Skip to Content

10.ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

                                    (சென்ற இதழின் தொடர்ச்சி....)             N. அசோகன்

101.கம்யூனிச அரசியல் அமைப்பு சுதந்திர முதலாளித்துவத்தை விட உயர்ந்த அமைப்பாகும். கம்யூனிசத்தை மக்கள் தாமே முன்வந்து ஏற்றிருந்தால் அது நிலைத்திருக்கும். ஆனால் சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் அரசாங்க நிர்ப்பந்தம் கம்யூனிசத்தின்மேல் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட வைத்துவிட்டது.

102. ஏழ்மை மற்றும் இன்னல்களிலிருந்து விடுதலை வேண்டி மக்கள் இறைவனிடம் வேண்டும்வரையிலும் மதங்களும், இறைவழிபாடும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

103. ஆன்மீகம் மற்றும் யோக சாதனை ஆகியவை ஆன்மீக விழிப்புப் பெற்று, உலக வாழ்க்கையின்மேல் உள்ள நாட்டத்தைத் தாண்டி இறைவனோடு ஓர் ஆன்மீக ஐக்கியத்தை நாடுகின்ற ஏதோ ஒரு சிலருக்குத்தான் தேவைப்படும்.

104. அறிவு சாதனையாக மாற வேண்டுமென்றால் பணம், டெக்னாலஜி, மக்கள், பொருள், மார்க்கெட் இவை ஐந்தையும் ஒருங்கிணைத்துச் செயல்படக்கூடிய திறமை வேண்டும். சாதிப்பவர்களுக்கு இந்த திறமை இருப்பதாக அர்த்தம். சாதிக்க முடியாதவர்களுக்கு இத்திறமை இல்லை என்று அர்த்தம்.

105. மூலப்பொருட்கள் இயற்கையிலேயே உபயோகம் உடையவை அல்ல. நம்முடைய அறிவு தான் அவற்றை உபயோகமானதாக மாற்றுகிறது.

106. மேற்கத்திய நாடுகளுடைய சுபிட்சம் அந்நாடுகளுடைய பொருளாதார முயற்சிகளில் வெளிப்படும் organisation உடைய விளைவாகும். அதே organisation நம் நாட்டுப் பொருளாதார முயற்சியில் வெளிப்பட்டால் அதே சுபிட்சம் இங்கும் வரும்.

107. முன்னேற்றம் என்பது மேற்கத்திய கலாச்சாரத்தை அப்படியே பின்பற்ற வேண்டும்என்று அவசியமில்லை. நம் நாட்டு கலாச்சாரத்தின் சாராம்சத்தையும், மேற்கத்திய டெக்னாலஜியையும் நாம் முறையாக, சரியான விகிதத்தில் ஒருங்கிணைத்துக்கொள்ள வேண்டும். இதற்குப் பதிலாக கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது சரியில்லை.

108. படிப்பு விஷயத்தில் மக்களுடைய ஆர்வம் தூண்டிவிடப்பட்டுள்ளதால் படிப்புமேல் மக்களுடைய மோகம் பரவுவதைப் பார்க்கிறோம். சுபிட்சத்தின் மேலும் இப்படி ஓர் ஆர்வம் தூண்டிவிடப்பட்டால் அதன் மேலும் மோகம் இம்மாதிரி பரவும்.

109. ஓர் அறிவாளி தனக்கு வரும் நெருக்கடியை வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாற்றிக்கொள்வான். அதே சமயத்தில் அறிவில்லாதவன் வாய்ப்பை பிரச்சினையாக மாற்றிக்கொள்வான்.

110. விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கு கஷ்டங்கள் மற்றும் நெருக்கடிகளைக் கொடுத்து தான் வாழ்க்கை அவர்களுக்கு விழிப்புணர்வைக் கொண்டு வருகிறது.

111. தலைவர் இல்லாதபொழுதுகூட ஒழுங்காக இயங்கும் ஸ்தாபனம்தான் உண்மையில் சிறப்பாக வேலை செய்யக்கூடியது. தலைவர் இல்லாத பொழுது முறையாக இயங்காதவை வேலையை இன்னும் சிறப்பாகக் கற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம்.

112. நம்முடைய உள் திறமைகளும், வெளி ஆதாரங்களும் ஒன்று சேரும் பொழுதுதான் நமக்கு முழுவெற்றி கிடைக்கிறது. உள் அம்சங்களும், வெளி ஆதாரங்களும் நிறைவாக இருக்கும்பொழுது நமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கிறது. முயற்சி தோல்வி அடைகிறதென்றால், உள் அம்சங்கள், வெளி ஆதாரங்கள் இரண்டுமே இல்லைஎன்று அர்த்தம். வெளி ஆதாரங்கள் இருந்து உள் அம்சங்கள் குறைவாக இருந்தால், துவக்கத்தில் வெற்றி கிடைத்து, பின்னர் தோல்வியில் முடியும். இது எதிர்மாறாக இருந்தால் துவக்கத்தில் தோல்வி, பின்னர் வெற்றி என்று முடியும்.

113. பணம் என்பது பொருளாதார மதிப்பை நிர்ணயிக்கும் ஒரு சின்னமாகும். பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில்தான் பணம் செயல்படுகிறது. நம்பிக்கை அதிகரிக்கும் இடங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கிறது. நம்பிக்கை குறையும் இடங்களில் பணப்புழக்கம் குறைகிறது.

114. பணத்தை உருவாக்கிய மனிதன் இன்று அதே பணத்திற்கு அடிமை ஆகியிருப்பது தன்னுடைய படைப்பாற்றலைத் தானே மறந்திருப்பதற்குச் சமமாகும்.

115. வேலை சம்பந்தப்பட்ட பண்புகள் நிறைந்துள்ள ஸ்தாபனங்களில் நம் முதலீட்டை அதிகப்படுத்தினால் ஸ்தாபனம் வளரும். வேலை சம்பந்தப்பட்ட பண்புகள் இல்லாத ஸ்தாபனங்களில் முதலீட்டை அதிகப்படுத்தினால் பலன் தற்காலிகமாகத்தான் இருக்கும்.

116. கடன் என்பது வருங்கால வருமானத்தை உத்தேசித்துத் தற்போதைய வாங்கும் திறனை அதிகப்படுத்திக்கொள்வதற்கான கருவியாகும்.

117. மனித உழைப்பின் மதிப்பை நாம் அதிகமாகப் பாராட்டும்பொழுது அதன் வெளிப்பாடாகச் சம்பளம் உயருகிறது. இதன் இறுதிக்கட்ட விளைவு விலைவாசி ஏற்றத்தில் முடிகிறது.

118. காலம் பொன்னானது என்பது ஒரு முழுஉண்மையாகும். நேரத்தை விரயம் செய்வது பணத்தை விரயம் செய்வதற்குச் சமமாகும்.

119. சேமிப்பு நம்முடைய செயல்திறன் அதிகரிப்பதற்குரிய அறிகுறியாகும். பொருள் சேமிப்பு, நேரம் மற்றும் எனர்ஜி சேமிப்பு என்பவை தம்முடைய உற்பத்தித்திறனை நேரடியாக அதிகரிக்கின்றன.

120. பொருளாதார மந்த நிலை என்பது பொருளாதார ஸிஸ்டத்தின் மேல் மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது என்பதைக் காட்டுகிறது. பொருளாதாரம் மீண்டும் சுறுசுறுப்பு அடைய வேண்டுமென்றால் மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை வர வேண்டும்.

தொடரும்.....

****


 


 


 


 



book | by Dr. Radut