Skip to Content

13.யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

                                             (சென்ற இதழின் தொடர்ச்சி....)        கர்மயோகி


 

62. கொடுமையை சந்தோஷமாக ஏற்றுக்கொள்.

சுயநலமி, பேய், கொடுமை ஆகியவற்றுக்குச் சட்டம் ஒன்றே.

வருபவை நமக்குரியவை என்பதே அச்சட்டம்.

ஆத்மா ஆழத்தில் புதைந்திருந்தால் அது வெளிவரக் கொடுமை அவசியம்.

நம்மைக் கொடுமை செய்பவர் அச்செயலுக்குக் கருவி.

அச்செயல் அருள்.

சுயநலமி, பேய், கொடுமைக்குச் சட்டம் ஒன்றானாலும் அவை செயலில் வேறுபடும்.

தோசை, இட்லி, உப்புமா அரிசியால் செய்யப்பட்டிருந்தாலும் ருசி வேறு, பாகம் வேறு.

சுயநலமிக்குத் தன்னை மட்டும் தெரியும்; வெட்கமிருக்காது.

பேய் பயங்கரமாகச் செயல்படும்.

கொடுமை செய்பவருக்கு ஈவு, இரக்கம் இருக்காது; தீவிரம் இருக்கும்.

அன்பு செலுத்த வேண்டியவர் கொடுமை செய்வதை மனம் ஏற்க முடியாது; உயிரும், உடலும் பதைபதைக்கும்.

இப்பதைபதைப்புமூலம் புதைந்துள்ள ஆத்மா வெளிவருகிறது.

8 தலைகீழ் மாற்றங்களில் இது 5 முதல் 8 வரை ஓரிடத்தில் அமையும்.

அன்பாகத் தேடிவரும் குழந்தையை ஆத்திரமாக அடித்த தாயாரை அன்றே அக்குழந்தை மறந்துவிட்டது. கடைசி நேரம் அக்குழந்தை அருகிலிருக்க முடியவில்லை. கொடுமையை ஏற்ற ஆத்மா அன்றே தாயார் முகத்தில் விழிக்கக் கூடாது என முடிவு செய்துவிட்டது, வாராத மகளுக்கே தெரியாது.

கொடுமைக்கு ஆளான குழந்தைகள் கடைசி நேரத்தில் கொடுமை செய்தவரருகில் இருக்கமாட்டார்கள் என்பது பொதுச்சட்டம்.

இந்த ஆன்மீக உண்மை எட்டிக்காய்.

கேட்கவும் மனம் சம்மதிக்காது.

உலகில் அன்பில்லை, ஆதாயம் மட்டுமிருக்கிறது என்பது உண்மை.

கேட்டால் மனம் ஏற்காது.

ஏற்றால் உடலெல்லாம் கொப்புளம் வரும்; தோல் கறுத்துப்போகும்.

தோல் வியாதிக்கு இது ஓர் அடிப்படை.

மனமும் ஏற்று, செயலையும் ஏற்பது யோகம்.

ஏற்பதுடன் எரிச்சலும் படக்கூடாது.

சந்தோஷப்படும்பொழுதுதான் பலன் வரும்.

அதனால் அன்னை எவரையும் யோகம் செய்ய அழைப்பதில்லை.

இந்த ஞானம் வாழ்வை வளப்படுத்தும்; பிச்சைக்காரனைப் பெரிய கோடீஸ்வரனாக்கும், தொண்டனைத் தலைவராக்கும்.

63. எந்த முறையையும் தேடாதே.

எந்த முறையும் சக்திவாய்ந்தது; பெரும்பலன் தரவல்லது.

எந்த முறையையும் நாடாவிட்டால், பலன் தானே வரும். அது பெரியது என்பது ஆன்மீக உண்மை.

வசிஷ்ட கணபதி முனிக்கு காவ்ய கண்ட கணபதி எனப் பெயர்.

இவர் உமா சகஸ்ரம் எழுதியவர்; கவி.

இவருடைய சமையல்காரன் எழுதப் படிக்கத் தெரியாதவன்.

குருவின் ஞானம் அடிமனம் வழி சிஷ்யனுக்கு வந்து சேரும்.

கவி பாராயணம் செய்த வேதம், சமஸ்கிருத ஞானம் இவனிடமிருந்து தானே பிரவாகமாக வந்தன.

ஒரு கிரேக்கப் பேராசிரியர் வேலைக்காரியிடம் இதைக் கண்டார்.

இவர்கள் எந்த முறையையும் நாடவில்லை, கற்க முயலவில்லை.

ஞானம் தானே இவருள் பாய்ந்தது.

சர்ச்சிலோ, இங்கிலாந்தோ ஹிட்லரைத் தோற்கடித்திருக்க முடியாது.

பகவான் சர்ச்சிலின் தைரியத்தால் அவரைக் கருவியாகத் தேர்ந்தெடுத்தார்.

சர்ச்சில் இந்தியச் சுதந்திரத்திற்கு பரமஎதிரி.

பகவான் சுதந்திரத்தை சூட்சுமத்தில் பெற்றவர்.

யோகசக்தியை பகவான் சர்ச்சிலுக்கு அனுப்பினார்.

வென்றது யோகம்.

சர்ச்சில் கருவி.

இந்தியச் சுதந்திரத்தின் பரமஎதிரி, உலகச் சுதந்திரத்திற்குக் கருவியாவது ஆன்மீக நடைமுறை.

சர்ச்சில் எந்த முறையையும் நாடி தைரியம் பெறவில்லை.

தைரியம் அவருடையது; சக்தி பகவான் அளித்தது.

வேலைக்காரர்கள் மொழி பயில்வது இவ்வழி.

முறை பலன் தரும்.

பெரிய முறை பெரிய பலன் தரும்.

முறைகளைக் கைவிட்டால் உலகம் அறியாத பலன் எழும்.

ஆப்பிளைக் கண்ட நியூட்டனோ, பாத்ரூமிலிருந்த ஆர்க்கிமிடீஸோ, E=MC² என்று கூறிய ஐன்ஸ்டீனோ எந்த முறைகளாலும் இவற்றைக் கண்டுபிடிக்கவில்லை.

இராமானுஜம் எழுதிய 4 நோட்டுகளில் எதுவும் அவர் படித்த இன்டர்மீடியட் படிப்பால் வரவில்லை.

உலகத்திற்குரியது முறை.

முறைகளைக் கடப்பது உலகைத் தாண்டிச் செல்வது.

64. சுறுசுறுப்பில் அமைதி வேண்டும்.

அமைதியாக இருப்பதோ, சுறுசுறுப்பாக இருப்பதோ சிரமம்.

இரண்டில் ஒன்றைச் செய்யலாம்.

எப்படி இரண்டும் சேரும்?

அமைதியிலிருந்து சுறுசுறுப்பு எழுகிறது என்பது ஆன்மீகச் சட்டம்.

சுறுசுறுப்பு அமைதியாவது முதற்கட்டம்.

அந்த அமைதி கலையாமல் சுறுசுறுப்பு எழுந்தால் அது பெரியது.

மேடையில் விவாதம் நடந்தால் ஒருவர் ஆர்ப்பாட்டமாகப் பேசுவார்.

கூட்டம் அவரைப் பாராட்டும்.

அவர் முடித்தபின் எதிரி எழுந்து அமைதியாக, முதலில் பேசியவர் கூறியவற்றில் உள்ள தவற்றை அமைதியாகச் சுட்டிக்காட்டினால் விவாதம் இவருக்கு ஜெயிக்கும்.

அமைதிக்கு சக்தியுண்டு.

ஆர்ப்பாட்டத்திற்குத் திறனில்லை.

அமைதியினின்று எழும் சுறுசுறுப்புக்கு உச்சகட்டமான சக்தியுண்டு.

இது எப்படி சாத்தியம் என்று கேட்டவர்க்குப் பதில் கூறும் வகையில் பகவான் ஸ்ரீ அரவிந்தர், "யோகத்தில் ஓரளவு பரிச்சயம் உள்ளவரும் அமைதியின் சக்தி அபரிமிதமாக எழுவதைக் கண்டுள்ளனர்'' என்கிறார்.

அனுபவம் முதிர்ந்து, நிறைந்த பின்னரே அமைதி எழும்.

அமைதி அமைதியாக இருப்பதாலேயே காரியம் நடக்கும்.

போலீஸ்காரன் துப்பாக்கியால் சுடும்பொழுது அவன் அதிகாரம் தெரியும் என்பது அவசியமில்லை.

காக்கிசட்டை போட்ட போலீஸ்காரன் ஒருவன் வந்துவிட்டாலே கூட்டம் அடங்கும்.

போலீஸ்காரனுடைய செயலற்ற நிலைக்கே சக்தியுண்டு.

அவன் செயல்படும்பொழுது சக்தி அதிகம்.

சுறுசுறுப்பு அமைதியினின்று எழுந்தால் அது பெருஞ்சக்தியாகும்.

அமைதியினின்று எழும் சுறுசுறுப்பு அதுபோல் பெரியது.

பெரிய பண்ணைகள், பெரிய உத்தியோகஸ்தர்கட்கு இந்த சக்தியுண்டு.

சீனியர் வக்கீல் எதிர்கட்சிப் பத்திரத்தைக் கையெழுத்துப் போட்டுத் திருட்டுத்தனமாக எடுத்துக்கொண்டார். இதை திரும்பப்பெற சட்டப்படி கேஸ் நடத்த 2 வருஷமாவது ஆகும். எதிரிக்கு ஜில்லா ஜட்ஜ் வேண்டியவர். அவரிடம் சொன்னார். ஜட்ஜ் வக்கீலைத் திட்டலாம், மிரட்டலாம், கோர்ட்டிலிருந்து விலக்குவேன் என்று கூறலாம். அவர் அமைதியாக ரிஜிஸ்தாரை வக்கீலிடம் அனுப்பினார். எதிர்கட்சிக்காரர் "என் பத்திரத்தைக் கொடுங்கள்'' என்றார். பத்திரம் உடனே வந்துவிட்டது. வக்கீலுக்கு, திருடனுக்குத் தேள் கொட்டியது போலாயிற்று. ஜட்ஜின் அமைதி லேசாகச் செயல்பட்டால் பெரிய அதிகாரம் தடையின்றி செல்லும்.

65. ஒரு முறையைத் தேர்ந்தெடுத்து அதைச் சிறப்பாகச் செய்.

இங்கு சுமார் 100 முறைகளை எழுதியுள்ளேன்.

எதைப் படித்தாலும் செய்ய ஆசையாக இருக்கும்.

நமக்குப் பிடித்தமான ஒரு முறையை நிதானமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இங்கு அம்முறையில் கூறிய அனைத்தையும் perfect சிறப்பாகச் செய்ய வேண்டும்.

முழுப்பலன் கிடைக்கும்.

இம்முறையில் சொல்ல வேண்டியவை மேலும் ஏராளமாக உள்ளன.

அவற்றையும் தெரிந்துகொள்ளலாம். அதற்குரிய வழிகள் 3:

1) அன்னை இம்முறையைப் பற்றி எங்கெல்லாம், என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார்கள் எனத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றால் நாம் செய்ததை எப்படி உயர்த்த முடியும் என முயல்வது.

2) அருளமுதத்தில் 34 முறைகள் உள்ளன. மற்ற தமிழ்ப் புத்தகங்களில் பல இடங்களில் இம்முறை வருகிறது. அவற்றை research student ஓர் ஆராய்ச்சி வல்லுனர் போல் படித்து, தேடிக் கண்டுபிடித்துப் பயன் பெற வேண்டும். பிறர் தேடித் தருவது பலன்தாராது. நாமே தேடுவதே பயன்தரும்.

3) இவ்விரண்டையும்விட சிறந்த முறையொன்றுண்டு. நாம் செய்தவற்றை நினைத்து, ஆராய்ந்து, அனுபவித்து, மேலும் என்ன செய்யலாம் என இதுவரை நாம் படித்ததைக் கொண்டு கண்டுபிடித்து முறையை உயர்த்துவது முழுப்பலன் தரும்.

. பலன் வருவது நிச்சயம். அதைப் பெரும்பலனாக்கலாம்; முழுப் பலனாகவும் செய்யலாம்; வந்தது நிலைப்பதற்கும் செய்யலாம்;

நிலைத்தது தொடர்ந்து உயர்வதற்கும் செய்யலாம்.

. இந்த முறையையே அன்னையாகவும் மாற்ற முடியும்.

. நமக்குச் சொந்த பழக்கங்கள் உண்டு; எதற்கும் லிமிட் உண்டு; விடாமுயற்சி அவசியம். ஒன்று முடிந்தால் அடுத்ததற்குப் போகத் தாமதிக்கக் கூடாது. 'இதெல்லாம் பார்த்தால் முடியாது' என்பன போன்று சுமார் 20 அல்லது 25 பழக்கங்கள் உள்ளன. அவற்றை நாம் தவறாது பின்பற்றுகிறோம். அதற்குப்பதிலாக அம்முறைகளைப் பற்றி அன்னை என்ன கூறியுள்ளார்என அறிந்து அவற்றைப் பின்பற்றுதல் சாலச்சிறந்தது.

. நமக்கு தர்மபுத்திரன், சிவனடியார்கள், ஆழ்வார்கள், சரித்திரத் தலைவர்கள், காந்தி, நேரு போன்றவர்கள் செய்தவை அடிக்கடி வழிகாட்டும்.

அதற்குப்பதிலாக அன்னை வழிகாட்ட வேண்டும்.

. முறை முழுமை பெறும்பொழுது பலன் முழுமை பெறும்.

பலன் முழுமை பெறும்பொழுது பக்குவம் வரும்.

பக்குவம் வாராமல் பவித்திரம் வாராது.

முறையும், பலனும், முழுமையும், பக்குவமும், பவித்திரமும் நம்மால் இதுவரை செய்ய முடியாதவற்றைச் செய்யும்.

அதைக் கடந்தது அன்னை. அன்னை மட்டும் அனைத்துமாகும்.

66. சக்தி, வீர்யம், தெய்வப் பிரகிருதியைக் கடந்த சிரத்தையை நாடு.

ஆர்வமாகச் செயல்படுவது சக்தி செயல்படுவது.

தீவிரமாக முழுமூச்சுடன் செயல்படுவது வீரியம்.

மனித சக்தியை தெய்வ சக்தியாக்குவது தெய்வப் பிரகிருதி.

நம்பிக்கை இவற்றைக் கடந்தது.

எலக்ஷனில் பிறருக்காக வேலை செய்யாமல் ஆர்வமாகச் செயல்படுவது முதல் நிலை.

தீவிரமாக எலக்ஷனில் வேலை செய்பவன் தன்னால் முடிந்த எதையும் பாக்கி வைக்காமல் செய்பவன்.

சக்தியும், வீரியமும் நம்திறமை.

அவற்றைச் சமர்ப்பணம் செய்தால் சக்தி தெய்வ சக்தியாகும்; வீரியம் தெய்வீக வீரியமாகும்.

நமது சக்தியும், வீரியமும் சமர்ப்பணத்தால் தெய்வத்தன்மையைப் பெறுகின்றன.

நம்பிக்கை எனில் இவற்றுள் உள்ள நம் பங்கை விலக்கி முழுவதும் தெய்வ சக்தி, தெய்வீக வீரியமாவது.

ஆபத்தான வியாதி வந்தவுடன் ஆஸ்பத்திரிக்குப் போகிறோம்.

டாக்டர் ஆபத்தை விலக்குகிறார்; மருந்து தருகிறார்; நம்மால் செலவு செய்ய முடியும் என நம்பி செயல்படுவது நம்முடைய சக்தி, டாக்டருடைய சக்தி.

அது பலிக்கவில்லை. உள்ளூர் ஸ்பெஷலிஸ்ட், சென்னை, டெல்லி ஸ்பெஷலிஸ்ட் முயல்வது வீரியம் செயல்படுவது.

அவர்கள் செயல்படும் பொழுது சமர்ப்பணத்தை நம்புவது.

எதுவும் பலிக்கவில்லையெனில் நமது சக்தியிலும், வீரியத்திலும், சமர்ப்பணத்திலும் நம்பிக்கை போகிறது. நடப்பது நடக்கட்டும்என விட்டுவிடுகிறோம்.

நடப்பது நடக்கட்டும் என விரக்தியாக விடுவதற்குப்பதிலாக, நமது சக்தி, நம் வீரியம், நம் சமர்ப்பணம் உள்பட நாம் கலந்திருப்பதால் "நாம்" தொந்தரவு மட்டும் தரமுடியும். இனி இவற்றில் நம்பிக்கை போய்விட்டதால் pure faith, தூய நம்பிக்கை செயல்படும் என நம்புவது Faith.

இப்படி வாங்கிய பேனா 30 வருஷம் வருவதுடன், அதனால் எழுதிய எதுவும் வெற்றிபெறத் தவறுவதில்லை எனக் காணலாம்.

பேயான மனைவி, கணவனையுடையவர் past consecration, கடந்தகாலச் சமர்ப்பணத்தால் நம் சக்தி, நம் வீரியம், நமது சமர்ப்பணத்தை withdraw வாபஸ் செய்தால் கணவன் கந்தர்வனாவான், மனைவி பஞ்சகன்னிகைகளில் ஒருவராவாள்.

செய்வது ஞானத்தை சித்தியாக்கும்.

செய்ய ஏராளம் உண்டு.

பேசுவதை நிறுத்தி, செய்ய ஆரம்பிப்பது சரி.

67. LifeResponseஐ மதித்து நட.

நாம் சகுனம் என்று கூறுவது Life Response வாழ்வின் எதிரொலியில் ஒரு பகுதி.

வாழ்க்கையில் நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகள், உத்தியோகம், course, திருமணம், கூட்டாளி, டெக்னாலஜி போன்றவை, இந்த ஞானம் உள்ளவர்க்கு Life Response வாழ்வை நிர்ணயிக்கக்கூடியவை.

நமக்கு முழுவெற்றி கிடைத்தவற்றில் 1 வருஷம், 1 மாதம், 10 வருஷம் முன்னால் யோசனை செய்துபார்த்தால் வாழ்க்கைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியது தெரியும்.

போட்டோவிலிருந்து ஒருவர் தலையை வெட்டி எடுத்தனர். இது சிறுபிள்ளை குறும்பு. 4, 5 வருஷம் கழித்து அவரிறந்த பொழுது போட்டோ நிகழ்ச்சியை பலரும் உணர்ந்தனர்.

ஓர் IAS ஆபீசர் தகப்பனாருடன் கோபித்துக்கொண்டு தம் initialஐப் போட மறுத்தார்.

நண்பரையும், அவர் நட்பையும் போற்றி அதற்கடையாளமாக அவரிடமிருந்து ஒரு புத்தகம் பெற்ற பொழுது அவர் பெயர் அதிலிருந்து கத்தரித்து எடுக்கப்பட்டது கண்டு வருத்தமடைந்தார்.

பிற்காலத்தில் அந்தப் பெயரே கசக்கும் நிலை வாழ்க்கை எழுப்பியது.

கெட்ட நடத்தையைக் குறிக்கும் செயல்கள் பல உள.

நீ மணக்க இருக்கும் இளைஞனுக்கு அது போன்ற பழக்கம் உள்ளது உன் கண்ணில் படவில்லை என்றபொழுது, வாழ்க்கை அடுத்தவர்மூலம் எடுத்துக்காட்டுகிறது. ஏற்பதால் என்ன நடந்தது, மறுத்ததால் விளைவு என்ன என்பதை பிற்காலம் குறிக்கும்.

இங்கிலாந்தில் 1900, 1800இல் 'இவள் கர்ப்பமாக இருக்கிறாள்' என ஆண்கள் பெண்களோடு பேசமாட்டார்கள். குறிப்பாகவே பேசுவார்கள். நம் நாட்டில் ஒரு பண்பாடு; மனிதன் சொற்கள், பேச்சில், எழுத்தில் வெளிவருபவை அவர் மனநிலையைக் காட்டும். நேரடியாக அது வெளிப்பட்டு மனம் அருவெறுப்புப்பட்டபின் அவரை மணக்க விரும்பினால், அம்முடிவின் பலனை அனுபவிப்பதில் ஆச்சரியமில்லை. இதுவரை நாம் செய்த காரியங்களும், அவற்றின்வழி நாம் பெற்ற பலன்களும் நம் மனத்தில் பதிவாகியுள்ளன.

வாழ்வுக்கு அது பெரிய ஜாதகம்.

உடன் உறைபவர், உயிரின் பகுதியானவர் உயிரை எடுக்கப்போகிறார் என்பது பல ஆண்டுகள்முன் தெரியும்.

காதற்ற ஊசி காலத்திற்கும் உயிரைக் காப்பாற்றப்போகிறது என்பதை பழைய நிகழ்ச்சிகளினின்று காணலாம்.

பெரிய மனிதர்கள் வரலாறு, புகழ்பெற்ற கதைகளில் இந்த ஞானம் மண்டியிருப்பதையும், விரவியுள்ளதையும் காணலாம்.

1 மாதம் நம் வாழ்வைக் கவனித்தால் இத்தனை ரகஸ்யங்களும் வெளிவரும்.

அறிவது எளிது; பின்பற்றுவது எளிதன்று.

மனம் வேண்டாததை ஆர்வமாக விழையும்.

Life response பெரிய ஞானம்.

68. தவறு என்று தெரிந்ததைச் செய்யும் ஆர்வம் கூடாது.

தவறு என்று தெரியாதது வழக்கம்.

முக்கியமான விஷயத்தில் தெரிந்தவற்றை விரும்பிச் செய்வதுண்டு.

திரும்பத் திரும்பவும் செய்வதுண்டு.

கடைசி காலம்வரை செய்வதுண்டு.

கறுப்புப்பணத்தைக் கையாலும் தொட மறுப்பவர், வெள்ளைப்பணத்தை கறுப்புப்பணமாக மாற்றுகிறார். காரணம் அவசரம்.

சிறிய விஷயத்தில் அவசரம், பெரிய விஷயத்தில் ஆபத்தைக் கொண்டு வரும்.

அவசரம், சில்லறை ஆசை, பெருமை, ஆடம்பரம் ஆகியவை தவறு எனத் தெரிந்தாலும், மீண்டும் செய்யத் தூண்டுவது.

தூண்டுவது தவறன்று; குணம்.

பிறர் இதே விஷயத்தில் அவரை யோசனை கேட்டால், வேண்டாம் என்பார்.

தனக்கு என்றபொழுது தவறாது செய்வார்.

இதற்கு வழியுண்டா?

இதுபோன்ற விஷயத்தில் நாம் பிறருக்குக் கட்டுப்படுதல் இதைத் தடுக்கும்.

நமக்கு முக்கியமான ஒருவரைக் குறிப்பிட்டு இந்த மாதிரி விஷயங்களில் அவர் பேச்சுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றால் இத்தவறு தடுக்கப்படும்.

அன்னைக்குக் கட்டுப்படுவது சமர்ப்பணம்.

சமர்ப்பணம் செய்தால் காரியம் தவறாது.

சமர்ப்பணத்திற்குக் கட்டுப்படுவது சிறப்பு.

மனிதருக்குக் கட்டுப்படுவது அடுத்தது.

பொறுப்பற்றவர், பிறரை ஏமாற்ற முயல்பவர், வேலையைத் தட்டிக் கழிப்பவர், வேண்டுமென்று தவற்றை நாடுபவர் போன்றவர் இதற்கு விலக்கு.

தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவருக்கு வழியுண்டு.

தான் கட்டுப்படக்கூடாது என்பவர் அவரிஷ்டப்படி நடக்கிறார்.

பிறருக்கு யோசனை சொல்லக்கூடாது, கேட்டால்தான் சொல்லலாம் என்பது இதன் சாரம்.

சுயநலமிக்குத் தவறு என்று தெரிந்தாலும், அதையும்மீறி இலாபம் வரும் என்ற கற்பனையுண்டு.

திருடன் அகப்படமாட்டான் என்றுதான் திருடப் போகிறான்.

20 கோடி இலஞ்சம் பெற்றதை சர்க்கார் எடுத்துக்கொண்டது. 2000 கோடி சம்பாதித்தார் எனில் அவர் இலஞ்சத்தின்மூலம் முன்னேறக்கூடிய ஆத்மாவாகும்.

அவர் சட்டம் மற்றவர்க்குதவாது.

செய்வனவெல்லாம் தில்லுமுல்லு, பொய், அழிச்சாட்டியம், இருந்தும் வெற்றி வருகிறதுஎனில் அது அவர் ஆத்மநிலை.

நமக்கு அவர் நிலை வழிகாட்டியாக இருக்காது.

69. கடந்ததில் ஒரு தவற்றிலிருந்தாவது விலகு.

நமக்குத் தெரிந்த தவறுகள் ஏராளம்.

அவற்றுள் ஒன்றை எடுத்து யோசனை செய்து, இந்தத் தவற்றை இனி செய்யக்கூடாது என முடிவு செய்வது இம்முறை.

எல்லாத் தவறுகளையும் விலக்க வேண்டும். ஒன்றை விலக்கினாலும் அதற்குரிய பலன் தெரியும்.

Small scale industries பெரிய கம்பனிக்கு சப்ளை செய்தால், பெரிய கம்பனி மாமியார் போலப் பழகும்.

1975இல் 11 இலட்ச ரூபாய்க்குத் தொழிலைச் செய்பவர் அப்படிப்பட்ட நிலையிலிருந்தார்.

34 npக்கு செய்யும் partஐ பெரிய கம்பனி 35 npக்கு வாங்குகிறது. அது மட்டுமன்று, ஆர்டரை எப்பொழுது நினைத்தாலும் இரத்து செய்யும்.

SSIக்கு வரவேண்டிய இலாபம் பெரிய கம்பனிக்குப் போகும்.

போட்டி ஏராளமாக இருப்பதால் SSI செய்வதற்கு ஒன்றுமில்லை.

SSIமுதலாளிக்கு அன்னை பரிச்சியமானார்; ஆனால் நம்பிக்கையில்லை.

தரமான சரக்கு என்பதால் பெரிய கம்பனிக்கு அடிமையாக ஊழியம் செய்வது தவறு என எடுத்துக் கூறியதை முதலாளி ஏற்றார்.

சொந்தமாக ஒரு சரக்கு product செய்தால், அதை மார்க்கட் ஏற்றுக் கொண்டால், 34 npக்கு அடக்கமானால், 50 npக்கு விற்கலாம், 100npக்கும் மார்க்கட் ஏற்றுக் கொள்ளும் என்பது விளங்கியது.

புது product செய்தார். தரமான இலாபம் வைத்து விற்றார். கம்பனி 11இலட்ச வியாபாரம் 50 இலட்சமாயிற்று. இது 3 வருஷத்தில் கிடைத்தது.

இது தொழிலில் செய்த தவறு.

இதுவே அறிவால் செய்த தவறானால் பலன் அதிகம்.

உணர்வின் தவறு மாறினால் மேலும் பலன் வரும்.

தவற்றிலிருந்து விலகுவதைவிட நல்லதைக் கண்டு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எதைச் செய்தாலும் மனம் ஈடுபட்டு முழுமையாகச் செய்தால் வரவேண்டிய முழுப்பலன், முடிவில் வருவதற்குப்பதிலாக முதலிலேயே வரும்.

வாழ்க்கை கடல் போன்றது.

எதைச் செய்தாலும் பலன் உண்டு.

தவற்றை விலக்குவது ஒரு முறை.

நல்லதைச் சேர்ப்பது அடுத்த முறை.

புதியதைக் கண்டுபிடிப்பது நல்ல முறை.

அன்னையை நினைத்துச் செயல்படுவது அருள் முறை.

வாழ்வைப் போற்றுவது வளம் பெறும் வழி.

தொடரும்....

 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

அருளால் நடந்ததைக் காரணத்தால் விளக்கினால் அருள் விலகும். எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்ய (rationalisation) காரணம் கற்பிப்பது தடை.

காரணம் கற்பிப்பது சமர்ப்பணத்திற்கு தடை.

 



book | by Dr. Radut