Skip to Content

10.அக வாழ்வு

அக வாழ்வு

கர்மயோகி

. சூடான நேரம் சூட்சுமமான வாய்ப்பு.

. மலையைப் புரட்டலாம்; மனத்தை அடக்க இயலாது.

. வெளிநாட்டார் இதுவரை ஆராயாத அரங்கம் இது.

--------

. கோபம், வேகம், ஆசை, அரிப்பு, காமம், குரோதம், குடிமுழுகும் நேரம், உயிருக்கு ஆபத்தான சமயம்போன்றவை மனிதச்சுபாவம் மேலெழுந்து நிற்கும் நேரம்.

. ரிஷிகளும், தெய்வங்களும் தப்பிக்கமுடியாத இடம் இவை.

. கட்டுப்பாட்டிற்கு இந்த நேரம் கட்டுப்படாதவன், கட்டுப்படப்போவதில்லைஇதுவே கட்டுப்பாட்டிற்கு உரிய நேரம்.

. மனிதன் அன்பனாக மாறும் இடம், காலம் இதுவே.

. இது மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட இடம்.

. தெய்வ அனுக்கிரஹம் அருளாகச் செயல்படும் செயது.

. சூடு, சூட்சுமத்துள் நுழையும்.

. அதனால் சூட்சும உலகம் திறந்துகொள்ளும்.

திறந்த வாயில் சூடுபட்டவனுக்கும், எதிரிக்கும் பயன்படும்.

எதிரியில்லாவிட்டால், வாழ்வே - சூழல் - எதிரியாகும்.

. சூடுள்ள நேரமே சொரணை செயல்படும் நேரம்.

கோபம் வரும்பொழுது அடக்கத் தோன்றாது.

கோபத்தின் வேகம் ருசிக்கும். நம் ரசனைக்குரியது கோபம்.

வேகம் எழும்பொழுதுதான் வாழ்க்கை ஜீவனோடுள்ளது.

ஆசையில்லாத நேரம் "சப்"பென இருக்கும்.

அரிப்பே வாழ்வானால், அது ஷாப்பிங் கடையில் அதிகமாக வெளிப்படும்கடைக்குப் போவதே ஜென்மம் சாபல்யமாகும் நேரம்என்பது இன்றைய கொள்கை.

காமம் எழுந்தால், கட்டுப்பாடு நினைவுக்கு வருமா?

காமம் உடலுணர்வு; குரோதம் உடலுடன் உயிரும் அறிவும் சேர்ந்து செயல்படுவது.

"அவனை விட்டேனா பார்" என்று மனம் கருவியது பல வருஷங்கட்கு முன்னிருக்கலாம்இன்று நினைத்தாலும் அதே வேகம் உள்ளிருக்கும். சற்று அதிகமாகவும் இருக்கும்.

. குடிமுழுகும் செய்தி மயக்கம் தரும். மயக்கமடையாமலிருக்க மனோதிடம் வேண்டும்.

. உயிருக்கு ஆபத்து என்றால் யோசனை தோன்றாது; உடலே செயல்பட்டு உயிரைக் காப்பாற்ற முயலும்.

. சொரூபம், சுபாவத்தால் வெளிப்படும் நேரம் இவை.

. இவை மனிதக் கட்டுப்பாட்டில்லாததால், இவற்றை விலக்கி சமாளித்தது துறவறம்.

. பூரணயோகம் இவற்றை ஏற்கிறது.

ஏற்றபின் மனம் அடங்குவதே, அடங்குவதாகும்.

அது நடக்கவேண்டுமானால், அவை வெளிப்படும் நேரம் நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியவேண்டும்.

. அதற்கு முன்னும், பின்னும் பேசுவது பேச்சு; பயனற்றது.

. அந்த நேரம் நம்மை நாம் மறந்த நேரம்.

கட்டுப்படுத்தத் தோன்றாது; முடியாது.

அன்னை நினைவு அடியோடு மறக்கும் நேரம் இது.

. அன்னை நினைவு, சுயநினைவு, கட்டுப்படுத்தும் எண்ணம் ஆகியவை இந்த நேரம் வந்துபோன பலமாதம் கழித்துத் தோன்றும். அடுத்தவர் கேட்கும் வரை தோன்றாது.

முழுமுயற்சி செய்து சுயக்கட்டுப்பாட்டைத் தேடுபவர்க்கு பலநாள் கழித்து தாம் மறந்தது நினைவு வரும்.

சிலமணி நேரம் கழித்து நினைவுவந்தால் அவர் ரிஷி நிலையைக்கடந்தவர்.

இவை உலக அனுபவங்கள்.

. நாம் செய்யக்கூடியதுஎன்ன?

நம்மால் முடியாதது அன்னையை அழைத்தால் முடியும்என்ற கருத்தை மனம் ஏற்றால், ஏற்பது இதமானால், அவர்கட்கு வழியுண்டு.

வழி சுலபமாக இருக்காது.

சுலபமான வழி கேட்பவர், மலையேற வரக்கூடாது.

மலையேறுபவர் ரசிப்பது (adventure) முடியாததை முடியும்படி மாற்றும் முயற்சி.

பல்வேறு சாதனங்கள் பலவகையில் பயன்படும்.

மூச்சு விட ஆக்ஸிஜன் உதவும்.

பிடிப்புக்குரிய கருவிகள் பல.

உடலைக் காப்பாற்றும் உடைகள் பல.

எதுவும் மலையேறுவதை எளிதாக்காது.

முடியாததை முடியவைக்கும் சக்தி அன்னையின் சக்தியென மனம் ஏற்றால், மற்றவர்க்கு முடியாதது நமக்கு முடியும்.

. அன்னையை ஏற்றது பூரணமானால், விமானம் மலைச்சிகரத்தில் நம்மை இறக்கிவிடுவதுபோல் காரியம் முடியும்.

அப்படி முழுமையாக ஏற்கப் பெரும்பாடுபடுபவர்க்கு முதல்தேர்வு மனம் அடங்குவது.

அதுவும் சூடான நேரம் அடங்குவது.

அப்படி அடங்கினால் சூட்சும வாய்ப்பு எழும்.

அது வாய்ப்புஎனக் கொண்டால் வாழ்வு பரிமளிக்கும்.

வாய்ப்பை வாயிலாகக்கொண்டால் யோகவாயில் திறக்கும்.

யோகத்தின் முதற்படி அடங்கிய மனம்.

. வாய்ப்பை யோகவாயிலாக எடுத்துக்கொண்டபின் யோகம் செய்வதைப் பற்றிக் கருதாமல், அவ்வாய்ப்பு வாழ்வை யோகவாழ்க்கையாக்குவதைக் கருதும் கட்டுரை இது.

. முழுமுயற்சியை, முழுமுதற் கடமையாகக்கொண்டவர் அன்னை மறந்து போனதைத் தானே நினைவுகூறும் நேரம் பலமாதம், பலநாள், பலமணிஎனக் கண்டால், அவர் செய்யக்கூடிய முதற்காரியம்,

அந்நினைவு கோபம் அடங்கியவுடன் வர முயலவேண்டும்.

கோபம் வருமுன் நினைவு வருவது சித்தி.

. இதைப் பிரார்த்தனையாலோ, அழைப்பாலோ, அறிவாலோ, பக்தியாலோ, நம்பிக்கையாலோ, முயற்சியாலோ, அருளாலோ செய்யலாம்.

எதன்மூலம் செய்வதானாலும் முறையொன்றே.

. கோபப்பட வெட்கப்படவேண்டும்; பெருமைப்படக்கூடாது.

. கோபம் எழும்முன் நினைவு எழ மனம் சம்மதிக்கவேண்டும்.

. தோல்வி முழுமையானாலும், மனம் தளரக்கூடாது.

. ஆயிரம் முறை தோற்றாலும், தள்ளிவரும் பலன் பெரியதாக இருக்கும் என மனம் அறியவேண்டும். அப்படி அறிவது சற்று ஆறுதலாக இருக்கும்.

. அருள் காரியத்தை ஏற்கனவே நல்லபடியாக முடித்துவிட்டது.

நம் கோபம் அழியப் பலன் காத்திருக்கிறதுஎன்ற ஞானம் ஒரு சிறிதளவு பொறுமையைத் தரும்.

. நாமே கோபத்தைக் கிளறி ரசித்தால் கோபம் வளரும்.

. இரவு பகலாக இதிலிருந்து விடுபடப் பிரார்த்தனை செய்தாலும், நேரம் வந்தால் கோபம் நினைவை மீறும்.

. இது நம் முயற்சியாகவுள்ளவரை பலனிருக்காது.

. பிரார்த்தனை நம்முடையது, முயற்சி நம்முடையது, நினைவு நம்முடையது, சரணாகதியும் நம்முடையதுஎனில் மிஞ்சுவது "நாம்";

சரணாகதியில்லை.

. நம்மை விலக்காமல் சரணாகதியில்லை.

நம்மை நாமே விலக்குவது எப்படி?

நினைவு நம்மை மறக்கச்செய்யும் நேரம் எழும் சரணாகதி சரணாகதியாகும்.

. இதை தியானத்தால் சாதிக்க முடியாது.

சமர்ப்பணமான செயலால் சாதிக்கலாம்.

சமர்ப்பணம் செயலுக்குமுன் எழவேண்டும்.

செயலுக்குமுன் உணர்வுண்டு.

அதற்குமுன் எழவேண்டும்.

உணர்வுக்குமுன் நினைவுண்டு.

நினைவுக்குமுன் சமர்ப்பணம் எழவேண்டும்.

நினைவுக்குமுன் சூட்சும நினைவுண்டு.

சூட்சும நினைவுக்கு முன்எழும் சமர்ப்பணம் பலிக்கும் .

க்ஷணம் தவறினால் சூட்சும நினைவு ஏமாற்றிவிடும்.

. இது 50 வருஷத்தில் பலிப்பது அருள்.

. பேரருள் அன்றே பலிக்கும்.

. அருளை மனம் நாடினால் மனம் அடங்கும்.

பேரருளை மனம் அறிந்தால் அடங்கிய மனம் அதே நிலையில் நீடிக்கும்.

. வயதான பெண் திருமணத்தை நாடும் தாயார் நினைவுபோல் சூடு அடங்க மனம் விழைந்தால், விழையும் மனம் அதை நிறைவேற்ற அன்னையை நம்பினால், மனம் அடங்குவதுபோல் தோன்றும்; அடங்காது.

ஒவ்வொரு க்ஷணமும் நாம் அன்னையை நோக்கி நகர்கின்றோமா, நம்மை நோக்கி வருகின்றோமாஎனத் தெளிவாகத் தெரியும்.

அன்னையை நோக்கி நகர்வது நிலையானால், அடங்க முயலும் மனம் சற்று அடங்கும்.

தொடர்ந்து அன்னையை நோக்கி நகர்வது ருசித்தால் அப்படி நகர இயலும். ருசி, சந்தோஷமாக மாறினால் பலன் அதிகமாக இருக்கும்.

சரி, நம் முயற்சி பலிக்கிறது எனத் தோன்றினால் மனம் பழைய நிலைக்கே நிலையாக வந்துவிடும்.

அன்னையை நோக்கி நகர்வது தொடர்ந்தால், தொடர்வது ருசித்தால், ருசி ஆனந்தமானால், "இது நம் முயற்சியன்று, அன்னையின் அருள்" எனத் தோன்றினால் சூடு அடங்கும்;

மனம் அடங்கும்.

மனமும் சூடும் அடங்கினால் சாந்தி பிறக்கும்.

அது சூட்சுமம் தன் வாயிலைத் திறப்பது.

சாந்தி நிலைத்தால், திறந்த வாயில் மூடாது.

வாயில் வாய்ப்பைக் காட்டும்.

வாய்ப்பைப் பலனாகக்கொள்ளாமல் யோகவாய்ப்பாகப் புரிந்து, அதை வாழ்வில் பயன்படுத்தினால் வாழ்வு யோகவாழ்வாகி, மனமும் ஜீவனும் அடங்கி, பூவுலகம் பொன்னொளிக்குரியதாகி, பூலோகச்சுவர்க்கம் நம் வாழ்வில் பிறக்கும்.

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

உதவி, சேவைஎன்பவை சமூகத்தின் இலட்சியங்கள். ஆதியில் அவற்றிற்கு அர்த்தம் இல்லை. தன்னலத்திற்காகச் செய்யும் உதவியும் சேவையும் பயன் தரும். அதைக் கடந்த நிலையில் உதவி, சேவையில்லை.

உதவியிலும் சேவையிலும் சுயநலமின்றி வேறில்லை.


 


 


 



book | by Dr. Radut