Skip to Content

05.பிரம்மம், புருஷா, ஈஸ்வரா — மாயா, பிரகிருதி, சக்தி

"அன்பர் உரை"

பிரம்மம், புருஷா, ஈஸ்வரா — மாயா, பிரகிருதி, சக்தி

                                                            (சென்ற இதழின் தொடர்ச்சி....)

(இராணிப்பேட்டை தியான மையத்தில் 15.8.2003 அன்று திருமதி. வசந்தா லக்ஷ்மி நாராயணன் நிகழ்த்திய உரை)

பெருநிலம் பெற்றவர் செல்வமே செல்வம். வியாபாரத்தில் சம்பாதித்த பணத்திற்கு அந்தஸ்து இல்லை என்ற காலம் இருந்தாலும் கீழ்மட்டக் குடும்பங்களும், மேல்மட்ட பெருநிலக்கிழார்களும் பணத்தை ஏற்பார்கள் என்பதால் இம்முனைகளை இணைக்கும் பாலம் பிங்கிலி. அவனை விரும்பும் ஜேன், எலிசபெத்தின் லட்சியம். தன் திருமணத்தைவிட ஜேன் பிங்கிலியை மணப்பதை அவள் முக்கியமாகக் கருதுகிறாள். அந்த நல்லெண்ணமே அவளை பெம்பர்லிக்கு போகும்படிச் செய்கிறது. டார்சி, பெம்பர்லியை விட்டு பிங்கிலியுடன் புறப்பட்டவுடன் அவனுடைய எதிரி விக்காம் தன்னை அறியாமல் தன் லட்சியத்தைப் பூர்த்தி செய்ய மெரிடன் வருகிறான். பொய் தன்னை அழிக்கும் பாதை இது.

பொய்யிலிருந்து மெய் எழும் வகை எனவும் கூறலாம். மிஸ். பிங்கிலி விக்காமுடைய உண்மையைக் கூறியபொழுது அவன் சாயம் வெளுத்தது, பொய் தன்னை அம்பலப்படுத்துவது. இனி எலிசபெத் தனக்குத் தெரியாது என்று கூறமுடியாது. தெரிந்தாலும் முடிவு முக்கியம் என்பதை நிலைநிறுத்தும் நிகழ்ச்சி இது. அவனைப் பாராட்டுகிறாள். அவன் குறை அவள் மனத்தைப் புண்படுத்தவில்லை. அழகின் மயக்கத்திலிருந்து எழ வாழ்வு அவளை மண்டையில் அடிக்கிறது. ஷார்லட்டிற்குப் பணமோ, அழகோ இல்லை. நல்லெண்ணமும், விவேகமும் உண்டு. அவற்றை ஏற்பது எலிசபெத். அவளுடைய சேவை அவளின் திருமணத்தை முடிக்கிறது. காலின்ஸ், லேடி கேதரினை திருப்திப்படுத்த மிஸஸ் பென்னட் பெண்களில் ஒருவரை மணக்க விரும்புகிறான். லாங்பர்ன் ரோஸிங்ஸ் இணைய விரும்பிய அவன் விருப்பம் பெம்பர்லியுடன் லாங்பர்னை இணைத்தது. லாங்பர்ன் காலின்ஸுக்கு வர இருப்பதாலும், படிப்பு வந்துவிட்டதாலும், மடமை சேவை செய்ய முன்வருகிறது. கதை முடிவில் லேடி கேதரின் திருமணத்தைத் தடுக்க எடுத்த உபாயம், திருமணத்தை முடிக்கிறது. அவள் கர்வம் அழியும் செயல் அது. கார்டினர் தம்பதிகள் வியாபாரத்தில் இருப்பவர்கள். அவர்கள் பெம்பர்லிக்கும், லாங்பர்ன்க்கும் இடையில் வருவது பொருத்தம். இத்தனை நல்ல காரியங்களும் நடக்க ஆரம்பம் லிடியா ஓடிப்போனது. அவளே ஓடிப்போகவில்லை என்றால் கதை இல்லை. வெட்கம் கெட்டவர்களால் பெரிய காரியம் நடக்கின்றது. புரட்சியின் நோக்கில் கதை புதுக் கருத்துகளைக் கூறும். இதை சிருஷ்டியின் தத்துவம் மூலம் அறிவதும், சொந்த வாழ்வில் பொருத்திப் பார்ப்பதும் பிரம்மத்தை அடைய உதவும் தத்துவம். கண்டமான கதை அகண்டமான பிரம்மத்தின் பூலோக முகம். கதையில் முக்கிய அடிச்சுவடுகள் முத்திரை இட்டதைக் காணலாம்.

. டார்சி தன்னை மணக்கும்படி எலிசபெத்தைக் கேட்டபின் திருஉருமாற்றம் ஆரம்பிக்கிறது. டார்சியின் கடிதம் அவளைத் தன் மனத்தை மாற்றும்படிச் செய்கிறது.

. நல்லது தயாரானால் கெட்டதும் உடன் தயாராகும் என ஓடிப்போனது கூறுகிறது.

. அறிவு உணர்வால் ஆக்கிரமிக்கப்படுவதை Mr. பென்னட் திருமணத்திலும், எலிசபெத் விக்காமை ஏற்பதிலும் காண்கிறோம்.

. புதுப் பணக்காரன் ஜமீந்தாருக்கு அடங்கி இருக்கவேண்டும் என்பதைப் பிங்கிலியில் காண்கிறோம்.

. மனிதன் தன்னை அறிய விரும்பவில்லை. ஆசையை நாடிப் போகிறான். அது அவளை வற்புறுத்தி உள்ளதை உணர வைக்கிறது.

. பென்னட்டை மணந்தபின் செய்வது அறியாது திகைத்த கணவன் தவசிபோல் தன்னுள்ளே சென்று மௌனத்தை ஏற்றதால் அடுத்த தலைமுறையில் அவரைப் பிரதிபலிக்கும் இரு குழந்தைகள் பிறக்கின்றன.

. அவர் தவம் முடிந்தபின் தாயாரைப்போல் பெண்கள் பிறக்கின்றனர்.

. மடமையின் அழகை Mr .பென்னட் நாடினார். அவர் எஸ்டேட் படிப்பை நாடிய மடையனுக்குப் போகிறது.

. அழகின் மயக்கம் தெளியாது. எலிசபெத் இறுதிவரை விக்காமிற்குப் பணம் தருகிறாள்.

. நம்மை அறிவு எதிர்கொள்கிறது. நமக்குப் பார்வை வேண்டும்.

. அறிவைக் கடந்த உணர்விற்குப் பார்வை எழுவது அதிர்ஷ்டமாகும்.

. ஒரே சூழ்நிலைக்கு உரிய சக்திகள் வெவ்வேறு பலன்களைத் தரமுடியும். முடிவு ஈஸ்வரனுடையது.

. நெதர்பீல்ட் டான்ஸ் டார்சி எலிசபெத்தை மணக்கக் கேட்டது, லிடியா ஓடிப்போனது ஆகியவை எப்படியும் போய் இருக்கலாம். நிகழ்ச்சிகள் போன வழியை நிர்ணயிப்பது சக்தியும்-ஈஸ்வரனும்.

. கதையில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் இப்படி ஆராயவேண்டும். டார்சி, காலின்ஸ், எலிசபெத்தை மணக்கக் கேட்டது, ஜார்ஜியானா ஓட நினைத்தது,திட்டத்தை மாற்றிக் கார்டினர் பெம்பர்லியைக் கண்டது ஆகியவை இப்படி ஆராயவேண்டியவை.

. என்ன நடக்கிறது என்பதை அறிவு அறியமுடியாது. அறியாமையின் கருவிக்கு அறிவு புலப்படாது.

. டார்சி மனம் மாறிவருகிறது என்றோ, லிடியா ஓடத் திட்டம் இடுகிறாள் என்றோ எலிசபெத்திற்குத் தெரியாது.

. பிரம்மம் உலகில் சிறு நிகழ்ச்சிகளில் தன்னைக் கண்டமாக வெளிப்படுத்துகிறது.

. கரோலினை மணக்காமல், எலிசபெத்தை டார்சி மணப்பது புரட்சி. டார்சி, எலிசபெத் குணவிசேஷம் மூலம் இவர்கள் திருமணத்தில் புரட்சி தன்னைப் பூர்த்தி செய்கிறது.

. அனந்தம் நம் அறிவிற்கு ஏற்ப நடக்கவேண்டிய அவசியம் இல்லை. நாம் அறிந்த வழிகளில் அது செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் அதற்கு இல்லை. நம் எண்ணம் நாமே ஏற்படுத்தியது, தார்மீகமாக நாம் செயல்படுகிறோம். நாணயம் என்பது சிறிய லட்சியம். நம் அறிவிற்குப் பொருத்தம் இல்லாததை அனந்தம் ஏற்கும். முடிவிற்கு அவசியம் என்பதால் அர்த்தமற்ற செயலை அனந்தம் ஏற்கும்.

. டார்சிக்கு எலிசபெத் மீது காதல் இருந்தால் "பரவாயில்லை' என்று அவன் கூறக்கூடாது. அவளை அணுகி அவன் டான்ஸ் ஆடக் கேட்கவேண்டும். அது நமக்குப் புரியும்.

. ஆண் பெண்ணை மன்றாடிக் கேட்கவேண்டும் என்ற கருத்து நாமே ஏற்படுத்தியது.

. பிங்கிலிக்குத் திருமணமே முடிவு என்பதால் அவனுக்கு அது சரி.

. எலிசபெத் புரட்சித் தலைவி. தாயாரின் குணத்தைக் கடக்க முயல்பவள். அதனால் வழக்கமான முறைகள் அவள் இலட்சியத்தைப் பூர்த்தி செய்யாது.

. டார்சியின் சுயநலமும், எலிசபெத்தின் மயக்கமும் தீர திட்டுவது அவசியம்.

. ஓடிப்போவது உலகத்திற்குத் தவறு. டார்சி அடிமட்டம்வரை இறங்கிவந்து ஆணவம் அழிய அது தேவை. முடிவாக அது நன்மை செய்தது.

. அறிவிற்குப் பொருத்தம் இல்லாதது என்று நமக்குத் தோன்றுவது முழுமைக்குத் தேவை.

. எந்தக் குடும்பமும் பெண் ஓடிவிடவேண்டும் என நினைக்கமாட்டார்கள். முடிவைக் கருதும்பொழுது அது பொருத்தம் என அறிகிறோம். லிடியாவும், விக்காமும் ஓடிப்போனதைக் குறையாக நினைக்கவில்லை. Mrs. பென்னட்டிற்கும் குறையாகத் தெரியவில்லை.

. அறிவு தேவையானதை எடுத்துக்கொள்ளும், மற்றதைக் கண்டுகொள்ளாது.

. விக்காம் சொல்வதை எலிசபெத் ஏற்றுக்கொள்கிறாள். தவறு தெரியவில்லை.

. பெண்ணுக்கு வரதட்சணைத் தர குறைப்படும் பெற்றோர் பிள்ளைக்குக் கேட்காமல் இருப்பது இல்லை. இந்தப் பரீட்சையில் தேறியவர் பகுத்தறிவுவாதி.

. அனந்தத்திற்கு இந்த சட்டமோ, எந்தச் சட்டமோ கிடையாது.

. நேரு, இந்திரா, ராஜீவ் பிரதமரானது இந்தச் சட்டப்படி இல்லை.

. பிள்ளையைப் பெற்றவள் சீதனம் கேட்காமல் திருமணச் செலவை ஏற்கிறாள் என்பது உலகமறிந்த எந்தச் சட்டத்திற்கும் உட்படாது.

. விக்காமைத் தேடவேண்டும் என்று டார்சியின் கடமையாகுமா?

. வாழ்வில் அவை அனந்தம், நம் வாழ்விலும் ஏராளமாக உண்டு.

. நமது முடிவு மாறும்.

. நமது முடிவு மனிதனைத் தெய்வமாக்கும்.

தொடரும்....

**** 

ஸ்ரீ அரவிந்த சுடர்

கரணங்கள் முரண்பாடானவை. அவற்றை ஒத்துழைக்கச் செய்தால் முரண்பாடு குறைந்து தகராறாகிறது. ஒத்துழைக்க விரும்பினால் சுமுகம் எழும். ஒற்றுமை எழுந்தால் சுமுகம் உயரும். பூரண முழுமை ஒற்றுமையை இனிமைமூலம் சைத்தியப்புருஷனில் ஏற்படுத்துகிறது.

பூரண முழுமையின் ஒற்றுமை சைத்தியப்புருஷனின் இனிமை.


 


 



book | by Dr. Radut