Skip to Content

13.அமெரிக்காவில் வினோபா பவே

அமெரிக்காவில் வினோபா பவே

மகாத்மா காந்திஜீயின் பிரதம சிஷ்யராக வாழ்வை நடத்திய வினோபா, பூதான் இயக்கம் நடத்தினார். இந்தியா முழுவதும் பாதயாத்திரை செய்தார். அவருக்குக் கொள்ளைக்காரர்களைப் பற்றிய நினைவு மேலிட்டது.அவர்களை ராஜஸ்தான் போன்ற இடங்களில் சந்தித்தார்.

அவர்களை, போலீஸிடம் சரணடையச் சொன்னார். அவர் புத்திமதியை ஏற்று அவர்களும் அப்படியே செய்தனர்.

சரணடைந்தால் சட்டம் மன்னிக்கும் என அவர் கூறவில்லை. "சட்டப்படி உங்களுக்குரிய தண்டனையை ஏற்பது சரி'' என்றார்.அவருக்குப் பின்னால் ஜெயப்பிரகாஷ் நாராயணனும் அதைச் செய்தார்.

இருண்ட மனமுடைய கொலைகாரனுக்கும் நியாய மனப்பான்மை உண்டு என்பதை வினோபா கண்டார். கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் சரணடைந்தனர்.

இந்த அதிசயம் ஆன்மீக நாடான இந்தியாவில் தான் நடக்கும் என்று நினைக்கலாம்.

சமீப காலத்தில் இதே நிகழ்ச்சி அமெரிக்காவில் நடந்தது.அதைச் சாதித்தது ஓர் இளம்பெண். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளிவந்த செய்தியைக் கீழே தருகிறேன்:

மிஸ் ஸ்மித் என்ற பெண் இரவு 2 மணிக்கு அருகிலுள்ள கடையில் சிகரெட் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினாள். துப்பாக்கியை அவள் இடுப்பில் பதித்து, "உயிர் மீது ஆசை இருந்தால் சொல்வதைச் செய்'' என்றான் நிக்கோலஸ் என்பவன். நிக்கோலஸ் பயித்தியம் போன்ற கொலைகாரன். போலீஸ் அவனுக்காக ஊர் முழுவதும் வலை விரித்துத் தேடுகிறது. 26 வயது ஸ்மித் நிலைகுலையவில்லை;பதட்டப்படவில்லை; உயிருக்காகக் கெஞ்சவில்லை; மரணம் அவளுக்குப் பயம் தரவில்லை.

அவளுக்குக் கடவுள் நினைவு வந்தது. கடவுளைப் பற்றி இக்கயவனிடம் பேசத் தோன்றியது. கயவன் மனம் கடவுளை அறியாது. அதைக் கேட்டு அசையாது. அவள் தைரியசாலி .அந்த நிலையில் நிதானமாகப் பேச மரண தைரியம் தேவை. பேச நாக்குழறும் நிலையில் அவலமான மனிதன் ஆர்ப்பாட்டமாக செயல்படும் பொழுது, அவள் அசையாமல், அவன் செய்கையைக் கருதாமல் பேசினாள்:

- "பிறருக்குச் செய்யும் சேவை இறைவனுக்குச் செய்வது".

"பெருந்தன்மை என்பது அதிகாரம், அந்தஸ்து".

"சுயநலமான நம் உலகில் "எனக்கு முதல்" என்பது விரும்பத்தக்கதல்ல"

என்று அறிவுரை கூறினாள். நிக்கோலஸ் மேலும் கொடுமைப்படுத்தாது, அவள் கூறியதைக் கேட்டான். கேட்டவன்,

- "நிறுத்து. நீ படித்த இந்த புத்தகத்தை தயவு செய்து மீண்டும் ஒருமுறை எனக்குப் படித்துக்காட்டு'' என்றான்.

அவள் மேலும் படித்தாள்:

- "கடவுள் ஒரு காரணத்திற்காக உன்னைப் படைத்துள்-ளார். உன் திறமைகளை நீ போற்று. இல்லாததைப் பற்றிக் கவலைப்படாதே"என்று படித்தவள், அவனை நோக்கி,

- "என் வீட்டினுள் நீ வந்ததற்கு ஒரு காரணம் உண்டு. நீ போலீஸிடமிருந்து தப்பியது ஆச்சர்யமன்றோ. நீ ஜெயிலுக்குப் போய் அனைவரிடமும் இறைவனின் உபதேசத்தைக் கூற வேண்டும். கடவுள் பல ஆத்மாக்களைக் காப்பாற்ற வேண்டும்'' என்றாள்.

- அவன், அவளை "என்னை நீ ஜெயிலில் வந்து சந்திப்பாயா?'' எனக் கேட்டுவிட்டு, சூழ்ந்துவரும் போலீஸிடம் சண்டையிடாமல் சமாதானமாகச் சரணடைந்தான்.

-ஸ்மித் பிரபலமான பிரமுகரானாள்.

****


 


 book | by Dr. Radut