Skip to Content

11. லைப் டிவைன் - கருத்து

நாத்திகனின் அத்துவைதம் பிரச்சினையைத் தீர்க்காது

நமக்கு உடல் நலம், வியாதி என்பவற்றைப்பற்றி நம்மை விட டாக்டருக்கும், வைத்தியருக்கும் தெரியும். உடல் என்னுடையது என்பதால் எனக்கே அதிகம் தெரியும் என்று கூறமுடியாது. தலைவலி எந்த மருந்துக்கும் 10 நாளாகக் கட்டுப்படவில்லை என்றால் தலை என்னுடையதானாலும், ஏன் தலைவலி வந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. உடனே டாக்டர் கண்ணாடி போடவேண்டும் என்பார். கண் பார்வை சரியாயில்லை என்றால் தலைவலி வரும் என்பது டாக்டருக்குத் தெரியும். நமக்குத் தெரியாது.

  • உடல் என்னுடையதானாலும் physiology உடற்கூறு அறிந்த டாக்டருக்கே என்னைவிட என்னுடலைப் பற்றித் தெரிய முடியும்.
     
  • டெல்லியிலிருந்து, சர்க்கார் விஷயங்கள் அனைத்தும் தெரிவதால் நாட்டுப் பிரச்சினைக்கு தீர்வு தெரியும் என்று அர்த்தமாகாது. அது தெரிய அரசியல் தெரியவேண்டும்.

நாத்திகன் உலகமே ஜட சக்தியால் ஆனது எனவும், எல்லாம் சக்தி எனவும் கூறுவது நம் பிரச்சினைக்கு உதவாது. எல்லாம் சக்தி, ஜடமான சக்தியெனில் நமக்கும், தாவரத்திற்கும், விலங்குக்கும் உயிர் உள்ளதே, அதை எப்படி விளக்குவது என்பதற்கு நாத்திகவாதத்தில் பதிலில்லை. அதற்குரிய பதிலை 10ஆம் அத்தியாயத்தில் Force is anterior, instrument comes later சக்தி முந்தையது, கருவி பிந்தையது என்று நீண்ட விளக்கம் தருகிறார்.

சுயநலம் சில சமயம் முழுச் சுயநலமாகி, அவனுக்குத் தன்னைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்ற நிலை ஏற்படும். நமக்கு அதுபோன்ற ஒருவரைத் தெரியுமானால் அவர் பழக்கம் கண்ணில் படும்.

  • உடன் பிறந்தவருக்கு உயிர் போனபொழுது, தான் எதிர்பார்க்கும் காபி வரவில்லை என்பதே மனதிலிருக்கும்.
     
  • தனக்குத் தெரிந்த மிகப் பயனுள்ள செய்தியைப் பிறருக்குச் சொல்லவும் தோன்றாது.
     
  • வருஷக்கணக்காகத் தனக்குப் பல உதவிகள் தொடர்ந்து செய்பவருக்கு உதவி செய்யும் நேரம் வந்தால் எரிச்சல் வரும்.
     
  • இவர்களில் சிறப்பானவர்கள் வீட்டிற்கு வரும் தம்பியை வருமுன் சாப்பிட்டுவிட்டு வா என்பார்!

உலகத்தையே மறந்து தன் சுயநலத்தை மட்டும் கருதும் மனிதன், சுயநலம் சரியான கொள்கை என்று கூற முடியாது. குடும்பமும், பெற்றோரும், சமூகமுமில்லாமல் ஒரு மனிதன் உயிர் வாழமுடியாது என்று அனைவரும் அறிவார்கள். "அவர்கள் அனைவரும் என் சௌகரியத்திற்காக இருக்கிறார்கள்" எனச் சுயநலமி நினைப்பது முடிவாகாது.

  • நாத்திகன் ஆண்டவன் இல்லை எனக் கூறலாம்.
     
  • உலகில் உயிரில்லை எனக் கூறமுடியாது.
     
  • உயிர் ஜடத்திலிருந்து வருகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
     
  • கூறுபவர் அறிவாலோ, நடைமுறையாலோ அதை நிரூபிக்க முடியாது.
     
  • நாத்திகவாதம் பூனை கண்ணை மூடிக் கொண்டது போலாகும்.

********

 



book | by Dr. Radut