Skip to Content

08.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V                                                                கர்மயோகி

832) கட்டுக்கடங்காத உணர்வை கட்டுப்படுத்தினால், உள்ளிலிருந்து இறைவன் எழுகிறான். அவன் பிரகிருதிக்குக் கட்டுப்படாத நிலையில் எழுவான்.

இறைவனை எழுப்பும் கட்டுப்பாடு.

இறைவன் என்பது மனிதனைக் கடந்தது. எந்த நேரமும் நாம் இறைவனை அறிவதில்லை. ஒரு தீரச்செயல், விஸ்வாசம், பண்பு வாழ்வில் எழும் நேரம் நாம் இறைவனின் திருமுகத்தைக் காண்கிறோம். உயிரைத் திரணமாக நினைக்கும் நேரம் தெய்வம் வெளிப்படும் நேரம். அவை வாழ்வில் அடிக்கடி வருவதில்லை.

வாழ்விலுள்ளவை வழக்கமானவை. வழக்கம் பழக்கத்திற்குரியது. பழக்கத்தில் சுபாவம் வெளிப்படும், பண்பு வெளிப்படாது. 4 சீட் உள்ள பஸ்ஸில் 15 பேர் ஏறக் காத்திருந்தால், எப்படியாவது நாம் முந்திக்கொள்ள விரும்புவது சுபாவம். வரிசையாக நிற்பது மனித சுபாவமில்லை. எந்த நாட்டில் அதைச் செய்தாலும் அது கண்கொள்ளாக் காட்சி. அந்த நேரம் மனிதனில் தெய்வம் வெளிப்படும் நேரம்.

பூரண யோகம் என்று பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுவதை வாழ்வனைத்தும் யோகம் என்கிறார். எல்லாச் சாதாரண நிகழ்ச்சிகளிலும் புதைந்துள்ள இறைவன் வெளிவரும்படி வாழ்வது பூரண யோகமாகும். நாம் பிரகிருதி என்பது இயற்கை. நமக்கு நம் சுபாவம் இயற்கை. ஆசை, அவசரம், கோபம், வெறி, சோம்பேறித்தனம் போன்றவை மனித சுபாவம். கட்டுப்பாடு, நிதானம், அமைதி, சுறுசுறுப்பு, பதம், பக்குவம், பவித்திரம் இறைவனுக்குரிய குணங்கள். மனிதன் மனித சுபாவத்திற்குக் கட்டுப்பட்டவன் என்றாலும் ஏதோ

ஒரு நேரம் நாம் அப்படிப்பட்ட செய்திகளைக் கேள்விப்படுகிறோம். அவற்றுள் சில,
 . பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரைத் தேடி வந்து வரதட்சிணையின்றி, தம் செலவில் திருமணம் செய்ய முன்வந்தது.

. தகப்பனார்தாயார்,கனுக்குக்காலராவந்தபொழுதுகண்டுகொள்ளாமலிருந்தபொழுது முகம் தெரியாதவர் மகனுக்கு சிகிச்சை செய்து குணப்படுத்துவது.

. 5 மாதச் சம்பளத்தை கைமாற்றாகக் கொடுத்தவர், பெற்றவர் மறந்து போனபொழுது, அவருக்கு நினைவுபடுத்த மறுத்தது.

. சர்க்கார் வேலையை ராஜினாமா செய்து நண்பனுக்குத் தொழில் சேவை செய்ய முன்வந்தது.

. இரவு 9 மணிக்கு தியான மையத்திற்குத் தம்மை அழைத்துவந்த குடும்பம் சொல்லாமல் வீடு திரும்பியபொழுது, இளம்பெண் தைரியமாக நான் அன்னையை நம்புவேன் என்று உறுதிபூண்ட பொழுது பொன்னொளி தன் கண் முன் தோன்றியது.

. பிரபலமான கூலிக்காரன் எஸ்டேட் முதலாளியின் அழைப்பை மறுத்து வருமானமில்லாத கணக்குப்பிள்ளையை விட்டு விஸ்வாசத்தால் வரமாட்டேன் என்றது.

. நட்பின் சிறப்பால் பெருந்தொகையை எளிய நண்பனிடம் நம்பி, உவந்து கொடுத்து செயல்பட்டது.

. சிவனடியார் வேண்டுகோளுக்கிணங்கி பிள்ளையைக் கறி சமைத்தது.

. 60 வயதான பேராசிரியர், 85 வயதான குமாஸ்தாவாக ஓய்வு பெற்ற தகப்பனாரைத் தம் அன்றாட வாழ்க்கையை நடத்தச் சொல்லியது.

. பெரும்பணம், நகை, விலையுயர்ந்த பொருள்களை வேலைக்காரனை நம்பி பல நாள் விட்டுவைத்தது. அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக அவன் நடந்துகொண்டது.

. ஒரு கிராமம் முழுவதும் பண விஷயத்தில் தானே முன்வந்து நேர்மையாக இருந்தது.

. வசூல் என்று போகாமல் நிதி வசூலானது.

. சத்தியாக்கிரஹத்தை நாடு ஏற்றது.

. இங்கிலாந்து இந்தியாவைவிட்டு தானே வெளியேறியது.

. ஐரோப்பா முழுவதும் சரணடைந்தபின் இங்கிலாந்து தனியாக ஹிட்லரைத் தோற்கடித்தது.

இவை உள்ளிருந்து இறைவனை எழுப்பும் நேரமாகும்.

 

*******

833) அறியாமையை மீறிய நேரம் உள்மனம் திறந்து வழி விடும். அறியாமையாலான மேல் மனத்தை விட்டு நகர்ந்தால், உள் மனத்தை நாடுவதாக அது அமையும்.

அறியாமையைக் கடந்த உள்மனம்.

வீடு என்றால் முன் பகுதி, உட்பகுதி எனப் பிரிந்திருக்கும். முன் பகுதி உலகுக்காக. பின் பகுதி வீட்டாருக்காக. உட்பகுதியில் ஒவ்வொருவரும் தங்கள் அந்தரங்கத்தை உணர்வர். ஓரளவு இந்த உதாரணம் மேல் மனம், உள் மனம், அடி மனம் ஆகியவற்றை விளக்க உதவும்.

நாம் மனம் என அறிந்தது மேல்மனம்.

ரிஷி தியானத்தில் தம்மை மறந்து உயர்ந்து நிற்பது உள் மனத்தில்.

கிருஷ்ணன் வாயில் உலகம் தெரிந்தது, சம்பந்தருக்குப் பார்வதி

பால் கொடுத்தது அடிமனம்.

. எரிச்சல் வருவது, எதுவும் பிடிக்காமலிருப்பது, சண்டை போடுவது,எதைச் சொன்னாலும் மறுத்துச் சொல்வது, குதர்க்கமாகப் பேசுவது, எக்ஸிபிஷனுக்குப் போனால் 50ஆம் வயதில் 15 வயதுப் பிள்ளை போல உலகை மறந்து திளைப்பது, யோசனையில்லாமல் பேசுவது,செய்த தவற்றை ஆர்வத்துடன் செய்வது, தலைகால் தெரியாமல் குதிப்பது, பதவி வந்தவுடன் அனைவரையும் ஆட்டிப்படைப்பது,பாசத்திற்காக உயிரை விடுவது, கண்டதும் காதல் கொண்டு கண் மூடி நடப்பது ஆகிய உலக வாழ்வின் உயர்வு, தாழ்வுகள் உள்ள நம் மனத்தை பகவான் மேல் மனம் என்று கூறுகிறார்.

. காலம், மனம், அகந்தை, சிறுமை இதன் அம்சங்கள்.

. பிரம்மா உலகைப் படைத்தபொழுது அறிவை, 7 வகை அறியாமைகள் ஆக்கினார். அவ்வறியாமைகளைப் பூரணப்படுத்த இம்மேல் மனத்தை ஏற்படுத்தினார்.

அறியாமையைப் பூரணப்படுத்துவது என்றால் என்ன?

. வருஷத்தில் 27,000 ரூபாய் வருமானம் தரும் 30,000 முதலை அத்தொழிலிலிருந்து எடுத்து கைப்பணத்தைச் சேர்த்து இலட்ச ரூபாய்க்கு ஒரு சொத்தை வாங்கி அதில் வருஷத்தில் 35 ஆயிரம் நஷ்டம் எனக் கண்டார். இதை துர்அதிர்ஷ்டம் என்போம். இவர் அச்சொத்தை வாங்கும்முன் அதை அறிந்தவர். அறிந்து வாங்குவது அறியாமையை பூர்த்தி செய்வது.

. தியானம், நிஷ்டை, சமாதி, மோட்சம் உள் மனத்திற்குரியது.

பொறுமைசாலி, நிதானமானவர், எதற்கும் அசையாதவர், மலர்ந்த முகமுடையவர், எதிரிக்கும் தீங்கு நினைக்காதவர், நிலைகுலைந்த நேரமும் நிலை கலங்காதவர் என்பது உள்மனத்திற்குரியது.

. உள் மனம் சாட்சிப் புருஷனுக்குரியது.

. காலத்தைக் கடந்தது.

. சூட்சுமமானது.

. ஆன்மீகமயமானதன்று.

. அடி மனம், உள் மனத்தின் கீழ் பாதாளமும், பரமாத்மாவும் சேருமிடத்திலுள்ளது.

. ஆன்மீகமயமானது.

. சைத்தியப் புருஷனை தன்னுட்கொண்டது.

. தோல்வி, வருத்தம் அறியாதது.

. மரணத்தை வெல்லக்கூடியது.

. பகவான் ஸ்ரீ அரவிந்தரால் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.


 

தொடரும்.....

*******

ஜீவிய மணி

தவிர்க்க வேண்டியதைத் தவிர்த்தால், மலர வேண்டியது மலரும்.

மனம் மலர, தவறு தவிர்க்கப்பட வேண்டும்.


 


 book | by Dr. Radut