Skip to Content

05.பிரம்மம், புருஷா, ஈஸ்வரா — மாயா, பிரகிருதி, சக்தி

"அன்பர் உரை"

பிரம்மம், புருஷா, ஈஸ்வரா — மாயா, பிரகிருதி, சக்தி

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

(இராணிப்பேட்டை தியான மையத்தில் 15.8.2003 அன்று திருமதி. வசந்தா லக்ஷ்மி நாராயணன் நிகழ்த்திய உரை)
. பிரம்மத்தைப் பற்றிய வாதம் தர்க்கம், ஆகியவை மனத்துள் உதித்தவை, அவை பிரம்மத்தில் உதித்தவை அல்ல.

. தனியாகச் சிறுபெண் குழந்தையுடன் முதல்முறை எப்படி அமெரிக்காவிற்குப் போகமுடியும்? எவ்வளவு ஆபத்தான செயல் அது, என்ன என்ன கோளாறு வரும், என பெற்றோர் பயப்படுவன எல்லாம் பெற்றோர் மனப்பீதியைச் சேர்ந்தன. அவள் விபரம் தெரிந்தவள், சௌகர்யமாகப் போய்ச் சேர்ந்தாள்.

. நாடு முன்னேற அமெரிக்க டாலர் வேண்டும். நாட்டில் பணம் இல்லை. நம்மவருக்கு டெக்னாலஜி வாராது. அமெரிக்காவில் பிறந்தால்தான் இந்தியர்களால் திறமையாக வேலை செய்ய முடியும் என்பது இன்றும் பரவலாக உள்ள கருத்து. பிரதமரிலிருந்து நம் போன்றவர்வரை அனைவரும் கூறுவது, நம்புவது. இக்கருத்து நமது மனத்திற்கு உரியது, நாட்டில் இல்லை என கம்ப்யூட்டர் கம்பெனிகள் நிரூபித்தபின்னும் நாம் இதை நம்புகிறோம், இது உண்மை அன்று.

. ஆற்றைக் கடந்த 10 மடையன்கள் அனைவரும் இருக்கிறார்களா என அறிய எண்ணிப் பார்த்து 9 பேர் இருப்பதாகவும் அதை அனைவரும் எண்ணிப் பார்த்து ஒருவர் ஆற்றில் தவறிவிட்டதாகக் கதை. எண்ணியபொழுது எவரும் தம்மை எண்ணவில்லை, தவறு எண்ணிக்கையில் இருக்கிறது. உண்மையில் எவரும் காணாமல் போகவில்லை என வழிப்போக்கன் விளக்கினான்.

. நாம் நமது பரம்பரைப் பழக்கம் வழியாகப் பிரம்மத்தைப் பார்க்க முடியாது. மனம், பாவம், புண்ணியம், மோட்சம், நரகம், உயர்ந்தது, தாழ்ந்தது, ஆகியவற்றிலிருந்து வெளியே வந்து உலகைக் கண்டால் உலகம் அற்புதம் எனத் தெரியும். அது பிரபஞ்சத் தரிசனம். அதைக் கடந்து சென்றால் பிரம்ம தரிசனம் கிடைக்கும்.

. சொல்லுக்கும் எண்ணத்திற்கும் அகப்படாத பிரம்மத்தைக் கண்டபின் நாம் வாழும் இவ்வுலகம் அந்த சூன்யத்திலிருந்து எப்படி வந்தது என்று நம்மால் கற்பனை செய்யமுடியவில்லை. அதனால் அது வேறு, இது வேறு என்று முடிவு செய்கிறோம். இது தவறான முடிவு, இதிலிருந்து எழுவதே நம் கஷ்டங்கள் எல்லாம்.

. மாடு மேய்த்தவன் படித்து கலெக்டராக இருக்கிறான் என்று பார்த்தபின்னும் மாடு மேய்க்கும் பையன்களும் படிப்பால் உயர்வார்கள் என்று மனம் ஏற்பது இல்லை. தடை மனத்திற்கு உரியது, பையனிடம் இல்லை.

. 20000 ரூபாய் முதல் பல ஆயிரம் கோடியாகப் பெருகியதைப் பார்த்தும் நாம் அது எப்படி என அறியமுடிவதில்லை. கம்ப்யூட்டர் செய்தது என அறிகிறோம். செய்தது மனிதன், கம்ப்யூட்டர் இல்லை. மனம் தன் நினைவை விலங்காக்கிக் கொள்வது இல்லை. மனத்தைக் கடந்து வந்தால் விலங்கைக் காணமுடியாது.

. பிரம்மத்தை சூன்யமாகப் பார்த்தார்கள். இந்த சூன்யத்திலிருந்து எதுவும் வாராது என்று முடிவு செய்துவிட்டனர். பகவான் இது சூன்யம் இல்லை, எல்லாவற்றையும் தன்னுட் கொண்டது எனக் கண்டார். அவர் வாதத்தை மாற்றிக்கொள்கிறார். எதனாலும் கட்டுப்படாத சூன்யம் பிரம்மம் என்பதை விளக்குகிறார்.

. சுதந்திர இயக்கம் என்ற பிரம்மாண்டமான இயக்கம் மகாத்மா காந்தியின் மனதில் உற்பத்தியாயிற்று.

. படிக்காத செட்டியார் பல்கலைக்கழகத்தை நிறுவினார். .

. ஒரு மனித மனத்திலிருந்து ஒரு நெய்வேலி உற்பத்தியானது.

. ஒரு மனிதன் ஒரு குடும்பத்தை, நாட்டை உற்பத்தி செய்கிறான்.

. எதுவுமே இல்லாத மனிதன் எல்லாவற்றையும் உற்பத்தி செய்கிறான்.

அதுபோல் எதுவுமே இல்லாத பிரம்மம் எல்லாவற்றையும் உற்பத்தி செய்கிறது.

. அந்தப் பிரம்மம் நாம். நானே அந்தப் பிரம்மம் என்பது பிரம்ம ஞானம். அந்த ஞானத்திற்குப் பிரம்மத்தின் முழுமை, உலகத்தின் அற்புதம் தெரியும்.

. பிரம்மம் எதையும் உற்பத்தி செய்யவில்லை. பிரம்மத்தையும் எவரும் உற்பத்தி செய்யவில்லை. சிருஷ்டி என்ற சொல்லிற்கு உற்பத்தி செய்வது என்ற பொருள் அன்று, உள்ளதை வெளிப்படுத்துவது எனப் பொருள்.

. பாங்க் பணத்தை உற்பத்தி செய்யவில்லை. நாம் பாங்கில் போடும் பணத்தை மற்றவருக்குக் கடனாகத் தருகிறது.

. சர்க்கார் அதிகாரத்தை உற்பத்தி செய்யவில்லை. மக்கள் சர்க்காருக்குக் கொடுக்கும் அதிகாரத்தைச் செலுத்துகின்றனர்.

. பிரம்மம் உலகத்தை உற்பத்தி செய்யவில்லை, தன்னுள் உள்ள உலகை பிரம்மம் வெளிப்படுத்துகிறது.

. மனம் கம்பெனி என ஒன்றை உற்பத்தி செய்யவில்லை. கம்பெனி மனத்துள் இருக்கிறது, அதை வெளிப்படுத்துகிறது. ஆயிரம் கம்பெனிகளைக் கண்ட நம் மனம் அவற்றை மனதில் ஏற்றிவைத்து இருப்பதை வெளிப்படுத்துகிறது. ஒரு முதலாளி முதன்முறையாகக் கம்பெனி என்று ஒன்றை ஏற்படுத்தவில்லை.

. முதன்முறையாகக் கம்பெனி என்று ஒன்றை உற்பத்தி செய்தவர் உலகில் உள்ள கருத்தை மனதில் வாங்கி அதைக் கம்பெனியாக வெளிப்படுத்தினார்.

. இன்று நாம் காண்பவை அனைத்தையும் காணாதவையையும் தன்னுள் பெற்று உள்ள பிரம்மம் அவற்றை வெளிப்படுத்துவது சிருஷ்டி.

. மனம் பிரம்மத்தையும் அனந்தனையும் நேரடியாகப் பார்க்கவல்லது. அப்பார்வை குணங்களைக் கடந்து நேரடியாக சத் என்பதையும் குணங்களையும் பார்க்கலாம். பகுதியின் கருவியான மனம் குணங்களை சத் என்பதில் இருந்து பிரித்து தனியே காணமுடியும் என்பதால் பிரித்துக் காண்கிறது. அத்துடன் அவை வேறு என்றும் கூறுகிறது. மேலும் ஒன்றை ஏற்கும் மனம் அடுத்ததை இல்லை எனவும் கூறுகிறது. இவை பிரம்மத்தில் இல்லை, மனம் உற்பத்தி செய்தவை.

. நெருப்பு ஒளி வீசுகிறது. நெருப்பே ஒளி. நெருப்பு வேறு, ஒளி வேறு அன்று. ஒளி நெருப்பின் குணம்.

. கண்ணையும் பார்வையையும் பிரிக்கமுடியுமா?

. மிளகாயையும் காரத்தையும் ஒன்றாகக் காணமுடியாதா?

. அழகான முகத்தில் அழகைக் காண்கிறோம். அழகு உண்மை, முகம் இல்லை என்று கூறுவதுபோல் பிரம்மத்தையும் அதன் குணங்களையும் மனம் பிரித்து ஒன்றை ஏற்று அடுத்ததை மறுக்கிறது.

. பேச்சும் எண்ணமும் அதுபோல் ஒன்றானவை.

. வீரனும் வீரமும் இணைந்தவை.

. மலரும் மணமும் வெவ்வேறல்ல.

. பெண்ணும் பெண்மையும் கலந்து நிற்பவை.

. சமூகமும் சர்க்காரும் ஒன்றே.

. பிரம்மமும் அதன் வெளிப்பாடான மனிதனும் ஒன்றே.

. எழுத்தையும் எழுத்தாளரையும் பிரிக்கமுடியாது.

. மௌனமும் சப்தமும் வெவ்வேறு நிலைக்குரிய ஒன்றே ஆகும்.

. அலைகளும் கடலும் பகுதியும், முழுமையுமாகும்.

. நடிகனும் நடிப்பும் இரண்டறக் கலந்தவை.

. அன்பு நெஞ்சில் எழுந்து நெஞ்சே அன்பாவது.

. பதவியும் அதிகாரமும் சேர்ந்தவை.

. சர்க்கரையிலிருந்து இனிப்பு வேறுபட்டது அன்று.

. கடமையும் செயலும் கலந்தவை.

. பிரம்மமும் பிரபஞ்சமும் ஒன்றே.

. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே.

. வீடே குடும்பம், குடும்பமே வீடு.

. பிரம்மம், ஈஸ்வரன், ஆத்மன், புருஷன் ஆகியவற்றைக் கண்டால் எந்தப் பிரிவினையும் இல்லாமல் ஒன்றாகக் காணப்படுகின்றன. பிரபஞ்சமும் அப்படியே, ஆனால் மனிதர்களையும் ஜீவராசிகளையும் கண்டால் அவை தனித்தனியாகப் பிரிகின்றன.

இந்த முரண்பாட்டை எப்படி அறிவது?

. ஒன்று என்பதையும் ஒருமை என்பதையும் நாம் பிரித்து அறிவது இல்லை.

. ஒன்று என்பது எண், மூன்றுக்கு முன் இரண்டு இருப்பதுபோல் இரண்டிற்கு முன் ஒன்று உள்ளது. எண்களில் முதன்மையானது ஒன்று. அது இரண்டில் பாதி என்று சொல்லலாம். நான்கில் கால் பாகம் என்று சொல்லலாம். ஒருமை என்பது ஒரு தன்மை, அது எண் அன்று. ஒரே குணமுள்ள பல பொருட்களுக்கு ஒருமை உண்டு. ஆயிரம் மனிதர்கள் மனிதன் என்ற வகையில் ஒன்றாவார்கள். மலர் என்பது ஆயிரக்கணக்கான மலரைக் குறிக்கும் ஒரு சொல். மலர் என்ற தன்மை மலர்களுக்கு உரிய ஒருமை.

. மனிதன் சுயநலமானவன், மோட்சத்தை நாடினாலும் தனக்கு மட்டும் நாடுவான்.

. ஆன்மா பெறும் விடுதலை அவனுக்கு மட்டும் உரியது.

. குணம் பெறும் விடுதலை உலகை உய்விக்கும்.

. உடல் பெறும் விடுதலை உலகையே மாற்றும்.

. சர்வம் பிரம்மம் என்றார்கள் ரிஷிகள். ஆனால் உலகம் எப்படிப் பிரம்மம் என்று அவர்களால் விளக்கமுடியவில்லை. அதை சத்தியஜீவியத்தால்தான் விளக்கமுடியும். ரிஷிகளுக்கு அது இல்லை என்பதால் அவர்களால் மனத்தால் விளக்கமுடியவில்லை. பகவான் ஸ்ரீ அரவிந்தர் நமக்கு சத்தியஜீவியத்தை அளித்து அதன்மூலம் விளக்கத்தை அறியும் திறமையைக் கொடுத்து விளக்கத்தையும் அளிக்கிறார்.

. சாதாரண மனிதனுக்கு உலகம் எப்படி உற்பத்தியாயிற்று என்ற கேள்வி எழுவதில்லை. கேள்வி இல்லாதவன் பதிலை எதிர்பார்ப்பது இல்லை.

. ரிஷிகளுக்கு கேள்வி எழுந்தது, பதில் கூறும் கருவி இல்லாததால் பதில் கிடைக்கவில்லை.

தொடரும்.....

*******
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

நம் செயலின் குறைகளை, நாம் பொருட்படுத்துவதில்லை. பிறர் கண்ணோட்டத்தில் விஷயங்களைப் புரிந்துகொள்ள குறைந்தபட்சம் நாம் பிறர் குறைகளை நம் குறைகளைப் பொருட்படுத்தாததுபோல் பொருட்படுத்தக் கூடாது.

"நம்மை" போல் பிறரும் குறையற்றவரே.


 


 


 



book | by Dr. Radut