Skip to Content

06.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய

       அன்னை அன்பர்களுக்கு நான் அன்னையின்பால் எப்படி ஈர்க்கப்பட்டேன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

       நான் கடலூரில் புத்தகம் வெளியிடும் (பயிற்சி புத்தகங்கள்) நிறுவனம் நடத்தி வருகிறேன். வியாபாரம் சுமாராக நடைபெற்றது. விற்ற புத்தகத்திற்குப் பணம் collection மந்தமாக வந்து கொண்டிருந்தது. அவ்வமயம் அன்னை அன்பர் எனக்கு அறிமுகமானார். அவர் மூலம்அன்னையும், ஸ்ரீ அரவிந்தரையும், பாண்டி ஆசிரமத்தையும் பற்றி அவரிடம் விளக்கமாகக் கேட்டறிந்தேன். முதல் தடவையாக அவருடன் ஆசிரமம் சென்றேன். மலர் அஞ்சலிசெய்து வணங்கிவிட்டு வந்தேன். புத்தகம் மாறுதல் அடைவதாக அறிந்து, அதற்கு அன்னை அன்பரை வழி கேட்டேன். புத்தகத்தைத் தூசி இல்லாமல் துடைத்து, ஒழுங்காக அடுக்கி வை என்றார். அதன்படி செய்தேன். அவர் கூறியபடி எல்லாப் புத்தகங்களயும் விற்றுவிட்டேன். அங்கும் அன்னை செயல்பட்டார். பிறகு வீட்டிலும், அலுவலகத்திலும் அன்னையின் படங்களை வைத்துத் தினமும், பூக்களை வைத்து, ஊதுபத்தி கொளுத்துவது என முறையாகச் செய்து வருகிறேன். அதிலிருந்து மற்ற தெய்வங்களைக் காட்டிலும் அன்னையை என் மனதில் நிலை நிறுத்தி அனுதினமும் வணங்கி வருகிறேன்.

       அவருடைய தரிசன நாட்களில் பாண்டி செல்வதை வழக்கமாகிக் கொண்டுள்ளேன். ஸ்ரீ அன்னை அவர்கள் என் வாழ்க்கையில் 26-6-2001ல் மிகப் பெரிய பேரானந்தத்தை அளித்தார்.

       நான் அன்றைய தினம் சென்னையில் பிரிண்டிங் செய்த புத்தகங்களை deliveryஎடுக்கச் சென்றிருந்தேன். புத்தகங்களை லாரியில் ஏற்றிக் கொண்டோம். லாரி பிடிக்காததால் மேலும் ஒரு வேன் மூலம் புத்தகங்களை ஏற்றி தார்பாய் போட்டுக் கட்டிக் கொண்டு சென்னையில் புறப்படும் போது மணி இரவு 11.00. சற்று தூரல் போட ஆரம்பித்துவிட்டது. மவுண்ட் ரோடு வரும்போது பிடித்த மழை தாம்பரம்வரை நீடித்தது. நான் அன்னையை அழைத்த வண்ணம் உள்ளேன். புத்தகத்தை அன்னையிடம் சமர்ப்பணம் செய்துவிட்டேன். உன் விருப்பம் எதுவோ அப்படியே நடக்கட்டும் என்று அன்னையிடம் கூறிவிட்டேன். தாம்பரம் வந்ததும் வேனை நிறுத்தி மேலே ஏறி பார்த்தால் குட்டையாகத் தண்ணீர் தேங்கி நிற்கிறது. என் நண்பர் அதை வாரி இறைக்கிறார். லாரியும் எங்களைக் கடந்து செல்கிறது. அதை பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறோம். மழை விட்டு விட்டுப் பெய்கிறது. அன்னையைத் தவிர எனக்கு வேறு நினைவு வரவில்லை. அதிகாலை 4.30 மணிக்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.

       லாரியிலும், வேனிலும் ஏறி தார்பாயைப் பிரித்து பார்த்த போது என் உள்ளம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு புத்தகம் கூட நனையவில்லை. நாங்கள் அடுக்கி ஏற்றிய புத்தகம் அப்படியே இருந்தது. நனைந்திருந்தால் 10 இலட்சம் நட்டம் வந்திருக்கும். எனக்குப் 10 பைசா கூட நட்டம் இல்லாமல் ஸ்ரீ அன்னை அவர்கள் புத்தகத்தை அவ்வளவு பாதுகாப்பாகக் கொண்டு வந்து என்னிடம் சேர்ந்தார்கள் என்பதை எண்ணும் போது மனம் பேரானந்தம் அடைகிறது. இன்று நினைத்தாலும் உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது. அன்னை அவர்கள் என் கண்முன் நிகழ்த்திய இந்நிகழ்ச்சியைக் காணும்போது அன்னை என்னுடன் எப்போதும் இருக்கிறார் என்று நம்புகிறேன்.

ஸ்ரீ அன்னையே என் தெய்வம்.

****

 



book | by Dr. Radut