Skip to Content

07. சத்தியம்

சத்தியம்

கர்மயோகி

பகவான் இந்த யோகத்தை மேற்கொள்பவர்க்கு நிபந்தனைகள் விதிப்பதில்லை. தவம் கடுமையானது. உடலுக்கும், உயிருக்கும் கடுமையான நிபந்தனைகளை அது விதிக்கும். யோகம் மென்மையானது. ஆனால் அம்மென்மை கடுமையின் உச்சகட்டத்தைக் கடந்தது. கோபம் வந்தால் தன்னையறியாமல் எதிரியை அடிப்பவனுக்குக் கை கட்டுப்படாது. அடிக்காதவன் திட்டுவான். திட்டாதவன் நெஞ்சு கொதிக்கும். வயிறு எரியும். அடிக்காமல், திட்டாமல், எரிச்சல்படாமலிருப்பது கடினம். யோகத்திற்குரிய சாதகனுக்குக் கோபம் தடையெனத் தெரியும். தடையை மீறாமல் கோபப்படாத நிலையில் எரிச்சல் கட்டுப்படாது. எரிச்சல்படுபவன் எதற்கும் லாயக்கில்லை. அதையும் கடந்து எதிரி தவறு என நினைக்கக்கூடாது என்றால் மனம் கட்டுப்படுமா? யோகக் கட்டுப்பாடுகள் அது போன்றவை. எந்தக் கட்டுப்பாட்டையும் தானே ஏற்றால்தான் முழுப்பலன் வரும். சத்தியம் என்பது சச்சிதானந்தத்தில் சத் எனப்படுவது. உண்மை என்று நாம் வழங்குகிறோம். சத்தியம் யோகத்திற்கு அடிப்படை. பொய் சொல்பவன் அதை நிறுத்தலாம். வாயால் சொல்லும் பொய்யைக் கடந்து பொய் பல்வேறு ரூபங்களில் உலவுகிறது. பொய் சொல்ல முடியாதவர்க்கு யோகத்தை ஆரம்பிக்கும் வாய்ப்புண்டு. அம்முடிவை எடுத்தவர்க்குப் பொய் எத்தனை ரூபங்களில் வழங்குகிறது எனத் தெரிய வேண்டும்.

  1. வழக்கமாகப் பொய் சொல்பவர்.
  2. ஆதாயத்திற்காகச் சொல்பவர்.
  3. பொய் சொல்லி ஆனந்தமடைபவர்.
  4. பொய் சொல்ல பெரும் திறமை வேண்டும் அது இருந்தால் திறமை வெளிப்படும்
  5. வெட்கப்பட்டு பொய் சொல்பவர்.
  6. மரியாதைக்காகச் சொல்லும் பொய்.
  7. மிகைப்படுத்திச் சொல்லும் பொய்.
  8. அறியாமல் பேசும் பொய்.
  9. பிறர் கூறிய பொய்யை நம்பி மீண்டும் சொல்வது.
  10. பயந்து சொல்லும் பொய்.
  11. பகுதியான உண்மை நடைமுறையில் பொய்யாவது.
  12. பொய்யை புத்தகத்தில் படித்துச் சொல்வது.
  13. அசிங்கப்பட்டுச் சொல்வது.
  14. ஆபாசத்தைத் தவிர்க்கச் சொல்வது.
  15. குழந்தை அடம் பிடிப்பதால் சொல்லும் பொய்.
  16. படிப்பறிவு இல்லாதவரிடம் சொல்லும் அவசியம் ஏற்படுத்தும் பொய்.
  17. பிறர் நலனுக்காகச் சொல்வது.
  18. உள்ளே உள்ள குறை — அறிவு, தெளிவு, தைரியம், பொறுமை — வெளியில் பொய்யாக வெளிப்படுவது.
  19. பொய், மெய் வேறுபாடு அறியாமல் பேசும் பொய்.
  20. ஏமாற்றச் சொல்லும் பொய்.

பொய் எழுந்து வாயில் வந்தால் மறுத்து
மெய் சொல்வது சரி.
உள்ளே பொய் எழாமலிருக்கும் தூய்மை
யோக அடிப்படை.

******

ஜீவிய மணி

மனம் மாறினால், மாறிய மனம் செயல்பட்டால், மாறியது உண்மையானால், பலன் வர சில நாட்களோ, சில மணி நேரமோ ஆவதில்லை. அதே நிமிஷம் இழந்ததைப் பெறுவோம். பெறும்பொழுது அது பெரியதாக இருக்கும்.

*******



book | by Dr. Radut