Skip to Content

10. சாவித்ரி

P. 24. His thought stretches into infinitude

எண்ணங்கள் அனந்தமாக நீண்டன  

எண்ணம் மனதில் உதிப்பதாக நாம் நினைக்கின்றோம். அவை உடலில் உற்பத்தியாகின்றன என்று பகவான் கூறுகிறார். மனத்தில் எண்ணங்களைக் கவனித்தால் அவை ஓடியபடியிருக்கும். அவை அர்த்தமற்றவை. அவற்றை ஒதுக்கிப் பார்த்தால் நம் அபிப்பிராயங்களைக் காணலாம். அவற்றிற்கு ஒரு structure கட்டுக் கோப்பு உண்டு. நம் அனுபவம் ஒரு அபிப்பிராயமாகியிருக்கும். ஆராய்ச்சியால் அக்கட்டுக்கோப்பைக் கரைக்கலாம், உடைக்கலாம். அப்படி உடைந்தால் மௌனம் குடி கொள்ளும். அதன்பின் சிந்திக்கும் திறன் உண்டு. இது வலுவானது. இதைச் சுலபத்தில் கரைக்க முடியாது. முடிந்தால் மௌனம் வலுப் பெறும். இதன் பின்னணியில் மனம் உண்டு. சிந்திக்கும் திறன் மனத்தின் பல திறமைகளில் ஒன்று. நினைவு, சிந்தனை, பாகுபாடு, முடிவு, உஷார், தீர்ப்பு, நியாயம் என்ற திறன்களில் சிந்திக்கும் திறன் ஒன்று. சிந்திக்கும் திறனை கரைக்கலாம், உடைக்கலாம், முடிந்தால் சரண் செய்யலாம். அதேபோல் மனத்தையே கரைக்க முடியும். இது பெரிய யோக சித்தி. ராஜயோக சித்தி, அது நடந்தால்,

நாம் அகண்ட மௌனம் பூணுவோம்.

மனத்தின் அடியில் உணர்வும், உணர்வின் அடிப்படையாகச் செயலும், செயலுக்கு உறைவிடமாக உடலும் உள்ளன. இத்தொடர் நீண்டது. அனந்தமானது, முடிவற்றது. எண்ணத்திற்குரிய அஸ்திவாரம் இவை. மேலுலகில் ஜோதியுண்டு. சப்தம் பிறந்த இடம் அது. சப்தம் பிறப்பதற்கு முன் அது ஜோதியாக இருந்தது. சப்தத்தின் பிறப்பிடம் ஓம். சப்தம் என்பதைச் சப்த பிரம்மம் எனவும், சப்தத்திலிருந்தே சிருஷ்டி எழுந்தது எனவும் தத்துவம் கூறும். கீழிருந்து வரும் எண்ணங்கள் நினைவு,உணர்வு, செயலைக் குறிப்பன. மேலிருந்து வரும் ஜோதி சிருஷ்டியின் அற்புதங்களைக் குறிக்கும்.

இடையில் மனம் உள்ளது. ஞானத்தால் மனம் உயரவல்லது. உணர்வால் மனம் சிந்திக்க வல்லது. ஓம் பிறந்ததிலிருந்து உடல்வரை எண்ணமும், சொல்லும் பரவும் எனில்

எண்ணங்கள் முடிவற்றவை

என அறிகிறோம். பகவான் ஸ்ரீ அரவிந்தர் Thought seeks the Absolute. எண்ணம் பிரம்மத்தை நாடுகிறது என்கிறார். நாம் பெற்ற அறிவை intellect என்கிறோம். அது ஜடமான மனம், அஞ்ஞானத்திற்குரியது. அறியாமை மனம். Intellect seeks oneness எனவும் கூறுகிறார். மனிதனுடைய அறிவு ஒருமைப்பாட்டை நாடுகிறது. ஆனால் அவன் சிந்தனை, எண்ணம் பிரம்மத்தை நாடுகிறது என்பது ஸ்ரீ அரவிந்தம். சிந்தனை என்ற சொல் சித் என்பதிலிருந்து வந்தது. அதுவே அதன் பிறப்பிடம்.

********

ஸ்ரீ அரவிந்த சுடர்

செல்வம், அரசியல், ஸ்தாபனம் ஆகியவற்றில் இரண்டாம் தலைமுறை, அளவு கடந்த சௌகரியத்தைஅனுபவிப்பது இயற்கை. அளவு கடந்த உயர்ந்த கட்டுப்பாட்டைத் தானே ஏற்பது முறை.

இரண்டாம் தலைமுறை முதல் தலைமுறையாகச்செயல்படவேண்டும்.



book | by Dr. Radut