Skip to Content

09.அருளாகி, அமுதமாகி....

"அன்னை இலக்கியம்"

அருளாகி, அமுதமாகி....

சியாமளா ராவ்

"அக்கா வந்துட்டாங்க.... கணேசா... அக்கா வந்துட்டாங்கடா.. .சீக்கிரமா வா....''

செல்வியைப் பார்த்தவுடன், சந்தோஷக் கூச்சலிட்டாள் பொன்னி. அவள் தம்பி கணேசனும் பறந்தோடி வந்தான். செல்வியின் கால்களைக் கட்டிக்கொண்டு கேட்டான், விழிகள் பளபளக்க....

"அக்கா.... இன்னிக்கு என்னக்கா?''

"இட்லியும், சட்னியும் கணேசா... ஆளுக்கு ரெண்டு எடுத்துகிட்டு, சண்டை போடாம சாப்டு, படிக்கணும்... சரியாப்பா''.

"சரிக்கா.....'' மகிழ்ச்சியில் கண்கள் பளீரிட்டன. ஆனால் செல்வியின் கண்களிலோ துளிர்த்தது கண்ணீர்.

"கடவுளே... என்னாலயே பசி தாங்க முடியலையே... பாவம் இந்தக் குழந்தைங்க.... ஆமாம் பாவந்தான். இல்லேன்னாக்க இந்த வீட்டுல வந்து பொறந்திருக்குமா? எத்தனை பேரு, குழந்தைங்கயில்லேன்னு கோயில் கோயிலாச் சுத்தறாங்க. அங்கே ஏன் சாமிங்க கண்ணை மூடிகிட்டு, நம்ம பக்கம் மட்டும் கண்ண அகலமாத் தொறந்து, வரிசையாத் தராங்க. சாமிங்களோட கணக்கு என்னன்னு புரியலையே.... ம்க்கும்...பள்ளிக்கூடத்துல சொல்லித்தர கணக்கே மண்டையில ஏற எத்தினி நாளாவுது... இதுல சாமிக் கணக்கைப் பத்தி நமக்கென்ன.... மன்னிச்சுடு சாமி....''

"யப்பா... யப்பா.... குடுப்பா... எனக்குப் பசிக்குதுப்பா... குடுப்பா....''

பெரிய கத்தல் கணேசனிடமிருந்து எழவும், சட்டெனத் தன் புத்தகப் பையை கீழே போட்டுவிட்டு வாசலுக்கு வந்தாள்.

பொன்னிக்கும், கணேசனுக்கும் தந்த இட்லிகளைப் பருந்துபோல் தாவிப் பறித்து, வேக வேகமாக வாயில் அடைத்துக் கொண்டிருந்தான் தகப்பனான முருகேசு. அதுவும், முழுமையான குடிபோதையில் தள்ளாட்டம் இருந்தும் கைக்கும், வாய்க்கும் மட்டும் கொஞ்சம்கூட தடுமாற்றமில்லாமல். இவள் அருகில் போகும்போது, நாலு இட்லிகளையும் வாயில் அடைத்தபடி, எழுந்து போனான். பொன்னியின் கண்களில் நீரென்றால், கணேசனோ குரலெடுத்து அழவே ஆரம்பித்தான்.

பாவம் குழந்தைகள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே. வழி ஒன்றும் தோன்றாமல், அழுது கொண்டிருக்கும் தங்கை, தம்பியைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள். ஆனால் மனதிற்குள் ஓர் எண்ணம் மட்டும் ஓட்டமாக ஓடியது. இனிமேல் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்ற யோசனை தான் அது.

****

செல்வியின் குடும்பம் சிறியதுதான். செல்வியின் அம்மா ஆண்டாளு,அப்பா முருகேசு, செல்விதான் மூத்தவள், இரண்டாவது பொன்னி,கடைக்குட்டி கணேசன்.

ஆண்டாளு ரொம்பவுமே பொறுப்பானவள். வீட்டு வேலை செய்வாள்.அங்குக் கிடைத்ததைக் கொண்டு, மேலே கொஞ்சமாகச் செலவு சாமான் வாங்கி, வீட்டிருப்பவர்களின் வயிற்றை நிரப்பிவிடுவாள். மாலை வேளைகளில் பூ கட்டித் தந்து, அதையும் செட்டுகட்டாக செலவழிப்பாள்.என்ன ஆனாலும் சரி, குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள். தான் படிக்காமலிருந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதைக் காலம் தாழ்ந்து உணர்ந்ததால்,தன் குழந்தைகளின் படிப்பை எக்காரணம்கொண்டும் நிறுத்தக்கூடாது என்பதில், மனதில் ஒரு வெறியுடனேயே செயல்பட்டாள்.

செல்வி இப்போது பத்தாவது படிக்கிறாள். கணக்கில் மட்டுமே அவளுக்குக் கொஞ்சம் தடுமாற்றம். ஆயினும் பாஸ் மார்க் வாங்கி விடுவாள். வகுப்பு டீச்சரும், அவளுக்கு உதவி செய்வதால், அவளால் பாஸ் மார்க் வாங்க முடிந்தது.

காலையில் பள்ளிக்குப் போகு முன்பு, ஒரு வீட்டில் வேலை செய்து விட்டு, பள்ளியிலிருந்து திரும்பும்போதும், அவர்கள் வீட்டில் மாலை வேலையையும் முடித்து, கொடுக்கும் காபியோ, டீயோ, அதை மட்டும் குடித்துவிட்டு, டிபனை ஒரு கவரில் போட்டு, பொன்னிக்கும்,கணேசனுக்கும் கொண்டுவந்துவிடுவாள்.

அதைத்தான் இன்று அவள் தகப்பன், பறித்துத் தின்றுவிட்டான்.இனி என்ன செய்வது என மனதில் ஒரு தீர்மானம் உருவாகியது.

***

மறுநாள் காலை என்றும்போல் வேலை செய்ய, தன் புத்தகப் பையையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

"செல்வி, வந்துட்டியா... நேத்து ராத்திரி எம் பொண்ணு போன் பேசினாடி. அவளும், மாப்பிள்ளையும் குழந்தையோட ப்ளேன்ல வராளாம்.மாப்பிள்ளைக்கு ஷார்ஜாவுல வேலை கிடைச்சுடுத்தாம். ஆனா, எம் பொண்ணும், பேத்தியும் போக ரெண்டு வருஷமாகுமாம். சாமான்கள் எல்லாம் அப்புறமா வரும். இதோ பாரு செல்வி, இனிமே கணக்கு வரலேன்னு நீ கஷ்டப்பட வேண்டாம். எம்பொண்ணு கணக்குல எக்ஸ்பர்ட். அவள சொல்லித்தரச் சொல்றேன். பாரு, பத்தாவதுல எத்தனை மார்க் வாங்கரேன்னு. புரிஞ்சுதா.....'' உற்சாகத்தோடு பேசினாள் மாமி.

"அம்மா.... ரோம்ப தேங்ஸ்மா... ரொம்பரொம்ப சந்தோஷம்மா.... சரிம்மா,வேலையை முடிச்சுட்டு ஸ்கூலுக்குப் போரேம்மா''.

மனதின் உற்சாகம், வேலையில் சுறுசுறுப்பைக் கூட்டியது.சீக்கிரமாகவே வேலைகளை முடித்து, கொடுத்த காபி, டிபனை சாப்பிட்டு,பள்ளிக்குக் கிளம்பினாள்.

மனசு காற்றாய் பல இடங்களுக்குச் சென்று சுற்றியது. எல்லா இடங்களிலும் பூந்தோட்டங்களும், புல்வெளிகள் பச்சைப்பசேல் என்று காற்றில் ஆட, வண்ணத்துப்பூச்சிகள் படபடத்து பூக்களின் மீது அமர.....

சட்டெனக் கலைந்தாள். நிதர்சனம் அவள் முன் நின்றது. மனதை அடக்கினாள். பள்ளியின் வாசலை அடைந்து பிரேயரில் கலந்துகொள்ள வரிசையில் நின்றாள்.

"நீராடும் கடலுடுத்த....''

மாலை பள்ளி முடிந்து புறப்பட்டாள். மனதுள் ஏற்பட்ட ஆவலைக் கட்டுப்படுத்தி வேகநடை போட்டாள்.

மாமி வீட்டில் நுழையும்போதே களிப்பும், சந்தோஷமுமாக ஒரே பேச்சும், ஒரு குழந்தையின் சிணுங்கலும்.

மெதுவாக உள்ளே நுழைந்தாள்.

வராண்டாவைத் தாண்டி, பெரிய கூடத்திலிருந்த ஓர் அறையின் முன் எல்லோரும் குழுமியிருந்தனர். வீடு முழுக்க ஒரு சுகந்தம்.அவளுள்ளும் ஓர் ஆவல் ஏற்பட, சத்தமின்றி அந்த இடத்திற்குச் சென்றாள். ஆனால் அவர்கள் குழுமியிருந்ததில் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. தயக்கத்துடன் மேலும் முன்னேறாமல் பின்னாலேயே நின்றாள் செல்வி.எல்லோரும் அப்படியே அங்கேயே உட்கார்ந்தார்கள். மூன்று வயது குழந்தைகூட சம்மணமிட்டு கண்களை மூடி, இரு கரங்களையும் சேர்த்துக் குவித்தபடி உட்கார்ந்ததைப் பார்த்த செல்விக்குச்சொல்ல முடியாத வியப்பும், ஆச்சர்யமும். சட்டெனத் தலையை உயர்த்தினாள்.ஒரு மூதாட்டியின் படமும், அருகிலேயே வயதானவரின் படமும்....

"! இவர்கள் வீட்டுப் பெரியவர்கள்போல. வந்திருக்கிற அக்காவோட மாமியார் வூட்டு மனுஷங்களாத்தானிருக்கணும். அவங்கதானே இந்தப் படங்களைக் கொணாந்து வச்சிருக்காங்க. பாவம்... அவங்க எத்தனை நல்லவங்களாயிருந்திருந்தா, இப்டி வந்தன்னிக்கே கும்பிடுவாங்க. சரி,நாமளும் கும்புடுவோம்...'

மனதின் ஓட்டத்தை நிறுத்தி, கண்களை மூடினாள்.

சரசரவென சத்தம்; குழந்தையின் சிரிப்புச் சத்தம்; சட்டென கலைந்தாள் செல்வி.

இதென்ன... இத்தனை நேரம் கண்மூடி அமர்ந்தது தான்தானா என்கிற வியப்பு ஏற்பட்டது செல்விக்கு. உடனே எழுந்தாள். பரபரவென வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.அவள் சரீரம் முழுவதுமே உள்ளுக்குள் அதிர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அந்த அதிர்வு அவளுக்கு வேண்டும் போலிருந்தது.ஆனால் தாளமுடியாது போலவும் இருந்தது. புரியாத புதிராயிருந்தது.

"செல்வி.... செல்வி...''

மாமிதான் அவளை அழைத்தது. செய்யும் வேலையை நிறுத்தி,அழைப்பிற்கு உடனே சென்றாள் செல்வி.

"மாலூ.... நான் சொல்லலே, இவதான் அந்த செல்வி. பத்தாவது படிக்கிறா. நறுவிசா வேலை செய்வா. காலையில வேலைய செஞ்சுட்டு,ஸ்கூலுக்குப் போவா. சாயந்திரமா மறுபடி வந்து வேலை செஞ்சுட்டு வீட்டுக்குப் போவா. நல்ல பொண்ணுடி. நன்னாவும் படிக்கிறா... நீதான் அவளுக்கு கணக்கு மட்டும் சொல்லித்தரணும். அதுல கொஞ்சம் வீக்.மத்தபடி கெட்டிக்காரிடி மாலு.....'' மாமியின் வார்த்தைகளுக்கு நாணமுற்று,

மாலு என்கிற மாலதியை வெட்கப்புன்னகையோடு பார்த்தாள் செல்வி.

"செல்வி! டோண்ட் வொர்ரி. ஒரு, ரெண்டு நாள் போகட்டும்.கணக்குல உன்னைப் புலியா மாத்திடறேன், சரியா. பத்தாவது மட்டும் படிச்சா போதாது. மேல்கொண்டு படிக்கணும், சரியா....?''

"கண்டிப்பாக்கா. எனக்கும் நிறைய்ய படிக்கணும்னு ஆசைதாங்க்கா.ஆனா..... வசதி...'' தலைகுனிந்தாள் செல்வி. கண்களின் ஓரத்தில் நீர் மணிகள் துளிர்த்தன.

"செல்வி.... வசதியப்பத்திக் கவலைப்படாதே. நீ நன்னாப் படிச்சீன்னா,எவ்வளவு வேணுமானாலும் நான் படிக்கவைக்கரேன். பணமில்லேன்னு

படிப்பை மட்டும் நிறுத்தாதே... புரிஞ்சுதா....''

"அக்கா.... தேங்ஸ்க்கா.... தேங்ஸ்...'' சொன்னவள் உடனே மாலதியின் கால்களில் வீழ்ந்து வணங்கவும், சட்டென அவளைத் தடுத்து நிறுத்திய

மாலதி கூறினாள், "செல்வி, நீ வணங்கி, நமஸ்கரிக்க வேண்டியவங்க அதோ, நாமல்லாம் உட்கார்ந்து தியானம் செஞ்சோமே, அவங்களுக்குத் தான். புரிஞ்சுண்டியா....?''

"அக்கா.... அவங்க உங்க மாமியார் வூட்டுப் பெரியவங்களாக்கா.நான் தினமும் அவங்களை வணங்கறேங்க்கா....''

பெரியதாய் சிரித்தாள் மாலதி.

புரியவில்லை செல்விக்கு. நாமென்ன தப்பாகப் பேசிவிட்டோம் என.

"செல்வி! இல்லேம்மா. அவங்க எனக்கு மட்டும் சொந்தமில்லே.எல்லாருக்கும்தான் சொந்தம். ஏன், இன்னிக்கு நீகூடதானே அவங்க முன்னாடி உக்காந்து தியானம் பண்ணே....''

"அக்கா... தியானமா... நானா.... புரியலேக்கா.....''

"உனக்குப் புரியாமலேயே, தெரியாமலேயே, நீயும் எங்களோட உக்காந்துண்டு, கண்ணை மூடி செஞ்சதுதான் தியானம், செல்வி.உன்னை மறந்து, உன் நினைவுகளைத் துறந்து, நிச்சலனமா, அமைதியா உன்னை உக்காரவச்சது யாருன்னு நினைக்கிறே? தெரியுமா?''

"தெரியலேக்கா. நீங்கள்ளாம் கண்ணை மூடி உக்காந்திருந்தீங்க.சரின்னு நானும் அப்படியே செஞ்சேன். ஆனாக்கா, நான் உக்காந்தது தான் தெரியும். அதுக்குப்பிற்பாடு என்னன்னு எனக்கு ஒண்ணுமே தெரியாதுக்கா. திடீர்னு சரசரன்னு ஏதோ சத்தம் கேட்டுத்தான் முழிப்பு வந்துது. அக்கா... வந்து... எனக்கு....''

"சொல்லு, செல்வி. ஏன் தயங்கரே? என்னம்மா, எதுவானாலும் சொல்லு. நான் ஒண்ணும் தப்பா நினைக்கமாட்டேன். சொல்லும்மா செல்வி... எனக்குக் கேட்கணும் போலிருக்கு. சொல்லு.... என்னாச்சு உனக்கு?''

"அக்கா.... என்னைத் தப்பா நினைக்கமாட்டீங்கதானே....''

"ம்.ஹும்... எதுவுமே தப்பில்லே செல்வி. சொல்லு.''

"அக்கா! உங்களையெல்லாம் பாத்துகிட்டு, நானும் அப்படியே உக்காந்தேங்க்கா. அவ்வளவுதான் தெரியும். ஆனா, எழுந்தபிற்பாடு....எனக்குள்ள என்ன நடந்துச்சுன்னு தெரியலேக்கா. என் உடம்புல,தலையிலேயிருந்து கால் வரைக்கும் என்னமோ ஒரு மாத்தமா,சந்தோஷமா, சுறுசுறுப்பான்னு தெரியலேக்கா.... அந்த உணர்வு எனக்கும் வேணும்போல தோணுச்சு. ஆனா, அதை என்னால தாங்க முடியாததாவும் இருந்துச்சுக்கா. எனக்குச் சரியா சொல்லத் தெரியலே. ஆனா, இன்னும் எனக்குள்ளே..... எனக்குள்ளே....''

மேலே பேச முடியாமல் அழுதபடியே சிரித்தாள் செல்வி.

அவ்வளவுதான். செல்வியை வேலைக்காரி, தங்களைவிடத் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவள் என்பதையும் மறந்து, தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு மாலதி அவள் நெற்றியில் முத்தமிட்டாள்.

"செல்வி.... நீ எத்தனை பெரிய அதிர்ஷ்டக்காரி, எத்தனை பாக்கியசாலின்னு உனக்கேத் தெரியலே. உனக்கு, வாழ்க்கைங்கறது ரொம்ப உன்னதமாத்தான் இருக்கும். இது நான் சொல்லலே செல்வி. அவங்க ரெண்டு பேருந்தான் உனக்கு அப்பேர்ப்பட்ட அருளைத் தந்துருக்காங்க. ம்.... அவங்க ரெண்டு பேருந்தான் இனிமே உன் வாழ்க்கையைப் பார்த்துக்கறவங்க....''

குழம்பியே போனாள் செல்வி.

"அக்கா... சத்தியமா "உட்டேன்'. எனக்கு நீங்க பேசறது ஒண்ணுமே புரியலேக்கா. அவங்க ரெண்டு பேரும் யாருக்கா....''

"அவங்கதான் ஸ்ரீ அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும். செல்வி....இன்னிக்கு அவங்க அறிமுகம் உனக்கு அற்புதமான உணர்வைத் தந்துருக்கு. விட்டுடாதே. அந்த உணர்வு உனக்கு எப்போதும் அவங்களை நினைக்கிறபோதும், பார்க்கிறபோதும் ஏற்படணும். எப்போ, ஒண்ணுமே,ஏன், எதுவுமே தெரியாத நிலையில, நீ அவங்களை முன்னிறுத்தி,மனசுல நினைச்சு உக்காந்தே பாரு. அந்த பக்தியும், சலனமற்ற உணர்வுமே உனக்கு ஒரு பெரிய பொக்கிஷத்தை வாரித் தந்துருக்காங்க.செல்வி, மறுபடியும் சொல்றேன். இந்த, எண்ணங்களற்ற தூயமனசோட எப்பவும் அவங்களை வணங்கு, நினை, விட்டுடாதே. எந்த ஒரு சஞ்சலமும், சந்தேகமும், மனக்கஷ்டமும் வந்தாலும், மனசுல அவங்களை நிறுத்தி, மானசீகமா வணங்கு. அதற்குண்டான பலன் உனக்கே தெரியும்,செல்வி. சரி, ரொம்ப நேரமாச்சு. வீட்டுக்குக் கிளம்பு. நான் உனக்கு ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிச் சொல்றேன்; கணக்கும் சொல்லித்தரேன்,சரியா..... செல்வி, வந்த முதல் நாளே எனக்கும் சந்தோஷமாயிருக்கும்மா. எனக்கும் கொஞ்சம் வேலையிருக்கு. போய்ட்டு வா, செல்வி....''

மாலதி நிரம்பிய மனதுடன், உள்ளே சென்றாள்.

அன்னையை வணங்கி நன்றி கூறினாள்.

"அன்னையே! நான் வந்து இறங்கிய முதல் நாளே, என் மனதிற்கு உகந்த அற்புதமான நிகழ்வு. அம்மா! என்றுமே உங்கள் பார்வையிலிருந்து விலகாமல் இருக்க அருள்புரியுங்கள் அம்மா....'' மனமுருக வேண்டினாள்.

வீட்டினுள் நுழையும்போதே பசியோடு காத்திருக்கும் பொன்னி,கணேசன் எதிர்பட்டார்கள்.

"அக்கா....'' கணேசன் ஓடிவந்து ஆவலோடு அவளைக் கட்டிக் கொண்டான்.

தெருவைத் திரும்பிப் பார்த்தவளுக்கு திக்கென்றாகியது. தள்ளாட்ட

நடையுடன் வந்துகொண்டிருந்தான் முருகேசு.

சட்டென கணேசனையும், பொன்னியையும் அழைத்துக்கொண்டு போய் வீட்டின் பின்பக்கமிருந்த மணல்திட்டில் உட்கார வைத்து, கொண்டு வந்த திண்பண்டத்தைக் கொடுத்தாள். கதவை சாத்தியபடி உள்ளே வந்தாள்.

முருகேசு வாசலில் நின்று சுற்றுமுற்றும் பார்ப்பதை உணர்ந்து,

தன் புத்தகப்பையை வைத்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்தாள்.

"செலுவி.... செலுவி.....'' முருகேசு கூப்பிட்டபடியே அவளருகில் வந்து ஆட்டத்தோடு நின்றான்.

ஏறெடுத்துப் பார்த்தாள் செல்வி. முன்புபோல் அவளிடம் இப்போது பயமில்லை.

"என்னம்மா கொணாந்துருக்கே... குடு கண்ணு, பசிக்குது. வவுறு கபகபன்னுதும்மா. ஏதாவது சாப்பிடக் குடும்மா....'' தட்டுத்தடுமாறி போதையில் பேசினான்.

கோபத்திற்குப் பதிலாக தகப்பன் மேல் இரக்கமே ஏற்பட்டது. ஏன் எனத் தெரியவில்லை. ஆனால், அவனைப் பார்த்ததும், அந்த தள்ளாட்டம்,நாற்றம், கெஞ்சல் எல்லாமே வெறுப்பை ஏற்படுத்தினாலும், மற்றவர்களின் தந்தையைப் போல் இவனையும் எப்படியாவது திருத்தி, "இவர்தான் என் அப்பா' என்று பெருமையாகக் கூறிக்கொள்ளும் அளவிற்கு நிலைமையை மாற்ற வேண்டுமென்ற உறுதி பிறந்தது.இதென்ன இன்று அப்பாவைப் பற்றி இத்தனை நாள் தோன்றாதது எல்லாம் தோன்றுகிறது என்றும் மனம் நினைக்காமல்லை.அதை ஏன் இன்று நினைத்தோம் என்ற ஆராய்ச்சியையும் செய்யவில்லை.உள்ளே சென்று தட்டில் சோறும், சாம்பாரும் ஊற்றி எடுத்து வந்தாள். ஒரு லோட்டாவில் நீரும் கொணர்ந்து தந்தையின் முன் வைத்தாள். பாதி கீழேயும், பாதி வாயிலுமாக அவன் தின்பதைக் காணச் சகிக்காமல் சத்தமின்றிக் கதறினாள் செல்வி.

ஆண்டாளு பூ கட்டி முடித்து, விரல்களைச் சொடுக்கிக் கொண்டாள். வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்த போது தான் செல்வி வந்தாள்.

"கண்ணு, பாடமெல்லாம் படிச்சியா... இப்ப கணக்குப் புரியுதா செல்வி....நல்லா படிக்கணும்மா. நீயும், பொன்னிக்கும், கணேசுக்கும் சொல்லித் தாம்மா. இத பாரு துட்டு சேர்த்து, சொத்தா வச்சிருந்தாக்கூட அளிஞ்சு போயிடும் கண்ணு. படிப்பை மட்டும் யாராலயும் உங்கிட்டயிருந்து பிடுங்கிக்கவோ, கொள்ளையடிக்கவோ முடியாதும்மா. நல்லா படிடா....எந்த கஷ்டத்தையும் மனசுல ஏத்திக்காதே கண்ணம்மா, புரிஞ்சுதா.....''

"அம்மா... எனக்கு எந்தக் கொறையும் இல்லேம்மா. நான் படிப்பை நிறுத்தவேமாட்டேம்மா. அப்பாவை அவர் வழியில விட்டுடும்மா. எனக்கும்,பொன்னி, கணேசுக்கும் படிப்பைப்பத்தி, அதோட முக்கியத்தைப் பத்தி இவ்வளவு சொல்ற நீ படிக்காதவ தான். ஆனாலும் ரொம்ப புத்திசாலிம்மா.அதனாலதான் எங்களுக்கும் படிப்பு மேலே ஆசையிருக்குதோ இல்லையோ, படி, படின்னு நல்லவிதமா எங்களுக்குச் சொல்றே. நிச்சியமா உங்குளந்தைங்க படிப்போம்மா, சரியா....''

அப்படியே அம்மாவின் மடியில் சாய்ந்து, சிரித்தாள் செல்வி.

"செல்வி, நாளைக்கு ஞாயித்துக்கிழமை. ஒண்ணாந்தேதி வேறே.சீக்கிரமா வரியா.... பூவெல்லாம் அடுக்கணும். மதர் ஸிம்பலும், ஸ்ரீ அரவிந்தர் ஸிம்பலும் போடணும், வரியா...''

"வரேங்க்கா..... ஆனா, ஸிம்பல்றீங்க, அடுக்கணும்கறீங்க... ஒண்ணுமே புரியலேக்கா. என்ன செய்யப் போறீங்க. பூவைக் கட்டுவாங்க,அடுக்குவாங்களா.... புரியலையே.... தினமும் தட்டுல அடுக்கித் தண்ணீ ஊத்தி வைக்கறீங்க.... அது போலவாக்கா....''

"ஆமாம் செல்வி.... நாளைக்கு அஞ்சு மணிக்குக் காலையிலேயே வந்துடு. பாரு, அப்ப அன்னையை பத்தியும் எனக்குத் தெரிஞ்சவரை சொல்றேன். புத்தகங்கள் இருக்கு. அதையெல்லாம் படி. புரியாததை நாம கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். சரி, நாளைக்கு வந்துடு.... சரியா....''விடிந்து, விடியாத முன்பே, சீக்கிரமாகக் குளித்துவிட்டு சுத்தமான உடையை அணிந்து வந்தாள்.

"அம்மா.... வீடே பளிச்சுனு இருக்கும்மா. பார்க்கவே சந்தோஷமா....மனசு பொங்குதும்மா...'' சொல்லும்போதே அவள் முகம் விகசித்தது.

"ஆமாம் செல்வி, அன்னைக்கு சுத்தம் ரொம்ப முக்கியமானது.துப்புறவா இருக்கணும். ஏன், சுத்தம் சோறும் போடும்னு நீயும் படிச்சிருக்கேதானே....''

"..... அதுதான் நேத்திக்கு, முந்தாநாளுன்னு, ஒரு வாரமா வீட்டை-யெல்லாம் சுத்தப்படுத்தினோமா.... ஆமாங்க்கா, வீடு எவ்வளவு பளிச்சுனு அளகாயிருக்குதானே..... சரிக்கா... இப்ப என்னக்கா பண்ணணும்?''

"இரு, அப்பா கோயம்பேடுலேருந்து பூ வாங்கிண்டு வருவார். வந்ததும் நாம, சைஸ்வாரியா பிரிச்சு, தண்ணியில அலசி, வைக்கணும். சில பூக்களை, துலுக்கசாமந்தியெல்லாம் தண்ணிபட்டா கறுத்துடும். சரியா செய்யணும். இரு.... இன்னிக்கு நீ பார்த்தியான்னா புரிஞ்சுப்பே.....''

"அக்கா... அம்மாவும் சொன்னாங்க, நீங்களும் சொல்றீங்க. உங்க வீடு பெரிய பங்களா டைப்பு. ஆனா.... எங்க வீடு ரொம்ப சின்னது.அதுல, முடிஞ்சவரை சுத்தமாத் தான் வச்சிருக்கோம். ஆனாலும் உங்க வீடுபோல, எங்களால சுத்தமா வச்சுக்க முடியலையே....''

"வீடு பெரிசு, சிறிசுன்னு நீ சொல்றே பாரு, அது உண்மைன்னே வச்சுக்குவோம். எல்லாருமே பங்களாவாசியாயிருக்க முடியுமா? இல்லா எல்லாருமே குடிசைவாசியா ஆகிட முடியுமா? சொல்லு செல்வி....''

"அதெப்படிக்கா? நீங்க பணக்காரங்க. நாங்க ஏழைதானே! போட்டியா போட முடியும்?'' ஆதங்கத்தோடு செல்வி பேச, மாலதி அவளைத்

தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்.

"செல்வி, எதையும் நம்மால முடியுமான்னு சந்தேகப்படறோம் பாரு,அது ரொம்ப தப்பும்மா. அன்னையோட கோட்பாடுகள் எல்லாமே நம்மால செய்யக்கூடியது தான் செல்வி. ஆனா, நடைமுறையில ஒன்றுபோல செய்யிறது கடினம்னு கண்டிப்பா உணர முடியும். ஆனா, அதை, அந்த கடினத்தை, நாம மனசால சுலபமா ஏத்துண்டு, ஒன்றுபோல செய்யிறதுக்கு திடமான மனசுதான் வேணும் செல்வி. தவறுகள் வரலாம்.ஆனா, அந்தத் தவற்றை உணர்ந்து நாம திருந்திட்டோம்னு வை,அன்னையோட அருள் நமக்கு மழையா கொட்டும். அதை உன்னால உணரமுடியும் செல்வி''.

"நிஜமாவாக்கா....? அப்படீன்னா.... நானும் எங்க வீட்டை சுத்தமா வச்சுக்கரேங்க்கா.....'' கண்கள் மின்னிட ஆவலோடு கூறும் அவளையே பார்த்தாள்.

"ரொம்ப சந்தோஷம் செல்வி. அட! நீ சொன்னவுடனேயே பூ வந்துடுத்து பாரு. வா, மொதல்ல ஆஞ்சு அடுக்கலாம், வா....''

பூக்களின் மணமும், வண்ணமும் அவளை விகசிக்க வைத்தது.அன்னை, ஸ்ரீ அரவிந்தர் படங்கள் உயிரோடு நம்மையே கருணையோடு பார்ப்பது போலிருந்ததைக் கவனித்து, ஆச்சரியப்பட்டுப்போனாள் செல்வி. அவளையும் அறியாமல் இரு கரங்களும் குவிந்து, கண் இமைகள் மூடின.மூடிய கண்களுக்குள் கண்ணைக் கூசும் வெளிச்சம் பிரவாகமாய் கொட்டுவது போலிருந்தது. அந்த வெளிச்சத்தை அவளால் கண் திறந்து பார்க்கவும் முடியவில்லை. கண் திறந்தால் அந்த ஒளி வெள்ளம் தன்னை விட்டு விலகிவிடுமோ என்கிற எண்ணத்தில் திறக்காமலிருந்தாள்.படிப்படியாய் அந்த வெளிச்சம் குறைந்து கொண்டே வந்தது.கண்களைத் திறந்தாள்; எதிரில் அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் பிரகாசமாகத் தெரிந்தார்கள். கண்களைக் கசக்கி விட்டு மீண்டும் பார்த்தாள். அப்போது பிரகாசமான அன்னையின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அவளுடைய சின்னஞ்சிறு இதயம் துள்ளித் துள்ளிக் குதித்தது. பரவசம் அவளைப் பூராவும் அணைத்துக்கொண்டது. தாங்க முடியவில்லை. மயங்கி, அங்கேயே சரிந்தாள் செல்வி.

"மாலூ... மாலூ, இங்கே வாயேன். இந்தப் பொண்ணப் பாருடி. மயங்கி விழுந்துருக்கு. சீக்கிரம் வாயேன்''.

தண்ணீரைத் தெளித்தாள் மாலதி.

"அம்மா! அவளுக்கு காபி ஏதாவது கொடுத்தியாம்மா?''

"இல்லையேடி.... நீ கொடுத்திருப்பேன்னில்லையா நான் நினைச்சேன்?''

"பாவம்மா. அன்னையைப்பத்திதான் பேசிண்டிருந்தா. பூவும் வந்தது. சரி, பகுத்து தனித்தனியா வைப்போம்னு தட்டெடுக்கப் போனேன்....''

அதற்குள் எழுந்த செல்வி, "அக்கா! என்னக்கா எம்மூஞ்சில்லாம் தண்ணியாயிருக்கு. என்னாச்சுக்கா? புரியலையே.... ஆனா... அக்கா...நிஜம்மா... ஆமாங்க்கா, சத்தியமா எனக்கு ஒரே சந்தோஷமாயிருக்-குக்கா... ஒடம்பெல்லாம் சிர்க்குதுக்கா.... சொல்லத் தெரியலே.... ஆனா....ரொம்ப சந்தோஷமாயிருக்கு.... அதுக்கு மேலே எதையுமே பேசத் தெரியலேக்கா....சொன்ன செல்வி, மாலதியின் கரங்களைப் பிடித்தபடி அன்னை,ஸ்ரீ அரவிந்தர் படங்களை வைத்திருந்த அறையைக் காட்டினாள்.புரிந்தும், புரியாமலும் மாலதி பார்க்க, செல்வியோ, முகமே மலர்ந்த பூவாகயிருக்க, அன்னையை நோக்கிக் கையை நீட்டினாள். வாய் பேச்சேயில்லை. கண்களில் ஆனந்த பாஷ்பம்.

"செல்வி.....'' ஆச்சரியத்தோடு புரிந்துகொண்டவளாய் தலையை ஆட்டி வினவ, பதிலுக்கு செல்வியும் ஆமோதித்தாள். தன் சிரத்தை அசைக்க,அவளை அப்படியே கட்டிப்பிடித்து உச்சிமுகர்ந்தாள்.

"செல்வி.... அன்னையைப் பாத்தியா.... எப்படியிருந்தாங்க? என்ன சொன்னாங்க.... செல்வி.... சொல்லு... சொல்லேன்....''

"அக்கா.... எனக்கு.... எனக்கு... என்ன சொல்றது, எப்படி சொல்றதுன்னே தெரியலே... நான் பூக்கள்ளாம் வந்ததும் அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும் பார்த்து, கண்ணை மூடி வேண்டிக்கிட்டேன். இல்லை.... வேண்டிக்கக்கூட இல்லே.... கண்ணை மூடினதுமே, கண்ணெல்லாம் கூசும்படியா ஒரே வெளிச்சங்க்கா. எனக்கு கண்ணைத் தொறக்கணும் போலிருந்தது. ஆனா, கண்ணைத் தொறந்தா அந்த ஒளி என்னைவிட்டு விலகிடுமோன்னு தொறக்காமலேயேயிருந்தேங்க்கா.அப்புறம், தானாவே அந்த ஒளி குறைஞ்சிட்டே வந்துது. கண்ணைத் தொறந்து பார்த்தேங்க்கா. பார்த்தாக்க.... என்னன்னு சொல்வேங்க்கா....அக்கா....''

மேலே பேசமுடியாமல் மகிழ்ச்சியிலும் அவள் கண்கள் கண்ணீரை வைரமணிகளாக உதிர்க்க.....

"அன்னையே வந்தாங்களா செல்வி....'' ஆச்சரியத்தோடு மாலதி வினவ, "ஆமாங்க்கா.... எப்படி பளிச்சுனு.... அம்மா! எப்டி சொல்றதுன்னு தெரியலேக்கா. அன்னை மட்டுமில்லேக்கா, ஸ்ரீ அரவிந்தரும் கூடவே பளிச்சுனு இருந்தாரு. அன்னையோட முகத்துல ஏகத்துக்கும் ஒளி,பிரகா....சமாயிருக்குக்கா. என்னைப் பார்த்து சிரிச்சாங்க. ஆமாங்க்கா....என்னைப் பார்த்து சிரிச்சாங்கக்கா, சிரிச்சாங்க....''

சொல்லிய செல்வி, மேலே பேசயியலாமல், தன்னையும் மறந்து,மாலதியைத் தழுவிக்கொண்டு கேவிக்கேவி அழுதாள்.செல்வியின் அந்த அழுகை, மேனியில் மட்டுமல்ல; இதயத்திலிருந்து எழுந்த புளகாங்கிதத்தினால் ஏற்பட்ட அழுகை. செல்வியின் முதுகைத் தடவி, உச்சி முகர்ந்து, அவள் தழுவலை ஏற்று, மனபேதம் எதுவுமின்றி, அன்னையைப் பார்த்த மாலதிக்கு,

"அன்னையே.... உங்கள் கருணையே கருணை. நான் பேசக்கூட அருகதையற்றவள். ஒன்றுமறியாத, உங்களைப் பற்றி எதுவும் அறியாத,அந்த ஏழைப் பெண்ணுக்கு நீங்கள் தந்த ஒளியும், புன்னகையும்....ம்மா.... நான் கேட்டே பரவசமாகின்றேனே.... அதைத் தாங்க இயலாமல்,எதிர்பாராமல் உங்கள் தரிசனம், அவளின் சந்தோஷத்தை எல்லை மீறச் செய்து, பேச நா எழாமல், அதீதமான பரவசமும், எதிர்பாரா நிகழ்வுகளும், அவளை மயங்கியே விழச் செய்தது. இன்னும்கூட அவளிடம் அந்தப் பரவசமும், மகிழ்வும் நிலைத்திருக்கிறது. என்றென்றும் அவளுக்கு இதே நிலைமை நிலைத்திருக்க அருள்புரியுங்களம்மா.... அன்னையே சரணம்.... அனனையே சரணம்.... அன்னையே சரணம்.... ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நம, ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நம,ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நம'.மனதை அமைதியாக்கிக்கொண்ட மாலதி, "செல்வி, காபியும்,

இட்லியும் சாப்டுட்டு வா. சீக்கிரமா, நல்ல பூவா பார்த்து அடுக்கணும்.போய் சாப்டுட்டு வாம்மா...'' சொல்லியபடியே, மூங்கில் தட்டுக்களில் பூக்களை ரகம்வாரியாகப் பிரித்து, சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

"அக்கா! தப்பா எடுத்துக்காதீங்க. பசியேயில்லேக்கா. காபி மட்டும் குடிச்சுட்டு வந்துடறேன், சரியா?''

அன்னையின் தரிசனம் அவளைப் பசியற்று, சந்தோஷத்தையே நிரப்பியிருந்தது.

****

சிம்பல் வைத்து முடித்தாயிற்று. சாம்பிராணியும் போட்டாயிற்று. "பிரே'செய்தபின் எல்லாருமாய் சாப்பிட மணி பன்னிரெண்டைத் தாண்டியது.

செல்வி பத்துபாத்திரங்களை தேய்த்து, வீடு பெருக்கி, மீண்டும் துடைத்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பினாள்.

"செல்வி, சாயந்திரமா ஆறு மணிக்குள்ளே வா. இன்னிலேருந்து ஸ்ரீ அரவிந்தர் எழுதின "சாவித்ரி'ங்கற புத்தகத்துலேருந்து தினமும் ஒரு பக்கம் படிக்கலாம். அப்புறமா, பதினைந்து நிமிஷங்கள் தியானம் செஞ்சபிற்பாடு, உனக்குப் பாடம் சொல்த்தரேன். வரேதானே....''

"நிச்சியமாக்கா. கண்டிப்பா வரேன். நீங்க சொன்னாப்பலவே செய்யலாங்க்கா, வரவா?'' சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

வீட்டிற்குப் போகும் வழியெல்லாம் உடம்பே பரபரத்தது; சந்தோஷித்தது; புளகிதத்தது. சரீரத்திலுள்ள அத்தனை நாடி, நரம்புகளிலும் அவளுள் பரவசத்தோடு நர்த்தனமாடியது போலவே இருந்தது. போகும் பாதையும், மரமும், செடி, கொடிகளும் அவளைப் பார்த்து அசைந்து காற்றை வீசுவதுபோல் உணர்ந்தாள். அவைகளுக்கு மனமார நன்றி கூறினாள். காரணம், மாலதி பேச்சுவாக்கில் "ஜடத்திற்கு உயிருண்டு' என்று சொல்லிவிளக்கமளித்தது ஞாபகம் வர, தென்றலை அருமையாக வீசிய இந்த மரஞ்செடி, கொடிகள் உயிருள்ளவையல்லவா? அவைகளுக்கும் நான் "நன்றி' கூற வேண்டாமா?எனத் தோன்றியதை நிறைவேற்றினாள். வீட்டுக்குள் நுழைந்தாள்.

"அக்கா! என்னக்கா... அவுங்க வூட்டாண்டையே நல்லா சோப்பு போட்டு குளிச்சியா.... பளிச்சினு இருக்கியே...'' கணேசு கூறவும்,ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஸ்தம்பித்துத்தான் போனாள் செல்வி. உடனே கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள்.

"ஆமாம்.... இன்னிக்குப் பளிச்சுனுதான் இருக்கேன். நம்ம சந்தோஷம்,

அன்னையோட பார்வையால, நமக்கு இந்தத் தெளிவான முகத்தைக் கொடுத்திருக்காங்கபோல. அன்னையே! என்னிக்கும் நீங்கதான் எனக்குத் துணையாக கூடவே இருக்கணும்மா.... தாயே....'' மனமார வேண்டினாள் செல்வி.

****

கணேசுக்கும், பொன்னிக்கும் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி,நல்லதனமாகவே கண்டித்துக் கூறினாள் செல்வி. அது மட்டுமா, அவரவர் புத்தகங்களையும் ஒழுங்காக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்; எப்போதும் அழுக்காகவோ, தலை கலைந்தோ, பரக்காவட்டி போல இருக்கக் கூடாது என்பதையும் தெளிவாகப் புரியும்படிக் கூறினாள்.தலையை ஆட்டி, ஆட்டி இருவரும் ஆமோதித்தார்கள். அதேபோல ஒருவர் மறந்தாலும், "ஏய், செல்விக்கா திட்டும். பாரு, புத்தகப்பையை இப்டி வீசிருக்கியே....' என்றும், "தலைசீவாம, மொகம் கழுவாம, இப்டி பறட்டையாயிருக்கியே... செல்விக்கா வர நேரமாச்சு, பொன்னி'என கணேசும், ஒருவருக்கொருவர் தவற்றைக் கூறித் திருத்திக்கொண்டனர்.

ஆண்டாளுக்கோ வியப்பான வியப்பு. "இது என்ன, நம்ம இந்தக் குட்டியூண்டு வீடு, வரவர சுத்தமாயிருக்குதே. செல்விதான் பெரியவ,பத்தா....வது படிக்கிறவ. நல்லா டிரஸ் செய்துக்குவா. சுத்தபத்தமாயிருப்பா.வயது வேறே அப்படி. ஆனா.... கொஞ்ச நாளா.... இந்தக் குட்டிங்களும் எப்பவும் நீட்டாயிருக்குதுங்களே. எடுத்ததை, எடுத்த எடத்துல வைக்குதுங்க. தலையை ஒழுங்கா சீவிக்குதுங்க. என்னாச்சு? நம்ம வீட்டுல மாயமந்திரம்போல நடக்குதே. இது என்னாடி அதிசயமாய் இருக்குதே....' முகவாயில் கை வைத்து அலமலந்துபோனவளுக்கு,நிஜமாகவே புரியவில்லைதான். ஆனால் மனசுக்குள் சந்தோஷம் பொங்கித்தான் வழிந்தது.

செல்வி வேலைகளை முடித்து, பாடமும் கற்றுக்கொண்டு,அன்னையையும் வேண்டி, வீட்டுக்குள் அப்போதுதான் நுழைந்தாள்.

தம்பி கணேசன் தன் பாடத்தைப் படித்துக்கொண்டிருக்க, பொன்னி துணிமணிகளை அழகாக நீவி, மடித்துக்கொண்டிருந்தாள். எல்லாமே வேலை செய்யும் வீட்டில் கொடுத்த துணிகள்தாம். ஆனாலும், அதையும் துவைத்து, காயப்போட்டு, மடித்து வைக்கும்போது, அந்தத் துணிகளுக்கும்

ஒரு வனப்பு, ஓர் அந்தஸ்து வந்ததைப்போல் உணர்ந்தாள் செல்வி.அன்னையை மனதுள் நிறுத்தி, "உங்களையறிய வைத்த மாலதி அக்கா குடும்பமும், அறிந்துகொண்டு, என்னாயன்றவரை என் குடும்பத்தினரும், நானும் தெரிந்த கோட்பாடுகளை கட்டுப்பாடோடு ஏற்கிறோம், நடக்கிறோம் அன்னையே.... அன்னையே சரணம்,சரணமம்மா.....' பிரார்த்தித்தாள்.

அப்போதுதான் முருகேசு தள்ளாட்டத்துடனும், குப்பென்ற சாராய வாடையுடனும், தடுமாறியபடி வந்தான்.முகம் சுளித்தாள் செல்வி. சட்டென தலையையாட்டி மறுத்தாள்.மனதில் ஒரு திடமான உறுதி அவளுக்குள் பொங்கியெழுந்தது.

"அன்னையே! உங்களுடைய துணையின் பலத்தோடு, தள்ளாடிவரும் என் தகப்பனை நேராக, நேர்வழியில் நடக்கும்படிச் செய்வேன். என் குடும்பம் எந்தத் தீயசக்தியையும் அணுகவிடாது இருக்க அருள்புரியுங்கள் அம்மா. எனக்கு, அதற்குண்டான தைரியத்தையும், வழிமுறையையும் காட்டுங்கள் தாயே.... அன்னையே.... சரணம்.... அன்னையே சரணம்...''நின்ற இடத்திலேயே நின்றபடி, மனதில் அன்னையை நிறுத்தி உருகி உருகி வேண்டி நின்றவளின் விழிகளிலிருந்து முத்துகள் சிதறின.

****

"அக்கா! அக்கா! ஏதாவது வேலையிருக்காக்கா. நீங்க கொடுத்த

"ஸம்'மையெல்லாம் போட்டுட்டேன். சரியான்னு பாக்கறீங்களாக்கா''.

"என்ன! போட்டுட்டியா... அட... சரி குடு. செக் பண்றேன். நோட்டைக் குடு...''

பார்த்த மாலதி வியந்துபோனாள். கணக்கில் ஒரே ஒரு தவறுதான் மற்றனவெல்லாம் தெளிவாக எழுதியிருந்தாள் செல்வி.சந்தோஷம் கரைபுரண்டது மாலதிக்கு.

"செல்வி, நன்னா "பிக்கப்' பண்ணியிருக்கே. "கீப் இட் அப்'. புரிஞ்சுதா."போர்டு எக்ஸாம்'லே நீ "சென்டம்' வாங்கணும். பள்ஸ் டூவுல ஆரம்பத்துலேருந்து சொல்லித்தரேன். நன்னா பண்ணுவே. இனிமே நான் உன்னோட இங்கிலீஷ்லதான் பேசப்போரேன். நீயும், அதுக்குப் பதில் இங்கிலீஷ்லேயேதான் தரணும், புரிஞ்சுதா....''

"அக்கா.... என்னக்கா நீங்க... என்னால... இங்கிலீஷா.... முடியுமா?''சொல்லியவள் உடனே, "தப்பு... நான் இப்டி பேசறது தப்பு. ஸாரிக்கா.

அன்னைகிட்ட சொல்லப்போரேன். ஆமாங்க்கா, "அக்கா எனக்கு இங்கிலீஷ்ல பேசக் கத்துத் தரப்போறாங்க. நீங்க எனக்கு "ஹெல்ப்'பண்ணணும்'னு வேண்டிகிட்டு கத்துகிட்டா, நல்லா பேசப்போரேன்,

அவ்வளவுதானே. சரிக்கா... எனக்கு பயமில்லே. வெட்கமும் படமாட்டேன்.

தப்பானா திருத்தறத்துக்கு நீங்க இருக்கீங்க. எனக்கு நல்ல ஞாபகசக்தி தரதுக்கு அன்னை இருக்காங்க. இதுக்குமேலே என்ன? என்னிக்குக்கா ஆரம்பிக்கலாம்?...''

கேட்ட செல்வியின் ஆர்வம், மாலதிக்கு வியப்பையும், அன்னையின் பால் அவள் வைத்திருக்கும் பக்தியும், நம்பிக்கையும் பார்த்து

மெய் சிலிர்த்துத்தான் போனாள்.

"அக்கா! நான் ஒண்ணு கேப்பேன், தருவீங்களா?''

"கேளு செல்வி... என்ன வேணும்? தயங்காதே சொல்லு....''

"அக்கா.... அக்கா.... எங்க வீட்டுலயும்... அன்னை, ஸ்ரீ அரவிந்தர்

ரெண்டு பேரையும் வச்சுக் கும்புடணும்னு ஆசையா இருக்குக்கா....ஆனா... ஒண்ணாந்தேதி நிறைய்ய பூ வாங்கி, சிம்பல் வைக்கல்லாம் முடியாதேக்கா... பரவாயில்லையா? நான் ரொம்ப ஆசைப்படறேனாக்கா?தப்பில்லையே?''

கண்களில் ஆர்வம் மீதூற, அதே சமயம் தன்னுடைய இயலாமையையும் உணர்ந்து தவிக்கும் அந்தச் சிறுமியின் இளம் இதயத்தை நினைத்துக் கண்களில் நிரம்பியதை, அப்படியே உள்ளுக்குள் தள்ளினாள் மாலதி.

"செல்வி, கண்டிப்பா, நிச்சியமா அன்னை, ஸ்ரீ அரவிந்தரை உங்க வீட்டுல வச்சு கும்பிடலாம். தப்பேயில்லேம்மா. அன்னைக்குப் பெரிய பங்களாவோ, மாடிவீடோதான் தேவைன்னு சொல்லவேயில்லையே.உன்னோட மனசுல வச்சு, நீ நினைச்சுண்டாகூட போறுமே. உன்னோட எப்போதுமே துணையா வருவாரே. நீ சிம்பல் வச்சு, பூ அலங்காரம் பண்ணினாத்தான் அருளைத் தருவேன்னு சொன்னாரா?.... இல்லையே.தட்டு நிறையவோ, வீடு நிறையவோ பூக்களை வச்சாத்தான் அருளை அள்ளித் தருவார்ங்கறதெல்லாம் இல்லை செல்வி. வழியில செடியில பார்த்து, அந்த ஒரு பூவைக்கூட நீ அன்போட, ஆசையோட, பக்தியோட அன்னைக்கு சமர்ப்பணம் பண்ணி வை செல்வி. அதுக்குண்டான பலனை நீயே உணர்ந்துப்பே. உதாரணமா கிருஷ்ண துலாபாரம் கதை தெரியுமா செல்வி?''

"இல்லை, தெரியாது' என்பதுபோலத் தலையசைத்தாள் செல்வி.

"கிருஷ்ணரை பெரிய தராசுல உக்காத்தி வச்சு, அவங்க மனைவிங்கள்ள சத்தியபாமா, அகம்பாவத்தோட, தன்னோட நகைங்க அத்தனையையும் இன்னொரு தட்டுல வச்சாங்க. நகைங்கன்னா சும்மாயில்லே.....ஏகப்பட்டது.வைரம், வைடூரியம், முத்து, பவளம், கோமேதகம்னு, மரகதத்தோட அள்ளி வச்சாங்களாம். ம்ஹும்.... தராசுத்தட்டு அப்படியே இருந்ததாம்.கொஞ்சம்கூட அசையவேயில்லே. அப்போ, கிருஷ்ணரோட இன்னொரு மனைவி ருக்மிணி வந்தாங்களாம். "சரி, நீயும் வையி'ன்னு சொல்லி- யிருக்காங்க. அவங்க, கிருஷ்ணரையே மனசுல நினைச்சு, துளசிதளத்தை (இலையை) வச்சு, வேண்டியிருக்காங்க. அத்தனை குமிஞ்சிருக்கிற நகைகளுக்கு அசையாத தராசுத்தட்டு, இந்த ஒரு துளசிதளத்தை வச்சதும் சரிசமமா நின்னுதாம். உனக்கு இதுல என்ன புரிஞ்சுது....சொல்லு, செல்வி''.

"ருக்மிணிம்மா, கிருஷ்ணரை மனசார பக்தியோட நினைச்சு கும்பிட்டு வச்ச துளசிக்கு அத்தனை சக்தியிருக்குன்னு புரியுதுக்கா. அதோட மனசார செய்யிற பக்திக்கு ஈடு, இணையில்லேன்னும் புரியுதுக்கா.நான் சொன்னது சரியாக்கா?'' ஆவல் மின்னும் கண்களோடு, துடிப்போடு

கேட்ட செல்வியை, "சபாஷ் செல்வி. இப்ப உனக்கு பக்திக்கும்,மத்ததுக்கும் வித்தியாசம் தெரிஞ்சுதா? புரிஞ்சிண்டியா....''

"நல்லாவே புரிஞ்சுதுக்கா. இனிமே எனக்கு சந்தேகமே வராது.தெள்ளத்தெளிவா சொல்லிட்டீங்க. பக்தி, சமர்ப்பணம், சரணாகதி இந்த

மூணுமே நம்ம மனசுலேருந்து வரணும். அதுதான் அன்னைக்குப் பிடித்தமானதுன்னு புரிஞ்சுகிட்டேங்க்கா....''

"இன்னிக்கு நீ வீட்டுக்குப் போறப்ப ஸ்ரீ அரவிந்தர், அன்னையை உங்க வீட்டுக்கு, உன்னோடயே கூட்டிக்கிட்டுப் போகலாம். நானும் வரட்டா?....'' மாலதி கேட்கவும், செல்வி திக்குமுக்காடினாள் சந்தோஷத்தில்.

"அக்கா.... வாங்கக்கா.... வாங்க... நீங்களே எடம் பார்த்து, அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும் உக்கார வையுங்க. ரொம்ப சந்தோஷங்க்கா. எனக்கு என்ன பேசறதுன்னே புரியலேக்கா....''

மாலதியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கேவினாள் செல்வி.

****

"சின்னஞ்சிறிய வீட்டில் சந்தோஷமாய் வந்து உட்கார்ந்தே விட்டார்கள் அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும். மாலதியே கொஞ்சம் பூக்களை வீட்டுத் தோட்டத்திலிருந்து எடுத்துவர அதை அடுக்கினார்கள். ஊதுவத்தியும் ஏற்றி, மாலதியும், செல்வியும் உட்கார, கணேசும், பொன்னியும் அமர்ந்தார்கள். மௌனம் அங்கு ஆட்சி செய்தது.விழிப்பு வந்தது செல்விக்கு. அவள் அம்மா ஆண்டாளும் இமைகள் மூடி, பிரார்த்திப்பதைப் பார்த்தாள். மகிழ்ச்சியில் கண்கள் பனித்தன.மாலதியும் கலைந்து எழ, பொன்னியும், கணேசும் கும்பிட்டு எழுந்தார்கள்.

அப்போதுதான் எழுந்த ஆண்டாளு, "இருங்க சின்னம்மா.காபித் தண்ணி வாங்கியாறட்டா'' அன்போடு கேட்க, "இல்லே ஆண்டாளு,வீட்டுக்குப் போகணும், நாழியாச்சு. வரேம்மா.... டேய் கணேசா, நீயும்,பொன்னியும் நல்லா படிங்க, புரிஞ்சுண்டீங்களா? சரி, ஆண்டாளு போய்ட்டு வரேம்மா''. அவள் கிளம்பும்போது தான் ஆண்டாள், "ஒரு

நிமிஷத்துல வரேன், உக்காந்துக்குங்கம்மா''.

விரைந்து வெளியே போன ஆண்டாளு, ஒரு பேப்பர் கவரைக் கொண்டு வந்து மாலதியின் கையில் தந்தாள்.

"மாலுகண்ணு.... உனக்கு ஏதாவது தரணும்னு மனசுல தோணுனாலும், வீட்டுல இருப்பு சரியில்லே. அதான் கடையில வாங்கியாந்தேன். உக்காந்து தின்னுட்டுப் போங்கம்மா.... செல்வி.... சொல்லு செல்வி....'' ஆண்டாளு கூறினதுமே அந்தக் கவரைப் பிரித்தாள். அதில் வேர்க்கடலை உருண்டைகள்.

மாலுவின் மனதில் குசேலர் வந்தார். கண்ணீர் ததும்பியது. வெடித்து வந்தது விம்மல். அடக்கினாள். அன்பு என்பது, யாரிடம், எப்போது வரும் என்பது நம்மாலேயே அறியமுடியலையே.... எத்தனை நல்ல இதயம்? எத்தனை வாஞ்சை.

அப்படியே அன்னையின் முன் வைத்தாள். கண்களை மூடித் திறந்தாள். கணேசன், பொன்னி, செல்வி, ஆண்டாளு என எல்லோருக்கும் கொடுத்துத் தானும் உண்டாள். முருகேசுவுக்கும், செல்வியிடம் கொடுத்துவிட்டாள்.

"வரேம்மா.... எல்லாருக்கும் போய்ட்டு வரேன். வரட்டுமா செல்வி...''

****

முருகேசு என்றும் போல் தள்ளாட்டத்துடன் வந்தவன் கண்களில் அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் பட்டனர்.

"ஏய்! யாருடி இந்தப் படத்தை மாட்டுனது? ....... இப்ப என்ன பண்றேன் பாரு..... சிறுக்கிங்க.... வூட்டுல.... இருக்காளுங்களா.... இல்லையா.....என்னென்னமோ.... வூட்டுக்குள்ள கொணாந்துடறாங்க....'' கத்தினான்.

யாரும் வாய் திறக்காமல் மௌனமாயிருந்தனர்.

"இன்னாங்கடி... வாய் தொறக்கலேன்னா.... வுட்டுடுவேனா.... கண்ட,கண்டதையெல்லாம்....'' மேலே அவன் வாய் தொறக்காதபடி, அவன் வாயைத் தன் கைகளால் பொத்தினாள் செல்வி.வெறிபிடித்தவன்போல் அவள் கைகளைத் தூரத் தள்ளினான். படத்தை எடுத்து வீசும் எண்ணத்துடன் அருகே சென்றான்.

செல்வியும், ஆண்டாளும் பயந்து தான் போனார்கள். அவனை ஆளுக்கொரு கைபிடித்து, இழுத்து வெளிவராந்தாவில் தள்ளிவிடலாம் என்றே நினைத்தனர். அதற்குள் என்ன நடந்தது, ஏது நடந்தது என்று

எவருக்கும் புரியாமல் நின்றார்கள். செல்வியின் வாய் "அன்னையே சரணம்' என்று ஜபித்தபடி இருந்தது. கண்களிலிருந்து பிரவாகமாய் கொட்டியது. எந்த நேரத்திலும் படத்தை என்ன செய்துவிடுவானோ என்கிற அச்சம் ஆண்டாளுவின் கண்களில் தெரிந்தது. ஆனால் செல்வியோ அப்படியே தூண்போல் அசைவில்லாமல் நின்றாள். இமைகள் மூடியிருந்தன. வாய் "அன்னையே சரணம்' சொல்லியபடியிருந்தது. இரு கரங்களும் கூப்பியிருந்தன. மூடிய இமைகளிலிருந்து நீர்த்தாரைகள் வழிந்தபடியேயிருந்தன.

தள்ளாட்டத்துடன் அடியெடுத்து வைத்த முருகேசன், அப்படியே ஆடியபடியே நின்றான். கண்களைக் கசக்கியபடி, சிவந்த கண்களுடன் பார்வையைத் தீவிரமாக்கினான்.

இது என்ன மாயம்? அங்கு எந்தப் படமும் அவன் கண்களுக்குத்

தெரியவில்லை. மீண்டும், மீண்டும் ஆடிய சரீரத்துடன் கண்களைக் கசக்கியபடி மூடி, மூடித் திறந்தபடி பார்த்தான். கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை.

"என்னாங்கடி.... என்னைய.... ஏமாத்துறீங்களா..... பொட்டை....றா....''அதற்கு மேல் அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தை என்றால், ஒரு வார்த்தைகூட எழவில்லை.ஆண்டாளு ஒன்றும் புரியாமல் நின்றாள். உடல் நடுங்கியது. என்ன செய்ய போகிறானோ என்ற எண்ணத்தில் உறைந்துபோனாள்.செல்வியோ.... அதே நிலையில், நின்ற இடத்தைவிட்டு அசையாமல்,அன்னையே சரணம் கூறியபடியேயிருந்தாள்.

மீண்டும், மீண்டும் முருகேசு அன்னை, ஸ்ரீ அரவிந்தரிடம் போனான்.

இப்போது கண்ட பேச்சுக்களோ, குளறலோ, சத்தமோயில்லை. போனவன்,

ஏன் இப்படி? தன்னை யாரோ, தன்னையே பார்ப்பதுபோல் உணர்கிறானா? இல்லை என்ன ஆகிறது அவனுக்குள்? மீண்டும் பின்னே வருகிறான்! மறுபடி முன்னே போகிறான்.... மீண்டும் பின்னடைகிறான்.

மூச்சுக்காட்டாமல் நின்றாள் ஆண்டாளு. செல்வி இன்னும் அதே நிலையில் தான் இருந்தாள்.

மறுபடியும் ஒரு வேகத்தோடு போனவன், "அம்மா....'' என்ற பெரிய கூக்குரலோடு நெடுஞ்சாண்கிடையாக விழுந்தவன் எழுந்திருக்கவே இல்லை.

பதறிப்போனாள் ஆண்டாளு.

செல்வி "அம்மா' என்ற சத்தமான குரலைக் கேட்டு, விதிர்விதிர்த்து கண்களைத் திறந்தாள். அன்னை, ஸ்ரீ அரவிந்தரை வணங்கினாள்.முருகேசு, அவர்கள் முன் கீழே வணங்குவது போல் விழுந்திருப்பதைப் பார்த்தாள். தாயின் மிரண்ட முகத்தைப் பார்த்தாள். சத்தம் செய்யாமல்,ஜாடையிலேயே அம்மாவை அழைத்து, தண்ணீரைக் கொணர்ந்து அப்பாவின் முகத்தில் தெளித்தாள்.சிலிர்த்தான் முருகேசன். ஆனால், எழுந்திருக்கவில்லை. மீண்டும் இன்னொரு முறை தெளித்தாள். புரண்டு எழுந்தவன் அன்னை, ஸ்ரீ அரவிந்தர் அருகில் வேகமாகச் சென்றான்.ஆண்டாளுவின் முகத்தில் திகில். செல்வியோ பயமின்றி அன்னையைப் பார்த்தபடி நின்றாள்.வேகமாகச் சென்ற முருகேசு, சட்டென நின்றான். ஸ்ரீ அரவிந்தரையும், அன்னையையுமே கண்கொட்டாமல் பார்த்தான். இரு கரங்களும் அவனுடைய ஆணையின்றியே சேர்ந்து குவிந்தன.

அவனுடைய விழிகளிலிருந்து கண்ணீர் கொட்டியது. உதடுகள் துடித்தன.சரீரத்தில் ஏற்றியிருந்த போதை காணாமலே போனது.

"அம்மா! அம்மா! அம்மா!'' உதடுகளிலிருந்து வேறு வார்த்தைகளே வரவில்லை.

மீண்டும் விழுந்து கும்பிட்டவன், புரண்டு, புரண்டு அழுதான்.மனதிலுள்ள வேண்டாத கசடுகள் முழுவதும் கரையும்வரை அழுது புரண்டான் முருகேசன்.

கணவனின் அருகில் போக எத்தனித்த ஆண்டாளை, பார்வையாலேயே தடுத்தாள் செல்வி. ஆனால் இதயத்தின் துடிப்பு என்னமோ,

"அன்னையே சரணத்தை'யும், "ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய'என விடாமல் ஜபித்துக்கொண்டிருந்தது.

புரண்டு, புரண்டு அழுத முருகேசனைப் பார்க்கப் பார்க்கப் பரிதாபமாகயிருந்தது. இவர்களின் மனமும் கூடவே புரண்டது.ஒருவிதமாக, முருகேசன் தானே எழுந்தான். தலைகுனிந்து ஆண்டாளினருகில் வந்து நின்றான்.

மீண்டும் அழுகையில் கரைந்தான். மனைவியின் கைகளைப் பிடித்தபடி, தன் முகத்தைப் பொதிந்து குலுங்கினான். கூடவே ஆண்டாளும் கலங்கினாள்.

பிறகு மகள் செல்வியினருகில் வந்தான் முருகேசு.

ஆடாமல், அசையாமல் நின்ற மகளை, ஆவேசத்தோடு தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு, "செல்வி, செல்விம்மா... கண்ணு...மன்னிச்சுடுடா..... கண்ணம்மா..... இத்தன நாளு.... நாளு.... நாளு.... குடிச்சு....கண்ணுகுட்டிகளா.... தப்பு.... தப்பு.... பண்ணிட்டேனே.....ம்மா.... எத்தனை....எத்தனை..... பாவம்.... பாவம்.... செஞ்சு.....'' மேலே பேச்சு வராமல் மயங்கி வீழ்ந்தான்.

குடியினால் பலகீனமடைந்திருந்த சரீரம், உணர்ச்சிவயப்பட்டதில்,அதைத் தாங்கயியலாமலேயே மயங்கி வீழ்ந்தான்.ஒரு பக்கம் அதிர்ச்சி; மறுபக்கம் ஆச்சரியம் என்று இனம்புரியாத கலவையான உணர்ச்சிகளில் சிக்கித்தவித்த தாயும், குழந்தைகளும் ஒருவரையொருவர் பிணைத்துக்கொண்டு அழுதார்கள். ஆனால், அதில் துளிக்கூட துக்கமில்லை. இதைத்தான் சந்தோஷ அழுகை என்பார்களோ.... எதிர்பாராத மகிழ்ச்சியில் கண்களில் வரும் துளிகள் இதுதானோ!...

பொன்னி குவளையில் நீரைக் கொணர்ந்து, தந்தையின் முகத்தில் தெளித்தாள். எழுந்து உட்கார்ந்த முருகேசு, மகளின் கையிருந்த குவளையை வாங்கித் தண்ணீரை கடகடவென்று குடித்தான்.

"செல்வி..... செல்வி....''

"அப்பா.... பசிக்குதா.... சாப்பிட ஏதாச்சும் கொண்டுவரவாப்பா...''

"வேணாம்மா... செல்வி.... இன்னைக்கு.... செல்வி... என்னாச்சுன்னு தெரியுமாம்மா.... செல்வி... நானு.... பாவிம்மா... இவுங்க... இவுங்க....தெய்வம்னு தெரியலையே.... அம்மாடி.... என்னன்னு சொல்வேன்... தப்பு....எந்தப்பு புரியுதும்மா....''

"அப்பா....'' செல்வி ஆச்சரியத்துடன் தகப்பனையே பார்த்தாள்.சொல்லட்டும், என்ன நடந்தது எனத் தானாகவே சொல்லட்டும்.மௌனமாகவேயிருந்தாள்.

"செல்வி! இந்த.... இந்தப் படத்தைப் போட்டு உடைக்கணும்னு தான் போனேம்மா.... அப்பத்தான் ஒரு அதிசயமே நடந்துபோச்சு கண்ணு.....''மீண்டும் கண்களைத் துடைத்து, முகம் சிவக்கக் கூறினான் முருகேசு.

"அப்பா.... அப்பா.... என்னப்பா சொல்றீங்க?''

"செல்வி கண்ணு, நான் கிட்டே போனேனா.... அப்போ.... அப்போ....''மேலே பேச முடியாமல், பேச்சு வாராமல், உடைந்துபோய் அழுதான் முருகேசு.

"அப்பா! சொல்லுங்கப்பா.... என்ன நடந்துச்சு சொல்லுங்க....''

"சொல்றேம்மா.... சொல்றேன்.... இன்னும் என்னால அந்தக் கண்கள,

அந்தப் பார்வையை.... ம்..ஹும்... முடியலே.... முடியலே....''

"அப்பா! கண்களா..... பார்வையா..... சொல்லுங்கப்பா...'' அருகிருந்த குவளையிலிருந்து மடக்மடக்கென்று நீரைக் குடித்தான்.

"செல்வி, உங்களைத் திட்டிகிட்டே, படத்தைத் தூக்கி எறிஞ்சு வீசணுங்கற வெறியோட போனேனா.... அங்கே ரெண்டு படமும் இல்லேம்மா. ஆமாங்கரேன்.... ஆனா.... ரெண்டே ரெண்டு கண்ணுங்க மட்டும்..... அந்தம்மா முகமே மறைஞ்சுபோயி, பெரிசாகிட்டே வந்தது.என்னையே பாத்துது. அந்தக் கண்களோட வீர்யத்தை என்னால தாங்க முடியலே கண்ணு... தாங்கமுடியலே.... பின்னுக்கு வந்தேன். எனக்கு ரொம்பவே பயமாயிருந்தது. ஆனா, திரும்பத் திரும்ப, அந்தக் கண்ணுங்க, நானு எந்தப் பக்கம் திரும்புனாலும் எம் முன்னாடியே நின்னுது செல்வி. என் ஒடம்புக்குள்ளே என்னென்னமோ நடக்குது.

அந்த ரெண்டு கண்ணுங்களும் திடீர்னு... என்னைப் பார்த்தபடியே...பார்த்துகிட்டே வந்துதா..... தாங்காம..... அம்மா.... அம்மான்னு.... கத்தணும் போல தோணுச்சு. கண்ணைத் தொறந்தா அந்த அம்மாவோட கண்ணுங்கதான் தெரியுதேகண்டி, வேறே எதுவுமே..... தெரியலேம்மா....ஆனா... மொதல்லே இருந்துச்சே, பயம்.... அது அப்பாலே இல்லேம்மா....அப்புறமா, அந்தத் தெய்வங்களோட முகங்களும் பளிச்சுனு தெரிஞ்சுச்சு.ஒரே அளுகைதாம்மா பொங்கிப் பொங்கி வந்துச்சு....'' மேலே பேச முடியாமல் மீண்டும் கண்ணீர் பொங்கியது.

"வாங்கப்பா! கொஞ்சமாவது சாப்டாத்தான் தெம்பு வரும். அப்பா!மொதல்ல நல்லா குளிச்சிட்டு வாங்க. துவைச்ச உடுப்பைப் போட்டுகிட்டு சாப்பிட வாங்கப்பா....'' இதமாக அழைத்தாள் செல்வி.

"ம்...ஹும்.... வேணாம்மா.... எத்தினி வருசமா.... நான் குடிகாரனா-யிருந்து, குடும்பத்தைக் கவனிக்காம கொள்ளாம போட்ட ஆட்டம்.....கொஞ்சமா.... நஞ்சமா.... ஆண்டாளு.... எப்டி ஆண்டாளு சமாளிச்சே.....புரியலையே.... இவங்க யாரு? எந்த ஊரு சாமி? தெரியலையேம்மா....ஆனா ஒண்ணு.... செல்வி.... அந்த ரெண்டு கண்ணுங்களும்.... அப்பப்பா.... இப்ப நெனச்சாக்கூட ஆண்டாளு.... என்னைய பெத்த ஆத்தா, சின்ன வயசுல வெளியில பசங்களோட சண்டை போட்டுகிட்டு வந்தா, என்னைய தண்டிப்பாங்களே.... அப்ப... அவங்க ரெண்டு கண்ணுங்களும்....இப்டித்தானிருக்கும் ஆண்டாளு..... ஆமாம்.... இவங்க என் ஆத்தாளும்,அப்பனும்தான். ஆமா செல்வி.... ஆமா...'' மீண்டும் அழுதபடி விழுந்து கும்பிட்டான்.

"செல்வி, எங்கம்மா திட்ட மட்டுமில்லே... ஒரு தபா நல்லா சூடும் வச்சுது. இனிமே தப்பு செய்வியாடா.... செய்வியான்னு சொல்லிகிட்டே கரண்டிய காச்சி சூடு இளுத்துடுச்சு. அப்ப அம்மா கண்ணு எப்படி இருந்துச்சோ.... அப்படியே இருந்துது செல்வி... சத்தியமா அடிச்சு சொல்றேன், இவங்க என் அம்மாதான்.... அம்மாவேதான்...''

"சரி, சரி.... குளிச்சுட்டு வாங்கப்பா.... வாங்க....'' செல்வி கூறவும்,ஆண்டாளு, அவனை எழுப்பி அழைத்துப்போனாள். செல்வியும்,பொன்னியுமாய், முருகேசு விழுந்து புரண்ட இடத்தை நன்கு துடைத்தனர்.

மறுபடியும் ஊதுவத்தி ஏற்றி வைத்த செல்வி, பொன்னி, கணேசனைக் கூப்பிட்டு, "அப்பா இனிமேல் எப்போதுமே குடிக்கக்கூடாது என வேண்டிக்கலாம்.... சரியா... வாங்க'' எனவும், மூன்று பேரும் அமர்ந்து,

கண்களை மூடி, மனமிளகி பிரார்த்தித்தார்கள்.

அதே சமயம் குளித்துவிட்டு வந்த முருகேசனும், ஆண்டாளும் சந்தடியில்லாமல் அமர்ந்தனர்.

****

நாட்கள் பறந்தன. முருகேசுவை அவனுடன் குடிக்கும் நண்பர்கள் கூப்பிட்டாலும், அவனுக்காகத் தாங்கள் செலவழித்துக் கொடுப்பதாகக் கூறினாலும், அவன் அசரவில்லை. எப்போது சபலம் ஏற்படுகிறதோ,நண்பர்கள் வற்புறுத்துகிறார்களோ.... அப்பொழுதெல்லாம் அவன் தன் கண்களை மூடிக்கொள்வான். மூடிய விழிகளில் அன்னையின் கண்கள்,தன்னைப் பெற்றவளின் கண்களைப்போலவே தோன்றும். தன் தலையைத் தானே மறுப்பதுபோல் அசைப்பான். மீண்டும், மீண்டும் அந்தக் கண்களையே தன் மனக்கண்கள் முன் தோற்றுவிப்பான். இதயமோ இப்போதெல்லாம் "அன்னையே சரணம், அன்னையே சரணம்' என்றுதான் துடித்தது.

"இப்படிகூட நடக்குமா? இதென்ன சினிமாவா? டிராமாவா?உண்மையில் நடக்குமா?' இத்தனை கேள்விகள் நம்முள் எழுவது இயல்பே. காரணம் வெகுசாதாரணமான மனிதர்களாகிய நமக்கு, நல்லதையும் சரி, அல்லாதவையும் சரி, உடனே ஏற்றுக்கொள்ளவோ, நம்பவோ மனம் உடன்படுவதில்லை என்பதே நிஜம். ஆனால்.....


 

"அன்னை' என்றால் "நம்பிக்கை'.


 

"அன்னை' என்றால் "தயாளம்'.


 

"அன்னை' என்றால் "அன்பு'.


 

"அன்னை' என்றால் "தூய்மை'.


 

"அன்னை' என்றால் "பொறுமை'.


 

"அன்னை' என்றால் "சத்தியம்'.


 

"அன்னை' என்றால் "அபரிமிதம்'.


 

"அன்னை' என்றால் "அருள்'.


 

"அன்னை' என்றால் "அதிர்ஷ்டம்'.


 

"அன்னை' என்றால் "பேரொளி'.


 

"அன்னை' என்றால் "ஐஸ்வர்யம்'.


 

"அன்னை' என்றால் "தென்றல்'.


 

"அன்னை' என்றால் "மஹேஸ்வரி'.


 

"அன்னை' என்றால் "மகாகாளி'.


 

"அன்னை' என்றால் "மகாலக்ஷ்மி'.


 

"அன்னை' என்றால் "மகாஸரஸ்வதி'.


 

இன்னும் அன்னையின் அவதாரங்களைப் பற்றிக் கூற எத்தனையோ உள்ளன. ஆனால் நாம் கடைபிடிப்பதோ... நம் தேவைக்கேற்ப, அந்தந்த நேரத்திற்குத் தீவிரமாக வேண்டுகிறோமே தவிர, எப்போதும் நாம்

"அன்னையே சரணம்' என்பதை நம் நாபிக்கமலத்திலிருந்து, இதயம் தாண்டி, நம் சரீரத்தில் பூராவுமாக பரவி, மனதிருந்து வெளிவருவதே உண்மையான, உசிதமான பிரார்த்தனையாகும். நம் மேனிசிர்க்கும்; மனம் புளகிக்கும்; எல்லையில்லா ஆனந்தம் பிரவாகமாகக் கண்களிலிருந்து நீரைப் பெருக்கும்; நாமே எடையற்று இருப்போம்.பணம், காசு இருந்தால்தான் தெய்வம் நம் அருகே வரும் என நினைப்பது மிகப்பெரிய தவறாகும்.அன்னை, மனம் கனிந்த பக்திக்கும், நேர்மையான, மனம் திறந்த பிரார்த்தனைக்கும் நிச்சயமாக வருவார்.


 

அடுத்த இதழில் முடியும்.....


 

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனம் தன் பலனைப் பெற நெடுநாளாகிறது. பிராணனுடைய ஆசை உடன் பலன் தருகிறது. செயல் உடனே பூரண பலனை அளிக்கிறது.

செயலுக்குப் பலன் கைமேல்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

எதை நாம் நாடுகிறோம் என்பது நாம் யார் என்பதை நிர்ணயிக்கும்.

நாடுவதே நாம்.

ஸ்ரீ அரவிந்த சுடர்


 

அன்புக்குக் கட்டுப்படுவதைவிட மனிதன் அதிகாரத்திற்குக் கட்டுப்படுவான். உயர்ந்த மனிதன் தன்னைப் பிறர் அதிகாரத்-திற்கும் அன்பால் கட்டுப்படுத்திக்கொள்வான்.

அதிகாரத்திலும் அன்பைக் காண்பது அமிர்தமான இதயம்

(Iswara Sakthii).


 


 



book | by Dr. Radut