Skip to Content

01.யோக வாழ்க்கை விளக்கம் IV

 யோக வாழ்க்கை விளக்கம் IV                                                                                                          கர்மயோகி

686) ஜீவனற்ற செயல் அருளைக் கண்டால் செயல் உயிர் பெறுகிறது. தரித்திரத்தில் அருளைக் கண்டால் அருள் பேரருளாகிறது.

ஜீவனற்ற செயலுக்கு ஜீவனைத் தரும் அருள் தரித்திரத்தை பேரருளாக்கும்.

       ஒரு தச்சன் கடமைக்காக ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை இரண்டு மணி நேரமாகச் செய்வதை நாம் கண்டால், எரிச்சல் வருகிறது. ஏன் இறைவன் இந்தத் தச்சனில் இதுபோல் செயல்படுகிறான் என்று நினைத்தால் பதில் தெரிவதில்லை. தச்சனுடைய கண்ணோட்டத்தில் இதைக் காண முயலலாம். இறைவன் கண்ணோட்டத்தில் இதைப் புரிந்து கொள்ள முயன்றால் அருள் வெளிப்படும். தச்சனை ஏன் இதுபோல் வேலை செய்கிறாய் என்று விசாரித்தால் அவன் காலையில் சாப்பிடவில்லை, வீட்டில் சண்டை போட்டுவிட்டு வேலைக்குப் போகாமலிருக்கலாம் என நினைத்தவன் மனம் மாறி வேலைக்கு வந்திருக்கிறான் என்று தெரிந்ததும், எப்படி இந்த அளவு அந்த மனநிலையில் பசியுடன் வேலை செய்ய முடிகிறது என்று நமக்குத் தோன்றும். மேலும் விசாரித்தால் இந்த முதலாளி எப்பொழுது வேலை செய்தாலும் 40 நாள் வேலையில் 30 நாள் கூலிகொடுத்துவிட்டு மீதி பாக்கி வைப்பார். பிறகு அது வாராது என்றும் தெரியும். நானாக இருந்தால் நீ செய்வதில் பாதியும் செய்யமாட்டேன். நீ நல்ல மனிதனாகத் தெரிகிறாய் என்று சொல்லத் தோன்றும். இறைவன் கண்ணோட்டத்தில் இத்தச்சனுடைய ஆன்மா போன ஜென்மத்தில் சுமுகமான குடும்பத்தில் பிறந்து, இந்த ஜன்மத்தில் சண்டை சச்சரவு எப்படியிருக்கும் என அனுபவிக்கும் இக்குடும்பத்தில் பிறந்து சச்சரவின் ஆன்மீகத் தன்மையை வேலையில் காண முனைகிறது என்றறிந்தால், அக்கண்ணோட்டத்தில் தச்சனின் மனப்போராட்டம் ஆன்மீக அனுபவமாகத் தெரியும். அதுவே அருளின் செயல். நம் பார்வை தச்சனை மாற்றி சுறுசுறுப்பாக்கும். சூழல் மாறும். செயல் உயிர் பெறும்.

       பரம தரித்திரனை இக்கண்ணோட்டத்தில் காண ஆன்மீக சூட்சுமப் பார்வை (spiritual subtle vision) வேண்டும். அதுபோல் கவனித்தால் தரித்திரத்தின் பூர்வோத்திரம் நமக்கு விளங்கும். நமக்கு விளங்குவதால் நம் மூலம் அருள் தரித்திரனைத் தொடும். தரித்திரன் தனி நபர். தரித்திரம் பொது (impersonal vibration). அருளால் தனிநபர் (personal) குணம் (impersonal) பொது குணமாக மாறினால், தரித்திரத்திற்கு பிரபஞ்சத்தில் முடிவு காலம் வந்துவிடும். இனி தரித்திரம் உலகை விட்டுப் போகத் தயாராகும். அன்னையின் உடலைத் தீண்டிய எந்தக் குணமும் திருவுருமாற்றமடைந்து தன் நிலை கரைந்து எதிரானதாக மாறுகிறது. தரித்திரம் அருளின் தீண்டலால் சுபீட்சமாகிறது. இது திருவுருமாற்றம். இதை அருள் செய்வதில்லை. அருள் கர்மத்தைக் கரைக்கும். திருவுருமாற்றத்தைக் கொணர்வது பேரருள் (super grace). நம் பார்வையால் புறநிலை மாறும். நம் பார்வை மாறினால் ஜடமும் திருவுருமாறி சச்சிதானந்தமாகும் என்கிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர்.

****

687) ஆன்மாவுக்கு அருளை அடையாளம் தெரியும் என்பதால், அருள் புரியும் நேரம் ஆன்மா வெளிப்படும் நேரம். வெளிவரும் ஆன்மா சைத்தியப் புருஷன்.

ஜீவாத்மாவால் மேலே வர முடியாது.

அருள் செயல்படும் நேரம் ஆன்மா வெளிப்படும் நேரம்.

       சட்டம் எந்த நேரமும் அமுலிலிருக்கிறது. ஆனால் நாம் அதைச் செயலில் சில சமயங்களில் தான் பார்க்கிறோம். ஊரில் அராஜகம் தலை எடுப்பதை போலீஸ் அடக்கும்பொழுது சட்டம் செயல்படுவதை நாம் பார்க்கிறோம். நம் நிம்மதியான நாகரீகமான வாழ்வு ஆயிரம் சட்டங்கள் அமுலில் இருப்பதால். ஏதாவது ஒரு சட்டம் அமுலிலில்லை எனில் அராஜகம் தலை விரித்தாடுவதை உடனே காணலாம். எந்த பஸ் எந்த ரூட்டில் எத்தனை மணிக்குப் புறப்பட்டுப் போக வேண்டும் என சட்டமும், உத்தரவும் உண்டு. நாளை காலை அந்த உத்தரவு அமுலில் இல்லை எனில் பஸ் ஸ்டாண்ட் எப்படியிருக்கும் என நினைக்கவே பயமாக இருக்கிறது. அதேபோல் அருள்தான் உலகைத் தாங்கிப் பிடிக்கிறது. நமக்கு அது தெரிவதில்லை. அருள் ஒரு நிமிஷம் செயல்படாவிட்டால் உலகம் தவிடு பொடியாகும் என்கிறார் அன்னை.

       பொதுவான அருள் அனைத்துச் செயலையும் ஆதரித்தாலும் அருளுக்குக் குறிப்பான செயலும் உண்டு. அருள் செயல்படும் பொழுது ஆன்மா வெளிப்பட்டு அதை ஏற்றுக் கொள்கிறது. ஆன்மா (சைத்தியப் புருஷன்) செயல்பட்டால், செயல்பட்டு மேலெழுந்து வந்தால், அருள் செயல்படும். MLA, MP நம் ஜில்லா தலைநகருக்கு வந்தால் அவர்கள் கலெக்டரைக் போய்ப் பார்ப்பார்கள். மந்திரி வந்தால் கலெக்டர் பங்களாவில் தங்கி, கலெக்டரைக் கூப்பிட்டனுப்புவார். அல்லது கலெக்டர் போய்ப் பார்ப்பார். முதன் மந்திரி வந்தால், கலெக்டர் அவர் நுழையும்பொழுது வெளியே வந்து வரவேற்பார். கவர்னர் வந்தால், ஜில்லா எல்லைக்குப் போய் கலெக்டர் அவரை வரவேற்று உடனிருந்து ஜில்லாவை விட்டு வெளியே போகும்வரை எல்லையைக் கடக்கும்வரை இருப்பார். அதேபோல் எண்ணத்தை மனம் ஏற்கிறது. செயலை உடல் ஏற்கிறது. அருள் வந்தால் சைத்தியப் புருஷன் எனும் ஆன்மா உள்மனமாகிய தன்னிடத்திலிருந்து மேல் மனத்திற்கு வந்து அருளை வரவேற்கிறது.

       ஜீவாத்மா அசைவதில்லை. அது வெளிவருவதில்லை. அதுவே அருளை உற்பத்தி செய்யவும் வல்லது. அதை grace of the spirit - ஜீவனின் அருள் என்கிறார் பகவான். அது மேல் மனத்திற்கு வருவதில்லை. அருளுக்காகக் காத்திருப்பதில்லை. அசைவற்ற, அழிவற்ற, வளர்ச்சியோ, மாற்றமோ இல்லாதது ஜீவாத்மா. சைத்திய புருஷன் உள் மனத்தில் உள்ளது. இது ஜீவாத்மாவின் பிரதிநிதி, இதற்கு வளர்ச்சியுண்டு, மாற்றமுண்டு. வாழ்வின் அனுபவசாரத்தை சேர்த்து அதனால் வளர்வது சைத்திய புருஷன். அடுத்த பிறவியை நிர்ணயிப்பது சைத்திய புருஷன். அங்கும் தொடர்ந்து வருவது இதுவேயாகும்.

****

688) ஆன்மா இயற்கையில் வெளிவருவது ஆண்டவன் செயல். மனிதனுடைய ஆன்மா மேலே வருவது பரிணாம முயற்சி. அது நன்றியறிதல், பரிணாம முயற்சியை மேற்கொண்ட மனிதனுடைய ஆன்மா பரிணாம முயற்சியை மேற்கொண்ட இறைவனின் ஆன்மாவைக் கண்டு கொள்ளுதல், நன்றியறிதலாகும்.

ஜீவன் ஜீவாத்மாவை அறிதல் நன்றியறிதலாகும்.

       நாம் இயல்பாக செயல்படும்பொழுது உடலால் செயல்படுகிறோம். ஒரு நேரம் உணர்ச்சியால் செயல்படுகிறோம். ஏதோ ஒரு சமயம் அறிவால் செயல்படுகிறோம். இதுவே மனித நிலை. உயிர் பிரிவதற்கு முன் ஆன்மா மேலே வந்து இவ்வாழ்வை நினைவுபடுத்தி, அடுத்த பிறவிக்குள்ள இடத்தை முடிவு செய்து மீண்டும் உள்ளே போகிறது. அது தவிர அன்றாட வாழ்வில் ஆன்மா வெளிவருவதில்லை. தபஸ்விக்கு தியானத்தில், சமாதியில், பக்தனுக்கு லயத்தில் ஆன்மா மேலெழும் தவமுயற்சியால் ஆன்மா தபஸ்விக்குத்தான் மேலே வரும்.

       பூரண யோகம் என்பது அழிவும், வளர்ச்சியும், மாற்றமுமில்லாத ஆன்மா மாறி, வளர்வதாகும். (yoga of spiritual evolution) சமர்ப்பணத்தால் ஒவ்வொரு செயலையும் ஆன்மாவுடன் ஈடுபடுத்துவதால், ஆன்மா செயலை ஏற்று வளர ஆரம்பிக்கிறது. இந்த ஆன்மா சாட்சிப் புருஷனான ஜீவாத்மா அன்று, சைத்தியப் புருஷனான பிரகிருதியிலுள்ள வளரும் ஆன்மா. பரம்பரையாக இறைவன் அழிவற்றவன், மாற்றமற்றவன் என அறிவோம். பகவான் இறைவனுக்கு மாற்றமும், வளர்ச்சியும் உண்டு என்கிறார். மாற்றத்தையும், அதன் மூலம் வளர்ச்சியையும் இறைவன் ஏற்று லீலையை மேற்கொண்டு, அதனால் (bliss) பேரானந்தத்தைவிட உயர்ந்ததான (delight) சிருஷ்டியின் ஆனந்தத்தை நாடுகிறான் என்று பகவான் லீலையை வர்ணிக்கின்றார்.

       குழந்தையிடம் பொம்மை, சட்டை கொடுத்தால் வாங்கிக் கொள்ளும். மகனுக்குத் தொழிலுக்கு முதல் கொடுத்தால், தகப்பனார் அம்முதலை எழுப்பிய வகைகளை மகன் அறிவான். எவ்வளவு சேமிப்பு, நிலத்துக்கடன் எவ்வளவு, நகை விற்றது எவ்வளவு என அறிவதால் பொம்மை பெறும் குழந்தையைவிட விவரமாக மகன் தந்தையின் முயற்சியைப் பாராட்டுகிறான். மோட்டார் பைக் வாங்கப் போனால் மார்க்கெட்டில் விற்கிறது வாங்கிக் கொள்கிறான். 1940, 1950இல் இளைஞர்களாக இருந்தவர்கள் நம் நாட்டில் குண்டூசியும் உற்பத்தியாகவில்லை என மனம் புழுங்கியவர்கள், நாட்டில் மோட்டார்பைக் வந்தால் அதை நாட்டு முன்னேற்றமாக, சர்க்கார் முயற்சியாக, சமூக வளர்ச்சியாக அறிந்து மகிழ்வார்கள். தன் வளர்ச்சியை அறிபவனே, நாட்டு வளர்ச்சியை அறிய முடியும். நம் ஆன்மா வளர முயன்றால், மனிதன் விழிப்புடனிருப்பான். அவன் கண்ணுக்குத்தான் இறைவனுடைய ஆன்மா - பிரபஞ்சத்தின் ஆத்மா -வளர்வது தெரியும். அதைத் தெரிந்து உணர்ந்து மகிழ்வதே நன்றியறிதலாகும்.

       வளரும் ஆன்மா மேலே எழுந்து வந்தால் வெளியில் நிகழும் நிகழ்ச்சிகளை, இறைவன் செயலாக, இறைவனின் ஆன்மா வளர முயலும் வெளிப்பாடாகக் காண முடியும். அந்த உணர்வு நன்றியறிதலாகும். அது எழுந்தால் உடல் புளகாங்கிதமடையும்.

****

689) மனிதனுடைய ஆன்மா பிரபஞ்சம் முழுவதும் பரவ முயல்வது நன்றியறிதல் எனப்படும்.

ஜீவாத்மா பிரபஞ்ச ஆத்மாவாவது இறைவனுக்கு நன்றியறிதலாகும்.

       நன்றியறிதல் எனில் பெரியது சிறியதற்குக் கடமையில்லாத நேரத்தில் தானே முன்வந்து உவந்து செய்யும் உதவி அல்லது சேவையின் உண்மையை உளமார அறிந்து உணர்வால் ஏற்று மலர்வதாகும்.

       அவனருளன்றி அவன் தாள் வணங்க முடியாது என்பதுபோல், பரமாத்மாவின் அருளின்றி ஜீவாத்மா அவனை அடைய முடியாது. ஜீவாத்மா, பரமாத்மாவை அடையும் முன் இடைப்பட்ட நிலையான பிரபஞ்சத்தின் ஆத்மா ஆக வேண்டும். இதை எய்தத் தடையாக இருப்பது ஜீவாத்மா மீது கரையாகப் படிந்து கடலாகச் சூழ்ந்துள்ள அகங்காரம் எனப்படும் ஆணவ மலமாகும். அகங்காரம் அழிந்தால் ஆன்மாவாகிய சைத்தியப் புருஷன் விடுதலை பெற்று வெளிவருவான். சைத்தியப் புருஷனுக்கு பிரபஞ்சத்தைத் தழுவும் வீச்சுண்டு. பிரபஞ்சம் முழுவதும் பரவ முயலும் ஆன்மா சிறைப்பட்ட தன் சிறுகூடான அகந்தையிலிருந்து விடுபட்டு, தன் பிறப்பிடமான பரமாத்மாவை அடைய முன் நிலையான பிரபஞ்சத்தின்ஆத்மாவோடு கலக்க முயல்கிறது. இது ஜீவாத்மாவின் முயற்சியால் மட்டும் முடியாது. இதைப் பூர்த்தி செய்ய பரமாத்மாவின் அனுக்கிரஹம் தேவை. பரமாத்மா அனுக்கிரஹித்ததை அறிந்து உணர்வது நன்றி உணர்வாகும்.

       சைத்தியப் புருஷன் வெளிப்படுமுன் பிராணமயப் புருஷன் வெளிப்படுகிறான். ஆசையால் பிராணமயப் புருஷன் சிறைப் பட்டிருக்கிறான். இச்சிறை விலகி பிராணமயப் புருஷன் வெளிப்படுகிறான். இது யோகத்தில் ஒரு கட்டம். இந்நிலை விடுதலையாகும். ஆசையினின்று பெற்ற விடுதலையாகும். அகந்தையினின்று விடுதலை பெற்றால் எழுவதும் உணர்வே. அவ்வுணர்வுக்கு நன்றியறிதல் எனப் பெயர்.

       அதற்கு முன் நிலை ஆசையடங்கியிருப்பது. ஆசையை அடக்க முடியாதவன் தன் ஆசை பூர்த்தியாவதன் மூலம் அழிகிறான். அடக்க முடிந்தவன் கட்டுப்பாடுடையவன். கட்டுப்பாட்டில் வாழ்வில் முன்னேறுகிறான்.

       ஆசை எழுவதற்கு முன் நிலை உணர்வற்ற உழைப்பு. இந்த உழைப்பு உடல் உழைப்பு. ஆயுள் பரியந்தம் உழைத்தாலும் கடைசி காலத்திற்கு எதுவும் மீதியில்லாத உழைப்பு.

       உழைப்பின் அடுத்த கட்ட ஆசை எழுந்து தன்னைக் கட்டுப்படுத்தி வாழ்வை உயர்த்தி, பின் ஆசையெனும் சிறையிலிருந்து பிராணமயப் புருஷனை விடுவித்து, அதன் பலனாக அகந்தை எனும் கூட்டை உடைத்து சைத்தியப் புருஷனை வெளிப்படுத்தினால், அது பிரபஞ்சம் முழுவதும் நன்றியறிதலாகப் பரவுகிறது.

****

690) பிரபஞ்சம் மனிதனில் குவிந்து சேருவது கருணையாகும்.

பிரபஞ்சம் கருணையால் ஜீவாத்மாவாகிறது.

      அருள், கருணை, அனுதாபம், பரிதாபம் ஆகியவற்றை அன்னை பிரித்துக் காட்டியிருக்கிறார். நம்மால் பொறுக்கமுடியாமல் பரிதாபப்படுகிறோம். வேண்டியவர் வேதனை அனுதாபம் தருகிறது. எவரும் துன்பப்படக் கூடாது என்பது கருணை, துன்பம் இருக்கக் கூடாது என்பது அருள் என்பது அன்னை விளக்கம்.

       துன்பம் என்பதை ஆன்மீகரீதியில் ஆண்டவனை விட்டு விலகியிருப்பது என்பார்கள். ஆண்டவனை அடைவது இன்பம், அவரைவிட்டுப் பிரிந்துள்ளது துன்பம் என்பது தத்துவம். பிரபஞ்சம் இறைவனிலிருந்து பிரிந்து வந்து செயல்படுகிறது. இது மீண்டும் ஆண்டவனையடைய வழியுண்டா? வழியிருந்தால் பிரபஞ்சம் இன்பம் பெறும். இதைச் சாதிப்பது கருணை. பிரபஞ்சம் மீண்டும் இறைவனை அடைய தன்னுள் செறிந்த புள்ளிகளை (dense points) ஏற்படுத்துகிறது. அவை ஆன்மாக்களாகும். அந்த ஆன்மாவைச் சுற்றி மனித ஜீவன் எழுகிறான்.

       இறைவனிலிருந்து பிரிந்து துன்பநிலையில் உள்ள பிரபஞ்சத்தின் துன்பம் அழிய கருணை செயல்பட்டு, மீண்டும் பிரபஞ்சம் இறைவனையடைய, தன்னுள் பல்லாயிரம் செறிந்த புள்ளிகளாக ஆன்மாக்களை உற்பத்தி செய்து, அவ்வான்மாக்களைச் சுற்றி ஜீவன்களை எழுப்புகிறது. இச்செயல் கருணையால் நடந்ததாகும்.

       செறிந்த புள்ளிகளான ஆன்மா முதல் நிலை வளர்ச்சியைப் பெற தன்னைச் சுற்றி அரண் அமைத்து அதனுள் வளர்கிறது. தான் பெற வேண்டிய அனுபவங்களை எல்லாம் பெற்று, வளர்ச்சி முடிந்த நிலையில் தன்னைச் சுற்றி ஆதரவாக முதலமைந்த அரண், இன்று சிறையாகிவிட்டதை அறிந்து, அரணைத் தகர்க்கும் வழியை நாடுகிறது. அரண் தகர்ந்தால் ஆன்மாவுக்கு விடுதலையுண்டு. அரணான அகந்தையிலிருந்து விடுதலை பெற்ற ஆன்மா, தன் பிறப்பிடமான பரமாத்மாவையோ, அது உறையும் சச்சிதானந்தத்தையோ, அதற்கு முன்னுள்ள பிரம்மத்தையோ நாட விரும்பினால் ஆன்மா மோட்சப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறது என்று பொருள். மோட்சத்தைத் தேடும் ஆன்மா மோட்சம் பெறும். தான் பெற்ற விடுதலை கனிந்திருந்தால், மோட்சம் உடனே கிட்டும். கனியாவிட்டால், கனியும்வரை உலகில் ஜீவன் முக்தனாக வாழ வேண்டும்.

       மோட்சப் பாதையை நாடாமல், பூரணயோகக் குறிக்கோளான சத்திய ஜீவனை நாடினால் விடுதலை பெற்ற ஆன்மா பிரபஞ்சம் முழுவதும் பரவி, பிரபஞ்சத்தின் ஆத்மாவாகி, அந்நிலை முதிர்ந்த பின், பரமாத்மாவை எட்டித் தொட்டு, சத்திய ஜீவிய உலகில் வந்து, தன்னை சத்திய ஜீவனாகத் திருவுருமாற்றம் செய்து கொள்கிறது. இதன் முதற்படி பிரபஞ்சம் மனிதனில் குவிந்து சேருவது. எனவே இது கருணையாகும்.

****

...தொடரும்

 

 

 

 

 



book | by Dr. Radut