Skip to Content

13.புலன்களுக்குப் புலப்படாதது

அன்னை இலக்கியம்”

                       புலன்களுக்குப்    புலப்படாதது                       இல.   சுந்தரி                                                                                             

    தாத்தா எங்க பாட்டி எப்ப வருவாங்க? என்றாள் சிறுமி அமிர்தா

         வருவாங்கம்மா சீக்கிரம் வருவாங்க என்றார் ராமையா தாத்தா

       இவர் சென்னையில் ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் நாணயமான காவலர் பொறுப்பில் இருந்நவர் .

ஓய்வு பெறும் காலத்தில் நிறைமாத கர்ப்பிணியாக மருத்துவமனைக்கு வந்தாள் அமுதா வெளிநாட்டில் வசிக்கும் இவள் காதலன் என்ற   கணவன் ராஜன் இவளை ராமையாவின் பொறுப்பில் விட்டுவிட்டு தன் பெற்றோருடன் வருவதாய்ச் சென்றவன் தந்தையுடன் வந்து கொண்டிருப்பதாய்ச் செய்தியனுப்பியிருந்தான் அமுதாவின் பிரசவ செலவிற்குப் பெருந்தொகை அனுப்பியிருந்தான். பெற்றோரில்லாத இவளை இவள் நல்ல பண்புகளுக்காக ராமையாதான், தான் பணிபுரியும் மருத்துவமனையில் சேர்த்தார் . இவள் கணவன் இந்தியாவிற்கு வந்த விமானம் விபத்திற்குள்ளாகிய செய்தி அறிந்து மகவீன்ற நான்காம் நாளே மருத்துவமனையில் உயிர்துறந்தாள் அமுதா. நான்கு நாட்களும் தன்மகளை தன்னை தன் புகுந்த வீட்டில் சேர்க்கும் அமிர்தம் எனக் கொஞ்சி மகிழ்வாள். இன்று கணவரும் மாமனாரும் விமான விபத்திற்குப் பலியான செய்தி கேட்டு அதிர்ச்சியால் உயிர் துறந்தாள். அனாதையான அவள் குழந்தைக்கு ராமையா பொறுப்பேற்கும் கட்டாயம் நேர்ந்தது அமுதா தன் பெண் குழந்தையை அமிர்தா எனக் கொஞ்சி மகிழ்ந்ததால் அக்குழந்தையின் பெயர் ‘அமிர்தா’ என்றாயிற்று. இக்குழந்தை பிறந்த நேரம் தன் கணவனும், மகனும் விபத்துக்குள்ளானார்கள் என்று ராஜனின் தாய் வெறுப்பில் இருந்தாள்.

       ஒரு முறை இந்தியா வந்து விசாரித்து ராமையாவின் இருப்பிடம் தேடிக் கண்டுபிடித்துத் தன் பேரக்குழந்தையைப் பார்த்தாள். பாசம் ஒருபக்கம். தன் மகனின் இறப்பிற்குக் காரணமான குழந்தை என்ற வெறுப்பு ஒரு பக்கம் ராமையாவிடம் இன்னும் சிறிது காலம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறி செலவிற்குப் பணமும் கொடுத்துவிட்டு தான் மீண்டும் இந்தியாவிலேயே தங்குவதற்கு ஏற்றவாறு சொத்துக்களை விற்று பணம் பெற்று வருவதாகக் கூறிச் சென்றாள். நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. திரும்பிவரவும் இல்லை. அவளைப் பற்றிய தகவலும் இல்லை.

       சிறு குழந்தை முதல் வளர்த் பாசம் மனிதாபிமானம் காரணமாய்க் குழந்தையை அக்கம் பக்கத்தவர் உதவியுடன் ராமையா வளர்த்து வந்தார்.

       மீண்டும் சிறுமி இவரைக் கேட்கிறாள் தாத்தா எங்க பாட்டி எப்ப வருவாங்க? என்று.

வருவாங்கம்மா. சீக்கிரம் வருவாங்க. இந்த அமிர்தா குட்டியைத் துக்கிக் கொஞ்ச வருவாங்க பணக்காரப் பாட்டி. மெத்தப் படிச்சவங்க ரொம்ப அழகான பாட்டி என்று குழந்தையை ஆறுதல் படுத்தினார் ராமையா. என்னை ஏன் தாத்தா இங்க விட்டுட்டுப் போனங்க? என்னையும் அவங்களோட அழைச்சிட்டுப் போயிருக்கக் கூடாதா என்றாள் அழுது கொண்டே.

       பாவம் சிறுமி அவள் பாட்டி உடன் வந்து அழைத்துப் போய்விடுவாள் என்று நினைத்து பாட்டி வருவாங்க என்று சொல்லிச் சொல்லி வளர்த்தார். அது குழந்தையின் மனதில் பதிந்து விட்டது தனக்குப் பிரியமான ஒருவர் காத்திருப்பதாக நம்பி ஏங்கத் தொடங்கினாள்.

       நீ பொறந்தப்போ சின்னக் குழந்தையான உன்னை வெளிநாட்டுக்கு அழைச்சிட்டுப் போக அனுமதிச்சீட்டு கிடைக்கல. அதனால தான் எங்கிட்ட விட்டுட்டுப் போனாங்க என்றார் பொறுமையாக.

       வெளிநாட்ல போய் பாட்டி என்ன செய்யறாங்க? என்றாள் சிறுமி.

       அங்க பெரிய ஆபீஸூல வேல பாக்குறாங்க லீவு கெடச்சதும் நிறைய பணம் சம்பாதிச்சுகிட்டு இங்க வந்து உன்னைப் படிக்க வெச்சு பெரிய மனுஸியா வளப்பாங்க என்றார் ஆர்வமாக.

       ரொம்ப நாளா இதையே சொல்றீங்க. இன்னுமா லீவு கெடைக்கல? என்றாள் சிறுமி.     

       வெளிநாட்லேர்ந்து வர அனுமதி வாங்கணும் அமிர்தாக்குட்டிக்கு டிரஸ் பொம்மை எல்லாம் வாங்கணும் நாளாகுமில்ல. என்றார் விரிவாக.

       பாட்டியின் பெருமையில் மனம் பூரித்தாள் சிறுமி. எங்க பாட்டியோட போட்டோ வாச்சும் ஒண்ணு காட்டேன் தாத்தா. அவங்க எப்படி இருப்பாங்கன்னு பார்க்க ரொம்ப ஆவலாயிருக்கு என்றாள் சிறுமி.

       இப்படியொரு ஆசையை குழந்தை வெளிப்படுத்துவாள் என்று ராமையா எதிர்பார்கவில்லை.

       அவள் ஏக்கம் புரிந்தது. ஆனால் இவள் பாட்டியின் போட்டோவுக்கு என்ன செய்வார்?

       பக்கத்து வீட்டு லட்சுமி படித்த பெண். வேலை பார்க்கின்றவள். சிறந்த அன்னை பக்தை. எனவே அவள் அன்னையின் திருவுருவப் படம் ஒன்றைக் கொடுத்து இதைக் குழந்தையிடம் கொடுத்து வையுங்கள். இவரே அவளுக்குத் துணையிருப்பார் என்று கூறினாள்.

       ராமையாவும் குழந்தையைச் சமாதானப்படுத்த வேறு வழியின்றி இதுவும் தெய்வச் செயல் என்று புரியாமலேயே படத்தைக் குழந்தையிடம் கொடுத்தார்.

       குழந்தையின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. மிகுந்த பரவசமானாள். கருணை பொங்கும் சிரிப்புடன் கம்பீரமாய்க் காட்சி தரும் தன் பாட்டியைக் கண்டு பெருமிதம் கொண்டாள் சிறுமி. அந்தப் படத்திலுள்ள தன் பாட்டியுடன் பேசி மகிழ்ந்தாள். அந்தத் தெய்வீகப் பாட்டியின் வரவிற்குக் காத்திருந்தாள்.

தொடரும்...

****



book | by Dr. Radut