Skip to Content

04. வாழ்க்கையை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான மனோபாவங்களும் செயல்பாடுகளும்

வாழ்க்கையை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான மனோபாவங்களும் செயல்பாடுகளும்

N. அசோகன்

  1. வெளியிலிருந்து வரும் தூண்டுதல்களுக்கு உடனே Response வழங்க வேண்டாம். எப்பொழுதுமே சற்றுப் பின்வாங்கி மறுபரிசீலனை செய்து அதன்பின்னர் Response வழங்குவது நல்லது. அப்படி பின்வாங்குவது முதல் கட்டம். சலனம் இல்லாமல் இருப்பது இரண்டாம் கட்டம். நிரந்தரச் சமநிலையை அடைவது மூன்றாம் கட்டம்.
  2. Life Response என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அகம் புறத்தை நிர்ணயிக்கிறதுஎன்பதை நாம் நம்ப வேண்டும்.
  3. நாமே உருவாக்கிய பணம், பதவி, அதிகாரம் ஆகியவற்றிற்கு நாமே அடிமையாவதைத் தடுக்க வேண்டும். நம் கண்டுபிடிப்புகளைவிட நாமே முக்கியம்என்பதை உணரவேண்டும். இந்த உணர்வு வலுப்பெறுமளவிற்கு வாழ்க்கை நமக்குக் கட்டுப்படும்.
  4. நம்முடைய தனித்தன்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்முடைய முடிவுகளில் உண்மை இருக்கிறது என்று தெரிந்தால், நாம் போகிற பாதை சரிஎன்று தெரிந்தால், நம் முடிவில் நாம் உறுதியாக நிற்க வேண்டும். சமூகம் நம் முடிவை ஆதரிக்கவில்லை என்பதால் சமூகத்துடன் ஒத்துப்போவது நல்லதுஎன்று நாம் பின்வாங்கக் கூடாது. சமூகத்திற்கு அடிபணியும் அளவிற்கு வாழ்க்கை நம்மைக் கட்டுப்படுத்தும். நாம் தனித்தன்மையைக் கருதும் அளவிற்கு வாழ்க்கை நமக்குக் கட்டுப்படும்.
  5. வெளித்தோற்றத்தைக் கருதாமல் உள்ளுறை சாரத்தைக் கருத வேண்டும். போலியான தோற்றத்தைக் கண்டு ஏமாறக் கூடாது. தோற்றம் சரியில்லைஎன்றாலும் உள்ளுறை விஷயம் உண்மையாக இருந்தால் அதை ஆதரிக்க நாம் தயங்கக் கூடாது.
  6. வாழ்க்கை தரும் சிரமங்களையும், சவால்களையும் கண்டு மிரளக் கூடாது. தைரியமாக அவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும். வாழ்க்கை தரும் சவால்களை நாம் மகிழ்ச்சியோடு எதிர்கொண்டோம்என்றால் பெரிய வெல்ல முடியாத சிரமமாகத் தென்பட்டது நம் கட்டுப்பாட்டிற்குள் வருவதைக் காணலாம்.
  7. தீர்வு இல்லாத பிரச்சினை இல்லைஎன்று நமக்குத் தெரிய வேண்டும். மேலும் பெரும்பாலான பிரச்சினைகளுக்குள்ளேயே தீர்வு இருக்கிறதுஎன்பதையும் உணர வேண்டும்.
  8. அன்னையின் கருத்துப்படி பார்த்தால் நாம் வாழ்க்கையை இன்முகத்துடன் வரவேற்றால் வாழ்க்கையும் நம்மை இன்முகத்துடன் வரவேற்கும்.
  9. புதியதாக ஒரு முயற்சி எடுக்கும்பொழுது அது சம்பந்தப்பட்ட விவரங்களை எல்லாம் அலசி, ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். முடிவைச் செயல்படுத்தும்பொழுது அதில் முழு உற்சாகம் இருக்க வேண்டும். செயல்படும்பொழுது வேலையை நேர்த்தியாகச் செய்ய வேண்டும். எனவே, இம்மூன்றும் இருந்தால் நமக்குத் தவறாமல் வெற்றி கிடைக்கும்.
  10. அதிகாரம் செலுத்த வேண்டிய இடத்தில் அதிகாரம் செலுத்தி, சுதந்திரம் கொடுக்கவேண்டிய இடத்தில் சுதந்திரம் கொடுக்க வேண்டும். இப்படி அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரிய வேண்டும்.
  11. இடையறா முன்னேற்றத்தை வாழ்க்கையினுடைய குறிக்- கோளாக ஏற்றுக் கொள்ள வேண்டும். கிடைத்த முன்னேற்றம் போதும் என்ற எண்ணம் வரவே கூடாது. ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று விரும்பவும் கூடாது.
  12. இரகசியமான விஷயங்களை இரகசியமாகவே வைத்திருக்க வேண்டும். நம்பிக்கைக்குத் தகுதியில்லாதவர்களை நம்புவதும் தவறு. அதே சமயத்தில் நம்ப வேண்டியவர்களை நம்பாமல் சந்தேகப்படுவதும் தவறு.
  13. வேலை விவரங்களில் ஒரு நேர்த்தியை வெளிப்படுத்த வேண்டும். முக்கிய முடிவுகளைச் சரியாக எடுக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு வேலையின் விவரங்களில் நேர்த்தி அவசியம்என்பதையும் உணர வேண்டும்.
  14. எதையும் அவசரமாகவும், பதட்டமாகவும் செய்யக் கூடாது. அவசரமும், பதட்டமும் வேலையைக் கெடுக்கும். நிதானமும், திறமையும் கலந்த அணுகுமுறை வேலையை வெற்றிகரமாக முடித்துத் தரும்.
  15. உடனே கிடைக்கும் ஆதாயங்களைத் தவிர்த்து நெடுங்காலக் கண்ணோட்டத்தில் எது நல்லதோ அதை குறிக்கோளாக வைத்து, சாதனைக்கானத் திட்டம் தீட்ட வேண்டும்.
  16. நம்முடைய அறிவு நன்றாகச் செய்யக்கூடிய வேலைகளை நம்முடைய அறிவிடமே விடவேண்டும். அறிவால் செய்ய முடியாத வேலைகளில் நம் உள்ளெழுச்சி என்ன சொல்கிறதோ அதன்படி செயல்பட வேண்டும். இப்படி அந்தந்தக் கரணம் அது அதற்குண்டான வேலையைச் செய்துகொண்டு, ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாமல் இருந்தால் நல்லதுஎன்று பகவான் சொல்கிறார்.
  17. அன்னையின் கருத்துப்படிப் பார்த்தால் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் மேலோட்டமாகமட்டும் புரிந்து கொள்ளாமல் அந்நிகழ்ச்சியின் ஆழ்ந்த உள் அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முயல வேண்டும். இப்படி ஆழ்ந்த அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ளும் பொழுது எந்த நிகழ்ச்சியும் நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் வரும்.
  18. எப்பொழுதும் தேவைப்படும் அளவிற்குதான் நாம் மற்றவர்களுக்கு விவரம் தரவேண்டும். தேவையில்லாமல் செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
  19. தேவையான செலவுகளை மனம் சுருங்காமல் செய்துகொண்டு வந்தோம்என்றால் பணவரவு தொடர்ந்து வந்துகொண்டே லியிருப்பதற்கு ஏதுவான வாயில்கள் நம் வாழ்க்கையில் திறந்தேயிருக்கும்.
  20. நாம் செலவு செய்யும் எனர்ஜியைவிட நம் உடம்புக்குள் வரும் எனர்ஜி அதிகமாக இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும். திட்டமிட்ட உணவு, முறையான உடற்பயிற்சி, சுத்தமான பழக்க வழக்கங்கள் மற்றும் சந்தோஷமான மனநிலை ஆகியவை நம்முடைய எனர்ஜி balance எப்பொழுதும் பாஸிட்டிவாக வைத்துக்கொள்ள உதவும். இப்படி எனர்ஜியை நமக்குச் சாதகமாக வைத்துக்கொள்வது நம்முடைய உடல்நிலை எப்பொழுதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவும்.
  21. நாம் அடுத்தவர்களை உதவி கேட்கும்பொழுது நாம் கேட்கின்ற உதவிகள் நியாயமானதாக இருக்கவேண்டும். யாரைக் கேட்கிறோமோ அவர்கள் நமக்கு நன்றாகத் தெரிந்தவர்களாக இருந்து, அவர்களுக்கு உதவும் மனப்பான்மை உண்டுஎன்பது தெரிந்திருந்தால் கேட்கின்ற உதவி கிடைக்கும். அதே சமயத்தில் நம்மை யாரேனும் உதவி கேட்டால் நம் சக்திக்குட்பட்ட அளவுதான் உதவி செய்ய முன்வர வேண்டும். நம் சக்திக்கு மீறிய உதவியை ஒத்துக்கொண்டால் அது நமக்கே சிரமமாகிவிடும்.
  22. நாம் ஏற்றுக் கொண்டுள்ள பண்புகள், இரசனைகள் மற்றும் பழக்க வழக்கங்களுடன் ஒத்துப்போகின்ற மனிதரை நாம் திருமணம் செய்துகொள்ள வேண்டும். அத்தகைய திருமணம் நாம் எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்கும். இப்படியில்லாமல் இருவருடைய பண்புகளும், இரசனைகளும், பழக்க வழக்கங்களும் மாறுபட்டு இருந்தால் திருமண உறவு கசப்பான அனுபவமாக மாறிவிடும்.
  23. நம்மால் முடியாதது அன்னையால் முடியாதுஎன்று அர்த்தமில்லை. நாம் அன்னைமேல் வைக்கின்ற நம்பிக்கை இப்படியொரு திடமானதாக இருக்கவேண்டும். பிரச்சினை என்று எழுந்தால் நம்முடைய பர்ஸனாலிட்டியை விலக்கி பிரச்சினையை அன்னையிடம் சமர்ப்பணம் செய்தால் அவருடைய அருள் வேகமாகச் செயல்பட்டுத் தீர்வை வழங்கும்.
  24. வாழ்க்கையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்க விரும்பினால் முன்னேற்றம் தரும் சாதனைகளைப் பற்றிய விதி முறைகளைத் தெரிந்துகொண்டு அவற்றை நம் வாழ்க்கையில் விவரமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
  25. அதிர்ஷ்டமும், ஐஸ்வரியமும் நம்மைத் தேடி வரும்பொழுது நம்முடைய நிதானம் கெடக்கூடாது. நிதானம் கெடாமல் இருக்கும்பட்சத்தில் நமக்கு வரும் முன்னேற்றத்தை நம்மால் சமாளிக்க முடியும். நிதானம் கெட்டுவிட்டால் வரும் முன்னேற்றத்தை நம்மால் சமாளிக்க முடியாது. அப்பட்சத்தில் வந்த அதிர்ஷ்டம் மீண்டும் விலக நேரிடும்.
  26. வெளியில் கிடைக்கின்ற பொருள்வளங்களைவிட நம்முள்ளிருக்கும் மனவளங்கள் பல மடங்கு சிறந்தவை. அதனால் நம் வெளி வாழ்க்கையின் குறைபாடுகளை நம் உள் சாமர்த்தியத்தால் வென்றுவிடலாம்.
  27. அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்வதற்கான விதி முறைகளைத் தெரிந்துகொண்டு நாம் வாழ்க்கையில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். வருகின்ற வாய்ப்புக்கு ஏற்றபடி நம் பர்ஸனாலிட்டியை விரிவாக்கிக்கொள்ள வேண்டுமேதவிர நம்முடைய சிறிய பர்ஸனாலிட்டிக்கு ஏற்றபடி வருகின்ற பெரிய வாய்ப்பைச் சுருக்கிக்கொள்ளக் கூடாது.
  28. இருக்கின்ற பிரச்சினையைப் பற்றி எந்நேரமும் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தால் அப்பிரச்சினை மேலும் மோசமாகும். ஆன்மா அதனைப் பிடித்துள்ள பிரச்சினைகளை மறக்கும் பொழுது அப்பிரச்சினைகள் மறைந்து போகின்றனஎன்று பகவான் சொல்கிறார். அதே ரீதியில் பார்த்தால் இப்பொழுது நமக்குள்ள பிரச்சினைகளை மறந்து கவலையற்று இருந்தோம் என்றால் அப்பிரச்சினைகள் தீர்ந்து போகும்என்று தெரிகிறது.
  29. எப்பொழுதும் நம்முடைய தன்னம்பிக்கையை உச்சக் கட்டத்தில் வைத்திருக்க வேண்டும். சந்தேகம், அவநம்பிக்கை ஆகியவற்றைத் தலையெடுக்கவே விடக்கூடாது. அவை தலையெடுத்தால் நம்முடைய முயற்சி கெட்டுவிடும். நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்ற சூழ்நிலை நம் கட்டுப்பாட்டை மீறிவிடும்.
  30. நம்முடைய உடம்பிற்கு நம்முடைய உணர்வுமையத்தினுடைய சக்தியைக் கொண்டு தெம்பு ஊட்ட வேண்டும். நம்முடைய உணர்வு மையத்தை நம்முடைய அறிவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். நம்முடைய அறிவை நம்முடைய ஆன்மாவினுடைய நம்பிக்கைக்குக்கீழ் வைக்க வேண்டும். இப்படிச் செய்தோம்என்றால் நம்முடைய சாதனை நாம் நம்ப முடியாத அளவிற்குப் பல மடங்கு அபிவிருத்தியாவதைப் பார்க்கலாம்.
  31. எது காரணம், எது விளைவுஎன்பதை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். விஞ்ஞானிகளைப்போல காரணத்தையும், விளைவுகளையும் தலைகீழாகப் புரிந்து கொள்ளக் கூடாது.
  32. Physical லெவலைவிட சூட்சுமநிலை மிகவும் சக்தி வாய்ந்தது. ஆகவே ஒரு வேலையினுடைய சூட்சுமப் பாகங்களை நாம் நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் அவ்வேலை சம்பந்தப்பட்ட physicalஆகச் செய்யவேண்டிய காரியங்கள் எல்லாம் தாமாகவே பூர்த்தியாகும்.
  33. அறிவு, உற்சாகம் மற்றும் கடின உழைப்புஎன்று இவை மூன்றுமே தனித்துச் செயல்படும்பொழுது வேலை கூடி வருவதில்லை. இவை மூன்றும் ஒன்று சேர்ந்து ஒருங்கிணைந்து செயல்படும் பொழுது வேலை நிச்சயம் கூடிவரும்.
  34. அன்னையின் கருத்துப்படி பார்த்தால் கடினமாக இருந்தாலும் நம்மால் அதிகபட்சம் என்ன செய்ய முடியுமோ அதை நாம் சாதிக்க வேண்டும். இந்த மனப்பான்மையுடன் நாம் செயல்படும் பொழுது முடியாதுஎன்று நினைத்த விஷயங்கள் எல்லாம் முடியும்என்ற நிலைக்கு வருவதைப் பார்க்கலாம்.
  35. நாம் ஏற்றுக் கொண்ட உயர்ந்த லட்சியத்திற்கு நாம் உண்மையாக இருந்தோம்என்றால் நம்மைச் சுற்றியுள்ள சாதாரண வாழ்க்கை நமக்குக் கட்டுப்படுவதைப் பார்க்கலாம். ஆகவே வாழ்க்கை நமக்குக் கட்டுப்படுவதின் அளவுஎன்பது நம்முடைய லட்சிய ஈடுபாட்டிற்கு நாம் காட்டும் சின்ஸியரிட்டிக்கு சமம்என்று எடுத்துக் கொள்ளலாம்.
  36. வாழ்க்கை மற்ற எல்லாவற்றையும்விட அதிகாரத்திற்குக் கட்டுப்படுகிறது. ஆகவே, நாம் என்ன வேலை எடுத்துக் கொள்கிறோமோ அதற்கு இணையான அதிகாரத்தையும் சேகரம் செய்துகொள்ள வேண்டும்.
  37. நாம் வீட்டில் சாதிக்க விரும்பினால் நமக்கு வாழ்க்கைத் துணையாக அமைந்தவர் நமக்கு ஒத்துழைக்க வேண்டும். அலுவலகமாக இருந்தால் நமக்கு மேலிருக்கும் அதிகாரியும், பொது வாழ்க்கையாக இருந்தால் மக்களும், சர்வதேச அரங்கமாக இருந்தால் தேசங்களும் நம் பக்கம் இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும்மேல் நாம் சாதிக்க விரும்புகின்ற விஷயத்தில் உண்மையிருந்தால் வாழ்க்கையே நம் பக்கம் ஆதரவாக வரும்.
  38. நாம் சாதிக்க விரும்புகின்ற விஷயம் காலத்திற்கு ஏற்றாற் போலதாக இருந்தால் நம்முடைய சாதனை அந்த அளவிற்குச் சுலபமாக இருக்கும். வாழ்க்கை தாண்டிவந்த விஷயங்களை இப்பொழுது நாம் செயல்படுத்த விரும்புகிறோம்என்றால் அந்த அளவிற்கு நம் சாதனை கடினமாகிவிடும்.
  39. நாம் இதுவரையில் ஆண்டவனிடமிருந்து அனுபவித்த அருளுக்குரிய நன்றியறிதலால் நம் நெஞ்சத்தை நிரப்பினோம் என்றால் அப்படிப்பட்ட நன்றியறிதலுக்கு வானிலைகூட Response வழங்கும். அதாவது மழைகூட நாம் கேட்கும் பொழுது நமக்காகப் பெய்யும்.
  40. அன்னை ஓர் அன்பருக்கு வழங்க முடிவு செய்துள்ள ஒரு விஷயம் அவரைத் தேடி உடனே வரும். ஆகவே நாம் அவரைக் கேட்கின்ற விஷயம் அவர் அனுமதிக்கக் கூடியதாக இருக்கிறதாஎன்று பார்த்துக்கொள்ள வேண்டும்.
  41. ஒருவருடைய தகுதிக்குமீறிக் கொடுக்கும்பொழுது அவர் நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கமாட்டார். அதே சமயத்தில் ஒருவருடைய தகுதிக்குக் குறைவாகக் கொடுத்தாலும் அப்பொழுது அவர் நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கமாட்டார். ஆகவே, அடுத்தவருடைய ஒத்துழைப்பு நமக்கு வேண்டுமென்றால் அவர்களுடைய தகுதிக்கு ஏற்றமாதிரி நாம் கொடுக்க வேண்டும். கூடவோ, குறையவோ கூடாது.
  42. நாம் அடுத்தவருக்கு பணம் கொடுக்க வேண்டும்என்ற நிலையிலிருந்தால் பணத்தின் கைதான் ஓங்கி இருக்கும். மற்றவர் நமக்குப் பணம் கொடுக்க வேண்டியிருந்தால் நம் கை ஓங்கியிருக்கும். ஆகவே பணத்தைத் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க விரும்புகின்றவர்கள் எவரிடமும் கடன் பட்டிருக்கக் கூடாது.
  43. பணமும், அதிகாரமும் அடுத்தவருடைய எதிர்ப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கான பாதுகாப்பு அரண்களாகச் செயல்படக் கூடியவைகள். ஆகவே தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விரும்புகின்றவர்கள் பணத்தையும், அதிகாரத்தையும் சேகரித்துக்கொள்ள வேண்டும்.
  44. சட்டம் தனக்கு ஆதரவாக இருக்க வேண்டும்என்று விரும்புகிறவர் அவருடைய பணம் சம்பந்தமான செயல்பாடுகள் எல்லாவற்றையும் recordஇல் கொண்டுவர வேண்டும். பண விஷயமாகத் தகராறு எழுந்தால் இருக்கின்ற ழ்ங்ஸ்ரீர்ழ்க்கள் நமக்குச் சாதகமாகப் பேசும். அவ்வகையில் பணம் நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
  45. வாழ்க்கை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர் எப்பொழுதும் தாம் வாங்கிக் கொள்கின்ற உதவியைவிட, செய்கின்ற உதவி அதிகமாக இருக்கும்படியான நிலையில் தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  46. தம்முடைய அதிகாரத்தை அடிக்கடி நிலைநிறுத்த வேண்டியிருக்காமல் தமக்குக் கீழ் இருப்பவர்கள் தாமாகவே அவரவர் செய்யவேண்டிய வேலைகளைச் செய்து கொண்டிருந்தால் அப்படிப்பட்டவருக்கு அவருடைய வேலை விஷயத்தில் வாழ்க்கை முழுவதும் கட்டுப்பட்டுள்ளதாக அர்த்தமாகும்.
  47. சேவை சம்பந்தப்பட்ட வேலைகளை அகந்தையில்லாமல் செய்யும் பொழுது வாழ்க்கை முழுவதும் கட்டுப்படுகிறது. ஆனால் அகந்தை தன்னுடைய விருப்பு, வெறுப்புகளோடு தலையிடும் பொழுது சேவை சம்பந்தமான வேலை கெட்டு வாழ்க்கை கட்டுப்பாட்டைமீறிப் போகிறது.
  48. ஓர் உயர்ந்த நிலையில் வாழ்க்கையை நடத்த விரும்புகின்றவர் அவருடைய பர்சனாலிட்டியின் உயர்ந்த அம்சத்திற்கு ஏற்றபடி தம்முடைய தாழ்ந்த அம்சங்களையும் மாற்ற வேண்டும். இதில் வெற்றி பெறுகின்றவர் வாழ்க்கையைத் தம்முடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார். ஆனால் ஒப்புக்காக உயர்ந்த லட்சியங்களை ஏற்றுக்கொண்டு உண்மையில் தம்முடைய தாழ்ந்த அம்சங்களைப் பாராட்டிக் கொண்டிருப்பவரால் வாழ்க்கையைத் தம்முடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியாது.
  49. பகுதியைமட்டும் தெரிந்துகொள்ளாமல் முழுமையைத் தெரிந்து கொண்டிருப்பவருக்கு வாழ்க்கை சுலபமாகக் கட்டுப்படும்.
  50. வாழ்க்கை மனிதனைவிடப் பெரியது. ஆனால், அன்னை வாழ்க்கையைவிடப் பெரியவர். ஆகவே, அன்னையை ஒருவர் தம் வாழ்க்கையின் மையமாக வைக்கும்பொழுது அவரும் வாழ்க்கையைவிட பெரியவராகிறார். அப்படிப்பட்டவருக்கு வாழ்க்கை கட்டுப்பட்டே ஆக வேண்டும்.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
எலக்ஷனில் ஜயிப்பதற்கும், அடங்காத மனைவியை அடக்குவதற்கும் முறையைப் பொறுத்தவரை வித்தியாசமில்லை.
 
சிறியதற்கும் பெரியதற்கும் பொதுவான முறை.

******



book | by Dr. Radut