Skip to Content

08.மனமாற்றம்

"அன்னை இலக்கியம்"

மனமாற்றம்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

இல. சுந்தரி

"ஆமாம். அவரைப் பெரும்பாலோர்க்குச் சுதந்திரப்போராட்ட வீரராய்த் தான் தெரியும். இந்தத் தியானமையத்தின் மூலம் தான் நான் அவர் பெருமைகளை உணர்ந்தேன். அவர் சாதாரண மனிதரல்லர். அவர் ஒரு பூரணயோகி'' என்றார் மிஸ்.

"பூரணயோகி என்றால் என்ன மிஸ்?'' என்றாள் ஆஷா.

"அது மிகப்பெரிய விஷயம். இருந்தாலும் சிறிது சொல்கிறேன். அதாவது முனிவர்களைப் போல் வாழ்வைத் துறந்து காட்டிற்குப் போய் தவம்செய்து மோட்சம் பெற்று தான் மட்டும் கடைத்தேறுவது போல் இல்லாமல் வாழ்வில் இருந்துகொண்டு, உடல், உணர்வு, மனம் என்பவற்றைப் புனிதப்படுத்தி மோட்சத்தை விரும்பாமல் சத்தியஜீவியம் என்ற உயர்சக்தியைப் பூமிக்குக்கொண்டு வந்து, அதனால் இங்குள்ள மரணம், வறுமை, நோய், அறியாமை, சிறுமை போன்ற துன்பங்களையெல்லாம் அழித்து, நம்மைப் பூலோகத்திலேயே சொர்க்கலோக வாழ்வை வாழச் செய்வது தான் பூரணயோகம்''.

"அது சரி, மிஸ்! ஸ்ரீ அன்னை என்று ஒருவர் திருவுருவமும் அங்கிருந்ததே, அவர் யார்? அவருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?''என்றாள்.

"ஸ்ரீ அரவிந்தரின் பூரணயோகத்தை நிறைவேற்ற பராசக்தி ஸ்ரீ அன்னை வடிவில் வந்து துணைநின்றதாகக் கூறுகிறார்கள். ஸ்ரீ அரவிந்தர் தம் யோகப்பலனை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார். சூட்சும நிலையில் இருந்துகொண்டு ஸ்ரீ அன்னைதாம் நமக்கு அருள்செய்கிறார். அது பற்றியெல்லாம் நீ படிப்படியாகத்தான் தெரிந்துகொள்ளவேண்டும். இந்த மையம் ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் இவர்களை நினைத்துத் தியானம் செய்து, அவர்களுடைய யோகப்பலனை நமக்கு வேண்டிய வாழ்வுப்பலனாக நமக்குத் தரும் இடம். நீ வகுப்பில் முதல் மாணவியாய் இருந்தவள். இம்முறை திடீரென உன் கவனம் குறைந்துவிட்டது. நீ ஏதோ அமைதியில்லாமல் இருப்பதுபோல் தோன்றியது. அதனால் உன் பிரச்சினை எதுவாயினும் அன்னை தீர்க்கட்டும் என்று உன்னை அழைத்துவந்தேன்'' என்றார் குமாரி மிஸ்.

"இவருக்குத் தன் மீது இவ்வளவு அக்கறையா? மாதவியிடம் அவ்வளவு பரிவுகாட்டுபவராயிற்றே" என்று ஆஷாவின் சிந்தனை ஓடியது.

"என்ன ஆஷா! மலைத்துப்போய் நிற்கிறாய்? மாதவியிடம் பரிவு காட்டுகிறேன் என்றா? ஆமாம். அவளும் என் மாணவி. அவள் தன்னிலையில் குறையாமலிருக்கிறாள். நீயும் அப்படியிருக்கவேண்டும் என்பது தான் என் ஆவல். ஓர் ஆசிரியருக்கு எல்லா மாணவர்கள் மீதும் பிரியமும், அக்கறையும் உண்டு. அவரவர் தன்மைக்கேற்ப மென்மையாகக் கையாள்கிறோம். எங்களுக்கு வேறுபாடு ஒன்றுமில்லை''.

தன் அகக்குறிப்பையுணர்ந்து குமாரி விளக்கம் சொல்லவும் ஆஷாவிற்குப் பிரமிப்பாயிருந்தது. "ரொம்ப தாங்ஸ் மிஸ். நீங்கள் தினமும் இங்குவருவீர்களா?'' என்று கேட்டாள்.

"ஆமாம். இங்கு தினமும் ஏழு முதல் ஏழரை வரை தியானம் உண்டு. மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஆறு மணிமுதல் எட்டுமணி வரை விரிவாக நடக்கும். அதில் ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் நூல்கள் படிக்கப்படும். அன்னையால் பயன்பெற்ற அன்பர்கள் தம் அனுபவங்களைக் கூறுவார்கள். சிறப்புச் சொற்பொழிவும் உண்டு'' என்றார் குமாரி.

இன்று ஆஷாவிற்கு ஓரமைதி கிடைத்தது; உற்சாகமாயிருந்தது. மனதிலிருந்த ஏதோவொன்று விலகி வழிவிடுவது போலிருந்தது. தெளிவாகப் புரியவில்லை.

மறுநாள் வகுப்பில் ஆஷா சற்றுத் தெளிவாய் இருந்தாள். இருந்தாலும் பழையகுணங்கள் சிறிது, சிறிதாய் வெளிப்படத்தான் செய்தன. மாதவியையும், பிரியாவையும் பொருட்படுத்தாமல் தான் வகுப்பில் முன்னேற முடிவுசெய்தாள். அவள் சற்றுத்தெளிந்தவுடன் பழைய தோழியர் கூட்டம் அவளைச் சூழ்ந்தது. அணித் தலைவிபோல் பழையபடி நடந்துகொண்டாள். எல்லோரும் அவள் பேச்சைக் கேட்டு நடந்தனர். அவளே, புரியாதவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தாள். கணிதம் கற்பித்தாள். பழைய கர்வத்துடன் சொல்லிக்கொடுத்தாள். அதேசமயம் மாதவிபோல் படிப்பில் அதிக கவனம்செலுத்தி, மற்றதைத் தவிர்க்க நினைத்தாள்.

கணித ஆசிரியர் கலாவதி போர்டில் கணக்குப்போட்டு வழிமுறைகளை விளக்கிக்கொண்டிருந்தார். இடையில் தவறுதலாக ஓரிலக்கம் போட்டு கணக்கை முடித்துவிட்டார். ஓரிடத்தில் சிறுதவறு நேர்ந்தாலும் சிக்கல் விழுந்த நூற்கண்டுபோல் முழுவதும் தவறாயிற்று. ஆஷா நுட்பமாய் கவனித்துக் கொண்டிருந்தாள். மாதவியும் கவனமாய் கவனித்து எடுத்தெழுதிக் கொண்டிருந்தாள்.

ஆஷா எழுந்து, "மிஸ்! தவறாகப்போட்டிருக்கிறீர்கள்'' என்று தவறான இலக்கத்தைச் சுட்டிக்காட்டினாள்.

கலாவதி மிஸ் சற்றுப் படபடப்பான சுபாவம் உள்ளவர். அரிதாக எப்பொழுதேனும் இப்படிப் பிழை நேர்ந்துவிடும். அப்போது இரண்டாம் முறை போர்டைக் கவனிக்கும்போது தாமே பிழையைத் திருத்தி, தவறுதலுக்கு மன்னிப்புக்கேட்பார். இப்பொழுது கடும் தலைவலியால் மீண்டும் ஒருமுறை கணிதத்தைச் சரிபார்க்கத் தவறியதால் பிழையைத் திருத்தவில்லை.

ஆஷாவின் திறமையை வாய்விட்டுப் பாராட்டினார். "மாணவிகள் எப்போதும் இப்படித்தான் கவனமாயிருக்கவேண்டும்'' என்றார். ஆஷா பெருமிதமாய் நின்றாள்.

மாதவி ஏன் பிழையைக் கவனிக்கவில்லை. கணிதத்தில் முதலிடம் பெறும் மாணவியாயிற்றே என்று கலாவதிக்கு வியப்பாயிருந்தது. அடுத்த ஆண்டு இவர்கள் பொதுத்தேர்வு எழுதவேண்டியவர்கள். பள்ளிக்கு நற்பெயர் பெற்றுத்தரும் மாணவர்களைக் கவனமாய்த் திருத்துவது ஆசிரியர் பொறுப்பல்லவா?

"ஆஷா! மாதவியின் நோட்புக்கை வாங்கி வா'' என்றார் கலாவதி.

அவளும் தவறாகப்போட்டிருப்பாள். தான் மட்டுமே வகுப்பில் கெட்டிக்கார மாணவி என்ற அகந்தையில் மாதவியின் நோட்புக்கை வாங்கி மிஸ்ஸிடம் கொடுத்துவிட்டு பக்கத்தில் நின்று பார்த்தவள் திடுக்கிட்டாள். மாதவி பிழையான இலக்கத்தை நீக்கி சரியானமுறையில் போட்டிருந்தாள். கலாவதிக்கு மகிழ்ச்சி. ஆஷாவுக்கு எரிச்சலும், ஏமாற்றமும்.

"மாதவி! இங்கே வா'' என்றார் கலாவதிமிஸ். பணிவுடன் எழுந்து வந்த மாதவி, ஆசிரியர் அமரும் மேடையின் இடப்பக்கப்படியில் ஏறி பக்கத்தில் வந்து அமைதியாக நின்றாள்.

"மாதவி! நீ சரியாகப்போட்டிருக்கிறாய். ஏன் போர்டில் உள்ள பிழையைச் சுட்டிக்காட்டவில்லை'' என்றார் மெலிதாக.

பதிலேதும் கூறாமல் அமைதியாய் நின்றாள் மாதவி.

"ஏன் மாதவி சொல்லவில்லை? நீமட்டும் சரியாய்போட்டு, நாங்கள் தவறாகப்போட வேண்டும் என்று சொல்லவில்லையா?'' என்றாள் ஆஷா கேலியாக.

மிஸ், மாதவியைப் பார்த்து, "சீச்சி, அவள் அப்படிப்பட்ட பெண்ணில்லை'' என்று கூறி, "சொல் மாதவி, ஏன் என்னிடம் தவற்றைச் சுட்டவில்லை?'' என்றார்.

"மரியாதையில்லை என்றெண்ணி சொல்லவில்லை மிஸ். நீங்கள் இரண்டாம்முறை போர்டைப் பார்த்து திருத்துவீர்கள் என்றிருந்தேன்'' என்றாள் மாதவி.

அவள் பண்பு கலாவதியை நெகிழச்செய்தது. "பரவாயில்லை, மாதவி! நீ பள்ளிக்குப் பெயர் வாங்கித் தரவேண்டிய மாணவி. நீ தவறு செய்யாத வரை எனக்கு மகிழ்ச்சிதான். ஆஷாதான் சுட்டிக்காட்டிவிட்டாளே'' என்று அவளையும் பாராட்டினார்.

ஆஷாவிற்கு அடிபட்ட உணர்வு ஏற்பட்டது. மீண்டும் மனம் சரிந்து விடும் போலிருந்தது. வரும் ஞாயிறு மாதத்தின் கடைசி ஞாயிறு. முன்பு குமாரி மிஸ் அழைத்துப்போன தியான மையத்திற்குப் போகவேண்டும் என்று தோன்றியது.

குமாரியிடம் சென்று, "இந்த ஞாயிற்றுக்கிழமை உங்களுடன் தியானமையம் வருகிறேன் மிஸ்'' என்றாள்.

"சரியாக 5.30க்கு வந்துவிடு. நாம் ஆறு மணிக்குமுன் அங்கிருக்க வேண்டும். காலம் தவறுதல், வார்த்தை தவறுதல், அலட்சிய மனப்பான்மை, இவை அன்னைக்குப் பிடிக்காதவை'' என்றார் குமாரி.

"சரியாக மாலை 5.30க்கு உங்கள் முன் இருப்பேன் மிஸ்'' என்றாள் ஆஷா.

அன்று இறுதி ஞாயிறு; சிறப்புக்கூட்டம். ஆதலால், நிறையபேர் வந்திருந்தனர். எல்லோர் முகத்திலும் மலர்ச்சி. அன்று ஆஷா தன் வீட்டில், தான் தொட்டியில் வளர்க்கும் ரோஜாச் செடியிலிருந்து ரோஜாப்பூக்கள் கொண்டுவந்து அன்னைக்குச் சமர்ப்பித்தாள்.

கடிகாரம் ஆறு முறை ஒலித்து ஓய்ந்ததும் தயாராய்க் காத்துக் கொண்டிருந்த ஒரு கல்லூரிமாணவி, "சாவித்ரி" என்ற காவியத்திலிருந்து சில பகுதிகளைப் படித்தாள்.

ஓரிளைஞர் "பிரார்த்தனையும், தியானமும்" என்ற நூலிலிருந்து ஒரு பகுதியைப் படித்தார்.

"சில சமயங்களில் பழைய அனுபவங்களின் நினைவைக்கூட சிந்தனையிலிருந்து துடைத்துவிடவேண்டும். இல்லாவிட்டால், இடைவிடாது புதிது, புதிதாகக் கட்டிக்கொண்டிருக்க வேண்டிய வேலையில் அது தடையாக இருக்கும். எல்லாம் சார்ப்புத்தன்மை கொண்டவைகளாகவே உள்ள உலகில் இடைவிடாது புதுப்பித்தலினாலேயே நினது பூரண வெளிப்பாடு சாத்தியமாகும்" என்ற அந்தச் செய்தி அவளுக்கு எதையோ உணர்த்துவது போலிருந்தது.

அடுத்தது ஓரன்னை அன்பர் தம் அனுபவத்தை விவரித்தார்.

எங்கள் வீட்டில் குழந்தைகளைச் சேர்த்து ஆறுபேர் இருக்கிறோம். அன்றாடம் ஒருவேளைக்கு 1 லிட்டருக்குமேல் பால் வாங்கமுடியாத பொருளாதாரம். எனவே, பால்காரர் தண்ணீர் ஊற்றிக் கொடுக்கும் பால் நானும் தண்ணீர் ஊற்றித்தான் காபியோ, பூஸ்ட்டோ கொடுப்பேன். தினமும் எல்லோரும் நான் மிகவும் தண்ணீர் ஊற்றுகிறேன் என்று குறை சொல்வார்கள். எனக்கு வருத்தம்தான். நான் என்ன செய்ய? பால்காரர் நல்ல பாலாகக் கொடுத்தால் இந்தப் பிரச்சினை வாராது. பால்கார முனியனும் மிகவும் நல்லவன்தான். ஒரே பசு வைத்திருப்பதால் தனக்கு வேறு வழியில்லை என்றும், இன்னும் ஒரு பசுவாவது இருந்தால் நல்லபால் தருவேன் என்றான்.

பால் தண்ணீராகவுள்ளது என்று குறை கூறுவதற்குப் பதிலாக, அவன் இன்னொரு பசு வாங்க உதவினால் அன்னையை ஏற்றது போலிருக்கும். அந்த நல்லமனம் வேண்டும் என்று அன்னையிடம் பிரார்த்தித்தேன். திடீரென ஒரு யோசனை தோன்றியது. இப்பொழுது காலம் உள்ள நிலையில் பொன்னகை அணிவது பெரும் ஆபத்தாகவுள்ளது. இந்நிலையில் எவ்வித பயனுமின்றி உள்ளே வைத்திருக்கும் பொன்னகையை விற்று, முனியனுக்கு இரண்டு பசுக்கள் வாங்கிக்கொடுத்தால் நல்ல பால் தருவான். அவனும் நல்லமுறையில் வாழ்வான் என்று தோன்றியது. நாங்களே பசு வைத்துக் கொள்ளலாம் என்றால் வாடகைவீடு, ஆள் வசதியும் கிடையாது. எனவே, முனியனுக்காவது வாங்கித்தந்தால், அவன் குடும்பமும் பிழைக்கும்; நமக்கும் நல்லபால் கிடைக்கும். இது சற்று கடுமையான யோசனைதான். ஏனென்றால், நகையை விற்பதற்கு என் கணவரும், என் மாமியாரும் ஒப்புக்கொள்ள வேண்டும். யோசனையை எடுத்துச் சொல்லவே தயக்கமாய் இருந்தது. ஆனாலும், எப்படியும் முனியனுக்கு உதவ மனம் எண்ணியது. எனவே, அன்னையைப் பிரார்த்தித்து, கையில் சுமுகமலரை வைத்துக்கொண்டு, என் கணவரிடம் இதைச் சொன்னேன். அவரோ, "பரவாயில்லையே! மாட்டை விற்று நகை வாங்கலாம் என்று தான் பெண்களால் சொல்ல முடியும் என்று நினைத்தேன். நீ நகையை விற்று பசு வாங்க, அதுவும் பால்காரனுக்கு வாங்கிக் கொடுக்க ஆசைப்படுவது பாராட்டப்பட வேண்டியதுதான். நகையிருந்தால் மட்டும் போட்டுக்கொள்ள முடிகிறதா என்ன?'' என்று பாராட்டிப் பேசினார். முதல் அச்சம் தீர்ந்தது. அடுத்தது மாமியாரிடம் பிரச்சினை சொல்லப்படவேண்டும். அவரே என் மாமியாரிடம் எடுத்துச் சொன்னார். மாமியார் என்ன சொல்வாரோ என்று பயந்துக்கொண்டு இருந்தேன். என்ன வியப்பு!

"எனக்கே நீண்டநாட்களாய்ப் பசும்பால் சாப்பிடவேண்டும் என்ற ஆசை. இந்த வயதான காலத்தில் எனக்கு வேறென்னவேண்டும். ஆனால் பாவம், அவளுக்கிருப்பது ஒரு நகை. அதையும் விற்றுவிட்டால் இப்போதைக்கு வேறு வாங்க முடியுமா என்ன?'' என்றார்.


 

தொடரும்.......

*******       

Comments

08. மனமாற்றம்  Para   6  - 

08. மனமாற்றம்

 

Para   6  -  Line  1   -   "இவருக்குத்                        -   'இவருக்குத்

Para   7  -  Line  2   -   குறையாமலிருக்கிறா ள் -  குறையாமலிருக்கிறாள்

Para 23  -  Line  2   -    சொல்லி                       -   சொல்

Para 33  -  Line  5   -    புதுப்பித்தனாலேயே -  புதுப்பித்தலினாலேயே

Para 34  -  Line  1   -    Please mkae a new paragraph for the following

எங்கள் வீட்டில் குழந்தைகளைச் சேர்த்து ஆறுபேர் இருக்கிறோம்

:

:

இன்னும் ஒரு பசுவாவது இருந்தால் நல்லபால் தருவேன் என்றான்.book | by Dr. Radut