Skip to Content

05.சிறு குறிப்புகள்”

சிறு குறிப்புகள்”

Time divine, Action Wonderful.

அற்புதம், இறைவனின் தருணம்.

       மனம் மலர்ந்து ஆத்மா வெளிவரும் நேரம் இறைவன் வந்துவிட்ட நேரம். அந்த நேரம் இறைவனின் திருமுகம் இருளிலும் தெரியும். பாரதியின் குடும்பத்தார் இன்று அவரைப் பற்றிப் பேசும் பொழுது, “தெருவில் பாரதியார் கழுதைக் குட்டியை முத்தமிட்டார். அதைக் கண்டு கண்ணில் இரத்தக் கண்ணீர் வந்தது, இன்று அதை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வருகிறது” என்றார். பாரதிக்கு எல்லா நேரமும் அது போன்ற நேரம். மொட்டை மாடியில் நின்றிருந்தவர் தெருவில் பிச்சைக்காரனைக் கண்டு தன் இடுப்பிலிருந்த வேட்டியை அவிழ்த்து அவனிடம் போட்டுவிட்டு நிர்வாணமாக இருந்தார். வீட்டில் சாப்பாட்டிற்கில்லாத நேரம் தோட்டத்தில் காயும் அரிசியை குருவிகளுக்கு எடுத்துப் போட்டு மகிழ்ந்தார்

       அன்பர்கட்கு அதுபோன்ற நேரம் அடிக்கடி வருவதுண்டு. காம்பவுண்டு மீது ஏறி உட்காரத் தோன்றும். அப்படித் தோன்றினால் நாம் அதைச் செய்வதில்லை. நாலு பேர் என்ன சொல்வார்கள் என்பது ஒன்று. நமக்கே வெட்கமாக இருக்கும். மழை பெய்தால் மனம் மழையில் நனைய வேண்டும் எனத் துடிக்கும். மனம் தன் கட்டை மீறிய நேரம் ஆன்மா மலரும் நேரம். இதுவரை செய்யாததைச் செய்யத் தோன்றும். அதில் மனம் பூரிக்கும்.

பிச்சைக்காரனை அழைத்து வந்து விருந்து செய்யத் தோன்றும்.

இரவு 2 மணிக்கு மேல் நல்ல விழிப்பு இருப்பதால் தோட்டத்தில் எழுந்து போய் வேலை செய்யும் எண்ணம் எழும்.

சிறுவன் உள்ளே வரும் பொழுது எழுந்து நின்று மரியாதை செலுத்த நினைக்கும்.

ஆண்மகனுக்கு புடவை உடுத்த ஆசையாக இருக்கும்.

50ரூ வேலைக்கு 80ரூ கொடுக்கத் தோன்றும்.

       இறைவன் பிச்சைக்காரனில், சிறுவனில் தெரிவதால் அப்படித் தோன்றுகிறது. புடவையில் இறைவன் ‘சக்தியின் ஜோதி’யாகத் தெரிந்தால் அதை உடுத்த நினைக்கும். மேற்சொன்னவைகளை நாம் பேசலாம். பேசமுடியாதவையும் மனத்தில் எழும். நினைக்க முடியாதவைகளும் எழும். பாவம், பாதகம், ஆபாசம், அசிங்கம் மனத்திலெழுந்து உலுக்கும். ஒரு பக்தருக்கு அது போன்ற காரியம் ஒன்று மனத்தைப் பேயாய் உலுக்கிய பொழுது அதை செய்துவிட்டார். உள்ளம் எல்லாம் பூரித்து, உவகை மேலிட்டது. அவருக்குத் தூய்மை என்ற மல்லிகை மலர் ஒரு கூடை வருகிறது. எந்த புத்தகத்தைப் பிரித்தாலும் அவர் செய்தது சரி எனக் கூறுகிறது. என்றாலும் மனம் கூச்சப்பட்ட பொழுது சாவித்திரி

Time divine, action wonderful

செயல் அற்புதம், நேரம் பிரம்ம முகூர்த்தம்.

என்று கூறி அவர் மனதை சமாதானப்படுத்தியது.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

சுமுகமும் சுதந்திரமும் அனுபவத்தின் தூண்கள்.

அத்துடன் கடந்த காலத்திலிருந்து மறைவதற்கு

அது உனக்குச் சுதந்திரம் அளிக்கிறது.

 

 

 



book | by Dr. Radut