Skip to Content

09. இதுவோ உம் ரௌத்திரக் கருணை!

"அன்னை இலக்கியம்''

இதுவோ உம் ரௌத்திரக் கருணை!

                                               (சென்ற இதழின் தொடர்ச்சி....)                       இல. சுந்தரி

"வெளியே அவர்கள் வீட்டு வாசலில் நின்றவளைப் பார்த்துச் சிரித்தேன். அவளும் சிநேகிதமாய் "இங்கே வாயேன்'என்று அழைத்தாள். அப்போது என் வீட்டினர் ஏன் அவள் வீட்டினருடன் பழகுவதில்லை என விசாரித்தேன். அவர்கள் ஆசிரமவாசிகளுடன் நட்புள்ளவர்கள் என்பதால், என் மாமாவிற்கு அது பிடிக்காததால் பேச்சில்லை என்று விளக்கினாள். அப்படி ஆசிரமத்தில் என்னதான் இருக்கிறது என்று கேட்டபோது, ஸ்ரீ அன்னையைப் பற்றிக் கூறி, அவர் தெய்வாம்சம் கொண்டவர் என்றாள். அவர் யார் என்ற விபரம் கூற முடியுமா என்று அவளைக் கேட்டபோது ஒரு சாஸ்த்திரியார் வந்தார். அவர், "என்னிடம் கேளம்மா, சொல்கிறேன். அவர் பராசக்தியின் அவதாரம். முடிந்தால் நீயே ஆர்வப்பட்டு அவரைத் தரிசி' என்றார். அதன்பிறகு அங்கு நான் போக முடியவில்லை என்றாலும் அன்னை பிரெஞ்சு தேசத்தவர் என்றும், பிரெஞ்சில் அவர் எழுதியதைப் படித்தால் புரியும் என்றும் கூறினாரே, அதை மறக்கவில்லை. அதற்காகவே பிரெஞ்சு கற்கிறேன். இது என் வீட்டாருக்குத் தெரியாது. நீயோ ஆசிரமத்திலிருப்பதாய்ச் சொல்கிறாய். அன்னையைப் பற்றி உன்மூலம் அறியலாமே என்ற மகிழ்ச்சியில்தான் உன்னை எனக்காகவே இங்கு அனுப்பியுள்ளதாய்க் கூறினேன்'' என்றாள் உமா.

"உமா! உன்னையும் அன்னை எனக்காகத்தான் பிரெஞ்சு கற்க அனுப்பியுள்ளார். பகவானையும், அன்னையையும் உணராத இவ்வூர் மக்களிடையே அருமை தெரிந்த நீ கிடைத்திருப்பதும் என் பாக்யம்தான்'' என்றாள் ப்ரீத்தி.

அன்றிலிருந்து ப்ரீத்தி இங்கு வந்தது, அவள் அனுபவம்,

உமாவின் தேடல் போன்றவை அவர்கள் பேச்சுப் பொருளானது.

"உமா இன்று வகுப்பில் ஆசிரியர் முதன்முதலில் கூறிய அந்த வாக்கியத்தைக் கவனித்தாயா? அது யாருடைய வார்த்தை என்று தெரியுமா?'' என்றாள் ப்ரீத்தி.

"அது யாருடைய வார்த்தை? உனக்குத் தெரியுமா?'' என்றாள் உமா.

"அது சாட்சாத் நம் ஸ்வீட் மதர் வார்த்தைதான். வேறு யாரால் அந்த அற்புத வார்த்தையைச் சொல்ல முடியும்'' என்கிறாள் ப்ரீத்தி.

"ஆமாம் ப்ரீத்தி. நீ சொல்வது உண்மைதான். கடவுளை வேண்டினால் வேண்டியது கிடைக்கும் என்றுதான் கடவுள் வாழ்த்துத் தொடங்கும். ஆனால் இங்கு எடுத்த எடுப்பில் அவரோடு எல்லாம் ஆனந்தம் என்று சொல்லப்பட்டிருப்பது கடவுளால்தான் கூற முடியும்''.

"நீ என்ன சொல்கிறாய் உமா?'' என்றாள் ப்ரீத்தி.

"இல்லை ப்ரீத்தி. எப்போதும் எதையும் கடவுள் வாழ்த்துடன் தொடங்குவோம். பள்ளிக்கூடத்திலும் கடவுளை வணங்கச் சொல்லித் தருவார்கள். கடவுள் வல்லவர் என்பதால் அவரால் நாம் எதையும் பெறமுடியும் என்று பயன் கருதி வழிபடும் வழிபாடுதான் படித்திருக்கிறேன். அவரில்லாத வாழ்வு சத்தற்ற வாழ்வு என்று அன்னைதானே சொல்லிக்கொடுத்தார்'' என்கிறாள் உமா.

"உமா! எனக்குக்கூட ஒரு நிகழ்ச்சி, அதுவும் என் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது நினைவுக்கு வருகிறது''என்றாள் ப்ரீத்தி.

"சொல் ப்ரீத்தி. என்ன நிகழ்ச்சியது?'' என்றாள் உமா.

"என் ஒன்பது அல்லது பத்து வயதில், நானும், என் அண்ணனும் மாலை வேளையில் எங்கள் ஊர் வயல்புறத்தில் நின்று வேடிக்கை பார்த்தோம். அப்போது என் அண்ணன் என்னைவிட மூன்று வயதே பெரியவன், திடீரென்று என்னிடம் எங்கள் அம்மாவும், அப்பாவும் எங்கள் உண்மையான அம்மா, அப்பா அல்லர் என்றான். எனக்குக் கவலை வந்துவிட்டது. "அப்படியானால் நம் உண்மையான அம்மா, அப்பா யார்?' என்று அழ ஆரம்பித்தேன். "மேலே உள்ள பகவானும், பகவதியும் தான் நம் உண்மையான அம்மா, அப்பா' என்றான். "அவர்களை நாம் பார்க்க முடியாதே' என்றேன். "தினமும் பிரார்த்தனை செய்தால் பார்க்கலாம்' என்று பெரிய மனுஷன்போல் சொன்னான். அப்போதெல்லாம் என் தந்தை தன் பூஜையறையில் ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் படங்களை வைத்திருப்பார். அவர்களைப் பார்க்கும்போது, அவரை நேரில் பார்க்க ஆவல் அடக்கமுடியாமல் தவிப்பேன். ஏன் பிறந்தோம், என்ன ஆவோம் என்ற பயம் அடிக்கடி எழும். உடனே பகவானை, பகவதியை நினைப்பேன்.

திடீரென்று 1941இல் எங்கள் தந்தையுடன் ஆசிரமத்திற்கு வரும் வாய்ப்புக் கிடைத்தது. ஆகஸ்ட் 15 தரிசன நாளில் பகவானையும், ஸ்ரீ அன்னையையும் தரிசித்தவுடன், அன்று சிறு வயதில் என் அண்ணன் ஆகாயத்தை நோக்கி கைகாட்டிய பகவானும், பகவதியும் இவர்களே என்று என் உள்ளுணர்வு கூறியது. பிறகு ஊருக்குத் திரும்பிவிட்டோம். மாலை வேளை வந்துவிட்டாலே அனாதரவாய் உணரலானேன். ஏன் பிறந்தோம்? எங்கே செல்வோம்? மகிழ்ச்சியில்லாத மனநிலை உருவாகிவிடும்.

மீண்டும் இங்கு ஆசிரமம் வந்தபோது இங்கு எனக்குத் தங்கிக்கொள்ள அன்னை இடம் கொடுத்தார். மாலைத் தியானம் முடிந்து என் அறைக்குப் போனபிறகு, இரவு நேரம் மொட்டை மாடியில் அமர்ந்து, எங்கு வந்தோம்? எங்கு போவோம்? என்று அதே சிந்தனையில் ஈடுபடுவேன்.

(இப்படி ப்ரீத்தி சொல்லிக்கொண்டிருக்கும்போதே தான் இங்கு வருமுன் தன் வீட்டு மொட்டை மாடியிலமர்ந்து இதே சிந்தனையில் தானீடுபட்டதை உமா நினைவுகொண்டாள்).

அப்போது யுத்த வேளையாதலால் தெருவிளக்குகள் எரியா.

ஒரு நாள் காலை அன்னையிடம் ஆசீர்வாதப் பூக்கள் வாங்கப் போனபோது, அன்னை மிகுந்த வாத்சல்யத்துடன் என் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு, என்னை மிக அருகில் வைத்துக்கொண்டு, ஒரு நல்ல நண்பரைப்போல, "நீ தினமும் மாலையில் ஏன் இவ்வாறு சிந்திக்கிறாய்?'' என்று கூறியது மட்டுமின்றி, என்னுள் எழும் கேள்விகள், எண்ணங்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டே போனார்கள். நம் கற்பனையைக் கடந்த அவர் அற்புத வடிவை அன்று கண்டேன். "இம்மாதிரியான சிந்தனைகளில் ஈடுபடாதே. எங்களிடம் நம்பிக்கை வைத்துச் சந்தோஷமாயிரு. பொறுப்பு எங்களுடையது. நான் இருக்கிறேன்.ஸ்ரீ அரவிந்தர் இருக்கிறார். உங்களுக்கென்ன கவலை' என்றார். ஆம், இவரே நம் உண்மையான தாய் என்றுணர்ந்தேன்'' என்கிறாள் ப்ரீத்தி.

"என்ன உமா! ஸ்தம்பித்து நிற்கிறாய்'' என்றாள் ப்ரீத்தி.

"ஆமாம் ப்ரீத்தி! இதே வினாக்கள்தாம் என்னையும் எப்பொழுதும் குடைந்தெடுக்கும். எனக்கு யாரிடமும் ஆறுதல் மொழி கிடைக்கவில்லை. ப்ரீத்தி உண்மையிலேயே நான் தேடிய இலக்கைக் கண்டுபிடித்துவிட்டேன். அன்னையின் அந்தப் பதில் அவரே எனக்கும் உண்மையான அம்மா என்பதை உறுதிப்படுத்திவிட்டது'' என்றாள் உமா.

அவர்கள் பிரியவேண்டிய இடம் வந்ததால் இருவரும் பிரிந்தனர்.

அன்றிரவு உமா, "நானிருக்கிறேன். ஸ்ரீ அரவிந்தர் இருக்கிறார். பொறுப்பை எங்களிடம் விட்டுவிட்டு சந்தோஷமாய் இரு'' என்று ப்ரீத்திமூலம் தனக்குச் சொல்லியிருப்பதாய் உணர்ந்து மீண்டும், மீண்டும் அப்பேச்சுக்களையே அசை போட்டாள்.

மறுநாள் வகுப்பு முடிந்து இருவரும் பேசிக்கொண்டே வந்தனர். "அது சரி, ப்ரீத்தி. நீ எப்படி இங்கு நிரந்தரமாய்த் தங்க முடிந்தது?'' என்றாள் உமா.

"அதுவும் ஒரு சுவையான நிகழ்ச்சிதான். அப்போதெல்லாம் அன்னையைக் காண ஆசிரமத்திற்கு வருவதென்றால் அன்னைக்குத் தம் புகைப்படங்களை அனுப்பவேண்டும். ஆசிரம செயலாளர் உத்தரவின்பேரில் என்னுடையதும், என் தங்கையுடையதும் புகைப்படங்கள் அனுப்பப்பட்டன. அன்னை அனுமதிப்பாரோ என்று நாங்கள் தவித்தோம். எங்கள் தவிப்படங்க அன்னை அனுமதியும் வழங்கிவிட்டார். அப்பாவுடன் வந்தோம். அது 1941. அன்னையைப் பார்த்தோம். அவ்வாறு பார்த்தபோது, அப்பா! அவர் எவ்வளவு அழகு. அந்தக் கண்களில் வீசிய பொன்னொளி, அவர் தொட்டதால் ஏற்பட்ட பரவசம் யாவும் என்னைத் தன்வசமிழக்க வைத்துவிட்டது. அவரைப் பிரிந்துபோக என் மனம் சண்டி செய்தது. நளினி மாமாவிடம் கேட்டேன்.

அவரோ முதலில் உன் படிப்பு முடியட்டும். பிறகு வரலாம் என்று கூறிவிட்டார்.

ஃபேணிக்குத் திரும்பினோம். ஆனால் என் மனம் அங்கு ஒட்டவில்லை. என் மனம் எப்போதும் அன்னைக்காக ஏங்கத் தொடங்கிவிட்டது. என் ஏக்கம் புரியாத தோழிகள், "ஏன் என்னவோ போலிருக்கிறாய்?' என்று துளைத்தனர்.

என் மனம் அன்னையையே நினைத்து ஏங்குகிறது. இங்கிருக்கப் பிடிக்கவில்லை என்றேன். அவர்களுக்கு வியப்பு. எனக்கோ என் மனநிலையை அவர்களுக்குக் கூறிப் புரியவைக்கத் தெரியவில்லை.

பி.. தேர்வு முடிந்தவுடன் பாண்டி செல்லவேண்டும் என்பதையே கருதிக்கொண்டிருந்தேன். நளினி மாமாவுக்கும் எழுதினேன். "முதலில் படிப்பை முடி' - என்று அதையே எழுதினார். அன்னையின் அருளால் 1944 ஏப்ரல் தரிசனத்திற்கு அப்பாவுடன் வந்தேன்.

ஒரு நாள் அன்னையைத் தரிசிக்க வந்தபோது, "குட்மார்னிங்' என்று அழகிய பிரெஞ்சில் இனிமையாய்க் கூறினார்கள். அந்தக் கனிவான சொல்லைக் கேட்ட என் உள்ளம் அவருடன் ஒட்டிக்கொண்டு பிரிய மறுத்தது. அன்னையைவிட்டு என்னால் வேறெங்கும் இருக்க முடியாது என்றெண்ணினேன். "தாயே! நான் இங்கேயே உம்முடனேயே இருக்க விரும்புகிறேன்'' என்று திடீரெனக் கூறிவிட்டேன். ஆங்கிலத்தில் கூறியதால் சரியாகச் சொன்னேனா என்றுகூடத் தெரியாது. ஆனால் அன்னை என் பிரார்த்தனையைக் கேட்டவுடன் தன்னிரண்டு கரங்களையும் நீட்டி என்னைப் பிடித்துத் தன் பின்புறம் வைத்துக்கொண்டார்.அடுத்து வரவேண்டியவரை, "கமின் (come in)'' என்றார்.வந்தவரோ என் தந்தை. நான் அவரிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் அன்னையிடம் இங்கே இருக்கப் பிரியப்படுகிறேன் என்று கூறியதை எண்ணி அஞ்சத் தொடங்கினேன்...'' என்று கூறிக்கொண்டிருந்தபோது,

"அட! அப்புறம் என்னாயிற்று?'' என்றாள் உமா.

"அந்த ஆனந்தத்தை என்ன சொல்ல! அன்னையே என் தந்தையாரிடம், "ப்ரீத்தியை இங்கு என்னுடனேயே வைத்துக்கொள்கிறேன்'' என்று சொல்லிவிட்டார்.

(உமா கேட்டுக்கொண்டிருக்கும்போதே பரவசத்தால் கண்ணீர் விடுகிறாள். "காதலாகி, கண்ணீர் மல்கி' என்று இதைத்தான் அடியவர்கள் குறித்திருப்பார்களோ)

அப்பாவிற்கோ, என்ன சொல்வதென்று புரியவில்லை.

"ப்ரீத்தியின் தாய் அவளைப் பிரிந்திருக்க வருந்துவாளே....'' என்று அப்பா தயங்கியபடி கூறினார்.

"அடுத்த ஆண்டு நீங்கள் எல்லோரும் இங்கே நிரந்தரமாய்த் தங்கும்படி வந்துவிடுங்கள்'' என்று சொல்லிவிட்டார் அன்னை''.

"ப்ரீத்தி! நீ ஜென்மஜென்மமாய் பராசக்தியை உபாசனை செய்திருக்கிறாய். அன்னையே உன்னைத் தம்மிடம் வைத்துக் கொள்வதென்றால்..... இது எல்லோருக்கும் கிடைப்பதன்று. உன்னைப் பார்க்கும்போது, உன் பேச்சைக் கேட்கும்போது, நான் அன்னையையே பார்க்கிறேன். என்றேனும் ஒரு நாள் நானும் அவருக்கே உடைமையாகமாட்டேனா என்று ஏங்குகிறேன்'' என்றாள்.

"கவலைப்படாதே உமா. உன் ஆர்வம் நிச்சயம் உன்னை அன்னையிடம் அழைத்துச் செல்லும்'' என்றாள் ப்ரீத்தி.

மாமி உமாவை கோவிலுக்குப் போக அழைத்தாள்.

"இல்லை மாமி. நான் ஒரு முக்கிய டெஸ்டிற்குப் படிக்கிறேன்'' என்று மறுத்தாள்.

"சாமியை வேண்டிக்கொண்டு படித்தால் நன்றாகப் படிப்பு வரும்'' என்றாள் மாமி.

"என் படிப்பே ஸ்வாமிதானே. இதில் வேண்டிக்கொள்ள யாரிடம் போவது' என்றெண்ணிய உமா அப்போதுதான் வீடு திரும்பிய மாமாவைப் பார்த்தவுடன், "மாமி நீங்கள் போய் வாருங்கள். மாமாவுக்கு நான் டிபன் கொடுக்கிறேன்'' என்று காரணம்காட்டி மறுத்துவிட்டாள்.

மாமாவுக்குச் சிற்றுண்டி பரிமாறுகிறாள்.

மாமா சாப்பிட்டுக்கொண்டே பரிவுடன், "உமா, உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்க்கவேண்டும். அரசாங்க வேலையா? சொந்தத் தொழிலா? எப்படிப்பட்ட வேலையில் உள்ள புருஷன் வேண்டும்?'' என்றார்.

"என்ன மாமா, என்னைப் போய்க் கேட்கிறீர்களே? எனக்கு என்ன வேண்டும் என்பது என்னைவிட அம்மாவுக்குத்தானே (ஸ்ரீ அன்னையை எண்ணிக்கொண்டே) நன்றாகத் தெரியும். அவரே பார்த்துக்கொள்வார்'' என்றாள்.

"நீ சொல்வதும் சரிதான்'' என்றார் மாமா.

மறுநாள் வகுப்பில் நுழைந்ததும் ப்ரீத்தி இவள் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஆசிரியர் வர இன்னும் சில நிமிடங்கள் ஆகும் என்ற நிலையில், மாணவிகள் தத்தம் தோழிகளுடன் தத்தமக்குப் பிடித்தவாறு உரையாடிக் கொண்டிருந்தனர்.

"என்ன ப்ரீத்தி! வழக்கத்தைவிட உற்சாகமாயிருக்கிறாய்?'' என்றாள் உமா.

"சீக்கிரம் வா, உமா! உனக்கு அன்னையைத் தரக் காத்து இருக்கிறேன்'' என்றாள் ப்ரீத்தியும் ஆர்வமாய்.அவளை நெருங்கிவந்து, அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள் உமா. அழகான மேலட்டை போடப்பட்ட சிறிய புத்தகம் ஒன்றை ப்ரீத்தி கொடுத்தாள்.

அதை ஆர்வத்துடன் பிரித்து முதல் பக்கத்தைப் புரட்டியவுடன் "தி மதர்'' என்ற பெயரைப் பார்த்தவுடன் அப்படியே அதை மூடி நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். கண்கள் ஆனந்தத்தில் தளும்பி நின்றன.

ப்ரீத்தி உமாவின் கைகளை மென்மையாகப் பிடித்து அன்புடன் அவளை உனக்குத் திருப்திதானே என்பதுபோல் ஒரு பார்வை பார்க்க, உமா நன்றியுடன் கண்களால் பதில் கூறினாள். திடீரென்று வகுப்பு அமைதி ஆயிற்று. ஆசிரியரின் வருகையே அமைதிக்குக் காரணம். மாணவிகள் வகுப்பைக் கவனித்தனர். உமாவின் கவனம் வகுப்பில் இல்லை. புத்தகத்தைப் படிப்பதிலேயே அவள் எண்ணமிருந்ததால், எப்போது வகுப்பு முடியும் என்று எண்ணத் தொடங்கிவிட்டாள்.வழக்கம்போல் ஆசிரியர் உமாவிடம் கேள்வி கேட்க, எப்போதும் அழகாகத் தெளிவாக பதில் கூறி ஆசிரியரை மகிழ்விக்கும் உமா இப்போது புத்தகம் படிக்கவேண்டும் என்ற நினைவிலேயே இலயித்திருந்ததால், "இன்றே படித்துவிடுவேன்'' என்றாள் எழுந்து உற்சாகமாக. வகுப்பே "கொல்'லென்று சிரித்ததும் உமா தன்னிலை உணர்ந்து வெட்கப்பட்டாள்.

"நேற்றே படித்திருப்பாய் என்றல்லவோ கேட்டேன். இன்றுதான் படிக்கப்போகிறாயா?'' என்று ஆசிரியர் அவளை விளையாட்டாய்க் கேலி செய்ய, சட்டென்று ப்ரீத்தி எழுந்து சமாளித்தாள். ஒருவாறு வகுப்பு முடிந்து மாணவிகள் வெளியே வந்தனர்.

"என்னாயிற்று உமா?'' என்றாள் ப்ரீத்தி.

"இல்லை ப்ரீத்தி. இனி எனக்கு எதிலும் நாட்டமிராது. என் நினைவு முழுவதும் நீ கொடுத்த புத்தகத்தில்தான் இருக்கிறது'' என்றாள் உமா.

"வீட்டிற்குப் போய், அமைதியாய்ப் படி'' என்று விடை கொடுத்தாள் ப்ரீத்தி.

அன்றிரவு எல்லா வேலைகளும் முடிந்து மாமாவும், மாமியும் உறங்கியபிறகு, உமா தன் அறையில் சென்று தனியாக புத்தகத்தை எடுத்தாள். வீட்டினர் கண்ணில்பட்டால் தன் தவம் கலைக்கப்பட்டுவிடும் என்று யாரும் அறியாமல் எடுத்தாள்.

தொடரும்.....

****


 book | by Dr. Radut