Skip to Content

07. உலகத்தின் தலைமை

உலகத்தின் தலைமை

என்.அசோகன்

பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து இரண்டாம் உலகப் போர் முடியும் வரை இலண்டன் மாநகரம் உலகத்தின் தலைநகரமாக விளங்கியது. உலகின் பல பாகங்களில் காலனிகளை நிறுவி, ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே இங்கிலாந்து நடத்தி வந்ததால் அத்தகைய ஒரு தலைமை அந்நாட்டுக்குக் கிடைத்தது. அதை அரசியல் மற்றும் இராணுவத் தலைமை எனலாம். இங்கிலாந்து நாட்டின் பழைய சரித்திரத்தைப் பார்த்தால் அந்நாட்டை ரோமானியரும், ஜெர்மானியர்களும், பிரெஞ்சுக்காரர்களும்கூட ஆண்டுள்ளனர் என்று தெரிகிறது. நீண்ட காலம் அடிமை நாடாக இருந்தது, பிற்காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக தலையெடுக்க உதவியுள்ளது. இன்று அமெரிக்கா இத்தகைய தலைமையை அனுபவிக்கிறது. அதற்குக் காரணம் அந்நாட்டுடைய பொருளாதார பலமாகும். அந்நாடு, புதிதாகக் குடியேறியவர்களால் உருவானது. புதிய இடத்தில், புதிய சாதனைகளைப் படைக்க முயன்ற போது அவர்களுடைய சக்தி ஏராளமாகத் தூண்டிவிடப்பட்டது.

நாகரீக வளர்ச்சி பெற்ற தாயகத்திலிருந்து அவர்கள் வந்திருந்தனர்.எனவே, அதே நாகரீகத்தை மீண்டும் உருவாக்கும் திறன் அவர்களிடம் இயற்கையாகவே இருந்தது. மீண்டும் தாயகத்துக்குச் சமமான நாகரீகத்தை எட்டவேண்டும் என அவர்கள் எடுத்த முயற்சி தீவிரமாக இருந்ததால், தாயகமான ஐரோப்பாவை எட்டியதோடு நிற்காமல்,தாயகத்தைத் தாண்டியும் சென்றனர். அதனால் உலகத்தின் தலைமை நாடாக இன்று அமெரிக்கா விளங்குகிறது. அரசியல், இராணுவம் மற்றும் பொருளாதார ஆதிக்கம் என்று எதுவாக இருந்தாலும் நிரந்தரமாக இருக்க முடியாது. அறிவின் ஆதிக்கம் இவற்றைவிடப் பெரியது.விஞ்ஞானம் வெறும் தொழில்நுட்பமாக இல்லாமல் அடிப்படை உண்மைகளைத் தேடும்போது அறிவின் வெளிப்பாடாக அமைகிறது.

இந்த விஞ்ஞான ஆதிக்கமும் நிரந்தரமில்லை. எதிர்கால உலகில் ஆதிக்கம் செலுத்தப்போவது ஆன்மாவாகும். வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கிய பழைய ஆன்மீகத்துக்கு இந்த தலைமை கிடைக்காது.வாழ்க்கையில் மலரக்கூடிய ஆன்மாவுக்கே இப்பெருமை உண்டு.பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு முழுமையான நோக்கமில்லை.இதுவொரு குறுகிய, பின்னமான நோக்கமாகும். இது போன்ற நோக்கங்களுக்கு விரும்பத்தகாத விளைவுகள் உண்டு.

ஒரு புறம் பொருளாதார வளர்ச்சி வந்தால், மறுபுறம் சுற்றுச்சூழல் கெடுகிறது. அறிவின் செயல்பாடு பின்னமானதாகும். அதனால் இப்படி நல்லது, கெட்டது இரண்டும் விழைகிறது. வாழ்வில் வெளிப்படும் ஆன்மா பின்னமானதில்லை; முழுமையானது. இப்படி ஆன்மாவை வாழ்வில் வெளிப்படுத்த முன்வரும் நாடுகளுக்கு இத்தலைமை வருங்காலத்தில் வந்து சேரும்.

பழங்காலத்தில் சன்னியாசமே ஆன்மீகமாகக் கருதப்பட்டது. இப்பொழுது நமக்கு வேண்டியது வாழ்வை விலக்கும் ஆன்மீகம் இல்லை.வாழ்வை ஏற்கும் ஆன்மீகமாகும். சன்னியாசத்துக்குப் பல சிறப்புகள் உண்டு. சன்னியாசியால் பலசாலியான எதிரியைக்கூட அடக்க முடியும்.அடுத்தவருடைய எண்ணங்களைக்கூட அறிந்துகொள்ள முடியும்.மந்திரத்தை உச்சரித்து இறந்துபோனவருக்கு புத்துயிர்கூடத் தர முடியும்.ஒரு சன்னியாசியை மகிழ்வித்தால் அதன் விளைவாக உலகத்தின் எல்லாத் தேவைகளையும்கூட பூர்த்தி செய்ய முடியும். புதுப்புது வாய்ப்புகளை நம்மால் உற்பத்தி செய்துகொள்ள முடியுமென்றால், நம் வாழ்க்கையின் தரம் எவ்வளவு உயரும் என்று எண்ணிப்பாருங்கள்.சம்பளத்துக்கு வேலை செய்வதற்குப்பதிலாகச் சுயதொழில் செய்வது,கம்ப்யூட்டரில் புதிய, இலவச சேவையை வழங்குவது, விஞ்ஞான ஆராய்ச்சியில் புதிய கருத்துகளைக் கண்டறிவது போன்றவை வாழ்வைப் புதினமாக்கும் முறைகளாகும். சன்னியாசி தன்னுடைய சக்தியை மோட்சத்துக்கு செல்ல பயன்படுத்துகிறான். அதே சக்தியை வாழ்வுக்குத் தலைமைதாங்க நாம் பயன்படுத்தலாம்.

 

****


 



book | by Dr. Radut