Skip to Content

08.மனமாற்றம்

"அன்னை இலக்கியம்"

மனமாற்றம் 

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

இல. சுந்தரி

புன்னகை மாறாத மாதவியின் முகம், மரியாதை நிறைந்த பழக்க வழக்கங்கள், பணிவு, யாவும் ஆசிரியர்களைக் கவர்ந்தது. படிப்பிலும் ஆர்வமாய் இருந்தாள். பொதுவாக நன்றாய்ப் படிக்கும் மாணவர்களுக்கு இருந்த கர்வம் கூட அவளுக்கில்லை. படிப்பைத் தவிர அவள் எதற்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. யார் கிண்டல் செய்தாலும் பொருட்படுத்துவதில்லை; விரோதம் பாராட்டுவதுமில்லை.

"மாதவி! நான் இன்று உன் பக்கத்தில் உட்காரலாமா?'' என்று கேட்டவண்ணம் புத்தகங்களுடன் அருகில் வந்து நின்றாள் ஆஷா.

படம் வரைவதில் ஆர்வமாய் ஈடுபட்டிருந்த மாதவி அப்போது தான் ஆஷாவைக் கவனித்தாள்.

"! தாராளமாய் உட்கார் ஆஷா. இதற்கு என்னைக் கேட்கவேண்டுமா என்ன?'' என்று புன்னகை மாறாமல் கூறிவிட்டுத் தன் பணியைத் தொடர்ந்தாள்.

இன்னும் வகுப்பு ஆரம்பிக்கவில்லை. பிரியாவின் லீவு லெட்டர் வந்திருந்ததால் அவள் இடம் காலியாயிருப்பதைக் கண்டு அங்கு உட்கார ஆஷா வந்தாள். அவள் தன் முதல் இடத்தைவிட்டு இப்படி மாதவியின் க்கத்தில் உட்கார்ந்திருப்பது எல்லா மாணவிகளுக்கும் வியப்பாய் இருந்தது.

அன்று குமாரி மிஸ் வந்திருக்கவில்லை. மாதவி எல்லாவற்றிலும் விட்டுக்கொடுப்பதால் ஆஷாவிற்கு அவளுடன் சண்டைபோட வாய்ப்பே எழவில்லை. அதே சமயம் அவள் பெருந்தன்மை ஆஷாவை ஈர்க்கவும் செய்தது.

தனக்கு இணையான, இன்னும் சொல்லப்போனால் தன்னைவிடவும் திறமைசாலியான மாதவியுடன் பாடங்களைக் கவனித்தது, விளக்கங்களைப் புரிந்துகொண்டது, வினாக்களுக்கு விடையளித்தது சுவாரசியமாகவே இருந்தது. மதிய இடைவேளை வந்தது. ஆஷாவின் தோழியர் கூட்டம் காரியர், டிபன்டப்பி, பொட்டலம் என்று அவரவர்களின் உணவுகளுடன் வழக்கமான இடத்திற்குச் சென்றது. ஆஷாவின் வரவிற்குக் காத்திருந்தது.

ஆனால் ஆஷா மாதவியிடம், "மாதவி! இன்று நான் உன்னுடன் சேர்ந்து சாப்பிடப் போகிறேன்'' என்றாள்.

மாதவி வியப்பேதும் அடையவில்லை. சிரித்துக்கொண்டே தலையசைத்துத் தன் டிபன்டப்பியுடன் வழக்கமான மரத்தடிக்குச் சென்றாள். ஆஷா அவளுடன் சென்றாள்.

"பிரியா வாராமல் உனக்கு என்னவோ போலிருக்கிறதா மாதவி?'' ன்றாள். ஆஷா.

"நீயும், பிரியாவும் எனக்கு ஒன்றுதான்'' என்ற மாதவியின் பதில் ஆஷாவை வியக்கச் செய்தது.

இருவரும் மகிழ்வுடன் டப்பாவைத் திறந்தனர். அப்போது, வழக்கமாக ஆஷாவுடன் சாப்பிடும் கூட்டத்தில் ஒருத்தி ஓடிவந்தாள்.

"என்ன ஆஷா? உனக்காக நாங்கள் எவ்வளவு நேரமாய்க் காத்துக் கொண்டிருக்கிறோம். நீ இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறாய்'' என்று பகைவனின் பாசறைக்குச் சென்ற படைத்தலைவனை அழைப்பது போல் கூப்பிட்டாள்.

"நீங்கள் சாப்பிடுங்கள். நான் மாதவியுடன் ஒரு விஷயம் பேசவேண்டும்'' என்று அழைக்க வந்தவளை ஆஷா தவிர்த்தாள்.

வந்தவளுக்கு ஆத்திரம். தங்கள் தலைவி எதிரணியில் கூட்டுச்சேர்ந்துவிட்டதாக எண்ணம். "இருந்தாலும் நீ செய்வது சரியில்லை ஆஷா. இந்த ஆறு வருடங்களில் ஒரு முறை கூட உன்னை நாங்கள் பிரிந்ததில்லை. ஆனால் நீ புது சிநேகிதம் பிடித்துக்கொண்டு எங்களை ஒதுக்கிவிட்டாய்'' என்று கூறியவண்ணம் திரும்ப எத்தனித்தாள்.

அதற்குள் மாதவி, திறந்த டப்பாவை மூடியவண்ணம், "ஆஷா! நாம் ஏன் இங்குத் தனியாகச் சாப்பிட வேண்டும்? நாமெல்லோரும் அங்கு ஒன்றாய்ச் சாப்பிடலாம், வா'' என்று அவள் சாப்பாட்டையும் தானே எடுத்துக்கொண்டாள். வந்தவளுக்கு என்னவோ போலிருந்தது.

மாதவி விசித்திரமான பெண்ணாயிருந்தாள். எப்போதும் பிரியாவுடன் சாப்பிடும் அவள், இன்று இக்கூட்டத்துடன் சாப்பிட்டாள். எல்லோர் பேச்சும் வித்தியாசமாயிருந்தது. அது மாதவிக்கு ஒத்துவாராவிட்டாலும், ஏதும் பேசாமல் சாப்பிட்டாள். தன்னுடன் பேச்சுக்கொடுத்தவர்களுக்கு அளவான,அழகான பதிலைப் பேசினாள். ஆஷாவிற்கு லேசாய் தாழ்வு மனப்பான்மை தலைதூக்கியது. இத்தனை பெரிய கூட்டமும், ஆர்ப்பாட்டமும் இருந்தும் உயரிய குணங்களால், மாதவி சலனப்படாமல் இருந்தாள். அன்றுதான் தன் சிநேகிதிகளின் பேச்சு மட்டமாய் இருப்பதை ஆஷாவால் உணரமுடிந்தது. யாரையேனும் கிண்டல்செய்து, மட்டம்தட்டி மகிழ்ந்து, ஆரவாரம் செய்வதைப் பெருமையாய்க் கொண்டிருந்த அவள், மாதவியின் அளவான, தரமான பேச்சு, பகைமை பாராட்டாத பண்பு, இவற்றால் உள்ளே நிலைகுலைந்துபோனாள். அன்று ஒருவாறு பள்ளி முடிந்தது.

மறுநாள் வகுப்பிற்கு வந்த பிரியா, வகுப்பில் தான் வழக்கமாய் உட்காரும் இடத்தில், மாதவியின் பக்கத்தில் ஆஷா உட்கார்ந்திருப்பதைப் பார்த்து ஏமாற்றமடைந்தாள். ஆஷா ஆணவம் கொண்டவள். அவளிடம் எப்படிப் பேசுவது என்று கலக்கம்தான். இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு, மெல்ல அவளிடம் வந்து, "ஆஷா! என் இடத்தை விடுகிறாயா?'' என்றாள்.

"உன் இடம் இது என்று ஏதேனும் சாசனம் செய்யப்பட்டிருக்கிறதா? நேற்றும் நான் இங்கு தான் உட்கார்ந்தேன்'' என்றாள் ஆஷா.

மாதவி வழக்கம் போல் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தாள்.

பிரியா மாதவியிடம், "மாதவி! இவள் என்ன சொல்கிறாள், பார். இத்தனை நாட்களாக நான் இந்த இடத்தில் தானே உட்கார்ந்திருந்தேன்?'' என்றாள்.

மாதவி கணக்கிலிருந்து தன் கவனத்தை இவர்கள் பக்கம் திருப்பி, "ஆஷா! ப்ளீஸ். அவள் இடத்தில் அவள் உட்காரட்டும். நீ வேண்டுமானால் என் சீட்டில் உட்கார்ந்துகொள். நான் உன் சீட்டில் மாறிக்கொள்கிறேன்'' என்றாள் சமாதானமாக.

"என்ன மாதவி இது? நான் உன் பக்கத்தில் உட்காரத்தானே இங்கு வந்தேன். நீ அங்குப் போகிறேன் என்கிறாயே'' என்றாள் ஆஷா.

ஆஷாவின் தோழிகள் வியப்படைந்தனர். அதற்குள் வழிபாட்டு மணி ஒலிக்கவே, ஆஷா வகுப்புத்தலைவி என்ற முறையில் அவள் வகுப்பை வரிசையாய் அழைத்துச்செல்ல முதலில் போய் நின்றாள். மாணவிகள் வரிசையாய் அவளைத் தொடர்ந்தனர். மீண்டும் வகுப்பிற்கு வந்ததும் அதே இடப்பிரச்சினை. ஆஷா பிடிவாதக்காரி. அவளை யாரும் எதிர்ப்பதில்லை. உடனே ஆஷாவின் சிநேகிதிகள் எல்லோரும் கூடி, "பிரியா, நீ வா. நீ வந்து ஆஷாவின் இடத்தில் உட்கார்'' என்று எல்லோரும் ஆஷாவின் சீட்டில் அவளை உட்காரச்செய்தனர். பிரியா ஏதும் பேசுமுன் குமாரி மிஸ் வந்துவிட்டார். இவர் போதிப்பதில் மிகவும் கெட்டிக்காரர். எனவே, மாணவிகளுக்கு இவரிடம் பயம் கலந்த மரியாதையுண்டு. அவரவர் அப்படியே அடங்கிவிட்டனர்.

குட்மார்னிங் சொல்லி உட்கார்ந்தனர். குமாரி மிஸ்ஸுக்கு மாதவியிடம் பிரியம் அதிகம். அவள் பணிவு, பண்பு, படிக்கும் திறமை, எல்லாவற்றையும் கண்டு இரசிப்பார்.

"மாதவி! இன்று என்ன பாடம் பார்க்கவேண்டும்?'' என்று கேட்டவண்ணம் தன் இருக்கையில் அமர்ந்தார். மாதவி எழுந்து நேற்று நிறுத்திய இடத்தை நினைவுபடுத்தி, மெல்ல அடுத்ததைச் சுட்டினாள்.

உற்சாகமாகப் பாடத்தைத் தொடங்கிய குமாரி, கேள்வி கேட்கும் போதுதான் மாதவியின் பக்கத்தில் ஆஷா உட்கார்ந்திருப்பதைக் கவனித்தார். ஆஷா வகுப்பின் தலைவி. குறும்பு செய்யும் மாணவர்களுக்குத் தலைமைப் பதவியைக் கொடுத்து அவர்கள் ஆற்றலை நெறிப்படுத்தும் ஆசிரியர்களின் உபாயத்தைக் கையாண்டு அவளைக் குமாரி மிஸ் வகுப்புத் தலைவியாக்கியிருந்தார். ஆசிரியரின் வலப்பக்க முன்வரிசையில் முதலிடததில் தான் அவள் எப்போதும் உட்காருவாள். பின்வரிசைக்கோ, நடுஇடத்திற்கோ போகமாட்டாள். மாதவியின் பக்கத்தில் பிரியாவைக் காணாமல் தேடியபோது ஆஷாவின் முன்சீட்டில் பிரியா இருந்தாள். பிரியா மெல்லிய மனம் கொண்ட மாணவி என்பது குமாரிக்குத் தெரியும். ஆஷா அவளைச் சீண்டுவதும் கேள்விப்பட்டிருக்கிறார். இன்று எப்படி இந்த இடமாற்றம் என்று வியப்பாக இருந்தது.

"பிரியா! உன் இடத்தைவிட்டு நீ எங்கே, அங்கே போனாய்?'' என்றார் மிஸ்.

பிரியா பயந்த வண்ணம் எழுந்தாள். அதற்குள் ஆஷா முந்திக்கொண்டு, "மிஸ், நான் தான் மாதவியிடம் சந்தேகம் கேட்க இங்கு வந்தேன். அதற்குள் பெல்லடித்து, நீங்களும் வந்துவிட்டதால் காலியாயிருந்த என் சீட்டில் அவள் உட்கார்ந்தாள்'' என்று சமாதானம் கூறினாள். குமாரிக்கு வியப்பு. பிரியாவை வம்புக்கிழுக்கும் அவள், இப்படி அரவணைத்துப் பேசியது புதுமையாய் இருந்தது.

"என்ன பிரியா? அப்படித்தானா?'' என்றார் பிரியாவைப் பார்த்து.

"ஆமாம் மிஸ்'' என்றாள் பிரியா, செய்வதறியாது.

தொடரும்.......

******

ஸ்ரீ அரவிந்த சுடர்

தனக்கும், குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், இறைவனுக்கும் கடமையுண்டு. உயர்ந்த கடமைகள் தாழ்ந்தவற்றைத் தனக்குள் அடக்கும்.

பக்தி கடமைகளைத் தன்னுட்கொண்டது.

******

Comments

"அன்னை இலக்கியம்"Para 6  -

"அன்னை இலக்கியம்"

Para 6  - Please the line starting with the following to a new paragraph.
ஆனால் ஆஷா மாதவியிடம், ....
Please combine Para 11 & Para 12
Please combine Para 23 & Para 24
Para 26  -  Line  5  - குறும்புசெய்யும்மாணவர்களுக்குத் -  குறும்புசெய்யும் மாணவர்களுக்குத்
Para 26  -  Line 8  - முதலிடததில்தான்  -  முதலிடத்தில்தான்book | by Dr. Radut