Skip to Content

11.டிசம்பர் 5ஆம் தேதி 1950 மகா சமாதி தினம்

"அன்பர் உரை"

டிசம்பர் 5ஆம் தேதி 1950 மகா சமாதி தினம்

(சென்னை - மாம்பலம் தியான மையத்தில் 5.12.2003 அன்று திருமதி. விஜயா நாராயணன் நிகழ்த்திய உரை)

பகவான் ஸ்ரீ அரவிந்தர் அரசியல் தலைவராகி, யோகத்தை மேற்கொண்டு, புதுவைக்கு அசரீரியை ஏற்று வந்து 40 ஆண்டுகள் இங்கிருந்தார். 1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி சமாதி அடைந்தார். ரிஷிகள் சமாதி அடைவதற்கும், பகவான் சமாதி அடைந்ததற்கும் வேறுபாடுண்டா? இவரும் மற்றவர்போல் முடிவை ஏற்றுக்கொண்டவரா?

சத்திய ஜீவியம் உலகுக்குப் புதியது. எனினும் வேதகாலம் முதல் பெரிய ஆத்மாக்கள் அறிந்தது. பலர் ஆத்மாவில் சத்தியஜீவியத்தை அடைந்துள்ளனர். ஒரு சாதகருக்கு எழுதிய கடிதத்தில் பகவான், "இந்தப் பகுதிகளில் வாழ்ந்தவர் ஒருவர் சத்தியஜீவிய சித்தி பெற்றவர்'' என்று எழுதினார். அது இராமலிங்க சுவாமி. சுவாமியின் அருட்பா ஒன்றை மொழிபெயர்த்து அன்னையிடம் இதுபற்றிக் கேட்க முனைந்தபொழுது, கேட்ட பிரெஞ்சு சாதகரிடம், "இவருக்கு சத்தியஜீவியம் உண்டு என்பதை அப்பாடலைக் கேட்டவுடன் நான் அறிந்தேன்'' என்றார். சுவாமி ஜோதியுடன் கலந்து சமாதியானார். பகவான் ஸ்ரீ அரவிந்தர் பிறப்பதற்கு இருஆண்டுகள் முன் சுவாமி சித்தி பெற்றதால், அவரே பகவானாகப் பிறந்திருக்கலாமா என்றொரு கேள்வியை எழுப்பினர். மறுபிறப்பு சிறு ஆத்மாக்களுக்கு உடனேயும், பெரிய ஆத்மாக்களுக்கு நெடுநாள் கழித்தும் உண்டு என்பது ஆன்மீக மரபு. அதனால் இந்த நம்பிக்கைக்கு அடிப்படையில்லை.

கல்கத்தா ஜோஸ்யர் ஒருவர் ஸ்ரீ அரவிந்தருடைய ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, இந்த ஜாதகன் மிலேச்ச எதிரிகளுடன் போராடவேண்டியிருக்கும். பழமாகப் பழுக்கும்வரை உலகில் வாழ்வார் எனக் கூறினார். இச்சாமிருத்யு - தானே இஷ்டப்படும்பொழுது உயிரை விடலாம் - யோகிகட்குப் பலிப்பதுண்டு. ஸ்ரீ அரவிந்தரைக் காலன் தொட முடியாது. அவரே முடிவு செய்யாமல் உயிர், உடலைவிட்டுப் பிரியாது. பூத உடலை நீத்து சூட்சும உடல் யோகத்தைத் தொடர விரும்பி பகவான் உடலை விட முடிவு செய்தார். அவருடலில் பொன்னொளி உதித்து சில நாளிலிருந்தது. பொன்னொளி சத்தியஜீவிய ஜோதி. பகவானுடைய அவதாரச் சிறப்பை நாம் எந்த அளவு அறிவோம் என்பது தெரியவில்லை. ஆனால் அவரைப் பற்றிய சில விஷயங்கள் எவர் மனதையும் தொடும். அப்படி கென்னடி மனத்தைத் தொட்டதுண்டு.

இரண்டாம் யுத்தம் முடிந்தபின் வியட்நாம் போர் எழுந்தபொழுது உலகம் பல கருத்துகளைத் தெரிவித்தது. நெடுநாளைக்குப்பின் USA போரிலிருந்து விலகியது. இப்போருக்கு எதிராக  மாணவர் உலகம் புரட்சி செய்தது. 1950இல் பகவான் ஸ்ரீ அரவிந்தர் சைனாவின் ஏகாதிபத்திய நோக்கத்தைப் பற்றியும், அதன்பின் ரஷ்யாவின் உலக ஆதிக்கமிருப்பதையும் சுட்டிக்காட்டி, அவை தடுத்து நிறுத்தப்படவேண்டும், அது உலகத்திற்குச் சேவை என்று எழுதியிருந்தார். பிரச்சினை இல்லாதபொழுது எதிர்காலத்தில் எழும் பிரச்சினையை பகவான் எழுதினார். அப்பகுதியை சுதிர்கோஷ் என்பவர் கென்னடியைச் சந்தித்து, அவரிடம் காண்பித்தார்.கென்னடி கவனமாகப் படித்தார். எழுதியுள்ளவையெல்லாம் சரி, டைப் செய்தவர் 1960 என்பதைத் தவறாக 1950 என டைப் செய்துள்ளார் என சுதிர்கோஷிடம் கூறினார். 1950இல் பகவான் சமாதியடைந்துவிட்டார் என சுதிர்கோஷ் கூறியபொழுது, "எங்கோ இந்தியாவின் ஒரு மூலையில் உட்கார்ந்து தியானம் செய்பவர், 1950இலேயே பின்னால் நடக்கப்போவதைக் கூறினாரா?'' என்று கென்னடி கேட்டார். கேட்டவர் எழுந்து உள்ளே போனார். போனவர் மீண்டும் திரும்பி வந்து, "அடுத்த முறை வாஷிங்டனுக்கு வந்தால், என்னை வந்து பார்க்கவும்'' என்றும் கூறினார். கென்னடிக்கு ஸ்ரீ அரவிந்தரைத் தெரிய முடியாது.

கென்னடியின் நண்பர் ஒருவர் அன்னையை வந்து தரிசனம் செய்தார். சத்தியஜீவியம் பற்றி விவரம் கேட்டார். அன்னை சத்திய ஜீவியத்தின் மூன்று முக்கிய அம்சங்களை அவருக்கு விளக்கினார். அவற்றுள் ஒன்று உடல் உலகெங்கும் சூட்சுமமாகப் பரவுவது. கேட்ட விவரங்கள் அவர் மனத்தைத் தொட்டன. அவர், கென்னடி இந்தியா வந்து அன்னையை சந்திக்க ஏற்பாடு செய்தார். அந்த நேரம் கென்னடி சுடப்பட்டார். "குருசேஷ்வ் ஆரோவில்லில் அக்கரை காட்டியபொழுது, அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். கென்னடி இந்தியா வர சம்மதித்தவுடன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுவே தீய சக்திகள் செயல்படும் வகை'' என அன்னை கூறினார்.

1939இல் ஹென்ரி போர்ட் கடவுளைக் காண விரும்பி யார் எனக்குக் கடவுளைக் காட்டினாலும் என் சொத்தில் பாதியைத் தருவேன் என்று கூறிய செய்தி அன்னைக்கு வந்தது. அவர் ஏற்றுக்கொண்டார். உலகப் போர் மூண்டதால் போர்ட் வருகை தடுக்கப்பட்டது. எவர் அன்னை விஷயத்தில் அக்கரை காட்டினாலும், அவர்களைத் தீயசக்திகள் தாக்கும். கென்னடிக்கும் அப்பரிசு கிடைத்தது. அன்னையிடம் செயல்பட்டது பகவானுடைய சக்தி. பகவான் இதுபோன்ற செயல்களில் நேரடியாகத் தலையிடுவதில்லை. அவற்றை அன்னையிடம் விட்டுவிடுவார்.

உலகப் போரை பகவான் அன்னையின் போர் என்று கூறுவார். பகவானுடைய சக்தியைச் செலுத்தி போரை வென்றது அன்னை. உலகப் போர் நடக்கும்பொழுது பகவான் ரேடியோ செய்திகளை ஆர்வமாகக் கேட்பார். ரேடியோ 300 அடி தூரத்தில் பவித்திராவின் அறையிலிருக்கும். ரேடியோவை வைப்பது பவித்ரா. ஒரு loud speakerயை பகவான் அறையில் வைத்தார்கள். செய்தியை மட்டும் பகவான் கேட்பார். உலகத்தின் எல்லா முக்கிய நிகழ்ச்சிகளிலும் தாம் பங்குகொண்டதாகக் கூறினார்.
 . ரஷ்யப் புரட்சியில் தமக்கும் பங்குண்டு என்றார்.

. துருக்கியிலும், அயர்லாந்திலும் நான் எதிர்பார்த்தபடி யுத்தத்தில் காரியங்கள் நடந்தன என்றார்.

உலகப் போரைத் தவிர்க்க பகவான் முயன்றார். அது முடியாது என்று தெரிந்தவுடன் போரை வெல்லும் முயற்சியில் ஈடுபட்டார்.ஹிட்லர் வெறி பிடித்தவன். அற்புதமாகப் பேசுவான். கேட்பவர் மனம் கரையும். ஜெர்மனி முதல் போரில் தோற்றுப் பெற்ற அவமானம் நாட்டைத் தலைகுனிய வைத்தது. "பழிவாங்குவோம்' என ஹிட்லர் செய்த சபதம் நாட்டை அவன் பின்னால் போகச் சொல்லியது.இங்கிலாந்தில் 240 போருக்குரிய விமானங்கள் உள்ளபொழுது ஹிட்லர் 750 bombers குண்டு போடும் விமானங்களைத் தயாரித்து விட்டான். எவரும் அவனை எதிர்க்கத் தயாரில்லை. போரில்லாமல் பிரான்ஸ், டென்மார்க், நார்வே, சுவீடன், பெல்ஜியம், பின்லண்டு ஆகிய நாடுகள் சரணடைந்தன. இங்கிலாந்து போர் தொடுக்கும் நிலையில்லை. சர்ச்சில் போரை வெல்லும் கருவி என பகவான் தேர்ந்தெடுத்தார். சர்ச்சில் இந்தியாவுக்குப் பரம எதிரி. மகாத்மா உண்ணாவிரதமிருந்தபொழுது, "ஏன் காந்தி இன்னும் சாகவில்லை''என வைஸ்ராயிக்கு சர்ச்சில் தந்தியடித்துக் கேட்டார். சர்ச்சில் குடும்பம் பரம்பரையான வீரர்கள். சர்ச்சிலை வீரர் என்பதைவிட வீரம் சர்ச்சில் உருவம் பெற்று வந்துள்ளது என்பது பொருத்தம்.

எந்த களத்தை விட்டு எவரும் ஓட்டம் பிடிப்பார்களோ, அந்த இடத்தை சர்ச்சில் விரும்பி நாடும் தன்மையுடையவர். ஸ்ரீ அரவிந்தர் சக்தி சர்ச்சிலை வந்தடைந்தது. பதவியின்றிருந்த சர்ச்சில் பதவி பெற்றார். பிறகு பிரதமரானார். உலகைத் திரட்டி உயிரைக் கொடுத்துப் போராடினார். "ஒரு மனிதனுடைய தைரியம் உலகைக் காத்தது'' என்று அன்று சர்ச்சிலைப் பற்றிக் கூறினர். போர்க்களத்தில் உள்ள வீரர்களிடம் ரேடியோமூலம் பேசி உற்சாகப்படுத்தினார். போரை வென்றார். போரை வெல்ல ஆத்மசக்தியை தாம் சர்ச்சிலுக்கு அனுப்பியதாகக் கூறியுள்ளார்.

இராமாவதாரம் ஆயுதம் தாங்கி இராவணனை அழித்தது.

கிருஷ்ணாவதாரம் போர்க்களம் சென்று ஆயுதம் ஏந்தாமல் கௌரவ வம்சத்தை அழித்தது.

ஸ்ரீ அரவிந்த அவதாரம் போர்க்களம் செல்லாமல் ஹிட்லரை அழித்தது.

ஹிட்லர் முன் ஓர் வெண்ணிற தெய்வ உருவத்தில் தீய சக்தியொன்று தோன்றி, அவனுக்கு வெற்றி அளித்து வந்தது. ஹிட்லரைப் பிடிக்க முடியவில்லை. "அவனும் என் குழந்தையன்றோ!'' என அன்னை அத்தேவதையைப் பற்றிக் கூறுகிறார். அவன் அடிக்கடி ஆசிரமம் வந்து என்ன நடக்கிறது என்று பார்த்துப் போவான். மக்கள் தெளிவற்றவர்கள், மேல்மனத்தால் செயல்படுபவர். இங்கிலாந்து நம் எதிரி. ஹிட்லர் இங்கிலாந்தின் எதிரி. எனவே ஹிட்லர் ஜெயிக்க வேண்டும் என்று அன்று இந்தியரில் பலர் நினைத்தனர். சுபாஷ் சந்திரபோஸ் ஹிட்லரை சந்தித்து ஆதரவு கேட்டார். இந்தியாவுக்கு பிரிட்டிஷ் ஆட்சி இன்னும் 50 ஆண்டு பயன் தரும் என்று கூறிய ஹிட்லர் ஒரு நீர்மூழ்கிக் கப்பலை சுபாஷுக்குக் கொடுத்து ஜப்பானுக்கு அனுப்பினான். சாதகர்களில் சிலர் ஹிட்லர் வெற்றி பெற வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தனர். பகவான் அது தவறு எனச் சுட்டிக்காட்டினார்.

அன்னை ஹிட்லருக்குரிய தீயசக்தி உருவம் தாங்கி ஹிட்லர் முன் தோன்றி ரஷ்யாவைத் தாக்கும்படிக் கூறினார். ரஷ்யாவை ஹிட்லர் தாக்கினால் அவன் அழிவான். ஹிட்லரிடமிருந்து அன்னை ஆசிரமம் திரும்பும்பொழுது வழியில் அத்தீய சக்தியைச் சந்தித்தார்!

உலக யுத்தத்தில் டன்கர்க் போராட்டம் பெயர்பெற்றது. பிரிட்டிஷ் வீரர்கள் ஏராளமாக அங்குக் குவிந்துள்ளபொழுது ஹிட்லர் குண்டு போட்டு அவர்களை அழித்துவிடலாம் எனத் திட்டமிட்டபொழுது பகவான் அவ்விடத்தை மூடுபனியால் கவர்ந்து பிரிட்டிஷ் வீரர்களைக் காப்பாற்றியது உலகம் அறிந்த பெரிய நிகழ்ச்சி. ஆங்கில மொழியில் டன்கர்க் என்ற சொல் இடம்பெற்றது.

பகவானுடைய பொறுமைக்கு அளவில்லை. அவர் இந்திய குருமார்களைப் போன்று சிஷ்யர்களை நடத்தவில்லை. இந்த யோகத்திற்கு மனித குரு இல்லை என்றார். பகவான் மனிதரில்லை என்பதால் அந்த சட்டம் அவருக்கில்லை. சிஷ்யர்களை நண்பர்களாக நடத்தினார். ஒரு கடிதத்தில் உடனுள்ள சிஷ்யரை, "நண்பர்'' என குறிப்பிட்டதைக் கண்டவர், "ஏன் என்னை நண்பர் எனக் கூறுகிறீர்கள்'' என பகவானைக் கேட்கிறார். பகவான் அதற்கு அளிக்கும் விளக்கம் அடக்கத்தின் உச்சியைத் தொடுகிறது. 1938இல் கால் முறிந்தபின் சாதகர்கள் கடிதம் எழுதுவது நிறுத்தப்பட்டது. திலீப்குமாரும், நிரோத்பரனும் விதிவிலக்காக தினமும் பகவானுக்கு எழுதினார்கள். ஒருவரை மகனாகவும், அடுத்தவரை சகோதரனாகவும் கருதினார். அன்றாடம் அவர்கள் கடிதங்களுக்கு பதில் எழுதுவது கடினமான யோகப் பயிற்சிக்கு மாற்றாகக் கருதினார் என்று கூறுகிறார்.

இந்த யோகம் மனிதனுக்கில்லை. இறைவன் செய்யும் யோகம் இது என பகவான் கூறுகிறார். சாதகனுக்குரியது சரணாகதி.சரணாகதியை நம் நாடு யோகப் பகுதியாக நெடுநாளாக அறியும்.கீதை சரணாகதியை மகுடமாக்கியது. சகல தர்மங்களையும் தியாகம் செய்து என்னை சரணடைந்தால் நான் உன் பாவங்களை அழித்து மோட்சம் தந்து புருஷோத்தமனையடைய உதவுவேன் என்று கீதை கூறுகிறது. வைஷ்ணவர்கள் சரணாகதியை யோகத்தின் சிகரத்திற்கு கொண்டுபோனார்கள். அதனால் சரணாகதி தத்துவம் நாடறிந்தது.பகவான் கூறுவதும் சரணாகதியே. ஆனால் இவற்றிற்குள் எந்த ஒற்றுமையுமில்லை. ஒன்று பஞ்சாயத் பிரசிடெண்ட். அடுத்தது நாட்டின் ஜனாதிபதி. இரண்டிற்கும் பேர் ஒன்றே. பகவான் சரணாகதி என்பது ஜீவனை முழுவதும் சரணடைவது. கீதை கூறும் சரணாகதி மனத்தின் நம்பிக்கைகளை சரணடைவது. நம்பிக்கை மனத்தின் பகுதி, அது முழு மனமாகாது. மனம், உடல், வாழ்வு, ஆன்மா அனைத்தும் சேர்ந்தது ஜீவன். ஜீவனைச் சரணடைந்தால் மனிதன் சைத்தியப்புருஷனாகிறான், இறைவனாகிறான். அதன்பின் இறைவன் பூமாதேவியின் யோகத்தை ஏற்றுத் தானே அதைச் செய்கிறான்.கீதையின் இலட்சியம் மோட்சம். ஸ்ரீ அரவிந்தம் மோட்சத் தகுதி பெற்று, மோட்சத்தைத் தியாகம் செய்து, சரணாகதியை மேற்கொண்டு இறைவனாகி, மனிதனுள் இறைவன் பிரபஞ்ச யோகத்தை மேற்கொள்வதாகும். ஒன்றை மற்றதுடன் ஒப்பிட முடியாது.இதை மேற்கொள்ளத் தேவையான பொறுமை கடலினும் பெரியது.

அன்னை உடற்பயிற்சியை ஆசிரமத்தில் ஆரம்பித்தபொழுது,வயதான சாதகர்கள் பலர் அதை ஏற்கவில்லை. வேண்டாவெறுப்பாக பலர் ஏற்றனர். அன்னை ஸ்ரீ அரவிந்தரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றார். அன்னை கூறிய அனைத்தையும் ஏற்ற பகவான் இதை மறுத்தார். பகவான் மறுத்தார் என்பதால் ஒரு சில சாதகர்களும் பகவான் ஆதரவுடன் இதை மறுத்தனர். விளையாட்டு மைதானம் ஏற்பட்டது. அன்னை தினமும் அந்த நாட்களில் மைதானத்திற்குப் போவார்.

அந்த நாட்களில் - 1926 முதல் 1940, 1945வரை -எப்பொழுது சத்தியஜீவியம் உலகுக்கு வரும் என்பது ஆசிரமத்தில் அனைவருக்கும் எப்பொழுதும் ஆர்வமான பேச்சு. சத்தியஜீவியம் விளையாட்டு மைதானத்திற்கு வரும் என அன்னை அறிவித்தார்.அதையறிந்தவுடன் அதுவரை மைதானத்திற்குப் போகாதவர், இனி போவார்கள் என எதிர்பார்த்தனர். அவர்களில் ஒருவர் பகவானுக்குக் கடிதம் எழுதி,

அன்னை சத்தியஜீவியம் மைதானத்தில் இறங்கும் என்கிறாரே, நான் அங்கு போவதில்லையே, அப்படியானால், எனக்கு அது கிடைக்காதா?

எனக் கேட்டார். சத்தியஜீவியம் வருவதானாலும், நான் என் போக்கை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்பது மனித மனம். இவர் பகவானுக்குத் தினமும் கடிதம் எழுதுபவர்களில் ஒருவர். இதுபோன்ற நினைவு யோகத்திற்கு எதிரி. இதைக் கேட்கவும் மனம் கஷ்டப்படுகிறது. முற்றும் துறந்த முனிவருக்கும் கோபம் வரும். பகவானுக்குக் கோபம் வரவில்லை. அவர் நகைச்சுவை மிகுந்தவர். பதிலாக அவர் கடிதம் எழுதினார்,

சத்தியஜீவியம் மைதானத்தில் வந்தால், அதை நீங்கள் மட்டும் இழக்கமாட்டீர்கள், நானும் இழந்துவிடுவேன்

என்றார். அப்பொறுமை மனிதனுக்கில்லாதது. அத்துடன் 1956இல் சத்தியஜீவியம் வந்தபொழுது விளையாட்டு மைதான தியானத்தில் வந்தது. 1950இல் பகவான் சமாதியடைந்ததால் அவர் அதைப் பெறவில்லை. கடிதம் எழுதியவரும் பெறவில்லை. அன்னை, பகவான் வாக்குகள் பலித்தன. இந்த யோக ரகசியம் வேதனை. உடல் நெருப்பாக எரியும். எரிந்ததை பகவான், அன்னையிடமும் கூறவில்லை. அதுபோல் தன்னுடல் 1970க்குப் பின் எரிய ஆரம்பித்தபொழுது, அன்னை, ஸ்ரீ அரவிந்தர் பட்ட வேதனையை முதன்முதலாக அறிந்தார். உலகம் இன்பம் துய்க்க யோகம் செய்த பகவான் நாள் முழுவதும் எரியும் நெருப்பில் உட்கார்ந்து வேதனையின் உச்சகட்டத்தை அனுபவித்தார்.

*******


 


 


 book | by Dr. Radut