Skip to Content

09. இதுவோ உம் ரௌத்திரக் கருணை!

"அன்னை இலக்கியம்"

இதுவோ உம் ரௌத்திரக் கருணை!

                                              (சென்ற இதழின் தொடர்ச்சி....)                 இல. சுந்தரி

இரவு இங்கு பெண்கள் பூக்கூடைகளுடன் அன்னைக்குக் காத்திருப்பது வழக்கம். இதுபற்றிக்கூட முன்பு ஒரு முறை, ஒரு சுவையான செய்தியை ப்ரீத்தி சொல்லியிருக்கிறாள். சில நேரங்களில் அன்னை தம் அறையைத் திறந்துகொண்டு வெளியில் வர தாமதமாகுமாம். பெண்கள் ஆவலுடன் காத்திருந்து, பூக்களைச் சமர்ப்பித்து, ஆசி பெற்றுத் திரும்புவார்களாம். ஒரு முறை, ஒரு பெண்மணி இரவு கடக்கிறது என்று எண்ணி அறையில் பூக்கூடையை வைத்துவிட்டுத் திரும்பிவிட்டாராம். பிறகு அன்னை அக்கூடையைப் பார்த்துவிட்டு, "இது யாருடையது என்று எனக்குத் தெரியும். தேவர்களும், ரிஷிகளும் எனக்காகக் காத்திருக்கின்றனர்.உங்களால் சிறிது நேரம் காத்திருக்க முடியவில்லையா?'' என்று கோபமுடன் கூறினாராம். ப்ரீத்தியோ, "அன்னையே! நீங்கள் ஆதிசக்தி என்பதை அறிந்தவர்கள் ரிஷிகளும், தேவ தேவியரும். நாங்களோ, எங்கள் சொந்த அன்னை என்று உம்மீது உரிமை கொண்டாடுகிறோம்'' என்று கூறிவிட்டாளாம். அன்னை வியக்கத்தக்க வகையில் அமைதியாக பார்க்க, அவர் விழிகளில் "தண்'ணென்ற சந்திரவொளி தோன்றி பரவியதாம்.

இவற்றையெல்லாம் மனதில் அசை போட்டவாறு புதிய பூத்தட்டு ஒன்றுடன் நானும் அன்றிரவே அன்னைக்குக் காத்திருக்கும் செயலில் கலந்துகொண்டேன். காலையில் மிகுந்த ஆர்வத்துடன் வந்து வரிசையில் நின்று அன்னையின் அன்பின் அரவணைப்பைப் பெற்றேன். இப்போதோ அறியாமையால் கலங்கி, விட்டுவந்த வீட்டாரை எண்ணித் துன்புற்றேன் - என்கிறாள் உமா.

நீண்ட நேரம் கழித்தே அன்னை கதவைத் திறக்கிறார். எல்லோர் முகமும் மலர்கின்றன. வரிசையாக அன்னையிடம் சென்று பூத்தட்டுகளைச் சமர்ப்பித்து, ஆசி பெற்றுப் போய்க்கொண்டு இருந்தனர். கடைசியாக உமாவின் முறை வந்தது. அன்னை தன்னை அன்புடன் பார்த்து, ஆறுதல் கூறுவார் என்று தன் துயரங்களுடன் சென்ற உமாவை, அன்னை ஏதும் கூறாமல், பூக்களைக் கொடுக்க வந்தார். திடீரென்று கோபமானார். "எங்கே வந்தாய்? போய்விடு!'' என்று கூறிவிட்டு, எழுந்து போய்விட்டார். ப்ரீத்தி வெளியே நின்றுகொண்டிருந்தாள்.

"என்ன உமா? ஏன் என்னவோ போலிருக்கிறாய்?'' என்றாள் ப்ரீத்தி. "ஒன்றுமில்லை ப்ரீத்தி! நான் அறைக்குப் போகிறேன். காலையில் பேசுவோம்'' என்று கூறி, விடைபெற்று தன்னறைக்கு வந்துவிட்டாள் உமா.

என்னாயிற்று? காலையில் அத்தனை பரிவாகத் தன்னை ஏற்றுக்கொண்டவர், இப்போது ஏன் தன்னை போய்விடு என்று கூறினார்? தனக்குள் அன்னையின் திவ்ய வடிவத்தைக் கற்பனை செய்து, "அன்னையே! உமக்கு என்மீது என்ன கோபம்? ஏன் என்னைப் போய்விடு என்றீர்? உமக்காக நான் ஏங்கவில்லையா?'' என்று தனக்குள் அன்னையிடம் முறையிட்டாள்.

திடீரென ஞானோதயம்போல் அவளுக்குள், ப்ரீத்தி கூறிய ஸ்ரீ அன்னையின் ரௌத்திரம், ஒவ்வொருவரிடமும் உள்ள நீண்ட நாள் நோய்களைப் போக்கிய நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாய் அணிவகுத்தன.

ப்ரீத்திக்குக் கையிலும், தலையிலும் கட்டிகள் வந்துகொண்டே இருந்தபோது அன்னை, "கூடாது, இது கூடாது'' என்று சினந்து கூறியதும், அவள் கட்டியும், வலியும் நீங்கியது; சித்திராவுக்கு நிறுத்த முடியாத விக்கல் வந்தபோது, அவள் முதுகில் அன்னை ஓங்கித் தட்டியவுடன், அவள் விக்கல் நின்றுபோனது; அன்னையைக் காணவந்த பெண்மணி ஒருவரை அன்னை கன்னத்தில் அறைய,அவருடைய கடும் பல்வலி நீங்கியது; ப்ரீத்தியின் தாய் விபாவதி அடிக்கடி கீழே விழுவதைக் கேட்டதும், அன்னை, "அவள் ஏன் இப்படி அடிக்கடி விழுகிறாள்?'' என்று கோபமாகக் கேட்டதிலிருந்து விழுவதே அடியோடு நின்றுபோனது; மீனுவிற்கு கால் சுளுக்கு வந்து, நடக்க முடியாமல் நடந்தபோது "நிமிர்ந்து நட' என்று அவளை அன்னை அதிகாரமாய் உத்தரவிட்டதும், அவளால் நன்றாக நடக்க முடிந்தது;என்ற ஒவ்வொரு நிகழ்ச்சியும் அன்னையின் ரௌத்திரக் கருணையை அல்லவா வலியுறுத்தியது. இப்போது தானும் அவ்வாறே ஒரு பிழை செய்தது அவளுக்கு விளங்கியது. "மிச்சம், மீதியில்லாமல் உன்னை தெய்வ அன்னைக்குக் கொடுத்துவிடு' என்ற பகவானின் கருத்தை ஏற்று, தன்னை அன்னைக்குக் கொடுத்துவிட எண்ணி, வீட்டைவிட்டு அவரிடம் வந்தபின், தன் சிந்தனை வீட்டை எண்ணி ஏங்கியது தன் ஜீவனின் நோயல்லவா? அதனை விரட்டவே அன்னை, "ஏனிங்கு வந்தாய்? போய்விடு!'' என்று கூறியிருக்கிறார் என்று தெளிவேற்பட்டது.

தொடரும்.....

 *******


 


 


 book | by Dr. Radut