Skip to Content

06.நிலையான நிதர்சனம்

நிலையான நிதர்சனம்

                                              (சென்ற இதழின் தொடர்ச்சி....)      கர்மயோகி

முழுப்பூசணிக்காய்

.நெப்போலியன் உலகப் பிரசித்தி பெற்றவன். "என்னைப் போன்றவன் 4 அல்லது 5 நூற்றாண்டிற்கு ஒரு முறை வருவான்" என்றான்.

.இங்கிலாந்தில் ஏராளமான வீடுகளில் நெப்போலியன் சிலை இன்றும் உண்டு. இங்கிலாந்து நெப்போலியனுக்குப் பரம எதிரி.

.ஐரோப்பிய நிலச்சுவான்தார்களை (aristocrats, ஜமீன்தார்கள்) அழித்தது பிரஞ்சுப்புரட்சி.

.இன்று ஐரோப்பா முழுவதும் பின்பற்றுவது நெப்போலியன் இயற்றிய சட்டம் Code Napoleon.

.300 ஆண்டுகளில் ஒரு அரசன் சாதித்ததை நெப்போலியன் 3ஆண்டுகளில் சாதித்தான் என்றார் ஒரு வரலாற்று ஆசிரியர்.

.உலகில் முக்கியமானவை இரு புரட்சிகள். ஒன்று பிரஞ்சுப்புரட்சி; அடுத்தது ரஷ்யப்புரட்சி.

.ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் (factual precision) நிகழ்ச்சிகள், தேதிகள், வீரர்கள் எண்ணிக்கை இவற்றைக் கூறுவதில் உண்மையைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பவர்கள். அவர்கட்கு வெறுப்புண்டு. பிரான்ஸ் அவர்கட்கு ஒத்துவாராது. கம்யூனிஸம் அவர்கள் விலக்குவது. மனம் உண்மையைத் தீவிரமாக எல்லா இடங்களிலும் ஏற்றாலும், வெறுப்புள்ள இடத்தில் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கத் தயங்க மாட்டார்கள்.

.ஒருவர் நெப்போலியனை பாக்டீரியா என்றார்.

.அடுத்தவர் 1917இல் நடந்த ரஷ்யப்புரட்சியைப் பற்றி எழுதிய நூலில் லெனின், ஸ்டாலின்,கம்யூனிஸ்ட் என்ற சொற்கள் ஒரே ஒரு முறை வருகிறது. நாட்டில் ஒரு மாறுதல் ஏற்பட்டது என்றார். "புரட்சி" என்ற சொல்லே நூலிலில்லை.

.டெய்வானை அமெரிக்கா "சைனா" என பத்து ஆண்டுகள் கூறியது.

.சர்ச்சில் நேருவை சிறுபான்மையோரின் தலைவர் (leader of a tiny minority) என்றார்.

இவர்கள் அனைவரும் வாழ்வில் பெரும் வெற்றி பெற்றவர்கள். இப்படி அபாண்டமான பொய்யைப் பேசுபவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள்?இது ஆண்டவனுக்கு நியாயமா? அன்னை கண்ணில் இவையெல்லாம் படவில்லையா?

.மனிதனிடம் நேர்மை, திறமையுண்டு.

அவனிடம் பொய்யுண்டு.

அவன் பெறும் வெற்றி அப்பொய்யை மீறிய மெய் பெறும் வெற்றி.

.நம் வாழ்வில் பொய்க்கும் மெய்க்கும் இடையே ஒரு எல்லை உண்டு.

நாம் அந்த எல்லையை அறிவோம்.

அவ்வெல்லைக்கோடு 1/2 அங்குலம் மெய்யை நோக்கி நகர்ந்தால் வாழ்வு பெரும்பலன் பெறும்.

எது பொய், எது மெய் என்பதைவிட, மெய்யை நோக்கி நகர்வது பலன் தரும் பணி.

.அதுவும் ஒரு விஷயத்தில் மெய்யை ஏற்று பூர்த்தி செய்ய முயன்றால், அம்முயற்சி பூர்த்தியாகும்பொழுது,ஒரு பெரிய வேலை, இதுவரை பூர்த்தியாகாதது, பூர்த்தியாகும்.சத்தியம் ஜெயிக்கும்.

சிறு காரியத்திலானாலும், பூரண சத்தியத்திற்குப் பூரண வெற்றி உண்டு.

சத்தியப் பற்றுக்கோடு, ஆன்மீகச் சேவையாகும்.

இம்முயற்சியை ஏற்பவருக்கு நிலையான தரிசனம் தேடி நிதர்சனமாக வந்து நிலைக்கும்.

யோகத்திற்கும், யோகவாழ்விற்கும் என்ன வித்தியாசம்?

யோகம் ஆண்டவனையடைவது.

யோகவாழ்வு ஆண்டவனை வாழ்வில் காண்பது.

வாழ்வனைத்தும் யோகம் என்கிறார் பகவான்.

பகவானுடைய நோக்கில் யோகம் என்பது யோகவாழ்வே.

நாம் அதை பிரித்து யோகம் வேறு, யோக வாழ்வு வேறு எனக் கொள்ளலாம்.

என் கருத்தைக் கூற தமிழிலோ, ஆங்கிலத்திலோ சொல் இல்லாததால் நான் அதை யோக வாழ்வு என்கிறேன்.

இது பகவான் கூறுவதில்லை; என் கருத்து.

என் கருத்து:-

யோகம் என்பது பெரிய இலட்சியம்.

மனிதர்களாகிய நாம் சாமானியர்கள்.

அனைவராலும் யோகத்தைப் பயில இயலாது.

யோக இலட்சியத்தை ஏற்பது பயில்வதாகாது.

மனதால் யோக இலட்சியத்தை ஏற்பதால் யோகத்தை ஆரம்பிக்கவும் முடியாது.

அதுவே நம் நிலை.

இருந்தாலும் நாம் சாமானியரானாலும், மனம் உயர்ந்த இலட்சியத்தை விழைவதை நாம் அறிவோம்.

அதனால் யோகத்திற்கு அடுத்தக்கட்டமாக, வாழ்வை யோக சக்தியால் நடத்துவதை நான் யோக வாழ்வு என்றேன்.

நம் வாழ்வை நம் திறமையால் நடத்துவது நம் அகந்தை வாழ்வு.

நம் வாழ்வை அன்னை மீதுள்ள நம்பிக்கையால் நடத்துவதை நான் யோகவாழ்வென்றேன்.

வேறு சொல்லால் எப்படி இக்கருத்தைக் கூறுவது எனத் தெரியவில்லை.

பகவான் கூறும் வாழ்வனைத்தும் யோகம் என்பது யோகத்தை ஏற்று வாழ்வில் வெளிப்படுத்துவது. நான் கூறுவது வாழ்வை ஏற்று, அங்கு யோகசக்தி வெளிப்பட முயல்வது.

மாநிலத்தில் முதல் மார்க் வாங்கிய பையனை சர்க்கார் வெளிநாடு அனுப்ப அழைப்பது பகவான் கூறுவது.

முதல் வகுப்பில் பாஸ் செய்தவன் சர்க்கார் ஸ்காலர்ஷிப் எழுதி பாஸ் செய்ய முயல்வது நான் கூறுவது.

ஒன்று மேலிருந்து கீழே வருவது

--->

-இது அனைவராலும் சிந்திக்கவும் முடியாது.

அடுத்தது கீழிருந்து மேலே போவது

---->

இதை அனைவரும் பயில இயலலாம்.

இதைப் பயிலுவது எப்படி?

மனத்தில் உண்மை (sincerity) இருந்தால் அன்னை நம் முயற்சியை ஏற்பார்.

10 நாட்களாக அண்ணன் பேசாமல், பாராமுகமாக இருக்கிறார். இன்று என்னை எதிர்பார்க்கிறார். ஒரு புத்தகம் தேவை எனச் சொல்லி அனுப்புகிறார்.

பேசாத அண்ணனுக்குப் புத்தகம் கொடுத்தனுப்புவது உண்மை (sincerity) என நாம் நினைக்கிறோம். நமது நோக்கத்தில் (motive)உண்மை இருந்தால் அன்னை அதை ஏற்பார்.

புத்தகத்தைக் கொடுத்தனுப்பினால் "ஏன், தம்பி கொண்டு வரக் கூடாதா?" என அண்ணன் நினைப்பார்.

நேராகப் போகக் கூச்சப்பட்டுக்கொண்டு, கொடுத்தனுப்புவதில் (Sincerity) உண்மையில்லை.

அந்த வித்தியாசத்தை அனைவரும் அறிவர்.

அங்கு நம் மனத்தில் உண்மையிருக்கிறதா என எவரும் அறிவர்.

அங்கு (Sincerity) உண்மையிருப்பது கஷ்டம்.

அங்கு உண்மையிருந்தால் அண்ணன் என்னை ஏற்பார். அதாவது அவருள் உள்ள அன்னை ஏற்பார்.

அவர் சொல்லியனுப்பினார்; கொடுத்தனுப்பினேன் என்பது அவர் நிலையில் நானிருப்பது.

அந்த உண்மை அன்னையையடையப் போதாது.

அவர் சொல்லியனுப்பினால், நாமே எடுத்துப்போவது அன்னைக்குரிய உண்மை.

அந்த உண்மை தவறாது.

அன்னைக்கு அந்தச் செய்தி எட்டும்.

அதன்மூலம் நம் குறிக்கோள் பூர்த்தியாகும்.

.இவையெல்லாம் பெரிய விஷயம்.

இவையெல்லாம் நமக்கில்லை என்பது பொதுவாக நினைப்பது.

பெரியதானாலும் நமக்குண்டு;

நமக்கில்லை என்பது என் நிலையில்லை; என்பதை நாமறிய முடியுமா?

அதற்குரிய சந்தர்ப்பம் உண்டா?

எதற்கும் வழியுண்டு; இதற்கும் வழியுண்டு;

மனமுண்டா என்பது மட்டும் கேள்வி.

"எனக்கு வழியுண்டு என்று தெரிந்தால், மனம் உண்டு என்பது என் நிலை" என்பவர்க்குப் பல சோதனைகளைச் சொல்லலாம்.

‘.எல்லாம் போய்விட்டது என்ற நேரம் வருவதுண்டு.இனி நான் செய்யக்கூடியதில்லை எனத் தோன்றும். ஆண்டவன் வந்தால் மட்டும் என்ன செய்ய முடியும் என்று மனம் கேட்கும்.

இந்தக் கொடுமைக்காரனுக்கும் மனம் மாறப்போகிறதா என்பது கேள்வி. (எலிசபெத் இது போன்ற எல்லைக்கு வந்தவள். ஆனால் அவளுக்கு இக்கேள்விகள் எழவில்லை. டார்சிக்கு அக்கேள்விகள் எழுந்தன. அவற்றைப் புறக்கணித்து அவன் தான் செய்ய வேண்டியதைச் செய்தான். தானிருந்த கர்வமான மனநிலையில் இருந்து, அடக்கமான மனநிலைக்கு, எதிர்முனைக்குப் போனான்.வாழ்வு சிறப்பாகப் பலித்தது).

மேற்சொன்ன நிலைகள் வாழ்விலுண்டு.

எக்காரணத்திற்காகவும் அவை நம் வாழ்வுக்குள் வர வேண்டாம்.

ஆனால் அதன் சிறு உருவம் (miniature) உண்டு.

உடல் சோர்கிறது.

மனம் சோர்வடைந்ததால் உடல் சோர்வதால், சோர்வு நமக்குக் கட்டுப்படாது.

இது சாப்பாட்டால் தீரும் களைப்பில்லை.

தூங்கி எழுந்தால் தீருவது இல்லை.

இது இனி இப்படியே இருக்கும்.

இதற்கு வழியில்லை.

இனி இதற்கு மேல் நமக்குத் தெம்பில்லை எனத் தோன்றும் நேரம்,

மனத்தில் உண்மையை Sincerity ஆராய்ந்து,

சற்று உயர்த்துவது சோதனை.

அதற்குச் சோம்பேறித்தனம்.

பிறகு செய்யலாம் எனத் தோன்றும்.

பிறகு மறந்துவிடும்.

ஏன் இந்த சோதனை, இது மட்டும் பலிக்குமா எனத் தோன்றும்.

கேள்விகளையும், சோம்பேறித்தனத்தையும்

புறக்கணித்து சோதனை செய்வது

Sincerity -உண்மை.

அந்த உண்மை உடலில் தெம்பாக எழும்.

மனத்தில் தெளிவாக உதயமாகும்.

முகம் பிரகாசிக்கும்.

உதட்டில் புன்னகை உதயமாகும்.

நமக்கும் பெரிய விஷயம் உண்டென வாழ்வு மூலம் அன்னை குரல் கேட்பது அது.

முற்றும்

 ****

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

பண்புமூலமாக மனிதன் தெய்வமாகலாம் என்பதன் தத்துவம் மேற்சொன்னதில் பொதிந்துள்ளது. "பிரபஞ்சமே மனிதனைப் பண்பாகத் தொடுகிறது'' என்கிறார் பகவான். உடலுக்கும் உயிருக்குமுள்ள பண்புகள் வாழ வழி செய்யும். மனத்திற்கும் ஆன்மாவுக்குமுள்ள பண்புகளால் தெய்வமாகலாம்.

மனிதப் பண்பு தெய்வத்தை ஏற்கும் பாங்கு.

ஸ்ரீ அரவிந்த சுடர்

அகம் புறத்தைப் பிரதிபலிக்கும் நிலைகள் மூன்று: முழு சக்தியுடைய அகம் அதன் பிரதிபலிப்பாகப் புறத்தை ஏற்படுத்துகிறது. வலிமையில்லாத அகம் புற நிகழ்ச்சிகளைப் பிரதிபலிக்கும் பாங்குடையது. இவற்றிற்கிடையே இந்த இரண்டு அம்சங்களும் பல்வேறு நிலைகளில் அமைந்துள்ளன.

அகத்தைப் பிரதிபலிக்கும் புற நிகழ்ச்சிகளின் மூன்று நிலைகள்.


 

 

 

 book | by Dr. Radut