Skip to Content

13. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

மாம்பலம் தியானமையத்தில் இரண்டாம் ஞாயிறு அன்று அன்பர்கள் கூறிய அனுபவங்கள்.

ஒரு தொழிலதிபர் அன்னை அன்பர். அவரது தொழிலாளி அவரை ஏமாற்றிவிட்டான். கடுங்கோபம் வந்தது. ஸ்ரீ அப்பாவின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்கிறேன் என்றார். தொழிலாளி மீதுள்ள கோபத்தையும், வெறுப்பையும் நீக்கிவிட்டு, இவைதான் தனது தொழிலுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளும்படி ஸ்ரீ அப்பா அவர்கள் அறிவுரை வழங்கினார். பிறகென்ன சொல் மந்திரமாயிற்றே, அன்பரும் ஏற்றுக் கொண்டார், அவரது தொழிலும் பல்மடங்கு பெருகியது.

******

வங்கி லாக்கர் சாவியை அன்பர் தொலைத்துவிட்டார். என்ன செய்வது, ஒன்றும் புரியவில்லை. ரூ.3500 அபராதம் கட்டினால் லாக்கரை உடைத்து திறந்து கொடுப்பதாக வங்கி அதிகாரிகள் கூறினர். அன்பருக்கு அதில் இஷ்டமில்லை. அன்னை எப்படியாவது சாவியைத் தேடிக் கொடுப்பார் என நம்பிக்கை இருந்தது. இரண்டு வருடங்களாகியும் நம்பிக்கை குறையவில்லை. இதில் நடுவே ஒரு முறை வீட்டை மாற்றியும் உள்ளார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு வீட்டில் உள்ள ஒரு பெட்டியைத் திறந்து பார்த்தால், ஏகப்பட்ட சாவிக் கொத்துக்கள். அதில் லாக்கர் சாவியும் அன்பரைப் பார்த்து சிரித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது.

*****

இவ்வனுபவத்தை கேட்டு வீட்டிற்குச் சென்ற மற்றொரு அன்பருக்கு ஒரு வருடமாய் காணாமல் போன சாவி கிடைத்தது. இவர் பிரார்த்தனையும் செய்யவில்லை. காணாமல் போன சாவியைப் பற்றி நினைக்கவுமில்லை. கேளாமலேயே கொடுக்கும் தாய், ஸ்ரீ அன்னை.

*****

ஒரு அன்பருக்குத் தன் கைக்கடிகாரத்தை எங்கு வேண்டுமானாலும் கழட்டி வைக்கும் பழக்கம் உண்டு. சில சமயங்களில் குளியலறையில் இருக்கும். பல சமயங்களில் தவறி விழுந்துவிடக்கூடிய இடங்களிலும் வைப்பதுண்டு. கடிகாரம் கீழே விழுந்த சந்தர்ப்பங்களும் உண்டு. பழுது பார்க்க கடையை நோக்கி ஓடுவார். அம்மாதிரி ஒரு சமயத்தில் இனி கைக்கடிகாரத்தைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும் என உறுதி பூண்டார். தினமும் ஒரே இடமாக அதனை கழட்டி வைக்க ஆரம்பித்தார். விரைவிலேயே அவருக்கு நான்கு புது கைக்கடிகாரங்கள் அன்பளிப்பாக கிடைத்தன.

******

மழைக்காகப் பல மாதங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வந்தார் ஓர் அன்பர். திரு. கர்மயோகி அவர்களது மழையைப் பற்றிய புத்தகத்தையும் படிக்கலானார். திடீரென்று ஓர் எண்ணம். ஏன் நாம் நமது நீர் தொட்டியைச் சுத்தம் செய்யக் கூடாது என்று தோன்றியது. நீர் தொட்டியை சுத்தம் செய்தார். காலையில் மழை கொட்டித் தீர்த்தது. கிணற்றில் பத்தடிக்கு நீர் மட்டம் உயர்ந்தது.

*****

அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் ஓர் அன்பர், தங்களது நீர் தொட்டி நிரம்பி நீர் வீணாவதைக் கண்டார். நெடுநேரம் நீர் வழிந்தும், மோட்டார் நிறுத்தப்படாமல் இருக்கும். தான் இறங்கிச் சென்று மோட்டாரை நிறுத்தி வருவார். மற்றவர்கள் இதைப் பற்றி ஒரு துளியும் கவலைப்பட காணோம். காவலாளியும் உபயோகமற்றவனாக இருந்தான். இது அவனது வேலை என்றாலும் பொறுப்பற்றதனமாக இருந்தான். இதை எப்படி சரி செய்வது? ஒவ்வொரு முறையும் தானே சென்று ஸ்விட்சை அணைக்க வேண்டுமா அல்லது வேறு ஏதேனும் உபாயம் இருக்குமா என யோசிக்க ஆரம்பித்தார். தான் எவ்வாறு எல்லாம் நீரை வீணாக்குகிறோம் என யோசித்த போது ஒரு பொறி தட்டியது. குளியல் அறையில் இருக்கும் வாளி நிரம்ப குழாயைத் திறந்துவிட்டு,   அது நிரம்புவதற்குள் வேறு வேலை செய்துவிட்டு வரலாம் என்று நகர்ந்தால் அந்த வேலையில் முதல் வேலை மறந்துவிடும். தவறாமல் வாளி நிரம்பி வழிந்து நீர் வீணாகிக் கொண்டிருக்கும். சரி, இனிமேல் இதனை திருத்திக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து, அவ்வாளி நிரம்பும் வரை அருகிலேயே இருந்து குழாயை மூடிவிட்டு அடுத்த வேலையை கவனிக்க ஆரம்பித்தார். வியக்கத்தகும் வகையில் நீர்த்தொட்டி நிரம்பி வழியவில்லை. அப்படியே வழிந்தாலும் காவலாளியோ அல்லது மற்றவர் எவரேனுமோ ஸ்விட்சை அணைத்து விடுவதைக் கண்டார்.

*****

அன்பரது சகோதரர் வேலை முடித்து வீடு திரும்ப இரவு நேரமாகிவிடும். தமக்கை சாப்பாட்டை மேஜை மீது வைத்து விடுவார். சகோதரர் உணவருந்திவிட்டு எல்லாவற்றையும் போட்டது போட்டபடி விட்டுவிட்டு ஓய்வெடுக்கச் சென்றுவிடுவார். தமக்கை பிறகு வந்து எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி வைப்பார். ஒரு நாள் வந்து பார்த்தால் மேஜை, சமையல் அறை எல்லாம் சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டிருந்தது. சகோதரிக்கு ஒரே வியப்பு. இந்த மனமாற்றத்திற்கு என்ன காரணம் என சகோதரரிடம் கேட்டார். அதற்கு அவர், "வந்து பார்த்தேன். சமையலறை எல்லாம் படுசுத்தமாக இருந்தது. என்னால் அது வீணாகக்கூடாது என்று நான் சாப்பிட்டு முடித்தபின் எல்லாவற்றையும் மீண்டும் சுத்தம் செய்து அதற்குரிய இடங்களில் வைத்துவிட்டேன்'' என்றார். சகோதரி அதிகாரம் செய்யவில்லை, ஏன் செய்யவில்லை என்றுகூட கேட்கவில்லை. வேலை தானாகவே நடந்தது.

*****



book | by Dr. Radut