Skip to Content

03.உலகம் - மோட்சம் - ஸ்ரீ அரவிந்தம்

உலகம் - மோட்சம் - ஸ்ரீ அரவிந்தம்

அன்னையை 15 ஆண்டுகளாக வழிபடும் அன்பரை அவர் ஆன்மீக அனுபவத்தைப் பற்றிக் கேட்ட பொழுது அகமும் புறமும் அர்த்தபுஷ்டியாக நிறைவு பெற்றுள்ளது என்றதுடன் இங்கு அன்னையிடம் பெறுவது எங்கும் பெற இயலாது என்றார். அன்னையைப் பற்றி அறிந்தவர் வாழ்வின் பிரச்சினைகள் பிரார்த்தனையின்றிக் கரைகிறது. புதுவாழ்வு பிறக்கிறது. . பிரார்த்தனையெனச் செய்தால் பலிக்கத் தவறுவதில்லை. 10 பிரார்த்தனைகளில் 9 தவறாது பலிக்கிறது. பலிக்காத பிரார்த்தனையின் பின்னால் குணமிருக்கும். மனமாற்றத்தால் அது வழிவிடும். The Life Divine படித்துப் புரிந்து கொண்டால் மனம் படித்துப் புரிந்து கொண்டால் மாற்றமடைந்தது போன்ற பலனிருக்கும். இது கடினமான நூல் எனப் பெயர் பெற்றது. அதற்குள்ள காரணங்களில் முக்கியமானது . ஒன்றுண்டு. பகவானுடைய எல்லாக் கருத்துகளும் புதியவை. அவற்றைப் பழைய சொற்களால் எழுதும் பொழுது படிப்பவருக்குப் பழைய கருத்து மனதில் எழும். அது தடம் மாறும். அனாதை ஆசிரமத்தில் வேலை செய்பவர் ஆசிரமம் என்ற சொல்லை அனாதைகளுக்குரிய இடம் எனப் புரிந்து கொள்ளவது போலிருக்கும்.

மாயை, பிரம்மம், ஜீவாத்மா என்ற முக்கியச் சொற்களே அப்படி மாறுபடுகின்றன. இதுவரை இல்லாத கருத்துகளைப் பகவான் கூறுவதால் அவை தெளிவாக இருந்தாலும் மனத்தில் நிற்பதில்லை.பகுதி முழுமையைவிடப் பெரியது என்பது புரிந்து கொள்ள முடியாததில்லை. ஆனால் வழக்கிலில்லாததால் மனத்தில் கருத்து நிலை பெறுவதில்லை. The Life Divineக்கு அறிமுகமாக அதன் எல்லா முக்கியக் கருத்துகளையும், இக்குறையெழாதவாறு நூலின் சுருக்கத்தை எழுதுவது இக்கட்டுரையின் நோக்கம். பகுதி, முழுமை என்பவை எளிமையானவை. முழுமையுடைய பகுதி, முழுமையை விடப் பெரியதான பகுதி என்பவை இதுவரை உலகிலில்லாத எண்ணச் சிறப்புகள். இச்சொற்களும், இது போன்று 30 வண்ணமுடையவையும் நூலில் எங்கும் எழுவதால், நூல் புரியவில்லை என்று பலரும் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது.கம்மலில் ஒரு கல் வைரமானால், அக்கல்லின் விலை கம்மலின் விலையை விட அதிகமாகும். கல்லூரி ஸ்தாபகர் மகன் வகுப்பில் மாணவனானால், அவன் வெறும் மாணவன் மட்டுமல்லன், வகுப்பை விட முக்கியமானவன். எதிர்காலத்தில் கல்லூரிக்கு முதல்வராக வருபவன். பகவான் கூறும் கருத்தில் ஒரு பகுதியை இந்த உதாரணங்கள் விளக்கும். ஒரு மெஷின் முழுமை. அதனுள் உள்ள ஒரு பாகம் பகுதி. இந்தப் பகுதி எப்படி முழுமையாகும்,முழுமையைவிடப் பெரியதாகும்? உடலில் கண், காது, மூக்கு,மூளை எனப் பலப் பகுதிகள் உண்டு. பல இலட்சம் செல்கள் உள்ளன

. ஆத்மா நம்முள் புதைந்து விழிப்பற்றுள்ளது நம் எல்லாப் பகுதிகளிலும், எல்லாச் செல்களிலும் ஆத்மா புதைந்துள்ளது. ஆத்மா கண்ணில் விழித்தால் ஞானதிருஷ்டி ஏற்படும். நெஞ்சில் ஆத்மா விழித்தால் அசரீரி கேட்கும், வேணுகானம் கேட்கும். எந்தப் பகுதியில் ஆத்மா விழித்தாலும், அப்பகுதி நம் முழுவுடலுக்குச் சமமாகும், அதைவிடப் பெரியதாகவுமாகும். ஒரு செல்லில் ஆத்மா விழித்தாலும்அப்படியே. அதுவே பகவான் பகுதி; முழுமையை விடப் பெரியது என்பது. இதுவும் முழுவதும் விளக்கும் உதாரணமில்லை. இதுவரை உலகம் அனுபவிக்காததைப் பகவான் கூறுவதால் உதாரணம் எழுத முடியவில்லை. இது போன்றவை கீழ்க்கண்டவை. இது போன்றவை கீழ்க்கண்டவை. அவை வருமிடங்களில் “புரியவில்லை” என்ற நிலை ஏற்படுகிறது. அவை,

மௌனமான சப்தம்

பகுதியான முழுமை

அரூபமான ரூபம்

அநேகனான ஏகன்

நிலையான சலனம்

அகண்டமான கண்டம்

புறமான அகம்

ஜடமான ஆன்மா

ஆனந்தமான வலி

அமிர்தமான விஷம்

பரமாத்மாவான ஜீவாத்மா

வலுவான பலஹீனம்

கோரமான அழகு

சந்தோஷமான வருத்தம்

ஞானமான அஞ்ஞானம்

மனிதனான பிரபஞ்சம்

பிரபஞ்சமான பிரம்மம்

காலத்தைக் கடந்த காலம்

மரணமான அமரவாழ்வு

புருஷனான பிரகிருதி.

.ஸ்ரீ அரவிந்தம் மோட்சத்தைக் கடந்த நிலை; மோட்சத்தைத் துறந்த நிலை. மோட்சம் உலகைத் துறந்தது எனில் மோட்சம் உலகை விலக்குகிறது; எதிரியாகக் கருதுகிறது. ஸ்ரீ அரவிந்தம் என்பதைத் திருவுருமாற்றம் என்றும் கூறலாம். மோட்சத்தை ஏற்றால் திருவுருமாற்றமில்லை. உலகைத் துறந்து பெறும் மோட்சத்தைத் துறந்து பெறுவது திருவுருமாற்றம். இங்கு துறப்பது, கடப்பது, விலக்குவதில்லை. திருவுருமாற்றம்எனில் ஆத்மா நம் பகுதிகள்ளுள் விழிப்பது. உடல் உதாரணமாக தைய்வீக உடலாக, ஆன்மீக உடலாகச் செயல்படுவது திருவுருமாற்றம். நாம் இல்லறம், துறவறம் என இரண்டை அறிவோம். ஸ்ரீ அரவிந்தம் அவற்றைக் கடந்த நிலையில் உயர்ந்த இல்லறம் உண்டு என்கிறது. அந்த இல்லறம் துறவறத்தை உட்கொண்டது என்கிறது. தூயமையான துறவற நெறிப்படி நடத்தும் இல்லறம் அது. அது இல்லறமாகவும், துறவறமாகவும் உள்ள உயர்ந்த தைய்வீக வாழ்வு. இக் கண்ணோட்டம் ஸ்ரீ அரவிந்தத்திற்கு ஆன்மீக அடிப்படை. இவ்வடிப்படையில் மேற்சொன்ன 20 கருத்துகளையும் விளக்கினால் அது போதுமான அளவு எல்லாக் கருத்துகளையும் ஸ்ரீ அரவிந்த கண்ணோட்டத்திற்குள் கொண்டு வந்து விடும். ஒரு பெருந் தடை இவ்விதம் நீக்கப்படும். ஆன்மீகத்திற்கேயுரிய Self, Soul, being பிரம்மம், ஆத்மா, ஜீவன் என்ற கருத்துகள் ஆன்மீக இலக்கியத்துடன் பரிச்சியமற்றவருக்கிருக்காது. அவை மூன்றும் ஒன்றாகத் தெரிவதால் பிரித்துக் கூறுமிடத்தில் குழப்பம் ஏற்படும். விவரம் தெரியாத மக்கள் பிரதம மந்திரிக்கும் ஜனாதிபதிக்கும் உள்ள வித்தியாசத்தைப் புறக்கணித்து நாட்டின் தலைவர் என்றெடுத்துக் கொள்வார்கள் நாட்டின் அரசியல் அதிகாரத்தை எடுத்துரைக்கும் பொழுது அது குழப்பத்தை விளைவிக்கும்.

. Soul என்பது சிருஷ்டியுள் ஜீவனில் உள்ள ஆத்மா.

. Self என்பது சிருஷ்டிடியை கடந்த நிலையில் உள்ள ஆத்மா.

. Spirit என்ற சொல் Soul, Self என்ற இரண்டையும் உட்கொண்டது. மேலும் பிரகிருதிக்கும் உடையது.

. Beingஎன்பது உருவம் உள்ள எந்த ஜீவனுக்கும் உள்ள உயிர்.

Spirit உருவம் பெறாத பிரம்மம். Soul, Self உருவம் பெற்ற பிரம்மம். ஜீவன் (being) என்பது உருவம் பெற்றது, பெறாதது

.அனைத்திற்குள்ளும் புதைந்துள்ள உயிர்.

திருடனுடைய அடி திருவடி எனவும், விபசாரியின் கற்பு விலைமதிக்க முடியாதது என்பதும் உலகம் கேள்விப்படாத கருத்துகள். இவற்றைக் கேட்டு ஏற்பது ஒரு நிலை. அவற்றைப் புரிந்து கொண்டு ஏற்பது முடிவான நிலை.

திருடன் என்பவன் சமூகச் சட்டத்திற்கு எதிரி. கற்பு சமூக வாழ்வின் சிகரமான பண்பு. சமூகம் என்பது சிருஷ்டியில் ஒரு குறுகிய கருத்து. அதனால் ஓர் இலட்சிய அம்சமில்லை. சாதாரண மனிதனால் அதை ஏற்க முடியாது. அவனுக்குச் சமூகமே முடிவான இலட்சியம். சமூகத்தைக் கடந்துள்ள மனச்சாட்சியும் அவனுக்கு இரண்டாம்பட்சம். மனச்சாட்சி பெரும்பாலும் சமூக இலட்சியத்துடன் மோதுவதை அவனறிவான். இரண்டும் மோதினாலும், அவன் மனச்சாட்சியைவிட சமூகத்தை முக்கியமாகக் கருதுவான். சமூகம் முக்கியமானால் அவனைக் குடிமகன்,(citizen, social individual)எனக் கூறுகிறோம். மனச்சாட்சிப்படி வாழ்பவன் உயர்ந்தவன். அவனைச் சான்றோன், ஆன்றோன் எனக் கூறுவோம். ( He is Psychological individual) உலகைப் பொருத்தவரை இதுவே முடிவானது. ஸ்ரீ அரவிந்தம் அதைக் கடந்து ஆன்மீகப் பரிணாமத்தை இலட்சியமாகக் கொள்கிறது. அதன் பிரதிநிதி பரிணாம மனிதன் (evolutionary individual). அது இன்று உலகம் அறியாதது. அவன் உருவாக வேண்டுமானால், சமூகச்

சட்டங்களையும், மனச்சாட்சியையும் கடந்து மனிதனுடைய ஆத்மா வளரும் வண்ணம் மனிதனுடைய வாழ்வு அமைய வேண்டும். திருடன் உலகுக்கு எதிரியானாலும், சாக்கிய முனி கல்லெறிந்து கடவுளை வணங்கியது போல, திருடன் தன் ஆன்மா பரிணாம வளர்ச்சியடைய வேண்டி தன் செயலை ஆன்மீகச் சூழலுக்குப் பொருந்துமாறு அமைக்கும் பொழுது, உலகத்து மக்கஷீமீ உஷாரின்றி வாழ்வதைச் சிதைக்க வேண்டித் திருடுகிறான்.

- உஷாராக இல்லாமல் உள்ளே உலகம் வளராது. அனைவரையும் உஷாராக வாழ நிர்ப்பந்திப்பது திருடன் கடமை..ஆன்மீகப் பரிணாம வாழ்வின் குடிமகன் என்பதால் அவனடி திருவடி.

கற்புக்கரசி கணவனுடைய வாழ்வையும், உடல் வேகத்திற்குரிய தேவையையும் தன்னை மறந்து அழித்துப் பூர்த்தி சைய்கிறாள். அதனால் அவள் கொழுநன் தொழுதெழுவாள். அவள் பெய்யெனப் பெய்யும் மழை. அவள் இலட்சியம் உன்னதமானது. ஓர் ஆண்மகனுக்குச் செய்யும் சேவை. விபச்சாரி அச்சேவையில் உடற்பகுதியை உலகுக்குச் செய்பவள். உடலால் சேவை செய்தாலும், உயிரால் உண்மைக்கு எதிராக இருந்தாலும், அனைவருக்கும் செய்வது என்பதால் அவள் சேவை பரந்தது. அவள் ‘கற்பு’ விலை மதிக்க முடியாதது என்பது பகவான் கூறுவது. . இதுபோல் சமூகத்தையும், மனத்தையும் கடந்த இலட்சியங்களின் தத்துவம் அடங்கிய நூல் The Life Divine என்பதால் “புரியவில்லை” என்று அது பெயர் வாங்கியது.

காலம், காலத்தைக் கடந்த நிலைகளை நாம் அறிவோம். நம் வாழ்வு காலத்தால் கட்டுண்டது, காலத்திற்குக் கட்டுப்பட்டது. எதற்கும் காலம் தேவை. மரம் வளரவும், மனம் கனியவும், செயல் பலன் தரவும் உரிய காலம் தேவை. கல்லூரியில் சேர்ந்தவுடன் பட்டம் கிடைக்காது. 4 வருஷமாகும். விதை மரமாகிப் பலன் தரப் பல வருஷமாகும். இவை நாம் காலத்தால் ஆளப்படுவதைக் காட்டும். ரிஷி காலத்தைக் கடந்தவர். நாம் காலத்தில் வாழ்வதால், ஒரு காலத்தில் செய்த காரியம் இப்பொழுது நம்மைப் பாதிக்கும். அதைக் கர்மம் என்கிறோம். ரிஷி காலத்தில் வாழவில்லை என்பதால் அவருக்குக் கர்மமில்லை. காலத்தில் நாம் மனத்தால் வாழ்கிறோம். காலத்தைக் கடந்த நிலை ஆத்மாவுக்குரியது. ரிஷி ஆத்மாவில் வாழ்கிறார். ரிஷி ஆத்மாவில் உள்ள பொழுது விதையை நட்டால் அது உடனே மரமாகும். இதை நாம் மந்திரம், மாயம் என்கிறோம். ரிஷியின் சக்தி பெரியது. எதையும் உடனே சாதிக்க அவர் ஆத்ம சக்தி பயன்படும். அவரால் 10 வருஷத்திற்கு முன் இறந்தவரை உயிர்ப்பிக்க முடியும். ஆனால் வழக்கமாக அவர்கள் அப்படிச் செயல்படுவதில்லை. அவரும் மனத்தால் செயல்படும் பொழுது, கர்மத்திற்கும், காலத்திற்கும் ஓரளவு கட்டுப்பட்டவர். உலகமும், தத்துவமும், யோகமும் அறிந்தவை இவ்விரண்டு நிலைகள். பகவான் காலத்திற்கு மூன்றாம் நிலையுண்டு என்கிறார். இது ஆன்மீகத்திற்குப் புதிய சித்தி. மனிதன் வாழ்வது பூலோகம். தெய்ம் வாழ்வது மேல் உலகம், சொர்க்கம். தெய்வம் பூலோகத்தில் வந்து வாழ்ந்தால் பூலோகம், சுவர்க்கமாகும். மனிதன் தெய்வமாகி வாழ்வை நடத்துவது தெய்வீக வாழ்வு. அது பூலோகச் சுவர்க்கம். அதற்குரிய காலம் மூன்றாம் நிலையையுடையது. அங்கு காலமும், காலத்தைக் கடந்ததும் இணைந்து செயல்படும். பகவான் இதை Simultaneous integrality of Time-eternity and Timeless eternity என்கிறார்.

- இவ்வுலகில் எச்செயலுக்கும் காலம் தேவையில்லை. நினைத்தவுடன் நடக்கும்.

- இவ்வுலகில் யுகம் க்ஷணமாகும்.

இன்று இது உலகில் செயல்படவில்லை என்பதால் உதாரணம் கூற முடியாது. இது போன்ற செயல்களைக் கூறலாம்நாம் ஒரு காரியம் செய்ய வேண்டுமானால் - அட்மிஷன், லைசன்ஸ் பெறுதல் - அதற்கு முறையுண்டு, காலம் தேவை. பிரின்ஸ்பால் அதை உடனே செய்ய முடியும். மந்திரி 3 மாத வேலையை 3 நாளில் முடிப்பார். இவ்வுலகில் 3 வினாடியும் தேவைப்படாமல் முடியும். மேலே குறிப்பிட்ட 20 கருத்துகளையும் இந்த மூன்றாம் நிலை காலத்திற்குரியவாறு புரிந்து கொண்டால் The Life Divine புரியும். நம் மனம் காலத்திலுள்ள பொழுது, விளக்கம் மூன்றாம் நிலையிலிருப்பதால், நூல் விளங்கவில்லை எனக் கூற வேண்டியுள்ளளது. ஐன்ஸ்டீன் காலம் நிலையானதன்று, நிலை மாறினால் காலம் மாறும் என்ற பொழுது விஞ்ஞான உலகத்தின் மனத்தில் ஒரு புரட்சி எழுந்தது. அவர் 1913 இல் அதை எழுதினார். பகவான் இக்கருத்தை 1914 இல் ஆரம்பித்து 1920இல் எழுதி முடித்தார்.

தொடரும்....

***
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

தொடர்ந்த ஆன்மீக முன்னேற்றம் பெற உதவுபவை:

. நம் பிரச்சினைகள் அனைத்தையும் அன்னைமூலமாக மட்டும் தீர்த்துக் கொள்வது.

. மறைந்துள்ள குறைகளை எடுத்து மலர்ந்த பூரணமாக்குதல்.

. நம் செயலின் திறத்தைத் தொடர்ந்து உயர்த்துதல்.

. ஞானத் தெளிவைத் தொடர்ந்து உயர்த்துதல்.

. செயலின் நிலையை ஒருபடி உயர்த்துவது, மனத்திலிருந்து ஆன்மாவுக்கும், உணர்விலிருந்து மனத்திற்கும் உயர்த்துவது.

. ஆத்மசமர்ப்பணத்தை உயர்த்துவது.

. புதிய குறைகளுக்கு மனத்தில் இடம் அளிப்பதில்லை.

. புறச்செயலை அகவுணர்வாக்குவது.

அன்னையைக் கடந்த தீர்வு தேவையில்லை.

மறைந்துள்ள குறைகளின் மலர்ந்த பூரணம்.

தொடர்ந்து உயரும் திறன்.

வளரும் ஞானத் தெளிவு.

ஒரு நிலை உயரும் செயல்.

அர்ப்பணமாகும் சமர்ப்பணம்.

குறை நாடாத குணம்.

புறம் புனித அகமாவது.


 


 book | by Dr. Radut