Skip to Content

03.மூன்று நாள் பிரார்த்தனை

மூன்று நாள் பிரார்த்தனை

N. அசோகன்

ஆன்மாவை நாம் பல வழிகளில் அணுகலாம். இத்துறையில் அனுபவப்படாதவர்களுக்கு பிரார்த்தனை மிகவும் உகந்த முறையாகும். அதுவும் இப்பிரார்த்தனையை மூன்று நாள் தொடர்ந்து செய்தால் சிறப்பாக இருக்கும். பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும்,வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கும் இது உகந்த முறையாகும்.

பிரச்சினைகள் பல ரூபங்களில் வருகின்றன. சில தொந்தரவாக அமைகின்றன. மற்றும் சில அச்சுறுத்துகின்றன. வீட்டை விட்டு ஓடிய பிள்ளை, நெடுநாள் முன்பு கொடுத்த கடன், தாமதமாகும் மின் இணைப்பு போன்றவை வழக்கமான வீட்டுப் பிரச்சினைகளாகக் கருதப்படும். திறமை உள்ள ஊழியருக்குப் பதவி உயர்வு கிடைக்க வேண்டிய நேரத்தில் அவர் உதாசீனப்படுத்தப்படுகிறார். இத்தகைய உதாசீனம் பணியில் பெரிய பிரச்சினையாகக் கருதப்படுகிறது.ஆன்மாவை ஒரு தரம் அழைத்தாலும், அது பிரச்சினையைத் தீர்க்கிறதுஎன்பது உண்மை. அப்படி இருக்கும்பொழுது நாம் ஏன் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இத்தகைய நீண்ட பிரார்த்தனையை மேற்கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அதற்குக் காரணம் உள்ளது. சாதாரண மனிதனுக்கு மூன்று நாள்கள் இப்படி அமைதியாக உட்கார்ந்தால்தான், ஆன்மாவைச் செயல்பட வைக்கும் அளவிற்கு அவனது கவனம் குவிகின்றது.

இப்படி உடலும், மனதும் அமைதியாகும்பொழுது ஆன்மா ஒரு தடவையோ அல்லது சில தடவைகளோ தன்னை வெளிப்படச் செய்கிறது. நடைமுறையில் வேறு வேலையில்லாமல் சுதந்திரமாக இருக்கக்கூடிய மூன்று நாள்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு,தினமும் 12 மணி நேரம் பிரார்த்தனையில் அமர வேண்டும். காலை 7 மணிக்கு ஆரம்பித்தால் இரவு 7 மணி வரையிலும் அது தொடர வேண்டும். இடையில் உணவிற்காக சிறிது நேரம் இடைவெளி விடலாம். பிரார்த்தனையில் அமர்பவர் தம்முடைய பிரார்த்தனையைத் தெளிவாக, சுருக்கமாகச் சொல்ல வேண்டும். மகன் வீட்டை விட்டு ஓடிவிட்டான் என்பது பிரச்சினையானால், "என் மகன் வீடு திரும்ப வேண்டும்'' என்று பிரார்த்தனை சுருக்கமாக இருக்க வேண்டும்.பிரார்த்தனை அவரவர்களுடைய தாய்மொழியில் அமைவது நல்லது.

ஒரு தடவை சொல்லிவிட்டபிறகு இப்பிரார்த்தனை அமைதியாக அன்பருடைய மனத்தில் தொடர்ந்தவண்ணம் இருக்க வேண்டும். இவ்வணுகுமுறையை மேற்கொண்ட எவரும் பலனைப் பார்க்கத் தவறியதில்லை. பெரும்பாலும் மூன்று நாள்கள் முடிவதற்கு முன்னரேயே பலன் கிடைத்துவிடுவதும் உண்டு. அப்பட்சத்தில் மூன்று நாள்கள் பிரார்த்தனையில் அமர்ந்திருக்க வேண்டுமா என்று சிலர் நினைப்பதும் உண்டு. பலன் கிடைத்த பிறகு நீண்ட நேரம் அமர வேண்டுமென்று அவசியமில்லை. அபூர்வமாக ஒரு சில சமயங்களில் பிரார்த்தனையைத் தொடங்குவதற்கு முன்பே பலன் கிடைத்ததும் உண்டு.

நம்முடைய அழைப்பில் உண்மை இருந்தால் அதற்குப் பதில் தரும் வகையில் ஆன்மா வெளிவருகிறது. இந்த உண்மை இருக்கும் பொழுது நீண்ட நேரம் பிரார்த்தனையில் அமர்வதும் அவசியமில்லாமல் போகிறது.மனிதனுடைய உடம்பு அமைதியற்றது. ஆசனம் மற்றும் பிராணயாமம் போன்ற முறைகள் இவ்வுடம்பிற்கு அமைதியைக் கொண்டு வருவதற்காக ஏற்படுத்தப்பட்டன. அமைதி என்ற அடித் தளத்தின் மேல்தான் எந்தக் கட்டடத்தையும் நிறுவ முடியும்.ஆன்மீகத்தில் சாதனை புரிவதற்கு ஒரு நிரந்தரப் பேரமைதி அடித்தளமாக வேண்டும். இந்திய யோகத்தின் உச்சக்கட்டம் சமாதி நிலையாகும். அந்த உச்சக்கட்டத்தின் சிறப்பு நிர்விகல்ப சமாதியாகும்.அந்த நிலையை எட்டியவரை நாம் பழுக்கக் காய்ச்சிய இரும்பால் சூடு போட்டால் கூட அவருக்குத் தெரியாது என்பார்கள்.

நிரந்தரமாக இயங்கிக்கொண்டிருக்கின்ற இந்தப் பிரபஞ்சம் அதே அளவிற்கு நிரந்தரமான அமைதி என்ற ஓர் அடித்தளத்தின் மேல்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்தப் பேரமைதியின் ஒரு துளியையாவது நமக்குள் நிலைநிறுத்துவதுதான் பிரார்த்தனையின் முதல் அம்சம். சாதாரண பக்தர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கின்ற இந்த மூன்று நாள் பிரார்த்தனைஎன்பது நிர்விகல்ப சமாதியின் ஒரு சிறு வடிவமாகும். கடனில் மூழ்கியவருக்கும், திருமணத்திற்காகக் காத்திருக்கும் மூன்று பெண்களைக் கொண்ட தகப்பனாருக்கும்,போதை மருந்துகளின் பிடியில் சிக்குண்ட பிள்ளையைப் பெற்றவருக்கும், எந்த மத வழிபாட்டிலும் மற்றும் வாழ்க்கை முறையிலும் தீர்வு கிடையாது. மேற்சொன்ன மூன்று நாள் பிரார்த்தனை இத்தகைய பிரச்சினைகளிலிருந்து விடுதலை கொடுக்குமென்றால்,அதை மேற்கொள்வது ஒரு மனிதனின் சக்தியை மீறிய காரியமாகாது.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்


 

அன்னை தண்டிப்பதேயில்லை. இருப்பினும், பக்தர்களுக்குச் சிரமம் வருகிறது. அவற்றிற்கான காரணங்கள் பின் வருமாறு:

. அறிவில்லாத செயலை அடமாகச் செய்வது.

. தெரிந்தும் அன்னையின் பாதுகாப்பைவிட்டு விலகுதல்.

. அன்னைக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் அதைச் செய்வது.

தண்டனை விரும்பி நாடும் மனித சுபாவம்.


 


 


 book | by Dr. Radut