Skip to Content

11.மலரும் மணமும்

"அன்னை இலக்கியம்"

மலரும் மணமும்

                                                   (சென்ற இதழின் தொடர்ச்சி....) மகேஸ்வரி சரண்டர் ரோஜா:

அமைதிதான் இப்பிரபஞ்ச சக்தியின் முழுமையான, பூரணமான வெளிப்படும் சக்தி. ஆனால் அது தன்னை மிகமிக அமைதியாக வெளிப்படுத்தும். அப்படிப்பட்ட அமைதியை, மல்லிகை "சாந்தி மதர், சாந்தி மதர், சாந்தி மதர்'' என்று அழைப்பதன்மூலம் அனுபவித்துக்கொண்டு இருந்தாலும், A/C காற்று அவளை உடம்பு முழுவதும் தழுவ முயன்றாலும், அவளைப் பிடித்துக் கொண்டிருந்த அந்திமல்லியின் கையின் வெப்பமும், பயமும் அதைவிட அதிகமாகிக்கொண்டேயிருந்ததில், கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டேயிருந்தாள்.

இருவரும் டாக்டரின் முன் உட்கார்ந்திருந்தார்கள். "ஒன்றும் இல்லை என்று உங்களை தைரியப்படுத்த என்னால் முடியாது. உங்கள் கணவரை, அவரின் இரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்ததில் எதுவும் திருப்திகரமாக இல்லை. லுக்கேமியா (Leukemia) உங்கள் கணவருக்கு வந்திருக்கிறது. இரத்தத்திலுள்ள வெள்ளை அணுவில் ஏற்படும் ஒருவிதமான நோய். வெள்ளை அணுக்கள், போன்மரோ (bone marrow) என்றழைக்கப்படும் எலும்பு மஜ்ஜைக்குள் அளவுகடந்து பெருகுவதால் ஏற்படும் புற்றுநோய். நம் உடம்பில் ஓடும் இரத்தத்தில் வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், பிளேட்லெட்ஸ் என்ற மூன்றும் கலந்துள்ளது. ஆனால் இந்த வெள்ளை அணுக்கள், நல்லதாக உள்ள வெள்ளை அணுக்களின் தன்மையை அழிப்பதால், உடம்பிலுள்ள எதிர்ப்பு சக்தி அழிய ஆரம்பிக்கும். அத்துடன் பிராணவாயு (oxygen) சக்தியை உடம்புக்குள் எடுத்துச் செல்லும் சிவப்பணுக்களின் செயல்பாட்டுத்திறனையும் குறைக்கச் செய்யும். இதனால் இரத்தம் கசிய ஆரம்பித்தால் நிற்காது. உடம்பிலுள்ள எல்லா பாகங்களிலும் இரத்தம் செல்வது தடைபட ஆரம்பிக்கும். இரத்த அணுக்கள் குறையக் குறைய வலியும், வேதனையும் அளவுகடந்து உடலில் ஏற்படும். இந்த வியாதியின் முழுத் தன்மையையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இத்தனை விவரங்களையும் கூறினேன். எங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் எடுக்கிறோம். நம் எல்லா சக்திகளுக்கும் மேலே ஒரு பிரபஞ்ச சக்தி உள்ளது. அதன் கையில் பொறுப்பை ஒப்படைப்போம்'' என்ற டாக்டரின் வார்த்தைகள் அந்திமல்லியின் மூளைக்குள் மெதுவாக ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. அதே சமயத்தில் அவளின் அடிவயிற்றில் இருந்து மென்மையான குரலில் 'மதர்' என்ற வார்த்தை தானாகவே கிளம்பி, அவளைச் சுற்றிக் கவசமாகச் சூழ்ந்துகொண்டேயிருந்ததை உணர ஆரம்பித்தாள்.

பயத்தின் உச்சக்கட்டத்திலிருந்த அந்திமல்லி, துணையென நம்பி வந்தவனின் உயிருக்கு ஆபத்தென்ற செய்தியைக் கேட்டவுடன் இன்னும் அதிகமாகப் பயந்திருக்க வேண்டும். அன்னை தம் திருவிளையாடலின் பேரருளை அந்திமல்லிக்குக் கொடுக்க விரும்பினார். திருவுருமாற்றத்தின் பலனை அவளுக்குத் தெரியாமலேயே கொடுத்து, அவளைத் தம் குழந்தை ஆக்கிக் கொண்டார். கொடுப்பது அன்னை; பெறுவது அந்திமல்லி அல்லவா! தனக்கேற்ற விதத்தில் பெற்றுக்கொள்வது மனிதத் தன்மையல்லவா!

****

"அந்திமல்லி, என்னை விட்டுப் போகாதே! என்னுடனேயே இரு.எனக்குப் பயமாக இருக்கிறது. எனக்கு என்னவென்று தெரியவில்லை. ஒரே அசதியாக இருக்கின்றது. உடம்பெல்லாம் வலிக்கின்றது. எலும்புக்குள் யாரோ கையை விட்டு பிசைவதுபோல் இருக்கிறது. என் கையைப் பிடித்துக் கொள்'' என்று புலம்பிகொண்டே சந்திரன், மருந்தின் மயக்கத்தில் அவள் கையை விட்டான்.

"அந்திமல்லி, டாக்டர் கட்டச் சொன்ன பணத்தை நான் கட்டிவிட்டேன். ATMஇல் 25,000/- பணம் எடுத்திருக்கிறேன். உன் கையில் வைத்துக் கொள். அக்காவிடம் சொல்லி Add-on Card ஒன்று வாங்கி உன்னிடம் கொடுக்கின்றேன். எதற்கும் கவலைப்படாதே, அன்னையிருக்கிறார்கள்''.

"நிச்சயமாக! அன்னை மட்டும்தான் இருக்கிறார்கள். என் பயம் தான் இதைக் கொண்டு வந்திருக்கிறது. அன்றைக்கு ரோஜாக்கா சொன்னார்கள், 'அன்னையிடம் பயம் வேண்டாம் என்று கேட்காதே; தைரியம் வேண்டும் என்று கேள். நேர்மறையாகப் பிரார்த்தனை செய்' என்று. எனக்கு பயம் வேண்டாம் என்றுதான் பிரார்த்திக்கத் தோன்றியது. என்னிடமிருந்து சந்திரனுக்கு அது transferஆகி விட்டதென்று நினைக்கிறேன். இனி எதையும் நான் கேட்கப்போவதில்லை. அவர்களுக்கு இந்தச் சமயத்தில் எனக்கு எதைக் கொடுக்க வேண்டும்என்று தெரியும். என்னைப் பற்றியே எனக்கு எதுவும் தெரியாது. வேண்டும், தேவையென்பவற்றையெல்லாம் அவர்களிடமே ஒப்படைத்துவிடுகிறேன். சரண்டர் ரோஸ் என்ற மலர் ஒன்று இருப்பதாக முகுந்தன் சார் சொன்னார். அதை எனக்குக் கொண்டுவந்து கொடு. எனக்காக அன்னையிடம் சரணடையக்கூடத் தெரியாது. இந்த மலரை அன்னைக்குச் சார்த்துவதன்மூலமாக இம்மலரின் குணம் எனக்கும் வரட்டும். நீ கவலைப்படாதே! ரோஜாக்காவிடம் விஷயத்தைச் சொல்விடு''.

                                                              ****

"டாக்டர் இவ்வளவு விவரமாகச் சொல்லாவிட்டால் சந்திரனின் வியாதி பற்றி முழுமையாகத் தெரியாது'' என்றாள் மல்லிகை.

"நீ படித்திருக்கிறாய் அல்லவா, அன்னைக்கு ஒரு முறை ஜுரம் வந்து, முழுவிவரமும் தெரியாத காரணத்தினால், பகவானுடைய சக்தியும் செயல்படாமல் இருந்தது; கல்கத்தாவிலிருந்து வந்த டாக்டர் ஜுரத்தின் பெயரை பகவானிடம் சொல்லியமாத்திரத்தில், டாக்டர் குளித்துவிட்டு வருவதற்குள், அன்னையின் ஜுரம் முழுமையாகக் குணமாகிவிட்டதைப் பற்றி. அதனால் சந்திரனும் குணமாகிவிடுவார். அந்திமல்லிக்குத் துணையாக நீயும் ஆஸ்பத்திரியில் இருக்கவேண்டுமென்றால் இரு. நானும் வருகிறேன்'' என்று கூறினாள் முல்லை.

"அக்கா, அந்திமல்லி இப்பொழுது மிகவும் தைரியசாலி ஆகிவிட்டாள். அவளுக்கு நம் துணையைவிட அன்னையின் பேரருள் துணையாக இருக்கிறது. நாம் யாரும் போய் பார்க்க வேண்டிய தேவையேயில்லை''.

"மல்லிகை சொல்வதுதான் சரி. உடம்பு சரியில்லையென்றால் போய் பார்க்க வேண்டும் என்பது பழைய முறை. ஆனால் அன்னையின் முறையோ, அன்னையின் அருள் முழுமையாகச் செயல்பட விரும்பினால், எந்தவொரு மனித குறுக்கீடும் இருக்கக்கூடாது. நாம் போனால் 'விசாரிப்பு' என்ற பெயரில் அவர்களை, தைரியப்படுத்துவதற்குப் பதிலாக அதைரியப்படுத்தி விடுவோம். நமக்குதான் எதை, எங்கு பேசக்கூடாது என்பது தெரியாதே! அன்னை அந்திமல்லியுடன், சந்திரனுடன் இருக்க வேண்டும் என்று மட்டும் தீவிரமாக நல்லெண்ணத்துடன் நினைப்போம். மற்றதை அன்னை பார்த்துக் கொள்வார்'' என்றாள் ரோஜா.

****

சந்திரனின் முகம் தெளிவாக இருந்தது. ஜுரம் முழுவதுமாக இறங்கி விட்டிருந்தது.

"Mrs..சந்திரன், இன்றைக்கு உங்கள் கணவரின் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சாதாரணமாக இவ்வாறு நடக்காது. குறையுமேயொழிய அதிகரிக்க வாய்ப்பில்லை. இருந்தும் மாற்றம் இருக்கிறது. உங்கள் நம்பிக்கைக்குப் பலன் இருக்கிறது. தொடர்ந்து நம்பிக்கையுடன் இருங்கள்'' என்றார் டாக்டர்.

"ஓர் இன்ஜெக்ஷன் (injection) USAவிருந்து அனுப்பச் சொல்லி இருக்கிறேன். அதை தினமும் ஒரு முறை போட்டால் பலன் இன்னும் கொஞ்சம் விரைவாக இருக்கும். விலை சற்று அதிகம், பரவாயில்லையா?''

"டாக்டர், உங்களால் ஆன முழு முயற்சியை எடுங்கள். என்கூட இருப்பவர்கள் எனக்கு எல்லா உதவிகளும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்'' என்றாள் அந்திமல்லி.

****

"ரோஜாக்கா! இன்றைக்கு மனம் சற்று கலக்கமாக இருக்கிறது. அதனால்தான் இங்கு வந்துவிட்டேன். முகுந்தன் சாரை இன்றைக்கு மட்டும் சந்திரனைப் பார்த்துக்கொள்ளச் சொல்ல முடியுமா?''

"தாராளமாக'' என்றார் முகுந்தன்.

"அந்திமல்லி, அந்திமல்லி, உடனே வருகிறாயா? நாம் இருவரும் ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டும்'' என்ற ரோஜாவின் குரல் படபடத்தது.

கையிலிருந்த 'சாவித்ரி'யை இறுகப் பிடித்த அந்திமல்லியின் கைகள் அன்னையின் முகத்தை, உடலைத் தழுவ ஆரம்பித்தன. பிரார்த்தனை என்று எதுவுமில்லாமல் அன்னையை இறுகப் பற்றிக்கொண்டாள். என்ன செய்வது, ஏது செய்வதுஎன்று ஒன்றுமே புரியாத நிலை. வாயிலிருந்து, ஏன் மனதிலிருந்துகூட எந்தவோர் எண்ணமுமற்ற அமைதியான, சூன்யமான நிலையிலிருந்தாள். கண்கள் அன்னையின் கண்களை உற்றுப் பார்த்தன. தன்னையே பிய்த்தெடுத்து அன்னையின்மீது பதிக்க முடியுமா என்று முயன்றுகொண்டேயிருந்தாள். தன்னிலையிலிருந்து மேலே மேலே போய்க் கொண்டேயிருந்தாள். வெட்டவெளியில், ஆதி அந்தமற்ற, சப்தங்களே இல்லாத நிசப்தத்தில் மெல்லிய தங்கநிற ரேகையொன்று புறப்பட்டு, அவளை மெதுவாகப் போர்த்த ஆரம்பித்தது. கரைந்து, கரைந்து ஒன்றுமிலாத நிலைக்குள் போன அந்திமல்லியை ரோஜாவின் குரல் நிதர்சனம் என்னவென்பதை படம்பிடித்துக் காட்டியது.

                                                       ****

"ஏனக்கா, அந்திமல்லியின் முகம் தங்கமாக ஜொலிக்கிறது. ஆனால், சந்திரனின் நிலையோ மோசமாகிக் கொண்டேயிருக்கிறதுஅன்றைக்கு சந்திரனைப் பார்த்துவிட்டு பயந்துவிட்டேன். எத்தனை மெஷின்கள்!அதில் தான் அவரின் உயிரே இருப்பதுபோல் டாக்டர்களின் பேச்சு, பார்வை. ஒன்றும் புரியவில்லை. அன்னை நல்லது மட்டுமே செய்வார் என்று தெளிவாகப் புரிகிறது. ஆனால் இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது, மனிதன் விரும்பியதைத்தான் தெய்வம் கொடுக்கிறதென்றால், இம்மாதிரியான ஆசையைக்கூடவா மனிதன் கேட்பான் என்று சந்தேகமாக இருக்கிறது; குழப்பமாகவும் இருக்கிறது. அந்திமல்லி, 'சரணாகதி அடைந்துவிட்டேன். இனி எனக்குக் கவலையில்லை' என்று தீர்மானமாகச் சொல்கின்றாள். அவளின் நம்பிக்கை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. 'எனக்கு ஏன் இந்தளவு நம்பிக்கை வரவில்லை?' என்ற கேள்வி என் மனதில் எழுகின்றது. என்னவென்று சொல்லத் தெரியவில்லை. சில கேள்விகளுக்குப் பதில் கிடையாதா?'' புலம்பிக்கொண்டிருந்தாள் மல்லிகை.

"தூய்மைக்கே சந்தேகமா! வேண்டாம்'' என்றார் முகுந்தன்.

"நிச்சயம் அன்னை சோதிககமாட்டார். இதில் வேறு ஏதாவது விஷயம் நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அந்திமல்லியின் நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்கும். எதுவும் அவளை விட்டுப் போகாது. எனக்கு அவளின் சரணாகதி பூரணமாகத் தெரிகிறது. அதனால் நீ மனத்தைப் போட்டுக் குழப்பிக்கொள்ளாதே. அமைதியாக இருப்பதுதான் அந்திமல்லிக்கும், சந்திரனுக்கும் நாம் செய்யும் உதவி'' என்றாள் ரோஜா.

****

"சந்திரா, நம் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று கோழி வெட்டி, படையல் போட்டு விபூதி வாங்கி வந்திருக்கிறேன். இதை பூசிக்கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்'' பேசிக்கொண்டே தெய்வநாயகி நெற்றியில் வைத்தாள்.

"வேண்டாம்மா! அந்திமல்லிக்குத் தெரிந்தால் கோபப்படுவாள்''.

"அவள் என்னடா இப்பொழுது வந்தவள். நீ என் பிள்ளை. எனக்குத் தான் முதல் சொந்தம். நான் பார்த்துக்கொள்கிறேன், அவள் வரட்டும்''.

முகுந்தன் உள்ளே நுழைந்தார்.

****

"அந்திமல்லி, நான் சொல்கிறேன் என்று தப்பாக எடுத்துக்கொள்ளாதே. ஒரு விஷயம்'' என்று மல்லிகை ஆரம்பித்தாள்.

"மல்லிகை, நீ அன்றைக்கு ஒரு நாள் சொன்னாயே, பெற்றோர்களைப் பற்றி. அவர்கள் இருவரிடமும் மானசீகமாக ரோஜாக்கா வீட்டு மதர் ரூமில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, மன்னிப்புக் கேட்டுவிட்டேன். அதற்குபின் அவரின் இரத்த அணுக்களின் எண்ணிக்கை கூடியது. அதனால் நீ இப்பொழுது எதைச் சொன்னாலும் சரி, மனப்பூர்வமாகச் செய்கிறேன், சொல்''.

"இல்லை, அன்றைக்கு முகுந்தன் மாமா ஆஸ்பத்திரிக்குச் சென்ற பொழுது சந்திரனின் அம்மா அவர் நெற்றியில் ஏதோ பூசுவதைப் பார்த்து இருக்கின்றார். மாமாவுக்கும், சந்திரனுக்கும் அவ்வளவு பழக்கமில்லையே. அதனால் அவரிடம் ஒன்றும் சொல்லவில்லை. அதனால்தான் உன்னிடம்.....''

"இதோ பார், அன்னையின் சக்தி பிரபஞ்சத்தைத் தோற்றுவித்த பிரம்மாண்ட சக்தி. அந்த சக்தியிடம் நீ சரணடைந்திருக்கிறாய். அந்த சக்தி எதையும் சாதிக்கும். அதற்கு எந்தவொரு பகைமையோ, துவேஷமோ, நல்லது-கெட்டதோ கிடையாது. அவற்றையெல்லாம் கடந்து நின்று, பிரபஞ்சம் முழுவதும் பரவி நின்று ஆட்சி செய்யும் சுத்த சக்தி. ஆனாலும் அதுவும் நமக்கேற்றாற்போல்தான் செயல்படும். நாம் குறுகி/குறுக்கிவிட்டோம் என்றால் அது நம்முடைய தவறுதானேயொழிய அன்னையின் சக்தியின் வீரியம் குறைந்ததுஎன்று அர்த்தமன்று. நீ சந்திரனிடம் பேசிப் பார். உன் சரணாகதியின் சக்தி மகத்தானது. சாவித்ரியைப்போல் நீயும் எமனுடன் போராடுகின்றாய்; நீ ஜெயிப்பாய். அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை''.

"மல்லிகை, சந்திரனிடம் பேசுவதைவிட அன்னையிடம் இந்த விஷயத்தைக் கூறிவிட்டு, சந்திரனின் அம்மாவின் பிடியிலிருந்து அவரை விடுவிக்க வேண்டுமெனக் கேட்கப்போகிறேன். நேரில் போய் பேசினால், அவர்கள் என்னை அவமானப்படுத்துவார்கள்; கேவலமாகப் பேசுவார்கள். எனக்கும் மனது மயங்கும். உணர்ச்சியின் வேகம் என்னைவிட வேகமாகச் செயல்பட்டால், நான் தோற்றுவிடுவேன். அன்னையை அங்கு தானாகவே விலக்கிவிட்டு, 'என்' பின்னால் போய்விடுவேன். அது சரியன்று. என் சரணாகதி முழுமையாக என்றென்றும் மாறாமல் இருக்க வேண்டும். அதுதான் என் பிரார்த்தனை''.

****

"சாரி மேடம். எங்களால் ஆன முயற்சிகளைச் செய்துவிட்டோம். கவுண்டிங் குறைவதும், அதிகமாவதுமாக இருக்கிறது. மருந்துகளை மாற்றி மாற்றிக் கொடுத்தும் தெளியவில்லை'' என்று கூறிய டாக்டர், அந்திமல்லியிடம், "உங்கள் ரூமில் அன்னை போட்டோவைப் பார்த்தேன். சரண்டர் ரோஸ் வைத்திருப்பதையும் கண்டேன். நானும் அன்னையை ஏற்றுக்கொண்டவன். அன்னையை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். எங்களால் முடியாததை அவர் முடித்துவைப்பார். Best of Luck'' என்றார்.

"Thank you Doctor.''

"சந்திரன், நாம் இருவருமே பெற்றோர்களை எதிர்த்துதான் திருமணம் செய்துகொண்டோம். இப்பொழுது உங்கள் அம்மா வந்து பார்ப்பதாகக் கேள்விப்பட்டேன். எப்பொழுதிலிருந்து என்று நீங்கள் சொல்லவில்லை.உங்கள் விருப்பம்தான் என்னுடைய விருப்பமும். அவர்களைப் போய் பார்த்து அல்லது அவர்கள் இங்கே வந்து தங்க வேண்டும்என்று நீங்கள் விரும்பினால் சொல்லுங்கள்''.

"இல்லை அந்திமல்லி. நடந்தவற்றையெல்லாம் சொல்லிவிடுகிறேன். எனக்கும் பிடிக்கவில்லை. ஆனால் அவர்களை நேரில் பார்த்தவுடன் என்னால் எதுவும் சொல்வதற்கு தைரியம் வரவில்லை. அப்பாவின் ஆப்பரேஷனுக்குப் பணம் கொடுத்தேன். அன்றைக்கு மல்லிகை கொடுத்த அன்னை புத்தகம் ஒன்றில், 'புஷ்பாஞ்சலி' என்று நினைக்கிறேன், 'வாழ்வின் எதிரொலி' கட்டுரையைப் படித்தேன். அதிலுள்ள விஷயங்களை எனக்கு நடந்தவற்றிற்குப் பொருத்திப் பார்த்ததில், அவர்களுடன் தொடர்பு கொண்டதால் என்பது புரிகிறது. ஆனால் என்னால் முடியவில்லையே! ஆதரவு என்று கேட்கும்பொழுது எப்படி மறுப்பது! இந்தளவிற்கு நான் இருக்கிறேன்என்றால், அதற்கு காரணம் அவர்கள்தானே!''

"உங்கள் உயிருக்கே ஆபத்து வருகின்றதே! அவர்கள் தகுதி உடையவர்களென்றால், நல்லெண்ணம் கொண்டவர்களாக இருந்தால்,உங்களுக்குப் பிரச்சினை எதுவுமே வந்து இருக்காதே!''

"சரி அந்திமல்லி. உயிரைக் கொடுத்தவர்களே உயிரை எடுக்கின்றார்கள் போலிருக்கிறது''.

இனி சந்திரனிடம் பேசி பயனில்லை என்பதை உணர்ந்த அந்திமல்லி, நடந்ததை அன்னைக்குக் காணிக்கையாக்கினாள்.

"ரோஜாக்கா, ஜீவ மரண போராட்டத்திலும் மனிதன் தனக்கு பிடித்ததைச் செய்வதற்குத்தான் துடிப்பான் என்று படித்திருக்கிறேன். இப்பொழுது சந்திரனை நேரில் பார்க்கிறேன்''.

"மல்லிகை, மனமாற்ற பூவை - மரமல்லி - அந்திமல்லியிடம் கொடு. இன்றைக்கு நிறைய மனமாற்ற பூ கிடைத்திருக்கிறது''.

****

"அம்மா, முதன்முதலாக சந்திரனைப் பார்த்ததிலிருந்து இன்றுவரை நடந்த எல்லா விஷயங்களையும் உங்கள் திருவடியில் சமர்ப்பணம் செய்கிறேன்.

என்னில் எந்த குறை சந்திரனின் மாற்றத்திற்குக் காரணமாக இருக்கிறதோ, அதை எனக்குக் காட்டுங்கள்.

என் பிடிவாதம்தான் சரணாகதியைப் பூரணமாகச் செயல்பட வைக்காமல் தடையாக இருந்தால், என் பிடிவாதத்தையும் உங்கள் திருவடிகளில் காணிக்கையாக்குகிறேன்.

எனக்கு துணை, ஆதரவு, எல்லாமே நீங்கள் மட்டும்தான்.

என்னிலுள்ள நீங்கள் வெற்றி பெற வேண்டும். 'நான்'  தோல்வியடைய வேண்டும்.

Thy will be done in my life Mother and not my will Mother.''

கரைந்து, கரைந்து, உருகி, உருகி, தன்னுள்ளேயே மறைந்து, தன்னிலிருந்தே விடுதலையாகி, விடை காண முடியாத, பாதை தெரியாத, நீண்ட, நெடிய, முதலும், முடிவுமற்ற வைரஒளியுள் அந்தமல்லி சென்று கொண்டேயிருந்தாள்; தன்னை மறந்தாள்; தன்னிலையை இழந்தாள்; காலம் அவளை விட்டு விலகியது; எந்த இடத்தில் இருக்கிறோம், எந்த இடத்தை நோக்கிச் செல்கிறோம் என்ற எதிர்பார்ப்பு இல்லாத, திக்குத் தெரியாத பேரிடத்தில் ஐக்கியமாகிக் கொண்டேயிருந்தாள்.

****

"சந்திரா, உங்கள் அய்யனுக்கு உடம்பு சரியாகி விட்டது. நாங்கள் ஊருக்குப் போகிறோம். உன் உடம்பு சரியானால் ஊருக்கு வா. ஆடு, கோழி வெட்டி பெரியதாக படையல் ஒன்றை குலதெய்வத்திற்குச் செய்து விட்டால், அய்யனுக்கு எதுவும் வாராதெனச் சொல்கிறார்கள். உன் பெண்டாட்டியை விட்டுவிட்டு வந்தால்தான் எங்களுக்கு எந்தவொரு கெடுதலும் வாராது. அவளை விட்டுவிடு. அவள் சம்பாதிக்கிறாள். பார்த்துக் கொள்வாள்'' பேசிக்கொண்டே மகன் கையில் பணியாரத்தைக் கொடுத்தாள் தெய்வநாயகி.

"என்னால் சாப்பிட முடியாதம்மா'' என்று ஈனஸ்வரத்தில் முனங்கினான் சந்திரன்.

"அப்படியா, கொடு, நானே சாப்பிட்டுக்கொள்கிறேன்''.

"ஆமாம், இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டும். செலவு அதிகமாகின்ற இடமாக இருக்கிறது. யார் பணம் கட்டுவார்கள்? நீ பேசாமல் என்னுடன் வந்துவிடு. நம் பூசாரியய்யா கையால் விபூதி வைத்துக்கொண்டால் சரியாகிவிடும். அப்படியில்லை என்றாலும், நம் வீட்டிலேயே எது வேண்டுமானாலும் ஆகட்டும்'' என்றாள்.

சந்திரன் வெறித்து பார்த்துக்கொண்டேயிருந்தான். அவனால் பேச முடியவில்லை. இப்படியும் ஒரு தாய் இருக்க முடியுமா! இவர்களுக்கா நன்றியுடன் இருக்க வேண்டும். 'பாகுபாடு' பார்க்கத் தெரியவில்லை தனக்கு, என்பதை உணர்ந்தவன், தன் மனத்திலிருந்த பாசம் என்பதை அறுக்க ஆரம்பித்தான்.

****

"அந்திமல்லி, இனி உன்னை 'சாவித்ரி' என்றுதான் கூப்பிடப் போகின்றேன்'' என்றாள் மல்லிகை.

"சாவித்ரியை படிப்பதைபோல், அந்திமல்லியின் வாழ்வில் நடந்தவைகளை ஒரு முறை நினைத்துப் பார்த்தால், அவளின் சரணாகதி நமக்கும் கிடைத்துவிடும், இல்லையா ரோஜா'' என்ற முகுந்தன் தட்டு நிறைய சரண்டர் ரோஜாக்களை அந்திமல்லி, சந்திரன் கைகளில் கொடுத்தார்.

தொடரும்....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

தன்னையறியாமல் சுபாவத்திற்கெதிராக மனிதன் செயல்-பட்டால் - கருமியின் தாராளம் - உணர்வு அருளைப் பெறத் தயாராக இருக்கிறது எனப் பொருள்.

சுபாவம் மாறும் நிலையில் அருளின் வாயிலுக்கு வருகிறோம்.


 



book | by Dr. Radut