Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/19. நிஷ்டை பிரம்மத்தை உள்ளே எட்டி மீண்டும் வெளியே பிரம்மத்தைக் கண்டால், சமர்ப்பணம் பலிக்கும்.

  • சமர்ப்பணம் ஒரு போதும் பலிக்கத் தவறியதில்லை.
    தவறுவது சமர்ப்பணமில்லை.
  • உலக வாழ்வில் அனைவரும் செய்யும் வேலை ஒருவகையில் அவனுள்ள நிலையில் சமர்ப்பணமாகும்.
  • செயலை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது சமர்ப்பணம்.
  • அன்னை நமக்கு இறைவனாவதால், நாம் அன்னைக்குச் சமர்ப்பணம் செய்கிறோம்.
  • சுதந்திர இயக்கத்தில் இதந்தரும் மனையினீங்கி இடர்மிகு சிறைப்பட்டவர் பாரதமாதாவுக்கு வாழ்வை சமர்ப்பணம் செய்தனர்.
  • தகப்பனார் இறந்தபின் தம்பிகளைப் படிக்க வைத்துத் தங்கைகளைத் திருமணம் செய்யும்வரை திருமணம் செய்யாமலிருந்தவர் செய்தது சமர்ப்பணம். குடும்பத்திற்கு அவர் தன் செயலை, வாழ்வை துறப்பதை சமர்ப்பணம் செய்தார்.
  • பொய் சொல்லித் திட்டுபவனுக்கு பதிலிறுக்காமலிருப்பது பொறுமைக்குச் செய்யும் சமர்ப்பணம்.
  • சிறு பிரார்த்தனை முதல் பெருயோக சித்திவரை அனைத்தையும் சமர்ப்பணம் செய்யலாம்.
  • ஒரு அளவில் சமர்ப்பணம் தவறினால், அடுத்த அளவில் பலிக்கும்.
  • வாரம் ஒருமுறை சாப்பிடும் விசேஷ சாப்பாட்டை இருமுறையாகச் சாப்பிட விரும்பியவர் கேட்கவில்லை.
    இது போல் நினைப்பது சாப்பாட்டை விரும்புவதாகும் என அதை மறந்து விட்டார். மாதம் பல கடந்தன. விசேஷ சாப்பாடு, இருமுறையாக மாறியது. நினைப்பதும் சரியில்லை என்பது நம்மையறியாமல் செய்த சமர்ப்பணமாகிறது.
  • தியானம், நிஷ்டை முடிவான உயர்வுள்ளவை.
    அவை எந்த நிலையைச் சேர்ந்ததென்றாலும் உள்ளே மட்டும் போகும்
    உள்ளே போனால் பிரம்மத்தைக் காணலாம்
    வெளியே வந்தால் சமர்ப்பணம் பலிக்கும்
  • சமர்ப்பணத்தைத் தீவிரமாக ஏற்றவருக்கு சமர்ப்பணமே பிரம்மம்.
  • அன்னையை ஆழ்ந்து ஏற்றவருக்கு அன்னை நினைவே சமர்ப்பணம்.
    சமர்ப்பணம் என அவர் செய்வது தேவையில்லை.
  • “ஏன் என்னால் உங்களை நினைக்க முடியவில்லை” என அன்னை பகவானைக் கேட்டபொழுது “என்னோடு ஐக்கியமானபின் எப்படி நினைப்பது? என்னை நினைப்பது என்னை நினைப்பதாகாது. நினைப்பவர் தன்னையே நினைப்பதாகும்” என்று பகவான் பதில் கூறினார்.
  • பிரம்மத்தைக் கண்டபின் வெளிவந்து சமர்ப்பணம் பலிப்பது வாழ்வில் பிரம்மம் பலிப்பதாகும்.
  • ஈடுபாடு முழுமையாகி, நம் செயல் அன்னை செயலாவது சமர்ப்பணம்.
  • கிராமம்@தாறும் திரௌபதி அம்மன் திருவிழாவில் தீ மிதிப்பதுண்டு.
  • தீ மிதிப்பவருக்கு நெருப்பு காலில் சுடாது, புண்ணாகாது.
  • தீயைத் தெய்வமாகக் கருதி 48 நாட்கள் விரதமிருப்பதால், பக்தரும் தீயும் ஒன்றாகி தீ சுடுவதில்லை.
  • எலக்ட்ரிக், எலக்ட்ரானிக்ஸ் வேலை செய்பவர்கட்கு ஷாக் அடிப்பது வழக்கமாகி, ஷாக் பாதிப்பதில்லை.
  • செயலும், மனமும், ஜீவனும் எலக்ட்ரிசிட்டியிலிருப்பதால் அவர்களில் சிலர் எலக்ட்ரிசிட்டியுடன் ஐக்கியமாகி விடுவார்கள்.
    அவர்கள் ஷாக் அடிப்பதை ரசிப்பதும் உண்டு. ஷாக் பலமாக இல்லையென கையை ஈரமாக்கி அதிக ஷாக் பெற்று ஆனந்தப்படுவதும் சிலர் வழக்கம்.
  • நம்மூர் கரண்ட் 220 வோல்ட். அமெரிக்காவில் கரண்ட் 90 வோல்ட்.
    சில நாடுகளில் 110 வோல்ட். கம்ப்யூட்டரில் வேலை ஆறு வோல்ட்டில் நடக்கும்.
    தெரு முனையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் 440 வோல்ட் கரண்ட் உண்டு.
    பெரிய டிரான்ஸ்பார்மரை சுற்றி இரும்பு வேலி போட்டு, ‘அபாயம்’ என எச்சரித்து எழுதியிருப்பார்கள். அங்கு கரண்ட் 4000 வோல்ட்க்கு மேலிருக்கும்.
    நெய்வேலியில் கரண்ட் உற்பத்தியாகுமிடங்களில் வோல்டேஜ் 20,000, 40,000 என இருக்கும். அங்கெல்லாம் சிறு தவறு நடந்தாலும் உயிர் உடல் சாம்பலாகும்.
  • Steve Wozniak என்பவர் Steve Job--உடன் வேலை செய்த எலக்ட்ரானிக் இன்ஜினீயர்.
    ஒரு சமயம் 25,000 வோல்ட் ஷாக்கடித்து விட்டது.
    அவரைத் தூக்கி 25 அடி தூரம் தள்ளிப் போட்டு விட்டது.
    உயிருக்கு ஆபத்தில்லை.
    அவர் உயிரையே எலக்ட்ரானிக்ஸுக்குச் சமர்ப்பணம் செய்து அதனுடன் ஒன்றியவர் என்பதால் எலக்ட்ரிசிட்டி அவர் உயிரை எடுக்கவில்லை. இது ஒரு வகை உயர்ந்த சமர்ப்பணம்.
    உடலளவில் ஒன்றிய சமர்ப்பணம்.
  • அன்னை சிறுமியாக இருந்தபொழுது ஒரு சிறு குன்றின்மீது ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தார். ஓடிய வேகத்தில் முனையைக் கடந்து பள்ளத்தில் விழுந்து விட்டார். அது 40 (அல்லது) 50 அடி பள்ளம். ஆபத்து. அவர் உடல் மெதுவாக இறங்கித் தரையில் வந்த பொழுது தன்னை யாரோ தாங்கிப் பிடிப்பதை அறிகிறார்.
    அன்னையின் உடலும் சமர்ப்பணமான உடல்.
    தெய்வம் அவருள்ளும் புறமும் அரவணைப்பான சூழலாக இருந்தது. சமர்ப்பணம் என்பதை நினைக்கவுமில்லை என்றாலும் சமர்ப்பணம் செயல்படும்.
  • மீராவுக்கு ராணா விஷம் கொடுத்தான். விஷத்தைக் குடித்து விட்டாள். விஷம் ஒன்றும் செய்யவில்லை, பக்தியின் ஆன்மீக சக்தி விஷத்தை முறித்து விட்டது.
    மீராவின் நினைவு, உணர்வு, நெஞ்சம் முழுவதும் கிருஷ்ணனுக்குரியது. உணர்வு நிறைந்து உடலை பக்தியாக நிரப்பியது. உணர்வின் பக்தி உடலையும் பக்திமயமாக்கியது.
    பக்தி உணர்வின் சமர்ப்பணம்.
    நினைவு அறிவின் சமர்ப்பணம், மனத்தின் சமர்ப்பணம். செயல் உடலின் சமர்ப்பணம். சமர்ப்பணமான உடல் தெய்வீகமானது. அதைத் தீண்டும் விஷம் தெய்வீகம் பெறுகிறது. தெய்வீகம் தெய்வீகத்தைப் பாதிக்காது.
    அதுவே சமர்ப்பணத்தின் தத்துவம்.
    பிரம்மம் வெளிவந்து செயலில் வெளிப்படுவது சமர்ப்பணம் என்றால் அது பிரம்ம ஜனனம், பிரம்ம சமர்ப்பணம்.

********

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆன்மா மற்ற கரணங்களிலிருந்து பிரிந்து மோட்சம் அடைவது சுயநலம். அதைத் தவிர்த்து மற்ற கரணங்களில் தங்கி அவற்றின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உழைப்பது திருவுருமாற்றம். பல பேருடன் பிறந்தவன் படித்து முடித்து வேலை கிடைத்தபின் குடும்பத்திற்காக உழைப்பது அது போன்றது.

********



book | by Dr. Radut