Skip to Content

06.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V                                                               கர்மயோகி

824) தன் நிலைக்கேற்ற உந்துதலை மனிதன் விரும்பி நாடுகிறான். யோகம் பரிணாமத்திற்குரிய ஆர்வம். மனிதகுலத்தால் விரும்பி ஏற்க இயலாததொன்றாகும்.

மனிதன் தனக்குரிய ஆசைகளை நாடுகிறான்.

இறைவனை நாடும் ஆர்வம் பூரணயோகம்.

குழந்தை பொம்மைகளை விரும்பும், புத்தகத்தை நாடாது. சிறுவர்கள் விளையாட்டை நாடுவர், படிப்பை நாடமாட்டார்கள். மனிதர்கள் அனைவரும் விரும்பும் பொழுதுபோக்கை நாடுவர். இறைவனை நாட பேரார்வம் தேவை. பொதுவாக அது மனிதனுக்கில்லை. அதனால் பூரணயோகத்தை எவரும் நாடுவதில்லை.

****

825) சிருஷ்டியில் பரம்பொருளோடு ஐக்கியமானவனுக்கு யோகம் விருப்பமுடையதாக இருக்கும். ஏற்கனவே சொல்லியவை அந்தந்த நிலைக்குரியவனுக்கு விருப்பமுடையதாக இருக்கும்.

பூரணயோகம் பரம்பொருளோடு ஐக்கியமானவனுக்குரியது.

பூரணயோகத்தை ஆரம்பிக்க, மனிதன் மோட்சத் தகுதி பெற்றிருக்கவேண்டும். முதல் சித்தியின் மூன்று பாகங்கள்:

1. நெஞ்சில் இறைவனைக் காண்பது, 2. உலகில் அவனைத் தரிசனம்

செய்வது, 3. மேலுலகில் இறைவனைக் காண்பது. இவற்றுள்

ஒன்றிருந்தால் மோட்சம் பெறலாம். பொதுவாக அந்த ஒன்றும்

மோட்சம் பெற்றபின் பெறுவதாகும். இது மனிதனுக்குரிய

யோகமில்லை, இறைவனுக்குரியது என்கிறார்.

****

826) எதனோடு நீ ஐக்கியப்பட்டிருக்கிறாயோ, அதுவே நீயாகும். இன்று நீ உணர்வாலான மனிதன் அல்லது மனத்திற்குரியவன். யோகத்தை மேற்கொண்டால் நீ வளரும் ஆன்மாவாகிறாய். வளரும் பரம்பொருளாகவும் ஆகலாம். முன்னோர்கள், சிருஷ்டிக்கு முன்னுள்ள பரம்பொருளை அடைந்தனர். நாம் சிருஷ்டியில் பரம்பொருளாக மாறமுடியும்.

நாம் சிருஷ்டியில் பரம்பொருளாக மாறமுடியும்.

நாம் சிருஷ்டியில் மனமாக இருக்கிறோம். மனிதர்களில் பலர் உணர்வாகவும், உடலாகவுமிருக்கிறார்கள். இதுவரை யோகம் மனிதனுக்கு அளித்த வரம், உடலைவிட்டுப் போய் மோட்சம் அடைவது.

ஸ்ரீ அரவிந்தம் மனிதனை, உலகிலேயே உயர்த்தி முடிவுவரை கொண்டுபோக வழி அமைக்கிறது. உதாரணமாகச் சொன்னால்

இன்று கிராமத்தில் கூலிக்காரன், குத்தகைக்காரன்,

குடித்தனக்காரன், தச்சன், வண்ணான் போன்றவர்கள் உண்டு. இவர்கள் நிலை உயர கிராமத்தைவிட்டுப் போய் படித்து, ஆபீசராகவோ, என்ஜினீயர், டாக்டர், பேராசிரியர், வக்கீல் போலாகலாம். கிராமத்திலேயே வக்கீலாக முடியாது. அதிகபட்சம் பள்ளி ஆசிரியராகலாம். புது நிலைமை வந்து கிராமத்திலேயே வக்கீல், பேராசிரியர் போன்ற பதவிகள் வரவேண்டுமானால், கிராமத்திற்கு கோர்ட், கல்லூரி போன்றவை வரவேண்டும். ஸ்ரீ அரவிந்தம் மனிதனுக்குத் தருவது, கிராமத்திலேயே ஹைகோர்ட் ஜட்ஜ், முதன்மந்திரி, பெருந் தொழிலதிபர் ஆகமுடியும் எனில் கிராமம் பெருநகரமாகவேண்டும்.

****

827) புற நிகழ்ச்சியால் உந்தப்படுவது மனித சுபாவம். புறச் சூழ்நிலையின்றி, தானே உள்ளிருந்து செயல்படுபவன் தவறாது வெற்றி பெறுவான். உள்ளேயும் ஆரம்பிக்க மறுப்பவன் இறைவனை எதிர்பார்ப்பவன். அவன் இறைவன் திட்டப்படி நடப்பவன்.

இறைவன் செயல்பட நாம் செயல்படக் கூடாது.

உலகத்தையொட்டி நடப்பவன் மனிதன். தானே ஆரம்பித்து செயல்படுபவன் முன்னோடி, தலைவன். மனிதன் உலகத்தாலும், பக்தன் தானேயும் செயல்படுகிறார்கள். இதைக் கடந்த இடம் உண்டு. இவையிரண்டாலும் செயல்பட மறுத்தால், இறைவன் நம்முள் செயல்படுவான். அதற்கு அந்தராத்மாவின் குரல் எனப் பெயர்.

****

தொடரும்.....

 

ஜீவிய மணி

சிறு துளி உயர்வு பெற பெரு வெள்ளமான சேவை தேவை. பெரு வெள்ளம் தரும் சிறு துளி.

ஸ்ரீ அரவிந்த சுடர்

நீ ஆச்ரயிப்பதை நீ அடைவாய் என்பது ஆன்மீக உண்மை. உன் மனத்தின் சூழல் எழுவதை உனக்கு அமைந்த அதிகபட்ச வாய்ப்பு என இதிலிருந்து கூறலாம். சமூகச் சூழலும்,யதார்த்தத்திலும் (physical), மனத்தின் சூழலிலும், ஆன்மீகச் சூழலிலும் எழுபவை நமக்கு அந்த அந்த நிலைகளில் ஏற்படும் அதிகபட்ச வாய்ப்பு எனலாம். உரிய முயற்சி முழுப் பலனைத் தரும். உதாரணமாக யதார்த்தமான வாய்ப்புக்கு உடலுழைப்புத் (physical) தேவை.

உரிய முயற்சி முழுப் பலனைத் தரும்.

முயற்சியை முழுவதும் முடித்தவனுக்கு முழுப் பலன் தவறாது உண்டு.


 


 


 



book | by Dr. Radut