Skip to Content

08.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V 

                                                (சென்ற இதழின் தொடர்ச்சி....)     கர்மயோகி

883) எதிர்பார்த்தல்: விஷயம் முடியும் என்பதை மனம் சுட்டிக் காட்டுவதை எதிர்பார்ப்பது குறிக்கும். உணர்வின் நம்பிக்கை எதிர்பார்க்கிறது. கடந்தகால அனுபவத்தால் ஒரு முறை அறிந்ததை ஆயிரம் முறை திரும்பச் செய்வது உடலின் பழக்கம். எதிர்பார்ப்பதும் அதற்கு இதுவே. இறந்து போனவரைத் தேடும் நிலையும் கண்ணுக்குண்டு. இரயிலில் அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தபிறகு அவரை வீட்டில் தேடுவதும் உடலுக்கு முடியும்.

.எதிர்பார்ப்பது சக்திவாய்ந்தது.

.தீவிரமாக எதிர்பார்ப்பது ஊருக்குப் போனவரை வீட்டில் தேடும்."எதிர்பார்த்தால் ஏமாந்து போவோம்' என்பது "இச்சையற்றவர்க்கு சித்திக்கும்' என்ற சொல் கூறுகிறது. எந்த உண்மைக்கும் எதிரான உண்மையுண்டு என்பது பகவான் வாக்கு.

தீவிரமாக எதிர்பார்த்தால் காரியம் முடியும்

என்பது அன்பர்கள் அனுபவம். அதனால் எதிர்பார்ப்பது என்பது யோக சட்டப்படி சரி என்றாகாது. சிறுவயதில் எதிர்பார்த்து ஏமாந்து போனவை,அதன்பின் மறந்து போனவை அன்னையிடம் வந்தபின் ஒவ்வொன்றாய் நம் முயற்சியின்றி பலிப்பதைக் காணாதவரில்லை. நம் ஆசைகள் பூர்த்தியாகாதவரை நாம் ஆண்டவனை நினைக்கமாட்டோம் என்பதனால் அன்னை அப்படிச் செய்கிறாரோ என அன்பர்கள் கேட்பதுண்டு. காரணம் எதுவானாலும் அனுபவம் இதுவே. மனித இதயம் ஆசைமயமானது.ஆசை போகாமல் ஆண்டவன் நம் வாழ்வில் நுழையமாட்டார்.

.அன்று எதிர்பார்த்தது இன்று மறந்துபோனாலும், அந்த ஆசை குறையாக உள்ளவரை ஆண்டவனை நோக்கிப் போக முடியாது.

."நான் நினைத்தேன்; நடந்தது" எனப் பலரும் கூறுவதுண்டு.

நினைவுக்கு சக்தியுண்டு.

சக்தி இன்றில்லாவிட்டால், ஒரு நாள் பலிக்கும்.

Mrs..பென்னட் தீவிரமாக தன் பெண்களுக்கு திருமணம் செய்ய ஆசைப்படுகிறார்.

ஆசை பூர்த்தியாவதைத் தடுக்கும் என்பதுபோல் டார்சியும், பிங்லியும் ஊரைவிட்டே போய்விடுகின்றனர்.

ஆழ்ந்த ஆசை தன்னைப் பூர்த்தி செய்துகொள்ளும் என்ற சட்டப்படி அவர்கள் திரும்பி வந்து திருமணம் செய்துகொள்கிறார்கள்.

ஆசைக்குரிய சட்டங்கள் பல:

1) ஆசை காரியத்தைக் கெடுக்கும்.

2) ஆழ்ந்த ஆசை தன்னைத்தானே ஒரு நாள் பூர்த்தி செய்து கொள்ளும்.

3) அளவுகடந்து தீவிரமான அர்த்தமற்ற ஆசை எதிராகப் பலிக்கும்.

எதிர்பார்க்க அளவில்லை, அர்த்தமில்லை. எதையும் மனம் எதிர்பார்க்கும்.

முனிசிபல் எலக்ஷனில் ஓட்டுப்போடக் கேட்டவுடன், "என்னை B.A.வரை படிக்கவைக்க வேண்டும்" எனப் பள்ளி மாணவன் கேட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தவருண்டு; அவனுக்கு அதிர்ச்சியில்லை.

.யாராவது முயன்று என்னை முதன் மந்திரியாக்க வேண்டும் என்பது ஒருவர்.

.என் குடும்பத்தை அண்ணனோ, நண்பனோ, யாரோ ஒருவர் எடுத்து நடத்த மாட்டாரா எனக் குறைப்பட்டவர் ஒருவர்.

.பெரிய ஸ்தாபனத்தில் முக்கிய இடத்திலிருப்பவர் எந்தப் பணக்காரர் வந்தாலும் "ஏன் இவர் எனக்குப் பெருந்தொகை தருவதில்லை" என அனைவரிடமும் குறை கூறுவார்.

.ஆசைப்படுபவர் M.L.A., M.P. யாக ஆசைப்படுவதில்லை. முதல்வராக வேண்டும் என்று மட்டும் நினைக்கிறார்.

.மனம் ஆசைக்குட்பட்டது; எதிர்பார்க்கும்; அர்த்தமேயின்றி எதிர்பார்க்கும்.எழுதாத கடிதத்திற்குப் பதில் வரவில்லை என நினைக்கும். இரயிலில் ஊருக்கு ஒருவரை அனுப்பிவிட்டு, வீட்டில் வந்து அவரைத் தேடும். ஆசை அனைத்தையும் ஆட்கொள்ளவல்லது.

****

884) ஒரு கருத்து உன் எண்ணத்தில் பல முறை வரலாம். ஒரு அனுபவம் பல்வேறு அளவுகளில் மனதில் மீண்டும் மீண்டும் வரலாம். பழைய கருத்து புது வேகத்தோடு அடுத்த முறை மனதில் எழுந்தால் அது புதுக்கருத்தாகத் தோன்றும்.

.பழைய அனுபவம் சற்று உயர்ந்து மீண்டும் வந்தால், அது புது அனுபவமாகத் தோன்றும்.

.மயிரிழை மாறினால் பழைய அனுபவம் புதியதாக இருக்கும்.ஒரு நண்பனை 10 ஆண்டு கழித்துப் பார்த்தால், அவர் 10ஆண்டுகட்கு முன் பேசிய அதே கருத்தை, அதே சொற்களில், அதே உற்சாகத்துடன் பேசுவதைக் காணலாம். "10 ஆண்டில் எந்த மாற்றமும் இல்லையே' என நினைக்கத் தோன்றும். வேறு சிலரை 6 மாதம் கழித்துப் பார்த்தால் மாற்றம் தெரியும்.

"ஒரு மனிதன் சொந்தக் காலில் நிற்க வேண்டும். அவனுக்கு அது மட்டுமே பயன்படும். உடன்பிறந்தவரோ, உற்றார், உறவினரோ, நண்பர்களோ உதவ முடியாது. உதவினால் அது அவருக்குப் பலன் தாராது. மேலும் கடன் தொகையாலும் முன் வர முடியாது. சொந்த முதலால் தான் முன்னேற முடியும். நாமே கண்டுபிடித்த கருத்தே நமக்குப் பலன் தரும்' என்பது ஒருவர் 19 வயதில் கண்ட அனுபவமாக இருக்கலாம்.இதுவே அனைவருக்கும் உண்மையாகாது. அவரைப் பொருத்தவரையும் முழு உண்மையாகாது. ஏனெனில் உண்மை பலவகையது. அதன் மாறிய வண்ணங்கள் ஏராளம். அவை மாறிக்கொண்டேயும் இருக்கும். ஆனால் அந்த மனிதனுக்கு அந்த நேரம் அவர் பெற்ற அனுபவம் மேற்கண்டதைக் கூறியிருக்கும். அந்த உண்மையை மட்டும் இங்குக் கருதுவோம்.மேற்சொன்னதில், (1) சொந்தக்கால், (2) அது மட்டும் பயன்படும், (3) உடன்பிறந்தவர், (4) உற்றார், (5) உறவினர், (6) உதவினாலும் பலன் தராது, (7) கடன் தொகை, (8) நாமே கண்ட கருத்து என எட்டு பாகங்கள் உள. அவை 80ஆகப் பிரியலாம். உடன்பிறந்தவர் சிறியவர், பெரியவர், தமக்கை, தங்கை, தம்பி, அண்ணன்எனப் பிரியும். உதவி என்பது உடல் ஒத்தாசை, பண ஒத்தாசை, வாய்ச்சொல் எனவும்,பெரியவை, சிறியவை எனவும், ஆபத்திற்குதவுவது, அர்த்தமற்ற உதவி எனவும், வலிய வந்த உதவி, கேட்டுப் பெற்ற உதவி, அடுத்தவர் கூறியதால் வந்தவை எனவும் அளவுகடந்து பிரிவுகள் வளரும்.

.மயிரிழை அனுபவம் மாறினாலும், அது புது அனுபவமாகத் தோன்றும்.

.மேற்சொன்ன பொதுக்கருத்து, நிலைமை மாறும் பொழுது மனதில் வலுவாக மேலும் ஒரு முறை எழும். அநேகம் முறை அனுபவித்ததாகத் தோன்றாது.புதிய கருத்தாகத் தோன்றும்.

.ஒரு கருத்தில் பல பாகங்கள் உள. அவை முடிவற்றவை. உலகில் பல சந்தர்ப்பங்கள் உள. அவை அனந்தமாக வளரும். கருத்தின் ஒவ்வொரு பாகமும், ஒவ்வொரு சந்தர்ப்பத்தினுடன் இணையும்பொழுது எழுவது அனுபவம். அது புதுமையுடையது. புது மெருகுடன் எழும்.

.உணர்ச்சி, உணரும்; மனம் அறியும். ஒரு கருத்தை முழுமையாக அறிய அதன் ஒவ்வொரு பாகமும் ஒரு அனுபவம் மூலம் தெளிவுபடும். எனவே 84,000 ஜென்மம் வேண்டும் என்றனர்.

.ஆத்மா அவற்றை ஒரு பார்வையில் முழுமையாக அறியும்.நண்பன் 10 ஆண்டிற்குப் பின் அதேபோல் பேசுவதன் காரணம் இதுவாகும். நாம் பேசியதை டேப்ரிக்கார்டில் எடுத்து வைத்து, சில நாள் கழித்துப் போட்டுப் பார்த்தால், நாம் நம் நண்பனைப் போன்றவர் எனத் தெரியும்.

நம்மைச் சந்திப்பவர் நம்மைப் பிரதிபலிப்பவர்.

தொடரும்.....

****

ஜீவிய மணி

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை.


 


 book | by Dr. Radut