Skip to Content

12. அன்னை இலக்கியம்

மாமனாக வந்தவர் 

இல. சுந்தரி

அமைதியான காலைப் பொழுது. வசந்தி வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருக்கிறாள். அப்பா செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்கிறார். அம்மா இவர்களுக்கு டிபன் தயாரிக்கிறாள்.

பட்டுப்பாவாடை சரசரக்க, பூமணம் கமழ புத்தம் புதுமலராய் பார்வதி வருகிறாள். அதே தெருவில் வசிப்பவள். வசந்தியின் தோழி. வெள்ளிக் கிண்ணத்தில் ஏதோ கொண்டு வந்திருக்கிறாள். ஒரு கணம் வீட்டின் அமைதி தடுமாறி சூழல் ஆரவாரத்திற்கு வருகிறது. ‘வா! பார்வதி எங்கே உன்னைக் காணவில்லை' என்கிறாள் அம்மா வரவேற்கும் தோரணையில். அப்பாவோ, ஏது பட்டுப் பாவாடையெல்லாம் அமர்க்களப்படுகிறது? என்ன விசேஷம்? என்கிறார். இப்படித்தான் பார்வதி திடீர் திடீரென ஏதேனும் காரணத்துடன் ஆரவாரமாய் வரும்போதெல்லாம், வசந்தி ஏக்கமும், மகிழ்வுமாய் மாறுவாள். ‘இன்று எனக்குப் பிறந்த நாள் மாமி. நில்லுங்கோ நமஸ்காரம் பண்ணிக்கிறேன். ஆசீர்வாதம் செய்யுங்கோ' என்று நமஸ்கரிக்கிறாள். வெள்ளிக் கிண்ணத்தில் பால் பாயசத்தை நீட்டும்போது அவள் பட்டுப் போன்ற கைகளில் புதிய பொன் வளையல்கள் மின்னுவதை அம்மா ஆர்வத்துடன் பார்க்கிறாள். வசந்தி எழுந்து வந்து அம்மாவின் பக்கத்தில் நின்று தோழியின் கைவளையல்களை ஏக்கத்துடன் பார்க்கிறாள். என்ன மாமி அப்படிப் பார்க்கறேள்? இது எங்க மாமா வாங்கித் தந்தது. என் பொறந்த நாள் பரிசு என்று ஏகப் பெருமையுடன் கூறினாள்.

ரொம்ப நன்னாயிருக்கு. நீயும் நன்னாப் படிச்சு நன்னாயிருக்கணும், என்று அம்மா நெஞ்சு நிறைந்து ஆசீர்வதித்தாள். அம்மா இப்படித்தான் கண்டு மகிழ்வதோடு சரி. வேண்டும் என்று ஆசைப்படாத உள்ளம். அதனால்தான் அப்பா மற்ற ஆடவர்களைப்போல் கவலைப்படாது வலம் வருகிறார். வசந்தியின் பிஞ்சு மனமோ தனக்கும் அப்படியொரு பொன்வளையல் வேண்டுமென ஆசைப்பட்டது. வளையல் வேண்டுமென்பதை விட நிறைந்த அன்புள்ளம் கொண்ட ஒரு தாய் மாமன் வந்து அதைத் தரவேண்டுமென ஆசைப்பட்டது. எத்தனையோ உறவினர் வந்திருக்கிறார்கள். இவளுக்குத் தாய் மாமன் என்று ஒருவரும் வந்ததில்லை.

ஆசியைப் பெற்றுக் கொண்டு பார்வதி போய்விட்டாள். அவள் விட்டுச் சென்ற நிகழ்ச்சி நிலைத்துவிட்டது. அம்மா வசந்தியை ஆதரவாகப் பார்த்தாள். அம்மா, எனக்கு ஏன் அம்மா மாமா இல்லை? என்று ஏக்கத்துடன் கேட்டாள். இவள் இப்படிக் கேட்கும் போதெல்லாம் அம்மா கண் கலங்குவாள். அப்பாவோ (பெரிய மனுஷி போல் இதென்ன பெரிய பேச்சு? என்று) அவளை அடக்குவார். இப்படி நல்ல நாட்களெல்லாம் பரிசு கொடுக்கும் மாமா எனக்கு மட்டும் ஏனில்லை? அம்மா எனக்கும் ஒரு மாமாயிருந்தால் எவ்வளவு நன்னாயிருக்கும்? என்றாள். பரிசெல்லாம் தருவாரில்லையா? என்று தன் ஏக்கத்தைச் சொல்லிலும் முகத்திலும் வெளிப்படுத்தினாள். ‘தப்பு வசந்தி. அப்படிச் சொல்லாதே. நமக்கு வேண்டியதை மாமாவால்தான் தரமுடியுமா? ஸ்வாமிதான் எல்லாம் தருபவர். எது கேட்டாலும் தருவார். அவரைத்தான் நாம் கேட்க வேண்டும்' என்று நயமாகவும், ஆறுதலாகவும் கூறினாள்.

மாலை மறையும் நேரம். வாசல் திண்ணையிலமர்ந்து தெருவில் போவோர் வருவோர் முகங்களில் மாமாவின் அன்பைத் தேடிக்கொண்டிருந்தாள். பள்ளிக்கூடம், விளையாட்டு, சாப்பாடு, தூக்கம் இவற்றைத் தவிர வேறு அறியாத சிறு பருவம். அன்பு எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் கள்ளமிலாத பிள்ளைப் பருவம். இதைத் தவிர சூதும் வாதும் கலவாத தூய்மையான வெள்ளையுள்ளம். அடிக்கடி பார்வதி தன் தாய் மாமாவைப் பற்றிக் கூறக் கேட்டு மாமன் என்பவர் பெண்ணுக்கு இன்றியமையாத அன்பர் என்று எண்ணியிருந்தாள். திடீரென என் மாமன் வந்து என்னைக் காணக் கூடுமோ? என்று எண்ணியவண்ணமிருந்தாள். மின்னல் வேகத்தில் எதிர்ச்சாரி வீட்டிலிருந்து ஒருவர் வெளியேறி முன் சென்றதைக் கண்டாள். கண்களில் கனிவும், முகத்தில் தீவிரமுமாக இப்படியொரு மனிதரை அவள் பார்த்ததேயில்லை. யாரிவர்? எங்கு செல்கிறார்? நீண்ட நேரம் காத்திருந்து விடையறியாது விழித்தாள். சிறிது நேரத்தில் ஆபீஸ் முடிந்து அப்பா வந்தார். வாசல் திண்ணையில் மகளைக் கண்டதும், விளக்கேற்றும் வேளையில் ஏன் வாசலில் உட்கார்ந்திருக்கிறாய்? உள்ளே போய் சுவாமிக்கு விளக்கேற்றி ஸ்தோத்திரம் சொல் என்றார். இப்படியொரு வழக்கம் இந்த வீட்டில். இதில் ஓர் அழகு இருப்பது உண்மைதான். அதன் சாரம் என்ன என்பதுதான் அவளுக்குப் புரியவில்லை. அகண்ட பராசக்தியை வார்த்தைகளால் வர்ணிக்கும் செயல்மட்டுமே அது. சுவாமிக்கு நமஸ்காரம் செய்தாயோ? என்றாள் அம்மா. ஏனோ இவர்கள் சுவாமி, சுவாமி என்று கூறும்போதெல்லாம் எதிர்வரிசையிலுள்ள ஒரு வீட்டிலிருந்து மின்னலாக வெளியேறிய அந்தத் திருவுருவம், அந்தக் கண்களில் கனிவு மனத்திரையில் ஓடி மகிழ்வூட்டுகிறது. பெற்றோரின் மகிழ்வுக்கு அவர்கள் கூறிய இந்த வழிபாட்டை மேற்கொண்ட போதிலும் மனம் ஏனோ அதில் ஈடுபடவில்லை. உண்மையில் இவளுக்குக் கடவுள் பக்தி அதிகம். ஏனோ மனம் புரட்சி செய்கிறது.

அங்கே இங்கே கேட்ட பேச்சுகள் இவளால் காணப்பட்டவர், எல்லோருடைய கவனத்திற்கும் உரியவராய் இருந்தார். இதில் வேறுபாடு என்னவெனில் இவள் கள்ளமிலா மனம் கண்டவிதமும், மற்றவர் காணும் கோணமும் மாறுபட்டிருந்தன. அவர் ஏதோ மாயமந்திரம் செய்பவர் என்றே எல்லோரும் எண்ணியிருந்தனர். அதை மேலும் கேட்டறிய போதிய வயதில்லை இவளுக்கு. அவள் தந்தையோ, வீட்டில் பிரதியட்சமாய், பரம்பரை பரம்பரையாய் வழிபடும் தெய்வங்கள் வீட்டிலிருக்க யோகி என்றொரு மந்திரவாதியைத் தேடுகிறாளா? என்பார். அவர் ஏதோ கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தை கற்றவராம். இன்னும் ஏதேதோ புரளிப் பேச்சுகள். அவள் குழந்தை மனம் இவையெவற்றையும் ஏற்கவில்லை. அவர் திருவுருவம் இவள் மனதில் ஆழப் பதிந்தது. நினைக்கவே மகிழ்ச்சியாயிருந்தது. அந்தப் பார்வை எத்தனைக் கனிவானது? எடுத்துச் சொல்லத் தெரியவில்லை. ஏதேனும் சொல்லிவிட்டாலோ அவளை வெளியே வாராது தடுத்துவிடுவார் அப்பா. வேறு வீடு குடி மாறவும் செய்யக்கூடும். எனவே தன் மனநிலையை யாரிடமும் கூறவில்லை.

அவர் யார்? ‘கடவுளை நேரில் பார்க்க முடியுமா அம்மா?' என்று அவள் கேட்டபோதெல்லாம் பார்க்கமுடியும். அதற்குக் கடவுளைப் பார்க்க வேண்டும் என்ற உண்மையான ஆர்வம் வேண்டும் என்பாள் அம்மா. இவளுக்கு இப்போது உண்மையான ஆர்வம் உள்ளது.

அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு வெளியே போகும் போதெல்லாம் எத்தனை ஆவலாக அந்த வீட்டைக் கண்காணித்தாள். ஒரு நாள் அவள் எதிர்பார்த்தது நிகழ்ந்தது. அந்த வீட்டின் மாடியறையில் வாசல்புறம் நோக்கிய ஜன்னல் வழியே அதே திருவுரு தன்னைக் கண்டதை அவளும் கண்டாள். கண்ட கணமே மெல்ல உதடு பிரித்து முறுவல் செய்தாள். அவரும் கண் மலர்ந்து புன்னகைத்து நோக்கினார். ஆகா இது என்ன அற்புதமோ, திருவருளோ என்று சொல்லத் தெரியாத பருவம். மனம் எப்படி நெகிழ்ந்து போனது. ஒரே குதூகலம். வானத்தில் பறப்பதுபோல் பெருமிதம். அன்று முதல் ஏன் அந்தக் கணம் முதல் வீடு, பள்ளிக்கூடம், விளையாட்டு, தோழியர், ஆடை, அணிகலன் யாவற்றையும் விட இவள் மனம் அந்தப் புன்னகையைத்தான் நேசித்தது.

தெருக்கோடியில் உள்ள கடையில் அப்பாவோ, அம்மாவோ ஏதேனும் வாங்கி வரச் சொன்னால் மிகுந்த ஆவலோடு புறப்பட்டுவிடுவாள். மறுப்பதோ, சிணுங்குவதோ கிடையாது. அதன் பயன் அவளுக்கல்லவா தெரியும். ஜன்னல் வழியே அந்தத் திருவுருவம் தெரிகிறதா எனப் பார்த்துக் கொண்டே செல்வாள். தரிசனம் கிடைத்தபோதெல்லாம் வானிலே பறப்பாள். காணாத போதோ சோகத்தோடு வருவாள். ஆயினும் இந்த இன்பத்தையோ, ஏமாற்றத்தையோ வெளிப்படுத்தாமல் மறைத்துவிடுவாள். அவரைப் பார்க்க வேண்டும், அவருடன் பேசவேண்டும் என்றெல்லாம் நாளுக்கு நாள் அன்பு வளர்ந்தது. இவள் அகவுணர்ச்சி அத்தெய்வத்திற்கு எட்டாதிருக்குமா?

ஒரு நாள் பக்கத்து ஊரில் அவர்கள் உறவினர் வீட்டிற்கு ஏதோ காரணமாய் இவள் பெற்றோர் செல்ல நேர்ந்தது. இவளை விட்டுவிட்டுச் சென்றனர். அப்போது இவள் விளையாட்டுத் தோழன் வாசு ஒரு வண்ணப்பட்டத்துடன் வந்தான். வசந்தி நீயும் வருகிறாயா? பட்டம் விடுவோம்? என்று ஆவலாக அழைத்தான். அவளும் மகிழ்ச்சியுடன் பட்டம்விட ஒப்புக்கொண்டாள். இருவரும் மாறிமாறி நூலைப் பிடித்து பட்டத்தை மேலே ஏற்றினர். அது மேலே ஏறுவதும் கவிழ்வதுமாய்ப் பறந்தது. இருவரும் ஆரவாரத்தோடு சிரித்து மகிழ்ந்து மேலே மேலே பட்டத்தை ஏற்ற முயன்றனர். அப்போது பட்டம் திடீரென எதிர் வரிசையிலுள்ள அவர் (இவள் காண விரும்பும் கடவுள்) வீட்டு மேல்மாடியில் ஓரிடத்தில் சிக்கிக் கொண்டது. வாசு திடுக்கிட்டான். எத்தனை ஆசையாய் வாங்கி வந்த பட்டம். இப்பொழுது என்ன செய்வது என்று கலங்கிப் போனான். வசந்தியோ திடீரென மகிழ்ச்சியானாள். ஏன் வசந்தி இத்தனை மகிழ்ச்சியாயிருக்கிறாய்? பட்டம் சிக்கிவிட்டதே என்று எனக்கு எத்தனை வருத்தம் தெரியுமா? என்று தன் வேதனையை வெளிப்படுத்தினான். இதிலென்ன வருத்தம் உனக்கு? எதிர்வீட்டுக் காரர்கள் ஊருக்கே புதியவர்கள். அவர்களைப் போலீசே கண்காணித்து வருகிறது என்று என் அப்பா சொல்லியிருக்கிறார். அவர்கள் வீட்டில் உள்ளே சென்று எப்படிக் கேட்க முடியும்? அவர்களோ மந்திரவாதிகளாம் என்றான் அச்சத்துடன். வசந்திக்குச் சிரிப்பு வந்தது. அந்தக் கனிவான முகத்தைப், பாசம் பொழியும் விழிகளை ஒருமுறை பார்த்தவர் கடவுளையே பார்த்த மாதிரியல்லவா இருக்கும். அவர்கள் புதியவர்களானால் நமக்கென்ன? நமக்குத் தேவை நம் பட்டம். அதைக் கேட்டுப் பெற நாம் ஏன் அஞ்ச வேண்டும்? என்றாள். அப்படியென்றால் நீ போய் பட்டத்தை எடுத்து வா. அந்த வீட்டிற்குள் நான் வரமாட்டேன் என்றான் வாசு. ‘சரி! நானே போய் எடுத்து வருகிறேன். ஆனால் நீ யாரிடமும் சொல்லக் கூடாது' என்றாள். அவனுக்குத் தேவை அவன் பட்டம். அவளுக்குத் தேவை அவள் தெய்வத்தின் தரிசனம். ‘இங்கேயே நில்' என்று சொல்லிவிட்டு அந்த வீட்டை நோக்கி ஓடினாள். திறந்தும், திறவாமலும் இருந்த கதவை மெல்லத் தள்ளி உள்ளே சென்றாள். ஆள் அரவமே இல்லாதிருந்தது. இரண்டடி முன்னே சென்றாள். ஒரு மாடிப்படி. அதன் மீதேறி மெல்லச் சென்றாள். ஒரு வராந்தா. அதையொட்டி ஓரறையிலிருந்தது. வீட்டின் கூடத்தை நோக்கினாற்போல் வாசல். தாழ்வாரத்தை நோக்கினாற்போல் அந்த அறையின் ஜன்னல் அமைந்திருந்தது. அதனருகே சென்றாள். ஜன்னல் கம்பிகளைப் பிடித்த வண்ணம் உள்ளே பார்க்கிறாள். ஜன்னலையொட்டி ஒரு மேசையும் நாற்காலியும். அங்கு அமர்ந்து அவர் ஏதோ படித்த வண்ணமிருந்தார்.நீண்டு தோளில் விழும் கேசம், சிறிய தாடி, நீண்ட விழிகள். அந்தத் தோற்றம் அவளுக்குள் ஒரு பரவசத்தையேற்படுத்தியது. வைத்த கண் வாங்காமல் நோக்கினாள். ஏதோவுணர்வு தீண்டினாற்போல் அவர் இவள் பக்கமாகத் திரும்பினார். கள்ளமிலாச் சிறுமி. தன் பெரிய விழிகளால் தன்னை ஆவலும் வியப்புமாய்ப் பார்த்துக் கொண்டு நிற்பதைக் கண்டார். நட்புணர்வுடன் மெல்லச் சிரித்தார். அவளும் வெட்கமாய்ச் சிரித்தாள். அடுத்தவர் வீட்டிற்குள் அனுமதி பெறாமல் வந்தது பற்றித்தான் வெட்கப்பட்டாள். அவர் இவளை நீ யார் எங்கு வந்தாய் என்பது போல் பாராமல் நன்கறிந்தவர்களை எப்பொழுது வந்தாய் என்று கேட்பது போல் பார்த்தார். மிகவும் மகிழ்ச்சியவளுக்கு. தங்கள் விளையாட்டுப் பட்டம் அந்த வீட்டு மொட்டை மாடியில் சிக்கிவிட்டது, எடுத்துப் போக வந்ததாயும் கூறினாள். தலையசைத்து எடுத்துக்கொள்ள அனுமதி தந்தார். ஓடிப் போய் பட்டத்தை எடுத்து வந்துவிட்டாள். மீண்டும் ஜன்னல் பக்கம் வந்து தன் சின்னப் பாதங்களை உயர்த்தி உள்ளே ஆவல் மீதூரப் பார்த்தாள். அவர் மெல்லச் சிரித்து இவளை உள்ளே வரும்படிச் சொன்னார். பூனை போல் மெல்ல அடிமேல் அடிவைத்து உள்ளே வந்தவள் இடக்கையில் பட்டத்தைப் பிடித்த வண்ணம் அவர் மேசையின் பக்கமாக வந்து நின்றாள். மேசை நிறையப் புத்தகங்கள். அழகான எழுத்துகளால் வெள்ளைத் தாளை அலங்கரிப்பதுபோல் எழுதிக் கொண்டிருந்தார். எழுதுவதை நிறுத்தி இவளைப் பார்க்கிறார்.

‘உன் பெயரென்ன?' புன்னகையுடன் கேட்கிறார்.

‘வசந்தி' என்று அழகாகச் சொல்கிறாள். ‘அழகான பெயர்.

வசந்தம் இங்கே வந்திருக்கிறதா?' என்றார் சிரித்துக் கொண்டே.

‘உங்கள் பெயர் என்ன?' பதிலுக்கு அவளும் கேட்டாள்.

‘அரவிந்த கோஷ்' என்று சங்கீதம் பொழிவதுபோல் கூறினார்.

‘எத்தனை அழகான பெயர். என் பெயரை விடவும், உங்கள் பெயர்தான் அழகாகஇருக்கிறது. எனக்கு ரொம்பப் பிடிக்கிறது' என்றாள் உண்மையான அன்புடன்.

‘ஓகோ, என் பெயரைத் தான் பிடிக்கிறதா? என்னைப் பிடிக்கவில்லையா?' என்றார் விளையாட்டாக.

‘உங்களையும் தான் ரொம்பப் பிடித்திருக்கிறது' என்று அவசரமாகப் பதிலிறுக்கிறாள்.

‘நேரமாகிவிட்டது. அப்பா வந்துவிடுவார்.'

‘அப்புறமாய் வருகிறேன்' என்றாள்.

‘ஏன் அப்பாவிடம் மிகவும் பயமா?' என்றார்.

‘பயம் ஒன்றுமில்லை. ஆனால், உங்கள் வீட்டிற்கு வந்தால் பிடிக்காது' என்றாள்.

‘ஏன் பிடிக்காது?' 

‘ஏதோ இங்கு மந்திரவாதி இருப்பதாக எல்லோரும் சொல்வார்களாம். அதனால் இந்த வீட்டிற்குள் போய்விடாதே என்பார் அப்பா.'

‘அப்படியா? யார் அந்தமந்திரவாதி?'

‘நீங்கள்தான்' என்று குறும்பாய்ச் சிரித்தாள் குழந்தை.

‘நானா?' என்று அஞ்சுவதுபோல் கேட்டார்.

‘ஆமாம். நீங்கள்தான். ஆனால் அப்பா சொல்வதுபோன்ற மந்திரவாதியில்லை. ஆண்டவன் போன்ற மந்திரவாதி.

‘ஆண்டவன் போல என்றால் என்ன பொருள்?'

‘கடவுளுக்குத் தானே மந்திரங்கள் ஜபிப்பார்கள்'.

‘மந்திரமெல்லாம் ஜபிப்பதுண்டா?'

‘அதையேன் கேட்கிறீர்கள். காலையிலும், மாலையிலும் விளக்கேற்று, சுவாமிக்கு ஸ்லோகம் சொல்லு என்பார் அப்பா. அவருக்காகத் தான் ஸ்லோகமெல்லாம் சொல்வேன். ஆனால் மனதில் எதுவும் தோன்றுவதில்லை.ஆனால் ஒரு மந்திரமும் சொல்லாமல் உங்களைப் பார்த்தவுடன் பக்தி வருகிறதே. அதனால் நீங்கள் தான் எனக்கு மந்திரவாதி' கள்ளங்கபடமில்லாமல் சொல்லிவிட்டாள். இவள் பேசப் பேச அவர் ரசித்த வண்ணமிருந்தார்.

‘அது சரி. நான் உங்களை என்ன சொல்லிஅழைப்பது?'

‘மாமா என்று சொல்லிக் கூப்பிடேன்'.

‘கடவுளை மாமா என்று கூடச் சொல்லலாமா?

‘சரிதான். இவ்வளவு கெட்டிக்காரியாய் இருக்கிறாய்.'

‘கடவுள் மாமனாக வந்து வழக்குரைத்த கதை தெரியாதா?'

‘தெரியாதே'.

‘ஓர் ஊரில் தனபதி என்று ஒருவர் இருந்தார். அவருக்குக் குழந்தையே இல்லை. அதனால் தன் தங்கையின் குழந்தையை சுவீகாரம் செய்து கொண்டு வளர்த்தார். ஆனால் அவர் மனைவிக்கும், தங்கைக்கும் ஓயாமல் சண்டை வந்து கொண்டேயிருந்தது. அதனால் தனபதி தன் தங்கையின் மகனுக்குச் சொத்துகளை எழுதி வைத்துவிட்டுத் தம் மனைவியுடன் வனவாசம் சென்றுவிட்டார். இவர் தங்கைக்கு ஒன்றும் தெரியாததால் உறவினர்கள் இவளை ஏமாற்றி பொருளையெல்லாம் பறித்துக் கொண்டனர். இவள் கடவுளிடம் சொல்லிஅழுதாள். கடவுள் இவனிடம், வழக்குமன்றத்தில் போய் முறையிடும்படியும் தாமே வந்து சாட்சி சொல்வதாயும் கூறினார். அதுபோலவே வழக்குமன்றத்தில் குழந்தையின் தாய்மாமனாய் வந்து தாமே சொத்துகளை மீட்டுத் தந்தாராம்' என்றார்.

அவர் சொல்லச் சொல்ல ஆவலுடன் அவர் முகத்தையே அன்பு பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘நீங்கள் மாமாவாக வந்து சாட்சி சொல்லியிருக்கிறீர்களா?' என்று சிரித்தாள்.

'எப்போதும் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?' பெரிய மனுஷி போல் கேட்டாள்.

‘உன்னைப் பற்றித்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்' என்றார்.

‘என்னைப் பற்றி தெரியுமா உங்களுக்கு?'

‘எல்லாரைப் பற்றியும் தெரியும்' என்றார்.

‘அப்படியென்றால் எனக்கு மாமா இருக்கிறாரா?'

‘அவர் என்றேனும் பார்வதி மாமாவைப் போல் எனக்குப் பரிசு கொண்டு வருவாரா?' என்று மிகுந்த ஆவலுடன் கேட்டாள்.

‘ஆமாம். நிச்சயம் கொண்டு வருவார்' என்றார்.

அவர் கூறும்போது அவர் முகத்தில் தெரிந்த பரிவுணர்ச்சி உறுதி யாவும் இவளுக்கு மகிழ்வளித்தது.

‘நேரமாகிறது பிறகு வருகிறேன்' என்று மாமாவைப் பற்றிய மனநிறைவோடு சென்றுவிட்டாள்.

இவள் பட்டத்துடன் வருவது கண்டு நிம்மதியடைந்தான் வாசு. ஏன் வசந்தி இவ்வளவு நேரம்? நான் பயந்தே போனேன் என்றான்.

‘எதற்குப் பயந்தாய், அங்கொன்றும் மந்திரவாதியில்லை' என்றாள் கோபமாக.

அப்பா இவளைத் தேடிக்கொண்டிருந்தார். எங்கே வசந்தி? விளக்கேற்றவில்லையா? சுவாமிக்கு விளக்கேற்றி ஸ்தோத்திரம் சொல்ல வேண்டுமென்று எத்தனை முறை சொல்வது? என்று சினந்தார்.

குழந்தை கைகால் அலம்பி முகம் கழுவி, நெற்றிக்கு குங்குமம் இட்டுக் கொண்டு வந்தாள். அம்மா விளக்கில் எண்ணெய் ஊற்றித் தர தன் பிஞ்சுக் கரத்தால் விளக்கேற்றினாள். சுவாமி படத்திற்கு முன்னின்று ஸ்தோத்திரம் பாடினாள். வாய்தான் பாடியது. மனம் சற்றுமுன் கண்ட பரம்பொருள் அவள் களங்கமற்ற கண்களுக்குத் தெரிந்தது.

பள்ளிக்கூடம் விட்டு மதியவுணவிற்குப் பின், அப்பா இல்லாத நேரம், அம்மா கண்ணயரும் நேரம் மாமாவுடன்தான் இவள் வாசம்.

அன்று வார விடுமுறை நாள். அப்பா எங்கும் வெளியே போகமாட்டார். இவள் எண்ணெய் நீராடிவிட்டு வீட்டிற்குள்ளே இருக்கவேண்டும். அன்று திடீரென்று ஒருவர் வந்தார். அவரைக் கண்டதும் இவள் அம்மாவும், அப்பாவும் யாரெனத் தெரியாமல் விழித்தனர். வந்தவர் உரிமையோடு கூடத்து ஊஞ்சலில் வந்தமர்ந்தார். யோகியைப்போல் முகத்தில் ஒரு தேஜஸ், வெட்டப்படாத முடியும், தாடியுமாய் இருந்தார். இவள் கண்களுக்கு எதிர்வீட்டு மாமாவைப் போலவே தோன்றிற்று. மாமா! என்று ஆவல் மேலிட ஓடிச் செல்லத் தொடங்கியவளை அப்பா தடுத்துப் பிடித்துக் கொண்டார்.

‘தாங்கள் யாரென்று தெரியவில்லை' என்று அப்பா தயக்கமாய் விசாரித்தார். வந்தவர் சிரித்தார். இவள் அம்மாவைப் பார்த்து, ‘பர்வதம் உனக்குக் கூட என்னை அடையாளம் தெரியவில்லையா? நான் உன் அண்ணா ஈஸ்வரன்' என்றார்.

இதுவரை இப்படி தனக்கொரு அண்ணாயிருப்பதாக அம்மா சொன்னதில்லையே என்று சிறுமி சிந்தித்தாள். அம்மாவோ கண் கலங்கினாள். விரைந்து சென்று நமஸ்கரித்தாள். ‘குழந்தை இங்கே வா. நான் யாரோ இல்லை. உன் தாய் மாமன்' என்றார் அன்பு பொங்க. எதிர்வீட்டு மாமா சொன்னாரே நிச்சயம் வருவார் என்று. அவருக்கு எப்படித் தெரியும். அவர் தான் இவரோ. என்னவெல்லாமோ நினைத்தாள். அருகே சென்ற இவளின் வாழைக் குருத்துப்போன்ற கையை மிருதுவாகப் பற்றிச் செல்லமாக முத்தமிட்டார். மாமா உன்னைப் பார்க்கத்தான் வந்தேன் என்று அன்போடு அணைத்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். அம்மா தன் அண்ணாவைச் சாப்பிட வருமாறு அழைத்தாள். ‘இல்லையம்மா. நான் சாப்பிட வரவில்லை. சிறு வயதில் வீட்டை விட்டு வெளியேறிய நான் அலைந்து திரிந்து பணத்தாசையால் குடும்பப் பொறுப்பை மறந்தேன். உன் கல்யாணத்திற்குத் தமையனாக இருந்து செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத் தவறினேன். உன் பொருட்டு செய்யத் தவறிய கடமையை உன் மகள் பொருட்டுச் செய்ய வந்தேன்' என்றார். ‘அதைப் பற்றி இப்பொழுது என்ன கவலை? நீங்கள் வந்ததே போதும்' என்றாள் அம்மா.

‘இல்லை பர்வதம். இந்த ஒரு கடமையைச் செய்யாது போனது என் மன அமைதியைக் கெடுப்பதால் முழுமனத்தோடு இறைவனை எண்ண இடையூறாய் இருக்கிறது. இந்தக் கடமையை ஏற்று என்னை விடுதலை செய்துவிடு' என்றார் மாமா.

என்ன அண்ணா இது? நீண்ட நாள் கழித்து வந்திருக்கிறீர்கள். எங்கிருக்கிறீர்கள்? எப்படியிருக்கிறீர்கள் என்றெல்லாம் கூறாமல் புறப்படுகிறீர்களே என்கிறாள் அம்மா.

‘இல்லை பர்வதம். எங்கே? எப்படி என்ற கேள்விகளுக்கெல்லாம் என் சந்நியாச வாழ்வில் இடமில்லை. கடமையைச் செய்யாது போனால் எந்தத் தவமும் பலிக்காது என்பதால் உனக்காக நான் சேமித்தவற்றைப் பெற்றுக் கொள்' என்று ஒரு பணமுடிப்பை அம்மாவிடம் தந்தார். ஒரு காகிதப் பொட்டலத்தைப் பிரித்தார். அதில் ஒரு ஜோடி பொன் வளையல்கள் சிறியதாய் அழகாக மின்னின. இவள் கைகளை அன்புடன் பற்றி அதில் அந்தப் பொன்வளையல்களை அணிவித்து அந்த சின்னஞ்சிறு கைகளை முத்தமிட்டு வாழ்த்தி விடுவிடென்று தெருவில் இறங்கி காணாமற் போனார்.

கணப்பொழுதில் நிகழ்ந்த இச்செயல்களால் அனைவரும் ஸ்தம்பித்து நிற்க, தன் பொன்வளையல் பூண்ட கரங்களை எதிர்வீட்டு மாமாவிற்குக் காட்டிவர ஆவலுடன் ஓடிய வசந்தி கதவு பூட்டிக் கிடப்பது கண்டு திரும்பினாள்.

ஆம். மாமனாக வந்து வழக்குரைத்த கதை சொல்லத் தான் வந்தாரா? அம்மா சொல்வாளே, கேட்டதைத் தர மாமா வேண்டாம் சுவாமி தருவார் என்று. மாமா, நீங்கள் மாமா இல்லை. இவர்களுக்குத் தெரியாது நீங்கள் யாரென்று. எனக்குத் தெரியும். பொன் வளையலைக் கேட்டு உங்களை இழந்துவிட்டேனே மாமா. எனக்குப் பரிசு வேண்டாம். நீங்கள் தான் வேண்டும் என்று அழத் தொடங்கிவிட்டாள். அவர்களுக்குப் புரியவில்லை. அவள் மீண்டும் தன் மாமாவைக் கண்டிருப்பாளா? நிச்சயம் கண்டிருப்பாள்.

....

ஸ்ரீ அரவிந்த சுடர்

 

நம்முடைய குறைகளை மட்டும் திருத்திக் கொள்ள முன்வருபவர்களுக்கு பிறரால் குறையோ, தொந்தரவோ வராது. அகத்தூய்மை, புறச் சுதந்திரம் தரும். 



book | by Dr. Radut