவு வரும்.

. வேகம் எழுந்தால், விரயம் ஏற்படும் - சமர்ப்பணம் சம்பந்தப்படாத இடம் அது.

. நாம் எந்த நிலையிலிருக்கிறோம் என அறிவது சுயம் பிரகாசம்.

. நாம் நம்மை மனமாக அறிந்தால் மனத்திற்குரிய பலன் உண்டு.

. மனத்தைக் கடந்து முனி, ரிஷி, யோகி, தெய்வம், சத்தியஜீவியம்,ஆனந்தம், ஜீவியம், சத் என்ற கட்டங்களையும் கடந்து பிரம்மம் உள்ளது. இது பிரம்மம் என்றால் முழுப்பிரம்மம். மனம் கண்ட பகுதியான பிரம்மம் அக்ஷரப்பிரம்மம். சத்தியஜீவியம் கண்ட பிரம்மம் முழுப்பிரம்மம்.

. முழுப்பிரம்மத்தை அது உள்ள இடத்தில் கண்டால் அது முழுமையுடையது. நாமுள்ள வாழ்வில் முழுப்பிரம்மத்தை சத்திய ஜீவியம் காண்பது பிரம்மஜனனம்.

அதை ஜடத்தில் காண்பது ஜடம் ஆனந்தமாவது, பிரம்மம் தேடும் ஆனந்தத்தை நாம் பெறுவது.பிரம்மம் தேடும் ஆனந்தத்தை நாம் பெறுவது பூரணயோகம்.வாழ்வில் பூர்த்தியாகி நாமே பிரம்மமாகி, பிரம்மஜனனத்தை வாழ்வின் அற்புதமாக அனுபவிப்பது - அதுவே சிருஷ்டிப் பயன்.

கணவர் - கவர்னர் எப்படி இது போல் பேசுகிறார்?

. அன்னை விஷயத்தில் எழுந்தால், ஜட்ஜ் நமது வக்கீல் போல் பேசுவார்.ஏன் இப்படிப் பேசுகிறார்? எப்படி கவர்னரால் இதுபோல் பேச முடிகிறது? மனம் அடுத்தவர் வேறு, நாம் வேறு என நினைப்பதால் இரு கட்சிகள் நியாயம் கோரி கோர்ட்டிற்கு வருகிறார்கள்.உணர்வு அடுத்தவரை எதிரி என நினைப்பதால், "அவனை ஒழித்துக் கட்டுவேன்"எனக் கூறுகிறது.

சத்தியஜீவியம் "அடுத்தவர் என்னுள்ளும், நான் அவருள்ளும் இருக்கிறோம்"என அறிவதால் அச்சாயல்பட்டவுடன் ஜட்ஜ் நமது வக்கீல் போல் பேசுகிறார்.

எதிரிக்கு நம்மை அழிப்பது இலட்சியம்.

எதிரி வக்கீலுக்கு நம் கேஸைத் தோற்கடிப்பது இலட்சியம்.

ஜட்ஜ்க்கு அநியாயத்தைத் தடுத்து நியாயம் வழங்குவது இலட்சியம்.

அன்னைக்கு நமக்கு வழங்கும் நியாயம் எதிரிக்கு உதவி செய்யும் ஊன்றுகோலாக வேண்டும் என்பது முக்கியம்.

எதிரி என்பது எதிரியில்லை, அடுத்தவர்.

நமக்கு ஊறு செய்பவர், நம்முள் உள்ள தீமையைக் களைபவர்.

அது அவர் நமக்குச் செய்யும் சேவை.

அந்தச் சேவையைச் செய்யச் சொன்னது அன்னை.

அன்னையின் உத்தரவை அமுல்படுத்தியவருக்கு அன்னை பரிசு அளிக்கிறார்.

நமக்குத் தீமை கடுகளவு கரைந்தால், கரைவது என்ற செயல் கரையைக்கடந்துபோய் எதிரியின் மலைபோன்ற தீமையைக் கரைக்க ஆரம்பிக்கும்.

தீமை கரைய ஆரம்பிப்பது கஷ்டமாக இருக்கும்.

கரைந்தபின் விடுதலை கிடைக்கும்.

அது அன்னை எதிரிக்கு அளிக்கும் பரிசு.

நாம் எதிரியை ஒழித்துக்கட்டுவோம் என்பது "என் தீமையை நான்

அழித்துக்கொள்வேன்"என்பதாகும்.

தீமை என்று ஒன்றில்லை.

தீமை என்பது அகந்தை ஏற்படுத்திய பிரிவினையால், அகந்தை உணரும் வலி.

அகந்தை சிருஷ்டிக்குரியதன்று.

அகந்தை கரையவேண்டியது.

கரையவேண்டிய அகந்தையை நாம் வலுவாகப் பிடித்துக்கொண்டால் வலிக்கும்.

வலியை விரும்புவது தீமை.

பிறருக்கு வலி தர வேண்டும் என்பது தீமையின் கடுமை.

அவை இந்த சிருஷ்டிக்குரியன அன்று.

உரியன அன்று என்றால், சிருஷ்டியே பிரம்மத்தின் பகுதி என்பதால்,

சிருஷ்டியைக் கடந்த அசத்தை அவை சேரும்.

எதுவானாலும் தீமை, குதர்க்கம் நம் கணக்கில் சேரவேண்டிய அவசியமில்லை.

தாயார் - நாம் எது செய்தாலும் கூடிவரும் எனப் பொருள். "உனக்கு எது வேண்டுமானாலும் நான் செய்கிறேன்''என அன்னை கவர்னர் மூலம் கூறுகிறார்:

. கவர்னர் இதுபோல் சென்னையில் முதல் வரிசையில் உள்ள தொழிலதிபர்களிடம் தான் பேசுவார். நம்மிடம் அப்படிப் பேசுவது வழக்கமில்லை.

. அவர்களிடம் அப்படிப் பேசினாலும், செய்யவேண்டிய நேரம் வரும் பொழுது சர்க்காருக்கு ஆதாயமானதை மட்டுமே கவர்னர் செய்வார்.எதுவானாலும், நமக்கு அதில்லை.

. கவர்னர் பேசுவது கவர்னர் பேசுவதில்லை.

. அது அன்னை பேசுவது, கவர்னர் மூலம் பேசுவது.

. அன்னை நம்மிடம் பேசவில்லை, நம்முள் உள்ள அன்னையிடம் பேசுகிறார்.

. அன்னைக்குப் பின் சத்புருஷனும், பிரம்மமும் உள்ளன.

. நம்முள் உள்ள அன்னைக்குப் பின் சத்புருஷனும், பிரம்மமும் உள்ளன.

. சத்புருஷன் நம்முள் உள்ள சத்புருஷனிடம் பேசுவது காலத்தைக் கடந்த நிலை.

. பிரம்மம் நம்முள் உள்ள பிரம்மத்துடன் பேசுவதும் காலத்தைக் கடந்த நிலை.

. அன்னை நம்முள் உள்ள அன்னையிடம் பேசுவதும் காலத்தைக் கடந்த நிலையையும் கடந்த 3ஆம் நிலைக் காலம்.

. ரிஷிகட்கு லோகமாதா, சத்புருஷன், பிரம்மம் தெரிந்தாலும் அவை சமாதியில் தெரிவதால் அவை ரிஷியினுள் உள்ள அதே அம்சங்களுடன் தொடர்புகொள்வதில்லை.

. பலன் கருதாமல், நடப்பது என்ன எனப் புரிந்துகொண்டு, அத்துடன் நாமும் கலந்துகொண்டால் அது யோகநிலை - அற்புதம் - பலனை நினைக்க வேண்டாம். பலன் உலகுக்கே வரும்.

. ஜடம், சச்சிதானந்தம் தன்னைத் தன் மனத்தால் அறிவது என்பது போன்ற ஏராளமான விளக்கங்கள் உள்ளன. அவை மூலமும் கவர்னர் கூறியதை அறிய முற்பட்டால், இந்த நிகழ்ச்சி மூலம் Life Divine புரியும். சில உதாரணங்கள்:

. எழுவகை அஞ்ஞானம்;

. முரண்பாடு;

. மனம்;

. வாழ்வு உடல் உணர்வை மனத்திற்கு எடுத்துச்செல்லும்;

. தெய்வீகமனம் சத்தியஜீவிய உண்மையை துச்சமாகும்வரை பகுத்து அக்கடமையை முடிக்கிறது;

. பாதாளம்;

. பரமாத்மா;

. ஜீவாத்மா;

. அடிமனம்;

. நால்வகை ஞானம்.

. 3ஆம் நிலை காலத்தாலும் அன்னை, நம்முள் உள்ள அன்னையாலும் அறிவதுபோல், Life Divine கருத்துகள் அனைத்து மூலமும் நாம்இந்நிகழ்ச்சியை அறிய முற்படுவது பலன் தரும்.

பார்ட்னர் - 500 கோடி கம்பனிகள் நாணயமான பார்ட்னர்களைத் தேடுவதாகவும், நம் கம்பனி பெயரை அவர்கட்குத் தரலாமா எனவும் கவர்னர் விசாரித்தார்:

. கவர்னர் பேசவில்லை, கவர்னர்மூலம் அன்னை பேசுகிறார் என்றது போல நாணயத்தை அவர்கள் தேடவில்லை. அன்னை, நம்முள் உள்ள அன்னையை நாணயத்தின் பேரால் தேடுகிறார்.

. இதையும் அதைப் போல் புரிந்து கொள்ள வேண்டும்.

. நாணயம் என்பது ஞானம் (vital knowledge) உணர்வு பெற்ற ஞானம்.

. எழுவகை அஞ்ஞானம், நால்வகை ஞானம்மூலம் நாம் புரிந்துகொள்ள முடியுமா?

. பெரிய கம்பனி நாணயமான சிறிய கம்பனியைத் தேடுவது, ஒரு நிலை ஞானம் கீழுள்ள ஞானத்தைத் தேடுவதாகும் - Intuition seeking seperative knowledge..

. ஞானம் மேல்மனத்தை நாடும்பொழுது மேல்மனம் ஞானத்தைத் தேடுவது response.

. ஏன் நாணயத்தைத் தேடவேண்டும்?

. உணர்வு ஞானம் பெறுவது ஞானம் உணர்வில் வெளிப்படுவதாகும்.அதனால் உயர்ந்தது.

. அவர்கள் நாணயத்தைத் தேடும்பொழுது நாம் 500 கோடி கம்பனியில் பார்ட்னராவதைத் தேடாமல், அதன்பின் உள்ள (intuition) ஞானத்தைத் தேடினால், நேரடியாக அன்னையை அடைவோம்.

. தேடுவது எப்படி?

. ஆதாயத்தைத் தேடாதது முதல் நிபந்தனை.

. அடுத்த நிபந்தனை மனம் ஆதாயத்தை நாடாதது.

. அடுத்தாற்போல் மனம் ஞானத்தைத் தேடுவது.

. அடுத்து, நம்முள் உள்ள அன்னை, நம்மைத் தேடும் அன்னையை அறிவது.

. அடுத்து, இந்த தத்துவங்களை செயல்களில் கண்டுபிடிப்பது.

. எந்தச் செயலைச் சுற்றியும், பல நிகழ்ச்சிகளிருக்கும்.

. பாங்க் சேர்மன் பார்ட்னரைக் கூப்பிட்டால் வரும் செய்தி எதன் மூலம் வருகிறது, யார் மூலம் வருகிறது, எந்த நேரம் வருகிறது, எந்தச் சூழலில் வருகிறது, அவற்றுடன் எந்த நம் கடந்தகால நிகழ்ச்சிகள் தொடர்புள்ளன, எந்த எதிர்காலக் கனவுகள் தொடர்புள்ளன, இந்த நேரம் நாம் மாறிக்கொள்ள வேண்டியவை உண்டா, அப்படி உண்டு எனில், நாம் அங்கு மாறப் பிரியப்படுகிறோமா, அந்த மனநிலைகள்,பழைய செயல்கள் நாம் சேர்மனுடன் பேசுவதில் பிரதிபலிக்கின்றனவா எனக் கண்டால் புரியும்.

. இத்தனையும் செய்வதற்குப் பதிலாக நாம் அன்னையுள் இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.

. அதைச் சமர்ப்பணம் என்று கூறுவதைவிட சமர்ப்பணம் செய்யும் மனநிலை எனக் (Consciousness of consecration) கூறலாம்.

. அதையே equalityசமத்துவம் எனவும் கூறலாம்.

பார்ட்னர் - ஒருவர் நம் பெயரையே கவர்னரிடம் கூறியதாகச் சொன்னார்:

. இது ஒரு முக்கியமான விஷயம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் சாதாரண மனிதன் வாழ்வில் நடப்பதில்லை. எதிர்காலத்தில் தலைவராய் வருபவர் வாழ்க்கையில் நடப்பது. கவர்னரிடம் நம்போன்றவர் பெயரை சொல்லாமலிருக்க முயல்வார்கள்.

. 1900க்கு முன்னுள்ள சரித்திரத்தைப் படித்தாலும், கதைகளைப் படித்தாலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் - தாழ்ந்தவர் பெயரை உயர்ந்த இடங்களில் பேசுவது - இருக்கா. அப்படியிருந்தால், அவை வருங்கால உலகத்தலைவர் பெயராக இருக்கும். 1900க்குப்பின்னால் இவை காணப்படுகின்றன. 1950க்குப்பின்னால் சற்று அதிகமாகவும் 1980க்குப்பின்னால் ஏராளமாகவும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அவைபோன்ற இதர அம்சங்கள்:

. எளியநாட்டின் அபிப்பிராயத்தைப் பொருட்டாக வல்லரசுகள் நினைப்பது.

. ஊனமுற்றவர்க்கு உதவுவது.

. ஏழ்மை நிறைந்த கிராமத்தைத் தேடி சேவைசெய்ய பாங்க் வருவது.

. அநியாயத்திற்குட்பட்ட வரைப்பற்றிப் பத்திரிகையில் எழுதுவது.

. பாடம் வாராத பிள்ளைகளை அதிகமாகக் கவனிப்பது.

. தீராத நோயுள்ள இடங்களுக்குத் தீர்வுகாண முனைவது.

. தொழிலாளர் தலைவனை, கம்பனி விசேஷத்திற்குத் தலைமை தாங்கச் சொல்வது.

. பெண்களை முன்னிறுத்துவது.

. உலக வாழ்வில் அருள் செயல்படும் அம்சங்களிவை.

. கவர்னர் பாராட்டு, உதவ முன்வருவது, 500 கோடி கம்பனியுடன் தொடர்பு ஆகியவற்றை இரண்டாம்பட்சமாகக் கருதி, அதன் பின்னுள்ள நாணயம், அதிர்ஷ்டம், அருள், அன்னை ஆகியவற்றைப் பாராட்டினால், அருள் பேரருளாகும்.

. காலம் மாறுகிறது, நாட்டு நடப்பு மாறுகிறது, பூமியின் ஆன்மீகச் சூழல் மாறுகிறது. அன்று கடுகளவு இருந்தது இன்று கையளவு இருக்கிறது. நாம் அதைப் பாராட்டுவது சரி.

அது நம்மிஷ்டம் - choice.

பலனைக் கருதினால், பலனை மட்டும் கருதினால் choiceக்கு முக்கியத்துவம் வரும். எப்படிப் பலன்வருகிறது என அறிவது ஆன்மீக ஞானம். அதற்குரிய பலன் ஆன்மீகப் பலன்.

. ஆன்மீகப் பலனை எளிமையாக விளக்கலாம்.

. கவர்னர் தரும் பலன் கம்பனிக்கு வரும், கம்பனிக்குமட்டும் வரும்.

. நம் வாழ்வில் கம்பனி ஓர் அம்சம், வீடு பெரிய அம்சம், அந்தஸ்து என்றுண்டு, நிம்மதி முக்கியம், செல்வத்தைவிட செல்வாக்கு முக்கியம். இவைபோன்று உடல் நலம், மனநலம், உறவு, நட்புஎன ஏராளமான அம்சங்கள் உண்டு.

. கவர்னர் கம்பனிக்குச் செய்வதை ஆன்மீகப்பலன் இத்தனை அம்சங்களுக்கும் செய்யும். அது முடிவன்று.

. அதையும் கடந்தது essence சாரம் என்பது. அதை அறிவது நாம் பெறுவதை உலகம் பெறும்.

பார்ட்னர் - ஒத்துக்கொண்டேன். கம்பனியின் நாணயத்தைக் கணக்கிடும் பொழுது நல்ல பெயருக்கு மரியாதை உண்டு;

கணவர் - அது பணத்திற்குண்டு:

. பணத்திற்குமட்டுமிருந்த மரியாதை மேற்சொன்ன நிகழ்ச்சியால் மாறி நாணயத்திற்கு வந்துள்ளது.

. நாணயம் என்பதுஎன்ன? உணர்வு மனத்தின் இலட்சியத்திற்கு விஸ்வாசமாக இருப்பது நாணயம் (Loyalty of the vital to the mentaL ideal is honesty).

. கவர்னர் நாணயத்தால் கம்பனிக்குச் செய்யும் உதவிபோல் ஆன்மீகப் பலன் கம்பனி, வீடு, உறவு, நட்பு, செல்வம், செல்வாக்கு போன்ற அனைத்திற்கும் செய்யும் என்றேன்.

. நாணயம் போல் உள்ள அம்சங்கள் எவை? அவற்றை நாம் விளக்கமாகப் புரிந்துகொள்ளமுடியுமா?

ஆன்மாவின் அம்சங்கள் 12.

அவை ஒவ்வொன்றும் ஒவ்வோர் அம்சமாக வாழ்வில் நாணயம்போல் வெளிப்படும். அவை இரண்டு சேர்ந்தால் புதிய அம்சம் உற்பத்தியாகும். சத்தியமும், ஞானமும் இணைந்தால் நல்லெண்ணம் ஏற்படும்.

. சத்தியம் + ஞானம் = நல்லெண்ணம்

. ஆனந்தம் + ஞானம் = இனிமை

. உறுதி + சத்தியம் = விஸ்வாசம்

. ஞானம் + உறுதி = இலட்சியம்

. சத்தியம் + ஆனந்தம் = பரநலம்

. சக்தி + உறுதி = சந்தோஷம்

. சக்தி + ஞானம் = திறமை

. சத்தியம் + ஆனந்தம் = சாதனை

ஆன்மாவின் 12 அம்சங்களும் ஒவ்வொன்றும் 3 ஆகப் பிரிகின்றன.அன்பு என்ற அம்சம், அன்பு, அன்பை செலுத்துபவர், அன்பைப் பெறுபவர் எனப் பிரிகிறது. இந்த 36 அம்சங்களும் ஒன்று மற்றதுடன் சேர்வதால் வாழ்வின் பண்புகள் (மேற்சொன்ன நல்லெண்ணம், இனிமை போன்றவை) உற்பத்தியாகின்றன. நாம் பலனைக் கருதாது ஆன்மீகப் பலனை அறிய முற்பட்டால் அது வாழ்வின் ஆயிரம் பண்புகள் மூலம் அன்னையை வெளிப்படுத்தும்.

. Essence சாரம் அடுத்தது. அது பிரம்மம். விஷயங்களின் சாரமான பிரம்மத்தை அறிவது யோகம். அது செயல்படுவது ம்ஹழ்ஸ்ங்ப் அற்புதம்.அது பூரணயோகம் பூமியில் பூர்த்தியாவது.

. நாணயம் கம்பனிக்குப் பலன் தரும்.

. ஆன்மீகப்பலன் அனைத்து அம்சங்கள்மூலம் அன்னையை வெளிப்படுத்தும்.

. சாரமான பிரம்மம், பூமியைத் திருவுருமாற்றி இறைவன் வரும் தருணத்தை என்றும்உள்ள பேறாக மாற்றும்.

தாயார் - எதுவுமே நம்மால் நினைக்க முடியாதபடி நடக்கும் என்று மட்டும் நான் அறிவேன், நடக்கும் செய்திகள் நமக்கு மட்டும் தெரிவதில்லை:

கணவர் - தெரிந்தால் அல்ப சந்தோஷம் அத்தனையையும் வீணாக்கும்:

. நமக்குத் தெரியாமல் நடக்கும்வரை நடக்கின்றது. தெரிந்தால் நின்று விடுகிறது. எனது புகழ் வளர்கிறதுஎன்றே நான் அறியேன்; அது வளர்ந்தபடியிருந்தது. அதை நான் கவனிக்க ஆரம்பித்தேன்; நின்றுவிட்டது.எனக்கே பொறுக்கவில்லை. என் திருஷ்டியே பட்டுவிட்டது என்பவை வழக்கு.இதனுள் உள்ள ஆன்மீகத்தத்துவம் மனத்தைப் பற்றியது.

மனம் துண்டு செய்யும் கருவி.

சத்தியஜீவியம் முழுமையான பார்வையுடையது. முழுமையைச் சாதிப்பது.

சத்தியஜீவியம் நம் வாழ்வில் சாதிப்பதை மனம் அறியாது.

மனம் அறியாதவரை சத்தியஜீவியம் சாதிக்கும்.

மனம் கண்டுகொண்டால் துண்டுசெய்யும். தொடர்ந்து அது அழியும் வரை துண்டுசெய்யும். அதாவது அது அழியும்.

. நடப்பதும், அழிவதும் க்ஷணத்தில் நடக்கும்.

. நடப்பது சத்தியஜீவியத்தால் என்பதால் க்ஷணத்தில் நடக்கிறது.

. அழிவது மனத்தால் என்றாலும் மனம் துண்டுசெய்யும் வேகம் பரிணாமத்திற்குரிய வேகம். அதனால் க்ஷணத்தில் நடக்கிறது.

. மனம் நடப்பதைக் கவனிக்காமலிருக்க என்ன செய்யவேண்டும்?

. மனம் காண்பதைச் சமர்ப்பணம் செய்யவேண்டும்.

. சமர்ப்பணம் சத்தியஜீவியத்தைச் செயல்பட வைக்கும்.

. சமர்ப்பணத்தின் வேகம் ஒளியின் வேகத்தைவிட அதிகம்.

. அழிப்பது உடனே நடந்தால், மாறினால் ஆக்கல் உடனே நடக்கும்.

. கேலி, குத்தல் உணர்வை (vital) சேர்ந்தவை. அவை பொல்லாதவை.

. அவை உணர்வின் சூட்சுமத்தைச் சேர்ந்தவை என்பதால் அதிவேகமாகச் செயல்படும்.

. சத்தியஜீவியம் காரணதேகத்திற்குரியது.

. காரணதேகம், சூட்சுமம். மனம், உடல், உணர்வுக்குஉரியன.

. Ascent உயரே போகும்பொழுது ஜடம், சூட்சுமம், காரணம் என விரியும்.

. Descentகீழே வரும்பொழுது காரணம், சூட்சுமம், ஜடம் என விரியும்.

. பலன் ஜடம்; ஆன்மீகப்பலன் சூட்சுமம்; சாரம் காரணம்.

. ஜடத்தைக் கடந்தால் வேகம் அதிகம்.

. காரணம் அதிவேகமாகும்.

. நல்லது, கெட்டது இரண்டும் செயலே, வித்தியாசமில்லை.

தாயார் - அதிர்ஷ்டம் ஆயிரம் வழியாக வருவது அன்னை வாழ்வு:

. அதிர்ஷ்டம் என்பது தொட்டனவெல்லாம் கூடிவருவது.

. அதிர்ஷ்டமுள்ளவர் குறைவு.

. அவர்கட்கு ஒரு விஷயத்தில்தான் அதிர்ஷ்டமிருக்கும்.

. விவசாயம், வியாபாரம், குடும்பம், பணம், நிலம், சொத்து, உறவு என்ற அம்சங்களில் விவசாயத்தில் அதிர்ஷ்டமாக மகசூல் எடுப்பவருக்கு நல்ல விலையும் கிடைக்கும். அவரே வியாபாரம் செய்தால் அந்த அதிர்ஷ்டமிருக்காது. பிள்ளைகள் படிப்பிருக்காது. அதிர்ஷ்டம் என்றால் ஏதோ ஒரு விஷயத்தில்தானிருக்கும்.

. மேதை என்றாலும் ஒரு விஷயத்தில்தானிருக்கும். சீனுவாசராமானுஜம் இங்கிலீஷில் பெயிலானார். அவர் கணித மேதை. மற்ற பாடங்கள் வாரா.

. எல்லா அம்சங்களிலும் அதிர்ஷ்டமுள்ளவரைக் காணமுடியாது.

. அன்பரில் அன்னை அதையும் - எல்லா அம்சங்களிலும் அதிர்ஷ்டம்

- உற்பத்தி செய்கிறார்.

. அதிர்ஷ்டம் ஓரம்சத்தில் இருந்தால், அதற்கு வழியும் ஒன்றாக இருக்கும்.

. வியாபாரத்தில் அதிர்ஷ்டமுள்ள ஒருவர்க்கு எப்பொழுதும் அதிர்ஷ்டம் விலை மூலமாக வருகிறது. குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலையில் விற்பதால் அதிர்ஷ்டம் வருகிறது. அது ஒரு வழி. சரக்கின் தரம், அதிக வியாபாரம் வருவது, ஊழியர் நேர்மை என்ற அடுத்த அம்சங்களில் அதே அதிர்ஷ்டமிருக்காது.

. அன்னை தரும் அதிர்ஷ்டத்திற்கு இந்த இரண்டு அம்சங்களுமிருப்பது அதிகபட்சம்.

1. எல்லா அம்சங்களிலும் அதிர்ஷ்டம் வரும்.

2. அது எல்லா வகைகளிலும் வரும்.

. அதற்கு நாம் செய்யக்கூடியது உண்டா?

. எந்த அம்சத்தால் நமக்கு அதிர்ஷ்டம் வேண்டுமோ, அந்த அம்சத்தைக் கவனிக்கவேண்டும்.

. விலையில் அதிர்ஷ்டம் வேண்டும் என்பவர் பேரம் பேசக் கூடாது,விலையில் பொய் சொல்லக்கூடாது.

. நாம் செய்வது முயற்சி. அதற்குப் பலன் அதிர்ஷ்டம். அந்த முயற்சியை எடுப்பதற்குப் பதிலாகச் சரணம் செய்தால், முயற்சிக்குண்டான பலன் முயற்சியின்றி வரும். முயற்சிக்குத் திறமை வரும். சரணாகதிக்கு அன்னை வருவார். முயற்சி உடலுக்கோ, மனத்திற்கோ உரியது. சரணாகதி ஆன்மாவுக்குரியது.

தாயார் - அதிர்ஷ்டம் ஆயிரம் வழிகளில் வரும். நம்பிக்கை எதன்

வழியாகவும் வருவதில்லை:

. நம்பிக்கைக்கும் அதிர்ஷ்டத்திற்கும் என்ன வித்தியாசம்?அதிர்ஷ்டம் புறத்திலிருந்து வருவது; நம்பிக்கை உள்ளிருந்து,ஆத்மாவிலிருந்து வருவது.புறத்திலிருந்து அதிர்ஷ்டம் வந்தால் அதற்கு அகம் இடம்தர வேண்டும்.புறத்திலிருந்து வரும் அதிர்ஷ்டத்திற்கு அகத்தில் இடம் கொடுக்க வேண்டியது vital உயிர்.

அகத்திலிருந்து ஆன்மாவில் எழும் நம்பிக்கைக்கு இடம்தர வேண்டியது உடல்.உடல் உயிரைவிட ஆழமானது.பல ஆயிரம் வருஷங்களாக மனிதனின் உடல் பெற்ற அனுபவத்தால் அவனுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது.அன்னை, "நம்பிக்கை ஏற்பட விடாமுயற்சி தேவை"என்கிறார். அது உடலுக்குரியது.எத்தனை முறை நமக்கே நடந்திருந்தாலும், அடுத்த முறை செய்ய வேண்டி வரும்பொழுது நம்பிக்கையில்லாதவர்க்கு நம்பிக்கை வருவது இல்லை. அவர்கள் உழைப்புக்குரியவர்கள்.

. பூர்வஜென்மப் பலன் நம்பிக்கை.

. அன்னை பூர்வஜென்ம கர்மத்தை அழிப்பதுபோல் பூர்வஜென்மத்தில் பெற்றிருக்க வேண்டிய நம்பிக்கையையும் தருகிறார்.

. நம்பிக்கை உடலுக்குரியது.

. உடல் என்பது ஜடம்.

. ஜடம் என்பது சத்.

. சத்தியஜீவியம் சத்துடன் நேரடியாகத் தொடர்புள்ளது.

. அன்னை அருள் உடலுக்கு நம்பிக்கை கொடுக்கும்.

. சத் தலைகீழே மாறி ஜடமாவதால், ஜடம் பெறுவதும் சத் பெறுவதும் ஒன்றே.

. அன்னையிடமிருந்து நம்பிக்கையை எப்படிப் பெறுவது?

1. அன்னையை நம்புவது

2. எதிராளியின் நோக்கில் பிரச்சினையை அணுகுவது

3. விடாமுயற்சி

4. நல்லெண்ணம்

5. பரநலம்

6. இடையறாத நினைவு

7. சமர்ப்பணம்

8. கனிவு

9. இனிமை

10. அன்பு

11. சத்தியம்

12. உறுதி

13. அழகு

சத்தியஜீவிய அம்சங்களில் ஒன்றை முழுவதும் பின்பற்றினால்

அன்னையிடமிருந்து நம்பிக்கையைப் பெறலாம்.

பார்ட்னர் - நம்பிக்கையிருந்தால் நன்றி வருமா? நன்றியால் நம்பிக்கை வருமா?

. நன்றி உணர்வு, நம்பிக்கை, ஞானத்தால் வரும் உறுதி.

. நன்றியும், நம்பிக்கையும் வேறாகத் தெரியும்.

. அவற்றிற்குப் பொதுவான அம்சமுண்டு.

. உடலில் உள்ள வளரும் ஆன்மா இரண்டிற்கும் பொதுவானது.

. நன்றியை அறிவது வளரும் ஆன்மா.

. நம்பிக்கை உடையதும் வளரும் ஆன்மா.

. இரண்டும் உடலில் உள்ளவையே.

. ஆத்மஞானம் மனத்தில் பிரதிபலிப்பது நம்பிக்கை.

. உடலின் உணர்வு இறைவனை அறிவது நன்றி.

. ஆத்மஞானம் மனத்தின் உடலின் பகுதியான மூளையில் பிரதிபலிப்பது நம்பிக்கை.

. எனவே உடலின் வளரும்ஆன்மா இரண்டிற்கும் பொதுவானது.

. அதனால் நம்பிக்கையிருந்தால் நன்றி வரும். நன்றியிருந்தால் நம்பிக்கை வரும்.

. பார்ட்னருக்குக் கணவர்மீது நன்றியுண்டு.

. அவருக்குக் கடவுள்மீது நம்பிக்கையுண்டு.

. கடவுள் மீதுள்ள நம்பிக்கை கணவர் மீது நன்றியை உண்டுபண்ணியது.

. நம்பிக்கையே நன்றி; நன்றியே நம்பிக்கை.

. ஞானம் உணர்வாவதால் நன்றி எழுகிறது.

. உணர்வு ஞானமாவதால் நம்பிக்கை வருகிறது.

. நன்றி நம்பிக்கையுடன் சேர்வது பக்தி.

. பக்தியோகம் சைத்தியப்புருஷனுக்குரியது.

. சைத்தியப்புருஷன் பக்தியோகத்தால் வெளிப்பட்டாலும் அதுவும் மோட்சம் தரவல்லது.

. சைத்தியப்புருஷனுக்கு மோட்சம் தரும் திறமையும், திருவுருமாற்றும் திறமையுமுண்டு.

. எது வேண்டும் என்பது நம் இஷ்டம் choice.

. பக்தி யோகம் சைத்தியப்புருஷனை அடைந்தாலும் திருவுருமாற்றத்தைக்

கேட்காது. அதற்குக் கேட்கத் தெரியாது.

. பூரணயோகம் சைத்தியப்புருஷனை அடைந்தாலும் அதற்கு மோட்சம்

வேண்டியதில்லை.

வேலைக்கும், அன்னைக்கும் ஏதோ ஓரிடத்தில் சிறு தொடர்பிருக்கிறது. ஜீவனுள்ள தொடர்பில்லை என்பதால் ஏதாவது சிரமம் வந்தபடி இருக்கிறது எனத் தாயார் கவலைப்பட்டார்:

. ஜீவனுள்ள தொடர்பு என்றால் என்ன?ஆர்வமாகச் செய்யும் வேலையில் ஜீவனுள்ள தொடர்பு உண்டு.அன்னையை அன்னைக்காக ஏற்பது ஜீவனுள்ள தொடர்பு.அன்னையை பலனுக்காக ஏற்பதற்கு அதிருக்காது.

. பிறர் கோணத்தில் பார்ப்பது சத்தியஜீவியம்.நம் கோணத்தில் காண்பது மனம், சுயநலம்.பிறர் கோணத்தில் பார்த்தால் நமக்கு அதிகலாபம் வரும் என்பது பிறர்

கோணத்தை நமக்காக ஏற்பது. இதற்கும் பலனுண்டு. ஆனால் ஏதாவது சிரமம் வந்தபடியிருக்கும்.

. மனிதன் உலகைச் சாமர்த்தியமாக ஏமாற்றலாம்.அவன் தன்னையே ஏமாற்றமுடியாது.ஜீவனுள்ள தொடர்பை ஜீவனில்லாமல் ஏற்பது மனிதன் தன்னைத் தானே ஏமாற்ற முயல்வதாகும்.

. அன்னை என்பது என்ன? வேலை என்பது என்ன?சிருஷ்டி சக்தியில் (consciousness) உள்ளது. அங்குள்ள சலனம் வேலை. அச்சலனத்தை மனிதன் செய்வது மனிதனுடைய வேலை. மனிதன் செய்யும் வேலை அகந்தை மேல்மனத்தின் சக்தியில்,பகுதியால் கர்மத்திற்கு உட்பட்டு செய்வது. அன்னை என்பது சிருஷ்டியைப் பரிணாமமாக மாற்றவந்த சக்தி. அன்னை செய்யும் வேலைசைத்தியப்புருஷன் ஜீவனில் முழுமையாக கர்மத்திற்கு உட்படாமல் செய்வது.

. அன்னை செய்யும் வேலைக்கு ஜீவனுள்ள தொடர்புண்டு. மனிதன் அன்னையை அடைய, செய்யும் மனித வேலைக்கு ஏதாவது சிரமம் வந்தபடியிருக்கும்.

. அன்னையை ஏற்பது முழுமையாக இல்லாவிட்டாலும், ஏற்க வேண்டும் என்ற எண்ணம் முழுமையானால், இதுபோல் ஏதாவது சிரமம் வந்தபடியிருக்காது.

. எங்கிருக்கிறோம் என்பதைn விட எந்த மனநிலையிலிருக்கிறோம் என்பது முக்கியம்.

. தாயார் நிலை பூரணமானதன்று.

. ஆனால் அவர் மனம் அன்னையை நாடவேண்டும் என்பதில் பூரணமானது.

. கணவர், பிள்ளைகளுக்கு அன்னையில்லை.

. ஏதாவது நடந்தால் Mother's Graceஎன்பார்கள்.

. நடக்காவிட்டால் பிரார்த்தனை செய்வார்கள்.

. பிரார்த்தனை பலித்தால் மறந்துவிடுவார்கள்.

. அன்னை பலனுக்காக.

. அன்னை அன்னைக்காக இல்லை.

. பலனை நினைத்து அன்னையை நாடினால் ஏதாவது சிரமம் வந்தபடியிருப்பது மனம் insincereஆக இருப்பதால்.

. பார்ட்னர் மனமும், மனநிலையில் நேராக இருந்தாலும் அவர் கணவரை நாடிவந்தது அன்னைக்காக இல்லை, அதிர்ஷ்டத்-திற்காக.

. அவர் மனம் உண்மையில் ஆதாயத்தை நாடினாலும் பவித்திரமானவர் என்பதால் அவருக்குக் காரியம் கூடிவருகிறது.

மனம் குறையை ஏற்றவுடன் குறை குறையில்லை எனத் தெரியும் என நிரூபணமாயிற்று:

. இந்த விளக்கங்களில் பலனுக்கு அர்த்தமேயில்லை. எப்படி நடந்தது என்பதே முக்கியம்.

. இதில் வெளிப்படும் தத்துவம்,

. மனம் குறை காணும்.

. சத்தியஜீவியம் குறையை நிறையாகக் காணும்.

. குறை என்பது சத்தியஜீவியத்திலிருந்து கீழ்நோக்கி வரும்பொழுது ஆரம்பித்து ஜடத்தில் குறைமட்டும் உள்ளதுஎன முடிகிறது.

. பரிணாமம் முடிந்தபின் குறையே நிறைவு என அறிகிறோம்.

. நாம் மனத்தினின்று சத்தியஜீவியத்திற்குப் போகும் நிலையில் உள்ளோம்.

. வாழ்வும், வாழ்வின் சந்தர்ப்பங்களும் எப்படி இத்தத்துவங்களை நிறைவேற்றுகின்றன என்பதை சிமெண்ட் திருடு விளக்குகிறது.

. இது கதை, நாமே எழுதுவதுஎனக் கூறலாம்.

. அன்பர்கள் தங்கள் அனுபவத்தில் இதுபோன்ற ஏராளமான நிகழ்ச்சிகளைக் காண்கின்றனர்.

. மனம் மாறியவுடன் நிலைமை மாறுவது அன்பர் வாழ்வில் அன்றாட நிகழ்ச்சி.

. இந்தத் தத்துவம் (P..1039, The Life Divine) ஜடம் ஆன்மாவால் ஆளப்படும் என்பது.

. நிகழ்ச்சிகள் ஆயிரம், சட்டம் ஒன்றே.

. வாழ்வு சிருஷ்டிக்கவல்லது.

. நல்லதையும் சிருஷ்டிக்கவல்லது, கெட்டதையும் சிருஷ்டிக்கவல்லது.

. பிரபஞ்சமே அழிந்தாலும் வாழ்விருக்கும்.

. மனம் செயல்பட்டால் (energy) சக்தி ஏற்படுவது வாழ்வு.

. ஜடம் என்பது ரூபம். அது மனம் கொடுத்த ரூபம். வாழ்வு உருவகப்படுத்திய ரூபம்.

. நல்லதும், கெட்டதும் சிருஷ்டியின் முழுமைக்குத் தேவை.

. மனிதவாழ்வு கெட்டதை விலக்கும்; வாழ்வு விலக்கமுடியாது.

. மனிதவாழ்வு கெட்டதை விலக்கினாலும், கெட்டது விலகாது, அடங்கியிருக்கும்.

. எந்தச் சாதனையும் கெட்டதைத் தன்னுட்கொண்டது.

. சுதந்திரம் வரும் பொழுது பிரிவினை வந்தது.

. போர் முடிந்தபொழுது அணுகுண்டு வந்தது.

. கெட்டதேயில்லாத நல்லது அன்னை வாழ்வு தருவது. மனிதன் கெட்டதை விரும்பி வருந்தி அழைக்கிறான்.

தாயார் - பிரச்சினை மனிதனுக்குரியது; விசேஷம் சந்தர்ப்பம்:

. நாம் யார் வீட்டு விசேஷத்திற்கும் போகமாட்டோம். மற்றவர் அனைவரும் நம் வீட்டு விசேஷத்திற்கு வரவேண்டும் என்பது மனித நியாயம். இது சுயநலம், தனக்கே கட்டிக்கொள்ளும் பட்டம்.பணக்காரன் போகமாட்டான். என்றாலும் அனைவரும் வருவார்கள்.வெறும் மனிதன் பணக்காரனுக்குள்ள அந்தஸ்தைத் தானே தனக்கு அளித்துக்கொள்ளும் மனப்பான்மையிது. பெற்றோர் பிள்ளைகளிடம் பாசமில்லாமலிருந்தபின் அவர்கள் தங்களிடம் பாசமாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.

இந்த நாயுடு இவர்கள் வீட்டிற்கு வந்தபொழுது ஏதும் பிரச்சினை இருப்பதாகக் கூறவில்லை. கணவரைத் தனியே பார்த்தபொழுது குறையைக் கொட்டித் தீர்த்தார். மனம் மாறினால் நிலைமை மாறும் என்பதை ஏற்றுக் கொண்டார். மனம் மாறியது, நிலைமையும் மாறியது.

. மனிதனே அவன் உலகமையம்.

. மனமே அவன் மையம்.

. "ஜடமான உடலின் உணர்ச்சி மறைந்துள்ள ஜீவியத்தை, அதனுள் புதைந்துள்ள கடவுளைக் (சத்புருஷனை) காணும்படித் தூண்டுவதே செயல், மனிதவாழ்வு"என்பது 24ஆம் அத்தியாயமான "ஜடம்" என்பதின் சுருக்கம்*.

. நம் வாழ்வை நாமே நிர்ணயிக்கிறோம், நாமே அப்படி வாழ்கிறோம் என்பதை நாயுடுவின் விசேஷத்தில் காணலாம்.

. முடிந்துபோன விசேஷத்தை மனம் மாறிச் செய்யக்கூடியது என்ன?

. விசேஷம் முடியலாம். நாம் என்ற பிரம்மம் முடியவில்லை. பிரம்மம் தன் வாழ்வை வாழ, காலம் தடையாக இருக்கமுடியாது. ஏனெனில் காலம் பிரம்மத்தால் உற்பத்தி செய்யப்பட்டது.

. நாயுடு மனம் மாறினார், ஆபீசிலிருந்து அத்தனை பேரும் வந்தனர்.

. இது எதிர்பார்க்க முடியாதது. ஆனால் நடக்கக்கூடாததில்லை.

. வாழ்வு எதையும் சிருஷ்டிக்கவல்லது. நாம் பாஸிட்டிவாக இருந்தால் பாஸிட்டிவாக சிருஷ்டிக்கும். நாம் நெகட்டிவாக இருந்தால் நெகட்டிவாக சிருஷ்டிக்கும்.

. காலம் பிரம்மத்தால் ஏற்பட்டது என்பதால் பிரம்மம் முடிவு செய்தால், காலத்தால் தடை வாராது.

. அன்பர்கள் வாழ்வில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தினமும் நடக்கின்றன.

. அருள், நாயுடு கணவர் கூறியதை ஏற்றதால் செயல்பட்டது.

. எந்தச் செயலையும் ஜடத்தின் தன்மையால்* அறிய முற்பட்டால் தத்துவம் விளங்கும்.

. எளிய செயல்

- பேப்பர் படிப்பதில் - காண்பது அதிகத்தெளிவு தரும்.

. உயர்ந்தசெயல் உயர்வாக விளக்கும்.

. அதிக ஆனந்தம் தரும் செயல் அதிகத் தெளிவை ஆனந்தமாகத் தரும்.

. சத்தியஜீவன் பிறப்பதே முடிவான மனிதச்செயல்.

. உடலின்பம் குறைந்தபட்சமாகவும், உடல் ஆன்மாவின் இன்பம் அதிகபட்சமாகவும் இருப்பதால் இரு இடங்களிலும் நாம் இதைக் காணலாம்.

தாயார் - முதலியார் எண்ணம் கெட்டது. பலியானவன் முதலியாரை நாடி வந்துவிட்டானே;

அந்த மனம் உடையவர்க்கும், கெட்டலைய வேண்டும் என்பவர்க்கும் அன்னை இல்லை:

. பள்ளிக்கூடம் என்பது நாம் பிறந்த இடத்திலிருந்து முன்னேற விரும்புகிறவனுக்குக் கல்வி போதிக்கும். கூலி வேலைக்குப் போக விரும்புகிறவனுக்குக் கல்வியில்லை, பள்ளிக்கூடம் பயன்படாது.

. கம்ப்யூட்டர் வந்துள்ளது எனில் அதைப் பயன்படுத்துகிறவர்கட்குத் தான் பலன் உண்டு. அதை நாடாதவர்க்குப் பலனில்லை. கம்ப்யூட்டர் மூலம் internetஐ அடையலாம். கம்ப்யூட்டரை typeசெய்யவும் பயன்படுத்தலாம். ஒன்று அதிகபட்சப் பலன் தரும், அடுத்தது குறைந்த பலன் தரும். குறைந்தபட்சப்பலனும் தேவையில்லாதவர்க்குக் கம்ப்யூட்டர் பயன்படாது.

. முதலியார் கெட்டவர். பலியானவன் வெட்கம்கெட்டவன். அது விஷயமில்லை. நல்லவருக்கும், சொரணையுள்ளவர்க்கும் உள்ள சட்டமும் முதலியாருக்குரிய சட்டமும் ஒன்றே.

. சட்டம் தெரிவது முக்கியம்.

. சட்டம் தெரிந்தால் வெட்கம்கெட்டவன், சொரணை உள்ளவன் ஆகலாம்.

. சட்டம் தெரியாவிட்டால், சட்டப்படி காரியம் நடக்கும்.

. வெட்கம்கெட்டவன் பழிவாங்கியவனைச் சரணடைவான்.

. சொரணையுள்ளவனைப் பழிவாங்கியவன் மன்னிப்புக் கேட்டுத் திரும்பிவருவான்.

. இருவருக்கும் சட்டம் ஒன்றே.

. இருவர் வாழ்விலும் சட்டம் ஒன்றாகச் செயல்பட்டாலும், எதிராகச் செயல்படுகிறது.

. சட்டம் மாறாதது, மாற்ற முடியாதது. மனிதவாழ்வுக்கும், தெய்வ வாழ்வுக்கும் சட்டம் ஒன்றே. நமக்குக் கொடுமை பலிக்கும். தெய்வத்திடம் கருணை பலிக்கும்.

. Choice மனிதனுடையது.

. கொடுமையை, இனிமையாக மனிதனால் மாற்றமுடியும்.

. சட்டமே தெரியாதவனுக்குச் சட்டம் பயன்படாது.

. சட்டம் தெரிந்தால் என்ன நடக்கிறது எனத் தெரியும்.

. நம்மையறிந்தால் சட்டத்தை நம்மிஷ்டப்படி செயல்பட வைக்கலாம்.

. விஷயம் நம்மிடமிருக்கும்.

. நாம் அகந்தையாக இருக்கலாம்.

. நாம் ஜீவாத்மாவாக இருக்கலாம்.

. நாம் பிரபஞ்ச ஆத்மாவாக இருக்கலாம்.

. நாம் பரமாத்மாவாக இருக்கலாம்.

. முதலியார்போல் கெட்டவராக இருக்கலாம்.

. நல்லவராக இருக்கலாம்.

. நாம் எதுவாக இருக்கப் பிரியப்படுகிறோம் என்பது நம்மைப் பொருத்தது.

. சட்டம் தெரிந்து, நம்மையறிந்து, அன்னையை நாடி, அவரைச் சரணடைந்து, வாழ்வது அன்னைவாழ்வு.

. அகந்தையை உணர்ந்து, நம் முக்கியத்துவத்தை வற்புறுத்தி, அன்னையை விலக்கி வாழ்வது மனிதவாழ்வு.

. உடல் ஜடம்; ஜடம் என்பது சச்சிதானந்தம்; சச்சிதானந்தம் மனத்தின் புலனுணர்வால் பிரம்மானந்தமாவது பரிணாம நோக்கம். அதுவே சிருஷ்டிக்குக் காரணம். அதை, சமாதியில், மேலுலகில் காண முடியாது.

. சமாதியில், நிஷ்டையில் காண்பது சச்சிதானந்தம்.

. ரிஷியின் திருஷ்டிக்கு ஆனந்தம் தெரிந்தால் சத், சித் தெரியாது.

. சமாதியில் ஒன்றைக் காணலாம்; ஒன்றைமட்டும் காணலாம்.

. ஆனந்தத்தைக் கண்ட ரிஷி உலகை லீலையாக அறிகிறார். சத்தைக் கண்ட ரிஷி உலகை மாயையாகப் புரிந்துகொண்டு இருக்கிறார்.சித்தைக் கண்டவர் உலகைப் பிரகிருதியாகக் காண்கிறார்.

ரிஷியின் கருவி மனம்.

மனம் பகுதியைக் காண்பது.

ஒன்றைக் கண்டால், அது ஒன்றே உண்மைஎன அறியும்.

மற்றவை இல்லை எனச் சொல்லும்.

சமாதியை விட்டகன்றால் இந்த அனுபவம் மறந்துபோகும்.

. பூரணயோகி காண்பவரில்லை, அனுபவிப்பவர்.

அவர் மாயையான உலகம் பிரகிருதியாக லீலை செய்கிறது என அனுபவிக்கிறார்.

அவர் பார்வை முழுமையானது. அவர் கருவி சத்தியஜீவியம்.

அவர் ஆனந்தத்தை மட்டும் காணவில்லை.

சத்தை சித்தாகவும் ஆனந்தமாகவும் காண்கிறார்.

இதைக் காண உதவுவது சத்தியஜீவியத்தின் கருவியான மனம்.

ரிஷியின் மனம் அவருக்கு, சச்சிதானந்தத்தைக் காட்டுகிறது.

பூரணயோகியின் மனம் சத்தியஜீவியக் கருவிஎன்பதால் அவருக்கு

அகமான சத்தைப் புறமான ஜடமாகக் காட்டுகிறது.

ஜடம் பிரம்மானந்தம்.

தான் பிரம்மானந்தமாவதன்முன் செயலாகவும், ஞானமாகவும் இருக்கிறது.

இதுவே சத்தின் புறமான ஜடம்.

இது சிருஷ்டியின் முறை.

ஜடம் சத்திற்கு மனத்தின்மூலம் தான் பிரம்மஞானம், பிரம்ம சக்தி, பிரம்மானந்தம் என்ற அனுபவத்தைத் தருவது சிருஷ்டியின் லீலை.

. நாம் ஒரு காரியம் செய்கிறோம் - குழந்தையை எடுத்து மடியில் வைக்கிறோம். அது ஆனந்தம் தருகிறது.

நாம் உடலானால், உணர்வானால், உடலில் உணர்வில் ஆனந்தம் அனுபவிக்கிறோம். நாம் பிரம்மமானால், பிரம்மானந்தத்தை அனுபவிக்கிறோம்.

இரண்டிற்கும் சட்டம் ஒன்றே; (level) நிலை வேறு.

நாம் எதுவாக இருக்கிறோமோ, அந்நிலைக்குரிய பூரண ஆனந்தத்தைத் தருவது ஜடம்.

நாம் சத்தியஜீவியத்திலிருந்தால் மனம் பகுதியாகச் செயல்படாமல்

சத்தியஜீவியக் கருவியாய் பிரம்மத்தை நமக்குப் பிரம்மானந்தமாகக் காட்டி அனுபவம் தருவதை அற்புதம் marvel என பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

. நாம் மனிதனாகவோ, பூரணயோகியாகவோ இருப்பது நம்மைப் பொருத்தது. மனிதனானால் கொடுமைக்குப் பலியாவான். சாதகனானால் கொடுமை செய்தவன் திரும்பி வந்து மன்னிப்புக் கேட்பான்.

. பலியானவன் முதலியாரைத் தேடிப்போவதும் பக்தன் இறைவனைத் தேடிப்போவதும் சிருஷ்டியின் சலனங்களேயாகும்.

. பலியானவன் போவது சிருஷ்டி.

. கொடுமைக்காரன் மன்னிப்புக் கேட்பது பரிணாமம்.

. பலியானவன் ஜடம்.

அவன் போவது உணர்ச்சி.

அவனுள் உள்ள ஜீவியத்துள் மறைந்துள்ள இறைவனைக் காண உணர்ச்சி உந்துகிறது. பலியானவன் (vital sensation) உயிரில் வாழ்பவன்; வலிமையற்றவன் என்பதால் பலியானான்.

அவனுக்கு முதலியார் தெய்வம்.

அவன் உணர்ச்சி (consciousness) அந்தஸ்து.

பலியானபின் அவனுக்கு எழுவது வெட்கமில்லை, முதலியாரைப் பிரிந்து விட்டோம் என்பதே அவன் சொரணை.

பலியானது அவனை முதலியாரை அதிகமாக அறியத் தூண்டுகிறது.

அவனுக்கு வேண்டியது முதலியார் உறவு.

அவருடைய அலட்சியம், கேலி, துரோகம் அவனுக்கு உறவாகப் படுகிறது.

மீண்டும் அவரை நாடிப்போய் துரோகத்தின் அரவணைப்பை அனுபவிக்கிறார்.

. பலியானவன் சாதகனானால், அவன் உணர்ச்சி சொரணை.சாதகனாக இருப்பதால் அவன் பிரம்மத்தில் வாழமுடியும். பலியாகும்பொழுது (vital) உயிரில் வாழ்ந்தவன் சொரணையால் பிரம்மத்தை அடைகிறான்.

பிரம்மத்தை அடைந்தவுடன் ஜீவியம் தலைகீழே மாறுகிறது consciousness reverses.. சொரணை பிரம்மத்தை நாடுகிறது. அவனது உடல்ஆனந்தமயமாகி சொரணைமூலம் ஜீவியத்தினுள் புதைந்துள்ள பிரம்மத்தைக் காணத் தூண்டுகிறது.

அவன் ஜீவியம் தலைகீழே மாறியதால் மனம் தலைகீழே மாறி சத்திய ஜீவியமாகிறது.

மனம் புறம்.

ஞானம் பெற மனம் அரங்கமாக இருக்கிறது.

தலைகீழே மாறிய மனம் தரும் ஞானம் பிரம்மஞானம்.

புறமான மனம் செயலுக்கும் அரங்கம்.

செயல் வெளிப்படுத்துவது சக்தி.

அது பிரம்மாவின் சக்தி.

புறமான மனம் ஆனந்தமும் தரும்.

அது தரும் ஆனந்தம் பிரம்மானந்தம்.

தலைகீழே மாறிய மனம் சொரணைமூலம் பிரம்மானந்தம் தந்தால்

ஜடம் சத்தாகக் காட்சியளிக்கும்.

ஜடம் சத்தாக, சமாதியில் தெரியவில்லை. விழிப்பில் தெரிவதால் அது

பிரம்மமில்லை, பிரம்மஜனனம்.

இந்த மாற்றம் சூழலை மாற்றி பலியானவனும், முதலியாரும்

ஒன்று என வெளிப்படுத்துவதால் முதலியார் பலியானவனை நாடி

மன்னிப்புக்கேட்டு அவனுக்குப் பிரம்மானந்தத்தைத் தருகிறார்.

. இது ஸ்ரீ அரவிந்தம்.

தாயார் - நல்லவரா, கெட்டவரா என்பதும், தேறுவாரா, தேற மாட்டாரா என்பதும் வேறு. ஒன்று சுபாவம், அடுத்தது முடிவு. தேற வேண்டும் என முடிவு செய்தவர் தேறுவார். சுபாவம் சரியில்லை என்பது வேறு. அதை வலியுறுத்துவது என்பது வேறு. வலியுறுத்தினால் வழியில்லை. வலியுறுத்தினால் வலியுண்டு:

. ஆண்டவன் மிக மோசமானவரை தேர்ந்தெடுக்கிறார் என்று அன்னை கூறுகிறார்.

. பெரிய இயக்கங்கள் பெரியவர்களால் ஆரம்பிக்கப்படும். அதில் சேருபவர்கள் பழைய சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக இருப்பது வழக்கம். இயக்கம் வெற்றி பெற்றபின் மற்றவர்கள் வந்து சேர்வார்கள்.

. இது திருவுருமாற்றத்திற்குரிய யோகம் என்பதால் எவ்வளவுக்கு எவ்வளவு கீழே ஆரம்பிக்கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு உயரே போகலாம் என்பதால் பகவான் அடிமட்டத்தில் ஆரம்பிக்கிறார்.

. நல்லவரும், கெட்டவரும் பரிணாமத்திற்கு மாறுபட்டவரில்லை.

. எலக்ஷனில் நல்லவனுக்கும், கெட்டவனுக்கும் ஓட்டுண்டு.

. டாக்டரிடம் வருபவர் நல்லவரா, கெட்டவராஎன்று பேச்சு இல்லை. இருவருக்கும் ஒரே சிகிச்சையுண்டு.

. பரிணாமத்திற்கு தேறுவது யார்என்பதைப் பொருத்ததில்லை. அவருக்குச் சம்மதமா என்பதையே பொருத்தது.

. சுபாவம் இந்த யோகத்தில் அழிக்கப்படவேண்டியது.

. முடிவு அன்னையை செயல்படச் செய்யும்.

. சரியில்லாத சுபாவத்தை வலியுறுத்துவதும், சரியான சுபாவத்தை வலியுறுத்துவதும் தடை.

. சுபாவம் தடை.

. வலியுறுத்துவது தடை.

. தடையான சுபாவத்தை முடிவால் மாற்றலாம்.

. நல்ல சுபாவத்தையும் வலியுறுத்தினால் வேலை கெடும்.

. வலியுறுத்தும்பொழுது செயல்படுவது நாம்.

. வலியுறுத்தினால் நாம் அன்னையை விலக்குகிறோம்.

. வலியுறுத்தாதபொழுது அன்னையை அனுமதிக்கிறோம்.

. சுபாவமும், வலியுறுத்துவதும் தடை.

. சுபாவத்தை வலியுறுத்தாமல் மீறலாம்.

. வலியுறுத்துவதை மீறமுடியாது.

. வலியுறுத்துவது நாம் என்றால், நாம் இறைவன்.

. இறைவனே விலகினால், இறைவன் செயல்படமுடியாது.

. மறைந்தது இறைவன், அருள் இறைவன் செயல்.

. இறைவன் தான் மறைந்ததை தனக்கு நினைவுபடுத்துவது அருள்.

. வலியுறுத்துவது அதைத் தடுக்கும்.

. இறைவனே தன்னை மறந்தபின், இறைவனே நினைவு படுத்தும்பொழுது, இறைவனே தடுத்தால் வழியில்லை.அருள் செயல்படும் விதம். அஞ்ஞானத்தின் ருசி (Taste of ignorance):

. வாரத்திற்கு ஒரு புது நகை வாங்கும் M.A.. படித்த செல்வர் மகள், பெரிய கல்யாணங்கட்கு அடிக்கடி போவதும், போகுமிடமெல்லாம் ராஜோபசாரம் பெறுவதுமாக இருக்கிறார். அது மனநிறைவாக இருக்கிறது. பெரிய படிப்பு, ஆராய்ச்சி, சேவை, பிரபலம், பெரும் பதவியைப் பெறக்கூடியவர் அவர். அவருடைய செல்வாக்குக்கு அவை காத்திருக்கின்றன. அவருடைய 10 வயது பெண்ணுக்கு எப்படிக் கல்யாணம் செய்யலாம், எங்கே செய்யலாம், எப்படி செய்யலாம், யார் வருவார்கள் என மனம் திட்டம்போடுகிறது. அந்தக் கற்பனைத் திருமணவிழா மனநிறைவு தருவதுபோல வேறெதுவும் தரவில்லை. இந்தப் பெண்ணிற்கு இக்கற்பனையில் திளைப்பது அஞ்ஞானத்தின் ருசி. அப்பெண் என்ன சொல்வாள், "உங்கள் ஞானம் எனக்குத் தேவையில்லை. இந்த அஞ்ஞானம் ருசியாகஇருக்கிறது" என்பாள். அதுவே நம்போன்றவர் மனநிலை.

. இறைவன், பிரம்மம் என்பது பகுக்கப்படாத ஒன்று. It is ONE without a second.அவனே ஆனந்தத்தைத் தேடி தன்னுள் மறைந்து அஞ்ஞானமானான். ஞானமான பிரம்மம் அஞ்ஞானமானபின் அஞ்ஞானத்துள் உள்ள பிரம்மம் தான் மறைந்தோம் என்பதை மறந்துவிட்டது.

. அதை நினைவுபடுத்துவது பரிணாமம், Self-awareness, தன்னை அறிவது.

. அந்த நினைவு பிரம்மஜனனம், பிரம்மானந்தம்.

. மறைந்த பிரம்மமும், நினைவுபடுத்தும் பிரம்மமும் ஒரே பிரம்மம், வெவ்வேறன்று.

. மறைந்த பிரம்மம் உள்ளேயிருக்கிறது. வெளியேயுள்ள பிரம்மம், நினைவுபடுத்துகிறது. அவை வெவ்வேறான இரண்டு பிரம்மங்கள் என நினைப்பது தவறு.

. Chess நாமே நம்முடன் இருபக்கமும் விளையாடுவது போல் பிரம்மம் ஞானமாகவும், அஞ்ஞானமாகவும் இருபுறத்தினின்று

லீலையை நடத்துகிறது.

. இந்த இருபுறம் புரிய அவற்றைக்கடந்த பிரம்மத்தில் நாம் இலயிக்கவேண்டும்.

. நாம் ஞானமாக இருப்பது ரிஷியின் நிலை.

நாம் அஞ்ஞானமாக இருப்பது குடும்பஸ்தன் நிலை.

இரண்டையும் கடந்தால், இரண்டும் புரியும்.

அஞ்ஞானத்திலிருந்தால் அஞ்ஞானம் ருசிப்பதுபோல் ஞானத்தில் இருந்தால் ஞானம் ருசிக்கிறது. ஞானம் ருசிப்பது அஞ்ஞானம்.

ஞானம் ருசிப்பதும் அஞ்ஞானம் ருசிப்பதும் ருசி, ரஸா ஆகாது. இரண்டையும் கடந்த நிலை செயல்படுவது அருள். அஞ்ஞானத்துள் நாமிருந்தாலும் அருளை ஏற்கும் மனப்பான்மையிலிருந்தால்,அஞ்ஞானம் அருளால் ஞானத்தைக்கடந்து பிரம்மத்தைத் தொடும்.அது பிரம்மஞானம். அப்பொழுது அனுபவிப்பது பிரம்மானந்தம். அந்த நிலை பிரம்மஜனனம். 3ஆம் நிலை காலத்திற்குரியது. பிரம்மத்தின் முழுமையுடையது. அந்த நிலையில் ஜடம் சச்சிதானந்தம்.அஞ்ஞானத்தின் ருசியை மீறி அருளை ஏற்கும் receptivityக்கு openingஎனவும் sincerity எனவும் பெயர்.

- ஏற்புத்திறன், உண்மை, விழிப்பு, ஆகியவை இந்த யோகத்திற்குரியவை.

- இக்கதையும், இவை எந்த அளவுக்கு இல்லை, எந்த அளவுக்கு இருக்கிறது, யாரிடமிருக்கிறது என யோசிப்பது பலன் தரும்.

தொடரும்.....

ஜீவிய மணி

அஸ்திவாரம் அனந்தம்.


 


 



book | by Dr. Radut