Skip to Content

08. மூடநம்பிக்கையும் அவற்றிலிருந்து விடுபடுதலும்

மூடநம்பிக்கையும் அவற்றிலிருந்து விடுபடுதலும்

N. அசோகன்

மனிதன் தனக்குத் தேவையில்லாதது எவ்வளவையோ தன்னோடு சேர்த்துக் கொண்டுள்ளான். அப்படி சேர்த்துக் கொண்டதில் மூடநம்பிக்கையும் ஒன்று. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கல்வியறிவு மக்களிடையே பரவி வருவதால் மூடநம்பிக்கையின் ஆதிக்கம் பரவலாக குறைந்து வருகிறது. இருந்தாலும் மனிதன் முழுமையாக விடுபட்டுவிட்டான் என்று சொல்ல முடியாது. மூடநம்பிக்கை ஓங்கி இருந்த நாட்களில் மனிதர்களுடைய அறியாமை எந்த அளவிற்கு மோசமாக இருந்ததென்று இன்று நாம் கேள்விப்பட்டாலும் நமக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. உலகம் உருண்டை என்றே தெரியாமல் அதைத் தட்டை என்றே நம்பினார்கள். இப்படி நம்பியதால் கடலில் அதிக தூரம் பிரயாணம் செய்யவே பயந்தார்கள். அதாவது அதிக தூரம் சென்றால் விளிம்பு வந்துவிடும். அதன்பின் விளிம்பில் இருந்து வீழ்ந்தால் அதள பாதாளத்தில் விழுவோம் என்று பயந்தார்கள். இதனால் நெடுந்தூர கடற்பிரயாணமே தடைப்பட்டிருந்தது. கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளால் வியாதிகள் பரவுவதையே அறியாத மக்கள் ஊரில் தொற்றுநோய் பரவினால் அதை ஏதோ தெய்வ குற்றம் நடந்துவிட்டது. அதனால் ஆண்டவன் நம்மை இப்படித் தண்டிக்கிறான் என்று பயந்தார்கள். இப்படியெல்லாம் நம்பிக் கொண்டிருந்தார்கள் என்று இன்று நமக்குத் தெரிந்தால்கூட நமக்கு வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் அதுதான் உண்மை.

ஒருவேளை 500 வருடம் கழித்து பின்னால் வருகிற மனிதர்கள் நாம் இன்று நம்பிக் கொண்டிருக்கும் விஷயங்களை இதே அளவிற்கு மூடநம்பிக்கை என்று நினைத்துக்கூட வேடிக்கையாக எடுத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. பெட்ரோலும், நிலக்கரியும் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது? கார்கள் எப்படி இயங்கும்? அனல் மின் உற்பத்திக்கு நிலக்கரியை விட்டால் வேறு என்ன வழி என்று நாம் இன்று விழித்துக் கொண்டிருக்கிறோம். இந்த பயம் நமக்கு நிஜமாகவே தெரிகிறது. இது மூடநம்பிக்கை என்றால் யாரேனும் ஒத்துக் கொள்வார்களா? ஆனால் 100 வருடத்தில் பேட்டரி டெக்னாலஜியில் நிறைய முன்னேற்றங்கள் வந்து, இன்று பெட்ரோல் கார் எவ்வளவு வேகமாக ஓடுகிறதோ அதே வேகத்தில் பேட்டரி காரும் ஓடலாம். அப்படி பேட்டரி காரில் செல்கின்ற மனிதன் பெட்ரோல் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று விழித்துக் கொண்டிருக்கின்ற நம்மை பார்த்து முட்டாள்கள் என்று வேடிக்கையாகச் சிரிக்கலாம். இப்பொழுதுகூட விஞ்ஞானிகள் பூமி நாளுக்குநாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. இது தொடர்ந்தால், தட்பவெப்ப நிலை 50 டிகிரியைக் கடந்தால், துருவ பிரதேசத்திலுள்ள பனிப்பாறைகள் எல்லாம் உருகும். கடலோரப் பிரதேசங்கள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கும், கோடிக்கணக்கான மக்கள் வீடு, வாசலை இழப்பார்கள் என்று அச்சுறுத்துகிறார்கள். இந்த பயம் இன்று நமக்கு நிஜமாகத் தெரிகிறது. உலக நாடுகள் இப்பொழுதே கவலைப்பட ஆரம்பித்துவிட்டன. ஆனால் 100 வருடங்கள் கழித்து இந்த ஆபத்து வராமலேயேகூட போகலாம். வருங்கால விஞ்ஞானிகள் மேகமூட்டம் எப்படி சூரிய ஒளியைத் தடுக்கிறதோ, அம்மாதிரி பத்து, பதினைந்து கி.மீ. உயரத்தில் உலகம் முழுவதும் ஒரு chemical aerosol spray வானத்தில் பரப்பிவிடலாம். அந்த aerosol spray மேகமூட்டம் போல் செயல்பட்டு சூரிய ஒளி உள்ளே நுழைவதை தடுக்கலாம். அப்பொழுது பூமி வெப்பமாவது என்ற பிரச்சினையே வராது. இம்மாதிரி இன்று நம் அறிவால் தீர்க்க முடியாத பிரச்சினைகளை வருங்கால மனிதன் தன்னுடைய உயர்ந்த அறிவால் தீர்த்துக் கொள்ளும் பொழுது இன்று நமக்கு இருக்கின்ற அச்சங்களையும், பயங்களையும் நினைத்துச் சிரிக்க வாய்ப்பிருக்கிறது.

"மூடநம்பிக்கை என்றால் என்ன?" என்று நாம் இப்பொழுது பார்க்கலாம். இப்படிப் பார்ப்பதோடு மட்டும் இல்லாமல் மூடநம்பிக்கைக்கு யார், யார் பலியாவார்கள் என்பதையும் நாம் கருத வேண்டும். மூடநம்பிக்கையை நாம் முட்டாள்தனமான தவறான நம்பிக்கை என்று சொல்லலாம். அதாவது இருக்கின்ற உண்மையைத் தவறாகப் புரிந்து கொள்ளுதல் என்று வரும். உதாரணமாக உலகம் உருண்டை என்பதுதான் உண்மையானது. அது புரியாமல், பல நூற்றாண்டுகளாக அந்த உண்மை புரியாமல் உலகம் தட்டையானது என்று நம்பி வந்தார்கள். 16ஆம் நூற்றாண்டு கால அளவில்தான் பூமி தட்டை அல்ல, உருண்டையானது என்று உலகத்திற்குத் தெரிய வந்தது. ஒரு பக்கம் மூடநம்பிக்கை இப்படி எழும் என்றால், இன்னொரு பக்கம் இல்லாததை இருப்பதாக வைத்துக் கொள்வதும் உண்டு. உதாரணமாக பைபிளில் ஆண்டவன் உலகத்தை 6000 வருடத்திற்குமுன் படைத்தான் என்று எழுதப்பட்டுள்ளது. அதுவும் நேரடியாக மனிதன் ஆண்டவனால் படைக்கப்பட்டவன் என்று கூறுகிறது. ஆனால் இவையிரண்டும் உண்மையேயில்லை என்று சார்லஸ் டார்வின் அவர்கள் தன்னுடைய பரிணாம கொள்கை மூலம் நிரூபித்தார். இதன்படி பார்த்தால் உலகம் 2 கோடி வருடங்களாக இருந்திருக்கிறது. மனிதன் குரங்கிலிருந்து தோன்றியிருக்கிறான். உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளும் பரிணாம வளர்ச்சியினால்தான் தோன்றியிருக்கின்றன என்று தெரிகிறது. இந்த உண்மை மிகவும் அதிர்ச்சியாக இருந்ததால் பைபிளில் சொல்லப்பட்டதை அப்படியே நம்புகின்றவர்களால் இதை உண்மை என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் அவர்கள் இன்றுவரை பைபிளில் சொன்னதைதான் நம்புவோம், இதை ஏற்கமாட்டோம் என்று பிடிவாதம் செய்கிறார்கள். இது இரண்டாம் வகை மூடநம்பிக்கை என்றால், மூன்றாவது வகையும் ஒன்று இருக்கிறது.

அதுதான் சம்பந்தமில்லாத இரண்டு விஷயங்களை சம்பந்தம் உண்டு என்று தொடர்புபடுத்திப் பேசுவது, அதனடிப்படையில் செயல்படுவது. உதாரணமாக தான் செய்கின்ற பிஸினஸில் நஷ்டப்படுகின்றவர்கள் அந்த நஷ்டத்திற்கு என்ன காரணம் என்று நியாயமாக அவர்கள் கடைப்பிடிக்கின்ற பிஸினஸ் அணுகுமுறை- களையே பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால், ஒன்று பொருள் தரமற்றதாக இருக்கலாம், அல்லது விலை கஸ்டமர்கள் கொடுக்க விரும்பாத அளவிற்கு அதிகமாக இருக்கலாம். மார்க்கெட்டில் இருக்கின்ற டிமாண்ட் அளவிற்கு சப்ளை பண்ண முடியாமல் போகலாம் அல்லது பொருளுக்கு எதிர்பார்க்கும் டிமாண்ட் மார்க்கெட்டிலும் இல்லாமலும் போகலாம். இப்படி பிஸினஸ் சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து, அதை சரி செய்து, நஷ்டத்தைத் தவிர்ப்பதுதான் நியாயமான அணுகுமுறை. ஆனால் இப்படி எதுவும் செய்யாமல் பிஸினஸிற்கு சம்பந்தமே இல்லாத வேறு காரணங்களைக் கண்டுபிடிப்பவர்கள் இருக்கிறார்கள். அதாவது பிஸினஸில் நஷ்டம் வருவதற்குக் காரணமே அந்த பிஸினஸ் நடத்தப்படும் இடம் அந்த பிஸினஸிற்கு ராசியில்லாத இடம் என்று ஒரு முடிவுக்கு வருவார்கள். இங்கேதான் வாஸ்து நிபுணர்கள் விதவிதமான கருத்துகளை தெரிவிப்பார்கள். கட்டிடத்தில் வாசல் சரியான திசையில் இல்லை, ஸ்டோர் ரூம் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை, ஆபீஸ் ரூம் வேறு இடத்தில் இருக்க வேண்டும், என்றெல்லாம் விளக்கம் கொடுப்பார்கள். இதையெல்லாம் நம்பிக் கொண்டு ஏராளமாக செலவு செய்து கட்டிடத்தை மாற்றி அமைப்பவர்கள் உண்டு. அப்படி என்னதான் செலவு செய்து கட்டிடத்தை மாற்றி அமைத்தாலும் அடிப்படை பிஸினஸ் தவற்றை சரி செய்யாமல் வெறும் கட்டிடத்தை மாற்றி அமைப்பதால் நஷ்டத்திலிருந்து மீள முடியாமல் அதிர்ச்சியில் ஆழ்பவரும் உண்டு. ஆக, இங்கே என்ன தவறு நடக்கிறது என்று பார்த்தால் பிஸினஸ் நஷ்டத்திற்கு சம்பந்தமே இல்லாத கட்டிட அமைப்பை சம்பந்தப்படுத்துவதுதான் தவறு என்று தெரிகிறது. இம்மாதிரி சம்பந்தம் இல்லாத விஷயங்களை சம்பந்தப்படுத்தி நிறைய தவறுகள் நடக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக ஒரு வேலைக்கு ஆள் தேர்வு செய்வதை எடுத்துக் கொள்வோம். ஒரு கம்பனியில் அக்கௌண்ட் செக்ஷனில் வேலைக்கு ஆள் தேவை என்றால், அப்படி வேலை தேடி வருபவர்களிடம் அந்த வேலைக்குண்டான கல்வித் தகுதி மற்றும் அனுபவம் இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர இவையிரண்டையும் விட்டுவிட்டு வேலைக்கு சம்பந்தமே இல்லாத பெயர் ராசி பார்ப்பது எந்த விதத்தில் சரி? இது அப்பட்டமான தவறு என்று நமக்குத் தெரிந்தாலும் ஒரு பெரிய வர்த்தக நிறுவனத்தில் இதைத்தான் செய்தார்கள்.

காலியாக இருக்கின்ற முக்கியமான பணியிடங்களுக்குப் பொருத்தமானவர்களை மானேஜர் தேர்வு செய்து முதலாளியின் பார்வைக்கு அனுப்பிய பொழுது, அனுப்பப்பட்ட பட்டியலில் முக்கால்வாசி பேர்களை நியூமராலஜியின்படி பெயர் சரியில்லை என்று முதலாளி தட்டிக்கழித்து அனுப்பினார். 20,000 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு இண்டர்வியூவிற்கு வருகிறவர்கள் இப்படி பெயர் ராசி சரியில்லை, அதனால் முதலாளி நிராகரித்தார் என்று கேள்விப்பட்டால் அந்த வர்த்தக நிறுவனத்தைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள். ஆனால் இப்படித்தான் வியாபார நிறுவனங்களை நடத்துபவர்கள் பல பேர் சம்பந்தமில்லாத விஷயங்களை சம்பந்தம் உள்ளதாக நினைத்து தம் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளாமல் மேன்மேலும் நிலைமையை மோசமாக்கிக் கொள்கிறார்கள்.

இப்பொழுது மூடநம்பிக்கைக்கு யார், யார் பலியாகிறார்கள் என்பதைப் பார்ப்போம். மேலோட்டமாக பார்வைக்கு நிஜமாகத் தெரிவதை அப்படியே விசாரிக்காமல் நம்புகின்றவர்கள்தாம் இம்மாதிரி மூடநம்பிக்கைக்கு பலியாகின்றார்கள். இப்படிக் கண்ணுக்குத் தெரிவது பொய், தீர விசாரிப்பதே மெய் என்ற பழமொழியே இருக்கிறது.

P & P கதையில் விக்காமுடைய மேனர்ஸ் எல்லோரையும் மகிழ்விக்கின்றன. ஆனால் அதே சமயத்தில் டார்சியினுடைய மேனர்ஸ் எல்லோருக்கும் கோபத்தை உண்டாக்குகின்றன. இப்படி மேலோட்டமான நடத்தையை மட்டும் பார்த்துவிட்டு விக்காம் நல்லவன், டார்சி கெட்டவன் என்ற முடிவுக்கு எல்லோரும் வந்துவிடுகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு என்று ஆரம்பத்தில் எவருக்கும் தெரியவில்லை. கதை வளர, வளரத்தான் உண்மை என்ன என்பதே தெரிய வருகிறது. கதையில்தான் மேனர்ஸை பார்த்து ஏமாறுகிறோம் என்றில்லை, நிஜ வாழ்க்கையிலும் pleasant mannersஐக் கண்டு நிறைய பேர் ஏமாந்து போகிறார்கள். திருமணத்திற்குப் பெண் கேட்டு வரும் எத்தனை குடும்பங்கள் இதமாக, பதமாக பழகுகிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். அது வெறும் நடிப்பு, அதிலுண்மை இல்லை என்பது நமக்குத் தெரியாமல் போகிறது. திருமணம் முடிந்து நம் வீட்டுப் பெண் அவர்கள் வீட்டு மருமகளாக மாறிய பின்புதான் அவர்களுடைய கொடுமைக்கார சுயரூபம் வெளிப்படும் பொழுதுதான் நாம் ஏமாந்துவிட்டோம் என்றே புரிகிறது. இந்தத் தவற்றை யார்தான் செய்யாமல் இருக்கிறார்கள்? எல்லோரும்தான் செய்கிறார்கள். பணக்காரர்களை எட்ட இருந்து பார்க்கும் பொழுது சாதாரண மக்களால் அனுபவிக்க முடியாத சௌகரியங்களை எல்லாம் பணக்காரர்கள் அனுபவிப்பதைப் பார்க்கிறோம். இதனால் பணபலம் உள்ளவர்கள் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வந்துவிடுகிறது. இது உண்மையா என்று விசாரித்தால், உண்மையில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

The Indian Express News Paper Companyயின் முதலாளியான ராம்நாத் கோயங்கா இதற்கு ஒரு நல்ல உதாரணம். அவரிடம் பண பலமும், அரசியல் பலமும் நிறையவே இருந்தன. 1952இல் நடந்த லோக்சபா தேர்தலில் திண்டிவனத்தில் ஒரு M.P. electionக்குத் தேர்தலில் நின்றார். அவருடைய பண பலம், அரசியல் பலம் என்று இந்த இரண்டையும் கருதிய அரசியல் கட்சிகள் எல்லாம் அவர்தான் தேர்தலில் ஜெயிப்பார் என்று திடமாக நம்பினர். அவர் பிரச்சாரத்திற்கு ஹெலிக்காப்டரில் வந்தார். ஹெலிக்காப்டரிலிருந்து பிரசார பிரசுரங்களை ஊர் முழுவதும் கொட்டினார். இந்த அளவு அவர் பகட்டாக நடந்துகொண்ட பொழுது வெற்றி அவருக்குத்தான் என்று அரசியல் கட்சிகள் முடிவே செய்துவிட்டனர். ஆனால் இறுதியில் வந்த தேர்தல் முடிவுகள் எல்லோரையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது. கோடீஸ்வரர் கோயங்கா ஜெயிக்காமல் உள்ளூர் வன்னிய வேட்பாளர்தான் ஜெயித்தார். என்னதான் கோயங்கா கோடீஸ்வரராக இருந்தாலும் ஜாதியில் அவர் வேறுபட்டவர். அதனால் உள்ளூர் மக்களிடையே அவர் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காது என்பதையே அரசியல் நிபுணர்கள் எல்லாம் மறந்தே போய்விட்டனர். இதனால் என்ன ஆயிற்று? ஜாதி பலத்தை மட்டும் காரணமாக வைத்து சாதாரண உள்ளூர் வேட்பாளர் கோடீஸ்வரர் கோயங்காவை தோற்கடித்தார். ஆகவே தோற்றத்தை நம்பி, அதுவே உண்மை என்று செயல்படுகின்றவர்கள் எல்லோரும் பெரிய தவறு செய்யக்கூடிய ஆபத்திற்கு வந்துவிடுகிறார்கள். இதே ஆபத்து ஆன்மீகத்திலும் இருக்கிறது. செய்திதாள்களில் போலி சாமியார்களைப் பற்றி நிறையவே கேள்விப்படுகிறோம். இவர் போலி, அவர் போலி என்று செய்திகள் வரும் பொழுது உண்மையான பக்தர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். ஒரு ஆசிரமத்திற்குண்டான வெளித் தோற்றம் எல்லாம் இருக்கின்றன. வருபவர்களுக்கு இந்த வெளித் தோற்றம் மட்டும்தான் தெரிகிறது. தோற்றம் சரியாக இருக்கும் பொழுது எல்லாம் சரியாக இருக்கும் என்று மக்கள் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் திரை மறைவில் என்ன நடக்கிறது என்பதை யாரும் அறிவதில்லை. அது ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும் பொழுது பக்தர் குழாம் அலறுகிறது. இப்படி தோற்றம் வேறு, உள்ளிருக்கும் ஆன்மீகம் வேறு என்பதைப் புரிந்துக் கொள்ள தோற்றத்தை உதறிவிட்டு உள்ளிருப்பது என்ன என்று பார்க்கும் அளவிற்கு ஒரு கூர்மையான அறிவு வேண்டும். அது எல்லோருக்கும் இருப்பதில்லை. விபூதியும், காவியும் அணிந்து ஆன்மீகப் புலமை நிறைந்த சொற்பொழிவை ஆற்றிவிட்டால் அறிவு மேன்மையை ஆன்மீகப் புனிதமாக மக்கள் புரிந்து கொள்கிறார்கள். இப்படி அறிவு கூர்மைக்கும், ஆன்மீகப் புனிதத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால் இல்லாத சம்பந்தம் இருப்பதாக நம்புகின்றவர்கள் எத்தனையோ பேர் இந்த நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இப்படி மூடநம்பிக்கைக்கு பலியாகி கொண்டுத்தான் இருக்கிறார்கள். பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தமே இல்லை என்பது common sense உடைய எல்லோரும் தெரிந்து கொண்டிருப்பதுதான். இருந்தாலும் ஒவ்வொரு சமயம் தேர்தல் வரும் பொழுதும் வேட்பாளரின் பேச்சு சாதுர்யத்தில் மயங்கி, அவர் சொன்னதை செய்வார் என்று மக்கள் ஓட்டுகளை வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நம் நாட்டிலாவது படிப்பறிவு இல்லாத மக்கள் அதிகம். ஆனால் அமெரிக்காவிலும் மக்கள் இதே மாதிரிதான் அறிவில்லாமல் வாக்காளரின் பேச்சால் கவரப்பட்டு அவருக்கே நிறைய ஓட்டுகளை போடுகிறார்கள். அமெரிக்காவில் ரானல்டு ரீகன் என்ற அரசியல்வாதி இரண்டு முறை அதிபராக இருந்தார். பட்ஜெட்டை balance செய்கிறேன் என்று பேசி பதவிக்கு வந்தவர் அவர். இரண்டாவது முறை தேர்தல் பிரச்சாரம் செய்யும் பொழுது பணக்காரர்களுக்கு விதிக்கப்படும் வரிகளைக் குறைக்கிறேன். ஆனால் அதே சமயத்தில் பட்ஜெட்டில் பற்றாக்குறை வராமல் balanceம் செய்கிறேன் என்று பிரச்சாரம் செய்தார். இப்படி வரியையும் குறைத்து, பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறையும் வராமல் பார்த்துக் கொள்கிறேன் என்று ஒருவர் பிரச்சாரம் செய்கிறார் என்றால், அதை நம்பி அந்த நாடு முழுவதுமே அவருக்கு வாக்களித்து அவரை இரண்டாவது முறையும் அதிபர் ஆக்குகிறார்கள் என்றால் படிப்பறிவு நிறைந்த அமெரிக்க மக்கள் உண்மையில் எவ்வளவு பெரிய தவறு செய்கிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.

மூடநம்பிக்கைகள் மூன்று வகையாக தோன்றுகின்றன என்று நான் ஆரம்பத்தில் பேசினேன். ஆனால் என் தகப்பனார் அவற்றை மேலும் பலவாரியாகப் பிரிக்கிறார். அவை என்னவென்று இப்பொழுது பார்ப்போம். இருப்பதிலேயே மிகப்பெரிய மூடநம்பிக்கையாக அவருக்குத் தெரிவது சுயநலத்திலிருந்து எழுகின்ற மூடநம்பிக்கையாகும். ஒரு ஸ்தாபனத்திற்கு சேவை செய்ய வருவதாக சொல்கின்றவர் தன்னையே அந்த ஸ்தாபனமாக எடுத்துக் கொண்டு, செய்கின்ற சேவையெல்லாம் தனக்கே வந்து சேர வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அரசியல்வாதிகள் இதைத்தான் செய்கிறார்கள். நாட்டிற்கும், மக்களுக்கும், தொகுதிக்கும் சேவை செய்ய விரும்புவதாகச் சொல்லித்தான் அவர்கள் ஓட்டு கேட்கிறார்கள். ஆனால் பதவிக்கு வந்தவுடன் நாடு, மக்கள், தொகுதி என்று எல்லாமே மறந்து போகிறது. இப்படித் தன்னையே நாட்டிற்கும், மக்களுக்கும், தொகுதிக்கும் சமமாக வைத்துக் கொண்டு, எல்லா சேவையும் தனக்கே வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இவர்கள் என்ன தவறு செய்கிறார்கள் என்பதை நாம் சுட்டிக்காட்டக்கூட முடியாது. சுட்டிக்காட்டினாலும் புரிந்து கொள்ளும் இடத்திலும் அவர்கள் இல்லை. அந்த அளவிற்கு அவர்கள் செய்யும் தவற்றோடு ஒன்றியிருப்பதால் அவர்களே தவறாக மாறி நிற்கின்றார்கள். இப்படி செய்யும் தவற்றோடு இந்த அளவிற்கு ஒன்றி இருக்கும் பொழுது அவர்களை நாம் எப்படித் திருத்த முடியும். அவர்கள்தான் நம்மை திருந்தச் சொல்வார்களே தவிர நாம் அவருக்கு எந்த அறிவுரையும் வழங்க முடியாது.

இரண்டாவதாக, மூடநம்பிக்கையை கடைப்பிடிப்பது வெறும் பழக்கம் என்றாலும் ஏதோ பெரிய லட்சியத்தைக் கடைப்பிடிப்பதாக நினைப்பது பெரிய மூடநம்பிக்கை என்கிறார். இந்நாட்டில் ஆச்சாரமானவர்கள் இதைத்தான் செய்கின்றார்கள். அவர்கள் சொல்கின்ற ஸ்லோகங்கள், கடைப்பிடிக்கின்ற விரதங்கள், மற்ற சடங்கு, சம்பிரதாயங்கள் என்று எல்லாமே பழக்கத்தின் அடிப்படையில் எழுந்தவைதான். இருந்தாலும் அவர்களைக் கேட்டால் ஏதோ பெரிய இலட்சியமயமான வேலையைச் செய்வதாக பெருமையாகப் பேசிக் கொள்வார்கள்.

மூன்றாவதாக, கடந்த காலத்தில் சாத்தியமானது இப்பொழுதும் பலிக்கும் என்று அறிவே இல்லாமல் எதிர்பார்ப்பது. இத்தகைய முட்டாள்தனமான செயல்பாட்டை சில பேரிடம் இன்னமும் பார்க்கலாம். படித்த பெண்கள் வேலைக்குப் போவது சகஜமாகிவிட்ட இந்த காலத்தில்கூட தனக்கு வருகின்ற மனைவி மிகவும் படித்தவளாக இருந்தாலும், "அவள் வேலைக்குச் செல்வது தனக்கிஷ்டமில்லை, அதனால் வீட்டோடு இருக்க வேண்டும்'' என்று கண்டிஷன் போடும் மணமகன்கள் இன்றும் உண்டு. தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த கூலி வேலை செய்யும் தொழிலாளர்களை துச்சமாக நடத்தி வேலை வாங்கியது 1970க்கு முன் பலித்தது. அதே ஏதேச்சதிகார அணுகுமுறையைப் பின்பற்றி இன்றைய கால அளவில் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கி கொள்கின்ற மானேஜர்கள் உண்டு. காதல் திருமணங்கள் இன்று நம் நாட்டில் மிகவும் சகஜமாகிவிட்டன. I.T. நிறுவனங்களில் வேலை செய்கின்ற இளம் ஆண்களும், பெண்களும் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற வித்தியாசமே இல்லாமல் சுதந்திரமாகப் பழகி, மணமேடையில் கணவன், மனைவியாக அமர்வதற்கு சுலபமாக தயார் ஆகிவிட்டார்கள். வெளியூரில் வசிக்கும் பெற்றோர்களுக்கு இது மிகவும் அதிர்ச்சியான செய்தியாக வருகிறது. இவர்கள் சண்டை போட பிள்ளைகள் இருக்கும் இடத்திற்குக் கிளம்பி வருவதற்கு முன்னேயே சக ஊழியர்கள் எல்லாம் சேர்ந்து காதல் ஜோடிகளுக்கு திருமணமே நடத்தி முடித்துவிடுகின்றனர். மேலும் அதிர்ச்சிக்காளாகும் பெற்றோர்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று ஊர் திரும்புகின்றனர். இளைஞர் சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளும், மனோபாவங்களும் முற்றிலும் மாறி இருக்கின்றன என்பதையே புரிந்து கொள்ளாமல் தங்களுடைய பழைய நினைப்பிலேயே பெற்றோர்கள் ஊறியிருப்பதால் வருகின்ற ஏமாற்றம் இது.

நான்காவதாக, சிம்பாலிக்காக இருப்பதை அதையே உண்மையாக எடுத்துக் கொள்வது. இத்தவற்றை நிறைய பேர் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் திருமண சம்பந்தத்திற்கு அடையாளமாக விளங்கிய தாலி, மோதிரம் போன்றவைகள் உண்மையிலேயே திருமணத்திற்குண்டான அன்பின் வெளிப்பாட்டுச் சின்னங்களாக அமைந்தன. ஆனால் இன்று அப்படியெல்லாம் சொல்ல முடியுமா? திருமணத்திற்குரிய எல்லா வெளி அடையாளங்களும் இரு தம்பதியரிடையே காணப்பட்டாலும், ஆனால் திருமணத்திற்குரிய அன்போ, பாசப்பிணைப்போ அத்தம்பதியரிடையே இல்லாமல் இருப்பதை நிறையவே பார்க்கலாம். தாலி கட்டிய ஒரே காரணத்தினால் மட்டும் ஒரு ஆண்மகன் கணவனாகிவிட முடியாது. அந்தக் கணவன் என்ற இடத்திற்குரிய அன்பு, பொறுப்பு, அக்கறை எல்லாம் அந்த ஆண்மகனிடம் உண்மையாக வெளிப்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்த திருமணத்தில் உண்மையிலேயே அர்த்தம் இருக்கும். ஆனால் பல ஆண்கள் அன்போ, அக்கறையோ, பொறுப்போ இல்லாமல் பெயரளவிற்குத்தான் கணவன்மார்களாக செயல்பட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் மாட்டிக் கொண்ட பல பெண்களும் கட்டிய தாலிக்கு மதிப்புக் கொடுத்து, ஊருக்கும், உலகத்திற்கும் பயந்து, "பிடிக்கிறதோ, இல்லையோ 2 குழந்தைகளுக்குத் தாயாகிவிட்டோம், குழந்தைகளின் சந்தோஷத்திற்காக அவருடனேயே வாழ்க்கையை ஓட்டுவோம்' என்று பட்டும் படாத ஒரு போலி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆண்கள்தான் இப்படி என்றாலும், பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. 200 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட P & P கதையிலேயே நாம் இதைப் பார்க்கலாம். அக்கதையில் திருமதி. பென்னட் அவர்கள் திரு. பென்னட்டுடன் சேர்ந்து 5 பெண்களைப் பெற்றுவிட்ட பின்பும் லாங்பர்ன் எஸ்டேட் எண்டெயில்மெண்ட்டாக இருப்பதால்தான் கவலைப்பட வேண்டியிருக்கிறது. மற்றபடி எது நிகழ்ந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை என்று திரு. பென்னட் அவர்களிடையே வெளிப்படையாகப் பேசுகிறாள். அதாவது அவர் இறந்துவிட்டால், சொத்து காலின்ஸ் கைக்கு போய்விடுமே என்றுதான் தான் வருத்தப்படுவதாகவும், மற்றபடி அவர் இறந்து போவதைப் பற்றி தனக்கு எந்தவித வருத்தமும் இல்லை என்றும் வெளிப்படையாகப் பேசுகிறார். 20 வருட திருமண வாழ்க்கைக்குரிய அன்பின் அடையாளமா இது? இதைக் கேட்ட பின்பும் இந்தப் பெண்மணியுடன் அவர் தொடர்ந்து குடும்பம் நடத்துகிறார் என்றால், அதை நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? இப்படித்தான் ஊரார் கணவன், மனைவியாக பார்த்தாலும் மனதில் ஒட்டோ உறவோ இல்லாமல் போலியாக ஊருக்கும், உறவுக்கும் பயந்து அல்லது பிள்ளைகளுக்காகவே எத்தனையோ பேர் கணவன், மனைவியாக போலியாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இதை மனதில் வைத்துதான் அன்னை அவர்களிடம் திருமணத்தைப் பற்றி கருத்து கேட்ட பொழுது அவர் கீழ்கண்டவாறு சொன்னார்.

எனக்குத் தாலிக் கட்டிக் கொள்வதோ, மோதிரம் மாற்றிக் கொள்வதோ, ஒரு பொருட்டேயில்லை. அன்பின் அடிப்படையில் இருவர் இணைந்தால் அதையே நான் திருமணமாக எடுத்துக் கொள்கிறேன். அந்த அன்பு இருக்கும்வரை அவர்கள் சேர்ந்துதான் இருப்பார்கள். அந்த அன்பு முறியும் பொழுது வெறும் சம்பிரதாயத்திற்காகவும், ஊருக்கும், உலகத்திற்கும் பயந்து அவர்களைக் கணவன், மனைவியாகத் தொடர்ந்து இருக்க வைப்பதை நான் திருமணம் என்று ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று பதிலளித்தார். என்னதான் நாம் அன்னை பக்தர்களாக இருந்தாலும், அன்னையினுடைய இந்த புரட்சிகரமான பதிலை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா? அன்னை ஏதோ விஷயம் தெரியாமல் சொல்லிவிட்டார்கள். புருஷன் நாம் எதிர்பார்ப்பது போல் இல்லை என்றால் நாம் உதறி தள்ளிவிட முடியுமா? அப்புறம் பிள்ளைகள் வாழ்க்கை என்னாவது? சமூகத்தில் என் மதிப்பு என்னாவது? இதுதான் என் தலைவிதி என்றால் வாழ்ந்துதானே ஆக வேண்டும் என்று இப்படி உள்ளுக்குள்ளேயே புழுங்கி ஒரு மாதிரி சமாதானம் ஆகிறோம்.

இம்மாதிரியே வெளி அடையாளங்களை வைத்து உள்ளிருக்கும் சாரம் இருக்கிறதென்று மக்கள் தானே வைத்துக் கொள்கிறார்கள். ஒருவர் பட்டப்படிப்பு படித்திருந்தாலோ அல்லது ஆங்கிலம் சரளமாகப் பேசினாலோ அவரை அறிவாளி என்று நமக்கு நினைக்கத் தோன்றுகிறது. இம்மாதிரியே மேடையில் நன்றாகப் பேசத் தெரிந்தவர்களை சிறந்த அரசியல் தலைவர் என்று மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் பல சமயங்களில் பெரிய பட்டப் படிப்புப் படித்திருந்தாலும் இருக்க வேண்டிய அறிவு இருப்பதில்லை என்று நாம் பார்க்கிறோம். அதாவது மேலோட்டமாகத்தான் படிக்கிறார்களே தவிர அறிவைக் கூர்மையாக்கும் வண்ணம் ஆழ்ந்தப் படிப்பு படிப்பதில்லை என்று தெரிகிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது பேச்சு வன்மைக்கும், அரசியல் தலைமைக்கும் நேரடி தொடர்பே இல்லை எனத் தெரிகிறது. இம்மாதிரி சமூகத்தில் தொடர்பில்லாத எத்தனையோ விஷயங்களை தொடர்பு வைத்துக் கொண்டு பார்க்கும் பொழுது நாம் பல அறிவில்லாத வேலைகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறோம். உதாரணமாக ஒரு பெண் வெள்ளை வெளேரென்றிருந்தால், அவள் சாதாரணமாகவே சிறந்த அழகியாகக் கருதப்படுகின்றாள். அதே சமயத்தில் ஒரு பெண் கருப்பாக இருக்கிறாள், ஆனால் அதே நேரத்தில் முகம் லட்சணமாக இருக்கிறதென்றாலும், அவள் அழகி என்று யாருமே கருதுவதில்லை.

ஒரு முதலாளி வீட்டுப் பெண் படித்தவள், பண்பு நிறைந்தவள், நன்றாகப் பேசப் பழகத் தெரிந்தவளாக இருந்தாலும் நிறத்தில் கருப்பாக மட்டும் இருந்துவிட்டால், அதே சமயத்தில் அந்த வீட்டிலேயே வேலை செய்யும் பெண் நல்ல சிகப்பாக அமைந்துவிட்டால், பெண் பார்க்க வருகின்ற ஆண்மகன் எல்லாம் முதலாளி மகளைவிட வேலைக்காரப் பெண்ணையே அதிகம் விரும்புவார்கள். முதலாளி மகளுடைய படிப்பு, பண்பு, பழகும் முறை என்று எதுவுமே வேலைக்காரப் பெண்ணுடைய வெண்மையான நிறத்திற்கு முன்னால் எடுபடாமல் போகும். இந்தளவிற்கு நிறமோகம் நம்முடைய அறிவை மழுங்க அடிக்கிறது. இப்படி சமூகத்தில் இருக்கின்ற மூடநம்பிக்கைகளை மூடநம்பிக்கைகளாக உணர்வதேயில்லை. ஆனால், அதே சமயத்தில் அடுத்தவருடைய மூடநம்பிக்கைகளை மட்டும் கண்டு பரிகாசம் செய்கிறார்கள். சிகரெட் பிடித்து உடல் நலனைக் கெடுத்துக் கொள்ளும் ஒருவர், சீட்டு விளையாடி பணத்தை இழக்கின்ற அடுத்தவரைக் கேலி செய்வார். இப்படி சீட்டாடி பணத்தை இழப்பதுதான் அவருக்கு அறிவில்லாத செயலாகத் தெரிகிறதே தவிர இப்படி வரம்பில்லாமல் சிகரெட் பிடித்து உடம்பைக் கெடுத்துக் கொண்டு வைத்திய செலவிற்குப் பணத்தைச் செலவு செய்து கொண்டிருப்பது மட்டும் அவருக்கு அறிவில்லாத வேலையாகத் தெரிவதில்லை.

திருமண வைபவத்தில் வயதில் பெரியவர்களிடம் மணமக்கள் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. ஒருவர் அடுத்தவருக்கு ஆசீர்வாதம் செய்ய உண்மையிலேயே ஆன்மீகப் பக்குவம் வேண்டும். வயதில் பெரியவராக இருப்பதால் மட்டும் ஆசீர்வாதம் செய்யக்கூடிய பக்குவம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வதே ஒரு மூடநம்பிக்கையாகும். இப்படி ஆசீர்வாதம் செய்யும் பெரியவர்களில் எத்தனை பேர்கள் குடிகாரர்களாகவும், துஷ்டர்களாகவும், பெண்பித்தர்களாகவும் இருக்கின்றார்கள் என்று நமக்குத் தெரியுமா? அவர்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, திருமண நாளில் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினால்தான் திருப்தியாக இருக்கிறது என்ற நிலையில் நாம் இருக்கின்றோம். எல்லாத் திருமண வைபவங்களிலும் இப்படி ஆசீர்வாதம் செய்யும் படலமொன்று தவறாமல் நிகழ்கிறது. இப்படி ஒரு தவற்றை ஒரு முறைப்படுத்தியே நாம் செய்யும் பொழுது சமூகம் எந்த அளவிற்கு மூடநம்பிக்கையால் நிறைந்திருக்கிறது என்று நம்மால் அறிய முடிகிறது. இதில் ஆபத்து என்னவென்றால், குடிகாரனோ அல்லது பெண் பித்தனோ மணமக்களை ஆசீர்வாதம் செய்தால், அன்றுவரை ஒழுங்காக இருந்த மணமகனுக்குக்கூட நேற்றுவரையில்லாத குடிமோகமும், பெண்மோகமும் தலையெடுக்கும். இன்று மக்களிடையே இருக்கின்ற மிகப்பெரிய மூடநம்பிக்கைகளில் ஒன்று பணத்தை வைத்துக் கொண்டு எதையும் சாதிக்கலாம் என்ற ஒரு நினைப்பு. ஒரு காலத்தில் அரசியல்வாதிகள் காசு கொடுத்தால் ஓட்டு தனக்கு விழுமென்று நம்பி செயல்பட்டார்கள். அம்மாதிரியே ஓட்டிற்காகப் பணம் வாங்கியக் குடிமகனும், வாங்கிய பணத்திற்காக கொடுத்த கட்சிக்கு ஓட்டுப் போட்டுக் கொண்டிருந்தான். ஆனால் இப்பொழுது எல்லா கட்சிக்காரர்களும் ஓட்டிற்காகப் பணம் கொடுக்கின்றார்கள். குடிமக்களும் எல்லாக் கட்சியிலிருந்தும் வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் எந்தக் கட்சிக்கு ஓட்டு விழும் என்று தெரியாமல் போய்விட்டது. அதாவது காசு கொடுக்காவிட்டால் ஓட்டே விழாது, காசு கொடுத்தாலும் கண்டிப்பாக ஓட்டு விழும் என்று நிச்சயமாகச் சொல்லவும் முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. அதாவது கொடுக்கவும் முடியாது, கொடுக்காமல் இருக்கவும் முடியாது என்ற நிலைக்கு இப்பொழுது அரசியல்வாதிகள் தள்ளப்பட்டுவிட்டார்கள். இதிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும்? நாம் பணத்தைப் பெரியதாக மதித்தால், வாழ்க்கை இப்படித்தான் நம்முடைய பணத்தால்கூட எதுவும் செய்ய முடியாது. பணத்தை செலவு செய்து கொண்டிருக்கலாமே தவிர காரியம் நடக்காது என்று மண்டையில் அடித்தாற்போல் நமக்கு அடித்துப் புரிய வைக்கிறது.

இப்படிப் பணத்தின் மேல் அபார நம்பிக்கை வைத்துப் பலர் ஏமாறுகிறார்கள் என்றால், சமூக அந்தஸ்தை மலை போல் நம்பி, அதனால் ஏமாற்றப்படுபவரும் உண்டு. இப்படி அந்தஸ்தையே பெரிதென நினைக்கின்றவர்கள் உறவு, நட்பு, பாசம் என்றெதற்கும் அந்தஸ்தை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். ஒரு அரசாங்கத் துறையில் இயக்குநர் தன்னுடைய கீழுள்ள அதிகாரியுடன் மிகவும் நெருக்கமாக, நட்பாகப் பழகினார். கீழுள்ள அதிகாரிக்கு பிரமோஷன் கொடுக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த சமயம் இயக்குனருக்கு மரியாதை தலைதூக்கியது. என்னதான் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டாலும், அவர் முறைப்படி கேட்டு வாங்கினால்தான் கௌரவமாக இருக்கும் என்ற முடிவை எடுத்துவிட்டார். கீழுள்ள அதிகாரியோ மிகவும் பண்பானவர். யாரிடமும், எதையும் கேட்டு வாங்கி அவருக்குப் பழக்கமில்லை. அதனால் இயக்குனர் எவ்வளவுதான் நட்புடனிருந்தாலும், பதவி உயர்விற்காகக் கேட்கப்போவதில்லை என்றிவர் முடிவு செய்திருந்தார். இதனால், ஒன்றரை வருட காலம் தாமதமாகி, அதன் பிறகுதான் இவருக்குப் பதவி உயர்வே கிடைத்தது. இதன் விளைவாக Chief Engineerஆக ஓய்வு பெற வேண்டியவர் Executive Engineerஆகத்தான் ஓய்வு பெற்றார். ஆனால் அந்தஸ்தைக் காரணம் காட்டி கால தாமதம் செய்த இயக்குனரோ நல்ல ஆரோக்கியமாக இருந்தவர் திடீரென்று யாருமே எதிர்பார்க்காத வகையில் மாரடைப்பு வந்து இறந்து போனார். பதவி இறுமாப்பில் யாருக்காகவும், எதற்காகவும் இறங்கி வரமாட்டேன் என்று பிடிவாதம் செய்தவருக்கு வாழ்க்கை இப்படி ஒரு மரண அடி வழங்குமென்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால் வாழ்க்கை அப்படித்தான் செய்தது.

அன்னை ஆசிரமத்திலிருந்த பொழுது ஒரு அன்னை பக்தர் பகவான் தங்கியிருந்த அறைக்கு ஒரு அழகான கார்பெட் வாங்கி அன்பளிப்பாகக் கொடுக்க விரும்பினார். இது பற்றி ஆசிரம நிர்வாகியிடம் பேசிய பொழுது அவர், இவருக்கு அதிர்ச்சி தரும் வகையில், "ஏன் இந்த வீண் செலவு செய்கிறாய்? பணத்தை பேசாமல் என்னிடம் கொடு. நான் உருப்படியாக ஏதேனும் செலவு செய்து கொள்கிறேன்'' என்று பதிலளித்தார். அதிர்ச்சியில் ஆழ்ந்த பக்தர் பேசாமல் விலகிப் போனார். மறுநாள் மீண்டும் ஆசிரமத்திற்கு வந்த பொழுது நிர்வாகியின் அறைக்கு வெளியே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதைக் கண்டு என்னவென்று விசாரித்தார். அவர்களோ, "நிர்வாகிக்கு நேற்றிரவு முதல் விடாமல் விக்கல் வருகிறது. கடைசி நேரம் வந்துவிட்டது போல் தெரிகிறது. அதனால்தான் அவரைப் பார்த்துவிட்டுப் போக நிற்கிறோம்'' என்றார்கள். அன்பருக்கு விஷயம் புரிந்துவிட்டது. அவர் உடனே அன்னையிடம் மானசீகமாக தன் புனித பக்தியை உதாசீனம் செய்த அன்பரின் அறியாமையை மன்னிக்க வேண்டினார். உடனே விக்கல் குறைந்து, அன்று மாலைப் பொழுதளவில் நிர்வாகி சகஜ நிலைமைக்குத் திரும்பிவிட்டார். இப்படி அறியாமையால் செயல்படுகின்றவர்களை அவர்கள் போக்கிலேயே விடுவதுதான் நல்லது. இதனால்தான் கீதையில், "மூடநம்பிக்கையோடு செயல்படுபவர்களை பலவந்தமாக நாம் மாற்ற முயலக் கூடாது. புதியதும் புரியாமல், பழையதையும் விட முடியாமல் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள்'' என்று எச்சரிக்கிறது. அன்னையிடம் வந்தவர்களுக்கு எத்தனையோ பழைய சம்பிரதாயங்கள் தேவையில்லை. ஆனால் தாமாகவே அவை தேவையில்லை என்பதை உணர்ந்து, அவற்றை விடுகின்ற பக்குவம் வராத வரையிலும் அவற்றை நம்பிக் கொண்டிருப்பவர்களை நாம் மாற்ற முயலக்கூடாது. உதாரணமாக கோயிலுக்குப் போகாதே, பிரசாதம் வாங்காதே, உன் பிள்ளைக்குப் பூநூல் அணிவிக்காதே, பெண்ணிற்கு மஞ்சள் நீராட்டாதே, இதெல்லாம் அன்னை பக்தர்களுக்குத் தேவையில்லை என்று விஷயம் தெரிந்த அன்னை பக்தர்கள் விவரமில்லாத பக்தரிடம் எடுத்துச் சொன்னால், அவர்களால் இதை சந்தோஷமாக எடுத்துக் கொள்ள முடியுமா? இப்படி ஒருவர் சொன்னால், அவர்களுக்கு அன்னை மேல் பயம் வந்து விலகித்தான் போவார்களே தவிர, இப்படிச் சொல்வதால் நாம் எதிர்பார்க்கின்ற பலன் வராது.

வாழ்க்கையின் அடிப்படை போக்கிற்கு எதிரான ஒரு புதிய கொள்கை நமக்குப் பிடித்திருப்பதால் மட்டும் நாம் அதை அளவு கடந்து வலியுறுத்தினால் இது தலைகீழ் விளைவுகளைக் கொண்டு வரும். தமிழ்நாட்டில் தம்பி, அக்காள் மகளை திருமணம் செய்து கொள்வது இன்றும்கூட பரவலான ஒரு பழக்கமாக இருக்கிறது. 1920இல் இந்த பழக்கம் இன்னும் எவ்வளவு பரவலாக இருந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அந்த நாட்களில் ஜோதிடம் சொல்லிக் கொண்டிருந்த ஒருவர் பல பேரிடம் அக்காள் மகளை மருமகளாக ஏற்றுக் கொள்வதை நிராகரித்துப் பேசினார். இவருடைய மறுப்பால் இப்படி நடைபெறவிருந்த பல திருமணங்கள் நடைபெறாமலேயே போய்விட்டன. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் இவருடைய சொந்த மகனுக்கே இவருடைய பேத்தியைத் திருமணம் செய்து வைக்கும் கட்டாயம் ஏற்பட்டது. இதைப் பற்றி அவரிடமே கேட்ட பொழுது, "ஆமாம், எல்லோருக்குமே வேண்டாம் என்றேன். ஆனால் நானே இதில் மாட்டிக்கொள்வேன் என்று எதிர்பார்க்கவே இல்லை'' என்று வெட்கத்துடன் பதிலளித்தார். காந்திஜி அவர்களும் இதே தவற்றைத்தான் செய்தார். வன்முறை என்பது வாழ்க்கையில் பிரதானமான ஒன்று. அதுவும் அன்னியன் ஆக்கிரமித்திருக்கிறான், அவனை வெளியேற்ற வேண்டுமென்றால், ஆயுதம் ஏந்தி அவனை விரட்டியடிப்பது மக்களின் ஒரு இயற்கையான செயல்பாடு. இந்த இடத்தில் காந்திஜி அவர்கள் குறுக்கிட்டு, மக்களிடம், "ஆயுதம் ஏந்த வேண்டாம். ஒத்துழையாமை போராட்டத்தின் மூலம் ஆங்கிலேயனை வெளியேற்றலாம்'' என்று மக்களுக்கு அறிவுறுத்தினார். இப்படி இயற்கையாக எழும் மக்களுடைய வன்முறை உணர்வுகளை அடக்கி, செயற்கையாக அவர்களை அமைதியாக செயல்பட வைத்தது ஒரு கால கட்டம் வரைதான் பலித்தது. ஆனால் ஆங்கிலேயன் வெளியேறிய பின்பு இதுநாள் வரை அடக்கி வைத்திருந்த வன்முறை இந்து முஸ்லீம்களுக்கிடையே வெடித்து பயங்கர இனக்கலவரம் மூண்டு லட்சக்கணக்கில் மக்கள் உயிர் இழந்தார்கள். காந்திஜி பெரிய மகான் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் விரும்பி இருந்தால் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ ஆகியிருக்கலாம். ஆனால் இவை வேண்டும் என்று அவர் கேட்கக்கூட இல்லை. அந்த அளவிற்கு பதவி ஆசையிலிருந்து விடுபட்டிருந்தார். இவ்வளவு பெரிய மகானாக இருந்தால்கூட வாழ்க்கையில் பரவலாக இருக்கின்ற வன்முறையை உதாசீனம் செய்ததை வாழ்க்கையே ஏற்றுக் கொள்ளாமல் அதனுடைய எதிர்ப்பை இப்படிக் கடுமையாக தெரிவித்துள்ளது.

இப்பொழுது நாம் அன்னை அன்பர்களுக்கு வருவோம். நாம் எதைச் செய்தாலும் அதை ஜீவனோடு செய்தால்தான் அந்த வேலையில் அன்னை சம்பந்தப்பட்டுக் கொள்வார்கள். புஷ்பாஞ்சலியாக இருந்தாலும், தினசரி தியானமாக இருந்தாலும், தியான மையத்திற்கு வருவதாக இருந்தாலும் நாம் ஈடுபாட்டுடன் இவற்றைச் செய்தால்தான் அன்னையின் அருளும் அவற்றுடன் சம்பந்தப்பட்டிருக்கும். ஈடுபாடு போய் வெறும் இயந்திரதன்மையாக அதை வெறும் பழக்கமாக நாம் எத்தனை ஆண்டுகள்தான் செய்தாலும் அதற்கு நாம் எதிர்பார்க்கும் பலனிருக்காது. அன்பர் ஒருவர் அன்னை இருந்த நாட்களில் ஒரு தரிசனம் தவறாமல், இருபது வருடம் தவறாமல் வந்தார். இத்தனை வருடங்கள் தவறாமல் வந்தவருக்கு வாழ்க்கை சிறப்பான பரிசுகளை அளித்திருக்க வேண்டும். ஆனால் வாழ்க்கை அப்படிச் செய்யவில்லை. ஆசிரம பள்ளியில் ஹையர் கோர்ஸ் வரை படித்த அவர் பையனை வெளியிலுள்ள பள்ளியில் எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பில் சேர்க்க வேண்டியதாயிற்று. ஒரு மகளுக்குத் திருமணமே ஆகவில்லை. மற்றொரு மகள் இஸ்லாமியரைத் திருமணம் செய்து கொண்டாள். அவர் செய்த சேவைக்கு வாழ்க்கையில் இவருக்குயர்ந்த பதவியுயர்வு கிடைத்ததே தவிர ஈடுபாடில்லாமல் நெடுநாள் வைத்திருந்த ஆசிரமத் தொடர்பிற்கும் உரிய பரிசும் கிடைத்தது. ஆகவே நாமும் இதே தவற்றைச் செய்யாமல் இருக்க வேண்டும். தியானம் வருகிறதோ, இல்லையோ தியானத்திற்கென்று குறித்த நேரத்தில் உட்கார நாம் ஆரம்பித்தால், அது நாளடைவில் ஜீவனற்றப் பழக்கமாக மாறிவிடும்

ஆபத்திருக்கிறது. தியான மையத்திற்கு ஒரு நாள்கூட தவறாமல் வருகிறேன் என்று பெருமைப்பட்டுக் கொள்பவர் இருக்கலாம். அதையும் இப்படி ஜீவனில்லாமல் செய்தால் விளைவுகள், தரிசனத்திற்கு விடாமல் வந்த அன்னை அன்பருக்கு இருந்ததுபோல்தான் இருக்கும். ஆகவே அந்தத் தவற்றைச் செய்யாமல், செய்வதை எல்லாம் ஜீவனோடு செய்யுங்கள். ஜீவனில் ஆர்வம் குறைந்து போனால், ஏன் குறைந்தது என்று கண்டுபிடித்து, மறைந்த ஆர்வத்தை மீண்டும் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். அதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் ஒன்றும் பெரிய தப்பு வந்துவிடாது. ஆகவே எதைச் செய்தாலும் ஜீவனோடு செய்வதுதான் மூடநம்பிக்கை- களினின்று தப்பிக்க சிறந்த வழி என்று சொல்லி என் சொற்பொழிவை முடித்துக் கொள்கிறேன்.

முற்றும்

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சிருஷ்டியை பிரம்மமாகக் காண்பது இதி, இதி.
 
சிருஷ்டியில் பிரம்மத்தைக் காண முயல்வது நெதி, நெதி.
 
மனம் இவற்றையே காணும்.
 
சத்திய ஜீவியம்
பிரம்மத்தில் சிருஷ்டியையும் சிருஷ்டியில் பிரம்மத்தையும் காணவல்லது.
 

******



book | by Dr. Radut