Skip to Content

08.அன்பர் உரை

அன்பர் உரை”

Nov 17th, 1973

(சென்னை மாம்பலம் தியான மையத்தில், நவம்பர் 17, 2001இல் திருமதி விஜயா நாராயணன் நிகழ்த்திய உரை)

       தாம் நூறாண்டு வரையிருந்தால் சத்திய ஜீவியம் பலிக்கும்,. இருப்பேனா எனத் தெரியாது. இறைவனிடம் கேட்டால், உனக்கு அது தெரிய வேண்டிய அவசியமில்லை. வேலையைச் செய் என்று கூறுகிறார் என்பது அன்னை எழுதியது. தாமும் அன்னையும் பூவுலகில் பூதவுடலிருந்தால் சத்திய ஜீவியம் வர நாளாகும், ஒருவர் உடலை நீத்து, சூட்சும உலகிலிருந்து யோகத்தைத் தொடர வேண்டும் என பகவான் உடலை நீத்தார்.

       பகவானுடைய பூதவுடல் சத்திய ஜீவியம் வரத் தடை, அன்னை நூறாண்டுவரை இருக்க முடியாதது சத்திய ஜீவியம் பலிக்கக் குறை. நம் கடமை என்ன?

       சுயநலமாகவும், குறுகிய உள்ளத்துடனும், பொய்யை நம்பியும் வாழ்பவர் பரநலமாக, பரந்த மனப் பான்மையுடன் சத்தியத்தால் மட்டும் வாழ்வது அன்னை அதிகமாகப் பலிக்க உதவும்,

சுயநலத்தைப் பற்றியே நினைக்க முடியாமல் வாழ்பவர் பலர்.

தன்னை மிகப் பரந்த மனமுடைய பரநலவாதி என இடைவிடாமல் நினைக்கும் அதிகமான சுயநலமி பலர்.

எனக்கு எதுவும் தெரியாது, பேசாமல் வேலை செய்கிறேன் என்று கூறும் மந்தமான சுயநலமியுண்டு.

சுயநலமாக இல்லாவிட்டால் உள்ளதைக் காப்பாற்ற முடியாது என நம்புபவர் ஏராளம்.

பரநலமாக இருக்கலாம், ஆனால் சுயநலமிகளுடன் வாழும்பொழுது அப்படியிருக்க முடியாது என்ற கொள்கையுண்டு.

பரநலம் நமக்கு வேண்டியவருக்கு, நம்மிடம் அதுபோல் நடப்பவருக்கு, எல்லோரிடமும் அதுபோல் நடக்க முடியாது.

அவையெல்லாம் உயர்ந்தவர்க்குரியன. காந்திஜி, நேரு, புத்தர் விஷயத்தை நாமெல்லாம் பின்பற்ற முடியாது,

       என்ற பல்வேறு காரணங்களைக் கூறி சுயநலமாகவே இருக்க முடிவு செய்வது மனித இயல்பு. வேலை செய்பவனுக்கு உடல் நலம் தவறி மருந்து வாங்க ரூ.50 கேட்டதைக் கொடுத்த ஒருவர், கொஞ்ச நாழிகையில் அவனுக்கு ரூ.2000/- மருத்துவ உதவி கிடைத்ததை அறிந்தார். அவன் திரும்பிக் கொடுத்த ரூ.50/-யை அவர் பெற மறுத்துவிட்டார். அவர் மனம் இவ்விஷயத்தில் பரநலமானது என அவர் அறியும்படி எதிரொலிகேட்கிறது.

       பிரியமில்லாதவரைச் சுயநலமி என்பர். பிரியமுள்ளவர்களை நல்லவர் எனக் கூறுவர். சுயநலமே பிரியமாக இருக்கும் (selfish affection) என நமக்குத் தோன்றுவதில்லை. சுயநலமான பிரியம், அதிகப் பிரியமாக இருக்கும். எந்தக் கட்டத்தில் தன் கட்டுப்பாட்டை அடுத்தவர் மீறுகிறாரோ, அந்த நேரம் பிரியம் வெறுப்பாக மாறும், மேற்கூறியவர்களில் யாரோ ஒருவர் எப்படிச் சுயநலத்தை விட்டு அகல்வது எனக் கேட்பதுண்டு, அப்படிக் கேட்பதே sincerity உண்மை. கேட்டபிறகு தன் சுயநலத்தைக் காணவோ, ஏற்கவோ மனம் தெளிவுபடாது. கடைக்குப் போய் தீபாவளிக்கு, தனக்குப் புது டிரஸ் எடுப்பவரில் யாரோ ஒருவருக்கு குழந்தைகட்கு, மனைவிக்கு வாங்காமல் எனக்கு மட்டும் வாங்கிக் கொள்கிறேன் எனத் தோன்றாது. வீட்டிற்கு வந்தபின் அவர்கள் கேட்டபின்தான் தான் மறந்தது தெரியும். அது மறதியில்லை, பூரண சுயநலம்.

       தீபாவளிக்கு ஜவுளி வாங்கப் போன பெண் வீட்டில் உள்ள அனைவருக்கும் வாங்கிய பின் பணம் மீதியில்லை என்று தனக்கு ஒன்றும் வாங்காமல் வந்து, அனைவருக்கும் புதுத் துணிகளைக் கொடுத்தபின், அம்மா தனக்குப் புடவை வாங்காமல் நமக்கெல்லாம் வாங்கி வந்திருக்கிறாள் என்று உணர முடியாத குழந்தைகள் உண்டு, பெரியவர்களும் உண்டு.

இவை தெரியாதவையில்லை, தெரிந்து கொள்ள முடியாதவை இல்லை, சுயநலத்திற்குக் கண்ணில் படாதவை, தெரிந்து கொள்ளாதவை.

       பிரம்மத்தைக் காண முடியாது, கண்டால் எடுத்துக் கூற முடியாது என்ற மரபில் நாம் பிறந்து வளர்ந்தவர்கள். பகவான்ஸ்ரீ அரவிந்தர் இதை ஏற்றாலும், இதைக் கடந்த கட்டத்திலுள்ள உண்மையை பட்ங் Life Divineஇல் இரண்டாம் புத்தகத்தில் இரண்டாம் அத்தியாயத்தில் கூறுகிறார்.

பிரம்மம் உலகை சிருஷ்டித்தது.

சிருஷ்டியில் உள்ள அனைத்தும் பிரம்மம்.

அதனால் பிரம்மத்தின் சுவடு, அறிகுறி தெரியாமலிருக்காது.

நாம் பிரம்மத்தைத் தேடினால் சுவடுகள் தெரியும்.

சுவடுகளைப் பின்பற்றினால் மூலம் தெரியும். மூலம் பிரம்மம் என்கிறார்.

       சைமன் என்ற சக்கிலிக்குக் கனவில் கடவுள் தோன்றி இன்று நான் உனக்குக் காட்சியளிக்கிறேன் என்றார். நாள் முழுவதும் கடவுளை எதிர்பார்த்து ஏமாந்தவன் கடவுளைக் கேட்கிறான். “நான் சிறுவனாக வந்தேன், அன்பாகப் பேசினாய், கிழவியாக வந்தேன், உதவி செய்தாய், சிறுவனும் கிழவியும் கடவுள்களே. உன் அன்பும் உதவியும் கடவுளே. உனக்குத் தரிசனம் கிடைத்துவிட்டது. நீ அறியவில்லை” என்று கடவுள் கூறுவதாக டால்ஸ்டாய் கதை. சிறுவனும், கிழவியும், அன்பும், உதவியும் ஆண்டவன் அடிச்சுவடுகள்.

       உருக்கமான பக்தர் ஒருவர் காலையில் 10 நிமிஷத் தியானம் செய்த பொழுது அன்னை தத்ரூபமாக எதிரில் நின்றார். உன் முந்தாணியைத் தரையில் விரித்துப் போடு என்றார். தம்மிரு பாதங்களையும் முந்தாணியில் பதித்து நின்றார். தியானம் கலைந்தது. அறை முழுவதும் ஜோதி மயமாக இருந்தது. முந்தாணி ஜொலிக்கிறது. அவரை சந்தித்தவரெல்லாம் என்ன விசேஷம், உங்களைச் சுற்றி ஒளி வெள்ளமாக இருந்ததே, என்ன புடவையிது? எங்கு வாங்கினீர்கள்? என்றனர். இவர் முழு சுயநலம். சுயநலமான நம்பிக்கை உடையவர். இவருக்கும், இவனைச் சேர்ந்தவருக்கும் அன்னை தவறாமல் பலிக்கிறார். இவரே சுயநலமில்லாதவரானால், இன்னுள்ள நம்பிக்கை பரநலமான மனத்தில் சுருங்கிவரும். ஒருவர் தன் வருமானத்தைப் பலருடன் பகிர்ந்து கொண்டால், பலன் குறையுமல்லவா? இவர் சுயநலத்தை விட்டுப் பரநலத்தை ஏற்க,

தான் சுயநலமி என மனமும் உணர்வும் ஏற்க வேண்டும்.

ஏற்றபின் மனம் வெட்கப்பட வேண்டும்.

மனம் பரநலமாகப் பிரார்த்திக்க வேண்டும்.

       அது நடந்தால் மேற்சொன்னது போல் தரிசனம் கிடைக்காது. குறுகிய உள்ளத்தில் தீவிரம் தரிசனம் பெறும். மனம் பரந்தால் தீவிரமிருக்காது. தரிசனம் இருக்காது. பரநலமான பின்னும் தரிசனம் கிடைக்கும் அளவுக்குத் தீவிர நம்பிக்கையிருந்தால், இவர் தரிசனம் பெற்ற சமயம், இவரைச் சார்ந்தவர் அனைவருக்கும் தரிசனம் கிடைக்கும். இப்படிப்பட்டவர் மாநிலத்தில் ஒரு 50 வருஷப் பிரச்சினை இருந்தால், இவர் மனம் மாறிய நேரம், அப்பிரச்சினை தீரும்.

       Nov.17, 73 அன்று மாலை 7.30க்கு பிரம்மாண்டமான ஜோதியாக அன்னை எழுந்து உலகெல்லாம் பரவி, அனைவர் உள்ளத்துள்ளும் நுழைந்தார். சுயநலமற்ற பக்தர்களுக்கு அவர்கள் உலகத்தில் அதுபோல் செயல்பட முடியும்.

சுயநலம் பிரகாசமாக இருக்கும்.

சுயநலம் பிரியமாக இருக்கும்.

சுயநலம் திறமை மிகுந்து இருக்கும்.

பலருக்கும் தன் சுயநலத்தின் பெருமைக்காக உதவி செய்யும்.

சுயநலம் பக்தி செலுத்தும்.

சுயநலத்திற்கு அதிக நம்பிக்கையிருப்பதுண்டு.

       எவ்வளவு சிறப்புப் பொருந்தியதெனினும் சுயநலம் சுயநலமே. பரநலம் எதுவுமில்லாவிட்டாலும், சுயநலத்தை விடச் சிறந்தது. பரநலம் பிரகாசமாக, பிரியமாக, திறமையாக, பக்தி, நம்பிக்கையுடன் நம்முள் மலர்வது நாம் அன்பராவதாகும்.

 

****

 



book | by Dr. Radut