Skip to Content

09. பகவானுடைய இதர நூல்கள்

"10 நிமிஷம் யோகத்தூக்கம், பல மணி தூக்கத்திற்கு சமம்"

Evening Talks, மாலை நேர உரையாடல்களிலிருந்து மேற்சொன்ன கருத்தையும், கீழ்க்கண்ட விளக்கங்களையும் எடுத்தேன்.

அன்னை மரணத்தை மனிதன் ஏற்றுக்கொண்ட பழக்கம் என்கிறார். அவனால் அப்பழக்கத்தை விட முடியுமானால், மீற முடியுமானால் மரணம் அவனுக்கு அவசியமில்லை என்கிறார். அதே கருத்தைப் பகவான்,

  • தூக்கம் ஒரு பழக்கம்.
  • சாப்பாடு ஒரு பழக்கம்,

எனக் கூறுகிறார். ஆப்பிரிக்காவில் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் உடை உடுக்கும் பழக்கமில்லை. மனிதன் பிறவியில் உடை உடுக்கவில்லை என நாம் அறிந்தாலும், உடை நாகரீகம் கொடுத்த பழக்கம் என அறிந்தாலும் நம்மால் இன்று எளிமையாக உடையை விட முடியுமா? அதுபோல் பசியும், தூக்கமும் மனிதன் ஏற்றுக்கொண்ட பழக்கங்கள். யோகம் முதிர்ந்த நிலையில் விட முடிவு செய்தால் விடமுடியும் என்பது பகவானுடைய கருத்து. அது சம்பந்தமாகக் கேட்ட கேள்விகட்கு பகவான் கொடுத்த பதில்கள்,

  • நான் தூக்கத்தை விட முயன்றதில்லை.
  • ஒரு நாளைக்கு 5 மணி நேரம் தூங்குகிறேன்.
  • 2 நாள் தூங்காமலிருந்தேன், மூன்றாம் நாள் 9 மணி நேரம் தூங்கினேன்.
  • ஜெயிலிலிருந்தபொழுது 2 நாள் தூங்காமல், மூன்றாம் நாள் தூங்கும் பழக்கத்தை 10 நாள்வரை தொடர்ந்தேன்.
  • மனிதன் சோம்பேறித்தனமாக உள்ளே போய் தங்கும் பழக்கம் தூக்கமாகிவிட்டது.
  • ஒரு எழுத்தாளர் மனிதன் தூக்கத்தை விலங்குகளுடன் வாழ்ந்தபொழுது கற்றுக் கொண்டான் எனக் கூறுகிறார்.
  • யோகியின் தூக்கம் நம் தூக்கத்தினின்று வேறுபட்டது.

    தியானம் என உட்கார்ந்து தூங்குபவர்கள் உண்டு. ஒருவர் குறட்டைவிட்டார். தூக்கம் என்பது தியானம் போலுமிருக்கும். ஓடிக் கொண்டிருக்கும் மனத்தின் எண்ணங்களை நிறுத்தியவுடன் மனம் என்ன செய்வது என்று தெரியாமல், ஒன்றும் செய்யாதபொழுது தூங்குவதுபோல் தூங்குகிறது. இது தியானத்திற்கு முதல் தடை, பெரிய தடை, இதைக் கடந்தால்தான் தியானம் பலிக்கும். தியானத்திலும், தூக்கத்திலும் நாம் உள்ளே (inner mind) போகிறோம். உள்ளே போனபின் (தமஸ்) சோம்பேறியானால் தூக்கமாகிறது. உள்ளே போனபின் விழிப்பாக இருந்தால் தியானமாகிறது.

  • தியானம் தூக்கமானால் எழுந்தவுடன் உடல் அசதியாகஇருக்கும்.
  • தூக்கம் தியானமானால் எழுந்தவுடன் உடல் சுறுசுறுப்பாகஇருக்கும்.

யோகி முறையாகத் தூங்கக் கற்றுக் கொண்டால் 10 நிமிஷத் தூக்கம் அவனுக்குப் போதும்.

 

********



book | by Dr. Radut