Skip to Content

10. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

P. நடராஜன்

ஸ்ரீ கர்மயோகி அவர்களின் நூல்களை ஊன்றிப் படிக்கப் படிக்க, அவ்வெழுத்துகள் நம் அன்றாட வாழ்வில் நம்மை வழிநடத்துபவையாகவும், தெளிவினைத் தருபவையாகவும், நம்மைச் சீர்திருத்துபவையாகவும் அமைகின்றன. அப்படி அமைந்த சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

பூமராங்

நாங்கள் முன்பு குடியிருந்த வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் நாய்களை வளர்த்து வந்தனர். புதியதாக ஒரு ஜெர்மன் ஷெப்பர்டு நாயை வாங்கி, அதை அவர்கள் வீட்டு மாடி தளத்தில் டிரைனர் கொண்டு பழக்குவது வழக்கம். நாங்கள் இருந்தது முதல் தளம். இரண்டு வீடுகளுக்கும் இடைவெளி சற்று குறைவு. காண்பவர்கள் பயப்படும் அளவிற்குப் பெரிய நாய் அது. சில நாட்களில், அந்த நாய் தனது முன்னங்கால்களை எங்கள் வீட்டுப் பக்கம் தடுப்புச் சுவரின் மீது வைத்தபடி நின்று கொண்டு இருக்கும். வீட்டிற்குப் பின்புறம் மாலை வேளையில் எனது மனைவி நடப்பது வழக்கம். அப்படி நடக்கும் பொழுது தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்க்கும் நாயைப் பார்த்து பல முறை திடுக்கிட்டு நெஞ்சு படபடக்க பயந்திருக்கிறாள்.

அலுவலகம் விட்டு வீடு திரும்பினால், என்னிடம் இதுகுறித்து குறைபடுவாள். ‘பணம் இருக்கிறது என்பதனால் ஒன்றுக்கு நான்கு நாய்களை வைத்துக் கொண்டு அடுத்தவர்களுக்குத் தொந்தரவு தரும்படியாய் ஏன்தான் இப்படி இருக்கிறார்களோ? மொட்டை மாடியில் ஸ்பெஷல் டிரைனர் வைத்து டிரைனிங் வேறு’ என்று பக்கத்து வீட்டாரையும் அந்த நாயையும் வசை பாடுவாள்.

‘அவர்கள் வீட்டில் அவர்கள் வளர்க்கிறார்கள். விடு. இனி பின்புறம் செல்வதற்குமுன் அந்த நாய் உள்ளதா எனப் பார்த்து பிறகுபோ’ என்றேன். சமாதானம் ஆகாமல் ‘அப்படிப் பார்த்துவிட்டுத்தான் செல்கிறேன். ஒரு சுற்று வந்து அடுத்த சுற்று வரும் பொழுது அந்த இருட்டில் யா@ரா மனிதர் நின்று உற்றுப் பார்ப்பதுபோல் உள்ளது. தனியாக இருப்பதால் பயமாக உள்ளது’ என்றாள்.

ஒரு நாள் அலுவலகம் சென்று திரும்பி வந்த பொழுது, மகிழ்ச்சியான செய்தி ஒன்று என்று ஆரம்பித்தாள். ‘பக்கத்து வீட்டு நாய் தொந்தரவு ஒரு வழியாய் தீர்ந்தது’ என்றாள். என்னாயிற்று என்றதற்கு, அந்த நாய் வழக்கம் போல் தடுப்புச் சுவரைத் தாண்டி எட்டிப் பார்த்து கொண்டிருந்தது. கீழ் வீட்டில் வளர்க்கும் பூனை போவதைப் பார்த்து அதைப் பிடிக்க மாடியில் இருந்து நாய் தாவும் பொழுது வீட்டின் சன் ஷேடு மூக்கில் இடித்துக் கீழ் வீட்டுத் தோட்டத்தில் விழுந்துவிட்டது. மூக்கில் அடிபட்டு வீட்டின் பின்புறமாக கீழ்வீட்டிற்குள் வந்துவிட்டது. வீட்டுப்பிள்ளைகள் அவர்களது அம்மாவுடன் அலறி அடித்துக் கொண்டு அறைக்குச் சென்று தாளிட்டுக் கொண்டனர். ஹாலில் இருந்தவர்கள் @சாபாவின் சாய்வு விளிம்பில் ஏறி நின்று கொண்டு என்ன செய்வது என அறியாமல் திகைப்பில் இருந்தனர். பின் போன் செய்து பக்கத்து வீட்டுக்காரர் வந்து நாயை அழைத்துக் கொண்டு போனார். பக்கத்து வீட்டுக்காரர்களை எங்கள் வீட்டுச் செõந்தக்காரர் மிகவும் கடிந்து கொண்டார்.

ஆஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்று மூக்கில் பிளாஸ்திரியோடு நாய் காரில் வந்து இறங்கியது. பார்க்கப் பாவமாய் இருந்தது. இனி தொந்தரவில்லை என்றாள். மேலும் சந்தோஷமாய் என் தம்பி ஊரிலிருந்து வருகிறான் என்றாள்.

இரவு 7 மணியிருக்கும் போது, தெருவில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. மனைவியைக் கூப்பிட்டு நாய்கள் புதியதாக யாரையோ பார்த்துக் குரைக்கிறது. கடித்தாற்போல குரைக்கிறது. உன் தம்பியாக இருக்கப் போகிறது. போய்ப் பார் என்றேன்.

ஓடிச் செல்வதற்குள், அவள் தம்பி கணுக்காலில் பேண்ட் கிழிப்பட்டிருக்க மாடிப் படியில் ஓடி வந்துவிட்டான். தெருவில் உள்ள நாய்களில் பக்கத்து வீட்டுக்காரர் வளர்க்கும் நாட்டு நாயும் ஒன்று. அதுதான் அவள் தம்பியின் கால்களைக் கவ்வியுள்ளது.

மனைவி தான் நாய் அடிபட்டது குறித்து சந்தோஷப்பட்டது தவறு என ஸ்ரீ அன்னையிடம் கூறினாள். கீழ் வீட்டிலிருந்த நர்ஸ் சத்தம் கேட்டு வந்து, இன்ஜெக்ஷன் போட்டுவிட்டு லேசாக பல் பட்டிருக்கிறது. கடியில்லை. பயப்பட வேண்டாம் என்றார்.

Our outward happenings have their seed within - Savitri

********

ஏற்புத்திறனும் சுழலும்

மனதை உறுத்தும் விஷயம் ஒன்றை அன்னை வழியில் தீர்க்க விரும்பினேன்.

நான் தற்பொழுது இருப்பது இரண்டாம் தளம். கட்டிட கிரகப்பிரவேசம் அன்றே நாங்கள் குடி வந்தோம்.

பிறகு சில மாதங்கள் கழித்து, முதல் தளத்தில் ஒரு மகாராஷ்டிரா குடும்பம் குடி வந்தது.

முதலில் அவர்களோடு பேசிவந்த மனைவி, மொட்டை மாடியில் துணி காய வைக்கக் கொடி கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், பின்பு பேசுவது இல்லை.

நான் அவரை எதிரில் பார்த்தால் புன்னகை செய்வேன்.

அவசியம் இருந்தால் பேசுவேன்.

குடி வந்த நாளில் இருந்தே எங்களது வாகனத்தை போர்டிகோ பில்லர் அருகில் நிறுத்துவது வழக்கம்.

மேலும் மனைவி சற்று குள்ளமாக இருப்பதால், வண்டியை ஓட்டிக்கொண்டு ஏற்றி நிறுத்த ஏதுவாய் அந்த இடத்திலேயே நிறுத்தி வந்தோம்.

சில தினங்களாக, அவர்களுடைய இரு வண்டிகளில் ஒன்றை நாங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தினார்கள்.

ஒன்றரை வருடங்களாக எங்களது வண்டிக்கு அடுத்தாற்போல் நிறுத்தியவர், தற்போது ஏன் இவ்வாறு நிறுத்துகிறார் என்பது தெரியவில்லை.

மனைவியோ அவர்களது வண்டியைத் தள்ளி வைத்து விட்டு நிறுத்துங்கள் என்றாள். ‘நான் பொறுமையாக இரு, வம்பு வேண்டாம்’ என்றேன்.

ஒரு நாள் நான் வெளியில் சென்றிருக்கும் வேளையில், குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வந்த மனைவி, ‘அமைதியைக் கடைப்பிடி’ என்ற என் அறிவுரையைப் புறக்கணித்து அவர்களது வண்டியைச் சற்றுத் தள்ளி நிறுத்தி விட்டு எங்களது வண்டியை நிறுத்தினாள்.

மீண்டும் அன்றிரவும் அப்படியே நிறுத்தினோம்.

மறு நாளன்று, நிறுத்திய இடத்திலிருந்து முரட்டுத்தனமாக இழுத்துத் தள்ளி நிறுத்தப்பட்டிருந்தது எங்களது வண்டி.

மேலும் Side Mirror மூர்க்கமாக திருப்பி நெளிக்கப்பட்டிருந்தது. Head light doom கூர்மையான பொருளால் குத்தி உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் வண்டி fiber body, காலால் உதைத்து உடைக்கப்பட்டு, வண்டி முழுவதும் லூசாக ஆடுகிறது. பம்பர் இழுத்து நெளிக்கப்பட்டு இருந்தது.

முதல் தளத்தில் இருப்பவரிடம் (பார்சல் சர்வீசில் மேனேஜர்), ஏன் இவ்வாறு வண்டிக்கு சேதம் விளைவித்தீர்கள். உங்கள்மீது எவ்வளவு மரியாதை வைத்திருந்தேன். நீங்கள் இவ்வாறு செய்ததை என்னால் ஏற்க முடியவில்லை. மனைவியின் உயரத்திற்கு அந்த இடம் சௌகரியமாக இருப்பதால்தான் அங்கு நிறுத்துகிறோம். மேலும் நீங்கள் உங்கள் வண்டியை எடுப்பதே இல்லை. நாம் இருவரும் வாடகைக்காரர்களே தவிர விரோதிகள் இல்லை. ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்டேன். அவரோ, ‘உன் மனைவி வீட்டில்தானே இருக்கிறாள்.

எங்களது வண்டியின் சாவி கேட்டு வாங்கித் தள்ளி வைக்க வேண்டியதுதானே. உன் மனைவி தள்ளி வைத்ததால் எங்கள் வண்டியும் சேதம் ஆகி உள்ளது’ என்று சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டார்.

வீட்டு உரிமையாளரிடம் விஷயத்தைத் தெரியப்படுத்தினேன்.

ஒருவர் வெறி கொண்டு தாக்கும் அளவுக்கு வெறுப்பை சம்பாதித்து உள்ளோமே என்றும், வண்டி சேதம் ஆகிவிட்டதே என்றும் கவலையாக இருந்தது. நான்கு நாட்களாக மனமும் உணர்வும் சரி இல்லை.

அன்னை வழியில் நான் இனி என்ன செய்வது?

முதல் தளத்தில் உள்ள வட இந்தியரை, அன்னை வழியில் எப்படி எதிர் கொள்வது? சொல்பேச்சு கேளாமல், ‘என்னால் உங்களைப் போல் எல்லோருக்கும் கூழைக்கும்பிடு போட முடியாது; வண்டி சேதமாகியுள்ளது என்றால், என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? உடைத்தவரிடம் போய்க் கேளுங்கள்’ எனக் கூறும் மனைவிக்கு அன்னை வழியில் விஷயத்தை எப்படிப் புரிய வைப்பது?

ஏன் எனக்கு இப்படி ஒரு நிகழ்வு? இந்தச் சூழலை நான் என் அக முன்னேற்றத்திற்கு எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது? என்றெல்லாம் கேள்விகள் துளைக்கத் தூக்கமில்லாது தவித்தேன். முதல் தளத்தைக் கடக்கும் போதெல்லாம், வண்டியைப் பார்க்கும் போதெல்லாம் எரிச்சல் எழுந்தது.

ஸ்ரீ கர்மயோகி அவர்களின் புத்தகத்தைப் பிரித்தேன். ‘அருள் வரும்பொழுது ஏற்புத்திறன் குறைவாக இருந்தால் அருளை நம் சுபாவம் எதிர்க்கும்’ என்றது. Absolute Non-reaction is necessary. எரிச்சல், கோபம் எழாது இருக்க வேண்டும் எனக் கொண்டேன். நான் பார்த்து வந்த வேலையில் நான்கு மடங்கு கூடுதல் ஆர்டர் கிடைக்கயிருப்பதாகச் செய்தியைக் கேட்டு, பலனை மதிப்பு போட்டு மறுத்தது, பொருமியது நினைவுக்கு வந்தது. மனம் அடங்காமல் stress -உடன் அலுவலகத்தில் வேலை செய்தால் வீட்டில் சுமுகக் குறைவு ஏற்படும் என்றும் படித்தேன். வந்த ஆர்டர் அடுத்தவருக்குப் போனது.

மேலும் கூடுதல் ஆர்டர்கள் நான் வேலை பார்த்த அலுவலகத்திற்குக் கிடைக்க இருந்தது தெரியவந்தது. மறுநாள் வண்டியின் இரண்டு டயர்களிலும் ஆணி அடித்து பஞ்சர் ஆகியிருந்தது. இம்முறை அவரிடம் எதையும் கேட்கவில்லை.

மனதைச் சாந்தப்படுத்தி அழுத்தமான அமைதியுடன் இருந்தேன். வேலையிலும் reaction இன்றி சமநிலையில் இருப்பது என இருந்தேன். வண்டியைச் சரிசெய்ய 2000 ரூ. மேல் செலவானது.

கோபம், எரிச்சல், உறுத்தல் மறைந்தது. வேலையும் வருமானமும் அதிகரித்தது.

அடுத்த இரண்டு மாதங்கள், கீழ் வீட்டுக்காரர் வேலைக்குப் போகாது வீட்டிலேயே இருந்தார். திடீரென்று கல்கத்தாவிற்கு மாற்றல் என காலி செய்து போய்விட்டார். சாதாரணமாக மாற்றல் 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் வரும் என அவர்கள் கூறக் கேள்விப்பட்டிருக்கிறோம். நாம் மாறியதும் பிரச்சனைக்காரர்களையும் அன்னை நம்மை விட்டு அகற்றிவிடுகிறார்.

மேலும் இந்த விஷயம், என் அகத்திற்கும் புறத்திற்குமான தொடர்பை எனக்கு நன்கு விளக்கியது.

*********

ஸ்ரீ அரவிந்த சுடர்

உலகில் நடைபெறும் அனைத்தும் அவன் செயல் என்பதால், அவனது திருவுள்ளம் தானே உலகில் பூர்த்தியாகிறது எனலாம். குசேலரும், கிருஷ்ணனும் ஒரே ஆசிரியரிடம் பயின்றாலும் வெவ்வேறு பலனை அடைந்தார்கள். இறைவன் அருள் பொதுவாக உலகில் செயல்படுகிறது. அதற்குட்பட்ட மனிதன் தன் திறமைகளால் முன்னேறுகிறான். மனிதன் இறைவனின் அருளைத் தன் வாழ்வில் குறிப்பாகச் செயல்பட (Super Grace) அனுமதித்தால் தன் திறமையால் முடிவில் பெறும் பலனை, முதலில் பெறுவான் என்கிறார் அன்னை. அதைச் செய்யும் முறையை விளக்குவதே அவர்களுடைய யோக நூல்கள். அதைச் செய்வது பகவானுடைய பூரண யோகம்.

***********



book | by Dr. Radut