Skip to Content

12.யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

                                             (சென்ற இதழின் தொடர்ச்சி....)      கர்மயோகி

905) தன்னையே ஒளித்து, மீண்டும் காண்பதே இருப்பதில் பேரின்பம் என்கிறார் பகவான். தடங்கலைத் தாண்டி வருவது இன்பம் துய்க்க, பெரிய வாய்ப்புகளை அளிக்கிறது. இதைத் தெரிந்தும் செய்யலாம், தெரியாமலும் செய்யலாம். நம் உரிமைகளைக் குழந்தைகள், மனைவி, கீழுள்ளவர்களுக்குக் கொடுத்து, அதை ஒரு கொள்கையாகப் பின்பற்றி, அவர்கள் செயலை அனுபவிப்பது இம்முறையின் சிகரம். அதைவிட உயர்ந்தது அவர்கள் தவறாக அவ்வுரிமையைப் பயன்படுத்துவதை நாம் ரசிப்பது. அதன் ஆன்மீக உச்சம் ஈஸ்வரன் சக்திக்குச் சரணடைவதாகும். பிரச்சினைகளும் சிரமங்களும் நாம் கண்மூடித்தனமான லீலையில் ஈடுபட்டதைக் குறிக்கும்.

குடும்பத்தினர் தவறு ருசிக்குமானால் மனிதன் பிரம்மமாகிறான்.

இறைவன் தன்னை ஒளிப்பது, தன் சுதந்திரத்தை தானே விரும்பி இழப்பது.

சுதந்திரத்தை இழக்கும் சுதந்திரம் முடிவான சுதந்திரம்.

அதுவே அதிகபட்ச ஆனந்தம் பெறும் கருவி.

இதுவரை உலகிலில்லாத கருத்து இது.

தலைகீழ் மாற்றத்தின் உச்சம் இது.

உச்சக்கட்ட சுதந்திரம் உச்சக்கட்ட ஆனந்தம் தருவது.

இவை தத்துவம்.

நடைமுறையை வீட்டிலும், ஆபீசிலும் காணலாம்.

மேலுள்ள அதிகாரி மிரட்ட, விரட்ட சிறிதளவு இடம் கொடுத்தால் வாழ்க்கை சிரமமாகும்.

கீழுள்ளவர்க்கு அவரிஷ்டப்படி நடக்க இடமளிப்பது வாழ்க்கை நரகமாகும்.

இரு பாலார்க்கும் அதுபோன்ற சுதந்திரம் கொடுத்தபின்

வாழ்க்கை செவ்வனே நடக்க நமக்கு

அகம் தெளிவான வலிமை

பெற்றிருக்க வேண்டும்.

பள்ளியில் குழந்தைகளைக் கண்டிக்காவிட்டால் எந்தக் குழந்தையும் இடத்தில் இருக்காது. தானே அடங்க 3, 4 வருஷமாகும்.

அதுவரை நமக்குப் பொறுமையிருக்காது.

தானே கற்ற கட்டுப்பாடு ஆயுள்வரை நீடிக்கும்; தொடர்ந்து வளரும்.

குழந்தை தாயாரை தன் அண்ணன், தங்கை தொட சம்மதிக்காது.

அச்சுபாவங்கள் மனிதகுலத்தின் அஸ்திவாரம்.

அந்த அஸ்திவாரத்தில் நமக்குத் தூய்மை வேண்டும்.

தூய்மை போதாது; வலிமை வேண்டும்.

இரண்டும் இருந்தால் கொஞ்ச நாளைக்குத்தான் வரும்.

இரண்டும் அஸ்திவாரத்தில் வேர்விட்டு வளர வேண்டும்.

அது substance பொருளில் வளரும் ஆன்மா எழுவதாகும்.

எழுந்தது பூர்த்தியானால் அற்புதம் மலரும்.

இது போன்ற சுதந்திரத்தைக் கொடுத்து, பிறகு சமாளிக்க முடியாவிட்டால் மீண்டும் திருப்பி வாங்க முடியாது.

முன்னேறாமலிருக்கலாம்;

முன் வைத்த காலை பின் வைப்பது சரியாகாது.

அதனால் சுதந்திரம் கொடுக்க தகுதி வரும் வரை அதைச் செய்யக் கூடாது.

அன்னையும், பகவானும் ஆசிரமத்தை அப்படியே நடத்தினர்.

ஆயிரம் புகார் வந்தாலும் அன்னை ஏற்கமாட்டார், "அவரவரே அறியா விட்டால், அது அறிந்ததாகாது" என்பார்.

இது அற்புதத்தை அவனியில் காணும் பாதை.

****

906) மனிதன் நாடகத்தில் தன் பங்கை நிறைவேற்றுகிறான். அதைத் தன்னையறியாமல் செய்கிறான். இறைவன் தன் நாடகத்தை, தன்னையுணர்ந்து நடிக்கிறான். மனிதனைப் பொருத்தவரை மனிதனும், வாழ்வும் கண்மூடியுள்ளனர். இறைவன் விஷயத்தில் மனிதன் தன்னை அறியவில்லை என்றால் இறைவன் தன்னை அறிவான். இருவரும் நம்மை அறிந்தால் நாடகம் முடியும்.

மனிதனும், இறைவனும் வாழ்வு எனும் நாடகத்தை அறிந்தால் நாடகம் முடியும்.

. தன்னை மறந்து செயல்படுவது பரவயப்படுவது.

. அந்நிலையில் செயல் அதிஅற்புதமாக இருக்கும்.

. கலைஞன், கவிஞன், தபஸ்வி சாதிப்பவை அவை.

. நாடகத்தில் நடிகன் தன்னை மறந்த நிலை அவனது உச்சக்கட்ட நடிப்பு.

Self-conscious தன்னையறிந்து அதே போல் ஒருவன் நடிக்க வேண்டுமானால் அவன் தெய்வ நிலையைக் கடந்திருக்க வேண்டும்.

பாடகன் பாடும் பொழுது தாளம் போடுவதற்கும், உடலை ஆர்ப்பாட்டமாக அசைப்பதற்கும், முகபாவங்களை பல வகைகளாக மாற்றுவதற்கும் அவர்கள் பாஷை "சேஷ்டை".

ஒரு சிறந்த பாடகன், சேஷ்டையின்றி சிறப்பாகப் பாடுவது தெய்வம் பாடுவதாகும். சாதாரணமாக சேஷ்டை நின்றால் பாட்டு பாடுவதாக இருக்காது; படிப்பதாக இருக்கும்.

கோபம் வரும்பொழுது நாம் கோபத்திற்கு அடிமையாகிறோம்.

நாமே கோபமாகிறோம்.

அந்நிகழ்ச்சி முடிந்தபிறகும் கோபம் போகாது; போக நெடுநேரமாகும்.

கோபமாகப் பேசி முடித்த அடுத்த நிமிஷம் சிரித்துப் பேச முடியுமானால், கோபம் நமக்குக் கட்டுப்பட்டதாகும். அதை ரௌத்திரம் என்பார்கள்.

நரசிம்மவதாரமும் ரௌத்திரத்திலிருந்து மீள 6 மாதமாயிற்று.

. இறைவனின் லீலை, இறைவனின் நாடகம்.

நம்மால் chess செஸ் இருபுறமும் நாமே உட்கார்ந்து விளையாட முடியாது.

இறைவனால் அது முடியும்.

அடுத்த பக்கம் போனபின் இந்தப் பக்கமிருந்தது மறந்துபோகும்.

மனிதனால் தன்னையறிந்து நடக்க முடியாது.

இறைவனால் தன்னையறிந்து நடக்க முடியும்.

மனிதனும், இறைவன் லீலையில், இறைவனைப்போல் தன்னையறிந்து நடிக்க முடியுமானால், நாடகம் - evolution- முடியும்.

மனிதன் இறைவனாவதே இந்த யோக இலட்சியம் என அதையே கூறுகிறார்.

பற்றற்றான் தாளினைப் பற்றுக பற்று விடற்கு என்பது இதுவே.

. கோபத்திலிருந்து விலகி கோபப்படுவதுபோல்,

பிரியத்திலிருந்து விலகிப் பிரியப்பட்டால்,

அனைத்திலிருந்தும் விலகி அனைத்திலும் ஈடுபடுவது இறைவனைப் பற்றுவது.

அற்புதம், அக்கட்டத்தில் இறைவன் வாழ்வாக மலர்வது.

ஒரு வினாடி அது நம் வாழ்வில் நடக்க நாம் செய்யக்கூடியது

சத்தியத்தை 1 நாளாவது 100 பங்கு மேற்கொள்வதாகும்.

சத்தியஜீவியத்தையடைய சத்தியம் உதவும்.


 

தொடரும்.....

 

****

ஜீவிய மணி

அகந்தையின் ஆதி சக்தி; ஜீவியமன்று.


 


 


 



book | by Dr. Radut