Skip to Content

12.எந்தையும் தாயும்

"அன்னை இலக்கியம்"

எந்தையும் தாயும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)  

சியாமளாராவ்

     கார் டிரைவ் செய்தபடியே, அந்த நாய்க்குட்டிகளையும், அதன் தாய் நாய்களைப் பற்றியும் நினைத்தபடியே வந்தான் கௌதம். நினைவில் அவைகளின் குடித்தனம் (சம்சாரம்) பற்றி விரிந்தது. கண்களில் நீர்மணிகள் திரண்டன.

     நாலு கால் பிராணி என்கிறோம்அஞ்சறிவு மிருகம்என்று வாய் கூசாமல், அலட்சியமாகப் பேசுகிறோம்ஆனால்.... கொஞ்ச நாட்களாக அவன் பார்க்கும் காட்சி, மீண்டும் கண்களில் விரிந்தது.

     "ஹவுஸிங் போர்ட்' வீட்டில்தான் முன்புறம் முள்வேபோடப்பட்டு,அதற்குள் பூச்செடிகளை அழகுற வைத்திருந்தான்தினமும் காலையில் அந்தத் தோட்டத்தின் (ஆமாம், அவனுடைய மனதில் அது பெரிய நந்தவனமேதான்) ஒவ்வொரு செடியையும், இலைகளையும் தொட்டுத் தடவி, ஆசையோடு வருடுவான்மொட்டு துளிர்த்திருந்தால், அவன் முகம் பிரகாசமாகப் பளிச்சென்றிருக்கும்தண்ணீரைச் செடிகளுக்கு ஊற்றும்போது பூவாளியால், அந்தச் செடிகளுக்கு வலிக்குமோ என்பது போல், நிதானமாய் "ஷவர்பாத்'போல் வார்ப்பான்.

     அலமெண்டாவை, முள்வேலி போட்டிருப்பதால், அவைகளுக்கு வலிக்கும்என ஒரு பெரிய மூங்கிலை நட்டு அதன்மேல் படரவிட்டு இருந்ததில், இப்போது முதல் மொட்டு சின்னதாய் தலையாட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்து, அவன் மனம் சிறுபிள்ளையாய் குதியாட்டம் போட்டது. கார்னர் வீடானதால் பக்கவாட்டிலும் தோட்டம் அழகுற இருந்தது.

     அன்றும் அதேபோல் காலையில் எழுந்து அவன் நந்தவனத்திற்கு வந்தபோது, ஏதோ "கீச், கீச்' என்ற குரல்கள்என்னது சப்தம்? சுற்றும், முற்றும் பார்த்தான். தெரியவில்லைசட்டென வீடு முடிந்து தோட்டத்தின் வரம்பு வீட்டையொட்டி திரும்பிய இடத்தில், இரண்டு பெரிய நாய்கள், ஏழெட்டு குட்டிகள்.

     பாரதியாரின் பூனையைப் பற்றி எழுதிய பாட்டுபோல, வெள்ளையும் கறுப்பும், சாம்பலும், வெள்ளையும் பிரௌனும், கறுப்புமாக, வெறும் பிரௌனாக எனக் குட்டிகள்தான் கத்திக்கொண்டிருந்தன.

     ஒரு தாய் நாய் மட்டும் வெளியேறியதுஇன்னொன்று அங்கேயே எல்லாக் குட்டிகளையும் பாதுகாத்தபடியிருந்தது. சிறிது நேரத்தில் வெளியேபோன தாய்நாய் வர, இப்போது மற்றது சென்றது.

     கௌதமுக்கு வியப்பான வியப்பு! அதன்பின் ஒருவேளை தான் நினைத்தது (நினைப்பது) தவறோ? யதார்த்தமாகக்கூட நடந்து இருக்கலாமே? எனத் தீவிரமாய் கண்காணித்துப் பார்த்ததில், தான் நினைத்தது உண்மைஎனப் புரிய, வியந்தே போனான். விழிகளில் நீர் நிரம்பித் தளும்பியது.

     ஐந்தறிவாவது, ஆறறிவாவது.... ஹூம்.... பாரபட்சமில்லாமல் ஒன்று வெளியே போக, மற்றொன்று என்ன அழகாய் பாதுகாப்பாக இருக்கிறது! அதுவும் இரண்டும் மாறி, மாறி வெளியே போய்வருகிறதுஉண்மையில் மனிதர்களுக்குள் இருக்கும் இந்த உணர்வுகள் காணாமல் போக, மிருகங்களிடம் குடிகொண்டுவிட்டதோ....!

     "தட்' என்ற சத்தத்துடன் கார் எதிலோ மோத, "அம்மா.....'' என்ற கூக்குரலும், "என்னங்க ஆச்சு..... பகவானே..... என்னப்பா இப்டி காரை ஓட்டித் தள்ளிட்டே... நான் என்ன பண்ணுவேன்! யாராவது வாங்களேன்....'' முதியவளின் கூக்குரல், அழுகை காதில் விழ,

     அதற்குள் காரை நிறுத்திய கௌதம், மனம் படபடக்க ஓடி வந்தான்.

     வயதான ஒரு முதியவர், இவன் காரில் பட்டு, கொஞ்சம் தள்ளி ப்ளாட்பாரம் அருகில் விழுந்திருந்தார். முதியவளான அவரின் மனைவி துடித்தாள், கணவரின் சிரசிலிருந்து கொட்டும் ரத்தத்தைப் பார்த்து.

     கௌதம் பதறியேபோனான். முதியவளைக் காரில் பின்சீட்டில் உட்கார வைத்து, அடிபட்டவரை அவள் மடியில் சாயவைத்து, இருவரிடமும் வாய் மன்னிப்புக் கேட்டபடியிருக்க, உள்ளம் மட்டும் அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் நாமத்தை ஜபித்தபடியிருந்தது.

     கார் நேராக ஒரு பெரிய ஹாஸ்பிடலின்முன் நின்றது. அவனைப் பார்த்ததுமே சிப்பந்திகள் ஓடிவந்தனர்முதியவரை ஸ்டிரெச்சரில் படுக்கவைத்து, தள்ளுவண்டியில் வேகமாக எமர்ஜென்சி வார்டுக்குள் நுழைந்தனர்உடனே சிகிச்சையும் ஆரம்பித்துவிட்டார் டாக்டர்.

     முதியவளைத் தன்னோடு அணைத்தபடி, அவளுக்குச் சமாதானம் கூறியபடியே அங்கிருந்த நாற்காலியில் உட்காரவைத்தான் கௌதம்.

     "அம்மா! ஏதாவது சாப்டீங்களாம்மா? கொண்டு வரவா?'' அவன் கேட்டதுமே, அவள் இரு கரங்களாலும் முகத்தைப் பொத்தியபடி சத்தம் இல்லாமல் குலுங்கிக் குலுங்கி அழுதாள். கௌதம் அரண்டு போனான்.

     "அம்மா.... அம்மா... ஏம்மா அழறீங்க... ப்ளீஸ்... தயவுசெஞ்சு அழாதீங்கம்மா. அம்மா, அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது. சீஃப் டாக்டரே அட்டெண்ட் பண்றதால, பயமேயில்லேம்மா. ரொம்ப கைராசி ஆனவர்ம்மா. ஒரு மணி நேரம் ஆகும்னு சொல்லியிருக்காங்கவாங்க, கேன்டீனுக்குப் போகலாம்... வாங்கம்மா... ப்ளீஸ்மா.... வாங்க...''.

     "இல்லேப்பா.... அழலே... இனிமே அழவேமாட்டேன். நீ... யாரோ? பேர் தெரியாது, பெத்தவங்களைத் தெரியாது. உனக்கும், எங்களப் பத்தி ஒண்ணும் தெரியாது.... ஆனா.... ஆனா.... உன் காருல அடிபட்டது மட்டுந்தானேப்பா நம்மள சந்திக்கவச்சது. நீ..... நீ.... எங்களை அப்பா, அம்மா....ன்னு...ம் ம்..... கூப்பிடறத என்னால..... என்னால....'' மேலே பேச முடியாமல் வயிறு குலுங்க அழுதவளைப் பார்த்து மிரண்டான் கௌதம்.

     "அம்மா.... ஸாரிம்மா.... நான் அப்டி கூப்பிடறது உங்களுக்கு மனசுக்கு வருத்தம்னா.... ஸாரி.... இனிமே கூப்பிடலேம்மா.... ஸாரி....மன்னிச்சிடுங்க....''.

     "இல்லேப்பா.... நான் அப்டி நினைக்கலே.... நீ இப்டி அன்பா,அம்மா, அப்பான்னு.... முகமறியாத எங்களைக் கூப்டே பாரு, மனசு சந்தோஷத்துலதான் பொங்கிப்போய் அழுகை வந்துடுத்துப்பா.... சரி,வா.... கேன்டீனுக்குப் போகலாம்.... அவருக்கு....?''

     "அம்மா.... டாக்டர் சொன்னபிறகு தரலாம்இப்ப நீங்க வாங்க அம்மா....'' சங்கடம் நீங்கியவனாக நிம்மதியுடன், அழைத்துப்போனான்.

     சாப்பிட்டபின் கொஞ்சம் தெம்பானாள் முதியவள்.

     "அம்மா! எங்கேயிருக்கீங்கம்மா? இங்கே.... எங்கே வந்தீங்க? அவருக்கு நல்லா ஆகிறவரை எங்க வீட்டுலேயேயிருங்க. யாருக்காவது ஃபோன் பண்ணனும்னாலும் சொல்லுங்க, தயங்காதீங்க.....சொல்லுங்கம்மா.....''.

     இத்தனை நேரம் சோகமாகயிருந்தவளின் முகத்தில் உணர்ச்சிகளின் மாற்றம் அப்பட்டமாய் தெரிந்தது. முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டவளின் கண்களில், சினமா? கோபமா? ஆற்றாமையா? எதுவென சொல்லமுடியாத, கலவையான உணர்வுகள் மாறி மாறித் தோன்றின.

     கேட்டது தப்போ எனத் தோன்றியது கௌதமுக்கு. வினாடிகளில் முகத்தை, அத்தனை உணர்வுகளிலிருந்தும் விடுவித்துக் கொண்டவள், இறுகிய முகத்துடன் கூறினாள், "நாங்கள் அனாதைகள்''.

     திடுக்கிட்டு, விதிர்த்தேபோனான் கௌதம்.

     "அம்மா!.... என்ன சொல்றீங்க?''

     "சார்.... நீங்க வந்து உங்கப்பாவைப் பார்க்கலாம். டாக்டர் கூப்பிடறார்... வாங்க... வாங்கம்மா....''.

     கௌதமின் சரீரம் முழுவதும் சிலிர்த்துப் புல்லரித்தது. கண்களின் விளிம்பில் நீர்மணிகள் வெளியே வருவதா, உள்ளே போவதா எனத் தயங்கிய வினாடியிலேயே, இமைகள் மூடி உள்ளிக்கிழுத்தன.

     "அம்மா, வாங்கம்மா.... வாங்க....'' அவர் தோள்களை அன்போடு அணைத்தபடி அழைத்துப்போனான்.

     முதியவர் கண்கள் மூடி, தலையில் கட்டுடன் படுத்திருந்தார். டாக்டர் இன்னும் அங்குதான் இருந்தார்.

     கௌதமனின் மனம் படபடத்தது. "அன்னையே சரணம்' மட்டும் இதுவரை நிற்காமல், சுழலும் "டேப்'பைப்போல் இதயம் என்னும் பெட்டகத்தில் சுழன்று, சுழன்று வந்தபடியிருந்தது.

     "அவருக்கு ஏதானுமா? பயமாயிருக்குப்பா.... எனக்கு....''.

     தளும்பும் விழிகளுடன் கேட்டவளை, அன்போடு தழுவி, சமாதானம் செய்தான் கௌதம்.

     "டாக்டர்... அவருக்கு.... அவருக்கு....'' மேலே பேச்சு வாராமல் திணறினாள் முதியவள்.

     "ஒண்ணுமில்லைம்மா. அடிபட்டதில் "பிளட்' கொஞ்சம் போனதால, அயர்ச்சியிருக்குநாங்க கொடுத்திருக்கிற டிரீட்மெண்ட்ல நிச்சயமா சீக்கிரமாவே குணமாயிடுவார்மா. ஸலைன்லயே மருந்துகளையும் கலந்திருக்கிறதால... பயமில்லே. டிரிப்ஸ் ஏறிட்டிருக்குமூணு மணி நேரத்துக்கு அவரை யாரும் தொந்திரவு பண்ண வேண்டாம்.உயிருக்கு அபாயமேயில்லைம்மா. வயசானதால, அடியைத் தாங்கிக்கிற சக்தியில்லே. டோண்ட் வொர்ரிவரேன் கௌதம்அவர் எழுந்தார்னா, ரொம்ப பேச்சுக் குடுக்க வேண்டாம்ஆகாரமும் நீங்க தர வேண்டாம்.  நர்ஸ் பார்த்துப்பாங்க. வரேம்பா... வரேம்மா.... கவலையேபடாதீங்க...''.

     டாக்டர் கூற, தளும்பும் கண்களுடன் நன்றி கூறினாள் முதியவள்.

     கௌதம், தன் பர்ஸைத் திறந்தான். உள்ளேயிருக்கும் அன்னை,ஸ்ரீ அரவிந்தரை தன் கண்களில் ஒற்றிக்கொண்டான்.

     "நன்றி அன்னையே, நன்றி அன்னையே, நன்றி அன்னையே'' என மனம் கசிந்து, கண்கள் மல்க, இதயபூர்வமாய் கூறினான். பர்ஸின் இன்னொரு பகுதியிலிருந்து ரூபாயை எடுத்து, பர்ஸில் அவர்களிருந்த இடத்தில் வைத்தான் காணிக்கையாக.

     "அன்னையே, என்னுடைய அஜாக்கிரதையால ஏற்பட்ட இந்த அசம்பாவிதத்துக்கு உங்கள் காலடியில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்கிறேன்என்னை மன்னித்து அருளியதற்கு நன்றி.   இனி, எந்தக் காரணம்கொண்டும் என் மனம் எந்த நேரத்திலும் அலைபாயாமல் இருக்க அருள்வாய் அம்மாவயதான இந்தத் தம்பதிகளுக்குக் கண்டிப்பாய் நான் உதவுவேன்உங்கள் அருள் இதில் எனக்குத் துணையாக வரவேண்டும்உங்களையே நம்பியுள்ள என்னை எப்போதும் நீங்கள்தான் வழிநடத்த வேண்டும். உங்களுடைய வழி நடத்தலே எனக்கு அங்கீகாரம்நானாக எதையும் செய்யக்கூடாதுசெய்யவிடாதீர்கள்தவறு செய்தால் காட்டிக்கொடுத்துவிடுங்கள். நான் மனிதப்பிறவிதானேஉங்கள் பிள்ளைதானேசில சமயத்தில் மனதுள் குமுறும் எண்ணங்களை அடக்க முடியாமல் தத்தளித்துத் தவித்துப்போகிறேனே....'' ஒரு குரல் அவனை உலுக்கியது.

     "ஸார்.... ஸார்.... உங்கப்பா கண் விழிச்சுட்டார். வந்து பாருங்க.ஆனா பேச வேண்டாம்எதுவும் சாப்பிடக் கொடுக்கவும் வேண்டாம்.  ப்ளீஸ்... வாங்கம்மா....''.

     முதியவளின் கரங்களை இதமாகப் பிடித்தபடி நடந்தாள் நர்ஸ். பின்தொடர்ந்தான் கௌதம்.

     முதியவர், மனைவியைப் பார்த்ததும் சிரிக்க முயன்று தோற்றார். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்ததுசட்டென கௌதம் அவர் கரங்களை அன்பாக வருடினான்.

     "அப்பா! ரொம்ப வலிக்கிறதாப்பா.... ஸாரிப்பா.... என்னாலதானே உங்களுக்கு இந்தக் கஷ்டம். மன்னிச்சுடுங்கப்பா. டாக்டர், பயமே இல்லைன்னு அம்மாகிட்டயும் சொல்லிட்டார்பாஇன்னிக்கே வீட்டுக்கு அனுப்பிச்சுடுவார்ஆனா, சாயந்திரத்துக்கு மேலே ஆயிடும். அம்மா, இங்கேயே இருக்கட்டும். நான், வீட்டுக்குப் போய் கொஞ்சம் ஏற்பாடுகள் பண்ணிட்டு வரேம்பா. தைர்யமாயிருங்க. நர்ஸ் பார்த்துப்பாங்க. அம்மா, வரேம்மா....''.

     கௌதம் பேசிவிட்டு, நர்ஸிடம் கூறிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டான்.

****

     தோட்டக்கார கந்தனைக் கூப்பிட்டான். வீட்டை முழுவதும் மீண்டும் அவனை "வேக்குவம்' கிளீனரால் சுத்தம் செய்யச் சொன்னான்அங்கிருந்த கட்டிலையும் சுத்தம் செய்து மெத்தையைத் தட்டிப்போட்டு, அட்டாச்சுடு பாத்ரூமை, சுத்தமாயிருந்தும், மீண்டும் சுத்தம் செய்து, அந்த அறையிலும் இருந்த அன்னை, ஸ்ரீ அரவிந்தரை வணங்கினான். ஊதுபத்தி ஏற்றி, மனம் கசிந்துருக பிரார்த்தித்தான்.

     "அன்னையே! எல்லாமிருந்தும் ஒன்றுமேயில்லாதவனாய் இருக்கிறேன். என் தவறுகள் என்னைத் தண்டித்துவிட்டது. அந்தத் தண்டனையை நான் இப்போதும் உங்கள்முன் ஒத்துக்கொண்டு, ஏற்றுக்கொண்டவனாயிருக்கிறேன்இப்போதும் நான் செய்த தவறு, ஒரு முதியவருக்கு என்னால் ஏற்பட்ட, என் கவனக்குறைவால் நடந்த உடல் உபாதையும், வலியும்,வேதனையும், மன்னித்துவிடுங்கள் அம்மா. என் கவனக்குறைவுக்காக எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். அவரை, சீக்கிரமாகக் குணமாக்கி விடுங்கள்நான் அவர்களை என் பெற்றோர் உருவத்தில்தான் பார்க்கிறேன். மன்னித்து, அருள வேண்டும் அன்னையே.... உங்கள் சரணமே எனக்குத் துணையம்மா.... அன்னையே சரணம், அன்னையே சரணம், அன்னையே சரணம்''.

     மூடிய கண்கள், அன்னையிடம் லயித்துப்போன மனம், வதனத்தில் அன்னையின் சரணம்எனத் தன்னிலை மறந்து, அன்னையிடமே லயித்திருந்தான்  கௌதம். எத்தனை நேரமோ தெரியவில்லை.  தானாகவே நிதரிசனத்திற்கு வந்தான். மளமளவென குளித்து முடித்து, மீண்டும் பிரார்த்தித்து, வெளியேறினான்.

     ஆஸ்பத்திரியில், முதியவர் இப்போது எழுந்து உட்கார்ந்திருந்தார்.  அவருக்கு நர்ஸ் ஏதோ ஆகாரம் தர, அதைச் சாப்பிட்டபடியிருந்தார்.  அருகில் அவரின் துணைவி.

    சத்தமிடாமல் டாக்டரிடம் சென்று பேசினான்.

     "கௌதம், இனி பயமேயில்லேப்பாவீட்டிற்குக் கூட்டிப்போகலாம்.  நாளைக்கு மறுநாள் வந்தால்போதும். கட்டை அவிழ்த்து பார்த்தபின் வேண்டுமானால் கட்டு போடலாம்இல்லே பிளாஸ்த்ரி போதும். ஆனால், அவர் பாத்ரூம் போகும்போது, கைப்பிடித்து அழைத்துப் போயே ஆக வேண்டும்மிகுந்த ரத்தம் போனதில் பலகீனமாக இருக்கிறார். கூடவே, அவரருகில் யாராவது எப்போதும் இருக்கணும் கௌதம்.... மத்தபடி, ஆகாரத்தில் எந்தவிதமான ரெஸ்டிரிக்ஷனும் கிடையாதுப்பா. டேக் கேர்''.

     "டாக்டர், எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணணுமே. அவங்க ரெண்டு பேருமே வயசானவங்க. எனக்கும் என் கம்பெனி வேலையிருக்கு.  அவங்களைப் பார்த்துக்க ஒரு நர்ஸை ஏற்பாடு செய்தால்.... ரொம்ப சௌகர்யமாயிருக்கும். முடியுமா?....''

     "நிச்சயமா.... மீனா..... நீ போக முடியுமாஇல்லே கிளாராவை அனுப்பட்டுமா?   டே அண்ட் நைட் இருக்கணும்பணம் பற்றி கவலைப் படாதே. முடியுமா, முடியாதாங்கறதை யோசிச்சுச் சொல்லு....''.

    மீனா ஐந்து நிமிடங்களுக்குள்ளேயே யோசித்து முடிவெடுத்தாள்.  தன் ஒப்புதலையும் கூறி, வீட்டிற்கும் ஃபோன் செய்து கூறிவிட்டாள்.

    அவர்களிருவரையும் தன் வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டான் கௌதம்.

    வீட்டிற்குள் நுழையும்போதே அன்னை, ஸ்ரீ அரவிந்தரைப் பெரிய மனித உருவ நிலையில் பார்த்ததில், அந்த முதியவளுக்குள் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டதோ....

     நிதானமாய் நடந்து, அவர்கள் எதிரில் நின்றாள். கண்ணீர் தளும்பியது. அவளுள் மட்டும் நிம்மதியும், தைர்யமும் போட்டி போட்டுக் கொண்டு நுழைந்ததுவதனத்தில் அவளையுமறியாமலேயே  சிரிப்பு உற்பத்தியானது; பரவசம் ஏற்பட்டது.

     அவர்களிருவரின் கீழே அழகான இரு பாதங்கள், செக்கச் சிவந்த புடவையும், பார்டருமாய் இருந்தது.   பாதங்களினருகில் சென்றாள். தொட வேண்டும் போலிருந்தது. தொடலாமா, கூடாதாஎன்கிற குட்டி சர்ச்சை ஒரு நிமிடத்திற்கும் குறைவாக அவளுள் எழுந்தது. அதையும் மீறிய உள்ளுணர்வு அவளைத் தொடத் தூண்ட, தைர்யமாகப் பாதங்களைப் பரவசத்தோடு நடுங்கும் கரங்களால் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டாள்மீண்டும், மீண்டும் அந்தப் பாதங்களைத் தொடவேண்டும், வருடவேண்டும், தன் சிரத்தை பாதங்களின் மேல் படரவிட வேண்டும் என்ற ஓர் அவா தீவிரமாக ஏற்பட, சட்டெனத் தன் சிரத்தைப் பாதங்களின் மேல் வெகு நிதானமாக, பயமா?மரியாதையா? என்று புரியாத நிலையில் வைத்தாள். அவ்வளவுதான் தெரியும் அந்த முதியவளுக்கு.

     வெகு சில வினாடிகளிலேயே.... அம்மா.... அம்மா..... அம்மா....எனக் கதறியபடியே கேவிக் கேவி அழுதாள். அந்த அழுகையில் இப்போது துன்பமில்லை, துயரமில்லை; ஓர் இனம்புரியாத நெகிழ்ச்சியும், இதமும் தெரிந்தது. சரீரம் பூராவும் சிர்த்து நடுங்கியதுமனதினுள் ஒரு தைர்யம் தானாக வந்து சிம்மாசனமிட்டு அமர்ந்ததுஅப்படியே சரிந்தவளைத் தாங்கிப் பிடித்தது யார்எனத் தெரியாத நிலையிலேயே சரிந்தாள். இமைகள் மூடிய நிலையில், அதரத்திலிருந்து மிக, மிக மெல்லிய குரல், "அம்மா, அம்மா, அம்மா'' என்ற வார்த்தையைத்தவிர வேறெதுவுமில்லை. சரீரம் முழுவதும் மெல்லிய நடுக்கம்.

    தாங்கிப் பிடித்தவன் கௌதம். அவன் சரீரமும் சிலிர்த்தது. அப்படியே கீழே தன் மடியில் படுக்கவிட்டு, தானும் கண்களை மூடி பிரார்த்திக்க ஆரம்பித்தான் கௌதம்.

     என்றுமேயில்லாத வினோத உணர்வு அவன் மேனி முழுவதும் விளையாடியதுபுளகித்தேபோனான். இமைகளைத் திறக்க மறுத்தான்ஆமாம், இமைகளைத் திறந்தால், அந்த அனாயாசமான, அதிசயமான,அதிப்பிரியமான உணர்வு அவனை விட்டு விலகிவிட்டால்..... ம்....ஹூம்.... இன்னும் வேண்டும், வேண்டும்என அந்த உணர்வை மனமார, நெஞ்சார அனுபவித்தான்.   மூடிய இமைகளிலிருந்து கண்ணீர்ப் பூக்கள் சின்னஞ்சிறிய ஸ்படிகங்களாக அவன் கன்னங்களில் உருண்டனம்ஹூம்..... எதுவுமே அவர்களிருவருக்கும் தெரியவில்லை; ஆழ்ந்து போயிருந்தார்கள், வெளியுலகச் சத்தங்களோ, சலனமோ அவர்களை அண்ட மறுத்ததால்.

     பெரியவருக்கு ஆகாரம் ஏதாவது தர வேண்டியிருந்தது, காரணம் மருந்து கொடுக்க வேண்டும்மீனா அவர்களைத் தேடி வந்தபோது கௌதமும், பெரியவரின் மனைவியும் அப்படியொரு ஆழ்ந்த தியானத்திலிருந்ததைப் பார்த்து, அதைத் தொந்தரவு செய்ய வேண்டாமென சமையலறைக்குள் சென்றாள்குளிர்ப்பெட்டியில் இருந்த ப்ரெட்டையும், பால் பேக்கட்டையும் எடுத்து, பாலைக் காய்ச்சி ஆற்றி, ஒரு தம்ளரில் எடுத்துக்கொண்டு போனாள். பெரியவருக்குக் கொடுத்து, மருந்தும் சாப்பிடவைத்தாள்.

     இத்தனையும் நடந்தது தெரியாமல் இன்னும் கலையாமல் இருந்தார்கள் இருவரும்.

     திடீரென ஏதோ சத்தம். என்ன அது? யூகிக்கும்முன், தியானம் கலைந்து எழுந்தார்கள். இருவரின் மனதிலும் ஒரு நிம்மதி, நிறைவு, காற்றில் பறப்பதுபோன்று லேசானது சரீரம். ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தார்கள் இருவருமே.

     அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் கண்கள், இவர்கள் எப்படி, எங்கிருந்து, தலைசாய்த்துப் பார்த்தாலும் அவர்களிருவரின் பார்வையைத் தொடர்ந்து தீர்க்கமாகப் பார்த்ததில், வீழ்ந்து வணங்கி சந்தோஷித்தார்கள். அப்போதுதான் நிதரிசனத்திற்கே வந்தார்கள் இருவரும்.

     அவருக்கு மருந்து, மாத்திரை தந்திருப்பாள். ஆகாரம், ம்..... தந்திருப்பாள்.... ஆமாம், அந்த வேளையில் நான் இவர்களிருவரையும் தானே என் மனதில் நிறைத்தேன்நிச்சயமாக, இவர்களிருவரும் என் கணவரின் வயிற்றையும் நிரப்பியிருப்பார்கள்அதனால் எனக்கு எந்த சஞ்சலமுமில்லை. 

     வீழ்ந்து வணங்கி மனநிறைவோடு எழுந்தாள் அந்த முதியவள்.

****

     கணவரருகில் சென்று நின்றவளைப் பார்த்து, அவரும், நர்சும் வியந்தேபோனார்கள்.

     "பாகீ..... பாகீ.... எப்டி இவ்வளவு சந்தோஷமா, பிரகாசமா, தேஜஸா இருக்கே? உனக்குள்ளே என்னவோ பூந்துனுடுத்துடி..... புதுசா.... இப்பத்தான் உன்னை பார்க்கிறேன்.... ம்.... ஹூம்..... நம்பவே.... முடியலே..... என்ன நடந்தது பாகீ?..... எனக்குச் சொல்லத் தெரியலே...... ஆனா, இப்ப நீ பழைய பாகீ இல்லே.... இல்லே.... ஆமாம்.... நீ, இப்பத்தான் புதூ.....சா வந்த மாதிரி தோண்றது.... என்ன மாயம்டி நடந்தது? தாங்கலே...... நம்ப முடியலே...... ஆமாம்.... பாகீ..... இப்ப...... எனக்கும்..... எனக்கும் உள்ளுக்குள்ளே..... ஒரு தைர்யம்.... ஆமாம்மா..... தைர்யம் பூந்துனுடுத்து..... ஆமாம்..... வாயேன்.... கிட்ட வா...... உன்னோட கையைக் காமிம்மா, நான் கண்ணுல ஒத்திக்கணும், வாம்மா''.

     "என்ன நீங்க.... என்னென்னமோ பேசறேளே..... எனக்கு பயமா இருக்கே..... மீனா.... நீ பாரேன்..... இல்லேன்னா டாக்டருக்குப் போன் போடலாமா?.... பாரும்மா.... மீனா.....'' கலவரம் தெரிந்தது முதியவளின் முகத்தில்.

     மீனா அவளின் அருகில் வந்தாள். ஆதரவோடு அணைத்து நாற்காலியில் உட்காரவைத்தாள்.

     "அம்மா.... அவர் சொல்றதுல பொய்யேயில்லே. அத்தனையும் நிஜம்மா. அவருக்கு ஒண்ணும் ஆகலேஅவர் உண்மையைத்தாம்மா சொன்னார். ஆமாம்மா.... உங்க முகத்துல அதென்ன அப்டியொரு பிரகாசம் களைகட்டியிருக்கு? நம்பவே முடியலேம்மா! ஆஸ்பத்திரியில இருந்தவங்களா நீங்கன்னு தோணுதும்மாஆஸ்பத்திரியில நீங்க வாடின முகத்தோட, பயம் உங்க முகத்துல அப்பியிருந்ததும்மாஆனா,இப்ப.... இப்ப.... நிஜமாத்தாம்மா சொல்றேன். பெரியவர் சொல்றதுல தப்பேயில்லே. அவ்வளவு.... அவ்வளவு.....'' மேலே பேச முடியாமல் திணறியவளின் கண்களில் நீர் தெறித்ததுஉணர்ச்சிவசப்பட்டு,முதியவளின் கரங்களைப் பற்றிக் கண்களில் ஒற்றிக்கொண்டாள்.  முதியவளின் கரங்கள் நனைந்தது.

     "எனக்கும், எனக்கும்தான் ஒண்ணுமே புரியலே. நீங்க ரெண்டு பேரும் சொன்னதுபோல எனக்குள்ளேயும் ஏதோ ஒண்ணு நடந்து இருக்காப்பலயிருக்குதான்என் மனசும் இப்ப எந்தவிதமான பயமோ, பதட்டமோயில்லாம அமைதியாயிருக்குங்கறதை உணர்றேன்நிச்சயமா நான் எதுவுமே தெரியாம, வணங்கிய தெய்வங்கள்தான் எனக்குள்ள இத்தனை மாற்றத்தைத் தந்திருக்கா. நிச்சயமா சொல்லுவேன், உங்களுக்கு ஒண்ணுமே ஆகாதுன்னா. என்னமோ சின்ன அடிதானே, சரியாயிடும். ஆகாரம் எடுத்துண்டேளா? மாத்திரை சாப்பிட்டேளா?''

     "ஆச்சு, நீ சாப்டியாம்மா? இந்த மீனாப்பொண்ணும் ஒண்ணும் சாப்பிடலே, பாவம்மா. நான் பிரெட்டும், பாலும் சாப்ட்டு, மருந்தும் எடுத்துண்டாச்சு. வலியேயில்லேம்மாமீனாப்பொண்ணு என்னை, பெத்த தகப்பன்போல பார்த்துக்கறாபோங்கோ, போய் சாப்பிடுங்கோ....''.

     "அப்பா.... எப்டியிருக்கீங்க? வலிபரவாயில்லையா?'' "மீனா கொடுக்க வேண்டிய மருந்தெல்லாம் கொடுத்துட்டியா?''

     "பிரெட்டும், பாலும் கொடுத்து, மருந்தும் தந்தாச்சு. ஒரு மணி நேரம் கழிச்சு சாப்பாடு தந்தா போதும் சார். டோண்ட் வொர்ரி. ஹீ ஈஸ் ஆல்ரைட் நௌ சார்''.

     "மீனா, நீ சாப்டியாம்மா. வா, அம்மாவும் இன்னும் சாப்பிடலே. அப்பா, நாங்க சாப்டுட்டு, கொஞ்ச நேரம் கழிச்சு ஆகாரம் தரலாமா? இல்லே இப்ப தரவா'' கௌதம் கேட்க, அவரும் பிறகு சாப்பிடுவதாகக் கூறியதால், மூவரும் டைனிங் டேபிளில் அமர்ந்தார்கள்டிபன் கேரியரில் ஹோட்டலிலிருந்து வரவழைத்த சாப்பாடு இருந்ததுதட்டு வைத்து பரிமாறிக்கொண்டார்கள்.

     "ஏம்பா, வீட்டுல ஊருக்குப் போயிருக்காங்களா? ஓட்டல்லருந்து சாப்பாடு வரவழைச்சிருக்கே....''.

     "அம்மா! சாப்பிடுங்கம்மாமத்ததையெல்லாம் அப்புறமா பேசிக்கலாம், சாப்பிடுங்க. அம்மா! உங்க பேரும், அப்பா பேரும் என்னம்மா? ஆஸ்பிடலுக்குச் சொல்லணும்மா''.

     "அவர் பேரு நாகராஜன். என் பேரு பாகீரதிப்பா...''. மேலே எதுவும் கூறவில்லை. கௌதமுக்கும் கேட்கத் தயக்கமாயிருந்தது.

     சாப்பாடு ஆனபின் எல்லாவற்றையும் சிறிய பாத்திரங்களில் போட்டு, டிபன் கேரியரை நன்கு அலம்பிக் கவிழ்த்தபின், டேபிளையும் சுத்தம் பண்ணச் சென்றபோது, சுத்தப்படுத்தப்பட்டிருந்தது.

     "அம்மா! நீங்க கொஞ்ச நாள் ரெஸ்டாயிருங்க. அப்பாவை மட்டும் பார்த்துக்குங்கம்மா. அப்புறமா மிச்ச வேலை செய்யலாம்மா''.

     "இல்லேப்பா கௌதம். நான் அப்பாவையும் பார்த்துண்டு, உங்க வீட்டம்மா வர்ர வரை அந்த வேலைகளையும் செய்யறேன். அதுக்கப்புறமா..... அதுக்கப்புறமா....'' மேலே பேச முடியாமல் திணறிப்போனாள் பாகீரதி.

     "அம்மா! மேலே ஒண்ணும் பேச வேண்டாம்மா. உங்க இடம் இங்கேதான்நான், நீங்க பெறாத பிள்ளைஎனக்கு அப்பா, அம்மா எல்லாமே நீங்கதான். என்னைப் பெத்தவங்க (தயங்கினான்), எனக்குக் கும்பிடற தெய்வமாயிருக்கிற அப்பாவும், அம்மாவும், அதோ அவங்கதான்அவங்க.... அவங்களேதான்'' மேலே பேச்சே வாராமல் உணர்ச்சிக்குவியல் ஸ்ரீ அரவிந்தர், அன்னையிடம் சென்று நின்ற கௌதமின் மனம் நெகிழ்ந்து, உருகி, கண் இமைகள் மூட மெய் மறந்தேபோனான்.

     "இவங்க... இவங்கதான் உங்கப்பாம்மாவா? ம்.... என்ன தேஜஸ், என்ன கருணை..... என் மனசுக்குள்ளே பூந்து என்னென்னமோ.... ஆமாம்பா.... சொல்லவே முடியலே.... ஆனா, அனுபவிக்கிறேம்பா.... ரொம்ப சந்தோஷம்இப்பேர்ப்பட்ட தெய்வ அமைப்போட இருக்கிறவங்களுக்குப் பொறந்த நீ மட்டும் எப்டிப்பா.... வேறே.... மாதிரி நடக்க முடியும்? ரொம்ப சந்தோஷம்பா.... பெத்தவங்களை தெய்வமா நினைச்சு வணங்கற உனக்கு ஒரு குறையும் வாராதுப்பா.... வரவே....வாராது.....'' பாகீரதி கூறி முடிப்பதற்குள் கௌதம் அவள் கால்களில் வீழ்ந்து கதறி அழ ஆரம்பித்துவிட்டான்.

     திகைத்தேபோனார்கள் மூவரும். அதிர்ந்தாள் பாகீரதி. ஏதோ தவறாகப் பேசிவிட்டோம்என்பது மட்டும் புரிந்தேபோனதுஎது? புரியவில்லை, தெரியவில்லை. தெளிவில்லாத மனதை அடக்கியபடி, கௌதமைத் தன் கரங்களால் பிடித்து எழுப்பினாள். குழந்தையாய் அவனைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டாள். முதுகை ஆதரவாய் தடவிக்கொடுத்தாள்.

     "அழாதேப்பா.... ம்... ஹூம்... அழவே கூடாது. இந்த வயசுல நீ தைர்யமாயிருக்கணுமே தவிர அழலாமோப்பா.... அழக்கூடாது கண்ணாஅம்மா சொல்றேனோன்னோ.... எழுந்திரு... கண்ணைத் தொடச்சுக்கோஅப்பாவுக்கும், அம்மாவுக்கும் வயசாயிடுத்து, பகவான் கூப்டுனுட்டார்என்ன பண்றது, சொல்லுஇன்னும் சின்னக் குழந்தையாட்டமா.... எழுந்திருப்பா கௌதம்.... எழுந்திரு....''.

பாகீரதி மேலே பேசும்முன், "அம்மா! அம்மா! என்னோட அப்பா, அம்மாவை நானே சாகடிச்சுட்டேம்மா.... சாகடிச்சுட்டேன். இவா....இவா.... ரெண்டு பேருமே, மிருகமாயிருந்த என்னை மனுஷனா மாத்தினவாம்மாஅதுக்குள்ளே என்னென்னமோ நடந்துடுத்துஇப்ப...நான் உணர்ந்துனுட்டேன்... ஆனா, நடந்ததை எப்படி மாத்த முடியும்?போன உயிரைக் கொண்டுவர முடியுமா? அதுதான் பிராயச்சித்தம் தேடறேன்ஆமாம்மா.... இவா ரெண்டு பேரும் உலகத்துக்கே தாய்,தந்தையா இருக்கிறவாம்மா. ஆமாம்மா...''.

     "என்ன சொல்றேப்பா கௌதம்? ஒண்ணுமே புரியலையே. ஆனா....ஆனா.... எனக்குள்ள கொஞ்சம் சந்தேகமாயிருந்தது. அவர் சன்னியாசி போல இருக்கார். அவங்களும்... என்னமோ... சரியா புரியலேப்பா''.

     "அம்மா, அவங்க ரெண்டு பேரும் கணவன், மனைவி இல்லே.அதை மொதல்ல தெரிஞ்சுக்குங்கஎத்தனையோ பேர் தவறா நினைச்சுட்டுப் பேசறாங்கஅம்மா! அவங்க வெளிநாட்டு, "மிரா' என்கிற பிரெஞ்சு பெண்மணிஅவர், ஸ்ரீ அரவிந்தர் என்கிற மகான்.  நமக்கெல்லாம் பகவான்மாஅவர் வங்காளத்துக்காரர்ஏழு வயசுல, அவங்க அப்பா வெளிநாட்டுக்குப் படிக்க அனுப்பிச்சார். நல்லா படிச்சவர்தம் தாய்நாட்டுச் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டு, சிறைத் தண்டனை அனுபவித்தவர்அவர் சுதந்திரப் போராட்ட வீரர். பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த பாண்டிச்சேரியில் வந்து தங்கினார். அங்கேயே ஆன்மீகத் துறையில் ஈடுபட்டு, மகான் ஆனார். ஆன்மீகத்தை நாடி வந்த (அன்னை) மிராவும் இவருடைய ஆன்மீகம் மனதை ஊடுருவ, பாண்டியிலேயே தங்கி, எல்லோருக்கும் "அன்னை'யானார்.  ஸ்ரீ அரவிந்தர் "பகவான்' ஆனார். அம்மா! நிறைய புத்தகங்கள் இவங்களைப் புரிஞ்சுக்கும்படியாயிருக்குஅவங்க கோட்பாடுகளையும் தெரிஞ்சுக்கலாம். முடிஞ்சவரை படியுங்கம்மா. இதோ... இந்த ஷெல்புல இருக்கிறது எல்லாமே.... அவங்களைப் பத்தின புத்தகங்கள்தான்.  இதுக்கு மேலே எனக்கு அவ்வளவா சொல்லத் தெரியலே. ஆனா, மனசு பூரா.... அவங்கதாம்மாயிருக்காங்கநான் செய்யக்கூடாத தவற்றை செஞ்சுட்டு, தினம் தினம் இவங்ககிட்ட மன்னிப்புக் கேட்கிறேம்மா..... அம்மா, நீங்களும், அப்பாவும் எங்கேயும் போக வேண்டாம்மா. என் கூடவேயிருந்துடுங்க. எனக்கும் யாருமில்லே. என் கூடவேயிருங்கம்மா... சரியாம்மா... சரின்னு சொல்லுங்களேன்....சொல்லுங்கம்மா....'' கௌதமின் வேண்டுகோள் அவன் இதயத்தில் இருந்து களங்கமில்லாமல் வருவது தெரிந்தது, புரிந்தது.

     பேச்சு எழாமல், தலையையசைத்து சம்மதம் தெரிவித்த பாகீரதியின் கண்கள் நன்றியுடன் ஸ்ரீ அரவிந்தரையும், அன்னையையும் பார்த்தன.

****

     நாட்கள் கடந்தன. நாகராஜன் உடல்நலம் நன்றாகத் தேறியது. அடிபட்ட இடம் தெரியாமல் வெகுவேகமாக சரியாகியதுமீனாவும், அவர்களிருவரையும் வணங்கி, கௌதமிடம் கூறிவிட்டு, மீண்டும் ஆஸ்பிடலுக்குச் சென்றுவிட்டாள்.

    பாகீரதியும், நாகராஜனும் தன்னுடனேயேயிருக்க வேண்டுமென்ற கோரிக்கையை கௌதம் மனமுருகிக் கேட்டதில், இருவரும் ஒத்துக் கொண்டார்கள். அவர்களுக்கும் போக்கிடம் இல்லையே. 

    ஆனால், பாகீரதி ஒரே பேச்சில் சொல்லிவிட்டாள்.

     "கௌதம், இனிமே இந்த ஓட்டல் சாப்பாடு வேண்டாம்பா. வீட்டுல வேலைக்காரியிருக்கா, தோட்டக்காரன் இருக்கான், சமையல் நான் செய்யறேன்பாகௌதம், காய்கறி வாங்கிவந்து சமைக்கக்கூடிய அளவுக்கு எனக்குத் தெம்பிருக்கு. இதை மட்டும் நீ "சரி'ன்னு சொன்னா போதும், எங்களுக்கும் சந்தோஷமாயிருக்கும். எங்க மனசுலயும் தாழ்வு மனப்பான்மையிருக்காது, சரியாப்பா....''.

     வினாடியும் தாமதியாமல் சந்தோஷத்தோடு "சரி' என ஆமோதித்த கௌதமை நன்றியோடு பார்த்தார்கள் நாகராஜனும்,பாகீரதியும்.

     இத்தனை நல்லவனாகயிருக்கும் இவனா தன் பெற்றோர்களை வருத்தினான்? நம்ப முடியலையே.... சரி.... எதுவானாலும் என்ன? நாம் எதையும் கேட்கக்கூடாதுஒவ்வொருத்தரின் அந்தரங்கத்திலும் எத்தனையோ மேடைகள்அந்த மேடைகளில் எத்தனையோ காட்சிகள். அவையெல்லாம் வெளியுலகத்திற்குப் போட்டுக்காட்ட முடியாத நாடகங்கள். அவைகள் அரங்கத்திற்கும் வாராதுஅந்தரங்கத்திற்கே உரியதுஉள்ளே எந்த அனுமதியுமில்லாமல் நுழைந்து பார்க்கக் கூடாது. அது மிகப்பெரிய தவறுஆனால், கௌதமின் மனதிற்குள் இருக்கும் சோகங்களைச் சமனப்படுத்தியவர்கள் இவர்கள், தேவதூதர்கள். மனித உருவில், மனிதர்களுக்காகவே.... அவர்களின் சங்கடங்களைத் தீர்க்க வந்தவர்கள்அதற்கான வழிமுறைகளைச் சொல்ல வந்தவர்கள்.  இந்தப் பூவுலகில் அவதரித்தவர்கள்இவர்களை நாம் விடக்கூடாது.  படரும் கொடிகளைப்போல் இவர்களைப் பற்றிக்கொள்ள வேண்டும்கொழுகொம்பாகப் பற்றிக்கொண்டு, நம் இச்சையின்றி, அவர்கள் இச்சைக்குப் பணிந்து, அவர்கள் வழிநடத்த, அந்த வழியில் நாம் செல்ல வேண்டும்இதுதான் இனி நாம் செய்ய வேண்டியது.....

     "அம்மா... என்னம்மா.... ஓரேயடியா மௌனமாயிட்டீங்க.... ஏதாவது சொல்லணுமா? இல்லே கேட்கணுமா? சொல்லுங்கம்மா....'' கௌதம் கேட்கவும், பாகீரதி தலையசைத்தாள்.

     "கௌதம், எப்பேர்ப்பட்ட இடத்துல நாங்க ரெண்டு பேரும் வந்து சேர்ந்திருக்கோம்னு நினைச்சு, நினைச்சு மனசுக்குள்ளேயே பொங்கிப்போறேம்பா. எத்தனையோ தெய்வங்களைக் கதறிக் கதறிக் கூப்பிட்டோம். ம்... ஹூம்... யார் காதிலும் விழுந்ததாத் தெரியலே.  போக இடமும் தெரியலே, வழியும் புரியலே.... அதனால சோகத்தோட வரப்பதான் உன் காருல மோதினதுஉன்னோட அறிமுகம் ஆனதே ஒரு சின்ன விபத்துலதான்னாலும், எவ்வளவு பெரிய பாக்கியத்தை தெய்வமாயிருக்கிற ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் செஞ்சிருக்கா.  அவங்க எங்களை ஆதரிக்கத்தான் இந்த விபத்து, கௌதம். அதை நினைச்சு, நினைச்சுத்தான் பிரமிச்சுப்போறேன். வேறே ஒண்ணுமில்லேப்பா''.

     "ஆமாம்மா, இந்த கலிகாலத்துல எத்தனையோ தவறான வழிகள் மக்களுக்கு, அதாவது என்னைப்போல எத்தனையோ பேருக்கு நிறைய சந்தர்ப்பங்களைத் தருதும்மாஅந்தக் களைகளை இந்த உலகத்துல இருக்கிற மனிதப்பயிரிலிருந்து களைய வந்திருக்கிறவங்கதெய்வங்கம்மா இவங்க. "சரணாகதி'ன்னு அவங்க கால்கள்ள வீழ்ந்து நாம் கதறிக் கரைஞ்சாலே போதும்மா, பெத்த குழந்தை கீழே விழுந்து அடிபட்டா பதறி ஓடி வரத் தாயா.... பறந்தோடி வருவாங்கம்மாஉதாரணத்துக்கு, உங்க முன்னே நிற்கிற நானேதாம்மா; கொடுமைக்காரனா, பாவியாயிருந்த என்னை மனுஷனா மாத்தினது இவங்களே தான்எக்காரணம் கொண்டும் இவங்களை மட்டும் விடவேமாட்டேன்... விடவேமாட்டேன்அம்மா... இவங்க நிதரிசனமான தெய்வங்கள். அதுக்கு உதாரணமும் நானேதாம்மாஆமாம்மா, எனக்குத் தந்தையும், தாயாகவும் என்னோட ஒவ்வொரு நிமிஷத்துலேயும் வழிநடத்தறாங்கஅதனாலதான் உங்களை எனக்குக் காட்டித் தந்திருக்காங்கஇப்ப, இனிமே நீங்கதானேம்மா எனக்கு அப்பாவும், அம்மாவும். உங்களை இனிமே விட்டுப் பிரியவேமாட்டேம்மா.... மாட்டேன்கண்கண்ட தெய்வங்களாயிருக்கிற இவங்க, என் கண்களுக்குக் காட்டித் தந்தவங்க நீங்க. நான் அனாதைங்கற உணர்வே மனசுல துளிக்கூட இல்லாம எப்படி தீர்த்துட்டாங்க பார்த்தீங்களா.... அதுதாம்மா பகவானும், அன்னையும் செய்யும் அற்புதம்....''.

"சரிப்பா, ரொம்ப மனசுக்கு இதமாவும், நிறைஞ்சும் இருக்கு.இவங்களுக்குன்னு கோவில்போல ஏதாவது இருக்கா கௌதம்? இல்லே.... அவங்களோட.....'' மேலே என்ன கேட்பதுஎனத் தெரியாமல் நிறுத்தினாள் பேச்சை.

"கோவில்போல அபிஷேக ஆராதனையெல்லாமில்லேம்மா. தியான மையங்கள் இருக்கும்மாஅங்கே கூட்டுப் பிரார்த்தனையும், அன்னை, ஸ்ரீ அரவிந்தர் பற்றிய ஸ்பீச்சும் இருக்கும்மா. அப்பாவுக்குத் தெம்பு வரட்டும். நான் உங்க ரெண்டு பேரையுமே கூட்டிட்டுப் போறேன்மாஅந்த அமைதியும், சூழ்நிலையுமே நமக்குள்ளே என்னென்னமோ ஜாலங்கள் செய்யும்மா. நான் ஒண்ணும் சொல்லக்கூடாதுநீங்களே உணருவீங்கம்மா. சரி, அப்பாவுக்கு முடியும்னா நாளைக்குப் போயிட்டு வரலாம். அதுக்கப்புறமா வர ஒண்ணாந்தேதிக்கு மறுபடியும் போகலாம்.சாயந்திரம் "ஸ்பீச்சும்' இருக்கும்கேட்டுட்டு வரலாம், சரியாம்மா...''.

     வார்த்தைக்கு வார்த்தை "அம்மா, அம்மா' என்று அழைக்கும் கௌதமின் மனதிற்குள் புதைந்துகிடக்கும் அந்த துக்கத்தை, துயரத்தைக் கண்டிப்பாய் வெளிக்கொணர வேண்டும்அதிருந்து அவனை மீட்டு, நல்லபடி வாழவைக்க வேண்டும்இதற்கு அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் நமக்குத் துணையாயிருக்க இன்றிலிருந்து பிரார்த்திக்க வேண்டும்.

இதயத்தினுள் இந்தக் கோரிக்கையை உறுதிசெய்துகொண்டாள் பாகீரதி.

தொடரும்....

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

முன்னேற்றத்தின் தன்மையை அறியாதவன் பிறர்

முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படுவான்.

ஒருவருக்கு முன்னேற்றம் வந்தால், அது அனைவருக்கும்

முன்னேற்றம் வருவதன் அறிகுறி. முன்னேற்றத்திற்கே வழி

இல்லை என்ற நிலையில் ஒருவருக்கும் அது கிடைக்காது.

எவருடைய முன்னேற்றமும், நமக்கு பேருதவி செய்யும்.


 


 


 


 


 



book | by Dr. Radut