Skip to Content

13.பகவான் ஸ்ரீ அரவிந்தர் சிந்தனைகள்

பகவான் ஸ்ரீ அரவிந்தர் சிந்தனைகள்

     "என் மனத்திலிருந்த எண்ணங்களை உலகம் நிறைவேற்றத் தவறியதில்லை. காலம் நீடித்திருக்கலாம். ஆனால் தவறு வரவில்லை''என்று பகவான் கூறியுள்ளார். அவற்றுள் தலையானவை இந்திய விடுதலை, ஆசிய விடுதலை, ஐரோப்பிய நாடுகள் இணைந்தது. "அயர்லாந்திலும், துருக்கியிலும் நான் நினைத்தபடி என்னால் செயல்பட முடிந்தது'' எனவும் கூறியுள்ளார். ரஷ்யப் புரட்சியில் தமக்குப் பங்குண்டு என்றார். இமயமலையில் ஒரு தவசி "சுதந்திரத்தைப்'' பற்றிக் கனவு கண்டதால் பிரெஞ்சுப் புரட்சி வந்தது என்றார். அது பகவான் ஸ்ரீ அரவிந்தர்எனத் தோன்றுகிறதுபகவானுக்கும், அன்னைக்கும் சித்தியாக வந்தவற்றை அன்பர்கட்கு அவர்கள் அனுபவமாகத் தருகிறார்கள். சித்தி நிலையானது; அனுபவம் ஒரு முறை வருவது. அன்பர்கள் தாங்கள் நினைத்தவை பிற்காலத்தில் பலிப்பதைத் தவறாது கண்டுள்ளார்கள். அந்த அனுபவமில்லாதவரே இல்லை எனலாம். மேடைப்பிரசங்கங்கள், பாட்டு, அரசியல் பதவி,அமெரிக்கா போவது, புத்தகம் எழுதுவது போன்ற பல விஷயங்களை இன்று ஏராளமானபேர் அனுபவிக்கிறார்கள்இருந்தாலும் அது எளிதன்று. அதுபோன்ற வாய்ப்பே அறவே இல்லாதவர் பெரும்பான்மையோர். அதுபோன்ற அன்பர் ஒருவருக்குப் புத்தகம் எழுத ஆவல்.அது வாழ்வில் பூர்த்தியாவதில்லை. ஒரு முறை பூர்த்தியாவது பெரிய விஷயம். 60ஆம் வயதைக் கடந்து அவருக்கு அந்த ஆவல் பூர்த்தி ஆயிற்று. ஒன்று இரண்டாகவும், மூன்றாகவுமாகி 8 புத்தகங்கள் பிரசுரம் செய்தார். சில சமயங்களில் "இதெல்லாம் நான் நினைத்ததே இல்லை. இவற்றை நினைக்கவும் எனக்கு சக்தியில்லை. ஆனால் நிறைவேறிற்று'' என்பவர் அந்த எண்ணம் ஒரு காலத்தில் ஏற்பட்டு மறந்ததுஎன அறிவதுண்டு. இருக்கும் எளிய உத்தியோகம் நிலையற்றதுஎன பயந்தவருக்கு பெரிய உத்தியோகம் வந்து, அதில் வெகுசீக்கிரம் பிரமோஷன் வந்தது. அமெரிக்காவும் போய் அடுத்த படிப்பையும் தொடர முடிந்தது. இன்றுவரை எப்படி அவை நடந்தன என அவர் நினைத்துப் பார்த்ததில்லை.

****


 



book | by Dr. Radut