Skip to Content

09. எந்தையும் தாயும்

 

"அன்னை இலக்கியம்"


 

எந்தையும் தாயும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)


 

சியாமளாராவ்


 

"நீங்க யாருன்னும் தெரியாது; எதுக்காக இப்டி ஒரு பொய் சொன்னீங்கன்னும் தெரியாது. ஆனா, நீங்க அவருக்குக் கொடுக்கணும்னு சொன்னதை நீங்க தரவே வேண்டாம். அவங்களுக்கு அது தேவையில்லே. அதப்பத்தி மனசுல ஒண்ணும் நினைச்சுக்காம, நிம்மதியா போங்க. ஆனா, தயவுசெஞ்சு மறுபடியும் மறுபடியும் நான் இல்லாத நேரத்தில் வந்து வம்பு பண்ணாதீங்க. எனக்கு அது மட்டும் பிடிக்காது. ப்ளீஸ், நான் சொல்றதைத் தப்பா நினைச்சுக்காம ப்ளீஸ் கிளம்புங்க''.


 

நயமாகச் சொன்ன அவனைப் பார்த்து கைகூப்பி, விடை பெற்றான் சீனு. அவன்தான் பாகீரதி, நாகராஜனின் ஒரே மகன்.


 

பெற்றோர்களை வதைக்கும் (வார்த்தைகளால், நடத்தைகளால்) பல மகன்களில் சீனுவும் ஒருவன். அதுவும் ஜாடிக்கேற்ற மூடி போல் அமைந்தேவிட்டாள் மனைவி லதாவும். நரக வேதனையை அனுபவித்தவர்கள், அன்றொரு நாள் நடந்தது தாங்க முடியாமல்தான்

வீட்டை விட்டு வெளியேறி, கௌதமின் வண்டியில் அடிபட்டு, இன்று அவனுடைய அன்புக்கு அடிமையாகி, பெற்றவர்கள் போல் அங்கேயே தங்கிவிட்டார்கள். இன்றும் எந்தவிதமான சஞ்சலமுமில்லாமல் நிம்மதியாக இருக்கிறார்கள்.


 

உள்ளே வந்த கௌதம், அவர்களிருவரையும் பார்த்தான். "அப்பா, அம்மா, ரெண்டு பேரும் என்னை மன்னிச்சுடுங்க. உங்க பிள்ளைதான் வந்தவர்னு புரிஞ்சுபோச்சு. அவர் பேசின பேச்சும், தோரணையும், வார்த்தைகளும் என்னையே முன்னால் கொண்டுவந்து நிறுத்தினதுதாம்மா நிஜம். அம்மா, ஆனா அவங்க உங்க பிள்ளைங்கறதாலதான் சாதாரணமாத்தாம்மாயிருந்துது. நான்.... நான்.... அவரைவிட.... சே...

அத்தனைக் கேவலமா.....'' வார்த்தைகள் வாராமல் அழுதான்.


 

"கௌதம், அன்னிக்கே சொன்னேன். இதோ பாரு, நடந்ததை அன்னைக்கு சமர்ப்பணம் பண்ணிட்டு, புது மனுஷனாத்தானே இருக்கே? எங்களையே பெத்தவங்களா நினைச்சுண்டு, எங்களோட கஷ்டத்துலேருந்து விடுதலை தந்துருக்கே. அதேபோல, வந்த என் மகனோடயும் சண்டை போடாம, நிதானமா பேசி அனுப்பிச்சே; ஒரு வார்த்தைகூட கேவலமா பேசலே. அது உன்னோட பெருந்தன்மையைக் காட்டறது கௌதம். எப்படியோயிருந்தவனை, இப்படி மாத்தினது இந்த தெய்வங்கள்தானே! அவங்க, எங்க மகனையும் திருத்திட மாட்டாங்களா.... சொல்லு கௌதம்.... சொல்லுப்பா....''.


 

நடுங்கும் கரங்களுடன், அந்த முதியவள் தன் கரங்களைப் பற்றிக் கேட்டபோது, ஒரு கணம், ஒரே ஒரு கணம், தன் பெற்றோரை நினைத்தான். அவர்கள் கெஞ்சினதையும் நினைவுத்திரைக்குக் கொண்டுவந்தான்.


 

"ம்...ஹூம்.... என்னால் என் பெற்றோர் பட்ட கஷ்டங்கள் போதுமடா சாமி. இந்தக் குடும்பத்தை, என்னால முடிஞ்சமட்டும் நல்லவிதமா, நல்லபடியா சேர்த்துவைப்பேன். அன்னையே, எனக்கு அதுக்கான வழியையும், தெம்பையும், விவேகத்தையும் தரவேண்டும், அன்னையே! இதை, என் பெற்றோர்களுக்குச் செய்கிற பிராயச்சித்தமா, பாவ மன்னிப்பா நினைச்சுத்தான் செய்யிறேன், அன்னையே! எனக்கு இதில் நீங்கதான் வழிகாட்டியாக மட்டுமல்ல, கூடவே துணையாவும் வரணும், அம்மா! என் பாவத்தைத் தீர்க்க, இவங்க குடும்பத்தை நல்லவிதமா ஒண்ணுசேர வைச்சா, அதுவே நான் செஞ்ச பாவத்துல ஒரு பகுதி குறையுமே... உங்களை அண்டி வந்த எனக்கு நிச்சயமாய் எத்தனையோ நல்ல வழிகளைக் காட்டியிருக்கிறீர்கள்.... மேலும், மேலும் எனக்கு நீங்கள்தான் துணையாக, வழிநடத்திச் செல்ல வேண்டுமம்மா.... அன்னையே சரணம், அன்னையே சரணம், அன்னையே சரணம்....'


 

அன்று, காரில் ஆபீசுக்குக் கிளம்பியவனை வழிமறித்தது ஒரு ஸ்கூட்டர். வந்தவன் சீனுவேதான். அதே திமிரான வார்த்தைகள் அவனிடமிருந்து வெளிப்பட்டன.


 

"இதோ பாரு, எனக்கு அப்பாவும் வேண்டாம், அம்மாவும் வேண்டாம். நீயே அந்தக் கிழங்களை வச்சுண்டு போராடு. எனக்கு அதைப் பத்தின கவலையில்லே. ஆனா, எனக்கு பணம் வேணும். நான் கேக்கறப்பல்லாம் தரணும். அதுக்கு "ஈடு' கேக்கறியா? அதுதான் உங்க வீட்டோடவே வச்சுண்டிருக்கிறே, அவங்கதான். அவங்க இருக்கிற வரைக்கும் எனக்கும் நீ பணம் தரணும். ஆமா....''.


 

ஒரே நிமிடம்தான், மனதில் அன்னையை உட்கார வைத்து, அவரையே பேசவைத்தான்.


 

"சரி, தரேன். ஆனா, நீ எங்கிட்டே "ஈடா' வச்சுருக்கிறவங்களை எப்போ மீட்டு எடுத்துக்கப்போறே? அதை மொதல்ல சொல்லு.... ஏன்னா.... நான் ஒண்ணும் முட்டாளில்லே, உனக்கு மாசா மாசம் பணம் தந்துண்டேயிருக்க. அதுவுமில்லாம, அவங்க இப்போ, சில மாசமா எங்க வீட்டுலதானிருக்கா. அதுக்கான பணத்தையும் வட்டியோட கழிச்சுண்டு மீதியைத்தான் தருவேன். உன்னோட அப்பா, அம்மான்னு, அதுக்கு ஒரு "ஊர்ஜிதம்' எனக்குத் தரணும். அதுவும், அவங்க மொதல்லயே பணம் கொடுத்திருக்கிறதாவும், நகைகளையும் தந்திருக்கிறதாவும் சொல்றாங்க. அதனால தீர யோசிச்சு, வீட்டுல யாரைக் கேக்கணுமோ கேட்டுண்டு வா... அப்புறமா பேசலாம். எனக்கு லேட்டாயிடும், அதனால வரேன்.....''.


 

"விருட்'டெனக் காரைத் திருப்பிச் சென்றுவிட்டான் கௌதம். உடனே சீனு வீட்டுக்குள் நுழைய முயல, கந்தன் கறாராக விட மறுத்து, கேட்டைப் பூட்டி, உள்ளே சென்றுவிட்டான். காரில் சென்ற கௌதமின் இதயம் துடித்தது. "பெத்தவங்களைப் பொருளாக நினைத்து "ஈடு' கேட்கும் மகன்.... வாழ்க்கையின் ஓட்டத்தில் இன்னும் நம்மைப்போல், பலவிதத்தில் மனிதர்கள் இருக்கத்தான் இருக்கிறார்கள். தனக்கு உயிர் கொடுத்த பெற்றவர்களின் மேல் துளிக்கூடவா பாச, நேசமிருக்காது. நான் மறந்ததெல்லாம் இவன் நினைவுக்குக் கொண்டு வருகிறானே.... கூடாது.... நடந்தது, முடிந்துவிட்டது. இனிமேல் நடப்பது, நல்லதாகத் தான் நடக்க வேண்டும். அதற்கு, அன்னையே.... நீங்கள்தான் எனக்குத் துணையாக வரவேண்டும். "என்னைப் போல் ஒருவன்' இனி தயாராகக் கூடாது. நம்மால் முடிந்தவரை, அவனையும் சரியான வழிக்குத் திருப்ப வேண்டும். அந்த முதியவர்கள் மனம் சந்தோஷத்தில் பொங்கவேண்டும். அன்னையே.... இதைச் சரிவர நடத்த அருள் புரியுங்கள் அம்மா.... இது போல் இனி நடக்கவிடாமல் நான் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு என் பேச்சு, என் வாயிலிருந்து நழுவும் வார்த்தைகள், என் நடத்தை, நான் செய்யும் எல்லாக் காரியங்களிலும் நீங்கள் உறைந்திருக்க வேண்டும், அன்னையே..... அன்னையே நீங்கள் தான் எனக்கு எல்லாமே...... அன்னையே சரணம்..... அன்னையே சரணம்..... அன்னையே சரணம்....


 

சீனுவோ, எதுவும் புரியாமல், தன்னைத்தானே அடக்கிக் கொள்ளவும் முடியாமல், அவனே அக்னிக்குண்டமானான். வெறி பிடித்த மிருகமானான். லதாவோ.... எதையும் நம்ப முடியாமல், இன்னும் கொஞ்சம் கணவனுக்குத் தூபம் போட்டாள். இருவரும் நிம்மதி இல்லாமல், கூண்டில் அடைபட்ட மிருகங்கள்போல் ஆனார்கள்.


 

நாட்கள் ஒன்றன் பின் ஒன்றாய், நான்கைந்து மாதங்கள் கடந்த நிலையில், சீனு ஏதோ நினைவில் ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டு வந்தான். இரவு நேரம். என்ன காரணமோ, அவன் வரும் வழியில் தெரு விளக்குகள் மிகவும் மங்கலாக எரிந்தன. அதனால் வெளிச்சம் மிகவும் மட்டுப்பட்டிருந்தது. எதிரே வந்த வண்டியைத் தவிர்க்க சற்று ஓரம் போகலாமென நினைத்தபோதுதான், வேகமாக வந்த வண்டியுடன் மோத நேர்ந்தது. ஒரு கணம், ஒரே ஒரு கணம், தான் மோதியது இரண்டு சக்கர வாகனமன்று; ஒரு பக்கம் விளக்கு

எரியாத நான்கு சக்கர வாகனம்என்பதை உணர்ந்தபோதே, உணர்வற்றுப் போனான் சீனு.


 

காரை ஓட்டி வந்தவன் முதல் பயந்தாலும், மனிதாபிமானத்துடன்

தன் காரிலேயே, கூடியிருந்த மக்களின் உதவியுடன் படுக்கவைத்தான்.

கூட இருவரைக் கூட்டிக்கொண்டான். போலீசுக்கும் தெரிவித்தான். தான் செல்லும் ஆஸ்பத்திரியையும் குறிப்பிட்டுக் கூறி, தன் பெயர் "அரவிந்தன்' என்றும் கூறினான். ஆஸ்பத்திரியில் சேர்த்து, "எமர்ஜென்சி வார்டில்' அவனைச் சேர்த்து, சிகிச்சையும் ஆரம்பித்தாயிற்று. எல்லாமே போலீஸின்

உதவியுடனேயே செய்தான் அரவிந்தன். தன் வீட்டிற்குப் போன் செய்து

தேவையான பணத்தைக் கூறி, எடுத்து வரும்படிச் சொன்னான்.


 

நினைவற்றிருக்கும் சீனுவின் பெயரோ, விலாசமோ அறிய முடியாமல் போனதால், தானே அவனுக்கு "கார்டியன்' எனக் கூறிக் கையெழுத்திட்டு, பணமும் கட்டினான். சிகிச்சையும் ஆரம்பித்தாயிற்று.


 

அரவிந்தனின் மனம், பலவிதங்களிலும் வருத்தம் அடைந்தது. "முப்பது வயதுள்ள இந்த வாலிபனுக்கு திருமணம் ஆனதா? குடும்பம் இருக்கிறதா? குழந்தைகள் உண்டா? எங்கு வேலை செய்கிறான்? ம்....ஹூம்... எதுவுமே தெரிந்துகொள்ள முடியவில்லை. எந்தவிதமான அடையாள அட்டையுமில்லை. ஸ்கூட்டரின் லைசென்சும், அதில் இல்லை. எப்படிக் கண்டுபிடிப்பது? முதல் இவன் பிழைக்க வேண்டுமே'.


 

சட்டென தன் வயதான தந்தைக்கு செல்ல் பேசினான். "அப்பா, ஒரு தப்பு நடந்துடுத்துப்பா. காருல ஒரு லைட் இல்லாம, ஒரே ஒரு லைட்டோட டிரைவ் பண்ணிண்டு போனேனா.... தப்புதாம்பா.... ஒரு ஸ்கூட்டர் வந்து இடிச்சு, ஆக்ஸிடண்ட் ஆயிடுத்து. அவனுக்கு முப்பது வயசுயிருக்கும்பா... ஆனா, வேறே விபரம் தெரியலே. ஸ்கூட்டர் லைசன்ஸுமில்லே. அப்பா, நானும் இங்கே அன்னையை வேண்டிண்டு இருக்கேன்; அப்பா, நீங்களும், அம்மாவும் உடனே காணிக்கை வெச்சு, அடிபட்டவன் நிச்சயமா பிழைச்சாகணும்னு வேண்டிக்கோங்கோப்பா. தவறு என் மேலேதான். "ஹெட்லைட்'டை நான் சரி பண்ணி இருக்கணும்.... பண்ணாதது என் தப்பு. அதுக்குத் தண்டனை எனக்குக் கிடைக்காம, பாவம்பா.... ஒரு இளைஞனுக்குக் கிடைச்சுடுத்தே.... அன்னை என்னை மன்னிப்பாராப்பா... சொல்லுங்கப்பா.... அன்னை மன்னிப்பாங்களா....'' "செல்'லேயே கதற ஆரம்பித்தான் அரவிந்தன்.


 

"அரவிந்தா, இதென்ன இப்டி அழறே.... தப்பு செஞ்சுட்டு அழறதை, தப்பு செய்யறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். தப்பு செய்யிறதும்,

அதைத் தவிர்க்கிறதுக்கு அன்னைகிட்டே நீ யாசிக்கிறதும்கூட தப்புதான். தெரியாம செய்யிற தப்பு வேறே; தெரிஞ்சே செய்யிற தப்புக்கு? நீயே யோசிப்பா. அரவிந்த்.... எனிஹௌ.... நிச்சயமா அடிபட்ட பிள்ளைக்கு எந்தவிதமான சேதாரமும் இல்லாம பிழைக்கணும்னு நானும், அம்மாவும் "ப்ரே' பண்றோம். நீயும் விடாம "அன்னையே சரணம்' சொல்லிண்டிரு.... புரிஞ்சுதா? நான் வரணுமான்னா சொல்லு, வரேன். அன்னைகிட்டேயே எல்லாத்தையும் சமர்ப்பணம் செஞ்சுடு, புரிஞ்சுதா? ம்.... "அன்னையே சரணம்' சொல்ல ஆரம்பிச்சுட்டியா?..... சரி, நான் வச்சுடறேன்''.


 

அன்னை, ஸ்ரீ அரவிந்தரால், குழந்தைகளேயில்லாத ஸ்ரீநிவாசனுக்கும், அலமேலுவுக்கும் பிறந்தவன்தான் "அரவிந்தன்'. அவர்கள் வீட்டில் எந்தவிதமான வேறு படங்கள் ஒன்றுகூடயிருக்காது. "எங்கு நோக்கினும், எதை நோக்கினும்' என்பது போல, அவர்கள் வீட்டில் கருணை நிறைந்த ஸ்ரீ அரவிந்தரையும், சாந்தம், கண்டிப்பு, தீர்க்கம், சந்தோஷம், சிரிப்பு, கருணை, "ம்ஹீம், இதோ வறேன் இரு' என்று சொல்லுவது போன்ற ஒரு ஹாஸ்யமான புன்னகை, "ம்... தவறா செய்கிறாய்?..... வேண்டாம்.... விட்டுவிடு.... இதோ வந்துண்டே இருக்கேன்'' என்பது போன்ற உன்னிப்பான பார்வை, "! இன்னிக்கு நீ நினைத்த விஷயம் நடந்ததுதானே.... மகிழ்ச்சிதானே' என்கிற குதூகலமான பார்வையையும் கூடிய அன்னையை தினமும் ரசித்து, ரசித்து, மனதோடு பேசலாம், கெஞ்சலாம், கொஞ்சலாம், பொய்க் கோபம் காட்டலாம், வாய் விட்டுச் சிரிக்கலாம்.... ஆமாம்....

அன்னையை நேரில் பார்க்காத நம்மால் அன்னை, உண்மையான

நம் பக்திக்கும், நம்பிக்கைக்கும் இத்தனையையும் செய்வார்என்பது

சர்வ நிச்சயம்... கண்கூடாக நாம், அனுபவிக்க முடியும்.... அனுபவிக்கலாம்என்பது உண்மை, சத்தியம்.


 

ஸ்ரீநிவாசனும், அலமேலுவும் அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் எதிரில் அமர்ந்தார்கள். கண்கள் மயங்கி மூடியது. மனம் முழுக்க, ஏன் சரீரம் பூராவும் "அன்னை, அன்னை' என்றே துடிப்புடன் இயங்கியது.


 

ஆஸ்பத்திரியில் அரவிந்தனும், கண்களை மூடி தியானம் செய்ய ஆரம்பித்தான். தவறுக்கு வருந்தி அன்னையிடம் மன்னிக்க வேண்டினான். அறியாத வாலிபனின் உயிருக்காக, மனம் நிறைந்து பிரார்த்தித்தான். பிரார்த்தனை நீண்டது. அன்னையிடமே சரணடைந்திருந்ததில் அவனுடைய மனதோ, செவியோ, உணர்வோ, எதுவுமே வெளி இயக்கத்தை உள்ளே விடவில்லை.


 

நர்ஸ் ஓடி அவனருகில் வந்து அழைத்தாள்.


 

"சார்.... சார்... டாக்டர் கூப்பிடறார்... சார்....''.


 

"ம்...ஹூம்...' எந்தவிதமான சலனமுமின்றியிருந்த அரவிந்தனைப் பார்த்து பயந்தேவிட்டாள் நர்ஸ்.


 

மீண்டும், டாக்டரிடம் சொல்லவும், அவரே மளமளவென வேகத்துடன் அரவிந்தனிடம் வந்தார். அவன் தோள்களை மென்மையாகத் தொட்டார்; மெல்ல தட்டினார்.


 

அன்னையிடம் மண்டியிட்டு வேண்டியபடி அவன் மனம் சஞ்சரித்ததில், புரியாமல் கண்களைத் திறந்தான். இன்னும் அன்னை தான் அவன் மனதில் மட்டுமன்று, உடல் பூராவும் வியாபித்திருந்ததில், எதிரில் இருந்த டாக்டர் அவனுக்கு அன்னையாகவே தெரிந்தார்.


 

சட்டென டாக்டரின் கரங்களைப் பற்றிக்கொண்டான். கண்களில் நீர் கசிய ஒற்றிக்கொண்டான்.


 

"மதர்..... வந்துட்டீங்களா மதர்.... அந்த பிள்ளை பொழைச்சிட்டான் தானே.... தேங்க்யூ மதர்.... தேங்க்யூ மதர்....'' பற்றிய டாக்டரின் கரங்களை விடாமல் குலுங்கிக் குலுங்கி அழுத அரவிந்தனை, ஒன்றுமே புரியாமல் பார்த்தவர், அவன் முதுகைத் தடவிவிட்டார்.


 

"காம் டௌன் மை பாய்.... தைர்யமாயிருக்கணும். உங்களோடு கொஞ்சம் பேசணும்... வரீங்களா....''.


 

நிதானத்திற்கு வந்தான். சுற்றுமுற்றும் பார்த்து, உணர்ந்து கொண்டான்.


 

"ஸாரி டாக்டர். கொஞ்சம் எமோஷனலாயிட்டேன். அவர் எப்படி இருக்கார்? ஒண்ணும் பயமில்லையே....''


 

"ப்ளட் ரொம்ப லாஸாயிருக்கு. "' குரூப் ரத்தம் வேணும். நல்ல வேளை, எங்ககிட்டயேயிருந்ததால அவசரமில்லே. ஆனா, கால்கள்தான் பாதிக்கப்படுமோங்கற பயமிருக்கு. இருந்தாலும் நம்பிக்கையை விடாம டிரீட்மெண்ட் கொடுத்துகிட்டுதான் இருக்கோம். யாருன்னு தெரிஞ்சுதா?''


 

"இல்லை' என்பது போல் தலையசைத்தான் அரவிந்தன்.


 

அருகிருந்த போலீஸ் "அவனை ஃபோட்டோ எடுத்து, விளம்பரம் செய்துவிடலாம். அப்போதுதான் யார் எனத் தெரியும்' என அபிப்பிராயப்பட, அவனைப் புகைப்படம் எடுத்து, அவன் ஸ்கூட்டரின் நம்பரையும் கூடவே தந்து, செய்தி பேப்பரிலும், டி.வி.யிலும் காண்பித்தனர். "கணவர் இன்னும் வரவில்லையே' என்கிற ஆதங்கத்தில் உள்ளுக்கும், வாசலுக்கும் அலைந்துகொண்டிருந்தாள் லதா.


 

"எங்கே போய் தொலைஞ்சார் இந்த மனுஷன்' என்கிற கோபம், நேரம் ஆக, ஆக பயமாக மாறியது. "யாரைக் கேட்பது? எங்கே தேடுவது? அக்கம் பக்கத்தாரிடமும் சரியான உறவில்லை. யாரை உதவிக்குக் கூப்பிடுவது? ஒருவேளை.... பெத்தவங்களைப் பார்க்கப் போயிட்டாரா? ம்... ஹூம்.... மாட்டாரே. சொல்லாம போமாட்டாரே... பயமாயிருக்கே....'


 

படபடவெனக் கதவைத் தட்டும் சத்தம்.


 

சந்தோஷம், ஆத்திரம், கோபம் என்கிற கலவையான உணர்வுகளோடு கதவைத் திறந்தாள் வேகமாக.


 

ஆனால், வந்தது பக்கத்து வீட்டு சுலோசனாதான். முகம் சுருங்கியது.


 

"லதா, இன்னிக்கு, இப்ப டி.வி. போடலையா? ஒண்ணும் பார்க்கலையா?''


 

"இதைக் கேட்கவா சுலோசனா இந்நேரத்துல கதவைத் தட்டினே? நல்லாதான் இருக்கு, போ....'' அலட்சியமாக, கிண்டலாகக் கேட்ட லதாவின் கைகளைப் பிடித்தாள் கண்ணீருடன்.


 

"அப்ப, உனக்கு ஒண்ணுமே தெரியாதா?..... விஷயமே தெரியாதா?... பாவம்மா அவரு....''.


 

"என்ன சொல்றே நீ.... புரியலையே..... என்ன சொல்றே, சுலோ.... தெளிவா சொல்லு..... எனக்குப் பயமாயிருக்கே.... சொல்லேன்....''.


 

கண்கள் நீரைக் கொட்டத் தயாராகின.


 

"இப்பதான் டி.வி.யில பார்த்தேன். உன் வீட்டுக்காரருக்கு ஆக்ஸிடெண்ட் ஆகி, இந்த ஆஸ்பத்திரியில் இருக்கிறதா பேர் சொன்னாங்க... போட்டோவுல பார்த்தேன், உன் வீட்டுக்காரர்தான்; ஸ்கூட்டர் நம்பரும் சொன்னாங்க. உடனே கிளம்பு, லதா. நானும் வேணும்னா கூடவரேன்.... சீக்கிரமா புறப்படு.... லதா....''.


 

உண்மையான அனுதாபத்துடன், தன்னுடன் பாராமுகமாய் இருந்தாலும், நிஜமான ஆதங்கத்துடன், தானும் கூடவருவதாகக் கூறியதும், லதாவால் தாங்க முடியாமல் அவளைக் கட்டிப்பிடித்தபடி அழ ஆரம்பித்தாள்.


 

அப்போதுதான் ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது.


 

விலாசத்தைப் பார்த்து, "இங்கே சீனுங்கறவங்களோட மிஸஸ் யாருன்னு.....''.


 

"நான்தான்.... நான்தான்..... அவருக்கு என்னாச்சு? உசுரோட இருக்காரா? யார் அப்டி அடிச்சுப் போட்டது? அவங்களைப் புடிச்சுட்டீங்களா? எந்த......(கேவலமான வார்த்தைகளைக் கூறி) அப்படிச் செய்தது? அவனை ஜெயில்ல போட்டாச்சா, இல்லையா? பணக்காரனாயிருந்தா, பணத்தை வாங்கிண்டு சும்மா விட்டுருப்பேளே.....'' மேலே அவள் பேசு முன், வார்த்தைகளைக்

கொட்டும் முன், போலீஸ் வேனிலிருந்தவன் கீழேயிறங்கினான்.


 

"அம்மா, முதல்ல உங்க கணவரைப் பார்க்க வாங்க. அப்புறமா மத்தவங்களைத் திட்டலாம். நீங்க பொறப்படுங்க முதல்ல. கூட யாராவது வராங்களா?....''


 

சுலோசனா தான் வருவதாகக் கூற வாயெடுக்கும் முன், லதாவே முந்திக்கொண்டு, தான் ஒருவளாகவே வருவதாகக் கூறிவிட்டதால், சுலோசனாவின் முகம் இருண்டது. வாய் பேசாமல் உள்ளே சென்று விட்டாள்.


 

வண்டியில் தொணத்தி எடுத்தவள், ஆஸ்பத்திரி உள்ளில் கால் வைத்ததும் பெரியதாகக் கூக்குரலிட்டு, அரவிந்தன் சமாதானம் படுத்த முயன்றபோது அவனைக் கண்டபடி ஏசவும், இப்போது டாக்டரும், போலீசும் அவளைக் கண்டித்துப் பேசி, அவளை அடக்கினார்கள். விவரங்களையும் கூறினார்கள்.


 

"இதோ பாருங்க, உங்க கணவர்தான் தப்பான வழியில வந்து இடிச்சது. அதுக்கு அவரைத்தான் "பனிஷ்' செய்யணும். இந்த நல்லவர் உடனே ஆஸ்பத்திரியில சேர்த்து, வைத்தியமும் செஞ்சுருக்கார். பூரா செலவையும் தானே ஏத்துண்டிருக்கார். சும்மா கத்தறதை விடுங்க. நடக்க வேண்டியதைப் பார்க்கலாம். ஸ்கூட்டரை ஓட்டும்போது "லைஸன்ஸ்' இல்லாம ஓட்டறது தப்புன்னே இந்த கேஸை இன்னும் தீவிரமாக்க முடியும். இனிமே கத்தறது, குதிக்கறதை விட்டுட்டு, தேவையானதைக் கேளுங்க, அதன்படி நடங்க, புரியுதா?.....''


 

போலீஸ் பெரியதாகப் பேசாமல், மிக மென்மையாக, அதே சமயம் கண்டிப்புடன் கூறவும், உள்ளூர ஏற்பட்ட பயத்தினால் வாயை மூடிக் கொண்டாள் லதா.


 

டாக்டர், அவளைக் கண்ணாடிக் கதவு வழியாகப் பார்க்கச் சொன்னார். கையில், வாயில், மூக்கில்என பலரகமான ட்யூப்கள். காலைக் கட்டி விட்டிருந்தனர். கண்கள் மூடியிருந்தன.


 

வெடித்து வந்த விம்மலை அடக்க முடியாமல் அழ, இரண்டு நர்சுகள் அவளைத் கைத்தாங்கலாகப் பிடித்து அழைத்து, உட்கார வைத்தார்கள். தலை கலைந்து, அழுத முகத்துடன் பரிதாபமாக இருந்தாள் லதா, கையில் ஒரு ஹேண்ட் பேக்குடன்.


 

"உங்களுக்கு ரிலேடிவ்ஸ் யாராவது இருக்காங்களா? அவங்களுக்கு சொல்லணுமா? சொல்லுங்க. நீங்க மட்டும் வந்துருக்கீங்க....''


 

வினாடிக்கும் குறைவான நேரத்தில் அவள் மூளை வெகுதுரிதமாக வேலை செய்தது. முகத்தை இன்னும் சோகமாக்கினாள்.


 

"இல்லே..... எங்களுக்குன்னு யாரும் இல்லே.... இவரோட பெத்தவங்களும், என்னைப் பெத்தவங்களும் எப்பவோ செத்துப்......'' முடிக்கவில்லை அவள். அதற்குள் உள்ளே நுழைந்த மூவரையும் பார்த்து, திறந்த வாய் திறந்தபடி, கண்களை வெறித்துப் பார்த்தாள் லதா.


 

சட்டென அரவிந்தனும், டாக்டரும் அவள் பார்வை சென்ற பக்கமாகப் பார்த்தார்கள்.


 

வயதான தம்பதியும், ஒரு வாலிபனும் வருவதைக் கண்டார்கள். மூவர் முகத்திலும் கவலையிருந்தாலும், ஏதோ ஒரு திடமான உறுதி தெரிந்ததைப் பார்த்து, டாக்டர் வியந்துதான்போனார்.


 

அவர்கள் கௌதமும், பாகீரதி, நாகராஜனும்தான்.


 

அரவிந்தன், சட்டென கௌதமின் கரங்களைப் பிடித்தவன், யாருமே எதிர்பாராதபடி, பாகீரதி, நாகராஜன் கால் விழுந்து குலுங்கினான். சுதாரித்துக்கொண்ட பாகீரதி, சட்டென அவனைத் தூக்கி நிறுத்தினாள். அவன் கண்ணீரைத் துடைத்தாள். முதுகில் ஆதரவாய் தடவிக் கொடுத்தாள்.


 

"அழப்டாது. நீ.... வேணும்னா.... என் மகனை வண்டியில அடிபட வெச்சே? இல்லையே. கண்டிப்பா, நிச்சியமா சொல்றேன், அவனை அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் காப்பாத்தித் தருவா, பயப்டாதேப்பா...''.


 

"அம்மா.... என்ன சொன்னேள்! அன்னையும், ஸ்ரீ அரவிந்தருமா! அம்மா, நிஜம்மா இப்பதாம்மா எனக்கு மனசுல தைர்யம் வர்றது. நானும் அந்தத் தெய்வங்களைத்தாம்மா வணங்கி, வேண்டிண்டு இருக்கேன். அம்மா, உங்களைப் பார்த்தவுடனேயே ஸ்ரீ அரவிந்தரும், அன்னையுமே வந்தது போலவேயிருந்ததும்மா. இனிமே பயமில்லே, நிச்சயமா உள்ளேயிருக்கிறவருக்கு சீக்கிரமே குணமாகிவிடும்கற

நம்பிக்கை வந்துடுத்தும்மா. அம்மா.... எப்டிம்மா.... எப்டிம்மா!''


 

"நிச்சியமா என் மகனுக்கு ஒண்ணும் ஆகாது. "தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு'ன்னு எல்லாமே சரியாயிடும். எனக்கு அந்த நம்பிக்கை பரிபூரணமாயிருக்கு. இரு, என் மகனைப் பார்த்துட்டு வரோம். அப்புறமா இங்கேயே "கூட்டுப் பிரார்த்தனை'யா நாம மூணு பேருமா அன்னையை வேண்டுவோம். அன்னை என் மகனை ரட்சிப்பார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு, சரியாப்பா. ஆமா, உன் பேரென்னப்பா?....''.


 

"அரவிந்தன்மா....''.


 

கண்கள் விரிய அவனையே பார்த்தாள் பாகீரதி.

"அரவிந்தன், அரவிந்தன், அரவிந்தன்.... இனிமே பயமேயில்லேப்பா.

உன் வண்டியில அடிபட்டதுகூட நன்மையேதான். அதனால்தான் டாக்டரும் நல்லா சிகிச்சை செய்து காப்பாத்திட்டார். எந்தவிதமான ஊனமும் அவனுக்கு ஏற்படாது, இது நிச்சயம். இரு, சீனுவைப் பார்த்துட்டு வரேன்''.


 

கிடுகிடென நடந்தாள். நாகராஜனும் பின்தொடர்ந்தார்.


 

மனம் விம்ம ஆரம்பித்தவுடனேயே, அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் மனதில் வந்தவுடன், வந்த விம்மல் தணிந்தேபோனது. நாகராஜன், மகனைப் பார்த்தார். உடனே திரும்பி வந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தவரின் இமைகள் தாமாகவே மூடிப்போயின. பாகீரதியும் வந்து, அவரருகில் தானும் அமர, அரவிந்தனும் அமர்ந்தான். கௌதம், டாக்டர்கள் கூறுவதைக் கேட்க, அங்கேயே உலாத்தியபடியிருந்தான்.


 

மூவரின் பிரார்த்தனையும் ஒரு "யாகம்' போல் இணைந்து, நேராக அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் மலர்ப் பாதங்களைப் பற்றிக்கொண்டது.


 

வினாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணிகளாக மாறத் தொடங்கியது. "ம்..ஹூம்' அசைவேயில்லை. அவர்களின் பக்கத்தில் யார் அமர்கிறார்கள், யார் நடக்கிறார்கள், உள்ளே சீனுவுக்கு என்ன நடக்கிறது, எப்படியிருக்கிறான், எதுவுமே அவர்களின் மனதில், எண்ணத்தில், நினைவில் இல்லை. அவர்கள் மூவரின் இதயத்திலும், கருணைக் கண்களோடு, "நானிருக்க பயமேன்' என்று கூறுவது போல், சிரித்தபடி, தீர்க்கமாகப் பார்க்கும் அந்தத் தெய்வங்களைத்

தவிர, வேறு எதுவுமேயில்லை.


 

மனது, மனம், இதயம் என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அதன் வாய், எண்ணங்களின் மோதல்கள், நினைவுகளின் கலவரங்கள், குறுக்கும் நெடுக்குமாக, அங்குமிங்குமாக, இலக்கில்லாமல் ஓடி, அத்தனையையும் பிராய்ந்து, பிச்சி எடுக்கும்; அமைதியையழிக்கும்; நிதானத்தை தவிர்க்கும். நம்மால், இத்தனை வேதனைப்படுத்தும், அந்த சிறிய உறுப்பைக் கட்டுப்படுத்த முடிகிறதா? ம்ஹூம்.... முடிவதேயில்லை.


 

ஏன்? எதனால்? ஏன் முடிவதில்லை?


 

அப்படி வாருங்கள் வழிக்கு. உண்மை என்ன தெரியுமா? நிஜத்தில், சத்தியத்தில், நம்மை நாமே வேண்டாதவற்றிற்கெல்லாம் அடிமைப் படுத்திக்கொண்டு, நமக்குள் நாமே அடிமைகளாகியிருக்கிறோம். அதற்கும் அஞ்ச வேண்டாம்.


 

நமக்குள் நாமே அடிமைகளாகலாம்தான்.... வேறு வழியில்.... அதுவும் மிகமிக நல்ல வழியில்... நிச்சயமாக.... ஆமாம், சர்வ நிச்சயம்தான்.. அப்படி தாசானு தாசனாக..... "நீயேதான் எல்லாம்' என..... எப்பேர்ப்பட்ட, எப்படிப்பட்ட, எவரிடம்? எவ்விதம்?.....


 

"அம்மா! அம்மா! அம்மா!' என மெய் சோர, கண்கள் மல்க, அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் "பாதங்களைப்' பற்றிக்கொண்டால்..... நம் இதயம் என்னும் பெட்டகத்துக்குள் வைத்து, சதாசர்வகாலம் பூஜித்தால்.... ஸ்மரித்தால்..... எப்போதும் ஜபித்தால்.... வேண்டாத கசடுகளை அகற்றி, அந்த பவித்திரமான இடத்தில் நல்ல எண்ணங்களைத் தவிர, வேறெதுவையுமே நுழையவிடாமல் தடுத்தால்.... நன்மையைத் தவிர, "புன்மை'யை வெளியே தள்ளுவதால்.... சர்வ

நிச்சயமாக, நமக்குள் இருக்கும், வாசம் கொண்டிருக்கும் அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் அடிமையாகவே..... "நமக்குள் நாமே அடிமை'.... ஆகலாம்.


 

மனிதருக்கும், மாந்தருக்கும், வசதிக்கும், வாழ்விற்கும், ஆசைகளுக்கும், வேண்டாதவற்றிற்கும் நாம் "பட்டுக்' கிடக்கிறோம், அடிமைகளாக. எத்தனை, எத்தனை இரும்புச் சங்கிகள்; அதுவும் துருப்பிடித்துப்போன சங்கிகள்

நம்மை மலைப்பாம்பாகப் பிணைத்து இறுக்குகின்றன? உணருகிறோமா? ம்....ஹூம்... இல்லவே இல்லை. முதல் நம்மைத் தழுவும்போது நமக்கு இதமாக, சந்தோஷமாக, மகிழ்ச்சியாகவே இருக்கிறது. அதை அனுமதிக்கிறோம், ஆசையோடு. அவ்வளவே..... கொஞ்சம், கொஞ்சமாக அந்தத் தழுவல், இறுக ஆரம்பிக்கிறது. அப்போதாவது உணருகிறோமா? இல்லையே.... மேலும் அனுமதிக்கிறோம்; உதறுவதில்லை. மேலும் மேலும் இறுக, விலக முடியாமல் திணறுகிறோம். அப்போதுதான் புரிகிறது நாம் மாட்டிக் கொண்டதே. தலையை மட்டும் வெளியே நீட்டி மூச்சுத் திணறுகிறோம். திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல் கத்த முடியாமல் விழிக்கிறோம். மாட்டிக்கொண்டது வேறு யாருமல்லர், நாமேதாம். அதனின்று விடுபட, அந்த அடிமைத்தனத்திருந்து விடுபடும் வழி, மார்க்கம், தடம்,

எல்லாமே அன்னை, ஸ்ரீ அரவிந்தர்தாம். அந்த தெய்வங்கள் இருக்கும் போது, ஏன் நாம் நம்மை மாற்றிக்கொள்ளக்கூடாது? அந்தச் சங்கிலிகளின் தழுவலை, இறுகலை, ஏன் அகற்றக்கூடாது? ஏன் எல்லாவற்றிருந்தும்

விடுதலை பெறக்கூடாது?


 

மகன் வீட்டிலிருந்து விரட்டப்பட்ட வயதான பெற்றோருக்கு அடைக்கலம் தந்ததும், தன் தவற்றை உணர்ந்து திருந்திய மகன்தான். காலம் கடந்து திருந்தினாலும், அன்னை-ஸ்ரீ அரவிந்தரின் மேலுள்ள பக்தியினால் நல்லவனாக மாறினான். அன்னையின் கோட்பாடுகளின்படி நடந்தான்.


 

அவனிடமிருந்த அத்தனை துர்க்குணங்களாகிய மலைப்பாம்பின் தழுவலும், இறுகலும் அவனை விட்டுக் கழன்று ஓடிப்போனதே, அதற்குண்டான காரணம் என்ன?


 

அன்னை-ஸ்ரீ அரவிந்தரின் பாதாரவிந்தங்களைப் பற்றிக் கொண்டதன் விளைவுதான். பற்றிக்கொண்டது மட்டுமன்று, இன்றும் விடாமல் இருப்பதுதான்.


 

கௌதமின் மனம் துடிப்பதே "அன்னையே சரணம்! அன்னையே சரணம்!' என்றுதான். அதன் விளைவுதானே நல்ல குணங்கள் அவனைச் சரணடைந்தன.


 

நாகராஜனும், பாகீரதியும், அரவிந்தனும் இன்னும் தியானம் கலையாமல் அப்படியே அமர்ந்திருந்தார்கள்.


 

லதாவிற்கோ, அதையும் நாடகமாடுவதாகத்தான் நினைத்தாளே தவிர, அவர்களின் பக்தியை உணரவில்லை. அங்குமிங்குமாய் அல்லாடியபடி நடை போட்டாள். வெறுப்போடு, காழ்ப்புணர்ச்சியோடு அவர்களை நக்கலாகப் பார்த்தாள். லேசாகத் தனக்கு வலிக்காமல் தலையிலடித்துக்கொண்டாள். உள்ளத்தில் அவள் சின்னஞ்சிறு இதயம் பூராவும் காழ்ப்புணர்ச்சியில் நிரம்பிக்கிடக்க, பெற்றவர்களாகிய நாகராஜனும், பாகீரதியும் அதே சின்னஞ்சிறு இதயத்தினுள் அன்னை-ஸ்ரீ அரவிந்தரைப் பிரதிஷ்டை செய்ததில், சரீரம் பூராவும் அவர்களின் சரணமே உதிரத்தோடு கலந்து சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது. உச்சி முதல் பாதம்வரை வேறு எந்தவிதமான எண்ணங்களும் அவர்களுக்குள் நுழைய முடியவில்லை. அப்பேர்ப்பட்ட திடமான "அரண்' ஒரு பெரிய கோட்டையைச் சுற்றி இருப்பது போல் "ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நம:', "ஆனந்தமயி, சைதன்யமயி, சத்யமயி பரமே' என்கிற மந்திரம் அரணாக அவர்களைச் சுற்றி, வேறு எதுவும் நுழையவும் விடாமல், பாதிக்கப்படவுமில்லாமல் வந்துகொண்டிருந்ததில், அவர்களால் எந்த சத்தத்தையோ, பேச்சுக்களையோ, ஸ்டிரெச்சரின் சக்கரத்தின் உருளல்களையோ கேட்க முடியவில்லை.


 

"செவிக்கு உணவு இல்லாதபோது, சிறிது வயிற்றிற்கும் ஈயப்படும்',

இது வள்ளுவர் வாக்கு.


 

ஆனால், அதையும் மீறிய இவர்கள் மூவரின் சரீரம் முழுவதுமே அன்னையும், ஸ்ரீ அரவிந்தருமே பயணித்ததால், அந்தத் தெய்வங்களின் பூரணமான அருளுக்கு ஆளாகி, தங்களை மறந்த நிலையில், புற உலகின் நடப்புகளை அறியாமல், அமர்ந்திருந்தார்கள். பசி, தாகம், வியர்வை, தும்மல், இருமல், எதுவுமே அவர்களை அண்டவில்லை. பக்திமயமான சரீரத்தின் உள்ளே அந்த உணர்வுகள் கூட, "அண்டுவது தவறு' என்று உணர்ந்திருந்தன போலும். கௌதம் அவர்களுடன் அமரவில்லைதான். அன்னையின் சரணத்தை அவன் இதயம் கூறியபடியேயிருந்தது.


 

லதாவிற்குப் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக அவளை விட்டுப் போய்க்கொண்டிருந்தது. இத்தனை நேரம் எட்டிப் பார்க்காத பசி, இப்போது அவளைத் துளைத்தது. அவசரமாக வந்ததில் கையில் காசையும் எடுத்துவர மறந்துவிட்டாள். இப்போது பசியும், கவலையும் சேர்ந்து கோபமாக மாறியிருந்தது. அந்த உணர்வுகள் அத்தனையும் அங்கு தியானத்தில் அமர்ந்திருந்தவர்களின் மீது திரும்பியது. வேகமாய் அவர்களை நோக்கித் திரும்பினாள். பாகீரதியை ஒரு உலுக்கு உலுக்கி, மற்றவர்களையும் அவர்கள் நிலையிருந்து திருப்பி, ஒரு கூச்சல் போட வேண்டுமென்ற ஓர் உணர்வு அவளுக்குள் பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தது. அவர்கள் அருகில் வேகநடை போட்டு வந்தபோதுதான், யாரோ அவள் தோளைத் தொட்டு

வேகமாகத் திருப்பினார்கள்.


 

"இதோ பாருங்க, டாக்டர் உங்களை அர்ஜெண்டா கூப்பிடறார்மா. வாங்க, வேகமாக வாங்க. ஏதோ கையெழுத்து வாங்கணும்னு கூப்பிடறார். வாங்க, வாங்க...''


 

லதாவைத் தரதரவென இழுத்தபடி அழைத்துச் சென்றாள் நர்ஸ். டாக்டர் பதட்டத்துடன் நின்றிருந்தார். அவளைப் பார்த்தும் சில பேப்பர்களில் கையெழுத்து வாங்கினார். எல்லாவற்றையும் பார்த்த கௌதமிற்குப் புரிந்தது, அவள்தான் சீனுவின் மனைவியாகயிருக்க வேண்டுமென. ஆனால், பேசவில்லை.


 

"மேடம், இப்ப உடனே ஒரு ஆப்பரேஷன் செஞ்சாகணும். அதற்குண்டான பணமெல்லாம் மொதல்லயே கட்டியாச்சு. ஆனா, ஆப்பரேஷன் சேதமடைஞ்ச உங்க ஹஸ்பெண்டோட கால்களுக்குத் தான். நாங்க சரியாகும்கற உத்தரவாதம் தர முடியாது. ஆனாலும், ஆகலாம்; இல்லாவிட்டாலும்.... ம்... வீ ட்ரை அவர் பெஸ்ட்.... புரிஞ்சுக்கோங்க. எதையும் "பாஸிடிவ்'வாவே "திங்க்' பண்ணலாம். நீங்களும் பகவானைப் பிரார்த்தனை செய்யுங்க. நாங்களும் பகவானை வேண்டிகிட்டுத்தான் ஆப்பரேஷனை ஆரம்பிப்போம். மேடம், உங்களோட பிரார்த்தனையும், எங்களோட டிரீட்மென்ட்டும் சேர்ந்து, ஒண்ணுத்துக்குள்ள ஒண்ணா கைகோத்துக்கட்டும். அப்ப பலன் பாஸிடிவ்வாத்தானேயிருக்கும்? அந்த எண்ணத்தோடவே உங்க பிரார்த்தனையை ஆரம்பிங்க மேடம். ப்ளீஸ் கலங்காதீங்க. எங்களால முடிஞ்சளவு உங்க கணவருக்கு எந்தக் குறையுமில்லாமத்தான் டிரீட்மெண்ட் தருவோம். சரிம்மா.... தைரியமாயிருங்க.....'' சொல்லி விட்டு

உள்ளே சென்றார் டாக்டர்.


 

இடிந்தே போனாள் லதா. "இதென்ன, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இருக்கு? இனிமே காலில்லாத புருஷனோட இருக்கணுமா? அப்ப.... வேலைக்கு?.... உலைதானா.... ஐயோ! நான் என்ன பண்ணுவேன்? ஒரு பைசா சேர்த்து வச்சுக்காம, எல்லாத்தையும் கரைச்சாச்சு. இனிமே யார்கிட்டயும் கேட்கக்கூடிய நிலையில இல்லே.


 

இவரையும், இனிமே வேண்டாம்னு பெத்தவங்ககிட்ட தள்ள முடியாது. வாயி.... வாயி.... வாய்னால நானும் கெட்டேன்... இவரையும் ஆட்டி வச்சேன்.... ஆமா, வாயுள்ள பிள்ளைதானே பொழைக்கும்னு சொலவடையேயிருக்கு.... சரிதானே.... அதானே வாயாடினேன். அடிச்சுப் பிடுங்கிண்டேன்... என்ன தப்பு? இப்ப... இப்ப.... இனிமே நொண்டி புருஷனோட வாழ்க்கை நடத்த, நான் என்ன குஷ்டரோகிய தூக்கிண்டு போன நளாயினியா? அம்மம்மா.... அப்பேர்ப்பட்டதெல்லாம் என் கிட்டேயே வரக்கூடாதே.... இனிமே இவரை என்ன பண்றது? எங்கே விடறது? அவாளே வேற வீட்டுல ஜம்முனு இருக்கா.... இவரையும் வச்சுப்பாளா? ம்... ஹூம்... நம்ப முடியாது. ஒரு பைசாகூட தராம விரட்டியடிச்சவன்தானே. இந்த நொண்டியை எப்படி உள்ளே விடுவான்? பேசாம, அந்தக் கார்காரன்கிட்டே அழுது, பொரண்டு ரூபாயை வாங்கிக்கணும். அதுல கொஞ்சம் பிச்சி எடுத்து பேசாம ஏதாவதொரு காப்பகத்துல இவரை விட்டுடணும். நம்மால ஆகாதுப்பா.... ம்....ஹூம்....'


 

தலையைத் தனக்குத் தானே ஆட்டியபடி, தன் யோசனைகளுக்கும் தானே முதுகைத் தட்டிக்கொண்டு, "அப்பாடா...' என்கிற எண்ணம் வந்து, நீண்டதாக ஒரு பெருமூச்சு விட்டபோதுதான் மீண்டும் நர்ஸ் ஓடி வந்தாள். அவளைக் கூப்பிட்டாள். அந்த நர்ஸின் முகத்தில் ஒரு பீதி, அவசரம், பரிதாபம் என்கிற உணர்வோடு பார்த்ததில், ஒரு மெல்லியதான நடுக்கம் லதாவின் சரீரத்தில் உச்சியிருந்து ஆரம்பித்து, பாதாதி கேசத்திற்கு வந்தது.


 

நர்ஸின் பின்னாலேயே ஓட்டமும், நடையுமாய் பறந்தாள். டாக்டர் அறையின் வெளியிலேயே நின்றிருந்தார். முகத்தில் களையில்லை. "மேடம், உங்களோட யாருமே வரலையாம்மா?.....''


 

"இல்லே.... ஆமா.... ம்...ஹூம்.....'' மேலே எதுவும் பேச்சு வராமல் விழித்தாள்.


 

"என்னம்மா.... எதுவும் பேசாமயிருந்தா?.... இப்ப.... முக்கியமான "டிஸிஷன்' எடுக்கணுமே. நீங்க மறுபடி ஒரு கையெழுத்துப் போடணுமே. வாங்க.... அப்ப நீங்கதான் எல்லாத்துக்கும்னு சொன்னப்புறம் வேற யாரைக் கேட்க முடியும்மா?..... வாங்க சீக்கிரம்.... வாங்க... லேட்டாகிற ஒவ்வொரு நிமிஷமும் அவருக்கு ஆபத்தும்மா.... வாங்க....''


 

சட்டென ஓர் ஆங்காரமும், யோசனையும் கூடவே எழுந்தன, லதாவினுள்.


 

"ஏன், நான்தான் ஸைன் பண்ணணுமா? அதுல பெத்தவங்களுக்கு பங்கு இல்லையா? அவங்களைப் போடச் சொல்லுங்க.... போங்க....''


 

"என்ன மேடம், அவருக்கு யாருமேயில்லேன்னீங்க?..... இப்ப.... இப்ப.... சரி, ஒவ்வொரு வினாடியின் தாமதமும் அவருக்குத்தான் நஷ்டம். அவங்க எங்கேயிருக்காங்க? சீக்கிரமா போன் பண்ணி வரவழையுங்க... ப்ளீஸ்.... நீங்க மறுபடியும் ப்ரே பண்ணுங்க..... மொதல்ல அவங்களை வரவழையுங்க..... க்விக்....''


 

"இந்த நிலையிலே நிம்மதியா ப்ரே பண்ண என்னால முடியாதுங்க. அதோ அங்கே மூணு பேரு நாற்காலியில புடிச்சுவச்ச பிள்ளையார் போல கண்கள மூடிண்டு நாடகமாடறாங்களே...... அவங்கள்ள வயசானவங்க ரெண்டு பேரும்தான், அவரோட அப்பாவும், அம்மாவும். ஒருத்தியா அல்லாடறேன், நிம்மதியா உட்காந்திருக்காங்க பாருங்க.... சே.....''


 

நடந்ததைக் கவனித்த கௌதம், அன்னையைத் தீவிரமாக அழைத்தான்.


 

வேகவேகமாய் டாக்டர் வந்தார். பார்த்தார்; திகைத்தார். அங்கு உட்கார்ந்திருந்த மூன்று பேரையுமே காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தார். எந்தச் சுவடும் இல்லை; திகைத்தார். "சரி, நேரம் வீணாகக்

கூடாது. ஒரு உயிர் சரியான நேரத்தில் காக்கப்பட வேண்டும். நடப்பது நடக்கட்டும். நாம் ட்ரீட்மெண்ட்டை ஆரம்பித்துவிடுவோம்....' நினைத்தார்.


 

வேகவேகமாக நடை போட்டார். கௌதம் அவரிடம் "அவர்கள் சிகிச்சையை ஆரம்பிக்கலாம்' என உறுதியோடு கூறினான்.


 

"இவன் யார்? சிகிச்சையைத் தொடரக் கூறுகிறானே......' என நினைத்தபடி, அந்த வாலிபன் இருந்த அறைக்குத் திரும்பும்போது, திகைத்தே போனார். அதற்குள் பரபரப்புடன் ஓடி வந்த நர்ஸ், டாக்டரிடம் மூச்சு வாங்கியபடி கூறியது இதுதான்:


 

"டாக்டர், இவங்க மூணு பேரும் வந்தபோது, நீங்க இங்கே இல்லே. அவங்க கண்ணாடி வழியா பார்த்தாங்க. நிலைமையை, புரியறது போல நானும் வேகவேகமா சொன்னேன். அவங்க ஒரு "ப்ளெஸ்ஸிங் பாக்கெட்டை'க் கொடுத்து, இதை பேஷண்டோட படுக்கையில வைக்கச்சொல், ரொம்பவும் கேட்டுகிட்டாங்க. ஆனா, அவங்களைப் பார்த்ததும் எனக்கு மறுக்கத் தோணலே. ஸாரி டாக்டர், அந்த ப்ளெஸ்ஸிங் பாக்கெட்டை பேஷண்டோட தலைமாட்டுல வச்சுருக்கேன். நான் அதை வச்சவுடன், அவங்க அங்கேயே பிரார்த்தனை பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அந்தம்மா கண்ணுல நிறைஞ்ச நீர், உடனே கட்டுப்பட்டது போல நின்னே போச்சு. பேஷண்டும்....''


 

"சொல்லு....... பேஷண்ட் எப்டியிருக்கார்? பக்கத்துல "லாரா' இருக்காளா? டாக்டர் ஈஸ்வரன் அங்கேதானேயிருக்கார்?... ம்...''


 

வேகநடை போட்டு அறைக்குள் நுழையும்முன், அங்கே அந்த மூவரையும் பார்த்து திகைத்தே போனார் டாக்டர்.


 

மூவரின் முகத்தில் அமைதி, சாந்தம், இரண்டுமே பரவியிருக்க, ஆடாமல், அசையாமல் தியானம் செய்துகொண்டிருந்தனர்.


 

மெல்லிய காற்றில் மரத்தின் இலைகள் சலசலக்காது. ஆனால் லேசான அசைவுகளைக் காட்டும். அதே போல், அவர்களின் மூச்சுக் காற்று உள்வாங்கி, வெளியே விடும் மிகச்சிறிய அசைவைத் தவிர, வேறெந்த அசைவுமேயில்லை.


 

வேகமாய், சத்தமின்றி கதவைத் திறந்து உள்ளே போனார் டாக்டர். உடனே டாக்டர் ஈஸ்வர் பரபரப்புடன் கூறினார்,


 

"டாக்டர், நிஜம்மா ஏதோ "மிரகிள்'தான் நடந்துருக்கு. பேஷண்டுக்கு மூச்சுத் திணறல் இப்போ இல்லே. திணறல் கொஞ்சம் கொஞ்சமாய் குறைஞ்சுண்டே வந்து, இப்ப நார்மலாயிருக்கு. ப்ளட் சர்குலேஷனும் சரியாயிருக்கு. ஹார்ட்-பீட்டிங்கும் நார்மலாயிருக்கு. இரண்டு கால்களுலயும் இப்போ விரல்கள் லேசா அசைய ஆரம்பிச்சிருக்கு. உள்ளங்கால்ல நிதானமா சுரண்டினா, பாதம் வேகமா அசையுது. ரொம்ப ஆச்சரியமாயிருக்கு. வந்து பாருங்க.... வாங்க....''

வியப்பும், பரபரப்புமாக ஈஸ்வரன் பேஷண்டை டாக்டரிடம் காட்டப் பரபரத்தார். கைப் பிடித்து இழுக்காத குறைதான்.


 

உள்ளே நுழைந்தவர், படுத்திருந்தவனின் முகம் மிகத்தெளிவாக இருப்பதையும், உயிர் மூச்சு சீராக வருவதையும், உள்ளங்கால் விரலால் சுண்டினால் கால் சிர்த்து, விரல்கள் மடங்கி நிமிர்வதையும் பார்த்து அதிசயம் மட்டுமன்று, பரவசப்பட்டும் போனார். "காட் ஈஸ் கிரேட்'', கூறியது சீஃப் டாக்டர்தான். மளமளவென்று அவனுக்குச் செய்ய வேண்டிய சிகிச்சைகளை செய்ய ஆரம்பித்தார். சிகிச்சைகளைப் படுத்திருந்தவனின் சரீரம் நன்றாகவே ஏற்றுக் கொண்டது. டாக்டர்கள் போராடி, மனம் தளர்ந்து, தங்கள் நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்த நேரம், திடீரென

இப்படி ஒரு மாற்றம், திடீர் மாற்றம் அவர்களுக்குள் பெரிய ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்தியது. கால்களை நீக்க வேண்டும்; அப்போதுதான் உயிரையாவது காப்பற்றலாம் எனத் தீர்மானித்த டாக்டர்களுக்கு, நம்ப முடியாதபடியிருந்தாலும் கூடவே ஒரு மகிழ்ச்சியான உற்சாகத்துடன் சிகிச்சை செய்தார்கள். அதே மகிழ்வுடன் வெளியே வந்தார்கள்.


 

வெளியே இன்னும் அந்த மூவரும் அப்படியே அமர்ந்திருந்தனர். கௌதம் மனம் நெகிழ்ந்து, தீவிரமாய் அன்னையை வேண்டியபடி இருந்தான்.


 

டாக்டருக்கே வியப்பான வியப்பு. எளிதில் எந்தவிதமான சப்தங்களையும் ஏற்கும் சாதாரணமான மனிதர்களின் உணர்வுகள் உள்ளவரான இவர்கள் மட்டும் எப்படி இவ்விதம், சந்தடி நிறைந்த இந்த ஹாஸ்பிடல் தங்களுக்குள்ளேயே ஓர் அமைதியை ஆவாகனித்து, தியானத்தை விடாமல், எந்த அசைவுமின்றி செய்கின்றனர். அவர்களின் மன உறுதியை வெகுவாக மனதிற்கு உள்ளேயே புளகாங்கிதத்தோடு தீட்சண்யத்தோடு பார்த்தார்;

சந்தோஷத்தோடும்தான்.


 

டாக்டரின் உள்மனம் நிச்சயமான சத்தியத்தைக் கூறியது மட்டுமன்று; உணர்த்தியதும்கூட.


 

"நாம் இந்த வாலிபனின் உயிரைக் காப்பாற்ற மனப்பூர்வமான மனதோடு போராடினோம். அதற்கு பக்கபலமாய் நம்முடைய இந்த போராட்டத்திற்குக் கை கொடுத்து, நம் கரங்களுக்கும், செய்யும் சிகிச்சைக்கும் கூடவே வந்தது அந்த மூவரின் இடைவிடாத தியானம்தான். அந்த ஆழ்ந்த தியானத்தின், பூரணமான தியானத்தின், புனிதமான தியானத்தின் அலைகள் உணர்வுபூர்வமாக இருந்திருப்பதால்தான், அந்த அலைகள் நமக்கு மட்டுமன்று, இந்த வாலிபனுக்குள்ளும் புகுந்து உதவியிருக்கிறதுஎன்பது சத்தியம்தான்''.


 

"டாக்டர்.... என்ன சொல்றீங்க? என்னமோ சினிமாவுல நடக்கிறதைச் சொல்றதுபோலச் சொல்றீங்க? நீங்களா?... நீங்களா இப்டி சொல்றது?.....''


 

நர்ஸ் லாரா "படக்'கென கேட்டேவிட்டாள்.


 

"ஆமாம் லாரா. சில நிகழ்வுகள் மனித சக்தியை மீறிய தெய்வ சக்தியை ஏற்றுக்கொள்கிறது. ஆனால், அந்த நிகழ்வுகள் புரிவதில்லை. புரிய வாய்ப்பில்லாமல் போகிறது என்பதே நிஜம். இப்போது உன் கண் முன் நடந்திருக்கிறதே.... இதை நம்புவாயா, மாட்டாயா? நாம் அவன் கால்களுக்கு உணர்வு வருவது அசாத்தியம்என நினைத்தே, நம் வைத்திய மூளையை அதே வழியில் செலுத்தி, எப்படி, எதுவரை "ஆம்புடேட்' செய்யலாம் என்றுதானே யோசித்தோம். நாமும் இந்த இளைஞனுக்காக இரக்கப்பட்டு, நம் கடவுளை வேண்டினோம்தான். ஆனால், அந்த வேண்டுதல் முழு பக்தியும், முழு உணர்ச்சிகளும், முழு மனமும் ஈடுபட்டா செய்தோம்? இல்லையே. எல்லா பேஷண்டுகளுக்கும் சிகிச்சையை முறையாக, கவனமாக, எள்ளளவும்

தவறக்கூடாது என்கிற உணர்வுகளோடு, எந்த ஒரு பேஷண்டுக்கும் ஆண்டவனை வேண்டித்தான் சிகிச்சையை நம் படிப்பின் அறிவைக் கொண்டு, மனதார அந்த பேஷண்ட் பிழைக்க வேண்டுமென்றே போராடுகிறோம்; ஜெயிக்கிறோம்தான். ஆனால், இந்த இளைஞனைப் போல இருக்கிறவனுக்கு நம் அறிவியல் கூறியது, "கால்களை நீக்க; அப்போதுதான் அவன் பிழைக்கலாம்'. அது நம்வரை மிகச் சரிதானே? கொஞ்சம்கூட தவறேயில்லையே. அப்படியிருக்க, அந்தக் கால்களில் உணர்வுகள் வந்தது எப்படி? எவ்விதம்? ஈஸ்வர், நிஜத்துல இந்த பேஷண்ட் கொடுத்து வச்சவன். வெளியே உக்காந்திருக்காங்களே, அவங்களோட "தவம்' நம்ம படிப்புக்கும், அனுபவத்திற்கும் கொடுத்த ஆச்சரியமான, அதிசயமான சாட்டையடி; கூடவே பக்கபலமும்கூட. ஏனென்றால் நமக்குச் சாதகமாகத்தானே இந்த ட்ரீட்மெண்ட் அமைஞ்சு போச்சு. ஈஸ்வர், நம்முடைய சிகிச்சை கால் பங்குன்னா, பகவானின் பங்கு முக்கால் பங்கு. நாம, நமக்கு நல்ல பேரு வரணும்கற சுயநலத்துலதான் பகவானை வேண்டி சிகிச்சையை ஆரம்பிக்கிறோம். நம் அறிவுக்குத் தெரிந்த அளவு, எந்த பேஷண்டையுமே

பிழைக்கவைக்க வேண்டுமென்கிற தீர்க்கமான எண்ணத்தோடதான் செய்கிறோம்கறது உண்மைதான். அதுல, இப்போ இந்த பேஷண்ட்டுக்கு, எப்பேர்ப்பட்ட தெய்வ பலம் கிடைச்சிருக்கு! அவனும் சேதாரமில்லாம பொழைச்சுட்டான். நமக்கும் நல்ல பேரை வாங்கிக் கொடுத்துட்டான். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா, இட் ஈஸ் ட்ரூ ஈஸ்வர். எனக்கு ரொம்பவே சந்தோஷமா உணர்றேன். உனக்கும் அப்படித்தானே? லாரா, நீ என்ன சொல்றே?''


 

லாராவும், ஈஸ்வரனும் கண்கள் பனிக்க, கைகூப்பினர். வார்த்தைகள் வரவில்லை. டாக்டர் இப்படிப் பேசி அவர்கள் பார்த்தது இல்லை. ஓர் அழகான, சந்தோஷமான சூழ்நிலை ரம்யமாகச் சூழ்ந்தது.


 

மேற்கொண்டு செய்ய வேண்டியதை லாராவிடமும், நர்ஸிடமும் கூறிவிட்டு, ஆச்சரியமும், அதே சமயம் நிம்மதியுமாக, சிரித்த முகத்துடன் வெளியேவர, தள்ளு கதவைத் திறந்தபோது, கதவின் அருகில் மூன்று பேரும் கூப்பிய கரங்களுடன் டாக்டரைப் பார்த்தனர்.


 

"டாக்டர், முன்னேற்றம் இருக்குதானே. இப்போது விழிப்பு வந்துடுத்தா? இல்லே..... மயக்கத்திலிருக்கான? நல்லாயிடுவாங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு. கூடவே கெட்டிக்கார டாக்டர்களான உங்க சிகிச்சையிருக்கு. இப்ப எப்படியிருக்கான்? தைர்யமா சொல்லுங்க....''


 

மிகமிக நம்பிக்கையுடன், தைர்யத்துடன், பிரகாசமான முகத்துடன் கேட்கும் அந்த மூதாட்டியின் கரங்களைப் பரவசத்தோடு பற்றினார் டாக்டர்.


 

"அம்மா, நீங்க ஜெயிச்சுட்டீங்க. ஆமாம், நீங்கதான் ஜெயிச்சீங்க. ஏன்னா..... எங்களுக்கு உதவினது உங்களோட பிரார்த்தனையும், மெடிடேஷனும்தான். அதுதான் பக்கபலமாக எங்களோட சிகிச்சைக்குக் கூடவே தொடர்ந்து, தொடர்பு விடாமல் இருந்தது. எங்கள் கரங்களையும், எங்கள் வைத்திய அறிவையும் இயக்கினது பூராவுமே உங்க மூணு பேரோட உண்மையான பக்தியும், நம்பிக்கையும் தான். எனி ஹௌ..... எங்களுக்கும் ரொம்ப சந்தோஷம். உங்களுக்கும் மகிழ்ச்சியான உணர்வு..... சரிதானேம்மா....''


 

டாக்டரின் நெகிழ்வான, பரவசமான பேச்சு மூவரையுமே இதயம் நிரம்ப புன்சிரிக்க வைத்தது.


 

"தெய்வம் மனுஷ்ய ரூபேனா-ன்னு சொல்வாங்க. டாக்டர், அது நிஜந்தான். இதோ, இப்ப எங்க முன்னாடி சிரிச்ச முகத்தோட, என் பையனைக் காப்பாத்தினதைப் பற்றிச் சொல்றீங்களே.... மனசுக்குள்ள பூ மழையையே அன்னை கொட்டறதுபோல இருக்கு. ரொம்ப சந்தோஷம்.... "நன்றி'ன்னு சொல்லிடறது சுலபம். ஆனா, உங்க எல்லாருடைய குடும்பமும், நீங்களும் நல்....லாயிருக்கணும்னு அன்னை-ஸ்ரீ அரவிந்தரைத் தவறாம வேண்டிப்பேன். நிச்சயமா.... நீங்க எப்ப சொல்றீங்களோ அப்ப என் பையனைப் பார்த்தா போதும். உங்களைத் தொந்தரவு செய்யமாட்டேன்....''


 

பேசும் அந்த மூதாட்டியையே வியப்போடு பார்த்தார்கள் டாக்டர்களும், நர்சுகளும்.


 

எப்படி இப்படி ஒரு நிதானமும், தீர்க்கமான நம்பிக்கையும், எதற்கும் அசையாத தியானமும், பேச்சுக்களில் மரியாதையும், குறையே சொல்லாத, படபடக்காத, அவசரப்படாத போக்கும்.....


 

இப்படியும் ஒரு மூதாட்டியிருப்பது அவர்களின் நிஜ வாழ்வில் சந்திப்பது மிக அபூர்வம்; சந்தித்துவிட்டார்களே!


 

அப்போதுதான் லதா அங்கு வந்தாள் வேகமாக.


 

எல்லாருமாய்க் கூடி நிற்பதைப் பார்த்து, நடக்கக்கூடாதது நடந்தே விட்டது என்கிற எண்ணத்தில் பெரியதாகக் கூக்குரலிட்டு அழுதபடியும், மாமனார், மாமியாரைக் கோபத்தோடு திட்டியும், ஒரு பேயாட்டம் ஆடியபோது, டாக்டர் ஈஸ்வரன் அவளை நர்ஸை விட்டுக் கூட்டிக்கொண்டு போகும்படி உத்தரவிட்டார்.


 

"இதோ பாரும்மா, இது ஹாஸ்பிடல். இங்கே ஆர்ப்பாட்டம் பண்ணக்கூடாது. உங்க கணவருக்கு ஒண்ணும் ஆகலே; நல்லாத்தான் இருக்கார். இன்னும் சொல்லணும்னா.... அவருக்கு எந்தவிதமான குறைபாடுமில்லாம, முழுசாவே உங்களுக்குக் கிடைச்சுட்டார். எங்க வைத்தியதுக்கு உதவுனதுகூட, இந்த வயசானவங்களோட பிரார்த்தனைதான். அதை மனசுல ஏத்துக்குங்க, ப்ளீஸ்.... எனி ஹௌ... உங்க கணவருக்குக் காலை எடுக்க வேண்டிய அவசியமே

இல்லே.... முழுசா உங்களுக்குக் கிடைச்சுட்டார், புரிஞ்சுதா?....''


 

நர்ஸ் கூறியதை வியப்போடு கேட்டவளின் முகம், சந்தோஷத்திற்குப் பதில் சுருங்கியது. நர்ஸ் உள்ளே போயாயிற்று.


 

அரவிந்தன், பாகீரதி, நாகராஜனுடன் லதாவினருகில் வந்தான்.


 

"நீங்களும் இதுவரை ஆதங்கத்துல எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டீங்க. வாங்க, எல்லாருமா டிபன் சாப்டு வரலாம். வாங்கம்மா....'' கௌதம் கூறினான். லதாவிற்கு நல்ல பசி. வாய் மூடியபடி தலை ஆட்டினாள். ஆனால் மனதிற்குள் ஒரு ஏமாற்றம்.


 

"சே..... அவரை வச்சுப் பணம் பண்ணலாம்; நல்லா அழுது, அமர்க்களம் பண்ணி, பெரிய "அமௌண்ட்' பார்க்கலாம்னு நினைச்சேனே..... எல்லாமே போச்சே....''


 

இப்படியும் சில பிறவிகள் இருக்கத்தானே செய்கிறார்கள்.


 

எல்லாரும் டிபன் சாப்பிட்டாயிற்று. லதா, தன் வயிறு கொள்ளும் அளவிற்கு சாப்பிட்டாள். திடீரென கணவரின் உடல்நிலையில் ஏதாவது மாறுதல் ஏற்பட்டு, அசம்பாவிதம் ஏற்பட்டு, "ஸாரி' என டாக்டர்கள் கூறிவிட்டால்.... இது, அவ்வப்போது நடக்கிறதுதானே?.... அதனால் நன்றாகவே பசியாறினாள்.


 

"பாவம், எத்தனை நேரமா பட்டினி கிடந்து, கணவனுக்காக அல்லாடிண்டிருந்தா.... இப்ப, டாக்டர் சொன்ன நல்ல சேதிதான் அவளுக்குள் பசியைத் தூண்டியிருக்கு... பாவம் லதா, அவளோட உணர்வுகளே இப்பத்தான் பசியை அறிஞ்சிருக்கு.... சாப்பிடட்டும், பாவம்....'', பாகீரதியின் அனுதாப உணர்வு மனசுக்குள் பேசியது.


 

லதா நன்றாகச் சாப்பிட்டு, திருப்தியுடன் எழுந்தாள். அரவிந்தனிடம் நன்றியும் கூறினாள். காரணமில்லாமலா கூறுவாள்? அதையும் அவர்கள் சந்தோஷத்தோடு பார்த்தார்கள். மனதிலும் அவளுக்காக வேண்டினார்கள். கௌதமிடமும் நன்றி கூறி, சிரித்த முகத்தோடு பேசினாள். ஆனால், அதில் பொய்மை கலந்திருப்பது கௌதமுக்குப் புரிந்தது மட்டுமன்று, ஜாக்கிரதையாக யோசித்தான்.


 

"அன்னையே..... அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இனிமேலும் சங்கடத்தைத் தாராமல், சந்தோஷத்தையே அனுபவிக்க உன் பாத சரணங்களைப் பற்றி வேண்டுகிறேன்.... அம்மா....'' கௌதமின் மனம் வேண்டியது. கூடவே சீனு, லதா இருவரின் மனமாற்றத்திற்காகவும் கௌதமின் மனம் அன்னையை வேண்டி துணைக்கழைத்தது, சதாசர்வ காலமும்.


 

லதா, அரவிந்தனிடம் வீட்டுச் செலவிற்கென பத்தாயிரம் பெற்றுக் கொண்டாள். அவனும் மனமுவந்து தந்தான். இது யாருக்கும் தெரியாது. அரவிந்தனின் பெரும்போக்கு, இதை யாரிடமும் கூற வேண்டுமென்றே தோன்றவில்லை.


 

லதா வீட்டிற்குப் போய் குளித்து, உடை மாற்றி வருவதாகக் கூறிச் சென்றாள். ஆட்டோவைத் தவிர்த்து பஸ்ஸிலேயே போனாள். அருகில் அமர்ந்தவளிடம் இவள் பேசாவிட்டாலும், அவள் வாய் மூடாமல் பேசியபடியே வர, ஜன்னல் பக்கமாகத் திரும்பிப் பார்த்தவாறு வந்தாள். தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கி, வீட்டை நோக்கி நடந்தாள் லதா.


 

கலைந்த தலையும், கசங்கிய புடவையும், கழுவாத முகமுமாக, பார்க்கவே பரிதாபமாக வந்து, பூட்டைத் திறந்த லதாவை, அத்தனையையும் மறந்து சுலோசனா மீண்டும் அவளருகில் வந்தாள்.


 

"லதா, எப்படியிருக்கிறார்மா? முகமே வாடியிருக்கே.... டாக்டர் என்ன சொன்னார்?... இதோ பாரு... நீ ஒண்ணும் சாப்டிருக்கமாட்டே.... கொஞ்ச நேரத்துல சூடா இட்லிசுட்டுக் கொண்டு வரேன். வயிறார சாப்டு. மனசத் தளரவிடாதே லதா. நிச்சயமா உன் வீட்டுக்காரருக்கு ஒண்ணும் ஆபத்து வாராது. தைர்யமாயிரும்மா..... இரு இட்லிகொண்டு வரேன்....'' சொல்லி

விட்டுப் போன சுலோசனாவை நினைத்து, மனதிற்கு உள்ளேயே சிரித்த லதா, தன் ஹேண்ட் பேக்கை படுக்கையறைக்குள் கொண்டு போய் வைத்தாள்.


 

சுலோசனா கொண்டு வந்த இட்லியை மறுத்து, அழுதாள் லதா.

இட்லியை அங்கேயே வைத்துவிட்டுப் போய்விட்டாள் சுலோசனா.


 

வாசற்கதவைச் சாத்தியபின் ஹேண்ட்பேக்கை எடுத்து, பணத்தை ஜாக்கிரதையாகப் பத்திரப்படுத்தலாம்என்று ஹேண்ட்பேக்கை திறந்தவளுக்கு "' என்று வாயைத் திறந்து, திக்பிரமையடையத்தான் முடிந்தது. கண்கள் குத்திட்டு நின்றது. மனம் பொங்கியதில், கண்களும் பொங்க ஆரம்பித்தன. மனசு "போச்சே.... அவ்வளவும் போச்சே' என்று துடித்துத் துடித்து, படுக்கையில் புரண்டு, புரண்டு அழுதாள்.


 

கைப்பையின் (ஹேண்ட்பேக்) ஒரு பக்கம் பிளேடால் நீண்ட ஒரு கோடாகக் கிழிக்கப்பட்டிருந்தது. ரூபாய் பத்தாயிரமும் காணாமல் மாயமாகியிருந்தது. அழுதழுது கண்கள் சுரந்து வீங்கியது. "எப்படி? எப்படி?' என யோசித்ததில், அருகில் அமர்ந்திருந்தவளின் அனாவசிய பேச்சும், சிரிப்பும் இப்போது புரிந்தன. கூடவே தன் குற்றவுணர்வும் மெல்ல தலைநீட்டி அவளைக் குத்திக்காட்டியது; மண்புழுவாய் மனதைக் குடைந்தது. அந்தக் குடைச்சல் கொஞ்ச கொஞ்சமாய் அதிகமாகி அவளை அலைக்கழித்தது.


 

மனதுஎன்பது ஒரு குப்பைக்கூடை. அதை அவ்வப்போது சுத்தம் செய்து தூய்மையாக வைத்துக்கொள்வது நம் கடமை. ஆனால், நாம் கடமையை மறந்து, மடமையாகத்தான் நடக்கிறோம். அது, மனித மனதின் இயல்பு; அசட்டை; அலட்சியம்.


 

நம் சரீரத்திற்கு வாசனையான சோப்பு தேய்த்துக் குளிக்கிறோம். தலைமுடிக்கும் வாரந்தோறும் எண்ணைக்குளியல், நறுமண ஷாம்பூ என பராமரிக்கிறோம். கண்களுக்கு மையிட்டு, புருவத்தைச் சீராக்கி, நெற்றியில் விதவிதமான பொட்டுகள் உடைக்கு "மேட்சாக' வைத்துக் கொள்கிறோம். மற்றவர் நம்மை ஒரு முறை மீண்டும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு அழகான உடைகளை நம் நிறத்துக்கும், உயரத்துக்கும் ஏற்றவாறு, பல மணி நேரம் செலவழித்துத் தேர்ந்தெடுத்து, அழகுற உடுத்தி, திருப்தியான பின்பே புறப்படுகிறோம். அது மட்டுமன்று, இன்னும் நம்மைச் சுற்றி ஒரு நறுமணம் வீச, வாசனை திரவியங்களை நம் மேல் தெளித்துக்கொண்டு, ஒரு ரம்யமான சூழ்நிலையை உருவாக்குகிறோம்.


 

"இது தவறா?' இந்தக் கேள்வி உடனடியாக உங்களிடமிருந்து எழும். யார் சொன்னது தவறு என்று? தவறே அன்று, எதுவும் மிதமாக இருந்தால். "சரி... இப்போது எதற்கு இந்தப் பேச்சு, தேவையில்லாமல்' எனக் கேட்கிறீர்களா? தேவைதான்.... மிக அவசியமாகத் தேவைதான். இத்தனையையும் நாம் செய்வது நம் சரீரத்திற்கு வெளியேதான். ஆனால், சரீரத்திற்கு உள்ளே, வெளியே யாருக்கும் தெரியாமல், நம் எண்ணங்களையும், பொறாமை, பொச்சரிப்புக்களையும், கோபதாபங்களையும், கசப்பு கலந்த காழ்ப்புணர்ச்சிகளையும், அகங்காரங்களையும் அடக்கி, அழுத்தி மூடி வைத்து, அதை வெளியே விடாமல் திணறுகிறதே அந்த "மனசு' என்கிற இதயம்... அதை என்றாவது, ஒரு வேளையாவது, விடுங்கள்.... ஒரு சில நிமிடங்களுக்காவது நன்கு துடைத்து, அதிலுள்ள கசடுகளை வெளியேற்றி, தூய்மையாக வைத்து இருக்கிறோமா? யோசியுங்கள்.... எண்ணிப்பாருங்கள்.... உங்களுக்கு உள்ளேயே நீங்கள் பிரவேசித்துப் பயணம் செய்யுங்கள். எங்கெங்கு அடைப்பிருக்கிறது, எந்த இடத்தில் தூசு ஒட்டிக்கொண்டிருக்கிறது,

எந்த இடம் ஓட்டை விழுந்து இருக்கிறது, எல்லாவற்றையும் நமக்கு நாமே தினந்தோறும் யோசித்து, ஒவ்வொன்றாக முடிந்தளவு, போராடி, களையெடுக்கலாமே. அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றலாமே. ஒரே நாளிலேயே களையெடுக்க முடியாதுதான். தினந்தோறும் ஒரு நேரம் குறித்து, அந்த நேரத்தில் இந்தக் களையெடுக்கும் வேலையை நாம் செய்ய வேண்டியது மிகமிக அவசியம்தானே.


 

"சரி, எப்படி எடுப்பது? எவ்விதம் களைவது?' இந்த யோசனையோ, சந்தேகமோ நம்மிடம் வரலாமா? கூடவே கூடாது. "இதோ, எனக்குப் புரிந்துவிட்டது. நான் இன்றிருந்தே என்னிடமுள்ள வேண்டாதவைகளைக் களையெடுக்க முயலப்போகிறேன்' என்று தைரியமாகக் கூறுங்கள். காரணம் நம்மை எல்லாவிதத்திலும் "பதப்படுத்த' அன்னை என்கிற மிகப்பெரிய வழிகாட்டி நம்மை அரவணைத்து, நாம் செய்யும் எல்லா நல்ல முயற்சிகளுக்கும் கூடவிருந்து, மிகப்பெரிய துணையாக மட்டுமன்று, தூணாகவும் வருவார். இதில் எள்ளு மூக்களவுகூட சந்தேகமே வேண்டாம்.


 

அப்படி ஒரு மாபெரும் சக்தி, மஹாசக்தி நமக்குக் கூடவே வரத் தயாராகயிருக்கும் போது, நமக்குத் தயக்கம் வரலாமா? தேவையா? படியுங்கள். அன்னை-ஸ்ரீ அரவிந்தர், இந்த இருவரைப் பற்றிப் புத்தகங்கள் மூலமாகவே அறிய முடியுமே. "இல்லை, எனக்குப் புரியவில்லை' என்கிறீர்களா, பரவாயில்லை. ஒவ்வொரு தியான மையத்திலும் நடக்கும் அன்னையைப் பற்றிய பிரசங்கங்களைக் கேட்டுத் தெளிவடையலாமே. சரி, அப்போதும் சில சந்தேகங்கள். அது தெளிவு பெற வேண்டுமா? ம்.... அதற்கும் அன்னை தியான மையத்தில் எப்போதும் இருக்கிறார்களே அன்பர்கள்.... அவர்களிடமே கேட்டு, எந்தச் சந்தேகமானாலும் தயக்கமின்றிக் கேட்டு திருப்தி அடையலாம். மனம் நிறைவடையும்.


 

பணம், பணம், பணம், இது ஒன்றேதான் வாழ்க்கையில் நமக்கு மிக அவசியமாக வேண்டிய "பொருள்' என, ஆவலாதியுடன் பரபரப்புடன் தேடுவார்கள். அதன் பின் ஓடுவார்கள்.


 

பணம்.... மிக மிக அவசியந்தான். உயிருள்ளவரை ஆடைஎன்பது ஒரு மனிதனுக்கு எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் பணமும்தான். இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அந்தப் பணம் ஒருவருக்கு அதிகமாகவும், மற்றொருவருக்கு மிகமிக அதிகமாகவும், பிறிதொருவருக்குச் சாதாரணமாகவும், அடுத்தவருக்குக் கொஞ்சமே கொஞ்சமாகவும் அமைந்திருப்பது உலகத்திலுள்ள அனைவருக்கும் பொதுவான ஒன்று. இதில் மாறுதலேயிருக்காதா? மாற முடியுமா? ஏழை, பணக்காரன் ஆக முடியுமா? சௌகரியங்களை அடைய முடியுமா? தேவையானவைகளை நிச்சயமாய் அடைய முடியுமா?


 

இந்தச் சந்தேகங்கள் தீர வேண்டுமா? நிச்சயம் அன்னையைச் சரணடையுங்கள். சரணடைந்தால் மட்டும் போதுமா? போதாது. அன்னை கூறும் கோட்பாடுகளை ஒவ்வொன்றாய் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை நமக்குள் முயற்சியுடன் கொண்டுவர வேண்டும். நிச்சயமாக அந்த மனப்பக்குவம் நமக்கு இருந்தால், வாழ்க்கையின் தரமான உயர்வுக்கு ஒவ்வோர் அடியாக எடுத்து வைத்து, ஒவ்வொரு படியாக ஏறி, உன்னதத்தையடையலாம்என்பது நமக்கு நாமே கண்கூடு.


 

இதையேதும் அறியாத, வெறும் வரட்டு ஜம்பமும், கோபமும், ஆத்திரமும், பெரியவர்களை மதிக்கத் தெரியாத மேம்போக்கும் உடைய லதாவின் மனதிற்கும், யோசனைக்கும் முதல் அடியாக, அவள் யாருக்கும் தெரியாமல் அரவிந்தனிடம் வாங்கிய ரூபாய் பத்தாயிரமும் அவள் அறியாமலேயே சூறையாடப்பட்டது குறித்து அவள் மனதில் ஒரு சின்ன "சலனம்' என்கிற அசைவை ஏற்படுத்தியது.


 

முதன்முதலாய் எழுந்த இந்தச் சலனம், அவளை அவ்வப்போது சீண்டி வேடிக்கைப் பார்த்தது. "நீ ஏமாற்றி ஒருவனிடமிருந்து பணம் பறித்தாயே... இப்போது அது எப்படிப் பறிபோயிற்று பார்த்தாயா' என்று எள்ளிநகையாடிற்று. அவளால் தூங்கவே முடியவில்லை. முடியவில்லை

என்பதைவிட, அந்தப் பறிபோன பணம் அவளைத் தூங்கவிடவில்லை என்பதே உண்மை.


 

டேபிளின் மேலிருந்த இட்லிகளும் அவளைப் பார்த்து கைகொட்டி

சிரித்தன. இரவு ஆகியும் அவளுக்குப் பசி காணாமல் போனது. சுலோசனா ஆதங்கத்துடனும், அனுதாபத்துடனும் சூடாகத் தந்த இட்லிகள் இப்போது ஆறி, அவள் பசியைத் தூண்டாமல், வெறித்துப் பார்க்க வைத்தது.


 

"அநியாயமாய் பத்தாயிரம் ரூபாயும் போயிற்றே' என்கிற ஆதங்கத்தில், மனதில் மாமனார், மாமியாரைப் பற்றிய பொறாமை உணர்வு எழுந்தது. தன்னந்தனியளாய் வீடு முழுக்க அலைந்தாள் வெறியோடு.


 

"வீட்டை விட்டு விரட்டினாலும், சௌகர்யமாக வாழ இடம் அவர்களுக்குக் கிடைத்துவிட்டதே.... எத்தனை அருமையான வீடு, வாசல், வசதி..... "அம்மா, அப்பா' என்று பரிவோடு அழைக்கின்ற மகன் போன்ற கௌதம்.... எப்படி இப்படி ஒரு கொடுப்பினை? ஆனால் எனக்கு? கையில் கிடைத்த பணம் இப்படியா "யானை வாய் சோளப் பொறி'யாகணும்?.... ஏன்?.... ஏன்?... ஏன்?... நான் செய்தது தவறா? பணம் தேவை; கேட்டேன்; தந்தார். இதுல என்ன தப்பு? புரியலையே.... ஆனா, ஒண்ணு மட்டும் நல்லாவே புரியறது.... அவங்ககிட்டல்லாம்.... என்னமோ மாய, மந்திரம் இருக்குன்னு தோண்றது. ஆமாம், நிச்சயமா, கண்டிப்பாயிருக்கு. இல்லேன்னா, மூணு பேருமா... காட்டுல

உக்காந்து தவம் செய்யிற சந்நியாசிகள் மாதிரின்னா உக்காந்து இருந்தா? இதுல என்னமோ மர்மம் கண்டிப்பாயிருக்கு; தெரிஞ்சுக்கணும்; தெரிஞ்சுக்கறேன்; தெரிஞ்சு, நானும் அப்படியே நடந்துக்கறேன்... ம்....'


 

கோவத்திலும் லதாவின் அதரத்திருந்து அவள் அறியாமலேயே

நழுவிய வார்த்தைகள் எத்தனை உன்னதமானது என்பது அவளுக்கே தெரியாதே. மறுநாள் ஆஸ்பத்திரிக்கு சுரத்தேயில்லாமல் வந்தாள் லதா.


 

பாகீரதி, நாகராஜன், அரவிந்தன், கௌதம், நான்கு பேருமே குளித்து, பளிச்சென உடையுடுத்தி, சீனு இருந்த அறையின் முன்பு ஆளுக்கொரு "அன்னை-ஸ்ரீ அரவிந்தர்' பற்றிய புத்தகத்தை அமைதியாய் படித்துக்கொண்டிருந்தார்கள்.


 

அப்படியே அவர்களை விழித்துப் பார்த்தபடியே நின்றாள் லதா. "பரம்பொருள்' என்னும் புஸ்தகத்தை பாகீரதி படித்தபடியிருந்தாள்.


 

"நாம் தேடுவது சுமுகம். எல்லாவற்றையும் சேர்ப்பது சுமுகத்திற்கு உரிய நல்ல அஸ்திவாரம். சுமுகத்திற்கு நல்லது மட்டுமே அஸ்திவாரமாக முடியும்.....''


 

அருகில் நிழல் யாரோ நிற்பது போல் தோன்ற, சட்டென தலையைத் தூக்கிப் பார்த்தாள் பாகீரதி.


 

லதாதான் நின்றது. முகம் வெளிறிப்போய், பார்க்கவே பரிதாபமாக நின்றாள் லதா.


 

சட்டென, பரம்பொருளைப் படித்த வரிகள் பொட்டிலடித்தாற்போல் உறைக்க, "சுமுகத்திற்கு நல்லது மட்டுமே அஸ்திவாரமாக முடியும்'' என்ற வரி அவளை எழச்செய்தது. புத்தகத்தை மூடினாள். அன்னை-ஸ்ரீ அரவிந்தரை பக்தியோடு நினைத்தாள். அப்படியே சட்டென லதாவைத் தன்னோடு அணைத்துக்கொண்டாள் பாகீரதி. அவ்வளவே, லதாவுக்குள் என்ன ஆயிற்று என்பதே புரியாமல், பெரியதாய் கேவிக் கேவி, பாகீரதியைக் கெட்டியாக அணைத்தபடி கதறவே ஆரம்பித்துவிட்டாள்.


 

பாகீரதி, லதாவின் முதுகைத் தடவியபடி பலவிதமாய் ஆறுதல் கூறினாள். முதுகைத் தடவிக் கொடுத்தாள். அவளுடைய கண்களிலும் நீர் திரண்டது. ஆனாலும் வாய், லதாவை சமாதானப் படுத்துவதை நிறுத்தவேயில்லை.


 

சடாரென லதா விலகினாள். யாருமே எதிர்பாராவண்ணம், (அவளுக்கே தெரியாதபடிதான் இருந்திருக்குமோ?) பாகீரதியின் கால்களைப் பற்றிக்கொண்டாள். கண்ணீர் பெருக்கெடுத்தது. சரீரமே அந்த அழுகையில் அதிர்ந்து குலுங்கியது. பிரார்த்தனை சிறப்பானால் தியானத்தில் முடியும். தியானம் சிறப்பானால் செய்யாத பிரார்த்தனையும் பக்கும்.


 

எத்தனை உண்மையான, சத்தியமான, அனுபவபூர்வமான வரிகள். அன்னையைத் தவிர வேறு யாரால் இப்படிக் கூற முடியும்? அது மட்டுமன்று, அன்னை பக்தர்களைத் தவிர யாரால் அதை ஏற்று நடக்க முடியும்?


 

எந்த ஒரு பிரார்த்தனையும் சரி, தியானமும் சரி, நாம் செய்யும் நேரத்திற்குரிய பலன் கிடைப்பது அரிது. காரணம், பிரார்த்தனையின்போதும், தியானத்தின்போதும் அலைபாயும் நம் மனமேதான். "நெடுநேரம் உட்கார்ந்து தியானம் செய்தேனே' என்று நினைப்பது சரியா? தியானம் செய்ய உட்காருவது வேறு; மனம் ஒன்றி, இதயத்தில் அன்னையை நிறுத்தி, ஐந்தே நிமிடங்கள் நம்மை பரிபூர்ணமாய் சரணடைய வைத்தோமானால், அன்னையின் பாதாரவிந்தங்களைப் பற்றிக்கொண்டோமானாலே போதுமே; அன்னையின் கடாட்சம் நம் மீது கண்டிப்பாய், நிச்சயமாய் விழும் என்பது உறுதி.


 

அன்றாட வாழ்க்கையின் ஓட்டத்தில் நமக்கு ஏற்படும் எத்தனையோ தடைகளைத் தாண்டித்தான் நம் பிரார்த்தனை அன்னையிடம் சரணடைகிறது. அந்தப் பிரார்த்தனையை நாம் நம் சரீரம் பூராவுமே அன்னையைத் தவிர வேறு எதைப் பற்றியும் நினைக்காமல், அன்னையுடனேயே ஒன்றிப்போகுமளவிற்கு மிகச்சிறிய நேரத்தில் செய்தாலே போதும். மணிக்கணக்கில் உட்கார்ந்து, கிளைகிளைகளாக நம் தொந்திரவுகள் பிரிந்து, பிரிந்து நமக்குள்ளே ஒரு சச்சரவையும், நிம்மதியில்லாமலும் செய்து, நம் தியானத்திற்கு எந்தவித அர்த்தமும் இல்லாமல் செய்து, பிரயோஜனமற்று, இத்தனை நேரம் நான் தியானம் செய்தேன் என்கிற வீண்பெருமை நமக்குத் தேவையில்லை. அன்னையும் அப்படிக் கூறவில்லை.


 

முதல் நம் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளைக் குறைத்தாலே போதுமே. பிரச்சனைகள் இல்லாத குடும்பம் ஏது? அந்தப் பிரச்சனைகளுக்காகத்தானே "எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என அலைகிறோம். அந்த அலைச்சல் வீண் என்பதை அறிய முடியாத அளவிற்கு நாம் மூடர்களாகயிருப்பதுதானே உண்மை.


 

நீர் நிரம்பிய குடத்தை குழாயடியிருந்து தூக்கி இடுப்பில் வைக்கும்போது, நம்மையுமறியாமலேயே நம் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தை என்ன? யோசியுங்கள். "ம்மா...' என்று கீழுதட்டை மேலுதட்டால் கவ்வியபடி கூறுவது "அம்மா' எனும் வார்த்தைதான். வேலையை ஒரே மூச்சில் செய்து முடித்து, உட்காரும்போதும் "அம்மா...டி' என்று நிச்சிந்தையாய் உட்காருகிறோம். எதற்குமே நம்மை அறியாமல் வரும் வார்த்தை "அம்மா'தான். அப்படியிருக்க, நம் கஷ்டங்களைத் தீர்க்க, "அன்னை' தயாராகயிருக்கும்போது, அவர் சொல்லும் ஓரிரு கோட்பாடுகளையாவது நாம் முழுமையாக ஏற்று,

சத்தியத்துடன் அதன்படி நடந்தால்.... ம்.... நடந்தால்? அதனால் ஏற்படும் நல்ல விளைவுகள் "அபரிமிதம்' என்பதை நாமே உணரலாம்.


 

பாகீரதியும், நாகராஜனும், கௌதம் வீட்டிற்கு வந்தபின்னரே அன்னை-ஸ்ரீ அரவிந்தரைப் பற்றி அறிந்தார்கள்; புத்தகங்களைப் படித்தார்கள்; தியான மையத்திற்குச் சென்று, கலந்துரையாடல் கலந்துகொண்டு, சந்தேகங்களற்றுத் தெளிந்தார்கள். பெற்ற மகன், மருமகளுக்கு மட்டுமின்றி, பெறாத மகன் கௌதமிற்காகவும் பிரார்த்தித்தார்கள். மனதைத் தெளிவுடன் வைத்திருந்தார்கள்.


 

மகன், மருமகள் திருந்த வேண்டுமென்ற ஒரே எண்ணம் தவிர, மற்ற எந்தவிதமான பேராசையோ, பணம்-காசோ, அவர்கள் எதிர்பார்க்கவில்லை.


 

பணம் தேவைதான். அதுவும், இன்றைய காலகட்டத்தில் பணம் என்பது மிக அவசியமானதுதான். ஆனால், அதற்காகப் பணத்தையே முதன்மையாக வைத்து எல்லாவற்றையும் (மனிதர்கள் உட்பட) தீர்மானிப்பதுஎன்பது தவறுதானே.


 

லதாவின் மனதுள் "பணம்' என்னும் மூன்றெழுத்துத்தான் "அச்சாரம்' பெற்று, ஆணவமாய் உட்கார்ந்திருந்தது; இது ஒரு விஷயம். மற்றொன்று, கணவனைப் பெற்றவர்களைப் பாரமாக நினைத்து, அவர்களைத் துன்புறுத்துவது. அதுவும், முதல் கணவனைத் தன்வசப்படுத்தியபின், அவனோடு சேர்ந்து பெற்றவர்களை அலட்சியப் படுத்துவது; வெறுப்புடன் நடந்துகொள்வது.


 

இது போன்ற "லதா'க்கள் இப்போது மிக அதிகம். "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்னும் பழமொழி இப்போது அரதப்பழையதாக மாறி, தேய்ந்து, காணாமலே போய்விட்டது. ஏதோ அங்கொன்றும், இங்கொன்றுமாக "தொட்டுக்க, துடைச்சுக்க' என்பது போல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. "பெரியவர்கள்' என்பதே வீட்டில்லாததால், எல்லாவிதமான ஆலோசனையும் அவரவர்களே செய்து, நடத்தும் வாழ்க்கையில் வெற்றிகள் என்பதைவிட, அரைகுறை நிம்மதியுடன், போராட்டத்துடன்தான் நடக்கிறது என்பதே நிதரிசனம். அது போன்ற வாழ்க்கைதான் லதாவிற்கும்.


 

கோபம், ஆத்திரம், அசூயை, ஆங்காரம், பொறாமை, பொச்சரிப்பு,


 

இந்த ஆறும் இப்போது நிறையவே பரவியிருக்கிறது. அதுவும் சில

பெண்களிடம் சற்று அதிகமாகவேயிருக்கிறது. அதில் லதாவும் ஒருத்தி.


 

எதற்குமே ஒரு முடிவு என்பது உண்டுதானே. அதேதான் லதாவின் வாழ்க்கையிலும் மெல்ல நுழைந்தது.


 

கொஞ்சம் மெல்ல ஆலோசிப்போமா......


 

மாமியார், மாமனாரை வீட்டை விட்டு அனுப்பியாயிற்று. அதனால் ஏற்பட்ட "நிம்மதியான வாழ்க்கை' என்பது நிலைத்து நின்றதா?


 

வழியில் பார்த்த மாமியாரை விரட்டி சண்டை போடுவானேன்? அதுவும் தேவையில்லாத ஒன்றுதானே.... ஏன்? ஏன் அப்படி நடக்க வேண்டும்?


 

கணவனை விட்டு, அவர்கள் தங்கியிருந்த வீட்டில் போய் சண்டை போட்டது தேவையா? பெற்றவர்களை ஈடுவைக்கும் பொருளாக, ஜடமாக நினைத்துப் பேசியது நியாயமா?


 

(ஜடத்திற்கும் உயிருண்டுஎன அன்னையே கூறியிருக்கிறாரே....) அப்படியிருக்க, பெற்றவர்களை உயிரற்ற ஜடமாகப் பாவித்தது எவ்வளவு பெரிய தவறுஎன்பதை உணர வேண்டாமா?


 

கணவருக்கு அடிபட்டது தெரிந்ததும் அல்லாடினாள், பரிதவித்துத் தான் போனாள் லதா. அதிலும் அவள் மனம் எவ்வாறு பல விதங்களிலும் நினைத்தது? அந்த வழிகள் சரியா?


 

அரவிந்தனிடம் பணம் வாங்கியதும்; மாமனார், மாமியார் மீது அசூயைப்பட்டு, அவர்களின் தியானத்தைக் கேவலமாக நினைத்ததும்; டாக்டரிடம் அவர்கள்தான் தன் கணவரின் பெற்றோர்கள்என்று கூறாததும்; எவ்வளவு பெரிய தவறு? எதையுமே, தன் தவறுகளைக்கூட தவறுஎன்று கருதாமல்,

திண்ணக்கத்துடன் நடந்த அவளுக்கு, கொஞ்சமே கொஞ்சம் அசைவை ஏற்படுத்தியது எது?.... எது?.... எது?


 

"நியாயத்துக்கு கட்டுப்படாதவர்கள், குதர்க்கமாகப் பேசுபவர்கள், எந்த நல்ல வழியையும் ஏற்காதவர்கள், யாவருமே ஒரு பெரிய காரியம் முடிந்துவிட்டால் அடங்கிவிடுவார்கள்; மாறிவிடுவார்கள். காரிய சித்திதான் திருப்புமுனையாக அமைகிறது''.


 

ஆமாம், இந்த மிகப்பெரிய உண்மையான வாசகம் லதாவின் வாழ்க்கையில் எத்தனைப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாமே பார்க்கிறோமே. இதைப் போல் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பேர்களுக்கு நடக்கும்; நடக்கிறது; நடந்திருக்கிறது.


 

இதோ நம் "லதா'வின் வாழ்க்கையிலும் நடந்துவிட்டதே. பெரியவர்களை மதிக்கத் தெரியாதவளுக்கு, எப்படி அவர்கள் கால்களில் வீழ்ந்து கதற முடிந்தது?


 

இதுதான் நம் இயல்பான, மிகமிகச் சாதாரணமான வாழ்க்கையில் "அன்னை' நடத்தும் அசாதாரணம். இது போல் எத்தனையோ "அசாதாரணங்கள்' அன்னை-ஸ்ரீ அரவிந்தரை ஏற்றுக்கொண்டு, அன்னையின் கோட்பாடுகளில் ஒன்றையாவது முழுமையுடன் ஏற்றுச் செயல்படுபவரின் வாழ்வில் நிச்சயம் அதிசயத்திலும் அதிசயமாக நடக்கும். இது சத்தியம் என்றால் மிகையாகாது.


 

டாக்டர் வந்தார். அனைவரையும் சேர்த்துப் பார்த்தபோது, அதில் லதாவுமிருக்க, ஒரு வினாடிக்கும் குறைவாக அவரின் புருவம் ஏறி, இறங்கியது வியப்பால். ஆனால் எதுவுமே கேட்கவில்லை. அது அவருக்குத் தேவையில்லாத விஷயம்தானே.


 

"அம்மா, உங்க மகன் இனிமே சீக்கிரமாவே குணமடைவார். இனிமே கவலையே வேண்டாம்மா. உங்க எல்லாருடைய பிரார்த்தனையும் அவரைக் காப்பாத்தியாச்சு. சந்தோஷமாயிருங்க. ஆனா, அடிக்கடி எல்லாருமா உள்ளே போய் பேசி, அழறது, இதெல்லாம் கூடவே கூடாது. இன்னும் "ட்ரிப்ஸ்' ஏத்திகிட்டுத்தானிருக்கோம். ஆகாரம் எதுவானாலும் நாங்க சொல்லாம நீங்க எதுவுமே, தண்ணிகூட, கொடுக்கக்கூடாது. தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க....

சரியா....''


 

இதமாகச் சொன்ன அவரிடம் எல்லாருமே சந்தோஷத்தோடு ஆமோதித்தனர். டாக்டர் கூப்பிட்டபோது பாகீரதி லதாவைத்தான் அனுப்பினாள். லதா மறுத்து, பாகீரதியைப் போகச் சொன்னாள்.


 

"இல்லே லதா, உள்ளே சீனுவுக்கு எப்டியிருக்கியோ, என்ன கஷ்டப்படுறியோன்னு யோசனையாயிருக்கும். அதனால மொதல்ல நீ

போய் பாரும்மா. அப்புறமா நாங்கள்லாம் பார்த்தா போச்சு. போம்மா லதா....''


 

சொல்லும் மாமியாரை, வெடித்து வந்த விம்மலுடன், மீண்டும் சேர்த்து அணைத்துக் குலுங்கினாள்.


 

தவற்றை உணர்வதற்கும் ஒரு பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்பார்கள். லதாவிற்கு அந்த பாக்கியம் கிடைத்தது அதிசயமா என்ன? பேச வாயெழாமல், தலையை மட்டும் அசைத்துவிட்டு, உள்ளே சென்றாள்.


 

சீனு மருந்தின் தீவிரத்தால் நன்கு உறங்கிக்கொண்டிருந்தான். முகம் மிகத் தெளிவாகயிருந்தது. அவனையே உற்றுப் பார்த்தவளின் கண்கள் நிறைந்தன.


 

"எவ்வளவு பெரிய விபத்து! அதிருந்து மீண்டு இவர் வந்து இருக்காருன்னா, நிச்சயமா அது பெத்தவங்களோட பிரார்த்தனை தான். நான் என்ன செஞ்சேன்? ஒண்ணுமே செய்யலையே. என் சரீரம் பூராவும் கெட்ட எண்ணங்களும், தேவையில்லாத பொச்சரிப்பும், பண ஆசையுந்தானே.... இதனாலெல்லாமா உங்களைப் பொழைக்க வைக்க முடிஞ்சுது? இல்லையே.... டாக்டர்கள் பெரிய பெரிய படிப்புப் படிச்சவங்கதான்; பேர்போன ஹாஸ்பிடல்தான்; ஆனால்.... அவங்க கணிச்ச கணிப்புக்கு மாறா, உங்களை முழுசாவே, எந்தவிதமானக் குறையுமில்லாம, உங்களுக்குக் கொடுத்த வைத்தியர் யார் தெரியுமா? உங்க அம்மாதாங்க.... அம்மாவேதான். உங்கப்பாவும், அம்மாவும்தான் உங்களைக் காப்பாத்தினது..... அது மட்டும் சத்தியங்க..... சத்தியம்.... சத்தியம்....' மனதுள் புலம்பியபடியே சத்தமின்றி கரைந்தாள் லதா. கண்களைத் துடைத்தபடி வெளியே வந்தாள்.


 

நாட்கள் கடந்தன. சீனு இன்னும் ஹாஸ்பிடல்தானிருந்தான்.

அவனுக்கு நடையைப் பழக்கிக்கொண்டிருந்தனர். ஃபிஸியோதெரபியும் கூடவே கொடுக்கப்பட்டது. இதெல்லாம் நடக்கும்போதே, மனைவி லதாவின் மனமாறுதலும், "அன்னையின்' தெரபியும் கலந்து அவனுள், பெற்றவர்களைப் பற்றிய உயர்ந்த எண்ணங்கள், அவனுக்கு நினைவு தெரிந்த நாளிருந்து

நடந்தவைகளையெல்லாம் மன ஆழத்திலிருந்து மண்புழுவாக உழுது எடுக்க, நினைத்து நினைத்து மருகினான். அவ்வப்போது அவன் கண்களில் நிறைந்தது, நிற்காமலே போனது.


 

பெற்ற குழந்தைகள் பெரியவர்களானாலும், பெற்றவர்களுக்குக் குழந்தைகள்தான். அவர்கள் எப்பேர்ப்பட்ட பெரிய தவறுகளும், உதாசீனங்களும் செய்தாலும், "தாய்' மனசு என்றும் குழந்தைகளை சபித்ததாக சரித்திரமேயில்லை.


 

அதுவும் ஊருக்கு மட்டுமன்று, உலகத்திற்கே தாயும், தந்தையுமாக நாம் போற்றி வணங்கும் அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் இருக்கும் போது, நடக்கக்கூடாத அதிசயங்கள் எல்லாமே நடந்து வருகின்றனவே. ஆனால், அதை நாம் புரிந்துகொள்கிறோமா? இல்லையே. அதேதான் நமக்குள்ள பிரச்சினை.


 

ஒரு காரியம் நடக்க வேண்டுமானால் வேண்டுவதும், முடிந்ததும் நம் இயல்புக்குத் தகுந்தபடி நடப்பதும், மீண்டும் காரியத்திற்காக வேண்டுவதும், மனிதர்களாகிய நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை மட்டுமன்று, தவறும்கூடத்தான்.


 

நாம் மனதளவில் இன்னும் வளரவேயில்லை என்பதுதான் மிகப் பெரிய உண்மை. நம் சரீரம் வளர்ந்த அளவிற்கு நம் மனம், எண்ணம், இரண்டும் வளர்ந்திருக்கிறதா? யோசித்தால்..... நமக்கு நாமே வெட்கித் தலைக் குனிய வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். இந்தப் பேருண்மையை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.


 

அந்நிய தேசத்தில் பிறந்து வளர்ந்தாலும், ஆன்மீகத்தைத் தேடி நம் தேசத்திற்கு வந்து, இங்கேயே தங்கி, ஸ்ரீ அரவிந்தரைத் தம் ஆசானாக ஏற்று, உலகத்திற்கே "அன்னை'யாகி, நமக்கு அருளை வாரி வழங்கும் அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும் நாம் எப்போதும் நம் மனதிலேயே நிலைநிறுத்தி, அவர்களின் கோட்பாடுகளில் ஏதாவது.... ஏதாவதொன்றை ஏற்றுக்கொண்டு நடக்க வேண்டாமா? அதனால் நமக்குத்தானே நன்மையும், நல்வாழ்வும் அபரிமிதமாகக் கிடைக்கும்!


 

நடக்கின்ற இந்தக் காலத்தின் வேகமான ஓட்டத்தில், நம் பிரச்சினைகள் நிறைந்த வாழ்விற்கு மருந்து தரும் வைத்தியராகவும், ஏற்படும் மன வகளுக்கு இதமாக, மயிலிறகாய் நம்மைத் தடவி வருடும் பெற்றவராகவும், பாதை தவறிச் செல்லும் போது நேர்மையையும், கண்டிப்பையும் காட்டும், நல்லதைப் போதிக்கும் போதிமரமாகவும், எப்போதும், எந்த நிலையிலும் நம்மை அரவணைத்து, நம்முடனேயே இருக்கத் தயாராகயிருக்கும் அன்னையை நாம் நம்முடனேயே எப்போதுமே இருக்கும்படியானபடி நடக்க வேண்டாமா?


 

ஆம், நடக்க வேண்டும்; நடப்போம்; நடந்தே தீருவோம்.


 

அழகான பாதைகள் நம்முன். அன்னை அந்தப் பாதையில் நம்மை அழைத்துப் போகக் காத்திருக்கிறார் எப்போதும். வாருங்கள், அன்னையின் கரங்கள் நம்மைக் காக்கும் கரங்கள். அந்தக் கரங்களின் விரல்களைப் பிடித்தபடி அந்த அழகான, மெத்தென்ற மலர்ப்படுகையில், தடங்கலற்ற ராஜபாட்டையில் சந்தோஷமாக, கவலைகளற்று, தைர்யமாகப் பீடுநடை போடுவோம், வாருங்கள்.


 

அன்னையின் கைவிரல்களைப் பிடித்தபடி என்பது அன்னையின் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டபடி; அதே போல் சலனமற்று நடந்தபடி, அவைகளை மனதிறுத்தியபடி, நம்மால் முடிந்தவரைக் கடைப்பிடித்தபடி, தடுமாற்றமோ, சந்தேகமோயில்லாதபடி, பூரணமான நம்பிக்கையுடன் எந்த ஒரு விஷயத்தையும் - சிறியதோ, பெரியதோ எதுவாயினும் - அதை அன்னைக்கு சமர்ப்பணம் செய்தபடி நடந்தோமானால், நடப்போமானால், நம் வாழ்வில் வசந்தமும், மகிழ்ச்சியும், மனநிம்மதியும் "படிப்படியாய்' நம்மைச் சுற்றிச் சுற்றி வரும் என்பது நிதரிசனமாகும்.


 

அன்னையே சரணம்!


 

முற்றும்


 

 book | by Dr. Radut