Skip to Content

06.யோக வாழ்வு

"யோக வாழ்வு"

உயிரோடுள்ள உணர்வு (Vital Sensitivity)     

கர்மயோகி

. நாம் பிறரிடம் பேசுவது, பழகுவது பொய்யில்லை என்றாலும், பூரண உண்மை இல்லை.

. எப்படிப் பேச வேண்டும் என நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம். அப்படிப் பேசுகிறோம். அதையே உண்மையென நம்புகிறோம். அது மேல்மனம் (Surface Mind). அது ஜீவனற்றது; சப்பென இருக்கும். நாளாவட்டத்தில் நாம் அதை உண்மையென நம்புகிறோம்.

. நமக்குரிய உணர்வு, நம் உணர்வின் உண்மை, "நாம்" என்பது அதைக் கடந்து ஆழத்தில் (depth of the surface, not the real depths) உள்ளது. அவற்றுள் வேண்டியது, நல்லது, புல்லரிக்கும்; புளகாங்கிதம் தரும். வேண்டாதது கனவிலும் வெளி வாராது. அவ்விடம் நல்ல முறையில் வெளி வந்தால் முகம் பிரகாசமாகும்; உடல் ஒரு க்ஷணத்தில் ஒரு சுற்று பருத்துவிடும்; பசி, தாகம் தெரியாது; உடல் பளபளக்கும். நம் திறமை, குடும்ப பெருமை, செல்வம், நாணயம், அந்தஸ்து அங்கு உறைகிறது. போன தலைமுறை திருட்டு, கெட்ட நடவடிக்கை, நாம் மறைக்க விரும்புவது, மறக்க விரும்புவது அங்கு ஒளிந்துள்ளது. அது மேல்மனத்தின் ஆழம். அங்கிருந்து எழும் பிரார்த்தனை உடனே பலிக்கும். ஆழ்ந்த பாசம், பற்று, சொத்துரிமை, குடும்ப எதிர்காலம் அவ்விடத்திற்குரியது. நான் கூறும் 8 தலைகீழ் திருப்பங்களில் (reversal) அது இரண்டாம் நிலைக்குரியது. அங்குள்ள நல்லவை நம்மையறியாமல் மேல்மனத்தின் பின்னால் ஆனந்தமான ஆர்வமாக வீற்றிருந்து வாழ்வுக்குத் தெம்பூட்டும். அங்குள்ள கெட்டவை வெளிப்பட்டால் மயக்கம் வந்து மூர்ச்சையடையும். நமக்குத் திறமையில்லை என அங்கு நாம் அறிவோம். அதை மேல்மனம் ஏற்காது. அதை நினைவுபடுத்தும் நிகழ்ச்சிகள் அங்குப் பதிவாகியிருக்கும். கடன் வாங்கித் திருப்பித் தந்திருக்க மாட்டோம், மறந்திருப்போம்; அது மறந்திருக்காது. "நாம்" அதை நினைவுபடுத்த அனுமதிப்பதில்லை. வாழ்க்கை அந்நிலையிலுள்ள நல்லதை நினைவுபடுத்தினால் அதிர்ஷ்டம் சாதிப்பதை அது சாதிக்கும். முகஸ்துதி செய்பவருக்கு அந்த இடம் தெரியும். அது மலரும்படிப் பேசுவார்கள். பிறரை மனம் புண்படும்படிப் பேசுபவர் அதை அறிவர். குத்தலாகப் பேசி அந்த இடத்தைக் கிளப்புவார்கள். அவர்கட்குப் பிறரை அப்படிப் புண்படுத்தும் சந்தர்ப்பம் வந்தால் விடமாட்டார்கள்; விடமுயன்றாலும் முடியாது.

. நோம் நம்மை அங்கு அறிவது உண்மை.

அது வாழ்வுக்குரிய உண்மை.

யோகத்திற்குரிய உண்மை 8ஆம் நிலையில் உள்ளது.

இது இரண்டாம் நிலை உண்மை.

. எவரும் இதைக் கிளறி மேலே கொண்டுவரப் பிரியப்படமாட்டார்கள். தானே அது மேலே வரும்பொழுது சமர்ப்பணம் செய்ய உஷாராக இருப்பது வாழ்வை யோக வாழ்வாக மாற்றும்.

. அங்குள்ள கெட்டதைச் சமர்ப்பணம் செய்வது கடினம்.

நல்லதைச் சமர்ப்பணம் செய்வது அதைவிடக் கடினம்.

அந்நிலையை - நல்லது, கெட்டது - ஏற்பது உண்மை sincerity.

. அன்னையை ஏற்றபின் அவை மேலே வரும்.

நாம் அதை விலகாமல், ஏற்க மனம் துணிய வேண்டும்.

நம் எதிர் வீட்டில் உள்ளவர் ஜெயிலுக்குப் போனவர் என்பதை ஒருவர் தவறாக நாம் ஜெயிலுக்குப் போனதாக நினைப்பதாக அறிந்தாலும் மனம் துணுக்குறும்.

. "இவையெல்லாம் ஒருவர் வாழ்வில் வரக்கூடாது. எதிரிக்கும் வரக் கூடாது" என நாம் நினைக்கும் விஷயங்களிவை.

நம் வாழ்வை நிர்ணயிப்பவை இவை.

தவத்தை மேற்கொள்பவருக்கு இவை அழியும், கரையும். தவம் காலத்தைக் கடந்த நிலை. அதனால் அதற்கு இந்த சக்தி உண்டு.

இந்த இடம் காலத்திற்குரியது; நம் கண்ணில் படாத இடம்.

.Psychoanlysis மனோதத்துவ ஆராய்ச்சி இவ்விடத்தைக் கிளறி ஆராய்கிறது. அதைச் செய்யும் டாக்டர்கட்கு psychiatrist எனப் பெயர். ஆரம்பத்தில் இந்த ஆராய்ச்சி பெரும்பலன் தரும். முடிவாகப் பலனிருக்காது. இத்துறையில் ஓர் அனுபவம் உண்டு. "இந்த ஆராய்ச்சி பல ஆண்டில் பலன் தரும். இதைச் செய்யாமலிருந்தாலும் அதே பலன் அதே காலத்தில் வரும்." அந்த இடம் ஆழமானது. நாம் என்ன செய்தாலும், செய்யாவிட்டாலும் அதுவே தன்னைச் சரி செய்துகொள்ளும். நம்மால் (psychiatristஆல்) அதைச் சமாளிக்க முடியாது எனப் பொருள்.

. அன்பருக்குரியது என்ன?

தவம் கரைப்பதை அருள் கரைக்கும்.

அருளை முன்வைத்து, நம்மை இரண்டாம்பட்சமாக்கி, பிரார்த்தனை செய்தால் அது கரையும்; அழியும்; மறையும்; முழு விடுதலை தரும்; குறை அகலும்; மனம் விலகும். அது இருந்ததும் தெரியாது, போனதும் தெரியாது. Anasthesia மயக்க மருந்து கொடுத்து ஆப்பரேஷன் செய்தது போலிருக்கும். அறிவோ, அனுபவமோ இல்லாமல் psychiatric patient மனோதத்துவ ஆராய்ச்சியிலிறங்கினால் அது மயக்க மருந்தில்லாமல் ஆப்பரேஷனாகும்; பலன் பொதுவாக, இருக்காது.

.அதைவிட உயர்ந்த முறையொன்றுண்டு.

அன்னையை அறிந்து, அவர் வாழ்வைப் பற்றிப் படிக்கும்பொழுது, சோகமான உருவங்கள் அவர் ஆடையைத் தொட்டவுடன் சோகம் நீங்கியது எனவும், சைனாக்காரனை அன்னை திரும்ப அனுப்பினார் எனவும் படிக்கிறோம். இது போன்று 100க்கு மேற்பட்ட செய்திகளைப் படிக்கிறோம். நடக்காதது நடப்பதைப் பார்க்கிறோம். நம் தகுதியில் இல்லாதது நமக்கு வருவதைப் பார்த்து அனுபவிக்கிறோம். பகவானை அன்னை எப்படி ஏற்றார், அவர் வீட்டைக் காண்பித்தவருக்கு எப்படி நன்றி கூறினார், 10 மைல் தூரத்திலுள்ள கிராமத்துக் கிழவியின் "குரல்" கேட்டு எப்படி ஓடி வந்தார் என்றெல்லாம் படிக்கிறோம். படிக்கும்பொழுது அவ்வுண்மை நெஞ்சைத் தொடுகிறது. நெஞ்சு என நாம் கூறுவது இந்த இரண்டாம் நிலை. இந்த நிலைக்கு மெய்யுண்டு, பொய்யுண்டு. நாம் அந்நிலையின் மெய்யை அடைந்து, அதில் நின்று அன்னையை ஏற்று, லயித்து, அவர் வசமாகி, நம்மையும், நம் தேவைகளையும், நம் பிரச்சினைகளையும், பிரார்த்தனையையும் மறந்து, மனம் விரிந்து, பரந்து, நெஞ்சு ஆழ்ந்து, நெகிழ்ந்து, அன்னைக்கு நன்றியுடன் மகிழ்ந்தால், தவம் பலித்ததுபோல் நாம் எதுவும் செய்யாமல் அன்னையே அனைத்தையும் நாம் கேட்பதற்கு முன், கேளாமல் செய்கிறார். வேண்டாதது விலகும், வேண்டியது வளரும், இது அன்னை வாழ்வு; அன்னையின் இரகஸ்யம் எனலாம். இதை அனுபவிக்காத அன்பரில்லை. முழுவதும் அனுபவித்-தவரில்லை. முழுமையாக இதை ஏற்பது யோக வாழ்க்கையாகும்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

குறித்த நேரத்தில் செயல்படுவது ஒருவர் திறமையை அதிகப்படுத்தும். நேரத்தைப் பற்றிக் கவலைப்படாத இடங்களில் குறித்த நேரத்தில் செயல்பட்டால், அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும்.

திறமையை உயர்த்தும் செயல் நிலையையும் உயர்த்தும்.


 


 


 



book | by Dr. Radut